Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 4

KKEN -4

  குடித்து ரோட்டில் அமர்ந்து அட்டகாசம் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவனுக்கு பெரிய சுதந்திர போராட்ட தியாகி போல வரவேற்பு. அவன் அன்னை தலையில் எண்ணெய்  வைத்து குளிப்பாட்டினாள். குளித்து உண்டு முடித்த மலரின் கணவனுக்கு உடல் எங்கும் ஒரே வலி. மனைவிதான் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தாள். அதுவே அப்படி இப்படி என்று அவனுக்கு மூடு மாறியது. மனைவியின் கை பிடித்து இழுத்தான். அவனுக்கு ஆசை தீரும் வரை  உபயோகப்படுத்திக் கொண்டான். அனைத்தும் முடிந்ததன் பிறகு உதறி தள்ளி விட்டு திருப்பி படுத்துக் கொண்டான். இவளோ குளியல் அறையில் அமர்ந்து ஓவென கதறினாள். ஆசை வார்த்தைகள் கிடையாது. அன்பு முத்தங்கள் இல்லை. உனக்காக நான், எனக்காக நீ. நீ மட்டுமே என்ற நம்பிக்கை இல்லை. ஏதேதோ பெண்களிடம் உறவாடியவன் தொட்டது அவளுக்கு பிடிக்கவில்லை. அருவருப்பாக இருந்தது. எத்தனை முறை குளித்தாலும் செய்த பாவம் போகவில்லை. தலையில் துணியை  சுற்றிக் கொண்டு துணியை காயப்போட வந்தவளை பார்த்து பக்கத்துக்கு வீட்டு அக்கா,

“என்ன மலரு ! அண்ண(ன்) வீட்டுல இருக்காரா ?பகல்லையே மஜாவா?” கண் சிமிட்டி அவள் கேட்டதில் இவளுக்கு உடம்பு எங்கும் பூரான் ஊறுவது போல இருந்தது. இது என்ன பழக்கம் அடுத்தவர்கள் வீட்டு கட்டிலை எட்டி பார்ப்பது போல?”



Advertisement

கோபமாக வந்தது.

உள்ளே  வந்தவளை மாமியார் பிடித்துக் கொண்டார்.

“என்னடி இது பட்ட பக்கல்ல?அசிங்கம் புடிச்சவளே”

Advertisement

“இல்ல  அத்த அவருதான்…”

Advertisement

“அவன் ஆம்பிள. அவனுக்குத் தான் தெரியாது. உனக்கு எங்க போச்சு அறிவு. இது என்ன வீடா? இல்ல?*****. காதில்  ரத்தம் வந்தது.

“போ! அவன் வந்ததும் கழுவி விடு” மாமியாரின் முகத்தில் அத்தனை அருவருப்பு.

பொறுத்துக் கொண்டாள் .

Advertisement

மறு  நாள் அழகாக விடிந்தது.

“மேடம் ! இந்த மாதிரி துணி எத்தனை விலை இருக்கும்?”

“யாருக்கு வெற்றி?”

‘பாப்பாக்குத்தான் மேடம். ஸ்கூலை ஏதோ டான்சுல இருக்கலாம். அவங்க சொன்ன கடைல போய்  கேட்டா அவங்க சொல்லற விலைக்கு நாலு ஆடு,மாடு வாங்கிடுவேன் போல இருக்கு. அதான் உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுருக்குமேன்னு..” போனில் ஏதோ ஒரு போட்டோவை காட்டிக்  கேட்டான்.

அவன் சொல்லி விதத்தில் அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

“இந்த விலைக்கு நீங்க சொல்லற மாதிரி ஆடு மாடெல்லாம் வாங்க முடியாது. நாமளே தைச்சா ஓகேவா?”

“அதெல்லாம் ஓகே தான் மேடம். டைலர் யாருன்னு காட்டுங்க. நான் பாப்பாவை கூட்டிட்டு  போய்  அளவெடுத்துக்கறேன்”

அவன் கண்ணாடியில் தன்  உருவத்தை காட்டினாள்.

“பரவால்ல. டைலர் அழகாத்தான் இருக்காங்க”

பிறகே அது அவள் என்பதை உணர்ந்தான்.

“அய்யயோ சாரி மேடம். ஏதோ தப்பா  சொல்லிட்  இல்ல ஒளறிட்டேன்”

வாய் தந்தி  அடித்தது.

“ம்! அந்த பயம் இருக்கட்டும். பாப்பாக்கு எத்தனை வயசு வெற்றி?”

“நாலு ஆகுதுங்க மேடம்”

“ம்! சரி . ஈவினிங் கூட்டிட்டு  வா. அளவெடுத்துட்டு அப்புறமா துணி வாங்கிக்கலாம். தேவையான அளவு மட்டும் எடுத்தா போதும். அனாவசியமா காசு வேஸ்ட் பண்ண வேணாம்.

“சரிங்க மேடம்”

மாலை பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான் வெற்றி.

அவன் ஆட்டோ சத்தம் கேட்டு வாயில் வரை வந்து வரவேற்றாள் வித்யா.

காயத்ரியும் வந்து வரவேற்றாள். குழந்தையை மட்டும் அனுப்பி விட்டு இவன் வெளியிலேயே நின்று கொண்டான்.

“அத்தை !உங்க பேரு என்ன?”

“அத்தையா?” ஆன்டி என்ற பெயரையே கேட்டு பழக்கப்பட்டவளுக்கு புரியவில்லை.

காயத்ரிதான்,

“அதான் சொல்லிட்டியே அத்தைன்னு ” லேசாக முகம் தடவினாள் .

“நாம சொல்லற மாதிரி ஆன்டின்னு சொல்ல மாட்டாங்க. அத்தைன்னு தான் சொல்லி குடுப்பாங்க”

“அப்ப ஆம்பிளைங்கன்னா? “

“மாமா! இது கூட சொல்ல தெரியலையே” குழந்தையின் பதிலில் வித்யாதான் பல்ப் வாங்கினாள் .

“அப்ப  வெற்றி ஒனக்கு யாரு?’

“மாமா”

‘அவங்களுக்கு கல்யாணம் ஆனா?’

“அத்தை”

“வெற்றி மாமா உன்ன என்ன சொல்லி இங்க கூட்டிட்டு வந்தாங்க?”

“ஸ்கூலுக்குத் துணி எடுக்க அளவு குடுக்கனுன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க”

“இன்னும் வேற என்ன சொன்னாங்க”

இடுப்பில் அளவு எடுத்து குறித்துக் கொண்டாள் .

“நீங்க  ரொம்ப அழகா இருப்பீங்கன்னு சொன்னாங்க”

இவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

“வேற என்ன சொன்னாங்க”குரல் இறுகி இருந்தது .

“நீங்க ஜாலியா பேசுவீங்கன்னு சொன்னாங்க”

“வேற?”

இன்னும் எத்தனை வேற? குழந்தைக்கு போர் அடித்தது.

“நான் மாமாகிட்ட போகணும்”

சட்டென முக பாவத்தை மாற்றிக் கொண்டவள், அவளை அழைத்து சென்று ப்ரிஜில் வைத்திருந்த இனிப்பு வகைகளை கை முழுவதும் அடுக்கினாள் .

பாவாடையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்ற குழந்தை ஒரு பை  முழுவதும் இனிப்புகளை தூக்கிக் கொண்டு வந்தாள் .

“எதுக்கு மேடம் இதெல்லாம்?”

“இருக்கட்டும்பா! குழந்தை சாப்பிட்டாலே நாம சாப்பிட்ட மாதிரி”

சொன்ன காயத்ரியிடம் கை  எடுத்து கும்பிட்டான்.

“ரொம்ப நன்றிங்க!”

வித்யாவோ வெற்றியை கை  கட்டிக் கொண்டு ஒரு மார்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை போட்டு கொடுத்த விஷயம் வெற்றிக்கு தெரியாது. அதனால் அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியவில்லை.

“இந்த ட்ரெஸ் தைக்க துணி வாங்கணும். எப்ப போகலாம் வெற்றி?

“நீங்க எப்ப சொன்னாலும் ஓகே மேடம்”

“சரி! நாளைக்கு காலேஜ் விட்டதும் போலாம்”

“சரிங்க” பதவிசாக சொல்லி விட்டு கிளம்பினான்.

போகும் வழி எல்லாம் பாப்பா வித்யாவை புகழ்ந்து கொண்டே வந்தாள் .

வித்யாவின் பார்வையின் அர்த்தம் என்ன? யோசித்தவனுக்கு விடை தெரியவில்லை.

மறு  நாள் தேவையான பொருட்களை வாங்கி முடித்தவளுக்கு பயங்கர பசி.

“என்ன வெற்றி! இவ்ளோதூரம் உனக்காகத் தானே வந்திருக்கேன். சாப்பிட எதுவும் வாங்கி தர மாட்டியா?”

அங்கே இருந்த அமுல் ஐஸ் கிரீம் பார்லரில் நுழைந்தார்கள். அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தான்.

“அவனிடம் பணம் இருக்குமா?” அவள் கவலை படவில்லை அவனும் யோசிக்கவில்லை. அவளுக்குச் செய்வது அவனுக்கு இன்பமாக இருந்தது. அவன் இதுவரை பாப்பாவைத் தவிர வேறு யாருக்கும் இத்தனை உரிமையாக வாங்கி கொடுத்ததே இல்லை. அக்காவுக்குச்  செய்ய ஆசை. ஆனால் என்றுமே அவள் வாயை திறந்ததே இல்லை. தங்கையோ ஒரு மாதிரி அடாவடியாக வாங்கி கொள்வாள். நீ செய்து தான்  ஆக வேண்டும். அது உன் கடமை என்பது போலத்தான் இருக்கும். அதில் அன்போ, உரிமையோ அல்லது ஆசையோ எதிர் பார்க்க முடியாது. இவள் உரிமையாக கேட்டது மனதிற்கு இதமாக இருந்தது. இதுதான் காதலா ? அவன் அறியவில்லை. அவன் அறியும் நேரம் அவன் காதல் அவனிடம் இருக்குமா?

அவனிடம் இருந்த பணத்தில் அவள் வயிறு நன்றாகவே நிரம்பி இருந்தது. முகம் முழுவதும் அத்தனை சந்தோஷம். வயிறு நிரம்பியதில் அவளுக்கு மகிழ்ச்சி. வாங்கி கொடுத்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. இருவருமே அவர்களை அறியாமலேயே ஒருவருக்காக அடுத்தவர் வாழ ஆரம்பித்தார்கள். இன்று சின்ன சின்ன  விஷயங்களாக இருப்பது நாளை பெரிய விஷயமாக மாறும்போதும் இப்படியே இருப்பார்களா?

அன்றே துணியை வெட்டி வைத்தாள் . மறுநாள் முடித்து கொடுத்தாள் .

“எத்தனை பணம் தர வேண்டும்?”

பதிலாக  முறைப்பே கிடைத்தது. எங்கே பண செலவை இழுத்து பிடிக்க நினைத்தானோ அது வேறு விதமாக செலவானது.

“வெற்றி  ஒரு தொள்ளாயிரம் ரூவா கொடுடா “

“எதுக்கு?”

“சொல்லறேன். முதல்ல இவரை அனுப்பி விடுவோம்”

வந்த பாக்கெட்டை பிரித்தாள் . அதில் மகளுக்கு போட்டியாக அதே வர்ணத்தில் அதே போன்று அவர்களை சுடிதார் இருந்தது. துணியின் விலை ஆறு நூறு என்றால், உடனே வருவதற்கு அதிகப்பணம், பேக்கிங் சார்ஜ், வரி எல்லாம் சேர்த்து முன்னூறு அதிகமாக வந்தது. இதில் அறுபது சதவீதம் அந்த உடைக்கு தள்ளுபடியாம். தங்கைதான் ஜம்பமாக கூறினாள்.

உடனே ஓடிச் சென்று போட்டு பார்த்து கண்ணாடி முன் நின்றாள்.

பளீரென்ற அரை கன்னத்தில் விழுந்தது. ஒவ்வொரு ரூபாய்க்கும் எத்தனை  கஷ்டப் படுகிறான் என்பது வெற்றிக்குத்தான் தெரியும். கடனுக்கு பயந்து இன்னும் அவன் சொந்த ஆட்டோ கூட வாங்கவில்லை. சிறிதும் பொறுப்பில்லாமல் ஊதாரித் தனமாக செலவு செய்யும் தங்கை மீது அளவு கடந்த கோபம் வந்திருந்தது.

அவள் தந்தையும் கணவனும் வந்ததும் வீட்டை இரண்டாக்கி விட்டாள் .

“என்னப்பா நீ! எப்ப  பார்த்தாலும் அவளையே தூக்கி வச்சு ஆடற? இப்டி ஊதாரித்தனம் பண்ணா  குடும்பம் விளங்குமா? நம்ம பாப்பாக்கு அந்த வித்யாம்மா துணி தைச்சு குடுத்தாங்க. அந்த காச மிச்சம் பண்ணித்தான் இந்த மாசம் கரண்டு பில்லுக்கு காசு சேக்கறேன்”

“கரண்டுக்கு எவ்ளோடா ஆகிடும்?” தலையை அள்ளி  முடிந்து அடுத்த சண்டைக்கு தயாரானாள்.

“இங்க பாருங்க வெற்றி . நாங்க இங்க இருக்கறது புடிக்கலன்னா சொல்லிடுங்க. அதுக்குன்னு இப்டி வாய்க்கு வந்த படி எல்லாம் பேசாதீங்க”

வாய் மட்டும் கணவனுக்கும் மனைவிக்கும் நீண்டதே தவிர கணவன் பர்சில் இருந்து ஒரு ருபாய் கூட வெளியில் வரவே இல்லை. இப்போது மட்டும் அல்ல எப்போதுமே அப்படிதான். தந்தை மட்டும் என்னவாம்? மகளுக்கு சப்போர்ட்டாக பேசுவார் தவிர அவருடைய பொறுப்புக்களை தவிர வேறு எதற்கும் காசு கொடுக்க மாட்டார். தந்தை காசு கொடுக்க வேண்டும் என்று வெற்றி எதிர் பார்த்ததே இல்லை. அதே சமயம் மகளை, அவள் ஊதாரித்தனத்தை அடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தான். புவிக்கு குழந்தை பிறந்தது ஓலா நாளை மலருக்கும் குழந்தை பிறக்கும். அவள் குழந்தைக்கும் செய்ய வேண்டும். அவளுக்கும் மருத்துவ செலவுகள் இருக்கும். தந்தையும் இருதய வலி வந்தவர்.  வர போகும் செலவுகளை நினைத்து வெற்றிக்கு பயம் வந்திருந்தது. முதல் செலவாக சேமிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு முதல் செலவாக கடனே வந்து நின்றது.

மூவரும் பேசுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் எதையும் பேசவிலை.

வெற்றி  எதுவும் வாய் திறக்கவில்லை. அமைதியாகம்  மின்சார வாரிய அட்டையை கொண்டு வந்து தங்கையிடம் கொடுத்தான். இந்த மாசம் பில்லு வரும் பார்த்து கட்டுங்க. இங்கே அங்கே என்று சுற்றி மீண்டும் அவன் சேரும்என்பது  அவன் அறிந்ததே. இருப்பினும் இப்போதைக்கு சண்டையை நிறுத்த இதுதான் வழி. இரவில் இவனிடம் உறங்க வந்த மகள் விஜியை  அடித்து இழுத்துப் போனாள்  தங்கை.

“இங்க பாரு நம்ம சண்டைக்கு குழந்தையை இழுக்காத”

“எங்க குழந்தையை எங்களுக்கு பாக்க தெரியும் ” மாப்பிள்ளை குத்தலாக சொன்னார்.

“ஒரு ஆயிரம் ரூவா காசு. அதுக்கு இப்டி குடும்பத்துல கலகம் பண்ணிட்டியே? சீ! பாயை வேகமாக உதறிப் போட்டுக் கொண்டார் தந்தை.

“ஆயிரம் ருபாய் என்பது தனக்கு எத்தனை பெரிய விஷயம்? தங்கைக்கும் அவள் கணவனுக்கும்தான் பணத்தின் அருமை தெரியவில்லை. தந்தைக்குமா? நான் என்ன பணம் காய்க்கும் மரமா? இல்லை மெஷினா? வேலை  முடித்து வீட்டிற்கு வரும்போது தட்டு வைத்து இரண்டு தோசைகளை போடக் கூட இந்த வீட்டில் யாரும் இருந்ததில்லை.மனதில் எரிச்சல் மண்டியது.

மறு நாள் காலையில் பாபாவுக்கு தைத்த மாதிரியே தனக்கும் ஒன்று தைத்து வைத்திருந்தாள்  வித்யா.

“அன்னையே! இந்த புது உடை  எவ்வாறு உள்ளது?”

மஹாராணி போல இரண்டு பக்கமும் சுற்றி சுற்றி காட்டினாள்.

“ரொம்ப அழகா இருக்க” முகம் வழித்து திருஷ்டி எடுத்தாள்.

தந்தையோ” யூ லுக் வெரி ப்ரிட்டி .பியுட்டிபுல் ” என்றார்.

“தேங்க்ஸ் பா! தந்தைக்கும் அன்னைக்கும்  கன்னத்தில் முத்தமிட்டு வேகமாக கல்லூரிக்கு கிளம்பினாள் .

“வெற்றி என்ன சொல்லுவான்? தோழிகள் என்ன சொல்லுவார்கள்” என்ற எண்ணத்தோடு வந்தவளை பார்த்தான் வெற்றி.

ஒற்றை புருவத்தை தூக்கி எப்படி இருக்கு என்று கேட்டாள் .

அந்த பண்ணீர்  ரோஜா வர்ண உடையில்  உண்மையிலேயே ரோஜா பூ குவியல் நடந்து வந்தது போலத்தான் இருந்தாள் .  ஏற்கனவே மாசு மருவில்லாத பால் வர்ண முகத்தில் ஆடையின்  பிரதிபலிப்பும் சேர்ந்து கொள்ள கேட்கவும் வேண்டுமா?

பதிலுக்காக காத்திருந்தவளிடம்,

“பரவால்ல. நல்லாத்தான் இருக்கு ” குரலில் சுரத்தே  இல்லை. இவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. மூஞ்சியை உர்ரென்று தூக்கி வைத்துக் கொண்டாள் . அவனுமே  அதே போலத் தான்  இருந்தான். அவனுக்கு அவன் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. கலையிலும் பாப்பாவிடம் பேசவில்லை. வித்யாவிடமும் பேசவில்லை. யாரிடமும் பேசவுமில்லை. பேச வேண்டும் என்று தோன்றவும் இல்லை. அவன் வீட்டில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? வித்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. அவர்கள் வீட்டில்தான் பிரச்சனை என்பதே இருந்ததில்லையே!

கல்லுரியில் அனைவருமே பாராட்டினாலும் ஏனோ அவனின் அலட்சியம் இவளுக்கு கஷ்டமாகவே இருந்தது. ஆட்டோவின் முன் சீட்டில் வந்து அமர்வது போல அவளின் மனதில் ஆசனம் போட்டு அமர்ந்துவிட்டான் . எப்போது? எப்படி?

தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!