Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கனவும், நினைவும் உனையே

Kanavum Nanavum Unaiyae 2 2

நிச்சயதார்த்த அன்று காலை வீட்டினர் கிளம்பும் போது தூக்க கலக்கத்தோடு எழுந்து வந்தவள் சோபாவில் அமர்ந்து அவர்கள் அனைவரும் கிளம்புவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

       பாட்டி தான், “உனக்கு புது சேரி வாங்கி இருக்கு இல்ல., அதுல ஒன்னு எடுத்து கட்டு., எல்லாத்துக்கும் பிளவுஸ் தைச்சு வச்சிருக்கேன்”, என்று சொன்னார்.

     அவரை திரும்பிப் பார்த்தவள்,  “பாட்டி சூப்பரா வருவேன் சரியா.,  நானே செலக்ட் செய்து வச்சிருக்கேன் நிறைய சாரி.,  அதுல எதைக் கட்டுறது ன்னு குழம்பி போய் இருக்கேன்., முதல்ல எக்ஸாம்க்கு போயிட்டு வரேன்., அதுக்கு அப்புறமா வீட்டுக்கு வந்து அழகா கிளம்பி சூப்பரா வந்து இறங்குவேன் சரியா., அப்படி இறங்கும் போது பார்த்துட்டு சொல்லணும்.,  இப்ப எதுவும் சொல்லக்கூடாது”, என்று சொன்னாள்.

     “நீங்க அங்க உங்க வேலைய பாருங்க.,  நான் அப்பப்போ உங்களுக்கு போன் பண்ணி அப்டேட் பண்றேன்”, என்று சொல்லவும் அவர்களும் கிளம்பி செல்ல தயாராக  இருந்தனர்.



Advertisement

அவள் அண்ணன் தான் அருகே வந்து, ” பார்த்து வரணும்”, என்று சொல்லவும்,

    “அதெல்லாம் வந்துருவேன்.,  நீ போய் உன்னோட வருங்கால வொய்ப் மட்டும் பாரு போ”, என்று சொல்லி அனுப்பினாள்.

அவளை திரும்பி பார்த்தவனுக்கு ‘இவளுக்கு எப்படி தான் மாப்பிள்ளை வேண்டும் ன்னு விரும்புகிறாள் என்றே தெரியவில்லையே”, என்று யோசித்துக் கொண்டே காரில் ஏறினான்.

Advertisement

   குடும்பமாக நிச்சயதார்த்த நிகழ்வுக்கு செல்வதால் டிரைவர் வைத்துக் கொண்டே காரை கிளப்பினர்.

Advertisement

   இவளோ அவர்களை அனுப்பிவிட்டு, கதவை பூட்டி மீண்டும் தன் உறக்கத்தை சற்று நேரம் தொடர்ந்தவள்., பின்பு எழுந்து கிளம்பி தன் பரீட்சைக்காக கிளம்பி சென்றாள்.

  பரீட்சை முடிந்து வந்தவள் சொன்னது போலவே நாலைந்து சேலையை வைத்து புரட்டி புரட்டி பார்த்தாள்.

    பின்பு அடர் பச்சை நிறத்தில் சிவப்பு நிற  சிறிய பார்டராக இருந்த அந்த கைத்தறி பட்டு சேலையை தன் மேல் வைத்து பார்த்தவளுக்கு., ஏனோ அதை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

Advertisement

    கட்டி முடித்து தன்னை ஒரு முறை திரும்பி பார்க்க., ஏனோ அழகாக இருப்பதாகவே தோன்றியது.

    சிரித்துக் கொண்டே தன் தோழிக்கு அழைக்க, “தாயே நான் ரெடியா தான் இருக்கேன், நீ வா உன்னை கிளப்பி உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு அதுக்கப்புறம் நான் மத்த வேலையை பார்க்கனும்”, என்று சொல்லவும் .

      கிளம்பி தன் தோழியின் அறைக்கு சென்றாள். பின்பு அவள் அழகு நிலைய பெண் இல்லா குறையை தீர்ப்பது போல தலையை எல்லாம் அழகாக பின்னி விட்டு,  அதற்கு ஏற்றார் போல கழுத்தில் ஒரு மாலையும்,  பெரிய ஜிமிக்கியும் போட்டவள்.

    அவளை பார்த்து விழி விரித்தாள்.

     பின்பு சிறிது அளவு மேக்கப் செய்து, மேக்கப் கலையாத வண்ணம் ஸ்ப்ரே செய்துவிட்டாள்.

       “நான் அங்க போற வரைக்கும் கலையாதில்ல” என்று கேட்டாள்.

“கலையவே கலையாது, அழகா இருக்க போயிட்டு வா”, என்று சொன்னாள்,

    பின்பு தன் தோழியை பிடித்துக் கொண்டவள், “நிஜமாவே அழகா இருக்கேனா”, என்று கேட்டாள்.

    “தாயே அவ்ளோ அழகா இருக்க போ, அந்த மீனாட்சி அம்மனே பார்த்து, ஆஹா என்ன அழகு ன்னு சொல்லுவா போ”, என்று சொன்னாள்.

    சிரித்துக் கொண்டே கிளம்பியவள், “அண்ணன் நிச்சயதார்த்தத்துக்கு, தங்கச்சி இந்த அளவுக்கு கூட கிளம்பி போகலனா, உலகம் தப்பா பேசுமா அதுக்கு தான் கேட்கிறேன்”, என்று சொன்னாள்.

     உனக்கு என்னடி எப்பவுமே அழகா இருப்ப., ஆள் பார்க்கத்துக்கு ஒல்லியா தான் தெரியுற., அந்த கன்னம் இருக்கு பார்த்தியா சப்பியா.,  அது பாக்குறதுக்கே அவ்ளோ க்யூட்டா இருக்கு., உன் கன்னத்தை பார்த்த உடனே அப்படியே பிடித்து கிள்ளி வைக்கணும் போல இருக்கு”., என்று தோழி சொல்லவும்.,

   “நீ கிள்ளி கிள்ளி தான் பாதி கன்னம் காணோம்”,என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவளோடு காரில் வந்து ஏர்போர்ட்டில் இறங்கி கொண்டாள்.

இறங்கும் முன், “ஏண்டி நான் இப்படி ஏர்போர்ட்டில் இறங்கி போனேனா, என்னை வித்தியாசமா பார்ப்பாங்களோ”, என்று கேட்டாள்.

      “அதெல்லாம் ஒன்னும் பார்க்க மாட்டாங்க, கிளம்பு”, என்று சொன்னாள்.

   ஏர்போர்ட்டில் பிளைட்டுக்கான முன் வேலை எல்லாத்தையும் முடித்துக் கொண்டு தனக்கான விமானம் கிளம்பும் கேட் அருகே காத்திருந்தாள்.

    பின்பு விமான அறிவிப்பு வர கிளம்பி சென்றவளை., சிலர் திரும்பி பார்க்க தான் செய்தனர்.,  ஆனாலும் எதையும் கண்டு கொள்ளாமல் சென்றவள் கையில் ஒரு அழகிய ஹேண்ட் பேக் மட்டும் இருந்தது., அதில் தேவையான பொருட்களும்  ஒரு வாட்டர் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு சென்றாள்.

மதுரை வந்து இறங்கியவளுக்கு ஏற்கனவே கார் புக் செய்து வைத்திருந்தாள்.

    இவள் அங்கு சென்று அழைக்க அந்த காரும் வர ஏறியவள்., நேராக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும்படி சொன்னாள்.

    அந்த டிரைவரும் “என்னம்மா விசேஷம்”, என்று கேட்டார்.

   அவரை ஒரு மாதிரி பார்த்தவள் “நிச்சயதார்த்தம்” என்று சொல்லிவிட்டு தன் அண்ணனுக்கு போன் செய்து தான் வரும் கார் எண்ணை  மட்டும் சொல்லி விட்டு காரின் லைவ் லொகேஷன் மட்டும் அனுப்பி வைத்தாள்.

   “லைவ் லொகேஷன் அனுப்புறேன்” என்று சொல்லி பேசிக் கொண்டே சென்றாள்.

டிரைவரோ ‘உஷாரான பொண்ணுதான், இந்த காலத்தில் இப்படி தான் இருக்கனும்’, என்று நினைத்துக் கொண்டார்.

அதுபோல கோயிலில் சென்று இறங்கியவளுக்கு கோயில் வாசலில் இருந்த பூக்கடையை பார்த்தவுடன் தான், ‘ஐயோ பூ வைக்கணும்’ என்று யோசித்துக் கொண்டே போய் பேசியவள் பூவை கை நிறைய வாங்கிக் கொண்டாள்.

   அதை எப்படி வைக்கலாம் என்று அளந்து கொண்டே கோயிலை நோக்கி நடந்தவள் மீண்டும் நின்று யோசித்து விட்டு., பின்பு மீண்டும் நடக்க தொடங்கியவள்., தன் பேக் ல் ஹேர்பினை எடுத்துக் கொண்டே.,  தலையில் இப்படி வைக்கலாமா, அப்படி வைக்கலாமா, என்று கண் முன் பூவை வைத்து ஒன்று போல வைக்கலாம் என்று பார்த்துக் கொண்டே சென்றவளுக்கு.,  போன் வரவும் ஹேர்பின் வைத்திருந்த கையால் போனை எடுத்து காதில் வைத்த படி.,  “உள்ளே தான் வந்துட்டு இருக்கேன்., இப்ப வந்துருவேன்”, என்று சொன்னாள்.

     எதிரில் வந்தவனோ, “டேய் மச்சான் இந்த பக்கம்”, என்று சத்தம் கொடுக்கவும்.

   இவள் போனை வைத்துவிட்டு  நிமிரும் போது வேகமாக வந்த இருவரும் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர்.

     அவனும் இவளுக்கு பின்புறமாக வந்த அவள் அவனுடைய நண்பன் குடும்பத்தை பார்த்து “மச்சான் இந்த பக்கம்”, என்று அந்த ஆண் சத்தம் கொடுக்க இவளோ நேராக அவன் நெஞ்சில் தலையை மோதி தள்ளாடி நின்றாள்.

     தலையை பிடிக்க போனவள், கையில் இருந்த பூ தவறி விழ., அதை கீழே விழும் முன் வேகமாக பிடித்தவன், அவளை தான் பார்த்து நின்றிருந்தான்.

     அவளோ தலையை பிடித்தபடி, அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் அவன் கண்ணையே பார்த்தாள்.

   சட்டென்று தலையை தட்டிக் கொண்டு “சாரி சாரி கவனிக்கல”, என்று இவள் சொல்லவும்.

   அவனும் “சாரி நானும் கவனம் இல்லாம வந்துட்டேன்”, என்று சொன்னபடி,

அவன் நண்பனை பார்த்து கைய அசைத்தான்.

    அவன் மனைவி குழந்தையோடு வந்து, இவனோடு சேர்ந்து கொண்டவன்., “என்னடா வரும்போது பயங்கர மோதலா இருக்கு”, என்றான் கிண்டலாக.,

   அவனை பார்த்து லேசான முறைப்போடு எதுவும் சொல்லாமல்.,  அவளைப் பார்த்து லேசாக புருவத்தை உயர்த்தி, தலையை மட்டும் அசைத்தவன், “இப்ப ஓகேவா”, என்று அவளை பார்த்து கேட்டான்.

   அவளும் “ம்ம் ம்ம்” என்று தலையசைத்து விட.,

     அவன் கையில் இருந்த பூவை அவள் கையில் கொடுக்க,  வாங்கிக் கொண்டவள்.,

அவன் திரும்பு முன், “எக்ஸ்க்யூஸ் மீ, ஒரு நிமிஷம்”, என்று அவனைப் பார்த்து அழைத்தாள்.

    திரும்பி “என்ன”, என்றான். வித்தியாசமான குரலில்.

    அவளோ “இல்ல ஜஸ்ட் ஒரு சின்ன  இது”, என்று தயக்கமாக சொல்லி.,

    தன் பேகைத் திறந்து பாகில் இருந்து ஒரு வெட் டிஸ்யூவையும், ஒரு சாதாரண டிஸ்யூவையும் எடுத்து அவன் முன்  நீட்டியடியிருந்தாள்.

    “என்ன”, என்றான்.

“இல்ல அங்கிள் உங்க ஷாட்ல, என் நெத்தில இருந்த குங்குமம் ஒட்டிக்கிச்சு , உங்க வீட்டு ஆன்ட்டி பார்த்தா கண்டிப்பா திட்டுவாங்கல்ல., சந்தேகப்படுவாங்க , சண்டை போடுவாங்க, அது எதுக்கு பிரச்சினை  இது வைத்து தொடச்சிருங்க என்று கொடுத்து விட்டு நகரப்போனாள்.

அவன் நண்பனோ சத்தமாக சிரித்தான், “என்னது அங்கிளா”, என்று அவன் சத்தமிட.,

     இவனும் “ஏய் இங்க வா நீனு”, என்றான்.

   அவளோ அவனை பார்த்து திரும்பி நின்று, “சீரியஸ்லி அங்கிள், பார்த்தா கண்டிப்பா சந்தேகம் படுவாங்க., கொஞ்சம் குனிஞ்சு பாருங்க”, என்று சொல்லவும்.,

     அப்போதுதான் அவள் நெற்றியைப் பார்த்தான்., பொட்டுக்கு மேலே சிறிதாக பூசி இருந்த குங்குமம் லேசாக  அழுங்கி இருந்தது.

     அப்போது தான் குனிந்து தன் சட்டையை பார்த்தவன்.,  அந்த இள நீல நிறத்தில், அந்த குங்குமம் லேசாக தேய்த்து இருந்ததை பார்த்தவுடன்., அவளைப் பார்த்துக் கொண்டே வெட் டிஷ்யூ வை வைத்து துடைத்தெடுத்து விட்டு சாதா டிஷ்யூவை வைத்து துடைத்தாலும் அந்த இடத்தில் லேசாக குங்குமம் தெரியதான் செய்தது.

     இவளோ நகர்ந்து செல்ல போக, அவனும் “ஒரு நிமிஷம் நில்லு, உன் நெத்தியில குங்குமம் லேசா தேச்சு இருக்கு., அதை தொடச்சிட்டு போ”, என்று சொல்லவும்.

   அவசரமாக செல்லை எடுத்து, ப்ரண்ட் கேமராவை ஆன் செய்தவள்., அதை பார்த்துக்கொண்டே லேசாக துடைத்து விட்டு கையில் இருந்த பூவை அங்கேயே வைத்து தன் தலையில் வைத்தாள், அதை பார்த்துக் கொண்டே அவன் தன் நண்பன் குடும்பத்தோடு நகர்ந்து சென்றான்.

    பூ வைத்தது சரியாக இருக்கிறதா, என்று கேமராவில் சரி பார்த்தவள் தன்னை ஒரு செல்பி எடுத்துக் கொண்ட பின்பு., போனை மியூட்டில் போட்டு தன் பையில் போட்டுக்கொண்டு நடக்க தொடங்கினாள்.

முதலில் கோயில் பிரகாரத்தை சுற்றிவிட்டு அதன் பிறகு உள்ளே செல்வோம் என்று பிரகாரத்தை சுற்றிவர தொடங்கியிருந்தாள்.

     அதற்குள் போன் வைப்ரேட் ஆவது தெரிந்து போனை எடுத்தவள், “வந்துட்டேன் தாத்தா, பிரகாரம் சுத்திட்டு இருக்கேன்”, என்று சொல்லிவிட்டு பேசிக்கொண்டே அவர்கள் இருக்கும் இடம் கேட்டு வந்தாள்.

அங்கே இரண்டு குடும்பத்தாரும் இருப்பதை பார்த்தாள், அந்த பெண் வீட்டினரோடு சற்று முன் தன்னோடு மோதியவனும், அவன் நண்பன் குடும்பமும் இருப்பதை பார்த்துவிட்டு., இவர் பொண்ணுக்கு என்ன உறவு முறையாக இருக்கும் என்று யோசித்தாள்.

   பின்பு ‘வேண்டாம் வேண்டாம் நமக்கு தேவையில்லாதது’, என்று மனம் நினைத்தாலும்.,

    கண்ணோ அவ்வப்போது அவன் அருகில் வேறு யாரும்   இருக்கிறார்களா என்பதை ஆராய்ச்சியோடு நோக்குவதை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

   தேவையில்லாத வேலை பார்க்காத, அமைதியா இரு, ஒழுங்கா இரு, என்று சொல்லிக் கொண்டே தன் குடும்பத்தினரை நோக்கி சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!