Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

Pre final பொழியும் மேகம்!…

PRE FINAL…

 பொழியும் மேகம்!…

       செழியன் எதிர்பார்க்கவே இல்லை. நேரம் இரவு பன்னிரண்டு இருக்கும், வாசலில் சத்தம். என்னவென்று எட்டி பார்க்க, வந்தது இரு மாமன்கள் தான். உண்மையில் செழியனுக்கு ஒரு நடுக்கம் வந்தது. இவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என்று நினைக்கவே இல்லை. ஒரு மாதிரி பயத்தில் இருந்தான்.

       அந்த நேரத்திலும் விஜயா முழித்து தான் இருந்தார். மருமகன்களை வீட்டு ஆளாக வரவேற்க… நடந்த எல்லாவற்றையும் நர்மதா சொல்ல…



Advertisement

  நிரஞ்சன் முகம் யோசனையை காட்டியது. விநாயகம் நிரஞ்சனை பார்க்க… நிரஞ்சன் சொல்லிவிட்டான்.

   “நாம பேசி தீர்க்க முடியாது. பொதுவில் வைப்போம்…” என்று

  பிருந்தா எதுவோ சொல்ல வர நிரஞ்சன் தடுத்து “உங்களுக்கு ஆறு வயசுக்கு இளையவன் செழியன். அவன் மனைவி சுபா, உங்களுக்கு இன்னும் இளைய பொண்ணு. ஆனாலும் சரிக்கு சரியா வாக்குவாதம் நடந்திருக்கு… உங்க வயசுக்கு மரியாதை கொடுக்கவில்லை. இனி நாங்க வந்து பேசினாலும், எங்களுக்கும் அதேதான். எப்படி என்றாலும் சொத்து விஷயம் பொதுவில் தான் வைக்கணும்…” என்றவன்,

Advertisement

   “அத்தை நாளைக்கு நீங்க தான் பேசணும். பிருந்தா, நர்மதா நீங்க ரெண்டு பேரும் முதல்ல பேசி வராதீங்க. உங்க அம்மா பேசட்டும் பின்ன நீங்க பேசுங்க உங்க நியாயத்தை…”

Advertisement

   “ அது வந்து தம்பி! பொதுவுல வச்சு பேசும்போது நான் எப்படி பேச முடியும்?…” தயங்கினார் விஜயா.

     “நீங்கதான் அத்தை பேசணும். இப்ப மாமா இல்ல. அடுத்து நீங்க தான் இருக்கீங்க.. அவரிடத்தில் இருந்து இந்த குடும்பத்தை பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு.. நீங்க தான் பேசணும். உங்களோட கருத்தை, உங்க மகள் எடுத்து பேசட்டும்.. ஆனால், முதல் வார்த்தை நீங்க தான் பேசணும்…”

    “ஏன்னா நர்மதாவும் பிருந்தாவும் ஒண்ணா இருக்காங்க.. அவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கு. செழியன் தனியா இருக்கான். ஏதோ சின்ன பையனை ஏமாத்துற மாதிரி கொண்டு வந்துருவாங்க. எங்க சித்தப்பா தான.. எனக்கு நல்லா தெரியும். இன்னைக்கும் நடந்த விஷயம் எங்களுக்கு விருப்பம் இல்லை. யாரோ ஒருத்தன் என் மனைவியை பேசி இருக்கான். எனக்கு புடிக்கல, கோபம் வருது. ஆனாலும், நர்மதா மூலமாக நான் கத்துக்கிட்ட ஒன்னு உறவுகள்ன்னா முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.. நாங்களே முன்ன நின்று பேச முடியும். அதுக்காக அமைதியா போகவும் முடியாது. என் மனைவிக்காக நான் வந்தேன். என் முன்னாடி அவன் ஒரு வார்த்தை சொல்லிப் பார்க்கட்டும்… நாங்க முன்ன வந்தா… என்ன சொல்லுவாங்க மாமனார் வீட்டு சொத்துக்கு ஆசைப்படுறாங்கன்னு எங்களுக்கு ஒரு பேச்சு வந்துரும். உங்க பக்கம் நாங்க நிக்கிறதுக்கான அர்த்தம் மாறிப் போய்விடும். உங்க விருப்பம் என்னவோ அதவே சொல்லுங்க எங்களை யோசிக்காதீங்க. உங்க பையனுக்கு செய்ய விருப்பம் இருந்தா தயங்காம செய்யுங்க… உங்களுக்கு அப்புறம் நர்மதா, பிருந்தா பேசட்டும் அவங்களோட நியாயத்தை…”

Advertisement

 நிரஞ்சன் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மறுநாள் காலையில் நிரஞ்சன், நீதி தாத்தாவுக்கு அழைத்து பேசி விட்டான். அவனுக்கு எப்போதும் அவரின் வார்த்தைகளில் மதிப்பிருக்கும்… அதேபோல நிரஞ்சன் தான் மற்ற உறவுகளுக்கும் சொன்னது.

       பெண் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து ஒற்றை தம்பிக்கு எதுவும் செய்யாமல் ஒதுக்கி விட்டார்கள் என்ற பேச்சு வரக்கூடாதே… அதனால்தான் பேச்சுவார்த்தை பொதுவில் வைத்தான்.

       நிரஞ்சன் வார்த்தைக்கு தக்க காலை பதினொரு மணிக்கு எல்லாம் நெருங்கிய சில உறவுகள், பெரியவர்கள் வந்தார்கள். பொதுவாகவே நிரஞ்சன் மாமியார் வீடு என்று அடிக்கடி வருவதோ, தன் அதிகாரத்தை காட்டுவதோ, உள் விவகாரங்களில் தலையிடுவதோ கிடையாது. அவன் எல்லைக்குள் தான் எப்போதும் இருப்பான். இப்பொழுது அந்த மருமகனே தனிப்பட்டு எல்லோரையும் அழைத்து இருக்க… அவன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வந்தார்கள்.

       நீதி தாத்தா தான் முதலில் ஆரம்பித்தார். சுபா வீட்டு ஆட்களும் வந்திருக்க.. சுற்றி எல்லாம் வளைக்கத் தேவையில்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டார்.

        நிரஞ்சன் மனைவி அருகில் தான் நின்று இருந்தான். எங்கே நான் இருக்க என் மனைவியை ஒரு வார்த்தை சொல்லிப்பார்?… என்று ஒரு பார்வையில் அவன் பார்த்து நிற்க. சுபா அண்ணனுக்கு தன்னாலே ஒரு பயம் வந்தது.

        சொத்து விவகாரம் சொல்லப்பட நீதி தாத்தா நேரடியாக விஜயாவை தான் கேட்டார்.

     ஆனால் முந்தி கொண்டது சுபா…

     “இங்க பாருங்க தாத்தா, பொம்பள பிள்ளைகளுக்கு நம்ம ஊரு பக்கம் என்ன செய்யணுமோ.. அதை விட அதிகமாகவே நாங்க செஞ்சாச்சு.. ஒவ்வொரு வருஷத்துக்கும் தீபாவளி, பொங்கல், கல்யாணம், பிறந்தநாள் எல்லாத்துக்கும் பாத்தாச்சு.. இவங்க ரெண்டு பேரும் கவர்மென்ட் வேலை பார்க்கிறாங்க. ஒத்த தம்பி தானே.. அவருக்காக விட்டுக் கொடுத்தா என்ன?… எங்க மாமா இருந்தப்போவும் எல்லாம் இவங்க தான் அனுபவிச்சாங்க, இப்பவும் எல்லாம் இவங்களுக்கே வேணும்னு நினைக்கிறாங்க…”

    “சிறுக சிறுக பொறந்த வீட்டுல எவ்வளவு வாங்கிட்டு போயிருக்காங்க தெரியுமா?… உப்பு, புளி கூட இங்க இருந்து தான் போகும். மூணு மாதத்துக்கு ஒரு தடவை மகள்களை போய் பாக்காம மாமாவுக்கு தூக்கமே வராது. அப்ப எல்லாம் சும்மாவா போவாரு… கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு. இவ்வளவு வாங்கிட்டு.. இன்னைக்கும் சொந்த தம்பி நல்லா இருக்கணும்னு நினைப்பு இல்ல…” முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டாள் சுபா.

        எப்பவும் பட்டென்று பேசும் ஆள் பிருந்தா தான். ஆனால், இன்று என்னவோ சுபா பேச்சு நர்மதாவுக்கு கோபத்தை கொடுத்தது. கணவன் பொறுமை என்று சொன்னதெல்லாம் மறந்து போனது.

       “ சரி சுபா நீ சொன்ன மாதிரியே நானும் சொல்றேன். ஆமா, எங்க அப்பா எங்களுக்கு பார்த்தாரு செஞ்சாரு அதெல்லாம் வாங்கிட்டு சொத்து கேட்டு வந்திருக்கோம். அதான உனக்கு கோபம்…” என்றவள் பிருந்தாவை பார்க்க,

   பிருந்தா உள்ளே சென்று ரெண்டு பையை கொண்டு வந்தாள். நர்மதா அதை வாங்கி அதை பொதுவில் வைத்தவள்,

   “பாருங்க, தாத்தா இதுதான் எங்க அப்பா எங்களுக்கு போட்ட நகை… இதைத்தானே பெருசா சொல்றாங்க, அதை திரும்ப வச்சாச்சு. இனி சொத்தை பிரிக்கலாம் தானே?… அப்ப சொத்தை மூணு பங்கா, இல்ல எங்க அம்மாவுக்கும் சேர்த்து நாலா போடுங்க…” என்று நர்மதா சொன்னதும் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

     நர்மதாவிடம் இருந்து இப்படி ஒன்றை சுபா எதிர்பார்க்கவே இல்லை. கிராமப்புறங்களில் சொத்து எல்லாம் ஆண் வாரிசுக்கு மட்டும் தான். என்னதான் சட்டம் பெண்களுக்கு சொத்துரிமை என்று சொன்னாலும், இன்னமும் குடும்ப சொத்து, தொழில் எல்லாம் அந்தந்த வீட்டு ஆண் வாரிசுகள் வசம் தான். அதைக் கொண்டுதான் சுபாவுக்கு அவ்வளவு நம்பிக்கை.

        இன்று நர்மதா சொத்தில் பங்கு கேட்டதோடு, போட்ட நகையும் கொண்டு வந்து வைக்க, திகைத்துப் போய் பார்த்தாள் சுபா. நகை போட்டு கல்யாணம் செய்து கொடுத்தாச்சு, செய்ய வேண்டிய சீர் செய்தாச்சு சும்மா ஒன்றும் விடவில்லை என்று காட்ட தான் இவ்வளவு பேச்சும்… இன்று நர்மதா அந்த நகையை தூக்கி வைத்து, சொத்தை சமமாக பிரிக்க சொல்ல எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள் சுபா.

     நர்மதா என்னம்மா இது என்று பெரியவர் ஒருவர் கேட்க

   “வேற என்ன பெரியப்பா எங்களை செய்ய சொல்றீங்க.. எங்க வீட்டு மருமக எப்படி பேசுறா பாத்தீங்க தானே. எங்கப்பா எங்களை படிக்க வச்சாரு, எங்கப்பா எங்களை கல்யாணம் பண்ணி கொடுத்தாரு, எங்க அப்பா சாகுற வரைக்கும் எங்கள பார்த்தாரு… அதே மாதிரி தானே என் தம்பிக்கும் பார்த்தாரு… அவனை படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி, வேலை வாங்கி கொடுத்து எல்லாம் செய்தார். ஆனால், பொம்பள பிள்ளைகளுக்கு செய்வது மட்டும் கணக்கில் வருமா?…”

     “உங்க எல்லாருக்கும் பொம்பள புள்ள இருக்கு தானே. நீங்க சொல்லுங்க?.. வருஷத்துக்கு இரண்டு தடவை வருவோம். அப்படி வரும்போது எல்லாம் எங்க அப்பா எங்கள பார்ப்பாரு… பொறந்த வீட்டுல இருந்து என்ன எடுத்துப் போவோம் மிளகாய், மசால், வத்தல், மிளகு, சீடை , முறுக்கு இதுதானே. இது கூட இங்க இருந்து கொண்டு போக கூடாதா?… நாங்க பொறந்ததுல இருந்து தான் எங்க அப்பா பிறந்தநாளுக்கு டிரஸ் எடுத்து தருவாரு. இதெல்லாம் ஒரு கோடி ரூபாய் ஆகுமா தாத்தா. கணக்கு போட்டு சொல்ற அவங்களவே கேளுங்க… மருமகளையும் பிரிக்காமல் தான் எங்க அப்பா பார்த்தாரு… எங்களை கல்யாணம் பண்ணி கொடுத்ததாலேயே நாங்க அடுத்த வீட்டு பொண்ண போயிட்டோம். அவங்க கல்யாணம் பண்ணி வந்ததாலே, அவங்க இந்த வீட்டு பொண்ண ஆயிட்டாங்க… அவங்களுக்கு உரிமை இருக்கு, எங்களுக்கு உரிமை இல்லை…” ஆதங்கமாக நர்மதா சொல்ல,

  “ நர்மதா என்னமா இது விடு… அது ஏதோ சின்ன பிள்ளை புரியாமல் பேசுது…” என்று நீதி தாத்தா சொல்ல,

   “இப்பதான் தாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்க அப்பா இருந்திருந்தா இப்படி ஒரு பேச்சு எங்களுக்கு வந்து இருக்குமா?… இல்ல இவ தான் எங்க அப்பா இருந்த வரைக்கும் ஒரு வார்த்தை சொல்லி இருப்பாளா?… அப்பா இல்லாட்டி எந்த வயசுலயும் அனாதையா?.. நாளைக்கு நாங்க வந்து சாப்பிட்டது கூட சொல்லி காட்டுவா தான..” குரல் கமர நர்மதா பேசவும், நிரஞ்சன் மனைவி அருகே வந்து நின்று கொண்டான்.

     விஜயாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இதெல்லாம் அவரால்தான், மருமகள் முன்னாடியே மகளை அடுத்த வீட்டுப் பெண் என்று சொல்லி பேசுவதாலே சுபாவுக்கு இந்த துடுக்குத்தனம் வந்தது. பெற்றவள் தான் இருக்கும் போதே, எங்க அப்பா இல்லாமல் நாங்க அனாதையா போயிட்டோம் என்ற மகளின் வார்த்தை அவரை குத்தியது.

       “விஜயா நீ சொல்லுமா.. என் மகன் இல்லை. இனி நீ தான் சொல்லணும். உன் விருப்பம் என்ன?…” என்று தாத்தா கேட்க.

   “மாமா, எனக்கு இந்த வீட்டை விக்கவோ, மத்த சொத்த மாத்தி கொடுக்கவோ விருப்பமில்லை…” பட்டென்று சொல்லிவிட்டார் விஜயா.

     செழியன் திகைத்துப் போய் தாயைப் பார்த்தான். அவர் தானே அடிக்கடி சொல்லுவார், என்னைக்கா இருந்தாலும் இது எல்லாம் உனக்கு என்று… இன்று மாத்தி பேசுகிறார்.

  அதற்கு விளக்கமும் கொடுத்தார் விஜயா.

     “ஆண் வாரிசு தான் ஒசத்தி. நாளைக்கு அவன்தான் நம்மள பாப்பான். நம்ம பேர் சொல்ல போறது அவன் தான். அப்படின்ற எண்ணம் எல்லாம் எனக்கு இருந்துச்சு தான். அதுக்காக நான் நேரடிய ஆம்பள பிள்ளையை மட்டுமா பெத்து எடுத்தேன். அவனுக்கு முன்னால ரெண்டு பொம்பள பிள்ளையை வச்சிருக்கேனே. அவங்களுக்கு பார்க்கிறதும் செய்யறதும் எங்க கடமைதானே. அவங்க அப்பா போய் சேர்ந்து அஞ்சு மாசம் கூட ஆகல.. சொத்து எல்லாம் இவன் வேணும்னு நினைக்கிறான்…”

   “நான் தான் சொன்னே, எல்லாமே என் மகனுக்கு, பொம்பள பிள்ளைகளுக்கு சொத்து கிடையாது. அவங்களுக்கு சீர்வரிசை போதும்.. நாளைக்கு நம்மள பாக்க போறது பையன் தான். நம்ம கூட இருக்க போறதும் அவன் தான். அவனுக்கு தான் எல்லாம் வேணும்னு, இவங்க அப்பா கிட்ட சண்டை போட்டு எல்லாத்தையும் இவனுக்குன்னு நான் தான் புடிச்சு வச்சேன். பிருந்தா அப்பா அப்பவே சொன்னார், பொம்பள பிள்ளைகளையும் நம்ம தானே பெத்து வளர்த்தோம். அவங்களுக்கு நம்ம தான் செய்யணும் அப்படின்னு…”

   “நான் எங்க நினைச்சேன், கிராமத்து மனுசி. காலத்துக்கும் பொம்பள மக்களுக்கு சீர் செய்யணும்… சீரும் செய்து, சொத்தும் தனியா கொடுக்கணுமா?.. நம்ம இல்லாத காலத்துல ஆம்பள பையன் தான் பொம்பள பிள்ளைகளை பார்ப்பான். நாளைக்கு அவன் தான் கூடப்பிறந்த பிள்ளைகளை இழுத்துக்கு போவான்ன்னு நினைச்சு எல்லாத்தையும் அவனுக்கு புடிச்சு வச்சேன். தப்பா போச்சு…” கண் கலங்கியது.

    செழியன் நிமிரவே இல்லை. என்னவோ அவனுக்குள் தாய் பேசும் பொழுது குற்ற உணர்வாக இருந்தது.

    “பொம்பள பிள்ளைகளை அவங்க அப்பா வளர்த்தார். இவன தான் நான் வளர்த்தேன். என் வளர்ப்புதான் தப்பா போச்சு. கூடப்பிறந்த பிள்ளைகளுக்கு சீர் செய்ய கணக்கு பார்க்கிறவன், முழு சொத்தையும் எடுக்க நினைக்கிறான். அப்படி எல்லாம் என்னால விட்டுக் கொடுக்க முடியாது மாமா…”

   “எனக்கு இவன் மகன் தான். இவன் மேல பாசம் அதிகமாக இருக்குதான். அதுக்காக இவனுக்கு முன்னால ரெண்டு பொம்பள பிள்ளைக்கு இருக்கு… பொறந்த வீட்டை எதிர்பாக்காத அளவுக்கு நல்ல இடத்துல தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம். ஆனால், பெத்தவங்கன்னு அவங்களுக்கு துணையா நாங்க நிக்கணும் தானே. உண்மையா அவங்களுக்குன்னு கல்யாணம் பண்ணும் போது கொடுத்த சீர் தான் பெருசு. அடுத்து என்ன தீபாவளி, பொங்கல், பிறந்தநாள்னா ஆயிரம், இரண்டாயிரம் கையில கொடுப்போம். அதுக்கே கணக்கு சொல்றா என் மருமக…”

     “அவங்க அப்பா இல்லாட்டியும் அவர் இடத்துல இருந்து பிள்ளைகளை நான் தானே பார்க்கணும். இவனை நம்பி நான் போகமாட்டேன்…” திடமாக சொன்னார்.

     “நாளைக்கு எனக்கோ, மக்களுக்கோ இவன் எதுவும் செய்ய மாட்டான். எந்த நம்பிக்கையில எல்லாத்தையும் இவன் கையில ஒப்படைகிறது மாமா.. ஆண் வாரிசு மட்டும்தானா.. பொம்பள பிள்ளை பெத்ததும் என் பேரன், பேத்தி தானே… சின்னவளுக்கு ரெண்டு பொம்பள புள்ள இருக்கு.. அதுக வயசுக்கு வந்தா சீர் செய்ய பார்க்க என் கையில நாலு காசு இருக்கணும். இந்த வீடு, என் வீடா இருந்தா மட்டும் தான் என் மக்க வந்து போக இருப்பாங்க.. ஒரு கோவில், விசேஷம்ன்னா என் பிள்ளைங்க எந்த வீட்டுக்கு வருவாங்க… குடும்பத்துல ஒரு சண்டையா கூட இருக்கும். ஆறுதலுக்கு அம்மா வீடுன்னு ஒன்னு வேணும் தானே… அம்மாச்சி வீடுன்னு என் பேரன், பேத்திக என்னை தேடி வரணும். நான் போய் மகன், மருமகள அண்டி நின்னா? என் பிள்ளைக யார் கிட்ட வந்து நிக்குங்க…” கொஞ்சம் அழுகையோடு விஜயா சொல்ல,

   செழியன் கண்கள் கூட கலங்கியது. எதுவும் பேச தோன்றாமல் நின்று விட்டான். அம்மா அக்கா எல்லாம் ஒரு பக்கம் நிக்க, இவன் மட்டும் தனியாக நின்றான். செழியனே வாய் பேசாமல் இருக்கும் பொழுது சுபா வீட்டு ஆட்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றார்கள். குடும்பத்துப் பெரியவர் இருக்க அப்படியெல்லாம் வாய் விட முடியாது. நேத்து மூணு பெண்களாக இருந்தார்கள். இன்று விநாயகம், நிரஞ்சன் வேற நிற்க. இவர்கள் வாய் அமைதியாக தான் இருந்தார்கள்.

       “அதுதான் விஜயாவுக்கு சொத்த பிரிக்க விருப்பம் இல்லை என்று சொல்லியாச்சே… இங்க பாரு செழியா, உங்க அம்மா இங்க இருந்து பழகுனவங்க தனியா எங்கேயும் வர முடியாது. அதுக்காக உன் உன் வளர்ச்சியை தடுக்க முடியாது உனக்கு விருப்பம்னா உன் குடும்பத்தோட நீ தனியா போ… அப்படி இல்லையா சேர்ந்து இருக்க விருப்பம்ன்னா, உங்க அம்மாவோட சேர்த்து உன் கூட பொறந்த பிள்ளைகளையும் இழுத்துக்கு போ…” என்றவர்,

   சுபாவை பார்த்து, “இங்க பாருமா! இவங்க ரெண்டு பேரும் இந்த வீட்டு பிள்ளைங்க… உன் புருஷன் சம்பாத்தியத்தை கேட்டா நீ பஞ்சாயத்து பண்ணு.. அத விட்டு அவங்க அப்பா வீட்ல அவங்க வந்து இருக்குறதுக்கு, உன் வீட்டு ஆளுகளை கூப்பிட்டு பேசுற வேலை வச்சுக்காத. உனக்கும் பொறந்த வீடு இருக்குல்ல.. உங்க அண்ணி இப்படி நடந்துக்கிட்டா எப்படி இருக்கும் உனக்கு?…” என்று மேலோட்டமாக அவளையும் சத்தம் போட்டு, பொதுவாக பேசி முடித்தார்.

       சொத்து எதுவும் பிரிக்கப்படாமல் எல்லாம் விஜயா வசமே இருந்தது. நர்மதாவுக்கு ஒரு எண்ணம் தான் கொஞ்சம் அதிகமாக நடந்து கொண்டோமோ என்று… திரும்பி கணவனை பார்க்க,

   “என்ன நர்மதா?…”

  “நான் சரியாத்தான் பேசினேனா?…”

“ஏன் அப்படி கேக்குற?…”

   “என் தம்பி முகம் ரொம்ப வாடி போச்சு. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு. அவன ரொம்ப ஹாட் பண்ணிட்டேனோ?…”

 “அப்ப நீயே அவன் கிட்ட போய் பேசு… முன்னாடியே ஒன்னும் அவன்கிட்ட பேச சொல்லி இருப்பேன் ஆனாலும் எங்க சித்தப்பா வீட்டில் ஆட்கள் பொதுவுல வச்சு பேசாம வாய மூட மாட்டாங்க…” என்று நிரஞ்சன் சொன்னதும்,

    நர்மதா தன் தம்பி அருகே சென்றாள்.

      “அம்மாவுக்கு நான்தான் ரொம்ப பிடிக்கும். கடைசில நீங்க எல்லாம் நல்லவங்களாயிட்டீங்க. நான் தான் கெட்டவனாயிட்டேன்…” மறுகலாக சொன்னான் செழியன்.

      “அப்படி இல்ல செழியா? இப்பவும் அம்மாவுக்கு நீ தான் ஒசத்தி. என்னைக்கா இருந்தாலும் இது எல்லாம் உன் கைக்கு தான் வரப்போகுது. எங்களை வெட்டி விடுற மாதிரி உன் பொண்டாட்டி பேசுறது எங்களுக்கு புடிக்கல டா… நாங்க பொறந்த வளர்ந்த வீட்டுக்கே வரக்கூடாது என்ற மாதிரி பேசுற அவ… அதான் அவளை அடக்கி வைக்க கொஞ்சம் அப்படி பேசிட்டேன். நீ ஒன்னும் நினைக்காதே…” என்று தம்பி தோல் தட்டியவள்..

   “இந்த வீட்டை விடு, உங்க அம்மா இருக்கட்டும். வெளிய ஒரு இடம் இருக்குல்ல அதை வேணா வித்து உனக்கு புடிச்ச மாதிரி பண்ணிக்கோ… நாங்க சொத்து கேட்டு நின்னது எல்லாம் சும்மா தான். எவ்வளவு நாளைக்கு தான் நாங்களும் இங்க வர போகிறோம். எங்க பிள்ளைங்க பெருசாகி எங்களுக்கும் கடமை வந்துருச்சுன்னா இங்க வர்றது குறையும். அதுக்கும் மேல செழியா, அம்மா இருக்கிற வரைக்கும் நாங்க வருவோம். அப்புறமெல்லாம் கூட பிறந்தோம்னு இங்க வந்து உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம்…” என்று நர்மதா சொன்னதும் செழியனுக்கு மனம் ஒரு மாறி வலித்தது.

     பட்டென்று நெருங்கிப் பேச அவனுக்கு வரவில்லை. ஆனாலும் “ஏன் இப்படி பேசுற, விடு…” என்று அக்கா வார்த்தைகளை தட்டி விட்டான். செழியன் கொஞ்சம் நார்மல் ஆனதும் தான் நர்மதாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இல்லை என்றால் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்.

       எல்லாவற்றையும் பார்த்து, அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி, தம்பிக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் தான் கணவன் உடன் நர்மதா ஊர் திரும்பியது. தங்களுக்காக தாய் நின்றது கொஞ்சம் காயத்தை ஆற்றியது. எப்பவும் போல அவர்கள் ஓட்டமும் தொடங்கியது.

       அன்று விடுமுறை நாள்.. அடுக்காமல் கிடந்த துணிகளை எல்லாம் ஒதுங்க வைத்தாள் நர்மதா. நிரஞ்சன் உதவி கொண்டு இருந்தான். அப்படி பழைய துணிகளை எடுக்கும் போது அவர்களின் செகண்ட் ஹனி மூன் ட்ரெஸ் வந்து விழுந்தது.

   பார்த்ததும் நிரஞ்சனுக்கு ஐயோ! என்றானது. நர்மதா கணவனை பார்க்க, அவன் எதுவும் சொல்ல வில்லை.

 “ என்ன பேசாம இருக்கீங்க…”

  “என்ன பேச… இனியெல்லாம் உன் கிட்ட வாக்கு வாதம் பண்ற மாதிரி இல்லை…”

  “ஏனாம்?…”

   “ இப்போ எல்லாம் நீ என்ன சொன்னாலும் எனக்கு சரின்னு தோணுது. உன்னோட பேச்சு கேட்கும் போது என்னோட வாதம் தப்பா போகுது. நானே உணருறேன். இனியொரு வாக்குவாதம் வேண்டாம்…” என்றவன்,

   “ஆனாலும் என் கருத்துல, எனக்கு மாற்று கருத்து இல்லை…” என்று சேர்த்து சொல்ல, நர்மதா விடவில்லை.

     “அப்ப நான் சொன்னது தப்புன்னு சொல்றீங்க…”

  தப்பு சொல்லல. ட்ரெஸ் எல்லாம் அவங்கவங்க விருப்பம். நீ உன் ஸ்கூல் வரை இழுத்து பேசுற நர்மதா…”

  “ ட்ரெஸ் அவங்க விருப்பம் தான். ஆனாலும் ஒரு ஒழுங்கு இருக்கு நிரஞ்சன். நான் அதை தான் சொன்னேன்…”

  “உன்னை மாடர்ன்னா இருக்க சொன்னேன். வெஸ்டர்ன் ட்ரெஸ் போட சொன்னேன். அவ்வளவு தான்…”

. நர்மதா நிமிர்ந்து நின்று கணவனை பார்த்து, “நான் பார்க்க மாடர்ன்னா இல்லையா நிரஞ்சன்…”

. மனைவியின் சேலையை பார்த்தவன், “இது மாடர்ன்னா?… அடி போடி..”

  “ வேற எது மாடர்ன் சொல்லுங்க?…” வீம்பாக நின்றாள்.

    “ ரொம்ப நாள் அப்புறம் ஒரு சண்டையா?… ஆளை விடும்மா.. இப்பதான் நல்லா போகுது வாழ்க்கை. உன் தத்துவ கொள்கை உன்னோடு..” என்று நிரஞ்சன் நகர பார்க்க.

   அன்று நர்மதா பின் வாங்கி விட்டாள். ஆனால், இன்று விடவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!