Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 19ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

20. சோழத்தின் கரையில் போர்மேகம்

வான் தேவதை வெட்கப்பட்டு, தலை கவிழ்ந்தது போன்ற காலநிலை. காந்தளூர்ச்சாலை எங்கும் பன்னீர் தெளிக்கும் பெருமழை பருவம். தூவி பெய்யும் மாரி உடல் தழுவும் போது சிலிர்த்துப் உண்டாகும் உடல் துள்ளலை, அனுபவிக்கும் போது ஏற்படும் மனநிலை அற்புதமானது. மணிமுத்தாற்றின் கரைகள் தழுவியபடி, மாரி நீர் மண்ணில் புரண்டோடி  பயணிக்கும் அழகு, காண்பவர் இதயத்தைக் கொள்ளை கொள்ளும். 



Advertisement

ஆற்றின் இருக்கரைகளையும் அணைக்கும் நீரின் பிரவாகத்தை, கரை மீறாது நிறுத்தும் படி, ஓங்கி வளர்ந்து, அடர்ந்து காணப்படும் பருத்த மரங்கள், அவற்றின் கிளைகளில் கட்டிய கூட்டில், குஞ்சுகளோடு நனைந்தபடி பார்க்கும் பறவைகள்,  கரையோரம் நெருங்கி வளர்ந்து நின்ற நாணல்கள், இவற்றை ஒட்டி, ஓங்கி நிமிர்ந்து நின்ற மகேந்திரகிரி மலையின் அடிவாரத்திலிருந்த, சிறு குன்றின் பாறை ஒன்று பக்கவாட்டில் விலக, உள்ளிருந்து வெளியே வந்தான் சோழத்தின் தனிப்படைத் தலைவன் இளமாறன்.

எதிரே மணிமுத்தாறு சோ…வென்று கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது. இளமாறன் தான் வெளியேறிய இடத்தை அடையாளம் காண முற்பட்ட போது அந்த சம்பவம் கண்ணில் பட்டது. 

இளம் பெண் ஒருத்தியை புரவியில் ஒருவன் வலிந்து தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். இளமாறனின் இதயம் துள்ளியது. கண்ணெதிரில் நடக்கும் கொடுமையை சகிக்க விரும்பாத இளமாறன் மணிமுத்தாறு கரையோடு ஓடி ஏதேனும் வகையில் அக்கரை செல்ல வழி கிடைக்குமா? என்று தேடினான்.

Advertisement

எதிர்க்கரையில் புரவியில் செல்பவன் வாயு வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதே வேளையில் அவன் செல்லும் பாதையில் எதிர்புறத்தில் கிரேக்க போர் உடையணிந்து சிலர் பெரிய இயந்திரங்களை பொதி வண்டிகளில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தனர். இளமாறனுக்கு பெரும் குழப்பம் உண்டாகியிருந்தது.

Advertisement

கிரேக்க போர்வீரர்கள் எப்படி இங்கு அதிலும் தமிழ் மண்ணில் நுழைந்தனர்? என்று எண்ணியபடியே ஓடியவனுக்கு, பெண்ணை காப்பாற்றுவதா? மண்ணைக் காப்பாற்றுவதா? என்ற குழப்பம் ஏற்பட்டது. எதிரே ஒரு கானகம் தெரிய புரவியில் வந்தவன் விரைந்து அதனுள் நுழைந்தான். 

அதே வேளையில் கரையின் ஓரத்தில் இருந்து இளமாறனை நோக்கி ஓடிவந்த புரவியை கண்டதும் இளமாறனுக்கு உள்ளத்தில் இனம் புரியாத பதட்டம் ஏற்பட்டது. 

இது மணிமேகலை வளர்த்து வந்த புரவியல்லவா? அப்படியென்றால்???!!! கடத்தப்பட்டது மணிமேகலையா??!!  கடவுளே இதென்ன சோதனை என்று இதயத்தில் நினைத்தவன் தாமதியாமல் சீட்டிகை அடிக்க, புரவி அதை புரிந்து கொண்டு, இளமாறன் அதன்மீது ஏறிட தோதாக அருகில் ஓடி வந்தது.

Advertisement

ஓடியபடியே புரவியின் பிடரியை பிடித்து துள்ளி குதித்தான் இளமாறன். அடுத்த நிமிடம் புரவி மீது அமர்ந்து கடிவாளத்தை பிடித்து சேனத்தை தூண்ட, புரவி மணிமுத்தாற்றின் உள்ளே இறங்கி வேகமாக நீந்தி மறுகரையை அடைந்து வேகம் பிடித்தது.

மணிமேகலையை கவர்ந்து செல்பவனை காத தூரத்திற்கு காண இயலவில்லை. ஆனால் இளமாறனை சுமந்து சென்ற புரவி, அவளின் உடல் வாசனையை தன்னுள் உணர்ந்து கொண்டே ஓடியது. 

இரண்டு வளைவுகள் தாண்டி மூன்றாவது வளைவு ஒன்றை நெருங்கும் போது, இளமாறனுக்கு புரிந்தது, தான் காந்தளூர்ச்சாலையை சுரங்கம் வழியே வந்து அடைந்து இருப்பதாக. அதே வேளையில், புரவி சேரத்தின் பாசறை தலைவனும், தன் மாமனுமாகிய மாரப்பதேவன் இல்லத்தின் முன் நின்றது. 

புரவியில் இருந்து துள்ளி இறங்கியவன் இல்லத்திற்குள் அடிமேல் அடியெடுத்து வைத்து நுழைய முயன்ற அடுத்த வினாடி, தோளிலும் மார்பிலும் அடுத்தடுத்து இரண்டு அம்புகள் பாய்ந்து ஊடுருவ, நிலை தடுமாறிய இளமாறன் கண்கள் சொருகி கீழே சரிந்து …விழுந்தான்.  

அப்போது வீட்டிற்குள் இருந்து கையில் வில்லுடன் வெளியேறிய இரும்பொறையின் கண்கள் கோபத்தின் வெறியிலும், எதிரியை வீழ்த்திய மிதப்பிலும் தெரிந்தன. கவிழ்ந்து கிடந்த இளமாறனை தன் காலால் நிமிர்த்தி நன்றாக உற்றுப் பார்த்த இரும்பொறை 

இவனா???!! இவன் எப்படி இங்கே? பழையாறை சிறையில் அல்லவா இருந்தான் இவன்?..!! என்று சிந்தித்தான் சேரமன்னன். இளமாறனை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா அவனால்!!!? 

இருந்தாலும் இப்போது நடந்தது கூட நல்லது தான் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவன்… யாரங்கே? என்று குரல் கொடுக்க, சேரவீரர்கள் ஓடிவந்தனர். 

“இவனை வைத்திடரிடம் காட்டி சோதித்துவிட்டு, உயிரோடு இருந்தால் இருட்டு சிறையில் அடையுங்கள். இறந்து விட்டான் என்றால், பாக்குத்தோப்புக்கு உரமாக புதைத்து விடுங்கள்”. எதுவாக இருந்தாலும் எனக்கு தகவல் தரவேண்டும்”, என்று கண்டிப்பாக உத்தரவிட்டான். 

பின் திரும்பி மாரப்பதேவன் குடிசைக்குள் சென்றவன் அங்கிருந்த ஆசனத்தில் முழுமையாக மயக்கம் அடைந்திருந்த மணிமேகலையை விழுங்கி விடுவது போல பார்த்தான்.

“மணிமேகலை, இனி உன்னை என்னிடமிருந்து காப்பாற்ற யாரும் இல்லை. உன் தகப்பன் மாரப்ப தேவன், மகேந்திரகிரி காடுகளில் இந்நேரம் காட்டு விலங்குகளுக்கு இரையாகி இருப்பான். உன் மாமன் இனி உன்னைக் காக்க வரவே மாட்டான். உன்னை கொண்டு இனி மும்முடி சூடுவேன். நீயே இனி என்னுடைய ஆசை அரசி, என்னுடைய மனையாட்டி” என்று உரக்க சிரித்தான். 

மணிமேகலையை அரண்மனைக்கு கொண்டு செல்ல பணிப்பெண்களுடன் பல்லக்கு ஒன்று வந்தது. அதில் ஏற்றப்பட்ட மணிமேகலையை, சேவகர்களும், பணிப் பெண்களும் அரண்மனைக்கு கொண்டு சென்றனர். சேரன் இரும்பொறை, தன் புரவியில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். 

அதே வேளையில், குதிரை மலையில் இருந்து ஆதிரை நம்பி அரண்மனையில் அரசனை காண நின்று கொண்டிருந்தான்.

இந்துமாக் கடலும், வங்கக்கடலும் கலக்கும் மாநாக்காவரம் தீவுப் பகுதியில் ( மாநாக்காவரம் என்பது தற்போதுள்ள கிரேட் நிக்கோபார் தீவு) அன்னக் கொடிகள் ஏற்றப்பட்ட மரக்கலன்கள் வரிசைக்கட்டி நங்கூரம் பாய்ச்சி நின்றன. அதன் நடுநாயகமாயிருந்த கலன் ஒன்றில் தீவிர சிந்தனையில் இருந்தான் மீர்காலிஸ்.

பூபாள தீவில் இருந்தும் ஏதென்ஸ் துறையில் இருந்தும் புறப்பட்ட மரக்கலன்கள் இன்னமும் ஏன் வரவில்லை? அக்கோட்டஸ் தகவல் அனுப்பவில்லையே!! திட்டத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதோ? என்று குழம்பியவாறு மீர்காலிஸ் அமர்ந்திருந்தான். 

அவனது சிந்தனை முழுவதும், கிரேக்க அரசாங்கம் தமிழ் மண்ணில் அமைவதில் இருந்தது. கிரேக்க பேரரசர் தன்னிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது. எப்படியாவது கிரேக்கத்தின் அரசு தமிழ் மண்ணில் மலரவேண்டும். சேரனை போன்ற திமிர் பிடித்த மன்னர்களை எல்லாம் மிரட்டி அடக்கி வைத்து, நம்மிடம் கெஞ்ச வைக்க வேண்டும். என்றெல்லாம் ஆத்திரம் கொப்பளித்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு மரக்கலன் இந்துமாக் கடலின் எல்லையில் நுழைவதை பார்த்தான் மீர்காலிஸ். தன்னிடம் இருந்த ஒரு அராபிய தொலை நோக்கியை எடுத்து அதை பிடித்து இழுக்க அது அடுக்கடுக்காக நீண்டது. அதைக் கொண்டு எதிரில் வரும் மரக்கலனை நன்றாக கவனித்தான். வணிகர்கள் இலச்சினை கொடி மரக்கலன் கொடிமரத்தின் மீது ஏற்றப்பட்டு இருந்தது. சற்று பெரிய அளவிலான மரக்கலன் அது. 

அதன் மேல்மாடத்தில் மரக்கலன் தலைவன் அறையில் அருகே பரபரப்பு நிகழ்வதும், சேவகர்கள் அங்கும் இங்கும் ஓடுவதும் தெரிந்தது. திடீரென்று ஒருவன், கொடி மரத்தில் ஏறி அரை கொடி மரத்தில் இருந்த கண்காணிப்பு மாடத்தில் நின்றபடி, காவி நிறத்தில் ஒரு கொடியை ஏற்றினான். அதற்கு கவனிக்கவும் என்று பொருள்.  

மீர்காலிஸ் மூளை சுறுசுறுப்படைந்தது. காவிக்கொடி ஏற்றப்பட்டதும், உடனே சேரத்தின் வில் கொடியும் ஏற்றப்பட்டது. மீர்காலிஸ் தன் கலனில் இருந்த கொடி மரத்தில் பச்சை கொடியையும், அடுத்து சேரத்தின் கொடியையும் ஏற்றக் கூறினான். மீண்டும் தொலைநோக்கி வழியே பார்க்க, மரக்கலனில் இருந்து ஒரு சிறிய படகு கடலில் இறக்கப்பட்டது. 

இருவர் மரக்கலனில் இருந்து, நூலேணி மூலமாக கீழே இறங்கி படகில் குதித்தனர். பின் துடுப்பை வலித்து, மீர்காலிஸ் மரக்கலன் நோக்கி வரத் தொடங்கினர். மீர்காலிஸ் சுறுசுறுப்படைந்தான். கடலில் கொஞ்சம் இயல்பைவிட காற்று இருந்தது. அதனால் ஏற்பட்ட சுழல் அலைகள் படகு மீர்காலிஸ் மரக்கலனை அடைய சற்று நேரம் எடுத்துக் கொண்டது. 

படகு நெருங்கிவர மீர்காலிஸ் மரக்கலனில் இருந்து நூலேணி கடலை நோக்கி வீசப்பட்டது. அதை பிடித்துக்கொண்டு மேலேறி இருவரும் வந்தனர். 

இருவரில் ஒருவன் தன் கையில் இருந்த செப்புக் குழலை மீர்காலிசிடம் தந்தான். அதைப் பெற்றுக் கொண்ட மீர்காலிஸ் அதைத் திறந்து வாசிக்கத் தொடங்கினான். 

” மீர்காலிஸ் ஆண் அன்னம் மண்டையோட்டு தீவில். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து. விரைந்து சென்று புலி உலவும் காட்டை தாக்கி புலியை வீழ்த்து. பத்து நாட்களில் புலி காட்டை அடைவேன். வில்லை, நான் வந்து நாணேற்றிக் கொள்கின்றேன். விரைவாய் செயல்படு. நேரமில்லை”.

என்று எழுதி இருந்தது. மீர்காலிசிற்கு பதட்டமும், சிறிது குழப்பமும் ஏற்பட ஓலை கொண்டு வந்தவனிடம் கேள்விகள் கேட்டான்.

“இந்த ஓலையை எங்கு எப்போது பெற்றாய்!?. தலைவர் நிலை என்ன?”, என்று மீர்காலிஸ் கேட்டான்.

அந்த மாலுமி பேசத் தொடங்கினான்.

” தலைவரே சமரானிக் வளைகுடாவில் உள்ள கிரேக்க கப்பல் தளமான காராதோஸ் தீவில் தலைவர் உள்ளார். தலைவர் இந்நேரம் நூறு மரக்கலன்களுடன் புறப்பட்டு இருப்பார் என்று எண்ணுகிறேன். எங்களை அனுப்பிய இரண்டாம் நாளில் புறப்படுவதாக கூறினார். ஓலையில் உள்ளபடி மீர்காலிசை செயல்பட சொல்,  என்று மட்டும் வாய்வழி உத்தரவை எனக்கு கொடுத்தார்”, என்றான் மாலுமி. 

“சரி இப்போது உங்கள் பயணம் எங்கே?”, என்று கேட்டான் மீர்காலிஸ். 

“தங்களை சந்தித்து ஓலை ஒப்படைக்கவே முசிறிக்கு செல்லாமல் நேராக இங்கு வந்தோம். இப்போது முசிறிக்கு செல்கின்றோம்” என்றான் மற்றொருவன்.

மீர்காலிஸ் மூளைக்குள் கிளைகள் விரிந்து சிந்தனை ஓடியது. 

“சரி கொஞ்சம் பொறு. ஒரு ஓலை தருகின்றேன். முசிறியை எட்டியதும் விரைவாக இந்த ஓலையை, சேர மன்னனிடம் ஒப்படைத்து விடு. நன்றாக நினைவில் கொள். மிக அவசர தகவல். உடனே இந்த ஓலை சேர அரசரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அநேகமாக சேர மன்னன் காந்தளூர்ச்சாலை முகாமில் இருப்பான்”, என்றான்.  

“தங்கள் உத்தரவுப்படியே செய்கின்றோம்”, என்றனர் இருவரும். 

மீர்காலிஸ்  மளமளவென்று ஒரு ஓலைச் சீலையில் விபரங்கள் எழுதினான். அதை ஒரு செப்புக் குழலுக்குள் அடைத்து மூடி, வந்தவர்களிடம் ஒப்படைத்தான். உடனே இருவரும் மீர்காலிஸிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டு, தங்கள் மரக்கலனுக்குத் திரும்ப, அந்த வணிக மரக்கலன் முசிறியை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. 

மீர்காலிஸ் தன் அறைக்கு திரும்பி ஒரு வரைப்படத்தை எடுத்து, மரத்திண்டில் விரித்தான். அதில் வங்காள விரிகுடாவின் கடற்பகுதியில் உள்ள சோழ, பாண்டிய துறைமுகங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. மீர்காலிஸ் சிறிது நேரம் யோசனையில் இருந்தான். பின் ஒரு துணிச் சீலையை எடுத்து அதில் கிரேக்கத்தில் சில சங்கேத வார்த்தைகளையும் கோடுகளையும் வரைந்தான். பிறகு, அதை திரிபோல சுருட்டி எடுத்தவன், மரக்கலனின் மேல் மாடத்தில் இருந்த ஒரு கூண்டை நெருங்கினான். 

அங்கே தன் பெரிய விழிகளை உருட்டிக்கொண்டு இருந்த ஒரு கழுகை கூண்டை திறந்து, கை நீட்டி வெளியே எடுத்தவன், அதன் இறகுகளை வருட அது தன் பெரிய சிறகுகளை விரித்தது. அதன் இறக்கை இடைவெளியில் இருந்த ஒரு சிறிய அறை போன்ற இடத்தில் துணிச்சீலையை ஒளித்து வைத்துவிட்டு, தன் இடையில் இருந்து ஒரு துண்டு துணியை அதன் முன் போட்டான். 

அந்த துணியை தன் பெரிய அலகால் சிறிது நேரம் நுகர்ந்தும், கொத்தியும் கழுகு, அடையாளம் புரிந்து கொள்ள முயற்சி செய்தது. அடையாளம் கண்டு கொண்டதை உறுதி செய்ய அவன் தோளில் வந்து அமர்ந்த கழுகை பிடித்து, தன் கரங்களில் தூக்கி சுமந்தவன், நாகை துறைமுகம் இருந்த திசையை நோக்கி வானில் பறக்க விட்டான். தன் அகன்ற பெரிய சிறகுகளை விரித்த கழுகு நாகை நோக்கிப் புறப்பட்டது. 

தன் அறைக்கு திரும்பும் முன் மரக்கலன் சேவகர்கள் மூலம் சில உத்தரவுகள் இட்டான். அவர்கள் விரைந்து செயல்பட மீர்காலிஸ் மரக்கலனுக்கு கடற்படையின் முக்கிய தலைவர்கள் விரைந்தனர்.

https://youtu.be/CE5QlqoQR_E

தகவல்கள் தெளிவாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கிரேக்கப் போர்வீரர்கள் தயாராக உத்தரவு கொடுக்கப்பட, மரக்கலன்களில் இருந்த பொறிகள் சரிப் பார்க்கப்பட்டது. புத்தன் தலைத் தீவில் இருக்கும் கிரேக்க கடற்படையின் பிரிவுக்கான உத்தரவை தாங்கியபடி முதலில் ஒரு மரக்கலன் கிளம்பியது. 

நங்கூரங்கள் மேலே ஏற்றப்பட்டு, பாய்கள் கட்டவிழ்த்து விடப்பட கிரேக்க கடற்படையின் அறுபது மரக்கலன்கள் சுமார் நாற்பதாயிரம் கிரேக்க வீரர்களுடன், புகாரை நோக்கி நகரத் தொடங்கியது. புத்தன்தலை  தீவில் இருக்கும் இருபத்தைந்தாயிரம் வீரர்கள் நாகையை அடைந்து தாக்கும் நேரத்தில், நாகையிலும், புகாரை  ஒட்டிய பகுதியிலும், காடுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கிரேக்க வீரர்கள், பின்புறமிருந்து தாக்கவும் வியூகம் போட்டிருந்தான் மீர்காலிஸ்.

கிரேக்கப்படை கிளம்பிய சிறிது நேரத்தில் மாநாக்காவரம் தீவுகளின் அருகில் இருந்த பேய்த்தீவில் ( அந்தமான் தீவுக் கூட்டத்தில் இருக்கும் வைப்பர் தீவு) இருந்த ஆலிமாவின் நான்கு மரக்கலங்களும் சட்டென்று உயிர்ப்பை பெற்று பேய்த்தீவின் மலைச் சுரங்கங்களில் இருந்து வெளியே வந்தன. தீவுவாசி ஒருவன் களவரம் ஒன்றை பறக்க விட்டான். நான்கு மரக்கலன்களில் இருந்த போர்க்கருவிகளை சரிபார்க்கும் படலம் துவங்கியது. பேய்த்தீவின் பூர்வக்குடிகள் உருவாக்கியிருந்த நச்சு தோய்த்த அம்புகளும், வேல்களும், பொறிகளில் பொருத்தப்பட்டன. 

மணிமேகலையை அரண்மனையில் இருந்த தன் பொன் பஞ்சணையில் கிடத்தியிருந்த சேரன் இரும்பொறை, அவள் மீது மோகத்தில் மூழ்கியிருந்தான். ஆதிரை நம்பியை காக்க சொல்லிவிட்டு, மணிமேகலையின் மீதிருந்த மோகத்தில், சேரன் தன் வசந்த அறையில் வாலிப திமிரில் அமர்ந்திருந்தான். 

“மணிமேகலை உன்னை திருமணம் செய்து கொண்டபின் நுகர்ந்து பருக பொறுமை இல்லை. உன்னை இப்போதே அடையவேண்டும். இல்லையென்றால் பித்தனாகிப் போவேன். உன்னைப் போன்ற அழகியை, அடக்கமான ஆரழகை இத்தனை நாளாக காணாமல் விட்டு விட்டேனே? அது என் துர்பாக்யம் அல்லவா?”, என்றெல்லாம் சேரன் சிந்திக்க தொடங்கியிருந்தான். 

மெல்ல மயக்கம் தெளிந்து மணிமேகலைக்கு காட்சிகள் கண்ணில் விரிய, அதிர்ச்சியடைந்தாள். தான் சிங்கத்தின் வாயில் இருந்து தப்பிக்காமல், மீண்டும் அதனிடம் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள். அவளது பெண்மை இப்போது அவளுக்கு எச்சரிக்கை மணி அடித்து அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவித்தது. 

சேரன் விழிகள் விரிந்தது. “மணிமேகலை, விழித்து விட்டாயா? உறங்கும் போது நீ எவ்வளவு அழகு தெரியுமா? உன் பருவ துள்ளல்களை தாங்கிய உடல், நீ மூச்சை இழுத்து விடும்போது ஏறி இறங்கியதில் எனக்கு இதயத்தில் பிரளயமே ஏற்பட்டு விட்டது”, என்று பிதற்றினான் சேரன். மணிமேகலை சட்டென்று எழுந்து பஞ்சணை விட்டு இறங்கினாள். 

“அரசே! என்ன இது? தேசத்து குடிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாவலன் நீர். இப்படி ஒரு பெண்ணை கவர்ந்து கொண்டு வந்து, அவளை மயக்கமுற செய்துவிட்டு ரசித்து கொண்டிருந்தேன் என்கின்றீரே!  இது அறம் காக்கும் சேரத்து அரசனுக்கு நியாயமா? இல்லவே  இல்லை… நீர் அரசன் என்னும் தகுதிக்கே தகுதியில்லாதவர்”, என்றாள் மணிமேகலை. 

சேரன் சிரித்தான். பின் மணிமேகலையிடம் கூறினான்….

“மணிமேகலை, எதுவும் கூறிக்கொள். எனக்கு வருத்தம் இல்லை. உன்னை கவர்ந்தது தவறுதான். அதற்கு தண்டனையும் கொடு. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீ தான் என் மனையாட்டி. மாற்றமே கிடையாது” என்ற இரும்பொறை, மீது கோபத்தில் துடித்துக் கொண்டிருந்தான் ஆதிரை நம்பி வெளியே.

தொடரும்….. 

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!