தேன் சிந்துமோ மேகம்20(2)
அத்தியாயம் – 20 -2
இரண்டு முறை மஞ்சரியை தனியே வெளியே அழைத்துச் சென்று வந்த எழிலன் மூன்றாவது முறை மஞ்சரியிடம் அம்மாவையும் கூப்பிடு எனக் கூறினான். அதைக் கேட்டு வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.
எழிலனுக்கும் நிலா தேவைப்பட்டாள். அதே சமயம் அன்றைக்கு மழை வரும் போல இருக்க, ரெயின் கோட் எல்லாம் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமே, கூடவே மஞ்சரியைப் பாதுகாப்பாகப் பிடிக்க என நிலாவை அழைத்தான்.
நிலா முதல் முறையாக எழிலனோடு செல்கிறாள். அதிலும் புல்லட்டில் செல்வது முற்றிலும் புதிது. ஆதிராவோடு சில முறை ஸ்கூட்டியில் சென்றிருக்கிறாள் அவ்வளவே. இரு பக்கம் கால் போட்டு அமரச் சொல்லி எழிலன் கூற, சிறு கூச்சத்தோடு அமர்ந்தாள் நிலா.
Advertisement
பார்க் ஒன்றில் குழந்தைக்கு ரெயின் கோட் போட்டு விட்டு, விளையாட விட்டான். பெரியவர்களும் ஜெரக்கின் அணிந்து இருந்தனர்.
நிலா மௌனமாக அமர்ந்திருக்க எழிலன் “சாரி அழகி. அன்னிக்கு உன்கிட்டே நான் அப்படி பேசியிருக்கக் கூடாது” எனக் கூறினான்.
நிலா இப்போது ஏன் என்பது போலப் பார்க்க, “அம்மா, அப்பா நெக்ஸ்ட் வீக வராங்க. இப்போ கூட நான் உன்கிட்டே பேசலைனா, நீ என்னோட வர மாட்டியோனு ஒரு பயம் தான். நீ அந்த பிளாட்லே வந்து என்னோட இருப்பியா?” எனக் கேட்டான்.
Advertisement
எழிலன் கேள்வியில் “எனக்கு உங்க கூட எங்கே இருந்தாலும் சந்தோஷம் தான். ஆனால் என்னை மட்டம் தட்டினால் எனக்குப் பிடிக்காது.” என்றாள் நிலா.
Advertisement
“சத்தியமா நான் அப்படி நினைக்கலை அழகி. என்னவோ உன் அண்ணன் ஆட்டிட்யூட் எனக்கு அப்படிப் பேச வைச்சது. அவனையும் முழுசாத் தப்புச் சொல்ல மாட்டேன். எனக்கு இந்த மாதிரி ஒரு சிபிலிங் இல்லையேனு கூட பொறாமையா இருக்கும்னு நினைக்கிறேன். இனிமேல் உன்னை அப்படிப் பேச மாட்டேன்” என்றான்.
“அப்போ என் அண்ணனைப் பேசுவீங்களா?” எனக் கேட்டாள் நிலா.
இந்தப் பாசமலர் தொந்தரவு இருக்கே என மனதிற்குள் நினைத்தான் எழிலன். வெளியில் “அப்படி இல்லை நிலா. அவன் கிட்டே அப்படித் தான் பேச வருது . பட் அது மனசில் இருந்து வராது. என்னாலே நிலவனும் எவ்வளவு மாறியிருக்கான்னு புரிஞ்சிக்க முடியும்” என்றான் எழிலன்.
Advertisement
“ம். ஆனால் மஞ்சு எப்படித் தனியா விட்டுட்டுப் போக முடியும்?”
“மஞ்சு பகலில் உங்க வீட்டில் இருக்கட்டும். நைட் நாம வந்த பிறகு கூப்பிட்டுக்கலாம்” எனக் கூற, நிலாவிற்கு இந்த ஏற்பாடு பிடித்து இருந்தது.
நிலா இல்லாமல் கூட இருந்து விடும் பெற்றோர்கள் மஞ்சு பேத்தியைக் காணாமல் தவித்து விடுவார்களே என அஞ்சினாள். நிலா இத்தனை நாள் எழிலனிடம் பேசத் தயங்கிய காரணமும் இதுதான். எழிலன் பார்வையிலிருந்து தவறும் கூற முடியாதே என நினைத்தாள். இப்போது எல்லாம் சரியாகிவிட, மனது சந்தோஷமாக இருந்தது.
நிலா தயங்கி “எழிலன், ஒரு பாட்டு பாடுங்க” எனக் கூற, எழிலன் சிரித்தான்.
ஏன் என்றால் நிலா எழிலனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது ரொம்பவே அரிது. அதை அனுபவித்தான்.
பின் “நிலவு தூங்கும் நேரம்.. நினைவு தூங்கிடாது..” என மெல்லிய குரலில் பாடினான் எழிலன்.
குழந்தை விளையாட்டு மும்முரத்தில் இவர்களைக் கவனிக்கவே இல்லை. ஏதோ பூக்கள் பறித்துத் தரையில் போட்டு பின் செடியில் வைத்து என விளையாடிக் கொண்டிருந்தாள் மஞ்சரி. தலையில் ஒரு குடை வேறு.
நிலா எழிலனின் தோளில் சாய, “அம்மாடி, அழகிக்கு எனக்கும் தோள் இருக்கிறது இப்போவாவது நியாபகம் வந்துச்சே” எனக் கூறினான்.
நிலா அவனின் தோளில் செல்லமாகத் தட்டினாள்.
எழிலன் கல்லூரியில் மணிமேகலைக்கு நடந்தைக் கூறி, அப்போது தனது அப்பா அட்வைஸ் செய்தது எல்லாம் கூறினான். பின் வந்தனா பற்றி நிலா விசாரிக்க, டெல்லியில் ஐஏஎஸ் அகாடமியில், ட்ரைனிங் பீரியட்டில் இருப்பதைக் கூறினான். மணிமேகலைக்கு வந்தனா காண்டாக்ட் நம்பர் கொடுத்திருப்பதாகவும் கூறினான் எழிலன்.
அன்றைக்கு வெளியில் குடும்பமாகச் சென்று சாப்பிட்டு விட்டுத் தான் நிலாவை அனுப்பி வைத்தான் எழிலன்.
அடுத்த வாரத்தில் எழிலன் பெற்றோர் நிலாவை முறைப்படி அழைக்க, நிலாவின் பெற்றோர் பக்கத்து கேட்டட் அபார்ட்மெண்டில் கொண்டு விட்டனர். மஞ்சரிக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஏற்கனவே பேசியபடி பகலில் மஞ்சரி தாத்தா, பாட்டியோடும் மாலையில் அம்மா, அப்பாவுடனும் வளர்ந்தாள். இன்னமும் நிலவன் ஏதாவது மஞ்சரி கேட்டால் வாங்கிக் கொடுப்பதை நிறுத்தவில்லை. என்ன எழிலனின் வாய்க்குப் பயந்து வாங்கித் தன் வீட்டில் வைத்து விடுவான்.
எழிலன் வீட்டிற்கு நிலா வந்த பின், சென்னையில் உள்ள கல்லூரியில் தங்களது டிபார்ட்மெண்ட் பேராசிரியர்களுக்கு மட்டும் சிறு விருந்து வைத்தான். அப்போது தாங்கள் கணவன், மனைவி என அறிவித்து விட்டான். ஆதிரா மட்டும் அவ்வப்போது தான் பல்பு வாங்கிய கதையை நிலாவிடம் புலம்புவாள்.
மாதம் ஒருமுறை மஞ்சரியோடு திருச்சி சென்று வருகிறார்கள் எழிலன் நிலா இருவரும். எப்போதும் போல ஒவ்வொரு செமெஸ்டெர் விடுமுறைக்கும் தங்கள் கிராமத்திற்கு குழந்தையையும் அழைத்துச் செல்கிறான் எழிலன்.
நிலவன் கூட இப்போது எல்லாம் அங்கே வர ஆரம்பித்து இருந்தான். சிவஞானம் தன் வாரிசுகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பார்க்காது என்பதால், அதை யாருக்காவது விற்று விடலாம் என நினைத்தார். எழிலன் விற்க வேண்டாம் எனக் கூறினான். ஆனால் யார் பார்ப்பது எனக் கேள்வி வந்தபோது, நிலவன் பொறுப்பேற்றுக் கொண்டான். நம்பகமான ஆளை மேற்பார்வைக்குப் போட்டான். கடை முழுதும் சிசிடிவி காமிராக்கள் வைத்து, அதன் ரெகார்டிங் எழிலன், நிலவன் இருவருக்கும் பார்க்குமாறு செய்தான். கணக்குகளை கம்ப்யூட்டர் பில்லிங் செய்து அதன் சர்வரை தனது பெர்சனல் லேப்டாப்பில் வைத்துக் கொண்டான் நிலவன். அதனால் சிவஞானம் கிராமத்திற்குச் சென்றுவிட்டார்.
நிலவன் எழிலனிடம் தனியாகச் சிக்க மாட்டான். தாத்தாவோடு இருக்கும்போது கணக்குகளை ஒப்படைத்து விட்டு வருவான். அப்படி வந்து பழகியதில் நிலவனிற்கு அந்த இடம் ரொம்பவே பிடித்து இருந்தது.
கிராமத்து வீட்டில் முற்றத்தில் அமர்ந்து வள்ளி எல்லோருக்கும் சாதம் உருட்டிக் கொடுக்க ஆனந்தமாகச் சாப்பிட்டனர் இளையவர்கள்.
எப்போதும் போல் வள்ளி எழிலனைப் பாடச் சொல்ல, தேன் சிந்துதே வானம் பாடல் பாடினான் எழிலன்.
வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
-சுபம் –
