Skip to content
Post Views: 290
அத்தியாயம் – 13
வனதேவன் இல்லம், கோவை.
Advertisement
இரவு நேரமானாலும் ஆலம் சுற்றியே மகளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் அஞ்சலி. வனதேவன் வசுந்தராவை தோளோடு அணைத்துக் கொண்டு வர, எல்லாவற்றையும் புன்சிரிப்புடன் பார்த்திருந்தார் வருணன். அவர் அருகில் தேவராஜனும், ராஜேஸ்வரியும் ஆவலுடன் காத்திருக்க, கூட வந்து நின்ற ப்ரதாப் சிங்கிற்கே அந்தக் காட்சி பாந்தமாய் தோன்றியது.
வனதேவன் இல்லத்தில் வசுந்தரா வருவதற்கு முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டிருக்க, ப்ரதாப் மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் சரிபார்த்த பின்னரே வெளியில் வந்தார். அங்கிருந்த சிறிய விருந்தினர் இல்லம் தற்காலிகமாக சிறப்பு பாதுகாப்புப் படை கூடம் ஆகியிருந்தது.
Advertisement
Advertisement
ப்ரதாப் கிளம்பியதும், வருணன் ‘ப்பூஊஊ’ என நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்ற, வசுந்தரா அவரை முறைத்தார்.
அஞ்சலி தான் அங்கு அரங்கேறிய மௌன நாடகத்தை கலைத்தவராய்,
Advertisement
“ஏன்டி முன்னாடியே வர்றேன்னு சொல்றதுக்கு என்ன? நான் உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சி வச்சிருப்பேன்ல. தம்பி கூட கூட்டத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டார். நீயானா வாயே திறக்கல” என குறைபடித்தார். தலைமை அமைச்சர் என்றாலும், அம்மாவுக்கு மகள் தானே. கிடைத்த வாய்ப்பில் அர்ச்சனையை ஆரம்பித்து விட்டார் அஞ்சலி.
ராஜி தான் மருமகளுக்கு பரிந்து வந்தவராய்,
“என்ன அஞ்சலி நீ? புள்ள களைச்சிப் போய் வந்திருக்கு. அதை கவனிக்காம நிக்க வைச்சி கேள்வி கேட்குற, நீ வா கண்ணு” என்றவர், வசுந்தரா கை பிடித்து உணவு மேசைக்கு அழைத்துச் சென்றார்.
மளமளவென உணவையும் எடுத்து வைக்க, அஞ்சலியோ,
“நீங்களுமா அண்ணி? இவளுக்கு எல்லாரும் இப்டி செல்லம் கொடுத்துத் தான் கெடுத்து வைச்சிருக்கீங்க. ஆளப் பார்த்தீங்களா? எப்டி இருக்கான்னு? சாப்பிடுறாளா இல்லையான்னே தெரியல. கண்ணுக்குக் கீழே எல்லாம் கருத்துப் போயிருக்கு. முடி எப்படி இருக்கும்?… அத எப்படி வெட்டி வைச்சிருக்கான்னு பாருங்க” என்று புலம்பித் தள்ளினார்.
“மா, இப்போ இது தான் பிரச்சனையா? உங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு. இந்த வேலைல லீவெல்லாம் கிடையாதுங்கமா. 24×7 ஆன் டியூட்டி தான்.
எப்ப என்ன பிளான் மாறும்னு தெரியாது. உங்க கிட்ட சொல்லி அப்புறம் வர முடியாது போயிடுச்சுன்னா ஃபீல் பண்ணுவீங்களேன்னு தான் சொல்லாம சர்ப்ரைஸ்” என்ற கண் சிமிட்டி, அன்னையை அணைத்து முத்தமிட்டு சரிக்கட்டிய வசுந்தரா, ராஜியிடம் திரும்பி,
“அத்த, வருண் வர்ற வழியிலயே சாப்பாடு வாங்கி கொடுத்துட்டார். எனக்கு பெருசா பசிக்கல. ரொம்ப லைட்டா ஏதாச்சும் கொடுங்க” என்றார்.
“சரி கண்ணு” என்றவர், வசுந்தரா தட்டில் இரண்டு இடியாப்பம் மட்டும் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றினார்.
வசுந்தரா உண்ண ஆரம்பிக்க, வருணனோ,
“மா, மருமக கண்ணுல பட்ட உடனே எங்களை எல்லாம் டீல்ல விட்டுடீங்க. என்னைக் கூட விடுங்க, வயசுப் பையன்” என்க, வசுந்தரா நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தார்.
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,
“பா, நீங்களும் மாமாவும் வாங்க. நான் பரிமாறுறேன்” என்றவர் சொன்னதை செய்ய ஆரம்பித்து விட்டார்.
அதன் பின்னர் உணவு நேரம் இதமாகவே கழிந்தது. வசுந்தரா பெரிதாக எதுவும் உண்ணவில்லையென்றாலும், அவரும் வருணனும் இணைந்தே பெரியவர்களுக்கு பரிமாற, அந்த இடம் முழுவதும் கலகலப்பான பேச்சும், மெல்லிய சிரிப்புச் சத்தமும் மட்டுமே.
அடுத்த சில மணித்துளிகள் வசுந்தராவிற்கு வேறு எதுவும் நினைவில் இல்லை. எப்போது உணவறையில் இருந்து, வரவேற்பறைக்கு வந்தார்கள், தந்தையின் தோள் சாய்ந்திருந்த வசுந்தரா எப்போது உறங்கினார் என்பதும் கூட அவர் ஞாபகத்தில் இல்லை. இருந்த மன அழுத்தத்திற்கும், அசதிக்கும் அமர்ந்த சில நிமிடங்களில், பேச்சினூடேயே உறக்கத்திற்கு சென்று விட்டார். வீடு வந்த உணர்வோ, என்னவோ பல மாதங்களுக்குப் பின்னான ஆழ்ந்த உறக்கம்.
வருணன் தான் முதலில் அதைக் கவனித்தார். நீள்விருக்கையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, ‘பேசாதீர்கள்’ என்பது போல் வாயில் விரல் வைத்துக் காண்பிக்க, அஞ்சலி மெதுவாக கணவரிடம்,
“என்னங்க, உங்க பொண்ணு இப்டி தூங்குறா?” என கிசுகிசுத்தார். தேவராஜனும், வனதேவனும் அவரை ஒன்று போல் முறைக்க, மூண்ட சிரிப்பை அடக்கிக் கொண்டார் வருணன்.
“அஞ்சலி, புள்ளைக்கு கழுத்து வலிக்கப் போகுது. பெட்ல படுக்க சொல்லு” என்று ராஜி மெதுவாகக் கூற,
“நல்லா தூங்குறாளே, எழுப்பினா தலை வலிக்குமே” என்று அஞ்சலி யோசிக்க, வனதேவனோ வருணனிடம் கண் காண்பிக்க, அவர் அலுங்காமல் பூப்போல் வசுந்தராவை கைகளில் ஏந்திக் கொண்டார்.
அந்தக் காட்சியே ஒரு கவிதை போலிருக்க, பெற்றவர்களிடம் ஒரு ஏக்கப் பெருமூச்சு மட்டுமே!
“வெண்ணைய கைல வைச்சிக்கிட்டு அலையுறது தான் நம்ம நிலைமை போல” என்ற அஞ்சலி புலம்பத் துவங்க வனதேவன் அவரை முறைக்க, தேவராஜன் தான்,
“விடும்மா தங்கச்சி. அம்மணி ஒன்னும் குழந்தையில்ல. இதெல்லாம் நம்ம கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கிற விசயமும் இல்ல” என சமாதானப் படுத்தினார்.
“இல்லண்ணா, சின்னவங்க அவங்களா எதுவும் முடிவெடுக்க மாட்டேங்குறாங்க. நாமளா ஏதாச்சும் பண்ணலாம்னா…அதுக்கும் உங்க மருமக பிடி கொடுக்க மாட்டாங்குறா” என அஞ்சலி மீண்டும் துவங்க,
“கவலைப்படாத அஞ்சலி, எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும்ல. வர்றப்போ எல்லாம் சரியா நடக்கும்” என இந்த முறை ராஜி அவரை தேற்றினார்.
இதெல்லாம் காதில் விழுந்தாலும், கண்டு கொள்ளாமல் வசுந்தராவை அவரது அறையில் படுக்கையில் கிடத்தி விட்டு வருணன் வெளியேறும் போது, தூக்கக் கலக்கத்திலேயே வசுந்தரா அவர் கையைப் பற்றிக் கொள்ள, மெல்லிய புன்னகை வருணனிடம்.
‘கிரேசி கேர்ள்’ என தனக்குள்ளே முனுமுனுத்த வருணன், நெற்றியில் முத்தமிடத் துடித்த இதழ்களை அடக்கி, லேசாக கன்னத்தில் தட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.
அவர் வரவேற்பறைக்கு வந்தவுடனேயே,
“கிளம்பலாமா கண்ணு?” என்றார் தேவராஜன்.
“ஏண்ணா? இவ்ளோ நேரத்துக்கு மேல ஏன் போகணும்? இங்கயே தங்குங்க அண்ணா” என அஞ்சலி கூற, தேவராஜன் மறுக்கும் முன்,
“ஆமாப்பா, வசு எல்லாரையும் இங்க தான் இருக்க சொன்னா. நாங்க வர்றப்போவே அவளுக்கு ஏதோ கால் வந்துச்சு. சோ எப்ப வேணும்னா திரும்பி போகணும். காலைல பார்த்துட்டு போகலாம்” என்று விட்டார் வருணன்.
இருவரது வீட்டிலுமே வசுந்தராவுக்கும், வருணனுக்கும் தனித்தனி அறைகள் இருக்கும். தேவராஜனும், ராஜியும் விருந்தினர் அறைக்கு சென்று விட வருணன் அவருக்கான அறைக்குள் நுழைந்தார்.
எப்போதும் அவருக்குத் தேவையான உடைகள், அத்தியாவசியப் பொருட்களோடு, அவருக்கேற்றாற் போல ஒரு சிறு அலுவலக அமைப்பு என கச்சிதமாக இருக்கும் அந்த அறை அவருக்குப் பிரியமான ஒன்று. வசுந்தராவின் அறைக்கு அருகில் இருப்பதால் இன்னும் கூடுதல் விருப்பம் என்று சொல்லவும் வேண்டுமா என்ன.
இலகுவான உடைக்கு மாறிய வருணன், அந்த அறையின் உப்பரிகையில் வந்து அமர்ந்தார். முழுநிலவு வானின் ஏக போக ராணியாய் பவனி வர, அந்த ஏகாந்த இரவு வருணனை ஒரு கலவை மனநிலையில் ஆழ்த்தியது. ஒரு பக்கம் வசுந்தராவை முழுதாகத் தனக்கே வேண்டும் காதலன். மறுபக்கம், அவள் விருப்பத்துக்கே தலைசாய்த்து தோள் கொடுக்கும் தோழன்.
காதலனின் உரிமை உணர்வா? தோழனின் பரிதவிப்பா? இதில் எந்த வருணனை காப்பதற்கு அவர் போராட வேண்டும்? சத்தியமாக விடை தெரியாத கேள்வியே. அவர் நிலைமையே அங்ஙனம் இருக்கையில் வசுந்தராவின் கேள்விக்கு என்ன பதில் கூறுவார். வசுந்தராவின் போராட்டம் அவருக்குப் புரிந்தாலுமே, அதில் அவர் செய்வதற்கும் தான் என்ன இருக்கிறது.
‘நீங்கள் யாரையாவது நேசித்தால், அவர்களை விடுவித்து விடுங்கள். அவர்கள் மீண்டும் உங்களிடம் வந்தால், அவர்கள் எப்போதும் உங்களுடையவர்களே. அப்படி வராவிட்டால், அவர்கள் ஒருபோதும் உங்களுடையவர்கள் அல்ல’ என்ற கலீல் கிப்ரானின் வரிகள் தான் அவருக்கு நினைவு வந்தது.
விடுவிப்பதே பேரன்பின் ஆகச்சிறந்த அடையாளம் அல்லவா. அதற்கும் மேலான பொக்கிஷமாய் வருணனின் வசுந்தராவிற்கு அவரால் எதைக் கொடுக்க இயலும். நிலவைத் தாங்கும் வானம் தான், ஆனால் சொந்தம் கொண்டாட முடியாதே. அது பூமியின் சுழற்சியின் கட்டுப்பாட்டில் அல்லவா.
அவர் எண்ணம் போகும் திசை பார்த்து, ‘ஹேய் வருண், காம் டவுன் மேன். இந்த சென்டி ஃபீல் உனக்கு செட் ஆகல’ என அவர் மனசாட்சியே அவரை கேலி செய்யத் துவங்க, எல்லாவற்றையும் தற்காலிகமாக ஒதுக்கி விட்டு, முகம் நிறைந்த புன்சிரிப்புடன் அமர்ந்திருந்த நீள்விருக்கையிலேயே உறங்கி இருந்தார் வருணன்.
வழமை போல் வசுந்தராவிற்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டாலும், சில நிமிடங்கள் சுற்றம் உணர்ந்த பின்னரே கோவையில் தன் வீட்டிலிருப்பது ஞாபகம் வர, இதமான மனநிலையில் கண் திறந்தே படுத்திருந்தார். எப்படி படுக்கையறைக்கு வந்தோம் என யோசித்தவர், அன்னையோ, தந்தையோ தான் அழைத்து வந்திருப்பர் என அவரே முடிவும் செய்து விட்டார்.
சாளரத்தின் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று மெல்ல ஊடுருவ, பறவைகளின் இன்னிசை காதை நிறைக்க, அதற்கு மேல் அறைக்குள் இருக்க முடியாமல், உப்பரிகைக்கு வந்து நின்று அந்த காலை பொழுதின் இனிமையை அனுபவித்தார். சில மாதங்கள் தவற விட்ட வீட்டுச் சூழல் மனதுக்கு இதமளிக்க, சுற்றிலும் பார்வையை ஓட்டினார்.
அவரது பார்வை வட்டத்தில் பக்கத்து அறையின் உப்பரிகையில் ஆழ்ந்த சயனத்தில் இருக்கும் வருணன் விழ, பல ஆண்டுகள் கழித்து வசுந்தராவின் விழிகளில் சிறு குறும்பும், சுவாரசியமும். மிக மெலிதாக விசிலடிக்க, அந்த சத்தம் வருணனுக்கு கனவில் கேட்பது போல் கூட கேட்கவில்லை.
‘ம்ப்ச்’ என சலித்தவர், சுற்றிலும் பார்க்க, அங்கிருக்கும் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்காக இருக்கும் பூவாளி கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தவர் புடவையை வாகாகக் கட்டிக் கொண்டு, அந்தப் பக்கம் பூனை போல் மெல்ல இறங்கினார்.
பூவாளி தண்ணீர் முகத்தில் பூஞ்சாராலாய் சிதற, சில முறை கண்களை சிமிட்டி விழித்த வருணன் சத்தியமாக வசுந்தராவை அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை.
“ஹேய், என்ன பண்ற?” என்றவர் சிரித்துக் கொண்டே முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடி எழுந்து அமர்ந்தார்.
“ரேஸ் கோர்ஸ்ல ஜாகிங் போகலாமா வரு?” என்றார் வசுந்தரா எதிர்பார்ப்புடன்.
சில நிமிடங்கள் அவரை ரசனையுடன் பார்த்த வருணன்,
“இப்படியேவா?” என்றார்.
தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்ட வசுந்தரா,
“ம்ப்ச், இல்ல. ஃப்ரஷ் அப் ஆகிட்டு தான், கமான் குவிக்” என்றவர், வருணன் தோளைப் பிடித்து எழுப்ப முயல, அவர் கைகளைப் பற்றித் தன் அருகில் அமர்த்திக் கொண்டார் வருணன். சோம்பலாக இரு கைகளையும் நீள்விருக்கையில் சாய்த்தபடி,
“என்ன மேடம் ஒரே ஹாப்பி மூட் போல இன்னிக்கு?” என்றார்.
“யெப், ஆஃப்டர் அ லாங் டைம்! வாண்ட் டு மேக் த மோஸ்ட் ஆஃப் இட்” என்றார் வசுந்தரா சூர்யோதத்தை ரசித்தவாறே.
“ரைட், சிங் மாமாவ வைச்சி என்ன சிங்கியடிக்க வைக்காம விட மாட்ட போல” என்றவர், கண் மூடி சாய்ந்து கொண்டு,
“ஒரு அஞ்சு நிமிஷம் இப்டியே உட்கார்ந்திருக்கலாம் வசு ப்ளீஸ்” என்க, வசுந்தராவும் எதுவும் பேசவில்லை. ஒரு இனிமையான ஏகாந்தம். கடைசியாக இது போன்ற ஒரு சூழலில் இருவரும் எப்போது இருந்தனர் என்பது கூட நினைவில் இல்லை. பல ஆண்டுகளாக ஓயாத ஓட்டம் தானே இருவருக்கும்.
ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்ட வருணன்,
“தேங்க்ஸ் வசு, போலாம். ஒரு பத்து நிமிஷம். ரெடி ஆகிடுவேன்” என எழுந்திருக்க, வசுந்தரா வந்தது போலவே திரும்ப அவர் அறைக்குச் செல்ல எத்தனிக்க,
“மேடம் ப்ரைம் மினிஸ்டர்” என அழைத்து கை கூப்பி, அவரது அறையைக் கண் காட்ட வசுந்தரா சிரித்துக் கொண்டே வருணன் அறைக்குள் நுழைந்து தனதறைக்குச் சென்றார்.
error: Content is protected !!