31.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,253
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 31.1
.
‘தன் நீள வாலை ஆட்டிக் கொண்டே மேலே பறந்தது அந்த பல வண்ணக் காற்றாடி. வீட்டின் மொட்டை மாடியில் நின்று அவன் காற்றாடியைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் நண்பர்களோடு. அவன் காற்றாடியின் கயிற்றோடு தனதைச் சேர விட்டவள் சரக்கென அதை இழுக்க, அவன் காற்றாடி…’
மடியில் இருந்த மடிக்கணினியை வேகமாகத் தட்டிக் கொண்டிருந்த கௌதமனின் விரல்கள் நிதானித்தன. ‘இப்போ எல்லாம் காத்தாடிய பாக்கிறதே இல்லியே? திருச்சி பக்கம் போகணும். அங்க இருக்க மக்கள ஸ்டடி பண்ணனும்’ என எண்ணியவனின் யோசனையைக் கலைத்தாள் குட்டி மகள்.
Advertisement
“அப்பா… நானுக்கு அயித்கீம் நேணும்” எனத் தரையில் அமர்ந்திருந்த அப்பாவின் கழுத்தில் தொங்கினாள் யாழி.
மடிக்கணினியை மூடி ஓரம் வைத்து, “என் பேபிக்கு ஐஸ்கிரீம் வேணுமா?” என மகளை முன்னுக்கு இழுத்தான் கௌதமன்.
“நானுக்கு அயித்கீம் நைய நைய நேணும்” எனப் பத்து விரல்களையும் விரித்தாள் குழந்தை.
Advertisement
“நெரைய ஐஸ்கிரீம என்ன பண்ணுவீங்க?”
Advertisement
“நானுக்கு அபக்கு அபக்கு சாப்பி” என கைகளை வாயினுள் எடுத்துச் சென்றாள் குட்டி மகள்.
“ஹ ஹ ஹா… யாரு டா என் பொண்ணுக்கு இப்படி எல்லாம் பேசச் சொல்லி தர்றது?” கௌதமன் சிரிக்க, தொற்று நோயாக அந்த சிரிப்பு, அப்பாவின் மடிக்கு இடம் மாறியிருந்த மகளையும் தொற்றிக் கொண்டது.
தினமும் மூன்று மணி நேரம் மகள் விளையாட்டு கூடம் செல்வதால் பேச்சு நன்றாகவே வருகிறது, மூன்று மாதங்களில் மூன்று வயதாகப் போகும் யாழிக்கு. மகளின் மழலை மொழி அவளைச் சுற்றி இருப்பவர்களுக்குப் புரிந்தாலும் புதிதாக பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியாது என்பது வேறு கதை.
Advertisement
“கூல்ல போயினே எம்மா பேபிய கச்சு.” எனக் காலை அப்பாவின் முகத்துக்கு நேராக நீட்டினாள் குட்டி மகள்.
அந்தக் குட்டி பாதத்தை ஆராய்ந்தவன், “எறும்பு இங்க தான் கடிச்சுதா?” என அதை மெல்ல தேய்த்து, அதில் முத்தம் கொடுத்து, “சரியா போச்சு” எனப் புன்னகைத்தான்.
கையை முகத்துக்கு நேராக மகள் நீட்ட அதிலும் முத்தம் ஒன்றைக் கொடுத்தான் தகப்பன். கால், கை, கன்னம், நெற்றி, மூக்கு, உதடு என அனைத்திலும் முத்தம் வாங்கிய மகளின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. அவளுக்குத் தெரியுமே அடுத்த முத்தம் அவளின் குட்டி தொப்பைக்கு என. முத்த மழை ஓய்ந்து சிரிப்பும் ஒருவழியாக நின்றது.
“ஆலி கூல் நேணா. எம்மா பேபிய கச்சி. பேபி அப்பா கூல் போணே” என எறும்பு கடியில் மீண்டும் வந்து நின்றாள் மகள்.
“எறும்பு கடிக்கிறதுக்கு எல்லாம் ஸ்கூல் போக மாட்டேன்னு என் கூட கிளம்பி வருவியா? அப்பா ஸ்கூல்ல பெரிய பெரிய எறும்பு இருக்குமே”
“பேபிக்கு எம்மா நேணா. அயித்கீம் அப்பா” என எறும்பிலிருந்து மீண்டும் பனிக்கூழ் பாட்டை ஆரம்பித்தாள்.
“சரி வா போவோம்.” என மகளைத் தோளில் ஏற்றிக்கொண்டு புறப்படத் தயார் ஆனான் கௌதமன்.
“நீ போய் போட்டுக்க ட்ரெஸ் எடு. அப்பா ஃபோன் பேசிட்டு வரேன்” என்றவன், தாக்ஷாயினிக்கு அழைத்தான். “பீச் போறோம். நீயும் வந்தா நல்லா இருக்கும். வர்றியா?” என இவன் கேட்க, “புது ரெசாட்டுக்கான மீட்டிங் போயிட்டு இருக்கு. அரை மணி நேரத்தில எப்படியாது வைன்ட்-அப் பண்றேன். நீ எங்க ஈசிஆர் ரெசார்ட்க்கு வரியா?” என அவள் குதூகலித்தாள்.
“அவ்வளவு தூரமா? குழந்தை தூங்கிடுவாளே…” என நெற்றியை வருடியவன், “சரி வரோம்” என்றான்.
“இரு இரு… யாழியோட வர்றியா?”
“பின்ன… அவ தானே ஐஸ்கிரீம்ன்னு ஆரம்பிச்சா… அவ இல்லாமலா?”
“அப்பாவும் பொண்ணும் கொஞ்சிக்கிறத பாக்க மீட்டிங் எல்லாம் விட முடியாது. எனக்கு வேற ஆஃபர் குடு.”
“ஆஃபருக்கு நான் எங்க போக… சரி வேலைய பாரு, நானும் என் பொண்ணும் மட்டும் போறோம்” என்றவனை முறைத்தாள்.
“இப்போ எதுக்கு இந்த முறை முறைக்கிற?”
“நாளைக்கு நீயும் நானும் போலாம்” என்றாள்.
“விக்கி வந்திருக்கான். நாளைக்கு அவன் ஃப்ரெண்ட் ஒருத்தன பட விஷயமா பாக்க போறோம். முன்னமே சொன்னேன் தான? அடுத்த வாரம் ஒரு நாள் கண்டிப்பா நீயும் நானும் மட்டும் போலாம்… சரியா? இப்போ வேலைய பாப்பியாம்” எனப் பெண்ணை குளிர்வித்தான்.
நீண்ட பெருமூச்சை அவள் விட, “என்ன டி மூச்செல்லாம் சூடா இருக்கு?” என்றான் கொஞ்சலாக.
“இன்னும் கொஞ்ச மாசத்துல காலேஜ் போற வேலை இல்ல. படத்துக்கான ஸ்க்ரிப்ட்டும் டீமும் ரெடி ஆகிட்டு இருக்கு. கொஞ்சம் டைம் குடு தாக்ஷா. சின்ன பட்ஜட் படம் தான்… சீக்கிரம் முடிச்சிடலாம். மாப்பிள்ளை என்ன பண்றார்ன்னு கேட்டா… சொல்றதுக்கு உனக்கு ஏதாவது வேண்டாமா?” என்பவனிடம் வாதாடும் எண்ணமெல்லாம் இல்லை என்பதால், “உங்க புரொடக்ஷன் ஏற்கனவே படுத்திடுச்சு… நீ குழி தோண்டி புதைச்சுடாத” எனச் சிரித்தாள்.
“அதெல்லாம் கில்லி மாதிரி எழுந்து நிப்போம். விழறதெல்லாம் இந்த இண்டஸ்ட்ரில சகஜம். எழுந்து நிக்க தெரியறவன் விழப் பயப்பட மாட்டான். நாங்க எழுந்து நிக்கிற பரம்பரை. நீ வேணும்ன்னா பாரு… என் முதல் படமே எங்க டீமுக்கு இண்டஸ்ட்ரில நல்ல பேர் வாங்கி தரும்.” என்றான்.
“அப்படியே படம் ஓடலனாலும் நான் உன்ன வச்சு கஞ்சி ஊத்தறேன். சாக்குப் போக்கு சொல்லாம தாலி கட்டுற வழிய பாரு”
“ஏது… கஞ்சியா? புலி பசிச்சாலும் புல்ல திங்காது மேடம்”
“சார் என்ன சாப்பிடுவீங்களாம்? சொன்னா… அதையே கொடுப்பேனே” கொஞ்சலாக அவள் கேட்க,
“ஏன் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு இன்னுமா உனக்குத் தெரியாது?” என அவனும் குழைய,
“அப்பா லெட் டெஸ் எத்தாச்சு… நேனுக்கு அயித்கீம்” என மகள் தகப்பன் காலை கட்டிப் பிடித்தாள். மகளின் முன்னால் இனி என்னவென பேச? மகளைத் தூக்கிக் கொண்டவன், “நீ மீட்டிங்க கன்டினியூ பண்ணு தாக்ஷா. நாங்க கிளம்பறோம். அப்பறம் கால் போடறேன்” என அவன் கைப்பேசியை அணைக்க தயார் ஆனான்.
“அது தான… பொண்ணுன்னு வந்துட்டா நான் கண்ணுல தெரிவேனா?” என்ற முணுமுணுப்பு நன்றாகவே கேட்டது.
தாக்ஷா என்ற பெயரைக் கேட்டதும், “தாச்சா ஆன்ட்டி… நானுங்க அயித்கீம் சாப்பி வலிங்க?” எனத் தங்களோடு தாக்ஷாயினியை அழைத்த மகளை உச்சி முகர்ந்தவன், “நானும் என் பொண்ணும் உன் மேல அன்பா இருக்கோம். எங்களோட உன்னையும் சேர்த்துக்க ஆசைபடறோம் தாக்ஷா.” என்றவன், “என்னோட சேர்த்து என் குறை… நிறையையும் நேசிக்க பாரு தாக்ஷா.” என்றான் ஆற்றாமையோடே.
“ஆரம்பிச்சுட்டான் அவன் லெக்ச்சர. இவன் பொண்ண எவ்வளவு பாத்துகிட்டாலும் இவனுக்குப் போதாது” என்ற முணுமுணுப்போடே, “அண்ணா கூப்பிடுறான்… அரை மணி நேரத்துல கூப்பிடுறேன்” என்றவள் கைப்பேசியை அணைத்தாள்.
“போலாமா பேபி? என் யாழி பேபிக்கு என்ன ஐஸ்கிரீம் வேணும்?” என்றவனுக்கு தாக்ஷாவின் முணுமுணுப்பு சிரிப்பையே தந்தது. மகளிடம் போட்டி போடும் அடுத்த குழந்தை என்றே தாக்ஷாவை நினைத்தான் கௌதமன்.
“பிங்க்” என்ற மகளைக் கிளம்பிக் கொண்டு கீழே இறங்கினான் கௌதமன்.
“நானுக்கு அப்பா அயித்கீம் வாணி சாப்பி. பாத்தி பை” என முதல் வேலையாகப் பாட்டியிடம் தானும் தந்தையும் பனிக்கூழ் உண்ணப் போவதை அறிவித்தாள் குட்டி யாழி.
“எனக்கு?” என்ற பாட்டியைப் பார்த்தவள், “வாணி வலும் பாத்தி அலுவாத” என வாங்கிவருவதாகப் பாட்டியை ஆறுதல் படுத்தினாள்.
“அம்மா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு அப்படியே பீச் போயிட்டு வரோம்” என வைஷாலியிடம் அறிவித்தவன், மகளுக்கு தேவையானவற்றோடு கிளம்பினான்.
மகளுக்கு அப்பாவோடு மோட்டார் சைக்கிளில் செல்வதென்றால் அலாதி இன்பம் என்பதால் அவனும் மகளோடு இருசக்கர வாகனத்தை நோக்கிச் சென்றான். மகளுக்கான குட்டி தலைக்கவசத்தை அணிவித்தவன், நல்ல விஸ்தாரமாக இருந்த அவெஞ்சரில் மகளை முன்னால் அமர்த்தி பின்னால் அமர்ந்து கொண்டான்.
“பாட்டி தாத்தா பை” என ஆர்ப்பாட்டத்தோடு கிளம்பிய யாழி, “அப்பா… டுற்ற் டுற்ற்… பேபி ஃபயிங்” என மிழற்றிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
இவர்களை வழியில் பார்த்த விக்கிரமும் பின்னோடு வந்து கடை வாசலில் இவர்களோடு அவனது வாகனத்தையும் நிறுத்தினான். விக்ரமை பார்த்த மாத்திரத்தில் வண்டியில் இருந்த வாரே, “பிக்கி மாமா சூக்கு” என கை இரண்டையும் உயர்த்தினாள் சின்னவள்.
“தனியா இருக்கும் போது பக்கி மாமான்னு கூட கூப்பிடு பேபி. ஆனா இப்படி ஃபிகருங்க முன்ன என் மானத்த வாங்காத டி என் செல்லம்.” கூறிக் கொண்டே மகளின் தலைக்கவசத்தைக் கௌதமன் கழட்டும் வரை காத்தவன் மகளை அள்ளி வாரி எடுத்துக் கொண்டான்.
“பிக்கி இல்ல விக்கி சொல்லுங்க,” என்றவனிடம், “பிக்கி இல்ல பிக்கி” என்றாள் பற்கள் அனைத்தையும் காட்டி.
கௌதமனின் கைப்பேசி சிணுங்க, அவன் கவனம் கைப்பேசியின் பக்கம் சென்றது.
“மாமா யாலிய மேல சூக்கி போலு” என கைகளை மேல் தூக்கிக் காட்ட, அவனும் செல்ல மகளைத் தூக்கிப் போட்டுப் பிடித்தான். இருவருமாகப் பொங்கி வழியும் சிரிப்போடே சற்று நேரம் அங்கேயே விளையாடினர்.
கௌதமன் இப்போதைக்கு வருவதாக இல்லை என்றதும், “என் செல்ல மருமக ஐஸ்கிரீம் சாப்பிட வந்தீங்களா?” என்றவன், “டேய் நாங்க உள்ள போறோம். நீ பொறுமையா பேசிட்டு வா” எனக் கடையினுள்ளே யாழியோடு சென்றான்.
கண்ணாடி டப்பாக்களில் வண்ண வண்ணப் பனிக்கூழைப் பார்த்த யாழினியை கையில் பிடிக்க முடியவில்லை. “நைய கலர் அயித்கீம் பிக்கி மாமா” என மகள் துள்ளிக் குதிக்க, “சொல்லுங்க யாழி பாப்பா, எந்த ஐஸ்கிரீம் வேணும்? நாம என்ன சாப்பிடலாம்” என அவனும் யாழியின் குதூகலத்தில் இணைந்து கொண்டான்.
“நானுக்கு பிங்க் நேணும் பிக்கி மாமா”
“ஓகே… ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் வாங்கலாமா?”
“நேணா… க்கீன் நேணும் நானுக்கு”
“சரி… பிஸ்தா ஐஸ்கிரீம்”
“நேணா நேணா…”
பனிக் கூழோடு அமர்ந்திருந்த ஏழு ஸ்வர இசைக்குழுவின் கவனத்தைக் குட்டிப் பெண் ஈர்த்தாள். “அந்த குட்டி என்ன குயூட் பாரேன்” என்ற ஸ்வர்னாவை ஒட்டி, “ம்ம்ம் குயூட்னஸ் ஓவர்ஃபுளோயிங்” என்றான் விஹான்.
“விஹான்… கொஞ்சமா சாப்பிடு, ரெண்டு நாள்ல ஒரு ப்ரோகிராம் வருது” எனப் பிரபு நினைவு படுத்திக்கொண்டிருந்த வேளையில் தான் குட்டி புயல் அந்தப் பனிக்கூழ் கடையில் மையம் கொண்டது.
சின்ன கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த சிகப்பு பூ போட்ட வெள்ளை ஃபிராக் போன்ற சட்டையும், குட்டி சிகப்பு ஷார்ட்சுமாக கொழு மொழுவென ‘இதை வாங்கு’ ‘அதை வாங்கு’ என மழலையில் கதைத்துக் கொண்டிருந்த குழந்தையை வாஞ்சையோடு பார்த்து அமர்ந்திருந்தனர் அங்கிருந்தவர்கள்.
தலையை ஆட்ட, அதற்கு ஏற்றார் போல் ஆடிக்கொண்டிருந்தன காதுகளுக்கு மேல் இருந்த இரு குதிரை வால்களைப் பார்த்த ஸ்வர்ணா, “அமேசான் காடுகள்ல இருந்து எண்ணெய் வாங்கி பூசுவாங்க போல இந்த வாண்டுக்கு” என்றாள்.
“இருக்கும் இருக்கும், என்ன எண்ணெய்ன்னு கேட்டு, நானும் அத வாங்கி பூசணும். இப்படியே போனா கல்யாணத்துக்கு முன்னயே சொட்டை ஆகிடுவேன் போல” என விஹான் சிரிக்க அனைவர் முகங்களில் சிரிப்பு.
ஒரு வழியாக ஒரு கோப்பையில் பிளாக்கரண்ட் பனிக்கூழோடும் மற்றதில் மாம்பழப் பனிக்கூழோடும் அமர்ந்தனர் யாழினியும் விக்ரமும். முதல் கரண்டி பனிக்கூழை “சாப்பி பிக்கி மாமா” என மகள் ஊட்ட, “என் தங்கம் டி நீ! அப்படியே அவன மாதிரியே உன்னையும் வளத்து வச்சிருக்கான் உன் அப்பன்.” என நெகிழ்ந்து போனான் விக்ரம்.
இருவருமாகப் பனிக்கூழை உண்டு வெளியே வரும் வரையிலுமே கௌதமன் கைப்பேசியில் இருக்க, அவன் பேசி முடிக்கும் வரை யாழினியோடு விளையாடிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் பேசி முடித்து வரவுமே, “யாரு கூட இவ்வளவு நேரமா ஆர்க்யூமென்ட்?” எனக் கேட்டவனிடம், “தாக்ஷா” என்றான் பெருமூச்சோடே.
“என்னவாம்?”
“அவ்வளவு சொன்னபிறகும், கல்யாணம் பத்தி அவங்க வீட்டுல இருந்து எங்க வீட்டுல பேச போறதா காமெடி பண்ணிட்டு இருக்கா” என்றான் கடுப்பாக.
நீண்ட மூச்சை இழுத்து விட்ட விக்ரம், “அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.
“எல்லாம்ன்னா?” என்ற கௌதமனைப் பார்த்தவன், “டேய்…” என்றான் பற்கள் நரநரக்க.
“அவ என் வாழ்க்கையில வந்ததுக்கு அப்பறம் நடந்த எதையும் நான் மறைக்கல. அதுக்கு முன்ன என்னென்னமோ நடந்தது. அத பத்தி பேசிக்கல. முடிஞ்சு போன எதையும் பத்தி ரெண்டு பேரும் பேசிக்க வேண்டாம்ன்னு முதல்லையே முடிவு பண்ணிட்டு தான் ஆரம்பிச்சது எங்க உறவு. ஆனா… இப்போ சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கே…”
நீண்ட பெருமூச்சை விட்டவன், “ம்ம்ம்… எவ்வளவு சொல்லணும்ன்னு அவ கேள்விகள் தீர்மானிக்கும்” என்றான்.
“குழந்த பத்தி?”
“அவள பத்தி பேச என்ன இருக்கு டா?” என விக்ரமை கேள்வி பார்வை பார்க்க,
“கௌதமா நீ நடக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து உன்ன எனக்கு தெரியும். தாக்ஷாவ தவிற வேற யார் கூடவும் நீ கிளோசா பழகலன்னு அவளுக்கு தெரியுமான்னு தெரியல. ஆனா எனக்கு தெரியும். யசோதரான்னு ஒருத்தி எங்க இருந்து உன் வாழ்க்கையில வந்தான்னு நான் கேட்க மாட்டேன். பேபிய பத்தியோ அவ அம்மாவ பத்தியோ நான் எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல. யாழி பேபி என் கௌதமன் பொண்ணு. என்னோட மருமக அவ்வளவு தான். ஆனா தாக்ஷாக்கு உண்மை தெரிய வேண்டாமா?” எனத் தோழனின் பார்வைக்கான பதிலை உரைத்தான்.
“நீ சொன்னயில்ல… அதுதான் அவளுக்கும். யாழினியாள் என் மக. எனக்கு உயிர் கொடுத்த என் மக. குழந்தைய பெத்து, அவ அப்பாவான என் கையில கொடுத்துட்டு போயிட்ட யசோதரா பெத்த என் குழந்தை. அவ்வளவு தான்!” என்றவன் பார்வை முழுவதும் தன்னையும் பைக்கையும் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்த மகள் மீதே.
“இதுக்கு மேல இது மாதிரி யார்கிட்டயும் உளறிட்டு அலையாத விக்கி. புரியுதா?” என்றவனைப் பார்த்துப் புன்னகைத்த விக்ரம், கைக் கொண்டு வாயைப் பூட்டி சாவியைத் தூற போட்டான்.
“கௌதமா… நீ உண்மையாவே தாக்ஷாவ லவ் பண்றியா டா? உன் நினைப்பு பூரா உன் மகள மட்டுமே சுத்தி வருது. யாரும் அவள புண்படுத்திட கூடாதுன்னு எக்ஸ்ட்ரா மைல் போர. ஏன்னா… நீ உன் மக மேல உயிரையே வச்சிருக்க. உன் காதல் உண்மைனா… தாக்ஷாவ உன் சரி பாதியா நினைக்கிறனா…. அவட்ட நீ திறந்த புத்தகமா இருந்திருப்பியே! நிஜமாவே நீ தாக்ஷாவ லவ் பண்ற தான?”
“இன்னைக்கு உளறிட்டே இருக்கணும்ன்னு முடிவுல வந்திருக்கியா விக்கி? எல்லாரும் ஒரே மாதிரி காதலிக்கணும்ன்னு சட்டமா என்ன? இவ்வளவு தான் எனக்கு வரும் போல. அவளுக்கும் என்னை இப்படியே பிடிச்சு இருக்கு! ரொம்ப யோசிக்காத. சரி டா… நாங்க கிளம்பறோம். நாளைக்கு ராஜீவனை பாக்கிறோம் தான?” எனக் கேட்டவனை, “ம்ம்ம்… அவன பாக்கத்தான் போயிட்டு இருக்கேன். எந்த அளவுக்குச் சொல்லட்டும்?” எனக் கேள்வியாய் பார்த்தான்.
“நான் உன் ஃப்ரெண்ட் கௌதமன். புரொடியுசர் வாசுதேவன் பையன். படம் எடுக்க போறேன். அதுக்கு அவன் சினிமாட்டோகிராபி பண்ணி தரணும். அவன் எதிர்ப்பார்த்து காத்திட்டு இருக்க பிரேக்! இவ்வளவ மட்டும் சொல்லிச் சம்மதிக்க வை. மீதியை நாளைக்குப் பேசுவோம்” என்றவனுக்கு ‘சரி’ எனத் தலையசைத்தான் விக்ரம்.
“என் செல்லம், மாமாக்கு பை சொல்லுங்க” என மகளை அணைத்து முத்தமிட, “பை பை பிக்கி மாமா. சீ யூ சூன்” எனக் கையசைத்தாள்.
வெயில் நன்கு இறங்கியிருக்க, அப்பாவும் மகளுமாக மெரினா கடற்கரையை நோக்கி வண்டியைக் கிளப்பினர்.
மணல் வீடு கட்டி, கால்களை மணலுக்குள் புதைத்து, கடல் நீரில் விளையாடி… களைத்த மகளை ஒரு பாட்டில் குடி நீர் கொண்டு கழுவி, உடை மாற்றி, கொண்டு வந்த சத்து பானத்தைக் குடிக்கக் கொடுத்து எனத் தந்தையும் மகளும் அவர்கள் பொழுதை அவர்கள் உலகில் கழித்தனர்.
சூரியன் மறைந்திருந்தாலும் அது விட்டுச் சென்ற வெளிச்சம் இன்னும் இருக்கவே செய்தது. “உக்காருவோமா?” என மகளைக் கேட்டவன், அங்கு வந்த சூடான சுண்டலோடு மண்ணில் அமர்ந்தான்.
மீண்டும் தெம்பு வந்தது போலக் குட்டி மகளுக்கு, அப்பாவின் மடியில் அமர்ந்து அப்பா கொறித்துக் கொண்டிருந்த சுண்டலில் பங்கை வாங்கி உண்பதும், சற்று தூரம் ஓடிவிட்டு மீண்டும் அப்பா மடிக்கும் வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
“டேய் சித்து… அந்தப் பாப்பா தானே இது? அதுகுள்ள மேடம் டிரெஸ் எல்லாம் மாத்திட்டாங்க பாரேன்” என்றவனைத் தொடர்ந்தது சித்துவின் பார்வை. “யஷோ அந்த குட்டிய பாரேன்” என்றான் சித்து. யசோவின் கவனத்தில் விழவில்லை போலும், கையில் இருந்த கைப்பேசியில் தெரிந்த தந்தையிடம் தான் தாமதமாக வீட்டுக்கு வருவதாகத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“யம்மா யஷோதரா உன்னைத்தான்… ஐஸ்கிரீம் பார்லர்ல ஒரு குட்டி பொம்மைய பார்த்தோம்ன்னு சொன்னேனே… அந்தக் குட்டி மேடம்” எனச் சித்து கூறவும், கைப்பேசியை அணைத்தவள் தன் முதுகுக்குப் பின் நின்றிருந்த யாழினியை திரும்பிப் பார்த்தாள். ஓடி வந்த மகள் இவர்கள் சம்பாஷனையில் நின்று விட்டிருந்தாள்.
“யஷோ, பாப்பா செம கூயூட் இல்ல?”
சின்னவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, ‘ஆம்’ எனத் தலையசைத்தாள் யசோதரா. குழந்தைக்கு என்ன புரிந்ததோ, “அச்சோ அம்மா?” என கைகள் இரண்டையும் குட்டி கன்னங்களில் பதித்துக் கோலிக் குண்டு கண்கள் விரிய வினவினாள் குழந்தை.
‘என்ன?’ என்பது போல் இவள் இன்னும் அதிகமாகப் புன்னகைக்க, அது சின்னவளுக்கு ‘ஆம்’ எனத் தோன்றியது போலும். எதிர்பார்ப்போடே யசோவை நெருங்கி வந்த குழந்தை ஆர்வமாக யசோதராவை பார்த்து நின்றாள். சின்ன மகளின் எதிர்பார்ப்பு யசோவிற்குத் தெரியாதே, புன்னகை முகத்தோடு சின்னவளைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
“அச்சோ அம்மா” என உதட்டைப் பிதுக்க ஆரம்பித்தாள் யாழினி. கண்கள் இரண்டிலும் நீர் கோர்க்க… எதிர்பார்ப்போடே நின்றிருந்தாள் குழந்தை. யாழியின் நீர் நிறைந்த கண்கள் யசோவை ஏதோ செய்தது. என்னானது குழந்தைக்கு? புரியவில்லை. குழந்தை விம்மி வெடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பது தெரிகிறது.. ஆனால் ஏன்? அழாதே என ஆறுதல் கூறவும் முடியவில்லை.
மகள் மீண்டும் வராது ஒரே இடத்தில் நின்றிருப்பதைப் பார்த்த கௌதமன் எழுந்து வந்து “பேபி” என்றான். ‘பேபி’ என்ற அந்த ஆழமான குரலுக்குச் சொந்தக்காரனை யசோவும், யாழினியும் ஒன்று சேர பார்த்தனர். இருவிழிகள் தகப்பனைச் சோகமாகப் பார்க்க, இரு விழிகள் கௌதமனை குழப்பமாகப் பார்த்தன.
மண்டி இட்டு “பேபி” என மீண்டும் அழைக்க, ஒரு ஜீவன் மூச்சு அடைக்க அவனையே பார்த்து அமர்ந்திருக்க, மற்றொன்று “அப்பாஆஆஆ” என ஓடி அப்பாவின் கைக்குள் தாவியது. அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்ட யாழி, “அச்சோ அம்மா அப்பா. நானுக்கு அம்மா அப்பா” என அழ, கௌதமனுக்கு மகள் என்ன கூற வருகிறாள் எனப் புரியவில்லை.