Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 11(2)

சில நொடிகள் அது போன்றதொரு சிந்தனையில் லலிதா மூழ்கி இருக்க,

“இவர் ஏன் லலிதா இப்போ இவ்ளோ விறைப்பா போறார்?” என்க, ஒரு நிமிடம் அவர் கேட்டது கூட லலிதாவிற்கு விளங்கவில்லை.



Advertisement

“மேம்?”

“இல்ல, நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு வார்த்தைய கடிச்சு துப்பிட்டு போறார்?”

Advertisement

Advertisement

எச்சிலை விழுங்கி தன்னை சமன்படுத்திய லலிதாவிற்கு மிகுந்த அதிர்ச்சி. இது போல வசுந்தரா சித்தார்த்தை ஒரு நாளும் பேசியதில்லை. அவர் பேசிய தொனியில் ஏதோ ஒரு தனிப்பட்ட நெருக்கம் இருப்பதாகவே லலிதாவிற்கு தோன்றியது. கோபம் இல்லாத ஒரு செல்ல சலிப்பு! அப்படியாகத்தான் அவருக்கு கேட்டது. ஆனால் என்ன சொல்ல முடியும்?

“ம்ம்ம்” என தொண்டையை சரி செய்தவர், 

Advertisement

“ரிலாக்ஸ் பண்ணனும்னா பக்கத்துல வேற எங்கயும் கூட போகலாமே மேம். உங்க பேரண்ட்சையும் அதே எடத்துக்கு வர்ற மாதிரி பிளான் பண்ணிக்கலாம். அதுனால தான் சார் அப்டி சொல்லிருப்பாங்க” என்றார் லலிதா ஒரு நடுநிலையாளராக.

“அதானே, நீங்க உங்க சார்க்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க?” என்றார் வசுந்தரா கிண்டலாக.

“நோ மேம், நத்திங் லைக் தேட்” என்ற லலிதாவிற்கும் லேசான சிரிப்பு.

“அவருக்கு தான் புரியலை. உங்களுக்குமா புரியலை?”

“மேம்?”

“நான் எதுக்கு கோவை போகணும்னு சொல்றேன்னு சித்தார்த்துக்கு தெரியும் லலிதா. அவரோட டிஸ்அப்ரூவல் தான் இந்த பதில்” என்றார் வசுந்தரா தனது கோப்புகளுக்கு திரும்பியவராய்.

“மேம் என்னப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?” என்றார் லலிதா வரவழைத்த சோக முகத்துடன்.

“ஏன்?” என்றார் வசுந்தரா வேலையிலிருந்து கண்ணெடுக்காமல்.

“சித்தார்த்துக்கும், எனக்கும் புரியலை ஒத்துக்கிறேன். ஆனா சித்தார்த்துக்கு தெரியும்னு நீங்க சொன்ன விஷயம் கூட எனக்கு தெரியாது மேம். எதுவும் தெரியாம, புரியாம பி.எம்.ஓ என்னன்னு உங்களுக்கு அட்வைஸ் பண்றது சொல்லுங்க?” என்று பாவம் போல் கேட்டு வைக்க, வசுந்தரா சத்தமாக சிரித்து விட்டார்.

“ரைட், தெரியாத விஷயத்தை தெரிஞ்சு என்னாக போகுது சொல்லுங்க?” என்று சிரிப்புடனே கேட்க,

“அதையும் நீங்களே சொல்லிடுங்க மேம்” என்றார் லலிதா. அவரும் என்ன தான் செய்வார். இவர்களால் அவருக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.

“எப்போ சொன்னா புரியுமோ அப்போ சொல்றேன் லலிதா”

“நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்” என்று இயல்பாக புன்னகைத்த லலிதா,

“ஆனா உங்களோட பெர்சனல் பிளான்ஸ் ஏன் மேம் சித்தார்த் சார் டிஸ்அப்ரூவ் பண்ணனும்?” என்றார் திடீரென்று முளைத்த தீவிரத்துடன்!

அமைதியாக சில நொடிகள் லலிதாவை நிமிர்ந்து பார்த்த வசுந்தரா, எந்த பதிலும் அளிக்காமல் மீண்டும் கோப்பில் கண் பதித்தார். 

ஓரிரு நிமிடங்கள் பதிலுக்காகக் காத்திருந்த லலிதா அது கிடைக்காது என்று தெரிந்தவுடன்,

“நான் இது போய் சார்ட் அவுட் பண்றேன் மேம்” என்று வெளியேறியவர், வசுந்தராவின் அலுவலகக் கதவை அடைக்கும் முன்,

“பட் ஒன் திங் மேம். அது டிஸ்அப்ரூவல்னு எனக்கு தோனலை. பி.எம்.ஓ அட்வைசா தான் எனக்கு தோனுச்சு. மே பி, ஐ டோண்ட் நோ டு ரீட் பிட்வின் த லைன்ஸ்” என்று விட்டு போனார். 

லலிதா வெளியேறியதும் வசுந்தராவிடம் ஒரு கசப்பான முறுவல். 

‘ரீடிங் பிட்வின் த லைன்ஸ் இல்ல லலிதா. ரீட் பண்ற லைன்ஸே புரியாம தான் இருக்கு என் நிலைமை’ என சலித்துக் கொண்டவர், அலைபேசியில் தாராதேவிக்கு அழைத்து கோவை பிரச்சாரத்திற்கு தன் வருகையை உறுதிப் படுத்தினார்.

“நீங்க கேட்ட மாதிரி இந்த வீக்கெண்ட் கேம்ப்பெயின் வர்ற பிளான் ஓகே தான் மேம்” என்று வசுந்தரா கூறியதே தாரா தேவிக்குப் போதுமானதாக இருந்தது. எப்படியாவது வசுந்தராவின் முகத்தை வைத்து தனது கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் அவர்.

“எத்தனை நாள் வர்ற வசு? வேற எதுவும் சவுத்ல பிளானோட வர்றியா?” என்றார் யோசனையாக.

“இப்போ இல்ல மேம். ஜஸ்ட் உங்க கூட மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு அம்மா, அப்பாவை பார்த்துட்டு வரப் போறேன். அவ்ளோ தான்” என்று சற்று தயங்கிய வசுந்தரா,

“வேற யாருக்கும் டீடெயில் இப்போ சொல்ல வேண்டாம் மேம்” என்றார்.

“வொய்?” என்ற தாரா தேவிக்கு நெற்றி சுருங்கியது. 

“லாஸ்ட் மினிட் பிளான் எதுவும் சேஞ் ஆச்சுன்னா அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க”

“ம்ம்ம், அதுவும் சரி தான். ஆனா நீ ஃப்ர்ஸ்ட் டைம் அங்க போற. அந்த பப்ளிசிட்டி கொஞ்சமாச்சும் நான் கேப்பிடலைஸ் பண்ணனுமே” என்றார் தாராவும் விடாமல்.

“ஒன்னு பண்ணலாம். இங்க செக்யூரிட்டி கிளியரன்ஸ் வாங்கிட்டு நான் மீட்டிங் அட்டெண்ட் பண்ற மாதிரி மட்டும் அப்டேட் கொடுத்துடலாம். என்னோட மித்த பிளான் பிரைவேட்டாவே இருக்கட்டும்.”

“ரைட், அது உன்னோட திறமை. தேவாஜி உடம்பு சரியானதுக்கப்பறம் இப்ப அங்க எல்லாத்தையும் அவர் தான் ஓவர்சீ பண்றார். சோ… கண்டிப்பா எப்படியும் அவருக்கு விஷயம் போகும். அதெல்லாம் நீ தான் மேனேஜ் பண்ணிக்கணும்”

இது போல் ஒவ்வொருவராக சமாளித்து, தலைமை அமைச்சருக்காக இந்திய விமானப் படை இயக்கும் ராஜ்தூத் போயிங் 737 விமானத்தில் அமர்ந்த பின்னரே, வசுந்தராவிற்கு திட்டம் உறுதியானது போல் இருந்தது.

மூன்று மணி நேர பிராயணத்திற்குப் பின், ஒரு வெள்ளியன்று மாலை வசுந்தரா கோவை வந்த போது மண்ணின் மகளை வரவேற்க எஸ்.பி.பி கட்சி மட்டுமின்றி, பிற கட்சிகளும், பொது மக்களும் ஆவலுடன் காத்திருந்தனர். 

அடர் பச்சையில், மெல்லிய இளஞ்சிவப்பு கரை வைத்த கோரா காட்டன் புடவையில் கம்பீரமாக விமானத்தில் இருந்து இறங்கி அவர் நடந்து வர, ஏறக் கட்டியிருந்த குதிரை வால் அவர் நடைக்கேற்ப லாவகமாக ஆடியது. முன்பிருந்த நீள கூந்தலை எப்பொழுதும் கொண்டையாகக் கட்டி வைத்தாலும், பராமரிக்க நேரமில்லாததால் சில நாட்களுக்கு முன்னர் தான் குட்டையாக வெட்டி விட்டிருந்தார். அது இன்னுமே அவருக்கு அழகு சேர்த்தது எனலாம்.

வ.உ.சி பூங்கா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு நேராக வருவது போல் திட்டமிட்டு, சரியான நேரத்திற்கு வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக காத்திருந்தவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, கூட்டத்தில் கலந்து கொண்டு கிளம்பும் போது இரவு நேரம் ஆகியிருந்தது. 

அவர் வந்த நொடி முதல் கிளம்பும் வரை வருணன் வசுந்தராவை தன் பார்வை வட்டத்திலேயே தான் வைத்திருந்தார். பார்த்த நொடியே, ‘அம்மணி நல்லா இளைச்சிட்டாங்களே’ என்று தான் தோன்றியது வருணனுக்கு. ‘பார்றா, ஹேர்ஸ்டைல் எல்லாம் மாத்தி, மேடம் இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் கணக்கா இருக்காங்களே’ என்றும் எண்ணம் ஓடியது.

ஆனால் எதுவும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடிமட்டத் தொண்டரோடு ஒருவராக கீழே தான் அமர்ந்திருந்தார் வருணன். என்றும் அவர் பொதுவில் முகம் காட்டுவதில்லை. தாராதேவியும், தேவராஜனும் மேடையில் இருக்க தமிழக ஆளுங்கட்சி சார்பாக உதயனும் வந்திருந்தார்.

முதலமைச்சர் வருவதாக இருந்ததில் கடைசி நேர மாற்றமாக உதயன் வந்திருந்தார். வசுந்தரா அருகில் அமர்ந்து கேள்வியாக கேட்டு அவர் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொண்டிருந்தார். 

எதையும் முகத்தில் காட்டாமல் வசுந்தரா புன்னகையுடன் பதிலளித்தாலும், அவர் பல்லைக் கடிப்பதை இங்கிருந்தே வருணனுக்கு உணர முடிந்தது. எல்லாவற்றையும் எந்த குறுக்கீடும் இல்லாமல் இரசித்துப் பார்த்திருந்தார்.

கூட்டம் முடிந்த பின்னர், ப்ரதாப் சிங் பாதுகாப்பாக அவரை அழைத்துச் செல்ல வாகனம் வரை வந்த வசுந்தரா, வழியனுப்ப வந்த தேவராஜனிடம் ஒரு இறைஞ்சல் பார்வை பார்த்தார்.

“என்னங்க அம்மணி? மாமா நல்லா தான் இருக்கேங்க. நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்க” என்றார்.

“மாமா, நான் வீட்டுக்கு தான் போறேன். நீங்க தாரா மேடமை அனுப்பிச்சிட்டு அங்க வரமுடியுமா?”

“அப்படியா ரொம்ப சந்தோசம், இதெல்லாம் நீங்க கேக்கணுமா கண்ணு” என்று செல்லமாக கோபித்துக் கொண்டார் தேவராஜன்.

“அப்புறம் இன்னொரு விசயம்” என்று வசுந்தரா கண்ணை நாலா பக்கமும் சுழற்ற, தாரா தேவியின் அருகில் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்த வருணன் தென்பட்டார். 

வசுந்தரா இன்னும் கிளம்பாமல் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்க, என்னவென்று பார்த்தபடி இருந்தார். வசுந்தரா காதில் கூறியதை கேட்டபடி தேவராஜன் மகனை வரும்படி சைகை செய்ய, வேகமாக அருகில் வந்த வருணன் வசுந்தராவை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே,

“என்னப்பா? எதுவும் பிரச்சனையா?” என்றார்.

“இல்லை கண்ணு. அம்மணி நம்ம வீட்டுக்கு தான் வருதாம். உன்னைய கூட்டிட்டு போக சொல்லுது. பார்த்துக்கோ” என்றவர், மற்றவர் கவனம் கலைக்காமல் உதயனுடனும், தாரா தேவியுடனும் இணைந்து கொண்டார். 

‘என்ன நடக்கிறது?’ என்பது போல் பார்த்து நின்ற ப்ரதாப்பிடம் வந்த வசுந்தரா,

“ப்ரதாப் நான் வருண் கூட கார்ல ஒரு குட்டி டிரைவ் போயிட்டு எங்க வீட்டுக்கு போகணும்” என்றார்.

சில நொடிகள் யோசித்து, 

“சார் உங்க கார்ல வரட்டும் மேம். நாங்க ஃபாலோ பண்றோம்” என்றார் ப்ரதாப் அரைமனதாக. 

“இது அவரோட ஊர் ப்ரதாப். நான் அவர் கார்லயே வர்றேனே. நீங்க பின்னாடி வந்தா ஓகே தான்” 

“சாரி மேம். அது செக்யூரிட்டி ரிஸ்க். என்னால அலோவ் பண்ண முடியாது”

ஒரு பெரு மூச்சை இழுத்து விட்ட வசுந்தரா,

“அட்லீஸ்ட் எனக்கு அலாட் பண்ணிருக்குற கார் அவர் ஓட்டட்டுமே. நீங்க க்ளோசாவே ஃபாலோ பண்ணுங்க!” என்றார் கையைக் கட்டிக் கொண்டு பிடிவாதமாக. இந்த சில மாதங்களில் ப்ரதாப்புக்கு இந்தத் தோரணை நன்றாக பழகி விட்டிருந்தது. 

இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசிட முடியாது என்று முடிவு செய்தவர் தனது குழுவுடன் சில நிமிடங்கள் கலந்தாலோசித்து, அருகில் இருந்த தமிழக காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் பேசிய பின்னரே ப்ரதாப் அதற்கு ஒத்துக் கொண்டார்.

வருணன் எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை. கருத்தும் பகிரவில்லை. அமைதியாக நடப்பதை பார்த்திருந்தார். எல்லாரையும் சரிக்கட்டி ஒருவாறு வசுந்தரா அவருடன் வாகனத்தில் ஏறிக் கொள்ள, ‘எங்கே செல்ல வேண்டும்’ என்பது போல் இடப்பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். 

திடலை விட்டு வாகனம் வெளியில் வந்து பிரதான சாலைகளைத் தாண்டியது. கிளை சாலை வரும் வரை பொறுத்திருந்த வசுந்தரா,  

“சார் பேசினா முத்து உதிர்ந்திடுமா?” எனப் பொறுமியபடி, 

“மருதமலை போலாம் வரு” என்றுவிட்டு, இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார். வருணன் ஒரு நொடி ஆச்சரியமாக அவரைப் பார்த்து விட்டு, மருதமலை சாலையில் வாகனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இரவு நேரமென்பதால் போக்குவரத்து குறைவாகவே இருக்க, ஓட்டுனர் இருக்கை அருகில் வசுந்தரா அமர்ந்திருந்தாலும், அவர்களை பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடந்தாலும், வசுந்தராவுக்கு சில மாதங்களாக கிட்டாத ஒரு விடுதலை உணர்வு கிட்டியது. 

கண்களை மூடியவாறே “ஐ மிஸ்ட் திஸ்” என்றார் வருணனிடம்.

“மீ டு டார்லிங்” என்றார் வருணன் சிரிப்புடன். 

“நான் டிரைவை சொன்னேன்” என்றார் வசுந்தரா சற்று வீம்பாக.

“நானும் டிரைவைத் தான் சொன்னேன். நீ என்ன நினைச்ச?” என்று வசுந்தராவை சீண்ட, அவர் நெற்றிக்கண்ணைத் திறந்து விட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!