Priya Milirvannan’s யாழினியன் – 07
…07. இனியனும் இயலும் …
இனியன். பெயருக்கு ஏற்றார் போல் எதிலும் இனிய குணம். அரசியல் சார்ந்த களநிகழ்வுகளை இனிய பொருள்பட எடுத்துரைக்கும் தலையங்க எழுத்தர். தஞ்சை மாநகரின் புகழ்பெற்ற முதன்மை பதிப்பகம் “நறுமுகை பதிப்பகம்”. அதன் பகுதி உரிமையாளராகவும், மதிப்புறு தலையங்க எழுத்தாளராகவும், இளங்கலை இதழியல் பட்டத்துடனும், அனுபவங்களுடனும் தனது இயல் பயணத்தை தற்போது தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
Advertisement
இனியனின் உற்ற நண்பன் புகழ். கல்லூரி காலங்களில் இதழியல் படிப்புடன் கள ஆய்வுகளில் இருவரின் சிந்தனைகளும் ஒருமித்து இருந்தது. இவர்களது இதழியல் பயணம் கல்லூரியில் முதல் இடம் பெறும் அளவிற்கு அரசியல் ஆர்வமும், சமூகம் சார்ந்த சிக்கல்களுக்கு எழுத்துப்பூர்வமான தீர்வுகளும் அடங்கியிருக்கும். அந்த எழுத்துப்பூர்வமான தீர்வுகளுக்கு உயிரோட்டம் அளிப்பவள் யாழினி என்பதை இனியன் அன்று அறிந்திருக்கவில்லை.
இனியனது நண்பன் புகழ் இல்லமானது பெருவுடையார் கோவிலின் கிழக்கு வீதியில் யாழினியின் வீட்டருகில் இருந்தது. யாழினியை மழைத்துளிகள் இடையே அவன் பார்த்ததும் இவ்விடத்தில் தான். (நமது முதல் அத்தியாயத்தின் தொடக்கமும் இவ்விடம் என்பது இப்பொழுது வாசகர்களுக்கும் புரிந்திருக்கும்)
Advertisement
Advertisement
இனியனது இல்லமானது நேர் எதிராக வடக்கு வீதியில் “மிதிலை இல்லம்” என்று இலக்கியத்திற்கு அடையாளமாகத் திகழ்ந்துக்கொண்டிருந்தது. ஆம், இனியனின் தந்தை “மதிவாணன்” நாளிதழ் விநியோகஸ்தராக தனது வாழ்வை தொடங்கியவர். “அபிராமி”யை திருமணம் செய்ததற்கு பின் வெண்பா, இனியன் ஆகிய இருவருக்கும் வாழ்வியல் கலை மட்டும் அல்லாது எதார்த்தமான இணையான வாழ்வியல் மற்றும் சூற்றுச்சூழல் பாடத்தை பயிற்றுவித்திருந்தார்.
மிதிலை இல்லமானது வெண்பாவும், இனியனும் தங்களது தளிர் பருவம் முதல் வெளியுலகு பருவம் வரை அவர்கள் கண்ட அனுபவங்களும், நாளிதழ்களும் நிறைந்ததாக திகழ்ந்தது.
Advertisement
இனியனுக்கு புகழ் மட்டுமல்லாது எழில் என்ற நண்பனும் உற்ற துணையாக இருந்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்லூரி இறுதி ஆண்டில் இனியன் படித்துக் கொண்டிருந்தபோது அன்றைய சூழலில் “உங்கள் தொகுதியில் சட்டமன்றம்” என்ற தலைப்பில் தேர்தல் களம் சம்பந்தப்பட்ட தலையங்கத்தை இரண்டு நாட்களில் தயார் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
களஆய்வு சென்று இனியன், புகழ், எழில் மூவரும் தலையங்கம் தயார் செய்திருந்தனர். மக்களின் மேலோட்டமான அரசியல் சார்ந்த கருத்துக்களை உயிரோட்டத்துடனும், அந்த தொகுதியில் வெளிப்பட்ட ஊழல் நிறைந்த அனைத்து நிகழ்வுகளையும் தலையங்கத்தில் வெளிப்படுத்திருந்தான் இனியன். இது பெரும்பாலும் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பாரபட்சம் இன்றி தனது கருத்துக்களுக்கு நேர்மையான உருவாக்கம் கொண்டிருப்பதாக தலையங்கம் தலைப்பிடப்பட்டிருந்தது.
தலையங்கம் தயார் செய்யப்பட்டு அதற்கான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டன. மறுநாள் காலை அதனை எழிலிடம் ஒப்படைத்துவிட்டு துறைத் தலைமையை பார்க்கச் சென்றிருந்தான் இனியன்.
கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்தே எழில் “தாரா” என்ற பெண்ணை விரும்பிக்கொண்டிருந்தான் என்பது இனியனுக்கு மட்டுமே தெரியும். புகழிடம் கூட எழில் வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.
“நாளது செய்தி” என்ற பிரபலமான நாளிதழில் தனது தலையங்கச் செய்தியை பதிப்பிட்டு வெளியிடுவதற்காக தனது துறைத்தலைமை அவர்களின் அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு இனியனும் எழிலும் இருசக்கர வாகனத்தில் பதிப்பகத்தை நோக்கிச் சென்றிருந்தனர்.
நாளிதழ் பதிப்பகத்திலிருந்து வெளியே வரும்போது எழிலுக்கு அலைபேசி அழைப்பு வந்ததையும் அதனால் எழில் பதட்டமடைந்ததையும் இனியன் கவனிக்காமல் இல்லை. இனியனிடம் எதுவும் கூறாமல் “கல்லூரிக்கு வா பேசிக்கொள்வோம்” என்பதை மட்டும் கூறிவிட்டு படபடப்புடன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றிருந்தான் எழில்.
இனியன் பேருந்துப் பயணத்துடன் கல்லூரியை அடைந்திருந்த நேரம்…. அவர்களது துறைத்தலைமை ஆசிரியரின் அறைக்குள் ஐந்து நபர்கள் கூவல் விடுத்துக்கொண்டிருந்தனர். வெளியில் இருந்த இனியனுக்கு எழிலின் பெயர் மட்டும் காதில் விழுந்துக்கொண்டிருந்தது.
அவர்கள் ஐந்து பேரும் வெளியே சென்றபோது இனியனை அழைத்த துறைத்தலைமை “எழில் வந்ததும் என்னிடம் அழைத்து வா” என்பதை மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார். தனது வகுப்பறைக்கு வந்த இனியன் வகுப்பில் யாரும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். அப்போதுதான் தனது கடிகாரத்தை கவனித்திருந்தான். ஆம், கல்லூரி நேரம் முடிந்து அரை மணிநேரம் ஆகியிருந்தது என்பதை உணர்ந்து புகழ் வீட்டை நோக்கி தனது இருசக்கர வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான் இனியன்.
(புகழ் வீட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் இனியனுக்கு தலையங்கம் புகழைத் தருமா??)
– இசைக்கும்
