Skip to content
Post Views: 189
தன் செங்கதிர்களை பூமகள் மீது படரவிட்டு அந்நாளின் காலைப்பொழுதை இரம்மியமாக ஆட்சி புரிந்திருந்தார் சூரியதேவன். தன் இல்லத்தின் கூடத்திலிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்த இன்பன் தன் நகத்தை கடித்துக்கொண்டு தீவிரமாய் சிந்தித்து கொண்டிருக்க, அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு ஆதவ் கிருஷ்ணனுடன் விளையாடி கொண்டிருந்தாள் நீலவேணி.
இரவு விஜய சிவமாறனின் இல்லத்திலிருந்து ஆழினியை அழைத்து வந்தவன் நீலவேணியிடமும் அவளின் பெற்றோர்களிடமும் சிவமாறன் மற்றும் பருவதம்மா கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தான். இன்பன் கூறியதை கேட்டு மகிழ்ந்தவர்கள் திருமணத்திற்கு ஆழினி சம்மதிக்க வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்தித்து கொண்டிருக்க, ஆனால் இன்பனால் தன் தமக்கையிடம் இந்நிமிடம் வரையிலும் திருமணத்தை பற்றி கூற நாயெழவில்லை.
ஆழினியிடம் எப்படி பேசுவதென்று இரவு முழுவதும் தூங்காது யோசித்த இன்பனுக்கு தலைவலியே வந்துவிட்டது. அதை காரணமாய் கூறி வேலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இல்லத்திலிருந்த இன்பன் மீண்டும் தன் சிந்திக்கும் படலத்தை தொடர, காந்தி ஜெயந்தி என்பதால் ஆதவ் கிருஷ்ணனும் நீலவேணியும் பள்ளி விடுமுறையை தங்களின் விளையாட்டில் கழித்து கொண்டிருந்தனர்.
ஆதவ் கிருஷ்ணனுடன் விளையாடி கொண்டிருந்தவள் இன்பனின் நிலையை உணர்ந்து அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள். தன் நகத்தை கடித்து கொண்டிருந்த இன்பனின் கையை தட்டிவிட்டவள்
Advertisement
“நேத்து ராத்திரியிலிருந்து யோசிச்சிட்டிருக்க எதாவதொரு ஐடியா வந்துச்சா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஆழினி அண்ணி பருவதம்மா வீட்டுக்கு கிளம்பிடுவாங்க, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்களே உன் அக்கா கிட்ட சொல்லிடுவாங்க ஆனா கடைசியில நீதான் ஆழினி அண்ணி கிட்ட சிக்கி சின்னாப்பிண்ணமாவ…. பேசாம ஆழினி அண்ணி கிட்ட ‘சிவா அண்ணனை கல்யாணம் பண்ணிக்கோன்னு’ நேரடியா சொல்ல வேண்டியது தான? ஏன் தேவையில்லாம இல்லாத மூளையை தேடிட்டு இருக்க?” என்று நீலவேணி நக்கலாக வினவ, அவளை தீயாய் முறைத்தவன்
“இவ்வளவு பேசுறீங்களே சைன்ஸ் டீச்சர், நீங்க போய் உங்க நொண்ணி கிட்ட இதை சொல்ல வேண்டியது தான?” என்று வினவிய இன்பனை கண்டு கேவலமாக இளித்தவள் எதுவும் கூறாது ஆதவ் கிருஷ்ணனுடன் அமர்ந்து விளையாட தொடங்கிவிட்டாள்.
நீண்ட நேரமாக யோசனையில் சுழன்றவனின் மூளையின் மூலையில் ஓர் பல்ப் எரிய, அதற்கு காரணமான ஆதவ் கிருஷ்ணனின் அருகில் அமர்ந்தவன்
Advertisement
“ஆது கண்ணா….” என்று ஆசையாய் அழைத்த தன் மாமனை என்ன என்பதை போல் பார்த்தவனிடம்
Advertisement
“நீயும் நானும் ஐஸ்கிரீம் சாப்பிட போகலாமா?”
“ஹய்ய்…. நிஜமாவா பன்னு?”
“ஆமா டா கண்ணா…. ரெண்டு ஐஸ்கிரீம் வாங்கி தரேன் ஆனா உன் கிட்ட நான் ஒரு கேள்வி கேட்பேன் நீ அதுக்கு பதில் சொல்லனும்….”
Advertisement
“கேளு பன்னு, ஸ்கூல் டெஸ்ட்ல நான் தான் ஃப்ர்ஸ்ட் ராங்க் தெரியும்ல? நான் கரேக்ட்டா சொல்லுவேன்….”
“ஆது குட்டிக்கு அப்பா வேணுமா வேண்டாமா?” என்று வினவிய இன்பனை புரியாமல் பார்த்தவன்
“அப்பாவா? அப்படின்னா யாரு?” என்று ஆதவ் கிருஷ்ணன் கேட்ட கேள்வியில் இன்பனின் கண்கள் மட்டுமல்லாது நீலவேணியின் கண்களும் கலங்க ஆரம்பித்துவிட்டது.
ஆதவ் கிருஷ்ணனை தூக்கி தன் மடியில் அமர்த்தியவன்
“ஆது கண்ணா, அப்பா உன்னை பத்திரமா பார்த்திப்பாரு, உனக்கு கதை சொல்லி தூங்க வைப்பாரு, உன்னை ஸ்கூலுக்கு தினமும் கூட்டிட்டு போவாரு, அதேமாதிரி உனக்கு….” என்று இன்பன் ஏதோ கூற வருவதற்குள்
“அதான் இதெல்லாம் அம்மாவே எனக்கு பண்றாங்களே அப்புறம் எதுக்கு எனக்கு அப்பா வேணும்? எனக்கு அப்பா வேண்டாம் பன்னு, நீ எனக்கு முதல ஐஸ்கிரீம் வாங்கி கொடு….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டவன்
“நமக்கு எதிரி வெளியில இல்ல வீட்டுக்குள்ளேயே தான் இருக்கான்….” என்று தன் மனதில் நினைத்த இன்பன் ஆதவ் கிருஷ்ணனிடம் என்ன பேசுவதென்று புரியாது அமைதியாக அமர்ந்திருந்தான்.
இன்பன் மற்றும் ஆதவ் கிருஷ்ணனின் உரையாடலை கேட்டு தலையில் அடித்து கொண்டவள்
“ஆது கண்ணா, வீட்டுல அம்மா இல்லாத சமையத்துல உன் கூட விளையாட அப்பா இருந்தா நல்லாயிருக்கும் தான?” என்று நீலவேணி கூறியதை கேட்டு தலையசைத்தவன்
“அப்பா என் கூட எப்பயும் விளையாடுவாங்களா?”
“கண்டிப்பா, உனக்கு பருவதம்மா பாட்டி பிடிச்சிருக்கா?”
“ம்ம், ரொம்ப பிடிச்சிருக்கு…. பரு பாட்டி என் கூட சேர்ந்து கலர் பண்ணுவாங்க, அப்புறம் எனக்கு நிறைய கதை கூட சொல்லுவாங்க….”
“பரு பாட்டியோட வீட்டுல தான் அப்பா இருக்காரு தெரியுமா?”
“அப்படியா? அப்போ ஏன் இத்தனை நாள் அப்பா என்னை பார்க்க வரவேயில்ல?” என்று வினவிய ஆதவ் கிருஷ்ணனிடம் என்ன கூறுவதென்று அறியாத நீலவேணி திருதிருவென முழித்து கொண்டிருக்க, அவளெதிரில் அமர்ந்திருந்தவன்
“இத்தனை நாள் அப்பா ஊருக்கு போயிருந்தாரா அதான் உன்னை பார்க்க அவரால வரமுடியல….” என்று கூறிய இன்பனை சோகமாக பார்த்தவன்
“அப்பா எப்போ வருவாரு?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ, அவனிடம் இன்பன் ஏதோ கூற வருவதற்குள்
“இன்பா….” என்று அவ்வறையே அதிரும் வண்ணம் கத்திய ஆழினியின் குரலை கேட்டு இன்பன் மற்றும் நீலவேணி இருவரும் அவள் நின்றிருந்த திசையை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தனர்.
தன்னெதிரில் நின்றிருந்த இன்பனையும் நீலவேணியையும் தீயாய் முறைத்தவளின் அருகில் சென்றவன்
“அம்மா, அப்பா நம்ம வீட்டுக்கு எப்போம்மா வருவாரு?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ, அவனது கேள்வியில் ஒருநொடி மனம் கலங்கியவள் அதை தனக்குள் மறைத்தவாறு
“ஆது கண்ணா, ரூம் டேபில் மேல கலர்புக் எடுத்து வச்சிருக்கேன் அங்க போய் கலர் பண்றீங்களா?” என்று ஆழினி கூறி மெலிதாய் சிரிக்க, அவள் கூறியதை கேட்டு சரியென்பதை போல் தலையசைத்தவன் அறைக்குள் ஓடிவிட்டான்.
தன்னெதிரில் நின்றிருந்த இன்பனை தீயாய் முறைத்தவள்
“பருவதம்மா உன் கிட்ட என்ன சொன்னாங்க?” என்று கோபமாக வினவிய ஆழினியை கலக்கமாக நோக்கியவன்
“அக்கா…. அது…. அது வந்து….” என்று இன்பன் பயத்தில் வார்த்தை வராமல் தடுமாற, அதில் பொறுமை இழந்தவள் அவ்வறையே அதிரும் வண்ணம்
“சொல்லு இன்பா…. அங்க என்ன நடந்துச்சு? நேத்து ராத்திரி அங்கிருந்து வந்ததிலிருந்து நீ சரியில்ல…. பருவதம்மா உன் கிட்ட என்ன சொன்னாங்க?” என்று ஆழினி கோபமாக வினவ, இதற்கு மேல் மறைப்பதில் எந்த பயனுமில்லை என்பதை உணர்ந்தவன் ஆழினியிடம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தான்.
இன்பன் கூறியதை கேட்டு அவனை தீயாய் முறைத்தவள்
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டமில்ல….” என்று தீர்க்கமாக கூறிய ஆழினியை கோபமாக பார்த்தவன்
“எத்தனை வருஷத்துக்கு இதையே சொல்லப்போற ஆழினி? உனக்காக இல்லனாலும் ஆதவ்க்கு ஒரு அப்பா வேணும் அவனுக்காகவாது கல்யாணம் பண்ணிக்கோ….”
“என் ஆதுக்கு அப்பா வேண்டாம் அவனுக்கு அம்மா போதும்….”
“பிடிவாதம் பிடிக்காத ஆழினி, எது பேசுறதாயிருந்தாலும் பொறுமையா யோசிச்சு பேசு…. உன் நல்லதுக்கும் குறிப்பா ஆதுவோட நல்லதுக்கும் சேர்த்து தான் சொல்றேன்….”
“இதுல யோசிக்க என்னயிருக்கு? நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்….”
“அப்போ நானும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்….” என்று இன்பன் தீர்க்கமாக கூற, அவனை ஆழினி கொலைவெறியுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
“லூசு மாதிரி பேசாத இன்பா, என் கதை வேற உன் கதை வேற…. ரெண்டுத்தையும் ஒன்னு சேர்க்காத….” என்று ஆழினி கூறியதை கேட்டு வலியுடன் சிரித்தவன்
“நீ இங்க இப்படி நிக்குறதுக்கு காரணமே நான் தான்…. அப்போ உன் கதையை நான் தான மாத்தி எழுதனும்?” என்று இன்பன் கூற, அவன் கூறியதை கேட்டு ஒருநிமிடம் தன் கடந்த கால வாழ்க்கையில் சுழன்றவள் எதுவும் கூறாது அறைக்குள் சென்றிருந்தாள்.
தன் கைப்பையை எடுத்துக்கொண்டு ஆதவ் கிருஷ்ணனுடன் வெளியில் வந்தவளை வழி மறைத்தவன்
“எங்க போற?” என்று வினவிய இன்பனிடம்
“ஹாஸ்பிடலுக்கு…. ராஜவேல் சார் பார்த்து பருவதம்மாவை பார்த்துக்க வேற ஆள் ஏற்பாடு பண்ண சொல்லப்போறேன்….”
“நான் கேட்ட கேள்விக்கும் இப்போ நீ பண்றதுக்கும் என்ன அர்த்தம்?”
“எதை எப்போ எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும்…. நீ உன் வேலையை பாரு….”
“எனக்கு இப்போ இருக்கிற ஒரே வேலை உன் கல்யாணம் தான்…. உன் கல்யாணம் நடந்தாத்தான் நானும் வேணியும் கல்யாணம் பண்ணிப்போம்….” என்று உறுதியாய் கூறிய இன்பனை முறைத்தவள் அவனருகில் நின்றிருந்தவனிடம்
“நீயாவது என்னை புரிஞ்சிக்கோ நீலா…. நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லேன்?” என்று ஆழினி கூறியதை கேட்வள்
“சாரி அண்ணி, நீங்க சிவா அண்ணனை கல்யாணம் பண்ணாத்தான் நானும் இன்பாவும் கல்யாணம் பண்ணிப்போம்…. நீங்க என்ன சொன்னாலும் இதிலிருந்து பின்வாங்கமாட்டோம்….” என்று நீலவேணி முடிவாக கூறிவிட, அவ்விருவரையும் கண்டு வலிகளுடன் புன்னகைத்து வைத்தாள் ஆழினி.
இல்லத்தின் கூடத்திலிருக்கும் நீள்சாய்விருக்கையில் அமர்ந்தவளின் காலடியில் அமர்ந்தவாறு அவளது கைகளை இறுக்கமாக பற்றியவன்
“ஆழினி…. பிளீஸ் டி…. உனக்காக வேண்டாம் ஆது குட்டிக்காகவாது கல்யாணம் பண்ணிக்கோ டி…. உனக்கு தெரியுமா? நான் நாலு வருஷமா உனக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துட்டு இருக்கேன், இதுவரை எதுவும் என் மனசுக்கு பிடிக்கல…. ஆனா நேத்து பருவதம்மாவும் அவங்க பையன் சிவா சாரும் பார்த்ததிலிருந்து எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு…. ஆதவ்க்கு அப்பா வேணும் ஆழினி, குறிப்பா உனக்கொரு துணை வேணும்…. கண்டிப்பா சிவா சார் தான் உனக்கு பொருத்தமா இருப்பாரு…. கொஞ்சம் யோசி ஆழினி…. நீ என் கூட பருவதம்மா வீட்டுக்கு வா…. நீயும் சிவா சாரும் கொஞ்ச நேரம் மனசுவிட்டு பேசுங்க, உனக்கு கண்டிப்பா அவரை பிடிக்கும்…. எனக்காக வா ஆழினி….” என்று இன்பன் தன் கண்கள் கலங்கியவாறு நாதழுதழுக்க கூற, அவன் கூறியதை கேட்டு ஆழினியின் கண்களும் கலங்கிவிட இன்பனிடம் எதுவும் கூறாது மீண்டும் தன் அறைக்குள் சென்று முடிங்கிவிட்டாள்.
ஆழினி சென்ற திசையை விழியகலாமல் பார்த்தவனின் கண்ணீர் அவனது கன்னத்தை தீண்டி செல்ல, தன்னவனின் கண்ணீரை கண்டு மனம் கலங்கியவள் இன்பனின் அருகில் அமர்ந்து அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். இத்தனை நேரம் நடந்த நிகழ்வுகளை புரியாமல் பார்த்து கொண்டிருந்த ஆதவ் கிருஷ்ணன் தன் அன்னையின் அறைக்குள் சென்றிருந்தான்.
அறையிலுள்ள கட்டிலில் சாய்ந்தவாறு தரையில் அமர்ந்து தன் கால்களை குறுக்கி கொண்டு அழுது கொண்டிருக்கும் ஆழினியின் அருகில் சென்றவன்
“அம்மா….” என்று அழைத்த ஆதவ் கிருஷ்ணனின் குரலை கேட்டதும் தன் கண்களில் வழியும் கண்ணீரை வேகமாக துடைத்தவள் அவளது மகனை தன் மடியில் அமர வைத்து கொண்டாள்.
தன் கண்ணீரை அழுந்த துடைத்தாலும் அதை கட்டுபடுத்த வழியறியாதவளின் விழியில் கண்ணீர் துளிகள் யாவும் மீண்டும் வழிந்தோட, ஆழினியின் கன்னத்தில் வழியும் கண்ணீரை தன் பிஞ்சு கரங்களால் துடைத்தவன்
“அழாதம்மா, எனக்கு நீ மட்டும் போதும்…. அப்பா வேண்டாம்….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டவள் மறுநொடியே வெடித்து அழுதவாறு அவளது மகனை தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்து கொண்டாள்.
ஒளி வீசும்….
error: Content is protected !!