Skip to content
Post Views: 13,197
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 27
பிரவீனாவுக்கு தான் வீடு புதிதாக இருந்தது. மற்ற எல்லாரும் முன்பே பார்த்ததால், பிரவீனா தான் ரசித்து கொண்டு இருந்தாள். ஆதிரன் தன் அம்மாவை கைபிடித்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான். “அம்மா இதுதான் என் ரூம். இங்கதான் என் டாய்ஸ் இருக்கும். நான் படிக்கிறதும் இங்கதான்… தூங்க மட்டும் அம்மா, அப்பா கூட வந்துடுவேன்” என்று சந்தோஷமாக அறிவித்துக் கொண்டு இருந்தான்.
அந்த அறையில் அவனின் புகைப்படம் கூட இருந்தது. உண்மையில் பிரவீனாவுக்கு இது நெகிழ்ச்சியான தருணம். அவள் வீடு, அவளுக்கான இடம் என்பதை தாண்டி… இது தன் மகனுக்கான இடம் என்பதிலும் மனம் நிறைந்திருந்தது.
தாய் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்குப் பின் மகனுக்குத்தான் என்று எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார் மகேஸ்வரி. தன் வீடு என்ற உணர்வை அவளுக்கு கொடுத்தது இல்லை. ஆதிரனும், பாட்டி வீடு என்ற நிலையில் தான் வளர்ந்தான். அப்போதெல்லாம் பிரவீனா நினைத்துக் கொள்வாள், தன்னால் சொந்தமாக வீடு கட்ட முடியாது. ஆனால், மகனுக்கு நல்ல படிப்பை மட்டுமாவது கொடுக்க வேண்டும் என்று…
Advertisement
ஐந்து வயது சிறுவனாக இருந்தாலும் அவன் மனதிலும் நிறைய ஏக்கங்கள் இருந்திருக்கும் போல… சத்தியமூர்த்தி தன் மகள்களிடம் சொல்லிவிட்டார், “இன்னைக்கு எல்லாம் அரேஞ்ச்மெண்ட்டையும் முடிச்சுடுங்க. விருந்து, ரிசப்ஷன், சொந்த பந்தம் எதுவும் வேணாம். அவங்க இயல்பில் அவங்க வாழ்க்கையை தொடங்கட்டும்” என்று விட்டார்.
அதன்படி பெண்கள் அனைவரும் வீட்டிற்கு என்னென்ன தேவை என்று பார்த்து கிச்சனை பிரவீனா தகுந்த மாதிரி செட் செய்ய ஆரம்பித்தார்கள். புவனேந்திரன் உணவை வெளியில் சொல்லி இருந்தான். குடும்பம் அன்று முழுக்க அங்கு தான் இருந்தது. பெரியவர்களுக்கு இது போதும்… தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்கள் எல்லாம் இருக்க விருப்பமில்லை.
முதல் காரணம் தன் மகன் அவன் முகத்தில் இருந்த நிம்மதியும், சிரிப்பும். இரண்டாவது காரணம் தன் மனைவி. சாரதா, ஆதிரனை பார்க்கும் பார்வையில் இளக்கம் இல்லை. ஒரு ஒவ்வாமை தான் இருந்தது. அதுவும் இந்த வீட்டில் பெரிதாக இருந்த அவனது புகைப்படம், அவருக்கு பிடிக்கவில்லை போல…
Advertisement
தாயை, மித்திரன் கண்டுகொண்டால் சண்டை வரும். அவருக்கு தெரியும் மித்திரனுக்கு மகன் எவ்வளவு முக்கியம் என்று… பிரவீனா மகன் என்று இல்லாமல் இயல்பாகவே ஆதிரனை அரவணைத்தவன் மித்ரன்.
Advertisement
அத்தோடு பிரவீனாவும் சாரதாவை கண்டுகொண்டால் அவளால் இயல்பாக மித்ரனோடு ஒரு குடும்ப வாழ்க்கை வாழ முடியாது மகனை நினைத்து தன் முடிவு தப்போ என்று எதிர்மறையாக தான் சிந்திப்பாள். குடும்பம் ஒன்றாக இருந்து அவர்களை சங்கடப்படுத்துவதை விட, பிள்ளைகள் நன்றாக இருக்கட்டும் என்று தள்ளி இருப்பதே மேல்.. முடிவெடுத்தார் சத்தியமூர்த்தி.
அவரால் மனைவியையும் குற்றம் சொல்ல முடியவில்லை. மித்ரனுக்கு, ஆதிரன் மேல் பாசம் என்றால் சாரதாவிற்கு என்ன வந்தது?… அவரால் எப்படி தன்னுடைய வாரிசாக, இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்த சொத்திற்கு சொந்தக்காரனாக இளங்கோவின் பையனை பார்க்க முடியும். அவரின் மனைவியையும் குற்றம் சொல்ல முடியாமல், மகனையும் தப்பு சொல்ல முடியாமல்… அவரவர் எல்லையில் நிறுத்துவதை நல்லது என்று நினைத்தார்.
அன்று இரவே பெரியவர்கள் கிளம்பி விட்டார்கள். சத்தியமூர்த்தி தம்பதி மட்டும் கொஞ்சம் தாமதமாக, பிளைட் நேரத்திற்கு மகன் வீட்டிலிருந்து கிளம்ப திட்டமிட்டு இருந்தார்கள். அவர்களை பிரவீனா கவனித்துக் கொண்டாள்.
Advertisement
சத்தியமூர்த்தி கிளம்பு ஆயத்தமாக, நல்லபடியாக விடை கொடுக்க தயாரானான் மித்ரன். ஆனால் பிரவீனா தான் கணவனை பார்த்து,
“என்னங்க, இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு சொல்லுங்க” எப்படி பேச வேண்டும் என்று எடுத்துக் கொடுத்தாள்.
“அவங்க சொன்னத கேட்ட தானே அவங்களுக்கு வேலை இருக்காம்” என்றான் மித்ரன்.
“ஆனாலும் மகன் வீட்டில் தங்கும் ஆசை இருக்கும். அதை மகன் வாயால சொல்லணும்ன்ற எதிர்பார்ப்பும் இருக்கும் மித்ரன்” என்று மனைவி சொன்னதும் அப்படியும் இருக்குமோ என்று யோசித்தவன்,
“என்ன அவசரம்ப்பா ஒரு ரெண்டு நாள் சேர்ந்து இருந்துட்டு போங்க” என்று மகன் சொன்னதும் சத்தியமூர்த்தி தம்பதிகள் முகம் சுச் போட்டது போல மலர்ந்தது.
“நீ சொன்னதே போதும்டா, தொடர்ந்து பத்து நாளைக்கு மேல இங்கேயே இருந்தாச்சு. இனி அங்கேயும் ஒரு பார்வை பார்க்கணும். எங்களோட மூணு பிள்ளைகளும் இங்க தான் இருக்கீங்க. இனி அடிக்கடி வரத்தானே போறோம்” என்ற சத்தியமூர்த்தி மகன் அருகே நின்றிருந்த ஆதிரனை தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்து,
“பைடா கண்ணா, தாத்தா அடுத்த லீவுக்கு வாரேன்” என்றதும், ஆதிரனும் அதேபோல அவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “பை தாத்தா” என்றான்.
அவருக்கு மிகுந்த திருப்தி. மகன் முடிவிற்காக மட்டுமே அவன் கல்யாணம் என்ற நிலையிலிருந்து… அவன் எடுத்த முடிவு அர்த்த மிக்கது தான் என்று ஒத்துக் கொண்டார்.
சாரதாவும் கணவன், மனைவி இருவர் பேச்சையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு இன்னும் பிரவீனா மேல்நல்ல அபிப்பிராயம் தோன்றியது. பெற்றவர்களுக்கு என்ன வேண்டும். பெற்றவர்களாக மகன் மேல் உரிமை தானே…
தற்போது மித்ரன் குடும்பம் மட்டுமே இருந்தது. பிரவீனா முதலில் பிள்ளையை கவனித்து அவனை உறங்க வைத்தாள். மித்ரன் பால்கனியில் நின்று இருந்தான். முன்பே அவர்கள் பேசியதுதான் தாம்பத்தியம் என்பது கட்டாயத்தினாலோ சூழ்நிலையாலோ அல்லாமல் இயல்பாக, காதலாக தொடங்க வேண்டும்.
“என்னங்க” என்று தன் பின்புறம் ஒரு குரல் கேட்க, மித்ரன் முகம் விகாசித்தது. என்றோ ஒரு நாள், பிரவீனா “மாமா” என்று அழைத்ததன் மூலம் கேலி பேசியவன் தான். இன்று மனைவி தன்னை அவ்வாறு அழைத்ததும் உள்ளமும், முகமும் மலர்ந்தது. மகேஸ்வரி முன்பே சொல்லிவிட்டார் கல்யாணம் ஆன பின் நண்பர்களாக இருந்தாலும் பெயர் சொல்லக்கூடாது என்று…
பிரவீனாவுக்கு அத்தான், மாமா என்று அழைப்பெல்லாம் வராமல் போக “என்னங்க” என்று அழைப்பை எடுத்துக் கொண்டாள்.
உண்மையில் இது அவனுக்கான அழைப்பு. நீ என் கணவன் என்பதை உணர்த்தும் அழைப்பு.
“பிரவீனா, இங்க வா இங்கிருந்து பார்க்க வியூவ் ரொம்ப நல்லா இருக்கும்” என்று அவள் கை பிடித்து முன்னே நிற்க வைத்தான்.
பிரவீனா தோள் உரசத்தான் நின்றிருந்தான். அவள் நாசியில் கணவனின் வாசம் நிறைந்து நின்றது. தாம்பத்திய வாழ்க்கை தற்போது தொடங்கவில்லை என்றாலும் கணவன் மனைவிக்கான உறவு என்பது அது மட்டும் கிடையாதே… அதனால், கணவன், மனைவியாகவே அவர்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள்.
பிரவீனா கொஞ்சம் குட்டை. பொதுவான பெண்களின் பலர் உயரம் தான். ஆனால், மித்திர அருகில் நிற்கும் பொழுது, அவன் முழங்கை அளவு தான் இருந்தாள். அவன் தோளோடு சேர்த்து அணைக்க சரியாக இருந்தது.
“என் வாழ்க்கை இப்படி எல்லாம் மாறும்ன்னு நான் நினைச்சு பார்க்கவே இல்லை. எல்லாமே ஒரே நாள்ல மாறிடுச்சுன்னு நினைக்கும் போது கொஞ்சம் தடுமாற்றமாகவும் இருக்கு.ஆனா, அதே நேரத்துல சந்தோஷமாவும் இருக்கு” என்று பிரவீனா சொல்ல,
“அந்த சந்தோசத்தை மட்டும் நினை பிரவீ… நிச்சயம் நம்ம வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்” என்றவன், அவள் கையில் நிறைய காகிதம் அடங்கிய கோப்பை கொடுத்தான்.
“என்னங்க இது?” என்றதும்,
“நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது பிரவீனா. அந்த மாதிரி ஒன்னு தான் இது” என்றதும், இன்னும் புரியாமல் முழித்தாள் பிரவீனா.
“இது ஒரு இன்ஷூரன்ஸ் நான் நிறைய இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். பியூச்சர்ல எனக்கு ஏதாவது ஆனா கூட எந்த வம்பு தும்பு இல்லாமல் எல்லாம் உன் கைக்கு வந்து சேரும்” என்று மித்ரன் சொன்னதும் பதில் சொல்ல முடியாமல் பிரவீனா கண்கள் நீரை பொழிய ஆரம்பித்தது.
இன்று தானே அவள் வாழ்க்கையின் மற்றும் ஒரு அத்தியாயத்தை தொடங்கினாள். மித்ரனின் அழுத்தத்தினால் கல்யாணம் என்றாலும் உண்மையில் பிரவீனாவுக்கு வாழ்க்கை ரொம்ப நிம்மதியாக இருந்தது. ஒற்றை மஞ்சள் கயிறு இழந்து, அவள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போட்டது.
இன்று அந்த ஒற்றை மஞ்சள் கயிறு தான் அவள் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றி அமைத்திருக்கிறது. நிமிர்ந்து பார்க்க இருட்டு என்றில்லாமல் கண்கள் வெளிச்சத்தை காண… இப்படி ஒரு வார்த்தையை அவன் சொல்லத்தான் வேண்டுமா?
“என்ன பிரவீனா இது? இங்க பலர் பண்ற முன்னெச்சரிக்கை தான். அதுக்கும் நம்ம வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. உனக்கு முன்னால எல்லாம் நான் போக மாட்டேன். உன்னோட ஆயுள் வரைக்கும் நான், உன் கூடத்தான் இருப்பேன். வாழ்க்கையில நமக்கு ஒரு தடவை கெட்டது நடந்தா… அது தொடர்ந்து நடக்கும்ன்னு எல்லாம் கிடையாது. அதனால, அப்படி ஆயிருமோ! இப்படி நடந்துருமோன்னு ஃபர்ஸ்ட் பயப்படாதே” என்று நிறைய தைரியம் சொன்னான்.
மித்ரனையும் இழந்து நிற்கும் வாழ்க்கையை எல்லாம் பிரவீனாவால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டவள் தான்… திரும்பவும் கடவுளை சரணடைய முடிவெடுத்துக் கொண்டாள்.
அடுத்த நாளிலிருந்து மித்ரன் குடும்பம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. கணவனும் மகனும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, வெளியே வந்தாள் பிரவீனா. இது தன் வீடு என்ற உணர்வே மிகுந்த திருப்தியை கொடுத்தது.
அங்கிருந்து வரை வீடு எல்லாம் மகேஸ்வரி கட்டுப்பாட்டில் தான். அவர் சொல்வது தான். அதற்குப்பின் தன்னை போல் ஆர்த்தி கையில் எடுத்துக் கொண்டாள். அது என்னவோ பிரவீனாவுக்கு உரிமையாக எதையும் செய்ய மனம் வரவே இல்லை.
அமைதியாக ஒரு டீ போட்டு எடுத்துக் கொண்டவள். பால்கனி கதவை திறந்து அங்கு அமர்ந்து கொண்டாள். நல்ல காற்றோட்டமும் அமைதியும் இருக்க மனம் லேசானது. முன்பெல்லாம் மனம் அமைதியாக இருந்தால் அடுத்தடுத்து கவலைகள் வரிசை கட்டி நிற்கும். தற்போது அப்படி அல்லாமல் நிர்மலமாக இருந்தது. அப்படி வாழ்வதே ஒரு வரம் என்றானது பிரவீனாவுக்கு…
டீ குடித்து முடிக்க மகேஸ்வரி இடமிருந்து அழைப்பு வந்தது. அங்கும் அப்போதுதான் எல்லோரும் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்த்தி உட்பட…
“பெரிய பாசம் தான்” என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க,
மகேஸ்வரி “என்ன பண்ற பிரவீ? தம்பி என்ன பண்றான்? மாப்பிள்ளை எழுந்தாச்சா காப்பி கொடுத்தியா” என்று வரிசையாக கேட்டவர்… கொஞ்சம் தயங்கி,லேசான சிரிப்போடு
“என்னடி தலைக்கு குளிச்சியா?” என்றதும், என்ன சொல்வாள் பெண்
“அதெல்லாம் காலையில் தலைக்கு குளிச்சு. விளக்கு வச்சிட்டேன்மா” என்றாள் தயங்கி.
அவ்வளவுதான் மகேஸ்வரிக்கு சந்தோசம் தாங்கவில்லை. பக்கத்தில் இருந்த கணவரிடம் கையை தொட்டு கண் ஜாடை காட்டினார்.
“இதுக தொல்லை தாங்க முடியல. ஆமா, ஒன்னும் தெரியாத சின்ன பிள்ளையை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்காங்க. விவரம் கேட்டு தெரிஞ்சுக்கறதுக்கு… பண்ணது இரண்டாம் கல்யாணம். அதுவும் ஒரு பிள்ளையோட” ஆர்த்தி மெல்ல முனங்கி கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த பிரீத்தி,
“அம்மா, எங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்திருக்காங்க. பிரவீனாவ பார்க்கணும்ன்றாங்க” என்றதும்…
“பிரவீனா, ப்ரீத்தி வீட்ல இருந்து எல்லாரும் வந்திருக்காங்கடி. உன்னையும் மாப்பிள்ளையும் பார்க்கணுமாம்” என்று தாய் சொல்ல,
“சரிங்கம்மா, அவங்க இன்னும் எழுந்தரிக்கல. அவங்க கிட்ட கேட்டு சொல்றேன்” என்று பிரவீனா சொன்னது, ப்ரீத்திக்கு பிடிக்கவில்லை.
“என்னம்மா உன் பொண்ணு இப்படி சொல்றா? நேத்து தானே கல்யாணம் ஆச்சு. அவளை பார்க்கத்தான் எங்க வீட்ல இருந்து எல்லாரும் கிளம்பி வந்து இருக்காங்க” என்று அவள் சத்தம் போட,
மகேஸ்வரிக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் அண்ணன் வீடு, சின்ன மகள் வீடு என்று எல்லோரும் ஒன்றாக வந்திருந்தார்கள். முன்பாக இருந்தால் மகேஸ்வரியே மகளை அதட்டி இருப்பார்.
திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் இளங்கோ இறந்து விட, மருமகன் என்ற மதிப்பும், மரியாதையும் ஸ்ரீதருக்கு மட்டுமே கிடைத்தது. இன்று அப்படி அல்ல… மித்ரன் மூத்த மருமகன். அவனிடம் கேட்கத்தான் வேண்டும்.
அடுத்த அரை மணி நேரம் கழித்து, பிரவீனா போன் செய்து, “அம்மா, மதியம் அவர் வீட்ல தான் இருப்பாங்க. நீங்களும் சேர்ந்து அத்தை வீட்டை கூட்டிட்டு வாங்க” மரியாதையாக சொல்லி வைத்தாள் பிரவீனா.
“என்னம்மா இப்படி சொல்றா உன் பொண்ணு… அவ வரமாட்டாளா? நாங்க தான் தேடி போய் பார்க்கணுமா? எங்க வீட்டில் இருந்து எல்லா பெரியவர்களும் வந்து இருக்காங்க. அவளை வர சொல்லுங்க” சட்டமாக சொன்னாள் ப்ரீத்தி.
“என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? புதுசா கல்யாணம் ஆனது அவங்களுக்கு தான். நாம தான் அவங்கள பார்க்க வந்திருக்கோம். அப்ப அவங்க இருக்குற இடத்துக்கு தான் போய் பார்க்கணும். நாங்க வந்து இருக்கோம் நீங்க வாங்கன்னு சட்டம் பேசவா முடியும். பேச்ச பாரு பேச்ச” என்று அவள் மாமியார் சத்தமிட, அப்போதுதான் மகேஸ்வரிக்கு புரிய தொடங்கியது.
“ஆமா தானே, பிரவீனாவுக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு. புது மணமக்களை அங்கு சென்று தான் பார்க்க வேண்டும். சின்ன மகளுக்காக பெரிய மகளை இறங்கி வரச் சொல்லலாம் தான். ஆனால், மருமகனை சொல்ல முடியாதே…”
“ஆமா பிரீத்தி. என்ன பேசுற நீ.. நான் போன் பண்ணி வான்னு சொன்னா, பெரிய மருமகன் வருவாரா… அப்புறம் அவருக்கு என்ன மரியாதை இருக்கு. நீங்க தானே அங்க போய் பாக்கணும். விருந்துக்கும் சொல்லணும்” என்ற மகேஸ்வரி அவர்களோடு செல்ல கிளம்பினார்.
“சரியா சொன்னீங்க மதினி. நீங்கதான் கடைசி செல்லப்பிள்ளைன்னு அவளை கெடுத்து வச்சிருக்கீங்க” என்றவரும் பிரவீனா வீடு செல்ல தயாராகினார்.
ஆர்த்தியும் கிளம்பி விட்டாள். பிரவீனா வீட்டை பார்க்க, நேற்றுதான் விட்டு விட்டு சென்றார்களே!…
மித்ரன் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்திருந்தான். “எப்படியும் பத்து பேருக்கு மேல் வருவாங்க. நம்ம வீட்லயும் மூணு பேரு. நீயா எப்படி தனியா சமையல் செய்ய முடியும். உனக்கும் கஷ்டம்” என்று கணவன் வாஞ்சையாக சொல்ல,
அவன் மனைவி இதைவிட அதிகமான வேலை எல்லாம் செய்து இருக்கிறாளே!… அன்று இந்த கரிசனத்தையும், கவனிப்பையும் காட்டத்தான் ஆளில்லை. இன்று மனம் நிறைவாக உணர்ந்தது. தன்னை கவனித்துக் கொள்ள ஆள் இருக்கிறது என்று…
மதியத்திற்கு மேல் உறவினர்கள் வீடு வந்தார்கள். சந்தன நிறக் சேலையும், குங்கும நிற பிளவுஸும் கொண்ட ஆர்கன்சா சேலையை அணிந்து இருந்தாள் பிரவீனா.
“இவள் இந்த அழகை எல்லாம் எங்கு வைத்திருந்தாள்” ஆர்த்தியே நினைக்கும் அளவுக்கு பிரவீனா முகம் விகாசித்தது.
பிரவீனா மாமா குடும்பம் பூ, பழம், புடவை என்று எல்லாம் வாங்கி வந்திருக்க.. முறையாக தம்பதிகள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள்.
பிரேம், ஆர்த்தி, ப்ரீத்தி மூவருமே பிரவீனாவின் வாழ்க்கையை அவதனித்தார்கள். அவள் வாழ்க்கை தங்களை விட பலபடிகள் பொருளாதாரத்தில் உயர்ந்தது என்று கண்டார்கள். அதிலும் ஆர்த்திக்கு, மித்ரனின் செல்வநிலை நன்றாகவே தெரியும்.
பிரவீனா எந்த வேறுபாடும் காட்டவில்லை. எல்லோரிடமும் நன்றாக பேசினாள். நல்ல முறையில் கவனித்துக் கொண்டாள். யாரிடமும் முகம் காட்டாமல் நல்முறையில் அனுப்பி வைத்தாள்.
வந்தவர்கள் சென்றதும் மித்ரன் மனைவியை குறுகுறுவென்று பார்க்க,
“என்ன பார்வை?”
“நீதானா இது! யாரோ ரொம்ப அழுது புலம்பினாங்களே?” என்றதும், லேசாக சிரித்தாள்..
“அன்னைக்கு எனக்கு கோபமும், ஆதங்கமும் நெஞ்சு நிறைய இருந்துச்சு. அவங்க கிட்ட நான் கேட்டது, உடன்பிறந்தவழுக்ளுக்கு ஒரு ஆதரவு. நான் இருக்கேன்ன்ற ஒரு சப்போர்ட். உண்மையா அவங்க எனக்கு நிக்க வேணாம்”
“ஆனா, அவங்களுக்கு பயம். என்னதான் நான் படிச்சு வேலையில இருந்தாலும் என்னையும், என் பையனையும் தனியா பார்த்துக்கிட்டாலும் கூட, ஆண் துணை இல்லை. நான் ஒரு சிங்கிள் மதர் அது என்னோட வாழ்க்கையில் பெரிய வீக்னஸ். நான் சுயமா நின்னாலும் கூட அவங்களோட பார்வையில நான் ஒன்னுமே கிடையாது. நான் அவங்களை எதிர்பார்க்கவே இல்ல பொருளாதார ரீதியா… ஆனா அவங்களுக்கு அப்பா அல்லாத பையன் புருஷன் இல்லாத பொண்ணு பொறுப்பும் கடமையும் நாளைக்கு நம்ம தலையில விழுந்திடுமோ என்ற பயம்” என்றவள்,
“அதுவும் ஆர்த்திக்கு நான் அந்த வீட்டோடவே இருக்கறதுனால.. அவளோட உரிமை, அவ புருசனுக்கான சொத்து பறிபோயிரும்ன்ற பயம். அதனாலேயே என்னையும், என்னோட பையனையும் முன்னாடி நிக்க விடமாட்டா. என் தம்பி மனசிலும் அந்த எண்ணம் இருக்க போய் தான் நாங்க ஒதுக்கப்பட்டோம். சும்மா எல்லா பழியையும் ஆர்த்தி மேல போட முடியாது. ஆனா, இன்னைக்கு அப்படி கிடையாது. நான் ரொம்ப நல்லா இருக்கேன். எனக்கும் அவங்க கிட்ட வந்து நான் நிக்க மாட்டேன். அதனால, என்கிட்ட நல்ல விதமா நடந்துக்க நினைக்கிறார்கள்”
“நானும் அப்படியே மேனேஜ் பண்றேன். ஆனா, எங்க மூணு பேருக்குள்ளேயும் விழுந்த தடை விழுந்தது தான். உடன் பிறந்தவங்களா ஒற்றுமையா இருக்க மாட்டோம். ஆனால், அவங்கவங்க எல்லையில் இருந்துப்போம். எங்க அம்மா, அப்பாவுக்கு தான் கஷ்டமா இருக்கும். இனி நானும் எனக்கான வாழ்க்கையை பார்ப்பேன்”என்றாள் சிரித்துக் கொண்டே..
அதற்கான பொருள் முன்மாதிரி நான் இல்லை என்பதே… மூத்தவள் என்று எல்லா இடத்திலும் உடன் இருப்பதோ விட்டுக் கொடுப்பதோ கிடையாது. என்னவோ எல்லோருக்கும் மூன்று தான்…
error: Content is protected !!