Episode 2
முதல் நாள் எடுத்த தீர்மானத்தின்படி அவருடன் சேர்ந்து நடை பயிற்சி செய்வது என்று முடிவெடுத்தாள்.
அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சேர்ந்து போவது உண்டு, அவர்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள பார்க்குக்கு காரில் சென்று அதை ஒட்டிய அவர்கள் கிளப்பில் காரை பார்க் செய்துவிட்டு நடை பயிற்சி முடிந்தபின்,
கிளப்பில் ஆற அமர ஒரு காபி குடித்து அன்றைய தினசரியை, அதில் இருக்கும் சர்சயான விஷயங்களை அலசுவது அவளுக்கு பிடித்தமான விஷயம்.
அன்றும் ஆவலுடன் அவள் முதல் நாள் இரவே எடுத்து வைத்த காட்டன் பாண்ட், குர்த்தி, ஷூ அணிந்து வெகு உற்சாகமாய் கிளம்பி சென்றாள்.
வழியில் கண்ட பரிச் சயமான முகங்களுக்கு ஒரு ஹாய் சொல்லிபடியே நடந்தது நன்றாகவே இருந்தது.
என்ன இவ்வளவு நாளா காணோம், மகன் கல்யாணம் நன்றாக நடந்ததா, வாக்கிங் போகாம நீங்க கொஞ்சம் வெயிட் போட்ருக்கீங்க, கல்யாணம் முடிஞ்சுது நீங்க பிரீ தானே டெய்லி வாங்க போன்ற கேள்விகளை சமாளித்தாள்
தன்னையும் தேட ஆட்கள் இருப்பது அவளுக்கு இதமாக இருந்தது.
பெரும்பாலும் அவள் வயதை ஒட்டியவர்கள் தான் அங்கே ஏழு மணிக்கு மேல் நடை பயின்றார்கள். இளம் வயதினர் இன்னும் அதிகாலையில் வந்து சென்று விடுவார்கள்.
இளையவர்கள் காதில் ஹெட் போன் சகிதம் நகர, மத்திய வயதினர் பேசிக்கொண்டே வாக்கினர்.
வீட்டில் வைத்து பேச முடியாத சில விஷயங்களை அவருடன் அப்போது பேசுவாள், தட் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அவர் சிக்கி கொள்ளும் சில பொழுதுகளில் இதுவும் ஒன்று, மற்றது கார் ஓட்டும் போது, அந்த இரண்டு வாய்ப்பையும் அவள் தவற விட்டது கிடையாது.
சுபாவமாகவே அதிகம் பேசுவது அவர் இயல்பு அல்ல, இவளோ திறந்த வாயை மூடும் பழக்கம் இல்லாதவள், ஆஹா இதை விட என்ன பொருத்தம் இருக்க முடியும்!
அவர் அதிகம் பேச மாட்டேன்கிறார் என்று அவள் அலுத்துக்கொள்ளும் போது, அவர்கள் நண்பர்கள் வட்டத்தில் கூட நீங்கள் சற்று வாயை மூடினால் தானே அவர் திறக்க முடியும் என்று கிண்டல் செய்வது உண்டு.
ஆக அவள் பேச அவர் கேட்க, அவர் கேட்க அவள் பேச என்று சிறப்பாக நடை பயிற்சி முடிந்தபின், ஆளுக்கு ஒரு சுக்கு மல்லி காபியுடன் அமர,
அந்த நியூஸ் அவள் கருத்தை கவர்ந்தது.
நார்த் இந்தியாவில் ஒரு ஹாஸ்பிடலில் ரெண்டு மருத்துவர்க்கு இடையில், ஆபரேஷன் தியேட்டரில் வைத்து எழுந்த வாக்குவாதத்தின் இடையே கவனிப்பு இன்றி ஒரு குழந்தை இறந்து விட்டது, என்று சொன்னது நியூஸ்.
“இது என்னங்க இப்படி கூட பொறுப்பு இல்லாம இருப்பாங்களா மருத்துவர்கள், ஆபரேஷன் தியேட்டர்ல வைத்து எப்படி சண்டை போடுவாங்க”
கை நீட்டி அதை வாங்கி படித்து விட்டு, ” நானும் கேள்வி பட்டேன், விசாரிச்ச போது இது அப்படி இல்ல, வாக்குவாதம் நடந்தது உண்மை, ஆனால் அங்கே டேபிள் மேல் இருந்த கேஸ் இறக்கவில்லை, அதே ஹாஸ்பிடலில் வேறு ஒரு குழந்தை இறந்து விட, இரண்டையும் சேர்த்து போட்டு விட்டார்கள், இருந்தும் அவர்கள் செய்தது நியாயம் இல்லை, ஆனாலும் அவர்கள் பக்கத்து நியாயத்தையும் விசாரிக்க வேண்டும் ” என்றார் நிதானமாய்.
அதுதான் அவர், எதையும் கேட்டவுடன் சூடாகி கருத்து சொல்ல மாட்டார், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளாமல் யாரையும் குறை சொல்ல கூடாது என்பார்.
வீட்டிலும் எழும் சிறு பிரச்சனைகளையும் நிதானமாய் கையாள்வார்
‘காய் காரன் கூப்பிடாமலே போய்ட்டான், குப்ப அள்ள ரெண்டு நாளா குப்பகாரன காணோம்’ என்று அவள் புலம்பினால், பழனி வரலியா பார்க்கிறேன், என்பார் நிதானமாய்.
காய் விற்பவர், குப்பை அள்ளுபவர், எல்லோரையும் அவர் அவர் பெயர் தெரிந்து வைத்துக்கொண்டு, பெயர் சொல்லியே அழைப்பார். அதுவும் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
” என்ன நியாயம் வேணா இருக்கட்டுமே, மருத்துவர்கள் இடையே என்ன வாக்குவாதம், அவர்கள் செய்வது தொழில் அல்ல சேவை என்று முதலிலே சத்திய பிரமானம் எடுப்பாங்க இல்லையா, எல்லாம் மாறி போச்சு இப்போ, இவர்கள் செய்வது தப்பு, என்றாலும், நீங்கள் சொல்வது போல் எதையும் விசாரிக்காமல் மருத்துவர்களை, தேடி போய் அடிப்பதும் மன்னிக்க முடியாத குற்றம் ” என்றாள்.
” உண்மைதான், மருத்துவர்களை தெய்வத்திற்கு இணையாய் பார்த்த காலம் போய், வன்முறையில் இறங்குவது, ரொம்பவே கஷ்டமா இருக்கு, பாதுகாப்பு இல்லாம அவங்க எப்படி நிம்மதியாய் வேலை செய்ய முடியும், அதுவும் அவர்கள் தங்கள் முழு முயற்சி போட்டாலும், அவர்கள் சக்திக்கு மீறிய விஷயங்களால், மருத்துவம் தோல்வியில் முடிந்து, நோயாளி இறக்க நேரிடுகையில் மருத்துவருக்கும் அது பெரும் மன உளைச்சலே” என்றார் அவர் யோசனையாக.
அதன் பின் வீடு வந்து அவர் அவர் வேலையை பார்க்க என்று பொழுது ஓடி மறைய, நேரம் செல்ல செல்ல அவள் கால்கள் இரண்டும் வலிக்க ஆரம்பித்தது. இடைவெளி விட்டு நடந்தால் இப்படி வலிப்பது உண்டு என்பதால் அதை அவள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் மறுநாள் போகாமல் இருக்க கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டு தூங்க சென்றாள்.
ஆனால் மறுநாள் முதல் அவளுக்கு காத்திருந்த வேதனைகள் பற்றி அறியாமல் நிம்மதியாக உறங்கினாள்.
சென்னையில் அவர்கள் புது குடித்தனத்தை சிறப்பாக தொடங்கினா ர்கள். அவர்கள் வீடு அவன் ஹாஸ்பிடல் பக்கம் இருக்க நகரின் மறு பக்கத்தில் அவர்கள் புகுந்த வீடு இருந்தது.
அருள் அவன் பெற்றோற்கு இரண்டாவது மகன், மூத்தவர் அமெரிக்காவில் வேலையில் இருப்பதால், இவன் வேலை மற்றும் படிப்பு இந்த பக்கம் இருந்ததால், மூத்தவன் போலவே இவனும் பிரீயாக இருக்கட்டும் என்ற நல் எண்ணத்தில் அவர்கள் மாமனார் செய்த ஏற்பாடு இது.
முதல் ஒரு வாரம் அவர்கள் சாந்தி கல்யாணத்திற்கு நாள் அமையவில்லை என்பதால், கூட இவள் பாட்டி மற்றும் அத்தை துணைக்கு இருக்க, பொழுதுகள் சுவாரிசியமாக உருண்டு ஓடியது.
கல்யாணத்திற்கு முன்னே அவளை வெளியே அழைத்து செல்ல முடியாத குறையை இப்போது தீர்த்து கொண்டான்.
காலையில் அவன் காலேஜ் சென்று வந்தபின், (ஆமாங்க இப்போது ஜெனரல் M D, படித்து கொண்டிருந்தார் புது மாப்பிள்ளை.) மாலை முழுவதும் பீச் ஹோட்டல், சினிமா என்று சுற்றி வந்தார்கள்.
அவன் அடிப்படையில் வித விதமான உணவுகளை விரும்பி உண்பவன்.
ஒரு படத்தில் செந்தில் சொல்வது போல், எந்த நேரத்தில் எந்த ஹோட்டலில் எது சூடாக நன்றாக இருக்கும் என்று நன்கு அறிந்தவன்.
‘ காப்பர் சிம்னி ‘ எனும் ஹோட்டலில் அமர்ந்து ஒரு சிஸ்லர் (sizler) ஆர்டர் செய்ய அவள் அயர்ந்து போனாள்.
ஒரு பெரிய மர போட் போன்றஅமைப்பில், உள்ளே காய், இலை தழை, நடுவே இரண்டு கட்லட் உருகும் வெண்ணனையின் மேல் ஆவி பறக்க அமர்ந்து இருந்தது.அதில் இருந்து வந்த இஸ்ஸ்ஸ் என்ற சத்தமே அதன் பெயர் காரணம்.
கோழி கொரிப்பது போல் கொரிப்பவளுக்கு அதெல்லாம் டூ மச் த்ரீ மச் ஆக இருந்தது.
கடைசியில் அவளுடதையும் சேர்த்து அவனே உண்டான்!
அவன் சாப்பாட்டை ரசித்து ருசிப்பவன் என்று அவளும், அவள் ஸ்னாக்ஸ் மட்டுமே விரும்பி உண்பாள் என்று அவனும் தெரிந்து கொண்டார்கள்.
இப்போதும் அவர்கள் வீட்டருகே புதிதாக திறந்திருந்த நார்த் இந்தியன் பாஸ்ட் பூட் கடையில் ஒரு பாவ் பாஜ்ஜி, மற்றும் அவளுக்கு பிடித்த பேல் பூரியுடன் அமர்ந்திருந்தனர். வரும் காலங்களில் எப்போது அந்த கடைக்கு சென்றாலும் அதை ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டனர். அவனுக்காக அவள் ஆர்வமாக கற்றுக்கொண்டு செய்த முதல் உணவு என்ற பெருமையையும் பாவ் பாஜ்ஜி அடைந்தது.
ஒரு வாரம் ஒரு நிமிஷமாக பறந்து விட அவர்கள் சாந்தி கல்யாணமும் குறித்த முஹூர்த்ததில் முடிய, அவன் ஆசையுடன் புக் செய்திருந்த ஹனி மூன் ட்ரிப் போகும் நாளும் வந்தது, அங்கே அவளுக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது, அதில் சின்னதாக அவளுக்கு ஒரு சிரமமும் இருந்தது.
