Skip to content
Post Views: 2,338
ஆனால் அவளை பார்த்தால் இருபதை கடந்த பெண் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்னும் குழந்தை முகம் மாறாது, பள்ளி செல்லும் சிறுமியின் சாயல் தான் அவளிடமிருக்கும்.
“உன்னைய பாத்தா கல்யாண வயசுல இருக்கற புள்ளன்னு யாராச்சும் நம்புவாங்களா..! நீ போடற சுடிதார் எல்லாம் கிட்ஸ் செக்ஷன்ல எடுக்கற தானே..?
Advertisement
பள்ளிக்கூடம் போற பாப்பா மாதிரி இருக்கே..!” என மற்ற இருவரும் கிண்டல் செய்வது வழக்கமானது.
சாயலில் மட்டுமின்றி சில நேரம் சிறு பிள்ளையென அவள் செய்யும் சேட்டையும்.. பேச்சுமே.. சாரதாவையும் வசந்தியையும் வசியமாக்கியிருந்தது.
Advertisement
Advertisement
எதையும் குறை சொல்லாமல் அவர்களின் வேலையை கூட, அவளாக இழுத்து போட்டு செய்வாள்.
‘சோம்பி அமர்வது..’ என்பது அவளால் இயலாத ஒன்று. எப்போதும் ஒருவித துறுதுறுப்போடு சுற்றி வருபவள்.
Advertisement
‘இன்னும் பிள்ளை மனம் மாறாத பெண்..’ என உடன் இருப்பவர் நினைத்திருக்க,
‘அந்த பிள்ளை மனத்திலும் ஒருவனை சுமந்து கொண்டு, அவனின் கண்ணுக்கே அகப்படாமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறாள்..’ என்ற விசயம் அவர்களுக்கு தெரிந்தால்..!!!
வசந்தி சொன்னதும் வேகமாக சென்று தனது போனை எடுத்து பார்க்க, அதில் அவளின் அம்மா பலமுறை அழைத்திருப்பதை காட்டியது.
ஆனாலும் வேலைக்கு நேரமாவதை கண்டு போனை வைத்தவள், தலை வாரி தனது ஷாலை சரி செய்து போட்டுக்கொண்டு தனக்கான உணவோடு சாப்பிட அமர்ந்தாள்.
“போன் பேசலையா..?” என்று சராதா கேட்க,
“அம்மாகிட்ட போற வழியில பேசிக்கலாம் க்கா..” என்றவள் உண்ட கையோடு கிடந்த நான்கு பாத்திரத்தை கழுவ,
“அடியேய்.. நா மதியம் லன்ச் டைமுக்கு வந்தா கழுவ மாட்டேனா..? ஏன்டீ..!” என வசந்தி அலுத்துக்கொண்டாள்.
“ஆமா.. இந்த நால கழுவ.. நாலு நாள் வேணுமாக்கும். வாட்டர் பாட்டிலை கழுவீட்டீங்களா..? இல்லைன்னா.. எடுங்க..” என்று வாய் சொன்ன போதும் கை தன்னால் வேலையை முடித்து தன்னுடைய வாட்டர் பாட்டிலை நிரம்பிக்கொண்டிருந்தது.
மற்றவர்களும் தங்களின் வேலையை முடிக்க.. மற்ற இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வருவதற்குள் தாய்க்கு அழைத்திருந்தாள் யமுனா.
அந்த புறம் அவர் எடுத்ததும், “எம்மாடி யமுனா.. என்ன பண்ணுறே..?” என்றார் பாசமாக.
“இந்தா வேலைக்கு கிளம்பிட்டேன் ம்மா.. அப்பா, தங்கச்சி, தம்பி எல்லாம் என்ன செய்யறாங்க..?” என்றாள் புன்னகை பூக்க.
“எல்லாரும் நல்லா இருக்கோம்டா. உனக்கு வேலையெல்லாம் இருக்கா..?” என்றதும்,
“அதெல்லாம் இருக்கும்மா..” என்றவள்,
அடுத்து அக்கம் பக்கத்திலிருப்பவர்களை பற்றி கேட்டுக்கொண்டே வர, சாரதாவும், வசந்தியும் ரோட்டை கடந்து சென்று விட்டதை கவனிக்க மறந்தாள்.
தாயோடு பேசியபடி திரும்பிப்பார்க்க அவர்கள் கடந்து சென்றதை கண்டு கொண்டவள் அவசரமாக ரோட்டை கடந்த படி,
“காலைல எதுக்கும்மா அத்தன முறை கூப்பிட்ட..?” என்றிட,
“உன்னோட தங்கச்சியையும் அங்கே அனுப்பலாமுன்னு உன்னோட அப்பா சொன்னாரு. அது விசயமா பேசலாமுன்னு தான் கூப்பிட்டேன்..” என்றவரின் வார்த்தையில் ஜர்க் ஆகி நடுரோட்டில் நின்று விட்டாள் யமுனா.
அப்போது, “ஏய் பாப்பா..! போனெல்லாம் இப்படி ரோட்டுல நின்னு பேசக்கூடாது. ஓரமா போ..” என்ற குரலில் விழி விரிய அதிர்ந்து, திரும்பியவளின் முன் தனது சைக்கிளில் நின்றிருந்தான் தீனா.
‘ஏதே… பாப்பாவா..!!!’ என அதிர்ந்தவளுக்கு அம்மா சொன்ன விசயத்தால் வந்த அதிர்ச்சி கூட தூரம் சென்று மறைந்திருந்தது.
‘சுடிதார்ல.. குட்டி புள்ளையா தெரியறேன்னு அவங்க சொன்னாப்ப நம்பல.. இப்போ என்ன பார்த்ததுமே இவரும் பாப்பா ங்கறாரே..!
அப்போ இனி நா சேலைய கட்டனுமோ..?’ என்று அவள் தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட,
அவளின் அதிர்ந்த பார்வையை கண்டவன் அது பயத்தால் வந்த அதிர்வு என நினைத்து, லேசான புன்னகையை சிந்தியபடி,
“பயப்படாத பாப்பா. அதான் உன் மேல எதும் மோதலையே..!
ஆனா இப்படியே எப்பவும் இருக்காது. இனி இப்படி போன் பேசிட்டு தனியா ரோடை க்ராஸ் பண்ணாதே.. சரியா..?
போன் வந்தா ஓரமா நின்னு பேசு. ரோட்டையும் கூட வர்றவங்க யாராச்சும் கைய பிடிச்சிட்டு கிராஸ் பண்ணி போ..” என்று விட்டு விலகிச்செல்ல,
‘வேற யார் கையும் வேணாம். நீங்க கூட வந்து.. உங்க கைய கொடுங்க.. கண்ணழகா.. காலம் பூராவும் அதை பிடிச்சிட்டே வந்திடுறேன்..’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,
‘வாவ்.. இன்னைக்கு பஸ்ட் டைம் என்னோட கண்ணழகன் என்கிட்ட நின்னு.. என் முகத்தை பார்த்து பேசிட்டாரே.. அதும் சிரிச்சிட்டு..’ என்ற ஆனந்தத்தோடு துள்ளலாக ரோட்டை கடந்து வந்தாள்.
அதுவரை அவளின் போன் ஆனிலேயே இருக்க, தீனா சொன்ன ‘ரோடு..’ என்ற பதத்தில் பயந்த அவளின் தாயோ.. பலமுறை “எம்மாடீ.. என்னாச்சு..?” என்ற எந்த கேள்விக்கும் பதிலின்றி போக,
அங்கே அவரின் சத்தத்திலும், பதட்டத்திலும் யமுனாவின் குடும்பம் மொத்தமும் பதறி நின்றது சிறிது நேரம்.
பள்ளிக்கு கிளம்பி நின்றிருந்த அவளின் தம்பி கிருஷ்ணா தான், அம்மாவிடமிருந்து போனை வாங்கி கட் செய்விட்டு.. மீண்டும் அழைத்து அதை ஸ்பீக்கரில் போட்டான்.
அந்த அழைப்பு ஓசையில் தான்.. தான் தாயோடு பேசிக்கொண்டு வந்ததே நினைவுக்கு வந்தது அவளுக்கு.
அத்தோடு தாய் சொன்னதும் நினைவில் எழ, ‘அய்யோ.. அவ இங்கே வந்தா நா எப்படி அவளுக்கு தெரியாம என்னோட ஆள பாக்க..?’ என்று யோசித்தவளுக்கு அவர்களின் பதட்டம் புரியாது போனது.
அதனால் பொறுமையாக காலை அட்டன் செய்தவள், “சொல்லும்மா..” என்றாள் சாவகாசமாக.
அவளின் குரலை கேட்டதும், அந்தபக்கமிருந்து அவரின் அழுகை சத்தம் ஓங்கி ஒலிக்க.. அது இப்போது இவளை பயமுறுத்தியது.
“அம்மா.. என்னாச்சு..? எதுக்கு அழறே..?” என்று இவள் பதற,
“அம்மா, அக்காவ பயமுறுத்தாத. விசயத்த கேளு..” என கங்கா தாயை சமாதானம் செய்யவும்,
“போன பேசிட்டு நடு ரோட்டுல நின்னையாடீ..?” என்ற அழுகையோடு எழுந்த கோபத்தில் அவர் கத்த, அப்போது தான் தீனாவை பார்த்து தாயை விட்டதே அவளுக்கு நியாபகம் வந்தது.
தாய் அழுகையில் தான் செய்த மடத்தனம் புரிய, குரலை தாழ்த்தி, “அம்மா.. எனக்கு ஒண்ணும் ஆகல. ரோடு க்ராஸ் பண்ணிட்டே பேசினேனா.. நீங்க கங்கா இங்கே வர்றதா சொன்னதும் ஷாக் ஆகி நின்னுட்டேன்.
அதான் அப்படி ஆகிடுச்சு.. இனி பாத்து போறேன்.. சரியா..?” என்று சமாதானம் செய்தவள்,
“அம்மா.. இப்போ எதுக்கு அவள இங்கே அனுப்பனும். நான் தான் கரெக்ட்டா பணம் கொடுக்கறேனே..?” என்றிட,
“இப்போ அவ ப்ளஸ் டூ எழுதி முடுச்சு பல மாசமா வீட்டுல சும்மா தான் இருக்கா.
அப்பா கண்டிப்பா காலேஜ் எல்லாம் அனுப்ப மாட்டாங்க. இங்கேயும் பெரிசா வேலை இல்ல. எங்க ரெண்டு பேருக்குமே சரியா இருக்கு..
அவள சும்மா வச்சு என்ன செய்ய..?
நீ அங்கே இருக்கும் போதே அவ வந்தா நீ வேல பாக்கற இடத்துலையே அவளும் சேந்து வேலைய கத்துப்பா.
பின்னாடி உனக்கு கல்யாணம் ஆனக்கூட உன் தம்பி கைக்கு வந்து சேர்ற வரை.. உனக்கு பதிலா அவ எல்லாத்தையும் பாத்துப்பா..
இல்லயா, அவளுக்கும் கல்யாணத்துக்கு தேவைங்கறத அவ சேத்துக்கலாமே ன்னு தான் அப்பா அங்கே அனுப்ப நினைக்கறாரு..” என்றிட,
“அம்மா இப்பவே எனக்கு என்ன கல்யாணம் பண்ண போறீங்களா..? அதுக்கெல்லாம் இன்னும் ரெண்டு வருஷமாகட்டும்..” என நாசூக்காய் அவர்களின் எண்ணத்தை அறிய முயன்றவளின் யுக்தி தெரியாமல்,
“என்ன ரெண்டு வருஷமா..? இப்பவே உன்னைய நிறைய பக்கமிருந்து கேட்டு வர்றாங்க.
என்னோட ஒண்ணுவிட்ட அண்ணே மகனுக்கு கூட கட்டலாமுன்னு கேட்கறாங்க.
நாங்க தான் அவங்க எதிர்பார்ப்புக்கு செய்ய முடியுமா ன்னு யோசிச்சு பதில் சொல்லாம இருக்கோம்..” என்று சொன்னதும்,
ஏற்கனவே, ‘தங்கை இங்கு வருகிறாள்..’ என்ற அதிர்வோடு,
‘தனக்கு வரன் பார்க்கிறார்களா..?’ என்ற அதிர்வும் சேர்ந்து அவளை ஊமையாக்கியிருந்தது.
அவளின் பதிலை எதிர்பார்க்காத அவளின் தாயோ, “நம்ம செல்வத்தோட தங்கச்சி திருப்பூர்ல தானே கட்டி கொடுத்திருக்கு. அந்த புள்ள ஊருக்கு வந்துட்டு திருப்பூருக்கு போக போகுதாம் ரெண்டு நாள்ல.
இவளையும் அவங்களோட அனுப்பி விடறோமுன்னு சொல்ல தான் காலைல கூப்பிட்டேன்..” என்றவர் எதிர்புறம் இப்போதும் பதில் வராததை கவனித்து,
“யமுனா.. என்னாச்சு..?” என கத்த,
அதில் சுயநினைவுக்கு வந்தவள், “கம்பெனிக்கு வந்துட்டேன்ம்மா.. மிஷின் சத்தத்துல பேச முடியாது. நைட் கூப்பிடுறேன்..” என்று மட்டும் சொல்லி, மேலும் அவரிடம் பேசாமல்.. அவருக்கும் பேசும் வாய்ப்பை அளிக்காமல் அவசரமாக காலை கட் செய்தவள் மனமோ,
‘இப்ப என்ன செய்யறது..? வருஷ கணக்கா அவரை நானும் பாத்துட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட அவரோட பார்வை என் பக்கம் திரும்பல.
அவருக்கு நா யாருன்னு தெரிய வச்சு.. அப்புறம் என்னோட காதல சொல்லி.. அதை அவர் ஏத்துக்கிட்டு.. அவங்க வீட்டுல பேசி.. அப்புறம் நா எங்க வீட்டுல விசயத்த சொல்லி..
இதெல்லாம் எப்ப நடக்கறது..?!
அச்சோ..! அதுக்குள்ள ஊருல எனக்கு கல்யாண ஏற்பாட்ட பண்ணிடுவாங்க போலவே..!!’ என மனதோடு புலம்பிக்கொண்டு,
தனது சுடிதாரின் ஷாலை விரலில் சுற்றி.. விடுவித்து.. என செய்து கொண்டு.. சற்று முன் தீனதயாளன் நுழைந்த அதே டி எம் டெக்ஸில் நுழைந்து.. மேல் மாடியில் இருக்கும் ஸ்டிச்சிங் செக்ஷனுக்குள் சென்றாள் யமுனா.
ஒரு பெண்ணாக உன் மேல் நானே
பேராசை
கொண்டேன்..
உனை முன்னாலே
பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்.
எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்..
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்.
இனிமேல் நானே
நீயானேன்..
இவன்
பின்னாலே போவேனே..
error: Content is protected !!