Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oorkolam Pogum Kaarkala Megam

Oorkolam Pogum Kaarkala Megam 4 3

            ஆனால் அன்னையை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது, ஒருத்தியாக வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் பார்ப்பது கஷ்டம் தானே? அதனால் மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள்.

            பேருந்தில் வந்தது ஒரு மாதிரி இருக்க “கொஞ்ச நேரம் படுக்குறேன் மா”, என்று சொல்லி விட்டு அவளது அறைக்கு வந்தாள். அந்த வீட்டிலே இவளது அறை தான் சிறியது, ஷிவானி அறையும் புகழ் அறையும் பெரியதாக இருக்கும். அவளுடைய தாய் தந்தை இருக்கும் அறையை தான் முதலில் இவளுக்கு கொடுத்தார்கள்.



Advertisement

            ஆனால் இவள் தான் வள்ளல் ஆயிற்றே. அதனால் அதை பெற்றோருக்கு கொடுத்து விட்டு இந்த அறையை எடுத்துக் கொண்டாள்.

Advertisement

            இவளது அறையை ஒட்டி பால்கனி போல சிறு இடமும் இருக்க அந்த இடத்தை இவள் கேக் செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டாள்.

Advertisement

            அறை சிறியதாக இருக்கிறது என்றெல்லாம் அவள் கவலைப் பட வில்லை. அவள் உண்டு அவள் படிப்பு உண்டு வேலை உண்டு என்று இருப்பாள்.

Advertisement

            இப்போதும் ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணி அவள் உள்ளே செல்ல அடுத்த நொடி அறைக்குள் பிரசன்னமானாள் ஷிவானி,

            இவள் அவளை கேள்வியாக பார்க்க “இங்க பாரு பூர்வி, உன்னையும் என்னையும் ஒரே வீட்ல கட்டிக் கொடுக்குறதுல எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. ஆனால் என் கல்யாணம் நடக்கணும். அதனால பொறுமையா இருக்கேன். இன்னும் சொல்லப் போனா நான் மதனை லவ் பண்ணதுனால தான் உனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை பிச்சையா கிடைக்கப் போகுது. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். ஒரு வேளை இதெல்லாம் ஒரு மூஞ்சியான்னு நினைச்சு அருள் அத்தான், அதான் மதனோட அண்ணன் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா கூட நல்லது தான். அப்பா உனக்கு வேற மாப்பிள்ளை பாப்பாங்க. அது யாரா இருந்தாலும் நீ கட்டிக்கணும்? எனக்கு முன்னாடி பிறந்து தொலைச்சிட்ட, அதனால நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். இல்லைன்னா எனக்கும் மதனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்க. அப்பா எந்த மாப்பிள்ளையை கொண்டு வந்தாலும் மண்டையை ஆட்டுற? அப்படி இல்லாம நான் படிக்கணும் கிடிக்கணும் இப்ப கல்யாணம் வேண்டாம், இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும், கவர்மெண்ட் வேலை வாங்கின பிறகு தான் கல்யாணம் பண்ணிப்பேன், இப்படி ஏதாவது கதை விட்ட நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”, என்று படபடவென்று பொறிந்து விட்டு சென்று விட்டாள்.

            பூர்விக்கு வந்த தூக்கம் கூட ஓடியே போனது அவள் பேச்சில். இவள் எல்லாம் பிச்சை போடுற அளவுக்கு தன் வாழ்க்கை ஆகி விட்டதா? என்று எண்ணியவள் “கடவுளே இவளோட அத்தானுக்கு என்னை பிடிக்கவே கூடாது. இவ இருக்க வீட்ல எனக்கு வாழ்க்கையே வேண்டாம். அதுக்கு ஏதாவது சாதாரண மாப்பிள்ளைக்கு கூட அப்பா என்னை கட்டி வைக்கட்டும்”, என்று வேண்டிக் கொண்டாள்.

            இப்போது தூக்கம் வராமல் தலை தான் வலித்தது. எவ்வளவு சுயநலமான மனிதர்கள் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவளது எண்ணுக்கு அழைப்பு வந்தது.

            அதை எடுத்து “ஹலோ”, என்றாள். “பூர்வி நான் அன்னம் பேசுறேன் மா”, என்றார் பக்கத்து தெருவில் இருக்கும் அன்னம்.

            “சொல்லுங்க ஆண்ட்டி”

            “லதா நீ வந்துட்டதா சொன்னா”

            “ஆமா ஆண்ட்டி, என்ன விஷயம் சொல்லுங்க”

            “என்னோட ரெண்டாவது பேரனுக்கு இன்னைக்கு நைட் பர்த்டே கொண்டாடுறோம். அதுக்கு ஒரு கேக் செய்யணும் மா. வேற இடத்துல ஆர்டர் கொடுத்துருந்தோம். அவங்களுக்கு ஏதோ பிரச்சனை போல லாஸ்ட் மினிட்ல பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. உன்னால முடியுமா மா?”

            “எத்தனை மணிக்கு ஆண்ட்டி?”

            “ஏழு மணி மா”

            “சரி, நீங்க என்ன மாடல் என்ன பிலேவர் வேணும்னு சொல்லுங்க. நான் திங்க்ஸ் எல்லாம் இப்பவே போய் வாங்கிட்டு வந்துறேன்”

            “இப்ப என்னோட மருமக உனக்கு அனுப்பி விடுவா மா. நீ முடிச்சிட்டு எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு. நான் ஜிபே பண்ணிறேன். அப்புறம் நீயும் அம்மா கூட வீட்டுக்கு வரணும்”

            “சரிங்க ஆண்ட்டி”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு இப்போது இருந்த எரிச்சல் அப்படியே மாறிப் போனது.

            மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றவள் குளித்து முடித்து கீழே வந்தாள்.

            மகள் கிளம்பி வந்ததை கேள்வியாக லதா பார்க்க “அம்மா உங்க பிரண்ட் பேசினாங்க. ஆர்டர் வந்துருக்கு. என்ன திங்க்ஸ் எல்லாம் வீட்ல இருக்குனு சொல்லுங்க, மீதியை நான் போய் வாங்கிட்டு வரேன்”, என்று சொன்னவள் அதை பார்த்து விட்டு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

            கேக் செய்வதற்கான பொருள்கள் வாங்கி விட்டு வீடு வந்தவள் மதிய உணவை முடித்து விட்டு கேக் செய்ய ஆரம்பித்தாள். பிடித்த வேலையை செய்யும் போது தன்னால் ஒரு உற்சாகம் வந்து விடும் போல? அவள் முகம் மலர்ந்தே இருந்தது.

            குழந்தைகள் கேக் என்பதால் கொஞ்சம் வேலையும் அதிகம் இருந்தது. ஐந்து மணிக்கு எல்லாம் வேலையை முடித்து அவர்களுக்கு அழைத்து தகவல் சொல்லி விட்டாள். அவர்கள் வீட்டில் இருந்தும் ஆட்கள் வந்து வாங்கிச் சென்று விட்டனர்.

            அவள் செய்ததில் மீதி இருக்கும் துண்டுகளை ஒரு டப்பாவில் எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தப் படுத்தியவள் மீதி இருந்த கேக்கை அன்னையிடம் சென்று கொடுத்து விட்டு மீண்டும் குளிக்கச் சென்றாள்.

            திருப்பி அவள் அன்னையை காண வரும் போது கேக் காலி ஆகி இருந்தது. ஒரு பீஸ் மட்டுமே சங்கரலிங்கத்துக்கு மிச்சம் இருந்தது. ஷிவானி, நித்யா இருவருமே பாதியை காலி செய்தார்கள் என்றால் மற்ற மூவரும் ஒரு துண்டு என எடுத்துக் கொண்டார்கள். நித்யா அவள் கணவனுக்கு என்று சொல்லி தனியே எடுத்து வைத்து விட்டாள். முடிவில் பூர்விக்கு எதுவும் இல்லை.

            அவளுக்கு தேவையில்லை தான். ஆனால் இப்படி சாப்பிட்டு விட்டு பின் ஏன் இதெல்லாம் ஒரு வேலையா என்று அவளை மட்டம் தட்ட வேண்டும் என்று மட்டும் தோன்றியது.

            “பூர்வி சப்பாத்திக்கு மாவு பிசைய உக்காந்துட்டேன். சாமிக்கு விளக்கேத்தி பூஜை பண்ணிரு மா”, என்றாள் லதா.,

            “சரி மா”, என்று சொல்லி விட்டு அவள் உள்ளே செல்ல அவளைக் கண்டு அனைத்து தெய்வங்களும் மௌனமாய் சிரிப்பது போல இருந்தது. அது புரியாமல் நல்லதே நடக்கும் என்று நம்பி விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தாள்.

            வாழ்க்கையில் எப்போதும் நல்லது மட்டுமே நடக்கும் என்று எதிர் பார்க்க முடியாதே. பொதுவாக கடவுளிடம் நல்லதே நடக்க வேண்டும் என்று கேட்பதை விட என்ன நடந்தாலும் அதை தாங்கும் தெம்பையும் தைரியத்தையும் தா என்று வேண்டுவது சிறந்தது. தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ளலாம். இந்த பாடத்தை படிக்க பூர்வி இன்னும் பல கஷ்டங்களைக் கடக்க வேண்டுமோ? காலமே பதில் சொல்லும்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!