Skip to content
Post Views: 374
அத்தியாயம் – 11
தலைமை அமைச்சர் இல்லம், புது தில்லி.
Advertisement
பதவியேற்ற பின் கடந்த சில மாதங்களில், ஒவ்வொரு நாளும் வசுந்தராவுக்கு புதுப்புது பிரச்சனைகள் முளைத்தன. உட்கட்சிப் பூசல், கூட்டணி கட்சிகளின் நெருக்கடி, சர்வதேச அரங்கில் அமெரிக்க அதிபர் நிகழ்த்தும் விதவிதமான அனர்த்தங்கள் என நிற்க நேரமில்லாமல் ஓடியவருக்கு தாயின் சீராட்டலும், தந்தையின் அரவணைப்பும் வெகுவாக தேவைப்பட்டது.
சித்தார்த் அருகிலிருப்பதே வசுந்தராவை ஒரு வித பதட்டத்தில் வைத்திருக்க, அதை வெளிக்காட்டாமல் சமாளிப்பது இன்னும் அவரை இறுக்கியது. தேவராஜனின் உடல்நிலையின் காரணமாக வருணன் எப்போதோ கோவை திரும்பியிருந்தார்.
Advertisement
Advertisement
அதன் பின்னரும் கட்சி அலுவல் காரணமாக சில முறை புது தில்லி சென்றவர், வசுந்தராவை சந்திக்க முயற்சிக்கவேயில்லை. எல்லாவற்றையும் விட இந்த விஷயம் வசுந்தராவிற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. வருணனின் இயல்பான பேச்சுக்களும், சீண்டல்களுமே அவருக்கான வடிகாலாயிருக்க, அதற்காக அவரது உள்மனம் வெகுவாக ஏங்கியது.
அன்று மெல்லோட்டத்திற்கு வர முடியாதென வருணனுக்கு தகவல் தெரிவிக்க மறந்ததை வசுந்தரா உணர்ந்த போது அன்றைய நாள் முடியும் தருணம். ஒரு பெருமூச்சுடன் உறங்க ஆயத்தமான போது, அலைபேசி ஓசை எழுப்ப வருணனிடம் இருந்து தான் குறுஞ்செய்தி வந்திருந்தது.
Advertisement
“அப்பா இஸ் சிக். வி ஆர் ஃப்ளையிங் டு கோவை” என்ற செய்தியைப் பார்த்த வசுந்தரா, வருணனுக்கு அழைக்க முயற்சிக்க அவரது அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.
உடனே தந்தைக்கு அழைக்க,
“என்ன வசும்மா? இன்னிக்கும் லேட் ஆயிடுச்சா?” என்று தூக்கக் கலக்கத்திலேயே வனதேவன் கேட்க,
“ம்ம்ம், ஆமாம்ப்பா. இனிமே இது தான் ரொட்டீன்னு நினைக்கிறேன்” என்றார் வசுந்தரா சோர்வாக.
“அப்ப தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே, அப்பாட்ட காலைல கூட பேசலாம்” என்ற லேசாக சிரித்த வனதேவன், படுக்கையில் எழுந்து அமர்ந்து விட்டார்.
“இல்லப்பா, க்விக்கா ஒரு விஷயம் கேட்க தான் கால் பண்ணேன். சாரிப்பா உங்க தூக்கத்தையும் கெடுக்குறேன்” என்றார் சிறிது குற்ற உணர்ச்சியுடன்.
“சேச்சே, நான் உனக்காக தான்டா சொன்னேன். அப்பா பகல்ல ஒரு குட்டித் தூக்கம் கூட தூங்கி எழுந்துடுவேன். சொல்லு, என்ன விசயம்?”
“ராஜன் மாமாக்கு என்னாச்சுப்பா? வருண் கோவை போறேன்னு மெசேஜ் போட்டிருக்காங்க. நான் கூப்பிட்டேன். ஃபோன் சுவிட்ச்ட் ஆஃப்னு வந்துச்சு” என்றார் வசுந்தரா தவிப்பாக.
“ம்ம்ம்ம், வழக்கம் போல தான்டா. பிரஷர் ஜாஸ்தி ஆகிடுச்சு. உங்க பார்ட்டி ஆஃபிஸ்லயே மயங்கி விழுந்துட்டாரு. சோ அங்க ரெஸ்ட் எடுக்க வைச்சி நம்ம டாக்டர் கிட்டயே பார்த்துக்கலாம்னு வருண் உடனே இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டாரு. நான் தான் ஏர்போர்ட்ல பிக் பண்ண டிரைவர் அனுப்பிருக்கேன்.”
“ராஜி அத்தைக்கு தெரியாதாப்பா?”
“இல்லடா, இன்னும் சொல்லல! டைரக்டா ஹாஸ்பிட்டல் தான் போனும்னு சொல்லியாச்சு. சோ, நான் நாளைக்கு மார்னிங் தான் அம்மாவையும், ராஜி அக்காவையும் கூட்டிட்டு போகணும். நாங்க எல்லாரும் இருக்கோம். பாத்துக்குறோம். நீ கவலைப்படாத” என்றார் வனதேவன் ஆதரவாக.
“சரிப்பா” என்ற வசுந்தரா சிறிது தயங்கி,
“உ…உங்களுக்கு யாருப்பா சொன்னது?” எனக் கேட்டார்.
“ஏன்மா? வருண் தம்பி தான் கால் பண்ணாரு. அவரும் இன்னிக்கி பிஸி தான் போல. ஏர்போர்ட்ல இருந்து தான் எனக்கு கூப்பிட்டாரு”
“ஓ, சரிப்பா. நீங்க பார்த்துக்கோங்க. முடிஞ்சா நான் நாளைக்கு கூப்பிடுறேன்” என்று அழைப்பை துண்டித்தவருக்கு மிகுந்த குற்ற உணர்ச்சி.
‘காலையில் ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பியிருக்கலாம்’ என நூறாவது முறையாக யோசித்தவரின் மனம், நெருக்கடியான சூழலிலும் வருணன் தனக்கு தகவல் அனுப்பியிருப்பதை எண்ணி நெகிழ்ந்து தான் இருந்தது.
அதன்பின்னர் நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தது. முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர், அமைச்சரவை கூட்டங்கள், தலைமை அமைச்சர் அறிவித்த செயல் திட்டங்கள் என சித்தார்த்தும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு தான் ஓடினார். எப்போதாவது நிகழும் ஆழ்ந்த பார்வைகளும், பெருமூச்சுகளையும் தவிர்த்து சொந்த விஷயம் குறித்து எந்த பேச்சும் இல்லை சித்தார்த்திடம். அதற்கான முயற்சியும் கூட இல்லை.
வருணன் அவ்வப்போது தகவலாக ஏதாவது குறுஞ்செய்திகள் அனுப்பினாலும், அவரிடமும் தனிப்பட்ட பேச்சுக்கள் எதுவும் இல்லை. கட்சி விசயங்கள் எல்லாம் தாராதேவியே தான் பெரும்பாலும் பேசினார்.
வெளியில் எல்லாம் சரியாக நடப்பது போல் தோன்றினாலும், அப்படி இல்லை என்று மனதினுள் எங்கோ அபஸ்வரம் தட்டியது. இரவின் தனிமையும், வெறுமையும் கொடுமையாய் இருக்க, வருணனுடன் தனிப்பட்ட நேரம் செலவிட முடியாத சூழல் அவரை வாட்டியது.
எங்கே சித்தார்த் மீண்டும் காதல் பேச்சை ஆரம்பிப்பாரோ, அதை எப்படி மறுப்பது என்பதும் அவ்வப்போது யோசனையில் வந்தது. ஆனால் சித்தார்த் அது போல் எதுவும் செய்யாமல் கடமையே கண்ணாக இருக்க, அது வேறு வசுந்தராவை குழப்பியடித்தது. என்ன நடந்தாலும், தனி வாழ்வில் ஆழ்ந்து போகும் ஆடம்பரம் இந்தியாவின் தலைமை அமைச்சருக்கு இல்லையே.
அலுவல் மட்டுமே அவருக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகி விட, லலிதாவை இன்னுமே நெருங்கியிருந்தார் வசுந்தரா.
“எப்பவுமே இப்டி நான் ஸ்டாப்பா தான் இருக்குமா லலிதா?” என்றார் ஒருநாள், கையில் இருந்த கோப்புகளை சரிபார்த்த படியே.
“ம்ம்ம், அப்டியும் சொல்ல முடியாது மேம். முன்னாடி விட இப்போ எல்லாமே ரொம்ப இண்டென்ஸ் ஆகிடுச்சு. அண்ட் நீங்க எல்லாம் உங்க கண்பார்வைல செய்யணும்னு அதிகமாவே முயற்சி பண்றீங்க. அதுவும் ஒரு ரீசன் மேம்.
மூனு மாசம் மேலயே ஆயிடுச்சே. இப்படி ராப்பகலா, வீக் எண்டும் ஃபுல்லா ஆஃபிஸ் வேலை பார்த்தா நீங்க மட்டும் இல்ல, நம்ம பி.எம்.ஓ ஃபுல்லா ரொம்ப டல் ஆகிடும் மேம். எல்லாருக்கும் ஃபேமிலி டைமுன்னும் ஒன்னு வேணுமே”
“சாரி லலிதா. நான் என்னையப் பத்தி மட்டுமே யோசிச்சிட்டு உங்களையும் கஷ்டப்படுத்துறேன்”
“நோ மேம், திஸ் இஸ் அவர் டியூட்டி. நாங்களாச்சும் நைட் வீட்டுக்குப் போயிடுறோம். பெர்சனல் டைம்னு ஏதோ ஸ்பெண்ட் பண்றோம். பட் உங்களுக்கு அந்த சேஞ் கூட இல்லைல, அதுக்காக தான் சொன்னேன், சாரி” என்றார் லலிதா அவசரமாக.
வசுந்தரா எதுவும் தவறாகப் புரிந்து கொண்டாரோ எனப் பார்க்க,
“இட்ஸ் ஓகே லலிதா. நீங்க சொல்றது கரெக்ட் தான். தாரா மேம் என்னைய தமிழ்நாட்டு எலெக்ஷன் கேம்ப்பெயின்க்கு வர சொன்னாங்க. நான் ஒரு வீகெண்ட்க்கு அங்க போய் அதை அட்டெண்ட் பண்ணிட்டு, அம்மா, அப்பாவையும் பார்த்துட்டு வர்றேன்” என்றார்.
“குட் பிளான் மேம். நான் வேணும்னா ரெண்டு நலத்திட்டங்கள் துவக்க விழாவையும் அதுல சேர்த்துடட்டுமா? அப்போ அஃபிஷியல் டிரிப் ஆகிடும்” என்றார் லலிதா, தனது கணினியில் நாட்காட்டியைப் பார்த்துக் கொண்டே.
“நீங்க அது மட்டும் ஒரு வாட்டி சித்தார்த் கிட்ட ரன் த்ரூ பண்ணிடுங்க. நான் அஃபிஷியல் வேண்டாம்னு பாக்குறேன். ஆனா சித்தார்த் முன்னாடியே எலெக்ஷன ஒட்டி இதெல்லாம் அறிவிச்சிடலாம்னு என்கிட்ட ஒரு ப்ரப்போசல் குடுத்திருந்தாரு” என்றார் யோசனையாக.
“ஒரு நிமிஷம் மேம், சார் கிட்டயே கேட்டுடலாம்” என்ற லலிதா, சித்தார்த்தை அழைத்து விட,
“எஸ் மேம்” என்று உடனே ஆஜராகி விட்டார் சித்தார்த்.
“ஒரு பெர்சனல் டிரிப் போகணும் சித்தார்த்” என்ற வசுந்தரா தனது யோசனையைக் கூற,
“எலெக்ஷன் டேட் இன்னும் வரலை மேம். இந்தத் திட்டம் அறிவிக்கிறது எல்லாம் சேர்த்துப் பண்றது பெட்டர். அதுக்குப் போனா ஒரு நாலு நாளாச்சும் போய் சவுத் ஸ்டேட்ஸ் ஒரு ரவுண்ட் அடிக்கணும். இங்கயும் உங்களுக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கே” என்ற சித்தார்த் தனது தாடையை தடவிய படி சில நிமிடங்கள் நின்றார்.
“எனக்கு ரெண்டும் குழப்ப வேண்டாம் சித்தார்த். அண்ட் எலெக்ஷன் கேம்ப்பெயின்க்கு போறதெல்லாம் கட்சி சார்பா தான் இருக்கணும். கவர்ன்மெண்ட் கணக்குல வரக் கூடாது. பெர்சனல் வொர்க் தனி தானே”
என்னவோ அந்த நினைப்பே வசுந்தராவிற்கு ஒரு ஒவ்வாமையைக் கொடுத்தது. மக்கள் வரிப்பணத்தை எப்படி தனிப்பட்ட விஷயங்களுக்கு செலவழிக்க முடியும் என்ற கேள்வி அவரைக் குடைந்தது.
“ஐ நோ மேம். ஆனா இது எல்லாரும் பண்றது தான். நீங்க இவ்ளோ யோசிக்கத் தேவை இல்லை. நீங்க எங்க போனாலும் உங்க செக்யூரிட்டி கவர்ன்மெண்ட் பொறுப்பு, பப்ளிக் எக்ஸ்பென்ஸ் தான். இந்தப் பதவிக்கான அடிப்படை செலவுகளை நாம தவிர்க்க முடியாது. குறைக்க வேணும்னா முயற்சி பண்ணலாம்.”
“ம்ம்ம்” என்ற வசுந்தராவிற்கு சித்தார்த் சொல்ல வருவது புரிந்தாலும், உடனே ஏற்க மனதில்லை.
“அதுனால தான் எல்லாத்தையும் கம்பைன் பண்ணிக்கலாம் சொன்னேன் மேம் – எஃபிசியண்ட் யூஸ் ஆஃப் பப்ளிக் பர்ஸ்” என்றார் சித்தார்த் சன்னமான சிரிப்புடன்.
இது போன்ற சிறு விசயங்கள் தானே இன்னுமின்னும் அவரை வசுந்தராவிடம் கட்டி இழுப்பது. இந்த மெல்லிய புரிந்துணர்வு தங்களது காதல் வாழ்க்கையிலும் கொஞ்சம் இருந்திருக்கலாம் என்ற ஏக்கமும் அவ்வப்போது எழாமல் இல்லை.
“எனக்கு எலெக்ஷன் டேட் அனவுனஸ் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாது சித்தார்த்”
“அப்பா, அம்மா பார்க்கணும்னா அவங்க தாராளமா இங்க வரலாமே?” என்றார் சித்தார்த் கேள்வியாக. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்ன பெரிய விசயம் என்பது போல் தான் பதிலளித்தார்.
“இல்லை, அது சரியா வராது. எனக்கு கோவை தான் போகணும்” என்றார் வசுந்தரா பிடிவாதமாக.
“ரைட், நீங்க டிசைட் பண்ணீட்டிங்கன்னா கோவை இட் இஸ் தென்! மித்த எலெக்ஷன் ரிலேட்டட் ட்ரிப் நான் தனியா பிளான் பண்றேன்” என்றவர்,
லலிதாவிடம்,
“மேடமோட வீக் எண்ட் பிளான் எல்லாம் கேன்சல் பண்ணிடுங்க லலிதா. ப்ரதாப் கிட்ட செக்யூரிட்டி அரேஞ்மெண்ட்ஸ் பத்தி சொல்லிடுங்க” என்றுவிட்டு வெளியேற எத்தனிக்க,
“சித்தார்த்” என்றார் வசுந்தரா.
அந்த இடத்திலேயே நின்ற சித்தார்த் அவரை கேள்வியாக நோக்க,
“எனக்கு எங்க வீட்ல தான் தங்கணும்” என்க, வசுந்தராவை ஆழ்ந்து பார்த்தவர்,
“அஸ் யூ விஷ் மேம்” என்று விட்டு விருட்டென வெளியேறி இருந்தார்.
நடந்ததை ஏதோ மௌனத் திரைப்படம் பார்ப்பது போல் பார்த்த லலிதாவிற்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் எதுவும் இல்லை என்பது போன்ற தோற்றத்தையே வசுந்தராவும், சித்தார்த்தும் கொடுத்தாலும், லலிதாவின் உள்ளுணர்வோ அப்படி இல்லை என்று அடித்துக் கூறியது.
ஆனால் வசுந்தரா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பது போல் எதுவும் செய்யத் துணிவில்லை லலிதாவிற்கு. பல முறை வாய் வரை வந்த வார்த்தைகளை மென்று விழுங்கியிருக்கிறார்.
வசுந்தராவிடமாவது ஏதாவது கேட்டு விடலாம். இல்லையென்றால் எப்போதாவது அரிதான தருணங்களில் தனது மனக்கிடக்கையை அவரே லலிதாவிடம் பகிர்ந்து கொள்வார். சித்தார்த்தைப் பற்றி என்றில்லை; பொதுவாக தலைமை தரும் தனிமைகளை.
ஆனால் சித்தார்த்திடம் வாயே திறக்க முடியாதே! லலிதாவிற்கு சில நேரம் முள் மேல் நிற்கும் நிலை தான். இருவருமே அவரிடம் தான் காய்ந்தால் அவரும் என்ன தான் செய்வார்.
வயதும், அனுபவமும் லலிதாவை எல்லா சூழ்நிலைகளையும் நிதானமாகவே கையாள பயிற்றுவித்திருந்தது. ஒருவேளை லலிதா நினைப்பது போல், சித்தார்த்திற்கும், வசுந்தராவிற்கும் இடையில் எதுவும் இருக்குமானால் அது அவருக்கு மிகுந்த சந்தோஷமே. இருவரையும் அருகருகில் பார்க்கும் போது, அவரையும் அறியாமல் பல நேரங்களில் நல்ல ஜோடிப்பொருத்தம் என்ற எண்ணம் எழுவதுண்டு.
error: Content is protected !!