Skip to content
Post Views: 163
சந்தான கிருஷ்ணன், ஆதிலட்சுமி மற்றும் இன்பன் சென்ற வாகனமானது விபத்துக்குள்ளாகி மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்து வைத்திருப்பதாக செய்தி கேட்ட ஆழினி அதிர்ச்சியில் மயங்கி சரிந்திருந்தாள்.
அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று மயங்கி சரிவதை கண்டு பயந்த ராணியும் நீலவேணியும் ஆழினியின் மயக்கத்தை தெளிய செய்து என்னவென்று வினவியவர்களிடம் கலங்கிய கண்களுடன் உடல்நடுங்க அனைத்தையும் ஆழினி கூற, அவள் கூறியதை கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்திருந்தனர். அழுகையில் கரையும் ஆழினிக்கும் நீலவேணிக்கும் தைரியம் கூறியவர் தானும் அழுதுவிடக்கூடாதென்று தனக்குள் மருகியவாறு ஆறுமுகத்திற்கு அழைப்பு விடுத்து அனைத்தையும் கூறியிருந்தார்.
Advertisement
ஆழினி மற்றும் நீலவேணியை மருத்துவமனைக்கு ராணி அழைத்து வர, அவர்களுக்கு முன்பே உணர்ச்சி துடைத்த முகத்துடன் ஆறுமுகமும் அங்கு காத்திருந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியில் நின்றிருந்த ஆறுமுகத்தை கண்டதும் அவரருகில் வேகமாக ஓடியவள்
“மாமா…. அப்பா…. அம்மாவுக்கு என்னாச்சு? இன்பா…. இன்பாவுக்கு ஒன்னுமில்ல தான? யாருக்காவது…. யாருக்காவது அடி எதாவது…. எங்க…. எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு மாமா?” என்று பயத்தில் திக்கி திணறியவாறு வினவிய ஆழினியை வலிகளுடன் பார்த்தவர்
Advertisement
Advertisement
“கோயிலுக்கு போற வழியில ஆட்டோக்காரனுக்கு ஏதோ ஃபோன் வந்துச்சுன்னு அட்டோவ ஓரமா நிறுத்திட்டு இறங்கி நின்னு பேசியிருக்கான்…. அப்போ ஒரு லாரி…. ப்ரேக் ஃபெலியராகி ஆட்டோ மேல….” என்று முழுவதுமாய் கூற முடியாத ஆறுமுகம் அழ ஆரம்பிக்க, அவரை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தவளிடம்
“சந்தானமும் ஆதியும் ஸ்பாட்லேயே….” என்று அடுத்த வார்த்தை கூற இயலாத ஆறுமுகம் தன் நண்பன் மற்றும் உடன்பிறவா தங்கையின் பிரிவை எண்ணி வாய் பொத்தி அழ ஆரம்பிக்க, அவர் கூறியதை கேட்டவள் அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தி அழுதிருந்தாள்.
Advertisement
ஆழினியை எவ்வாறு தேற்றுவதென்று அறியாத ராணியும் நீலவேணியும் சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியின் பிரிவை நினைத்து அழுது கொண்டிருக்க, அச்சமயத்தில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மருத்துவர் ஒருவர் வெளியில் வந்திருந்தார்.
மருத்துவரை கண்டதும் அவரருகில் வேகமாக சென்றவர்
“சார், இன்பா எப்படி இருக்கான்?” என்று ஆறுமுகம் பதற்றமாக வினவ
“தலையில பலமா அடிப்பட்டிருக்கு சார், பிழைக்கிறது ரொம்ப கஷ்ட்டம்…. இது சின்ன ஹாஸ்பிடல், இங்க அவ்வளவு ஃபெசிலிட்டீஸ் இல்ல…. நீங்க வேணும்னா ஏதாவதொரு பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க…. நான் ரெஃபர் பண்றேன், ஆனா நிறையா செலவாகும்….” என்று மருத்துவர் கூறியதை கேட்டவள்
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்…. என் தம்பியை நான் கண்டிப்பா காப்பாத்திடுவேன்….” என்று ஆழினி அழுகையுடன் கூற, அவள் கூறியதை கேட்ட மருத்துவரும் இன்பனை வேறொரு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியின் உதவியுடன் அனுப்பி வைத்திருந்தார்.
ஒருப்பக்கம் இன்பனுக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமிக்கு இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அனைத்திலும் ஆழினிக்கு துணையாக ஆறுமுகமும் அவரது குடும்பத்தாரும் தான் உடனிருந்து உதவி செய்தனர்.
தன் தாய் மற்றும் தந்தையின் உயிர் பிரிந்தாலும் அவர்களின் உறுப்புகள் இவ்வுலகில் உயிர்வாழவேண்டும் என்று அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எண்ணியவள் அவ்விருவரின் உடலுறுப்புகளை தானம் செய்திருந்தாள். தன்னை ஈன்றெடுத்த அன்னைக்கும் தோள்கொடுத்து வளர்த்த தந்தைக்கும் இயந்திரத்தை போல் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு மருத்துவமனை திரும்பிய ஆழினிக்கு மற்றுமொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.
இன்பனின் மருத்துவ பரிசோதனைகளை பார்த்திருந்த மருத்துவர்
“தலையில் அடிபட்டதால பிரேயின்ல பிளீடிங் இருக்கு…. இப்போதைக்கு அவங்க அன்கான்ஷியஸ் ஸ்டேஜ்ல இருக்காங்க, உடனடியா ஒரு மைனர் சர்ஜரி பண்ணி பிளட் க்ளாட் ரிமுவ் செய்யணும் அதுக்கப்புறம் ஒரு வாரம் அப்சர்வேஷன்ல வச்சிருப்போம்…. நிலைமை ஓரளவுக்கு சரியானதுக்கு அப்புறம் மேஜர் நியுரோ சர்ஜரி செய்யவேண்டியிருக்கும்…. ரொம்ப கிரிட்டிக்கல் ஆப்ரேஷன்.… ஆனா அதுக்கான செலவு ரொம்ப அதிகமா இருக்கும்….” என்று கூறிய மருத்துவரின் கூற்றில் ஒருநொடி உறைந்தவள்
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர், என் தம்பியை எப்படியாவது காப்பாத்தி கொடுங்க….” என்று கூறி அழ ஆரம்பித்த ஆழினிக்கு அடுத்தடுத்த சோதனைகளும் ஆரம்பமாகியிருந்தது.
ஆழினியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகள் அனைத்தையும் விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து இன்பனின் முதல்கட்ட அறுவை சிகிச்சையும் தொடங்கியிருந்தது. தனக்கு தெரிந்த வரையில் அனைத்து வழிகளிலும் பணம் ஈட்டியவள் தன் தாய் மற்றும் தந்தையின் வங்கி கணக்கை கண்டு அதிர்ந்திருந்தாள்.
“மாமா…. அம்மா அப்பாவோட பேங்க் அக்கௌன்ட்ல என் கல்யாணத்துக்காக பதினைஞ்சு லட்சம் சேவ் பண்ணி வச்சிருந்தாங்க ஆனா இப்போ அதுல ஒன்னுமேயில்ல…. ‘உன் அப்பா, உன்னோட கல்யாணத்துக்காக என் கிட்ட இத்தனை லட்சம் கடன் வாங்கியிருக்காங்க. உனக்கு மூணு மாசம் டைம் தரேன் சீக்கிரம் பணத்தை கொடுத்துடுன்னு’ ரெண்டு நாளா யார் யாரோ ஃபோன் பண்றாங்க…. எதுக்கு மாமா இத்தனை கடன் வாங்கியிருக்காங்க? இதுவரை அப்பா எதுக்காகவும் கடன் வாங்கினது இல்லையே? அப்புறம் ஏன் இப்படி? எல்லா பணத்தையும் என் கல்யாணத்துக்காக செலவு பண்ணிட்டாங்களா?” என்று வினவிய ஆழினியிடம் இனியும் மறைத்து பயனில்லை என்று உணர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியிடம் மகேஷ்வரி கேட்ட வரதட்சணை பற்றியும் அதற்காக அவளது பெற்றோர்கள் பெற்ற கடன்கள் மற்றும் நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை வாங்க சென்றபோதுதான் விபத்து நடந்தது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தார்.
ஆறுமுகம் கூறியதை கேட்டு அதிர்ந்தவள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலியில் சிலை போல் அமர்ந்திருக்க, அவளின் அருகில் அமர்ந்திருந்தவர்
“நீ பேங்க் போயிருந்த சமயத்துல எழிலரசன் இங்க வந்திருந்தாரும்மா….” என்று ஆறுமுகம் கூறியதை கேட்ட ஆழினியின் மனமோ தன் தாய் தந்தையின் மறைவை அறிந்து தெரிந்தவர் தெரியாதவர் என்று பலரும் இறுதி சடங்கிற்கு வந்திருக்க எழிலரசனின் தாயாரும் தந்தையாரும் ஏன் வரவில்லை என்று அப்பொழுது தான் யோசித்தது.
“இன்னிக்கு காலையில தான் எழில் தம்பி டெல்லியிலிருந்து வந்துருக்காரு…. அவருக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியப்படுத்தல போல, கேள்விப்பட்டதும் உடனே இங்க வந்துட்டாரு…. உன்னை பார்க்கணும்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணாரும்மா, ஆனா ஏதோ அவசர வேலை வந்ததுனால போயிட்டு உடனே வந்துடுறேன்னு சொல்லிட்டு போனாரு….” என்று கூறி தன் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்து ஆழினியிடம் கொடுத்தவர்
“எழில் தம்பி இந்த பணத்தை உன் கிட்ட கொடுக்க சொன்னாரு ஆழினி…. ‘இதுல ஒரு லட்சம் இருக்கு அங்கில், ஆழினியை பயப்படவேண்டாம்னு சொல்லுங்க அவளுக்கு துணையா நான் இருக்கேன் முக்கியமா இன்பனோட மெடிக்கல் செலவெல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்னு’ சொல்லிட்டு போனாரும்மா….” என்று ஆறுமுகம் கூறியதை கேட்டவள் தன் கையிலிருக்கும் பணத்தை வெறித்து கொண்டிருந்தாள்.
இந்த பணத்திற்காக தானே எழிலரசனின் அன்னை மகேஷ்வரி ஆழினியின் பெற்றோரிடம் வரதட்சணை என்ற பெயரில் அவளை விலைபேசினார்கள். இதனால் மட்டும் தானே அவளின் தாயையும் தந்தையையும் இப்பொழுது இழந்து நிற்கிறாள். இவற்றையெலாம் நினைத்து பார்த்தவளுக்கு அப்பணத்தை கையில் வைத்திருந்த அந்நொடியிலிருந்தே அறுவறுப்பாய் உணர ஆரம்பித்திருந்தாள். மனதில் ஓர் முடிவெடுத்தவளாய் ஆறுமுகத்திடம் சொல்லிக்கொண்டு எழிலரசனின் இல்லத்திற்கு சென்றிருந்தாள் ஆழினி.
தன் இல்லத்தின் கூடத்தில் அமர்ந்திருந்த மகேஷ்வரியை முறைத்தவர்
“படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா? பையனோட வாழ்க்கையை விட அப்படி என்ன பணம் உனக்கு முக்கியமா போச்சு? என்னை மிரட்டி ஆழினி அப்பா அம்மாவோட இறுதி சடங்குக்கும் போகவிடாம, எழிலுக்கும் அவங்களுக்கு நடந்ததை பத்தி சொல்லவிடாம தடுத்த…. நீ பண்ற பாவமெல்லாம் நம்ம பையனுக்கு தான் வந்து சேரும்…. இப்போ எழில் கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போற?” என்று வினவிய கலைவாணனை அலட்சியமாக பார்த்தவர் இல்லத்திற்குள் நுழையும் ஆழினியை கண்டு கோபத்துடன் வாயிலை நோக்கி சென்றிருந்தார்.
“ஏய், வீட்டுக்குள்ள வராத…. அங்கேயே நில்லு….” என்று அவ்விடமே அதிரும் வண்ணம் கத்திய மகேஷ்வரியின் குரலை கேட்டு ஆழினி மட்டுமல்லாது அவர் பின்னால் நின்றிருந்த கலைவாணனும் பயத்தில் ஒருநொடி மிரண்டிருக்க, தன் பொற்றோரை இழந்து உயிருக்கு போராடும் தம்பியின் நிலையை எண்ணி அனுதினமும் வாடும் ஆழினியின் நிலையை அறிந்தாலும் அதை துச்சமாக கருதியவர்
“எதுக்கு இங்க வந்திருக்க? என்ன ராசியோ இழவோ கல்யாணம் முடியறதுக்குள்ள உன் அப்பன் ஆத்தாள முழுங்கிட்ட, ஒருவேளை கல்யாணமாகிருந்தா? ஐயையோ, நினைக்கவே என் கொளையெல்லாம் நடுங்குது…. என் பையனுக்கு என்ன வசியம் வச்சியோ? வந்ததும் உன்னை பார்க்க ஓடிட்டான்…. படிக்குற இடத்துல பணக்கார வீட்டு பையனா பார்த்து பழகி மயக்கிடுன்னு உன் வீட்டுல சொன்னாங்களா?” என்று மகேஷ்வரி தன் வார்த்தையில் நஞ்சை கலந்து வினவ, இதற்குமேல் பொறுக்க முடியாத ஆழினியும் கோபத்தில் கொதித்தெழுந்துவிட்டாள்.
“என்ன? என்ன சொன்னீங்க? நானா உங்க பையன் பின்னாடி சுத்தினேன்? நானா உங்க பையன கல்யாணம் பண்ணிக்கனும்னு வந்து நின்னேன்? நானா உங்களை எங்க வீட்டுக்கு வந்து என் அப்பா அம்மா கிட்ட வரதட்சணை கேட்க சொன்னேன்?” என்று ஆழினி கேட்டு கத்த ஆரம்பிக்க, அவள் கூறியதை கேட்ட கலைவாணனும் ஆழினியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்று அவள் தன் இல்லத்திற்கு தான் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்து இல்லத்திற்குள் நுழைந்த எழிலரசனும் மகேஷ்வரியை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தனர்.
இத்தனை நாட்களாய் மறைத்திருந்தவை அனைத்தும் தன் மகனுக்கும் கணவருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் மிரண்டிருந்தவரை வலிகளுடன் நோக்கியவள்
“நீங்க என் அப்பா அம்மா கிட்ட வரதட்சணை கேட்டது மட்டும் எனக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தை நான் நிறுத்தியிருப்பேன்…. அதை எனக்கு தெரியாம மறைச்சு, யார் யார் கிட்டயோ கடன் வாங்கி அதுவும் பத்தாம கடைசியில பணம் ஏற்பாடு பண்றதுக்காக சொந்த வீடு கட்டனும்னு ஆசையா நாங்க வாங்குன நிலத்தை விக்கப்போகும்போது ஆக்சிடென்ட் நடந்து….” என்று அடுத்த வார்த்தை கூற முடியாமல் தடுமாறியவளின் விழியோரம் கண்ணீர் துளிகள் வழிய ஆரம்பிக்க, அதனை தன் கரங்களால் அழுந்த துடைத்தவள்
“நீங்க மட்டும் வரதட்சணை கேட்காமலிருந்திருந்தா இந்நேரம் என் அப்பாவும் அம்மாவும் இறந்திருக்கமாட்டாங்க…. என் தம்பி…. என் தம்பியும் அங்க உயிருக்கு போராடிட்டு இருக்கமாட்டான்….” என்று ஆழினி கூறிவிட்டு தன் கைப்பையிலிருக்கும் பணத்தினை எடுத்து மகேஷ்வரியின் கைகளில் திணித்திருந்தாள்.
“இது தான? இதுக்காக தான என் அப்பா அம்மா கிட்ட என்னை விலை பேசுனீங்க? சாரி சாரி, தப்பா சொல்லிட்டேன்…. உங்க பையன், டாக்டர் எழிலரசனை காசு வாங்கி எனக்கு விற்க பார்த்தீங்க? எனக்கு உங்க பையன் வேண்டாம்…. உங்க பையன வேற யாருக்காவது வித்துக்கோங்க….” என்று கூறியவள் தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனிடம்
“இதுக்கு அப்புறம் என்னை பார்க்க வராதீங்க எழிலரசன்…. உங்களை பார்த்தாலே ‘என்னால தான் என் அப்பாவும் அம்மாவும் இறந்தாங்களோன்னு’ குற்றவுணர்வாயிருக்கு…. நீங்க ரொம்ப நல்லவங்க எழிலரசன், உங்களுக்கு கண்டிப்பா நல்ல பொண்ணு கிடைப்பாங்க…. என்னை விட்டுடுங்க பிளீஸ்…. என் தம்பியை என்னால காப்பாத்த முடியும், அவனை நான் பார்த்துக்குறேன்…. குட் பாய்….” என்று கலங்கிய விழிகளுடன் தீர்க்கமாக கூறிவிட்டு மருத்துவமனை நோக்கி சென்ற ஆழினியின் மனதை குலைக்கும் விதமாய் அடுக்கடுக்காய் அதிர்ச்சிகளும் காத்து கொண்டிருந்தது.
ஒளி வீசும்….
error: Content is protected !!