Skip to content
Post Views: 65
ஆதவ் கிருஷ்ணன் அருகில் அமர்ந்து அவனுடன் பேசி கொண்டிருக்கும் ஷைலஜாவை ஆழினி இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க, அவளருகில் நின்றிருந்தவன் கோபத்தில் அவ்விடம் நோக்கி வேகமாக சென்றிருந்தான்.
தன்னை நோக்கி கோபமாக நடந்துவரும் விஜய சிவமாறனை கண்டதும் நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்தவளிடம்
Advertisement
“எதுக்கு இங்க வந்திருக்க? அதான் நான் வேண்டாம்னு சொல்லி வேறொருத்தனோட பேயிட்டியே, அப்புறம் எதுக்கு மறுபடியும் என்னை தேடி வந்திருக்க?” என்று விஜய சிவமாறன் அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, அவனை ஒருநொடி பார்த்தவள் அவன் பின்னே நின்றிருந்தவளிடம்
“ஆழினி, நான் இவர் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…. உங்க பெர்மிஷன் வேணும், கிடைக்குமா? பிளீஸ்….” என்று ஷைலஜா தன் கண்களை குறுக்கி கொண்டு கெஞ்சலாக வினவ, அவளிடம் சரியென்பதை போல் தலையசைத்த ஆழினியை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
Advertisement
Advertisement
“என்ன பண்ற ஆழினி நீ? அவள் சொல்றான்னு நீயும்….” என்று விஜய சிவமாறன் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“நான் ஆதவ் கூட்டிட்டு பக்கத்திலிருக்க டேபிளுக்கு போறேன்…. நீங்க அவங்க கிட்ட பேசிட்டு வாங்க மாறன்….” என்று கூறியவள்
Advertisement
“ஆது கண்ணா, வாங்க நாம அந்த டேபிளுக்கு போகலாம்…. அப்பாவும் ஆன்டியும் பேசிட்டு வரட்டும்….” என்று கூறிய ஆழினியை கண்டு தலையசைத்தவன்
“அம்மா, இங்க பாருங்க ஆன்டி எனக்கு அவென்ஜர்ஸ் டாய் செட் வாங்கி கொடுத்தாங்களே….” என்று ஆதவ் கிருஷ்ணன் உற்சாகமாக கூறிவிட்டு
“தாங்க்ஸ் ஆன்டி…. நாளைக்கு நம்ம வீட்டுக்கு வாங்க, அங்க இதே மாதிரி நிறைய டாய்ஸ் நான் வச்சியிருக்கேன் உங்களுக்கு காட்டுறேன்….” என்று ஆதவ் கிருஷ்ணன் கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்தவாறு கூற, அவனின் மழலை மொழியில் தன்னை மறந்தவள் சிறியவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து அவனின் சுருள் முடியை கலைத்து வைத்து மென்மையாக சிரித்து வைத்தாள்.
ஆதவ் கிருஷ்ணனை அழைத்து கொண்டு அவ்விடத்திலிருந்து செல்லும் ஆழினியிடம்
“தாங்க்ஸ்….” என்று கூறிய ஷைலஜாவை கண்டு மெலிதாக சிரித்தவள் அவர்களின் மேசையை கடந்து நான்காவது மேசையில் சென்று அமர்ந்துவிட, அவர்கள் இருவரையும் ஒருநிமிடம் பார்த்துவிட்டு தன்னெதிரில் நின்றிருந்த விஜய சிவமாறனை கண்டு புன்னகைத்தவள்
“உட்கார்ந்து பேசலாமா ஷிவ்? ஜஸ்ட் டூ மினிட்ஸ்….” என்று கூறிய ஷைலஜாவை முறைத்தவாறு அவளெதிரில் அமர்ந்திருந்தான் விஜய சிவமாறன்.
தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுத்தவள்
“சாரி ஷிவ், உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன் இல்ல? உன்னை இனிமேல் நான் தொந்தரவு பண்ணமாட்டேன்…. ஆனா, எனக்கு உன் கிட்டயருந்து ‘மன்னிச்சிட்டேன்னு’ ஒரு வார்த்தை மட்டும் போதும்…. நான் சந்தோஷமா இங்கிருந்து போயிடுவேன்….” என்று ஷைலஜா நாதழுதழுக்க கூற, அவள் கூறியதை கேட்டு வலிகளுடன் சிரித்தவன்
“உன்னை பத்தின ஞாபகங்கள் எல்லாத்தையும் நான் மறந்துட்டேன், இப்போ நீ, உன்னை நம்பி ஏமாந்த ஷிவ் கிட்ட பேசல…. ஆழினியோட ஹஸ்பென்ட் விஜய சிவமாறன் கிட்ட பேசிக்கிட்டு இருக்க…. உன்னை நான் எப்போவோ மன்னிச்சிட்டேன் ஷைலஜா…. இல்லன்னா, என்னை போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டு போனப்போவே உன்னை பத்தின எல்லாத்தையும் நான் எல்லார் கிட்டயும் சொல்லியிருப்பேன்….” என்று விஜய சிவமாறன் கூற, அவனை ஷைலஜா கலங்கிய விழிகளுடன் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
“நீ இதான் சொல்லப்போறன்னு எனக்கு தெரியும் ஷிவ்…. அன்னிக்கு தான் முதன்முதலா உன் மேல எனக்கொரு அபிப்பிராயம் வந்துச்சு…. ஆனா அதுக்குள்ள எல்லாமே மாறிடுச்சு…. சாரி, நான் தான் எல்லாத்தையும் மாத்திட்டேன்….” என்று கூறி ஒருநொடி அமைதிக்காத்தவள் ஆழினியையும் அவளுடன் விளையாடி கொண்டிருக்கும் ஆதவ் கிருஷ்ணனையும் ஆசையாக பார்த்துவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்தவள்
“என்னால உன் லைஃப் ஸ்பாயிலாகிடுச்சுன்னு தினம் தினம் யோசிப்பேன் ஷிவ் ஆனா இப்போ அந்த கில்டி இல்ல…. நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்…. நான் கேட்டேன்னு என்னோட டூ மினிட்ஸ் ஸ்பென்ட் பண்ணல்ல? எனக்கு அது போதும் ஷிவ்….” என்று கூறிவிட்டு தன்னெதிரில் நின்றிருந்தவனை இறுக்கமாக அணைத்துவிட்டு
“தாங்க்ஸ் ஷிவ்…. தாங்க்ஸ் ஃபார் எவிரித்திங்க்….” என்று ஷைலஜா கூறி தன்னை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த விஜய சிவமாறனிடமிருந்து சிறிய தலையசைப்புடன் விடைப்பெற்று சென்றுவிட்டாள்.
தன் மகிழூந்தை இயக்கி கொண்டிருந்த விஜய சிவமாறனின் மனமும் மூளையும் பல்வேறு சிந்தனைகளில் சுழன்று கொண்டிருந்தது. அச்சிந்தனைகளில் ஷைலஜாவின் பங்கு இருபது சதவீதம் என்றால், மீதி எண்பது சதவீதத்தில் ஆழினி மட்டும் தான் நிறைந்திருந்தாள். காரணம், ஷைலஜா தன்னுடன் பேசிவிட்டு சென்று மூன்று மணிநேரங்கள் கடந்துவிட்டது. ஆதவ் கிருஷ்ணனின் மகிழ்ச்சியை சிதைக்க கூடாதென்று முடிவெடுத்தவன் தன் மனைவி மற்றும் மகனுடன் உயிரியல் பூங்காவை முழுமையாக சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றான். ஆனால் இந்நிமிடம் வரையிலும் ஆழினி தன்னிடம் ஷைலஜாவை பற்றி ஒருவார்த்தைக்கூட கேளாமல் ஆதவ் கிருஷ்ணனுடன் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருக்க அச்செயலானது அவனுக்கு குழப்பத்தை மட்டும் தான் பரிசளித்தது.
அதை தன் மனதிற்குள் வைத்து மருகிய விஜய சிவமாறன் இதற்கு மேலும் முடியாது என்று ஆழினியிடம் அதை பற்றி கேட்க முடிவெடுத்துவிட்டான். தன்னருகில் அமர்ந்து தன் மகனுடன் மகிழ்ச்சியாக விளையாடியவளை
“செல்லம்மா….” என்று அழைத்த விஜய சிவமாறனை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தவளிடம்
“ஷைலஜா என் கிட்ட என்ன சொன்னான்னு கேட்டமாட்டியா?” என்று வினவியவனை கண்டு சிரித்தவள்
“என்ன சொல்லியிருக்க போறாங்க? ‘நான் பண்ணதெல்லாம் தப்பு, என்னை மன்னிச்சிடுன்னு’ தான சொன்னாங்க? எனக்கு தெரியும்….” என்று கூறிய ஆழினியை இமைக்காமல் பார்த்தவனிடம்
“ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க மிஸ்டர் விஜய சிவமாறன்….” என்று நக்கலாக கூறிய ஆழினியை பொய்யாக முறைத்துவிட்டு சாலையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டான் விஜய சிவமாறன்.
தன்னவனின் செயலை கண்டு புன்னகைத்தவள்
“ஷைலஜா, என்னையும் ஆதுவையும் ஏக்கமா பார்க்குறதை பார்த்ததுமே அவங்க உங்க கிட்ட இதை தான் பேசியிருப்பாங்கன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன் மாறன்…. இதையெல்லாம் தெரிஞ்சும் ‘அவங்க உன் கிட்ட என்ன சொன்னாங்கன்னு’ நான் எதுக்கு கேட்கனும்?” என்று ஆழினி வினவ, தன் மனைவியின் புரிதலை கண்ட விஜய சிவமாறனின் மனமானது நெகிழ்ச்சியில் கரைப்புரண்டோடியது.
தன் மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு இல்லத்திற்குள் நுழைந்த விஜய சிவமாறனின் அலைபேசி அலறி கொண்டிருக்க, அதில் ஷைலஜாவின் தந்தை பத்மநாபனின் பெயர் மின்னி கொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து தன்னை அழைக்கும் பத்மநாபனின் செயலில் குழம்பியவன் அவரது அழைப்பை ஏற்றிருந்தான். அலைபேசியின் வாயிலாக பத்மநாபன் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்தவன் ஆழினியை அழைத்து கொண்டு அவரின் இல்லத்திற்கு செல்ல, அங்கு இல்லத்தின் கூடத்தில் வைத்திருந்த கண்ணாடியாலான மரப்பெட்டியில் யாராலும் கலைக்க முடியாத ஆழ்ந்த நித்திரையில் படுத்திருந்தாள் ஷைலஜா.
ஷைலஜாவின் நிலையை கண்டதும் விஜய சிவமாறனின் விழியோரம் கண்ணீர் துளிகள் பெருக ஆரம்பிக்க, அவன் அருகில் வந்தவர்
“தம்பி…. எங்க பொண்ணு எங்களை விட்டுட்டு போயிட்டா ப்பா….” என்று கூறிய பத்மநாபன் அவனை அணைத்து அழ ஆரம்பிக்க, அவரிடம் என்ன கூறுவதென்று அறியாமல் வேதனையில் தவித்தவனிடமிருந்து பிரிந்தவர்
“எப்பவும் எங்களை பார்த்தா சிடுசிடுன்னு பேசுற பொண்ணு, ஆறு மாசமா எங்களோட நல்லா தான் பேசிட்டு இருந்தா…. எல்லாத்தையும் மறந்துட்டு, குடியையும் விட்டுட்டு நல்லபடியா மாறிட்டு வரான்னு நினைச்சேன் ஆனா இன்னிக்கு தூக்க மாத்திரையை சாப்பிட்டு இப்படி….” என்று அடுத்த வார்த்தை கூற முடியாமல் தவித்தவர் அழ ஆரம்பிக்க, அவர் கூறியதை கேட்டு விஜய சிவமாறனும் அவன் அருகில் நின்றிருந்த ஆழினியும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
அவர்களின் அருகில் வந்த ஷைலஜாவின் அன்னையோ விஜய சிவமாறனின் கைகளில் ஓர் காகிதத்தை அளித்தவாறு
“அவளை ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போகும்போது ‘என் ரூம் பேபிள் மேல ஒரு லெட்டர் இருக்கு அதை ஷிவ் கிட்ட கொடுத்துடுங்கன்னு’ சொன்னா தம்பி…. இது ஷைலு உங்களுக்காக கடைசியா எழுதின லெட்டர்….” என்று ரங்கநாயகி கூறி அழ, அவரிடமிருந்த காகிதத்தை பெற்றவன் அதை படிக்க தொடங்கியிருந்தான்.
“ஷிவ்…. இந்த லெட்டர் நீ படிக்கிறன்னா அப்போ நீயும் நானும் ஒன்னா ஒரே இடத்துல தான் இருக்கோம், என்ன ஒன்னு நீ என்னை பார்ப்ப ஆனா என்னால தான் உன்னை பார்க்க முடியாது…. சின்ன வயசிலிருந்தே அம்மா அப்பவோட பாசம் எப்படியிருக்கும்னு எனக்கு தெரியாது…. நேரத்துக்கு சாப்பாடு வரும், கேட்டது கிடைக்கும், எத்தனை லட்சம் பணம் கேட்டாலும் உடனே கிடைச்சிடும் இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்துட்டு திடீர்னு என் அப்பாவும் அம்மாவும் என் மேல பாசம் வச்சு என்னை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க…. நீ ரொம்ப நல்லவன் ஷிவ், ஆனா நான் நல்லவ கிடையாது….
நான் நினைச்ச மாதிரி உன்னோட நான் வாழ்ந்தேன், எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருந்தேன் ஆனா நான் என்ன பண்ணாலும் கோபப்படாம ஒரு குழந்தையை பார்த்துக்குற மாதிரி என்னை பார்த்துக்கிட்ட, என் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம முதன்முதலா அன்பு வச்சது நீதான் தெரியுமா? உன்னை விட்டுட்டு சுமன் கூட போனேன் அவன் என்னை உடல் ரீதியா ரொம்ப காயப்படுத்திட்டான் ஏனா அவன் என் உடம்பை தான் பார்த்தான், அதேமாதிரி தான் ரிச்சர்ட்டும் என் அழகை மட்டும் தான் பார்த்தான் ஆனா நீ மட்டும் தான் என் மனச பார்த்த…. வாழ்க்கைக்கு காதலும் புரிதலும் தான் முக்கியம்னு நீ சொன்னது எனக்கு அப்போ புரியல ஆனா இப்போ…. என்ன சொல்றது? புரிஞ்சதுக்கு அப்புறம் எல்லாமே முடிஞ்சு போச்சு….
ஒரு குழந்தையை சுமக்கிறது எவ்வளவு பெரிய வரம் இல்ல? நிறைய பேருக்கு அந்த வரம் கிடைக்காம ஹாஸ்பிடலுக்கும் கோவிலுக்கும் சுத்திட்டு இருக்காங்க ஆனா எனக்கு அந்த வரம் கிடைச்சும் என் வயித்துல வளரவிருந்த குழந்தை எல்லாத்தையும் என் அழகுக்காக அழிச்சேன்…. நான் செய்த பாவத்துக்கு தண்டனையா தான் எனக்கு கேன்சர் வந்துடுச்சு போல…. ஆமா ஷிவ், எனக்கு யூட்ரெஸ்ல கேன்சர் இருக்கு, ஃபோர்த் ஸ்டேஜ்…. இப்போ அந்த கேன்சர் கொஞ்சம் கொஞ்சமா என் உடம்பு முழுக்க பரவ ஆரம்பிச்சிடுச்சு…..
ட்ரீட்மெண்ட் பண்ணாலும் பொழைக்கிறது கஷ்ட்டம்னு எனக்கு தெரியும், சின்ன வயசுல அப்பா அம்மாவோட கிடைக்காத சந்தோஷம் இப்போயாவது கிடைக்கட்டுமேன்னு அவங்களோட வந்துட்டேன், எனக்கு கேன்சர்னு அவங்க கிட்ட நான் சொல்லலை…. உனக்கு தெரியுமா ஷிவ், அவங்க என் மேல ரொம்ப பாசமா இருக்காங்க இந்த பாசத்தை சின்ன வயசிலேயே காட்டியிருந்தா நான் இந்நேரம் உனக்கு கண்டிப்பா நல்ல மனைவியா, ரெண்டு மூணு குழந்தை பெத்து சந்தோஷமா வாழ்ந்திருப்பேன்…. ஆனா அவங்களை சொல்லியும் குத்தமில்ல, இது நானா வாங்கிக்கிட்ட தண்டனை தான?
என் கடைசி ஆசை உன்னையும் உன் குடும்பத்தையும் பார்க்கனும், உன் கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு நினைச்சேன் எனக்கு உன் மன்னிப்பு கிடைச்சிடுச்சு எனக்கு அது போதும்…. நான் கொஞ்சம் கொஞ்சமா துடிதுடிச்சு சாவுறதுக்கு ஒரேயடியா செத்துடலாம்னு தான் தூக்க மாத்திரையை சாப்பிட்டுட்டேன்…. என்ன சொல்றது தெரியல ஷிவ், நேரமாக நேரமாக தூக்கம் தூக்கமா வருது…. நான்…. நான் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கேன்னு தெரிஞ்சிடுச்சு…. எவ்வளவோ தப்பு பண்ணிட்டேன் இப்போ வாழனும்னு ஆசைப்படும்போது எல்லாம் முடிச்சிடுச்சு…. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நீ இதே மாதிரி விஜய சிவமாறனா பிறக்கனும் நான் உன் செல்லம்மாவா பிறக்கனும்னு ஆசைப்படுறேன்…. என்னை மன்னிச்சிடு ஷிவ்…. நான் போறேன்…. லவ் யூ….” என்று எழுதியிருந்த கடைசி நான்கு வரிகள் ஷைலஜாவின் கண்ணீரால் கரைந்திருக்க, அதில் விஜய சிவமாறனின் கண்ணீர் துளிகளும் கலந்திருந்தது.
ஒளி வீசும்….
error: Content is protected !!