மறப்பதில்லை மதிமுகம்-40
அத்தியாயம்-40
ஐந்து ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில்:
அடுத்த ஒரு வாரமும் ஆதித்யா மிகவும் பிஸியாக இருந்தான். அவன் எதிர்பார்த்த யுனிவர்சிட்டியிலிருந்து அவனுக்கு ஸ்காலர்ஷிப்புடன் கூடிய சேர்க்கை அனுமதி வந்திருந்தது. இனி அதிவேகமாக செயல்படவேண்டும், இங்கு வேலை பார்க்கும் கம்பெனியில் ரிசைன் பண்ணியிருந்தான். அங்கே அனுபவச்சான்றிதழ் மற்றும் செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கியிருந்தான்.
Advertisement
இனி சென்னை சென்று அமெரிக்க விசா நேர்காணலுக்காக காத்திருக்க வேண்டும்,
தண்மதிக்கு டியூஷன் எடுப்பதை நிறுத்தியிருந்தான். அவளைப்பார்த்து ஒரு வாரம் ஆகிறது, அவள் ஏதாவது ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு அவனைப்பார்க்க தினமும் வந்தாள், ஆனால் அவன் தான் வீட்டில் இருப்பதில்லை.
ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் தண்மதியைப் பிரியும் நாளை எண்ணி அவன் மனம் கலங்கித் தவித்து கொண்டுதான் இருந்தது.
அவளிடம் விஷயத்தை சொல்லி தனக்காக காத்திருக்கும்படி கேட்க அவன் மனம் ஏங்கியது. ஆனால் அப்படி சொல்லி படிக்கும் சின்னப் பெண்ணின் கவனத்தை கலைப்பதும் தவறு என்றும் தோன்றியது. ஒருவேளை எதிர்காலத்தில் அவளுக்கு வேறு விருப்பங்கள் வந்தால் அதற்கு முட்டுக்கட்டையாக தான் இருந்துவிடக்கூடாது என்று நினைத்தான். அதுவுமில்லாமல் அவனை நம்பி வீட்டிற்குள் அனுமதித்த வெற்றிவேல் அங்கிளுக்கு துரோகம் செய்த மாதிரி ஆகிவிடுமோ என்றும் குழம்பினான்.
Advertisement
இப்படியே யோசித்து யோசித்து கடைசியில் அவன் கிளம்பும் நாளும் வந்தது. இதற்கு மேல் தள்ளிப்போட முடியாது.
Advertisement
ஆதித்யாவைப் பொறுத்தவரை தண்மதி தான் அவனது எதிர்காலம் என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டிருந்தான். அமெரிக்கா போய் இரண்டாண்டு படிப்பை முடித்துவிட்டு அங்கேயே இரண்டு மூன்று வருடம் வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து லைஃபில் செட்டில் ஆகிவிட்டு திரும்பி வர வேண்டும். அதற்குள் தண்மதியும் படிப்பை முடித்திருப்பாள், அவளை திருமணம் செய்து தன்னுடனே அமெரிக்காவுக்கு திரும்ப கூட்டிப் போய்விடவேண்டும் என்று மனதிற்குள்ளேயே ஐந்தாண்டு திட்டம் தீட்டியிருந்தான்.(நல்லா தீட்டினான்)
அவளிடம் காத்திருக்குமாறு சொல்லாமல் சொல்வது போல் குறிப்பால் உணர்த்தவேண்டும், ஆனால் தன் விருப்பத்தை திணித்த மாதிரியும் இருக்கக்கூடாது என்று மண்டையை உடைத்து யோசித்து ஒரு பரிசைத் தயாரித்திருந்தான்.
வழக்கமாக மதி மாலை ஆறு மணிக்கு தன் செடிக்களுக்கு தண்ணீர் ஊற்றுவாள் அதை எதற்காவும் விட்டுக்கொடுக்கமாட்டாள், அப்படி ஒரு நாளில்தானே அவன் அவளைப்பார்த்ததும்.
சூரியனை இருள் விழுங்கிக் கொண்டிருந்த அந்திமாலைப் பொழுதில் எதோ புலம்பியபடியே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள் மதி.
Advertisement
சற்று நேரம் நின்று அவளையே ஆசைத்தீர பார்த்திருந்தான்.
அவள் முகம் வாட்டமாக தெரிந்தது வழக்கமான துருதுருப்பு இல்லை..
“மதி..” என்று மென்மையாக அழைத்தான்.
திடுக்கிட்டு திரும்பியவளின் முகம் நொடியில் மலர்ந்தது,
“சார்..” என்று அவனருகில் ஓடி வந்தாள்.
“எங்க போனீங்க.. எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து..” என்று குறைபட்டாள்.
“கொஞ்சம் வேலையா இருந்தேன்..” என்றவன் தன் பின்னால் ஒளித்து வைத்திருந்த சிறு பின்க் நிற கிஃப்ட் பாக்ஸை அவளிடம் நீட்டினான்.
கண்கள் விரிய
“எனக்கு கிஃப்டா..!!” என்று கேட்டபடி ஆர்வத்துடன் வாங்கினாள்.
“இதுல என்ன இருக்கு ..?”
காதின் அருகில் வைத்து ஆட்டிப்பார்த்தவளை குறுநகையுடன் பார்த்து
“ஓப்பன் பண்ணி பாரு..”என்றான்.
உள்ளே ஒரு கோல்ட்கலர் வெல்வெட் பாக்ஸும் சின்னதாக பின்க் நிறத்தில் ஒரு கார்டும் இருந்தது.
அந்த வெல்வெட் பாக்ஸில் தங்க நிறத்தில் வட்டவடிவில் பழைய ஒரு ரூபாய் நாணயத்து அளவில் பெண்டனட் ஒன்று இருந்தது.
அதை ஆர்வத்துடன் எடுத்துப்பார்த்தவள்
அதன் கண்ணாடி அடைப்புக்குள் இருந்த திசைக்காட்டியை பார்த்து,
“இது காம்பஸ்சா?”
என்று கேட்டபடி சிறு குழந்தையின் குதூகலத்துடன் நாலாப்பக்கமும் ஆட்டிப்பார்த்தாள்.
“ஆனா இது பழசு மாதிரி இருக்கே..” என்றாள் குழப்பத்துடன்.
“பழசுதான்.. நூறு வருஷம் பழமையான பிரிட்டிஷ் காலத்து ஆண்டிக் பீஸ்..
எங்க அம்மாவோட பாட்டியோடது..
எங்க கொள்ளுதாத்தா எதோ அடகுக்கடையில் இருந்து வாங்கினதாம்.. அப்படியே வழிவழியா வந்து எங்கம்மாகிட்ட இருந்தது, அவங்க எனக்கு குடுத்தாங்க..”
அவனை விழிவிரித்து நோக்கி
“இப்படி பாரம்பரியமான, செண்டிமெண்டான பொருளை எனக்கு ஏன் தரீங்க?”
‘ஏன்னா எனக்கு நீ அவ்ளோ முக்கியம்டி கிறுக்கி..’
என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு,
“எனக்கு அந்த மாதிரி செண்டிமெண்ட்லாம் இல்லை..
நான் காலேஜ் போகும் போது அம்மா இந்த காம்பஸ்ச என்கிட்ட குடுத்து, எங்க போனாலும் சரியா திசைகாட்டுற இந்த கருவிமாதிரி, எப்பவும் என்னோட இலக்குல இருந்து விலகாம சரியான பாதையில போகனும்னு சொல்லி கொடுத்தாங்க.. நானும் உனக்கு அதேயே சொல்லி தான் கொடுக்கிறேன் போதுமா..?”
“ம்ம்..” என்று உற்சாகமாக தலையாட்டியவள்,
அந்த ஆண்டிக் பீஸை விரலால் வருடினாள்.
அவன் என்னதான் பூசி மொழுகினாலும் அவனுக்கு பொக்கிஷமான ஒரு பொருளை எனக்கு அளிப்பதென்றால் நான் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லாமல் உணர்த்தியது போலதான் இருந்தது தண்மதிக்கு.
பெண்டண்டின் பின்னால் எதோ சொரசொரப்பாக தட்டுபட திருப்பிப் பார்த்தாள்.
“To my True North”என்று ஆங்கிலத்தில் பொறித்திருந்தது.
அந்த கோணல்மானலான எழுத்தைப்பார்த்து
“என்ன இது எழுத்தெல்லாம் அன்ஈவனா(uneven) இருக்கு..?” என்று கேட்டாள்.
சற்று முகம் கன்றி “அது நானே கார்வ்(carve) பண்ணது” என்றான்.
“உங்களுக்கு கார்விங் தெரியுமா..?”
“அதான் அன்ஈவனா இருக்குன்னு சொல்லிட்டியே, யூடியூப் உபயத்துல கத்துட்டு பண்ணதுதான்..”
‘அவளுக்காக மெனகெட்டு பண்ணினானா?’ என்று உவகையில் உள்ளம் துள்ளியது.
“இதுக்கு என்ன அர்த்தம்?”
அவளிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கக்கூடாது என்று மனதில் நினைத்திருந்தததால் அவனால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அதனால் எப்போதும் போல ஹிட்லர் போர்வையைப் போட்டுக்கொண்டு,
“எல்லாத்துக்கும் அர்த்தம் கேட்டுட்டே இருக்காத, கிஃப்ட் குடுத்தா வாங்கிக்கனும் இப்படி ஆராய்ச்சி பண்ணக்கூடாது” என்று சிடுசிடுத்தான்.
அவள் உதட்டைப்பிதுக்கினாள்
“தோடா ஹிட்லர் வந்துட்டாரு” என்று முணுமுணுத்தபடி அந்த பெண்டெண்டையே திருப்பி திருப்பி பார்த்து பூரித்துக்கொண்டிருந்தாள்.
அவளையே விழிகளால் விழுங்கியவன்
“பிடிச்சிருக்கா..” என்றான் மென்மையாக,
“ரொம்ப பிடிச்சிருக்கு..” அவனைப்பார்த்து மனமாற சிரித்தாள்,
அதன் பின் அந்த பெண்டண்டை பத்திரமாக பெட்டியினுள் வைத்துவிட்டு உள்ளே இருந்த அந்த சிறிய அட்டையை எடுத்துப்பார்த்தவள் முகம் சுருங்கியது
“தமிழ்ல எழுதியிருக்கு..”
“ஏன் படிக்கத்தெரியாத..?”
“தெரியும்.. ஆனா அவ்ளோ ஃபுளூயண்ட் இல்ல..”
“தமிழ் கூட படிக்கத்தெரியாதாடி தத்தி..” என்று தலையில் செல்லமாக குட்டினான்.
“நான் என்ன பண்ண..? எங்கப்பாவுக்கு எப்பபாரு டிரான்ஸ்ஃபர் ஆகிட்டே இருக்கும், நான் அஞ்சாவது வரைக்கும்தான் தமிழ் படிச்சேன்..” என்று குறைபட்டாள்.
“சுத்தம்.. அப்புறமா பொறுமையா எழுத்துக்கூட்டி படிச்சிக்கோ..” என்றான் நக்கலாக,
“இதுல என்ன இருக்குன்னு சொல்லுங்க.. எதோ கவிதை மாதிரி இருக்கே..” என்று அவள் சிணுங்கலாக கேட்க,
“ஆழிகளுக்கு அப்பாலும் பறவை மறப்பதில்லை தன் வீடு,
யுகமே ஆனாலும் மீண்டும் வந்தடைவேன் என் கூடு.”
என்று ஆழ்ந்த குரலில் படித்தான்.
“ஆழியா அப்டின்னா?“ புருவம் சுருக்கினாள்,
“முடியலடி என்னால..”
என்று அலுத்துக்கொண்டவன்,
“ஆழின்னா கடல்ன்னு அர்த்தம்..
பறவைகள்லாம் ஆயிரக்கணக்கான மையில்கள் தாண்டி பல கண்டங்கள், கடல்கள் கடந்து போனாலும் எங்கயோ இருக்கற தன்னோட வீட்டை நியாபகம் வச்சிட்டு சரியா தன் கூட்டுக்கே திரும்பி வந்துடும்..”
“ம்ம்..அப்றம்..”
“என்ன அப்றம் அவ்ளோதான்..”
“யுகம்ன்னுலாம் என்னமோ சொன்னீங்களே..அது என்ன?”
“எல்லாத்தையும் என்கிட்டயே கேளு.. உன் மூளையை எங்கயாவது கழட்டி வச்சிட்டியா?”
அவனை முறைத்துப்பார்த்து உதட்டை சுளித்தாள்.
“சரி இங்க பாரு மதி, டைம் வேஸ்ட் பண்ணாம நல்லாப்படி, எக்ஸாம் நல்லா எழுது, கண்டதை சாப்ட்டு உடம்ப கெடுத்துக்காத, எவனாவது பூ குடுத்தா வாங்காத, தனியா தெரியாத இடத்துக்கு போகாத..” என்று அவன் அட்வைஸ்களை அடுக்கிக்கொண்டே போக..
“இப்ப எதுக்கு இனிமே பாக்கவே போறதில்லங்கற மாதிரி இவ்ளோ அட்வைஸை அள்ளித் தெளிக்கிறீங்க..?”
அவன் சற்று தயங்கி,
“இன்னிக்கு நைட் நான் ஊருக்குப் போறேன் மதி..” என்றான் அவளையே ஆழப்பார்த்து,
“சரி போய்ட்டு எப்ப வருவீங்க..?” என்றாள் அப்பாவியாக.
தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்டு,
“வரமாட்டேன்.. எம்எஸ் படிக்க யூ எஸ் போறேன்..” என்றான் நிதானமாக,
ஒரு கணம் அதிர்ந்து நின்றவளின் கண்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணீர் கொட்டத்தொடங்கியது,
“சார் பிளீஸ் போகாதீங்க..”
என்றவள் சட்டென்று அவன் இடுப்பைக்கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அவனை விட்டுவிடக்கூடாதென்று கெட்டியாக பற்றிக் கொண்டாள்.
திணறிப்போனான் ஆதி,
“மதி என்ன பண்ற யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க..?” என்றான் சங்கடத்துடன்.
“நெனச்சிட்டுப்போறாங்க எனக்கு கவலையில்ல..” என்று கத்தியவள், இன்னும் அழுத்தமாக அவன் மீது ஒட்டினாள்.
“ஹேய்.. என்னை தப்பா நெனைப்பாங்கடி..”
என்று அவன் சொல்லக் கேட்டதும் தயக்கத்துடன் மெல்ல விலகினாள்.
அவள் முடியை விலக்கி அழுது கரைந்த அவளது முகத்தை துடைத்தான்.அவள் மதி முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்,அவளது விழிகளில் தன்னையிழந்து தவித்தான்.
“அங்கயே இருந்துடமாட்டேண்டி திரும்பி வருவேன்..” என்றான் சமாதானமாக,
“நிஜமாவா?”
“ம்ம்”
“எப்ப வருவீங்க..?”
“நீ காலேஜ் முடிச்சதும் வந்துடுவேன்..”
“ப்ராமிஸ்..?”
முகமெல்லாம் கண்ணாக அவனை ஏக்கத்துடன் பார்த்து கேட்டவளிடம் இதயத்தைத் தொலைத்தவன்,தன் தீர்மானங்களையெல்லாம் மறந்து,
“ப்ராமிஸ்..” என்றிருந்தான் மிகஅழுத்தமாக.
அவள் முகம் சற்று தெளிவடைந்து தேறியது போல் இருந்தது.
“இங்க பாரு காலேஜ் போய் ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பாரு, அங்க இங்க பராக்குப்பார்க்ககூடாது என்னா?” என்றான் சற்று அதட்டலாக
அவளுக்கு அது இனிய நாதமாக கேட்டது
“ம்ம்” என்றாள் முகம் சிவக்க..
அவள் முகத்தையே தீர்க்கமாக பார்த்து,
“நான் வந்துடுறேன் சரியா..?” என்றான் மென்மையாக..
அவளுக்கு அந்த கவிதை இப்போது புரிந்தது.
அவள் நெற்றியில் இதழ்பதிக்க எழுந்த பேராவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
“பை தண்மி.. ” என்று விலக முற்பட்டவனின் சட்டையை தவிப்புடன் இருவிரல்களில் மென்மையாக பற்றினாள்.
“பறவைக்காக கூடும் காத்திருக்கும்..” என்றாள் அவன் முகம் பார்த்து காற்றாகிவிட்ட குரலில் கிசுகிசுப்பாக,
அவனுக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.
கண்கள் கலங்கி மதியின் முகம் மங்கலாகத்தெரிய ஆரம்பித்தது.
சொல்லவொண்ணா தவிப்புடனும் சொல்லிலடங்கா காதலுடனும் இதயம் வலிக்க அவளைவிட்டு பிரிந்து நடந்தான். கடைசியாக எப்போது அழுதான் என்று நினைவில்லை, அவள் பார்வையிலிருந்து மறைந்தவுடன் தேம்பி அழுதிருந்தான்.
வானத்தில் மினுக்கும் நட்சத்திரங்கள் முன்னிலையில்,தண்மதியின் ரோஜா பரிவாரங்கள் சாட்சியாக அந்த மொட்டை மாடியில் இருமனங்களுக்கிடையே சத்தமில்லாமல் ஒரு காதல் பிரகடனம் அரங்கேறியிருந்தது.
அடுத்த பாகத்தில் முற்றும்…

