Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-23

     பொன்னிறக் கதிர்களை பூமி மீது தூவியபடி தன் பயணத்தை தொடங்கியிருந்தார் சூரியதேவன். பறவைகளின் இனிய குரலும், மலர்களின் மணத்தைச் சுமந்த தென்றல் காற்றும் அந்த காலைப்பொழுதை மேலும் அழகாக்கியது. இயற்கை முழுவதும் புத்துணர்ச்சியில் திளைத்திருக்க, சிலரின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் எழுதப்படக் காத்திருந்தது.

     தன் ஆழ்ந்த நித்திரையில் இலயித்திருந்தவளின் செவிகளில்



Advertisement

     “நீ பொய் சொல்ற பன்னு…. நான் உன் பேச்சு டூ போ….” என்று ஆதவ் கிருஷ்ணனின் குரல் கேட்டு உறக்கத்திலிருந்து சட்டென்று விழித்திருந்தாள் ஆழினி.

     ஒருநொடி எங்கிருக்கிறோம் என்று திகைத்தவாறு ஒன்றும் புரியாமல் தன் கண்களை சுழலவிட்டவளின் நினைவில் கடந்த நாட்களாக நிகழ்ந்த அனைத்தும் நிழற்படமாய் காட்சியளிக்க, அதை நினைத்து சுவற்றை வெறித்து அமர்ந்திருந்த ஆழினியின் மனமானது விஜய சிவமாறனின் மேல் கோபம் கொள்ளும் பணியை வழமை போல் தொடங்கிவிட்டது.

Advertisement

Advertisement

     தன்னெதிரிலிருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவளுக்கு நேரம் இப்பொழுது காலை ஆறு மணி நாற்பது நிமிடங்கள் என்று துள்ளியமாக காட்டியது.

     “அப்பா…. நான் ரெடி…. சீக்கிரம் வாங்க….” என்று ஆதவ் கிருஷ்ணனின் குரல் மீண்டும் ஒலிக்க, அவனது ‘அப்பா’ என்ற விளிப்பில் எரிச்சலுற்றவள் தோட்டத்திலிருந்து ஒலிக்கும் ஆதவ் கிருஷ்ணனின் குரலை பின்தொடர்ந்து பால்கனி நோக்கி சென்ற ஆழினியின் கண்கள் இரண்டும் பெரிதாய் வியந்தது.

Advertisement

     தன் கழுத்தில் ஆதவ் கிருஷ்ணனை அமர வைத்து வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சமநிலையில் கயிறு தாண்டும் (ஸ்கிப்பிங்) பயிற்சியை மேற்கொண்டிருந்தான் விஜய சிவமாறன். அவனருகில் நின்று தன் மாமன் எத்தனை முறை கயிற்றை தாண்டுறார் என்று இன்பன் வாய்விட்டு எண்ணி கொண்டிருக்க, தன் தந்தையின் கழுத்தை கெட்டியாக பிடித்து கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்து கொண்டிருந்தான் ஆதவ் கிருஷ்ணன்.

     தன்‌‌ மகனின் முகத்தில் குடியிருக்கும் சிரிப்பை கண்டு ஆழினியின் முகத்திலும் புன்னகை மலர

     “இருபத்தி ஒன்பது…. முப்பது…. ப்பா, மாமா செம போங்க…. சொன்னமாதிரியே பப்பாளியை வச்சி முப்பது ஸ்கிப்பிங் பண்ணிட்டீங்களே….” என்று இன்பன் ஆச்சரியமும் வியப்பும் கலந்து கூறியதை கேட்டு குறுநகை புரிந்த விஜய சிவமாறனின் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்த ஆதவ் கிருஷ்ணனின் செயலை கண்குளிர பார்த்து கொண்டிருந்தாள் ஆழினி.

     விஜய சிவமாறன் மற்றும் ஆதவ் கிருஷ்ணனின் பற்றுதலை கண்டு சிறிது நேரத்திற்கு முன்பு எரிச்சலுற்றவள் இப்பொழுது ஏனோ ஒருவித நிறைவும் மகிழ்ச்சியும் தன்னுள் பரவுவதை ஆழினியின் மனம் அறிந்தாலும் அதை தனக்குள் பத்திரமாக பூட்டி வைத்து கொண்டு அவளிடம் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தது.

     தன் கழுத்தில் அமர்ந்திருந்தவனை தூக்கி பிடித்து செல்லம் கொஞ்சியவன் எதேச்சையாக திரும்பும் பொழுது தன்னறையின் பால்கனியில் நின்று தன்னையே பார்த்து கொண்டிருந்த ஆழினியை அப்பொழுது தான் கண்டிருந்தான்.

     நேற்றிரவு உடுத்தியிருந்த பச்சை நிறத்தில் பிங் நிற பாடர் வைத்த சிந்தட்டிக் காட்டன் புடவை உடுத்தியிருந்தவளின் தலையில் சூடியிருக்கும் மல்லிகை சரங்கள் வாடியிருந்தாலும் அவன் அணிவித்த மஞ்சள் கயிறானது அழகாக ஜொலித்து கொண்டிருக்க, உறக்கம் கலையாத முகத்துடன் கண்களை சுருக்கி கொண்டு தன்னை பார்த்திருந்த தன் மனையாளின் அழகில் சொக்கித்தான் போனான் விஜய சிவமாறன்.

     தன்னையே விழியகலாமல் பார்த்திருந்தவளின் பார்வை வீச்சிலிருந்து விடுப்பட்டவன் அவனவளை கண்டு அழகாக புன்னகைக்க, அவனது புன்னகையை கண்டதும் பெண்ணவளின் மனதில் ஒருவித படப்படப்பு தொற்றிக்கொண்டது. அதை தனக்குள் மறைத்தவாறு அவனை கண்டு புன்னகை வீசும் நேரம் தன்னவனின் மேல் கொண்ட கோபமானது நினைவு வர, சட்டென்று தன் மனநிலையை மாற்றியவள் விஜய சிவமாறனை தீயாய் முறைத்துவிட்டு அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள் பேதை பெண்ணவள்.

     ஆழினியின் செயலை கண்டு ஒருநொடி மனம் வருந்தினாலும் அதை தனக்குள் மறைத்தவன் தன் மகன் மற்றும் மச்சினனுடன் உடற்பயிற்சி செய்ய தொடங்கிவிட்டான் விஜய சிவமாறன். சிறிது நேரத்தில் உடற்பயிற்சி முடித்துவிட்டு மூவரும் இல்லத்திற்குள் நுழைய, அவர்களுக்காக இல்லத்தின் கூடத்தில் பருவதம்மா காத்திருந்தார்.

     பருவதம்மாவிடம் வேகமாக ஓடியவன் அவரருகில் அமர்ந்தவாறு

     “பரு பாட்டி, உங்களுக்கொன்னு தெரியுமா? அப்பா என்னை அவரோட கழுத்துல உக்கார வச்சி ஸ்கிப்பிங் பண்ணாங்க சூப்பராயிருந்துச்சு….” என்று ஆதவ் கிருஷ்ணன் உற்சாகமாக கூற, அவனது மழலை மொழியில் மயங்கியவர் அவனுடன் கதை பேச தொடங்க, அங்கிருந்த அனைவருக்கும் தேநீர் தயாரித்து கொண்டு வந்திருந்தாள் ஆழினி.

     லாவெண்டர் நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு நிற பூக்களால் எம்ப்ராய்டரி செய்திருந்த சல்வாரில் தேவதையாய் மின்னும் தன் மனையாளை விழியகலாமல் இரசித்தவன்

     “மனுஷன போட்டு கொல்றியே டி….” என்று விஜய சிவமாறன் தன் மனதில் நினைத்து தன்னையே மறந்திருக்க, அவனது பார்வையின் மாற்றத்தை அறிந்தவள்

     “டீ….” என்று தீப்பார்வையுடன் கராராக ஒலித்த ஆழினியின் குரலில் சட்டென்று தன்னிலை அடைந்தவன் அவள் அளித்த தேநீரை எடுத்துக்கொண்டு தன் தாயின் அருகில் சென்ற அமர்ந்துவிட்டான்.

     “டேய் பப்பாளி, வா போய் குளிக்கலாம் ஸ்கூலுக்கு டைமாச்சு….” என்று இன்பன் கூற, அவன் கூறியதை கேட்டு ஏதோ யோசித்தவன் தன்னருகில் அமர்ந்திருந்தவனிடம்

     “அப்பா, நீங்க என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று தன் நீலநிற கண்களை குறுக்கி கொஞ்சலாக வினவிய ஆதவ் கிருஷ்ணனின் கேள்வியிலும் அழகிலும் மயங்கிய விஜய சிவமாறனின் தலையும் சரியென்பதை போல் அனிச்சையாக அசைந்தது.

     “ஏன்? துரை என் கூட வரமாட்டீங்களோ? அப்பா வந்ததும் உன் பன்னு மாமாவை மறந்துட்ட பார்த்தியா?” என்று இன்பன் பொய்யான கோபத்துடன் வினவ, அவனை கண்டு அழகாக சிரித்தவன்

     “இல்ல பன்னு, என் கிளாஸ்மெட் நிதின் இருக்கான்ல அவன் தினமும் அவன் அப்பாவோட பைக்ல தான் வருவான்…. என் கிட்ட ‘நான் என் அப்பா பைக் ஓட்டிட்டே ஸ்கூல் வந்தேன், நீயெல்லாம் எப்போ அந்த மாதிரி வருவன்னு’ அடிக்கடி கேட்டு என்னை கிண்டல் பண்ணுவான்…. எனக்கும் அந்த மாதிரி போகனும்னு ஆசையா இருக்கும் பன்னு…. அதான் இன்னிக்கு அப்பா என்னோட இருக்காரே, நான் அப்பாவோட பைக் ஓட்டிட்டு போனா சூப்பராயிருக்கும்ல?” என்று ஆதவ் கிருஷ்ணன் உற்சாகமாக கூற, அவன் கூறியதை கேட்டு அவ்விடத்திலிருந்த அனைவரது மனமும் ஒவ்வொரு மனநிலையில் சுழன்று கொண்டிருந்தது.

     அவர்களில் மிகவும் பாதிக்கப்பட்டது ஆழினியின் மனம் தான். அவளுடைய ஆது கண்ணனின் மனதில் இன்னும் என்னென்ன ஆசைகளை தேக்கி வைத்திருக்கிறானோ என்று தெரியாமல் குறிப்பாக அறியாமல் இருக்கும் தன்னிலையை எண்ணி கலங்கி கொண்டிருந்தாள். இந்நிகழ்வானது அவள் மனதிற்கு கவலை அளித்தாலும் ஏதோ ஓர் முலையில் விஜய சிவமாறனுடன் தனக்கு நடந்த இத்திருமணமானது சரிதானோ என்று சிந்திக்க தொடங்கியிருந்தது.

     தன்னை சுற்றியிருப்பவர்களின் மனநிலையை அறியாத மாயக்கண்ணனோ

     “அதைவிட முக்கியமா, நீ வேணி அத்தை கிட்ட லவ்ஸ் பண்ணிட்டே வண்டி ஓட்டுவ, பார்த்தாததுக்கு பாடுறேன்னு காது கிட்ட வேற கத்துவ…. நீ லவ்ஸ் பண்றேன்னு என்னை டார்ச்சர் பண்ற பன்னு, நான் என் அப்பாவோட ஸ்கூலுக்கு போறேன்…. நீ போய் வேணி அத்தை கிட்ட லவ்ஸ் பண்ணு போ….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு இன்பன் கூச்சத்தில் நெளிய, மற்ற அனைவரும் இத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர்ந்து சிரிக்க தொடங்கிவிட்டனர்.

     “ஆழினிம்மா, நீயும் போய் கிளம்பு…. ஆது கண்ணனை ஸ்கூல்ல விட்டுட்டு நீங்க ரெண்டுப்பேரும் அப்படியே கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க….” என்று கூறிய பருவதம்மாவிடம்

     “உங்களை தனியா விட்டுட்டு எப்படிம்மா?” என்று ஆழினி வினவ, அவளிடம் பருவதம்மா ஏதோ கூற வருவதற்குள்

     “நான் தான் வந்துட்டேனே? நான் அம்மாவை பார்த்துக்குறேன் நீங்க போயிட்டு வாங்க….” என்று செல்வி அக்கா கூறி கொண்டே இல்லத்திற்குள் நுழைந்திருந்தார்.

     செல்வி அக்கா கூறியதை கேட்டு பருவதம்மா சொல்படியே கோயிலுக்கு செல்ல ஆழினி சம்மதம் தெரிவிக்க, இங்கு விஜய சிவமாறனோ திருமணம் முடிந்து இந்நிமிடம் வரை‌ ஆழினியுடன் ஒருவார்த்தை கூட பேசாமல் இருப்பதை நினைத்து வருந்தியவனுக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி மனதில் துள்ளி குதித்து கொண்டிருந்தான்.

     விஜய சிவமாறன், ஆதவ் கிருஷ்ணன் மற்றும் இன்பன் மூவரும் தயாராகி இல்லத்தின் கூடத்திலிருந்த உணவு மேசைக்கு வர, அவர்களுக்கு காலை உணவினை ஆழினி பரிமாற தொடங்கியிருந்தாள்.

     தன் தட்டிலிருந்த ரவா கேசரியையும் அதனருகில் வைத்திருக்கும் வெண்பொங்கல் மற்றும் தேங்காய் சட்டினியையும் கையிலெடுத்து ஒருவாய் உண்டவன் அதனின் சுவையில் கரைந்து

     “செல்வி அக்கா, இன்னிக்கு டிஃபன் பிரமாதம், அதுவும் இந்த கேசரி இருக்கே அட்டகாசம்…. எல்லாமே சூப்பராயிருக்கு அக்கா….” என்று விஜய சிவமாறன் கூற, அவனது பாராட்டை கேட்டதும் ஆதவ் கிருஷ்ணனுக்கு உணவினை ஊட்டி கொண்டிருந்த ஆழினியின் முறைப்பை பரிசாக பெற்றவன்

     “செல்வி அக்காவை பாராட்டுனா இவ எதுக்கு முறைக்குறா? ஒருவேளை பொசஸீவ் வந்துடுச்சோ….” என்று விஜய சிவமாறன் தன் மனதில் நினைத்து கொண்டிருக்க, அவன் தோள்களில் இடித்தவன்

     “மாமா, இன்னிக்கு சமைச்சதெல்லாம் என் அக்கா தான்…. காலையிலிருந்து அக்கா தான கிச்சன்ல இருந்தாங்க மறந்துட்டீங்களா? ‘சமையல் நல்லாயிருக்கு குட்டிம்மா பப்பிமான்னு’ ஏதாவது சொல்லி தாஜா பண்றதை விட்டுட்டு செல்வி அக்காவுக்கு பாராட்டு பத்திரிக்கை வாசிக்குறீங்க?” என்று இன்பன் இரகசிய குரலில் கூற, அவன் கூறியதை கேட்டவன் திருதிருவென முழித்து கொண்டிருந்தான்.

     விஜய சிவமாறனின் நிலையை கண்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டவன்

     “நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க போலயே? போய் உங்க பையன் கிட்ட ‘லவ்ஸ் பண்றது எப்படின்னு’ கத்துக்கோங்க….” என்று இன்பன் கூறியதை கேட்டு புரியாமல் விழித்தவன்

     “என்ன இன்பா சொல்ற?” என்று வினவியவனை கண்டு சிரித்தவன்

     “உங்க பையன் பெயர் மட்டும் கிருஷ்ணன் இல்ல, அவன் பண்ற சேட்டையும் கிருஷ்ணன் மாதிரி தான்…. அவனை சுத்தி எப்பயுமே கோபியர் படை இருந்துட்டே இருக்கும்….” என்று இன்பன் கூற, அவன் கூறியதை உண்மையாக்கும் விதமாய்

     “அம்மா, எனக்கு கொஞ்சம் கேசரி பேக் பண்ணி கொடுங்க…. என் கிளாஸ்மெட் ஜாக்லின், தர்ஷி, ஹரிணி, கஜோல், தென்றலுக்கு கொடுக்கனும்….” என்று ஆதவ் கிருஷ்ணன் ஓர் பட்டியலை கூற, அவன் கூறியதை கேட்ட விஜய சிவமாறன் மற்றும் இன்பன் இருவரும் பட்டென்று சிரித்துவிட்டனர்.

     “என்னடா ரெண்டு பேரும் தனியா சிரிக்குறீங்க?” என்று பருவதம்மா வினவ, அதே கேள்வியை தாங்கிய விழிகளுடன் தன்னை நோக்கும் ஆழினியை ஒருநொடி பார்த்துவிட்டு தன் அன்னையிடம் ஒன்றுமில்லை என்பதை போல் தலையசைத்தவன்

     “ஈவ்னிங் ரெடியா இருங்கம்மா, நாம‌ எல்லாரும் ஆறுமுகம் சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு வரலாம்….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டவன்

     “எதுக்கு மாமா?” என்று வினவிய இன்பனிடம் விஜய சிவமாறன் ஏதோ கூற வருவதற்குள்

     “உனக்கும் நீலாவுக்கும் நிச்சயம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் இன்பா…. இன்னிக்கு போய் பேசிட்டு வந்துடலாம்…. ஈவ்னிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு….” என்று ஆழினி கூறியதை கேட்டவன் தான் கூற நினைத்ததை ஒரு வரி மாறாமல் அப்படியே கூறும் தன் மனையாளை வியப்பாக பார்த்து கொண்டிருந்தான்.

     ஆழினி கூறியதை கேட்டு மனநிறைவாக புன்னகைத்தவர்

     “அதுவும் சரிதான், சீக்கிரமே இன்பாவுக்கும் நீலவேணிக்கும் கல்யாணம் பண்ணிடலாம்…. எத்தனை நாளுக்கு தான் அவங்க ரெண்டு பேரும் லவ்ஸ் பண்ணிட்டு இருப்பாங்க….” என்று பருவதம்மா நக்கலாக கூற

     “நீங்களும் என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்களா அத்தை? எல்லாம் இந்த பப்பாளியால வந்தது….” என்று இன்பன் கூறியவாறு தன்னெதிரில் அமர்ந்திருந்தவனை முறைக்க, அவனை கண்டு தன் கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்தவன்

     “பரு பாட்டி, உங்களுக்கொன்னு தெரியுமா? நேத்து நைட்டு பன்னு மாமா ஃபோன்ல வேணி அத்தைக்கு….” என்று ஆதவ் கிருஷ்ணன் ஏதோ கூற வருவதற்குள், தன் இடத்திலிருந்து வேகமாக எழுந்தவன் சுருள் முடி அழகனின் வாயை பொத்திவிட்டு

     “உன் திருவாயை மூடு ராசா, ஈவ்னிங் வரும்போது உனக்கு ஷின்சான் பொம்மை வாங்கிட்டு வரேன்….” என்று இன்பன் கூறியதை கேட்டு உற்சாகமடைந்து தன் கட்டை விரலை தூக்கி வெற்றி கூறியீடு காட்டிய ஆதவ் கிருஷ்ணன் அழகாக சிரிக்க, அவ்விருவரின் செயலை கண்டு மற்ற அனைவரும் தங்களை மறந்து சிரித்து கொண்டிருந்தனர்.

     சிரிப்பும் கலகலப்புமாக தங்களின் காலை உணவினை அனைவரும் உண்டு முடிக்க, ஆதவ் கிருஷ்ணனை தன் கரங்களில் ஏந்திய விஜய சிவமாறன் அவனை அழைத்துக்கொண்டு இல்லத்திற்கு வெளியில் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து இல்லத்தின் வாயிலில்

     “அம்மா, பன்னு, பரு பாட்டி, செல்வி ஆன்டி எல்லாரும் சீக்கிரம் வெளிய வாங்க….” என்று ஆதவ் கிருஷ்ணனின் குரல் சத்தமாக ஒலிக்க, அதை கேட்டு இன்பன், செல்வி அக்கா மற்றும் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடக்க முயலும் பருவதம்மாவின் கைப்பிடித்து வெளியில் அழைத்த வந்த ஆழினியின் கண்கள் வியப்பில் பிரகாசமாக விரிந்தது.

     கருப்பு நிற ராயல் என்ஃபில்ட் இருச்சக்கர வாகனத்தில் ஆதவ் கிருஷ்ணனை அமர வைத்து அவன் பின்னால் விஜய சிவமாறன் அமர்ந்திருக்க, அவர்கள் அருகில் உற்சாகமாக சென்றவன்

      “மாமா, உங்க கிட்ட ஆர்.இ இருக்கா? இத்தனை நாள் இதை பார்க்கவேயில்ல?” என்று வினவிய இன்பனிடம்

     “ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் எடுத்திருக்கேன் இன்பா…. பிடிச்சிருக்கா?” என்று விஜய சிவமாறன் இன்பனிடம் வினவினாலும் அவனது பார்வை தன் மனையாளிடம் நிலைத்திருக்க, அவன் கூறியதை கேட்ட ஆழினியின் தலையும் அவளுக்கு மிகவும் பிடித்த ராயல் என்ஃபில்ட் வாகனத்தை பார்த்த மகிழ்ச்சியில் தன்னவனை கண்டு அழகாக சிரித்து அன்னிச்சையாக ஆமென்பதை போல் அசைந்தது.

     அவ்விருவர்களுக்கும் நடுவில் நின்றிருந்தவன் விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் மௌனமொழி உரையாடலை கண்டுவிட்டு

     “அதுசரி, உங்க போதைக்கு நான் ஊறுகாயா? உடனே இடத்தை காலி பண்ணிடு இன்பா….” என்று மனதில் நினைத்து வேலைக்கு நேரமாவது போல் நடித்து அனைவரிடமிருந்து விடைப்பெற்று சென்றிருந்தான்.

     இன்பன் சென்ற சிறிது நேரத்திலேயே தன்னருகில் நின்றிருந்தவரிடம்

     “செல்வி அக்கா, நாங்க கிளம்பின உடனே இதுக்காகவே காத்துட்டு இருந்த மாதிரி ‘கேசரி கொண்டு வாயேன் செல்வி, வாய் நமநமன்னு இருக்குதுன்னு’ ஒருத்தவங்க கேட்பாங்க ஜாக்கிரதையா இருங்க….” என்று செல்வி அக்காவிடம் நக்கலாக கூறியவாறு ஓரக்கண்ணால் பருவதம்மாவை பார்த்து அவரது பொய்யான முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்ட ஆழினியும் அவர்களின் சம்பாஷனைகளை கண்டு சிரித்து கொண்டிருந்த விஜய சிவமாறனும் ஆதவ் கிருஷ்ணனுடன் அவர்களிடமிருந்து விடைப்பெற்று சென்றனர்.

     ஆதவ் கிருஷ்ணன் முன்னால் அமர்ந்திருக்க, அவன் பின்னால் விஜய சிவமாறனும் ஆழினியும் அமர்ந்திருந்தனர். தன் தந்தை மற்றும் தாயுடன் ஏதேதோ கதைகள் பேசியவாறு, தான் தான் வண்டி ஓட்டிக்கிறேன் என்ற கற்பனையில் தன் பள்ளி செல்லும் வழியெல்லாம் உற்சாகமாக ஆர்ப்பரித்திருந்தான் மாயக்கண்ணன். அவனின் குறும்புகளை இரசித்த விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் முகமானது மகிழ்ச்சியில் அழகாய் மலர்ந்தது.

     ஆதவ் கிருஷ்ணனின் பள்ளி வந்ததும் இருச்சக்கர வாகனத்திலிருந்து ஆழினி இறங்கி கொள்ள, தன் மகனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்

     “ஆது கண்ணா, ஈவ்னிங் நானும் அம்மாவும் இதே மாதிரி வந்து உங்களை கூட்டிட்டு போறோம்….” என்று கூறியவன் ஆழினியுடன் செலவிடும் நேரத்திற்கு விதையிட ஆரம்பிக்க, அவன் கூறுவதின் அர்த்தத்தை புரிந்தவள் விஜய சிவமாறனை முறைத்துவிட்டு ஆதவ் கிருஷ்ணனின் நெற்றியில் முத்தம் பதித்து தன்னவனுடன் தன் மகனுக்கு விடையளித்திருந்தாள்.

     ஆதவ் கிருஷ்ணன் சென்றதும் இருச்சக்கர வாகனத்தில் தனக்காக காத்திருந்த விஜய சிவமாறனை கண்டதும் ஆழினியின் மனதில் ஒருவித படப்படப்பு தொற்றிக்கொண்டது. இத்தனை நேரம் மகனின் குறும்புப் பேச்சிலும் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்திருந்தவள், தன்னவனுடன் சேர்ந்து செல்ல வேண்டிய பயணத்தைப் பற்றி சிந்திக்காமல் இயல்பாகவே இருந்தாள். ஆனால் இப்பொழுது அவனுடன் தனித்திருக்கும் இந்த நிமிடத்தை எண்ணியதும், அவளது உள்ளத்தில் ஒருவித குறுகுறுப்பும் இனம்புரியாத பரபரப்பும் தோன்றத்தான் செய்தது.

     ஆழினியின் மனநிலையை அறியாதவன் தன் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து சென்ற பயணத்தை நினைத்து குறிப்பாக தன்னவளுடன் தனியாக செலவிடப்போகும் நேரங்களை நினைத்து மகிழ்ச்சியில் விண்ணில் பறந்து கொண்டிருக்க, அதை தனக்குள் சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவாறு

     “ஆழினி….” என்று அவளது பெயரை மென்மையாக அழைத்தவனின் குரலில் சிக்குண்டவளிடம்

     “போகலாமா?” என்று விஜய சிவமாறன் வினவ, அவனிடம் சரியென்பதை போல் தலையசைத்தவள் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்த அந்நொடியில் இதுவரை கண்டிராத புதுவித உணர்வுகள் அனைத்தும் ஆழினியின் மனதில் போட்டிப்போட தொடங்கிவிட்டது.

     காலை தென்றல் இருவரின் முகத்தையும் வருடியபடி வீச, சாலையோர மரங்களும், கடந்து சென்ற வாகனங்களும், சுற்றியிருந்த மக்களும் அந்த நொடியில ஆழினியின் கவனத்தில் பதியவில்லை. அவளது முழு கவனமும் தன் முன் அமர்ந்திருந்தவனிடம் மட்டுமே நிலைத்திருந்தது.

     சில நிமிடங்கள் கடந்தபின், வேகத்தடையொன்றை கடக்கும்போது எதிர்பாராத விதமாக அவளது உடல் முன்னோக்கிச் சாய, தன்னையும் அறியாமல் அவனது தோளைப் பற்றிக் கொண்டாள். அவளது கரங்கள் தன் தோளில் பதிந்ததை உணர்ந்த விஜய சிவமாறனின் இதயம் மகிழ்ச்சியில் துள்ளினாலும், அதை வெளிக்காட்டாமல்

     “சாரி, ஸ்பீட் ப்ரேக் இருந்ததை கவனிக்கல….” என்று கூறியவனிடம்

     “ம்ம்….” என்று மெலிதாக தலையசைத்தவள் அவனது தோளிலிருந்த கைகளை எடுக்கவில்லை.

     அவளது அந்த சிறிய உரிமை, அவனுக்கோ உலகமே கிடைத்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்தது. அந்த பயணம் வெறும் இருச்சக்கர வாகனப் பயணம் மட்டுமல்ல, ஒருவரையொருவர் நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த இரு இதயங்களின் முதல் காதல் பயணமாக மாறியிருந்தது.

ஒளி வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!