Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-8

பருவதம்மா குடிப்பதற்கு தண்ணீரை வழங்கியவள் அவரது மாத்திரைகளை சரிபார்த்து காலை உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டியவைகளை அவரிடம் அளிந்திருந்தாள் ஆழினி. அவள் அளித்த மாத்திரைகளை விழுங்கியவரின் கண்கள் ஆழினியின் தலை முதல் பாதம் வரை ஆய்வு மேற்கொள்ள தொடங்கிவிட்டது.

கரும்பச்சை நிறத்தில் தங்க நிற பாடர் வைத்த சிந்தெட்டிக் காட்டன் புடவை ஆழினியின் நிறத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது. எப்பொழுதும் செவிலியர் உடையில் கண்டுவிட்டு இன்று புடவையில் பார்க்க அழகான தேவதையாய் காட்சியளித்தாள் அந்த பாவை. நெற்றியில் சிறு கருப்பு நிற வட்ட பொட்டும் அதற்கு மேல் சிறு கீற்றாக சந்தனமும் குறிப்பாக நெற்றி வகுட்டில் குங்குமம் இடாமலிருந்த ஆழினிக்கு திருமணமாகவில்லை என்று நம்பியிருந்தார். காதில் கல்லு வைத்த சிறு ஜிமிக்கியும் கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி மட்டுமே அணிந்திருக்க, காலின் விரல்களை நோட்டமிட்டவர் அதில் மெட்டி எதுவும் அணியப்படாமலிருப்பதை கண்டு மகிழ்ந்த பருவதம்மாவோ ஆழினிக்கு திருமணமாகவில்லை என்று நூறு சதவீதம் உறுதியாக நம்பிவிட்டார்.

பருவதம்மாவிற்கு காலை உணவை தயார் செய்த செல்வி அக்கா அவரின் அறைக்குள் கொண்டு வந்து கொடுக்க, அதை ஆழினியே பருவதம்மாவிற்கு பரிமாற தொடங்கிருந்தாள். அச்சமயத்தில் அலுவலகத்திற்கு தயாராகிய விஜய சிவமாறனும் அறைக்குள் வருகை புரிந்திருந்தான்.

“அம்மா, நான்‌ கம்பெனிக்கு போயிட்டு வரேன்…. நல்லா ரெஸ்ட் எடுங்க, நைட் நான் சீக்கிரமே வந்திடுறேன்….” என்று கூறியவன்‌ ஆழினி அமர்ந்திருந்த திசை பக்கம் திரும்பி



Advertisement

“அம்மாவை பார்த்துக்கோங்க…. எதாவது வேணும்னா செல்வி அக்கா கிட்ட கேளுங்க…. என் நம்பர் உங்க கிட்ட இருக்கா?” என்று வினவியவாறு அவளிடமிருந்து அவளது எண்ணை பெற்றுக்கொண்டு தன் அலைபேசியில் அழைப்பு விடுத்துவிட்டு

“இதான் என் நம்பர் சேவ் பண்ணிக்கோங்க…. நான் போயிட்டு வரேன் அம்மா….” என்று கூறிய சிவமாறன் அறையிலிருந்து வெளியில் சென்றுவிட, அவன் சென்ற பிறகு தன் அலைபேசியில் அவனது எண்ணை பதித்தவள்

“மாறன் சார்….” என்று விஜய சிவமாறனின் எண்ணை சேமித்து கொண்டாள் ஆழினி.

Advertisement

சிவமாறன் மற்றும் ஆழினியின் உரையாடலை கவனித்து கொண்டிருந்த பருவதம்மாவின் மனமோ அவ்விருவரின் ஜோடி பொருத்தத்தை வெகுவாக இரசிக்க தொடங்கிவிட்டது. பருவதம்மா உண்டு முடித்ததும் செல்வி அக்காவிடம் தட்டினை கொடுத்தவள் தன்னெதரில் அமர்ந்திருந்தவரிடம்

Advertisement

“உங்களுக்கு பத்து நிமிஷம் ரெஸ்ட் விடுறேன், அதுக்கு அப்புறம் நாம ஃபிசியோ ஸ்டார்ட் பண்ணலாம்….” என்று ஆழினி கூறியதை கேட்டு மிரண்டவர்

“நான் இப்போத்தான் சர்ஜரி முடிச்சே வந்திருக்கேன் அதுக்குள்ள எக்சர்சைஸா?”

“இது எக்சர்சைஸ் இல்லம்மா, நீங்க பெட்ல படுத்துக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா உங்க காலுக்கு மைல்ட் மூவ்மென்ட் தரப்போறீங்க அவ்வளவு தான்…. அப்போ தான் உங்க காலுக்கு பிளட் சர்க்குலேஷன் கிடைக்கும்….”

Advertisement

“என்னமோ போ, நீ சொல்றதை நானும் செய்றேன்….”

“என்னம்மா இப்படி சலிச்சிக்குறீங்க? நான் சொன்னதை கேட்டாத்தான் ஒரே மாசத்துல உசைன் போல்ட் மாதிரி ஓடோ ஓடுன்னு ஓட முடியும்….”

“ஏய், என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே….” என்று பருவதம்மா நக்கலாக வினவ

“ச்சே ச்சே….” என்று ஆழினி கூறியதை கேட்டு பருவதம்மா சிரிக்க, அவ்விருவரின் உரையாடலை கண்டு அறையின் வாயிலில் நின்றிருந்த செல்வி அக்கா மனநிறைவாக புன்னகைத்து வைத்தார்.

ஆழினியின் அலைபேசி அழைப்பு வந்துள்ளதாக கூறி அலறி கொண்டிருக்க, அழைப்பை ஏற்றவள் உரையாடுவதற்காக அறையிலிருந்து வெளியில் சென்றதும் அறையின் வாயிலில் நின்றிருந்த செல்வி அக்கா பருவதம்மாவின் அருகில் சென்றிருந்தார்.

“பருவதம்மா, இன்னிக்கு தான் என் மனசு ரொம்ப சந்தோஷமாயிருக்கு…. ரொம்ப நாள் கழிச்சு உங்களோட சிரிப்பை நான் பார்க்குறேன் அம்மா, மனசுக்கு ரொம்ப நிறைவாயிருக்கு….” என்று கூறிய செல்வியை கண்டு சிரித்தவர்

“எல்லாத்துக்கும் ஆழினி தான் காரணம்…. ஏன் செல்வி, ஆழினியை பத்தி நீ என்ன நினைக்குற?”

“ரொம்ப நல்ல பொண்ணும்மா…. ஒருத்தவங்கள பார்த்தாலே தெரியும் அவங்க எப்படிப்பட்டவங்கன்னு…. ஆழினியை பார்த்ததும் என்‌ மனசுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு…. நம்ம சிவா தம்பிக்கு ஆழினி தான் பொருத்தமான பொண்ணு….”

“செல்வி?”

“பத்து வருஷமா உங்களோட இருக்கேன் உங்க மனசு எனக்கு புரியாதாம்மா? உங்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது சிவா தம்பி பக்கத்துல ஆழினி நின்னுட்டு இருந்தாங்களே, அந்த நிமிஷமே அவங்க ரெண்டுப்பேரோட ஜோடி பொருத்தம் எனக்கு பிடிச்சிடுச்சு….” என்று செல்வி அக்கா கூறியதை கேட்டு பருவதம்மா சிரிக்க அவ்வறைக்குள் ஆழினி வருகை புரிந்திருந்தாள்.

“செல்வி அக்கா, பதினொரு மணிக்கு பருவதம்மாவுக்கு வெஜ் சூப் கொடுக்கனும்…. இப்போத்தான ஹாஸ்பிடலிருந்து வந்துருக்காங்க உடனே நான்-வெஜ் சாப்பிடவேண்டாம்…. ரெண்டு நாள் கழிச்சு நான்-வெஜ் எடுத்துக்கலாம்…. இன்னிக்கு லன்ச்க்கு பருவதம்மா சொல்றதை சமைங்க ஆனா ரெண்டு வகை பொறியல் இருக்கனும் முக்கியமா எதாவதொரு கீரை வகைகள் இருக்கனும் அப்புறம்….” என்று ஆழினி ஏதோ கூற வருவதற்குள்

“இலை தழையெல்லாம் போட்டு என்னை கடைசியா புல்லு திங்க வச்சிடுவ போல? வாய்க்கு ருசியா செல்வி கையால மட்டன் கும்பு செஞ்சி சாப்பிலாம்னு நினைச்சேன்….” என்று பருவதம்மா கவலையாக கூற

“ஒரு ரெண்டு மாசத்துக்கு மட்டனோட வாசனைய தவிர்க்க பாருங்க பருவதம்மா…. உங்களுக்கு பிளட் பிரஷர் கொஞ்சம் அதிகமாயிருக்கு அதுனால ஃபுட் கன்ட்ரோல் ரொம்ப அவசியம்…. செல்வி அக்கா, நீங்க நான் சொல்றதை செய்ங்க….” என்று கூறிய ஆழினி மதிய உணவிற்கான பட்டியலை கொடுக்க, அவரும் அவள் சொல்படியே சமைக்க தொடங்கிருந்தார்.

நேரங்கள் அத்தனையும் நிமிடங்களாய் கரைந்தது. மதிய உணவினை உண்டு முடித்துவிட்டு மாத்திரைகளின் உதவியால் பருவதம்மா உறங்க ஆரம்பிக்க, இங்கு ஆழினியோ பொழுது போகாமல் இல்லத்தின் கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சமையலறையிலிருந்த பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு வெளியில் வந்தவர் கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஆழினியின் அருகில் சென்றிருந்தார். செல்வி அக்காவை கண்டு மெலிதாக சிரித்தவளிடம்

“என்னம்மா ரொம்ப போர் அடிக்குதா?” என்று வினவியவரிடம்

“ஆமா செல்வி அக்கா, உட்காரவே நேரமில்லாத அளவுக்கு ஹாஸ்பிடல்ல எந்நேரமும் வேலை இருந்துட்டே இருக்கும்…. எப்போடா ஃபிரி கிடைக்கும்னு நினைப்பேன் ஆனா இப்போ வேலையே இல்லாத மாதிரி இருக்கு….”

“டிவி பார்க்கலாம்ல?”

“இன்ட்ரெஸ்ட் இல்லக்கா….”

“அப்போ புக் படிக்குறியா?”

“புக்கா? உங்க கிட்ட புக்ஸ் இருக்கா?”

“என் கிட்ட இல்ல, சிவா தம்பி கிட்ட நிறையா இருக்கு…. கீழ தான் ஸ்டடி‌ ரூம் இருக்கு…. பருவதம்மா தூங்கும்போது, இல்லன்னா ராத்திரி என் வீட்டுக்காரர் வர லேட்டாச்சுன்னா நான் புக் தான் படிப்பேன், சிவா தம்பி எதுவும் சொல்லமாட்டாரு…. ஆனா எந்த புக் எடுத்தாலும் அதை எடுத்த இடத்துல வச்சிடனும் அது தான் சிவா தம்பிக்கு பிடிக்கும்…. என் பொண்ணு இங்க வந்ததுனால தான் அவளுக்கு பொழுதுப்போக்கே புக் படிக்கிறதுன்னு மாறிடுச்சு அதுக்கு காரணம் சிவா தம்பி தான்….” என்று செல்வி அக்கா கூறியதை கேட்டு மெலிதாக புன்னகைத்தவள்

“உங்களுக்கு எத்தனை பசங்க அக்கா?” என்று வினவியவளிடம்

“ரெண்டு பசங்கம்மா…. பெரியவ ஏழாவது படிக்கிறா, சின்னவன் நாலாவது படிக்கிறான்….” என்று கூறியவர் ஆழினியை புத்தகங்கள் இருக்கும் அறைக்குள் அழைத்து சென்றார்.

பெரிதும் அல்லாது சிறிதும் அல்லாது விசாலமாக காட்சியளித்த அவ்வறையின் ஓர் மூலையில் படிப்பதற்கு மேசையும் நாற்காலியும் அமைத்திருக்க, அதன் அருகில் சற்று இடைவேளிவிட்டு சிறிய அளவிளான நீள்சாய்விருக்கையும் போடப்பட்டிருந்தது. மரத்தால் செய்யப்பட்ட ஆறு புத்தக அலமாரிகள் கொண்ட இடத்தில், நான்கு புத்தக அலமாரியில் தமிழ் புத்தகங்களும் மிதமிருந்த இரண்டு புத்தக அலமாரியில் ஆங்கில புத்தகங்களும் சிறிது முதல் பெரியது வரை அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை சிறிது நேரம் அலசியவள் நா.முத்துக்குமார் அவர்களின் புத்தகமான அணிலாடும் முன்றலில் புத்தகத்தை எடுத்துவிட்டு திரும்பும்போது அருகிலிருந்த மேசையில் அவளது கால் இடித்துவிட, அதிலிருந்து ஓர் புகைப்படம் கீழே விழுந்திருந்தது.

தன் வலது காலினை நன்றாக உதறிவிட்டு வலியை போக்க முயற்ச்சித்தவளின் கண்களில் தென்பட்டது அப்புகைப்படம். வெள்ளை நிற பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் விஜய சிவமாறனும் அவனருகில் வாடாமல்லி நிற பட்டுப்புடவையில் தலை முதல் கால் வரை அணிகலன்கள் அணிந்து சிரித்த முகத்துடன் மணமகள் கோலத்தில் அழகோவியமாய் நின்றிருந்தாள் அவள்.

புகைப்படத்தை கண்டு  மெலிதாக சிரித்தவள்‌ அதை மேசை மேல் வைத்துவிட்டு

“செல்வி அக்கா….” என்று ஆழினியின் குரல் கேட்டு அவ்விடத்திற்கு வந்தவரிடம்

“இந்த ஃபோட்டோ….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்

“இதை எங்கிருந்து ஆழினி‌ எடுத்த?” என்று பதட்டமாக வினவியவர் புகைப்படத்தை எடுத்து அங்கிருந்த ஓர் அலமாரியில் பூட்டி வைத்துவிட்டார்.

செல்வி அக்காவின் செயலை கண்டு குழம்பியவள்

“என்னாச்சு செல்வி அக்கா? அந்த ஃபோட்டோவை ஏன் அலமாரியில வச்சிட்டீங்க? அவங்க தான் சாரோட மிஸஸா? ரொம்ப அழகாயிருக்காங்க…. இப்போ அவங்க எங்கிருக்காங்க? எப்போ இங்க வருவாங்க?” என்று வினவிய ஆழினியை சோகமாக பார்த்தவர்

“என்னத்த சொல்ல ஆழினிம்மா? அந்த பொண்ணுக்கு சிவா தம்பியோட வாழ குடுத்துவைக்கல….” என்று செல்வி அக்கா கூறி முடிக்கவும் அவரது அலைபேசி அலறவும் சரியாக இருந்தது.

தன் அலைபேசியின் சத்தத்தை கேட்ட செவ்வி அக்கா அவ்விடம் நோக்கி வேகமாக செல்ல, அவர் சென்ற திசையை பார்த்தவள்

“ச்சே, நல்லவங்களுக்கு தான் ஆண்டவன் எல்லா சோதனையும் கொடுப்பான் போல…. பருவதம்மாவுக்கும் மாறன் சார்க்கும் இப்படியொரு கஷ்ட்டம் வந்திருக்க கூடாது…. இதுக்கு அப்புறம் அந்த பொண்ணு பத்தி யார் கிட்டயும் கேட்காத ஆழினி…. அது செல்வி அக்காவுக்கு மட்டுமில்ல பருவதம்மாவுக்கும் கஷ்ட்டமாயிருக்கும்….” என்று தன் மனதில் நினைத்த ஆழினியை கண்டு விதியென்னும் மாயோன் தந்திரமாய் சிரித்து கொண்டிருந்தான்.

 

ஒளி வீசும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!