Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 20.2

சொன்னது போலவே மாலையில் சந்தியாவின் வீட்டுக்கு அண்ணனும் தம்பியும் சென்ற போது, வாசல்பக்கம் வரும்போதே கோமதியம்மாள் சந்தியாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது இருவரின் காதிலும் விழுந்தது.

 

“உன் தலைமுடியை முடியாவா வச்சிருக்க? ஏதோ தேங்கா நார் மாதிரி இருக்கு…” என்று அவர் இளைய பேத்தியின் கூந்தல் பராமரிப்பின்றி காடாய்க் கிடப்பதைக் கண்டு அங்கலாய்க்கவே

 



Advertisement

சுமித்ரா “ஆச்சி! அதுக்கு அவ என்ன பண்ணுவா? இந்த சென்னையில குடிக்கிற தண்ணியில இருந்து, சுவாசிக்கிற காத்து வரைக்கும் எதுவுமே சுத்தமா இல்லை… எங்களுக்கும் முடியை பராமரிக்க நேரம் இல்லை ஆச்சி… நம்ம ஊரு நம்ம ஊரு தான்! அந்தச் சிலுசிலு காத்தும், சுத்தமான தண்ணியும் தேடிப் பார்த்தா கூட இங்கே கிடைக்காது” என்று ஏக்கத்துடன் கூறிக் கொண்டிருக்கும் போதே ஆரியாவும் சூரியாவும் வீட்டுக்குள் வந்துவிட்டனர்.

 

ஆரியா மேஜையில் சாய்ந்தவாறே பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சுமித்ராவின் அருகில் சென்று அவனும் அவளைப் போலவே சாய்ந்து நின்றபடி “மேலகரத்துல மாடு மேய்ச்சிட்டிருந்தவளுக்கு மெட்ரோபாலிடன் சிட்டி எப்பிடி பிடிக்கும்?” என்று நக்கலாகக் கேட்கச் சுமித்ரா அவளது ஆச்சியின் முன்னிலையில் அவனுக்குப் பதிலடி கொடுக்க இயலாது சிரமத்துடன் அமைதி காக்க ஆரம்பித்தாள்.

Advertisement

 

Advertisement

சந்தியா இவ்வளவு நேரம் கோமதியம்மாளின் தோளில் சாய்ந்திருந்தவள் சூரியாவைக் கண்டதும் முகத்தைச் சுருக்கியபடி நேராய் எழுந்து அமர்ந்து கொண்டாள். சூரியா அவளைப் பார்த்தவாறே கோமதியம்மாளுக்கு அடுத்து அமர்ந்தான்.

 

“கிரானி மத்தவங்கலாம் எங்கே?” என்று கேட்டவனுக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருப்பதாகப் பதில் வரவே தான் வந்த விஷயத்தை அவரிடமே கேட்டுவிடலாம் என்று எண்ணினான்.

Advertisement

 

“கிரானி இன்னும் நாலு நாள்ல நீங்க ஊருக்கு கிளம்புறிங்கனு பிரவுனி ஆபிஸ்ல வச்சு சொன்னா… இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகலாமே”

 

“பொங்கல் பக்கத்துல வந்துட்டுப்பா! அங்கே போட்டது போட்டபடி கிடக்கு.. வீட்டுக்கு வெள்ளையடிக்கணும், சாமனை ஒதுங்க வைக்கணும்னு ஏகப்பட்ட வேலை இருக்கு.. இப்போ போனா தான் சரியா வரும்ப்பா”

 

மெதுவாகத் தான் சொல்ல வந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தான் சூரியா.

 

“கிரானி! நீங்க எல்லாரும் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ப்ளீஸ்! டாட் உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கார்…லெட்சுமிம்மாவும் அவங்க கைப்பக்குவத்தை உங்க கிட்ட காட்டணும்னு ஆசைப்படுறாங்க…ப்ளீஸ் கிரானி, ஒரு நாள் லஞ்ச் அண்ட் டின்னருக்கு வந்துட்டுப் போனிங்கனா நான் ரொம்பச் சந்தோசப்படுவேன்” என்று அன்பாக வேண்டியவனை மறுக்க இயலாமல் கோமதியம்மாளும் அவன் வீட்டுக்குக் குடும்பத்தோடு வர ஒத்துக்கொண்டார்.

 

அதன் பின் சிறிதுநேரம் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும் போதே சந்தியா மற்றும் சுமித்ராவின் பெற்றோர் உறவினர் வீட்டிலிருந்து திரும்பிவிட அவர்களிடமும் சாமர்த்தியமாய் பேசி தனது வேண்டுகோளை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டுத் தான் சூரியா தனது சகோதரனுடன் அங்கிருந்து சென்றான். எப்போதும் அவனை வழியனுப்பி வைக்கச் செல்லும் சந்தியா அவன் விடுமுறை தராத கோபத்தில் அவனிடம் முகம் கொடுத்துப் பேசக்கூட இல்லை.

 

சந்தியாவின் குடும்பத்தினர் அனைவரும் ஒரு ஞாயிறன்று சூரியாவின் வீட்டுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டனர். ஞாயிறென்றால் நாராயணனைப் பார்க்க சவுகரியமாக இருக்கும் என்று சூரியா கூறிவிட்டதால் இந்த ஏற்பாடு.

************

ஞாயிறன்று காலை பதினோரு மணி வாக்கில் சூரியாவின் வீட்டின் முன் சென்றிறங்கினர் சந்தியாவின் குடும்பத்தினர். சூரியா டிரைவருடன் காரை அனுப்பியிருந்தவன் அவர்கள் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.

 

அவர்கள் வீட்டை நெருங்கும் போதே வீட்டின் தலைமகனாய் புன்னகையுடன் வரவேற்றவன் அனைவரையும் உள்ளே அழைத்துச் செல்ல சுமித்ராவும் சந்தியாவும் ஏதோ பேசிக்கொண்டே வந்தவர்கள் அவர்களைத் தொங்கிப் போன முகத்துடன் நின்ற ஆரியாவைக் கண்டதும் இரு சகோதரிகளும் ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அவன் சோர்ந்துப் போய் இதுவரை பார்த்து அறியாததால் வந்த திகைப்பு அது.

 

அனைவரும் வீட்டினுள் சென்றுவிட இரு சகோதரிகள் மட்டும் ஆரியாவிடம் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு வைக்க அவனோ “எல்லாத்துக்கும் நீ தான் காரணம் தியா” என்று குறை கூறவே இருவரும் ஒருங்கே திகைத்தனர்.

 

“நான் என்ன பண்ணுனேன் பாஸ்?’ – சந்தியா..

 

“அவன் தான் சன்டே வாங்கனு சொன்னான்னா நீயாச்சும் வேற நாளைச் செலக்ட் பண்ணிருக்கலாம்ல.. இப்போ பாரு, என் சன்டே உன்னையும் இந்த ஜெகன்மோகினியையும் பார்த்து வீணா போயிட்டிருக்குது..” – ஆரியா

 

அவன் அவ்வாறு வருத்தத்துடன் கூறவே சுமித்ராவுக்கு அவனது ஞாயிறு கொண்டாட்டம் தூள் தூளானதில் அலாதி ஆனந்தம். அது சிரிப்பாக வெடித்துவிடவே சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள் அவள். சந்தியா முதலில் அமைதி காத்தாலும் அவளும் சில நிமிடங்களுக்குப் பிறகு அக்காவுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கவே ஆரியா இருவரையும் கொலைவெறியுடன் பார்த்தான்.

 

“அடச்சீ நிறுத்துங்க ரெண்டு பேரும்… நீங்க சிரிச்சிங்கனா நான் இரிட்டேட் ஆயிடுவேனா? தியா ஐ அம் வார்னிங் யூ.. இந்த ஜெகன்மோகினி கூட சேர்ந்து நீயும் வர வர பிசாசா மாறிட்டு வர்ற… சோ இவளை விட்டுத் தள்ளி இரு…” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் செல்லவே

 

சந்தியா சுமித்ரா கோபப்பட்டுவிட்டாளோ என்று அவளைப் பார்க்க, அவளோ இடதுபக்க நாசியை ஆட்காட்டிவிரலால் அழுந்த மூடியவள் வலதுபக்க நாசி வழியாக மூச்சை விட்டுக் கொண்டபடி கண் மூடி நின்றாள்.

 

அவளது செய்கையில் குழம்பிப் போன சந்தியா அவளை உலுக்கிவிட்டு “சுமிக்கா என்ன பண்ணுற நீ?” என்று கேட்க

 

சுமித்ரா கண்ணை மூடியபடியே “பிராணயாமம் பண்ணுறேன் சந்து… எனக்கு எப்போலாம் கோவம் வருதோ அப்போ கோவத்தை கன்ட்ரோல் பண்ண இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன்.. முக்கியமா இந்த இடியட் என்னை ஜெகன்மோகினு சொல்லி இரிட்டேட் பண்ணுறப்போ…” என்று கூற சந்தியா சிரித்தபடி அவளது தோளைப் பற்றி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

 

கோமதியம்மாள் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்தபடி குடும்பத்தினருடன் ஹாலுக்குள் நுழைய, அங்கே நாராயணன் ஏதோ போனில் பேசிக்கொண்டிருந்தவர் இவர்களைக் கண்டதும் அகமும் முகமும் மலர இருகரம் கூப்பி வரவேற்கவே, ரேணுகா தனது கணவரிடம் “இவ்ளோ வசதியானவங்களா இருந்தாலும் பழக எளிமையானவங்களா இருக்காங்கல்லாங்க” என்று நெகிழ்ச்சியுடன் கூறியபடி அவருக்குப் பதில் வணக்கத்தைக் கூறினார்.

 

சூரியா அனைவரையும் அமரச் சொன்னவன் “லெட்சுமிம்மா பிரவுனியோட ஃபேமிலி வந்திருக்காங்க பாருங்க” என்று கூறவும் சமையலறையில் வேலையாக இருந்தவர் அதை மற்றொரு பணியாளரிடம் கவனித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு ஹாலுக்கு விரைந்தார்.

 

சந்தியாவைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள் என்பதால் தயக்கத்துடன் வந்தவரைச் சூரியா தோளுடன் அணைத்து “இவங்க தான் லெட்சுமிம்மா” என்று உரிமையுடன் அறிமுகப்படுத்தி வைக்க லெட்சுமிம்மாவுக்கு இதை விட பெரிய விஷயம் எதுவுமில்லை… அவனது பாசத்தில் ஒரு கணம் கண் கலங்கியவர் நெகிழ்ச்சியுடன் வந்திருந்தவர்களை “வாங்க” என்று வரவேற்றுவிட்டு கோமதியம்மாளிடம் அவர் அதிரசத்தின் புகழை அண்ணனும் தம்பியும் பாடித் தனது காதுகளை பஞ்சர் ஆக்கிவிட்டதாகக் கூறி இயல்பாக உரையாட ஆரம்பித்தார்.

 

சில பொதுப்படையான விஷயங்களுக்குப் பிறகு வேலையை முடித்துவிட்டு பொறுமையாகப் பேசலாம் என்று அவர்களிடமிருந்து விடைபெற்று மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

 

நாராயணன் சூரியாவுடன் சேர்ந்து கொண்டு தேவராஜிடமும், சதாசிவத்திடமும் கலகலப்பாக உரையாட ஆரம்பிக்க பெண்கள் மூவரும் அவர்களுக்குள் பேசியபடி வீட்டின் அழைகை ரசிக்க ஆரம்பித்திருந்தனர்.

 

சந்தியா ஏற்கெனவே இங்கே வந்திருப்பதால் அவளுக்குத் தெரிந்த இடங்களை ஆரியாவுடன் சேர்ந்து சுமித்ராவுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். இடையிடையே பெண்களின் கலீரென்ற நகைப்பொலி மட்டும் பெரியவர்களின் காதுகளை நனைத்தது.

 

ரேவதி தயக்கத்துடன் நாராயணனைப் பார்க்க “விடுங்கம்மா! இது கவலையில்லாத வயசு.. இப்போ சிரிக்காம, வேற எப்போ சிரிக்கப் போறாங்க? அதுவுமில்லாம என் சின்னப்பையன் கூட இருக்கிறப்போ சிரிக்காம இருந்தா தான் ஆச்சரியம்” என்று கூறிவிடவே அடுத்தவர் வீட்டுக்கு வந்திருக்கும் நேரத்தில் இப்படி வீடு அதிர சிரிக்கலாமா என்று இரு பெண்களையும் கடிந்து கொள்ளவிருந்த தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் அவர்.

 

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவில் யாருமே ஹேமா என்ற மனுசியைத் தேடவில்லை. ரேணுகா தான் தயக்கத்துடன் “அண்ணா… வந்து… சூரியாவோட அம்மா….. அவங்க வீட்டுல இல்லையா?” என்று மெதுவாகக் கேட்க

 

நாராயணன் “அவளுக்குக் குடும்பத்தை விட இந்தச் சமுதாயச்சேவையில ரொம்ப ஆர்வம். இப்போ ஸ்கூல் பசங்களுக்கு போர்ட் எக்சாம் வரப்போகுது இல்லையா.. அதுக்கு முன்னாடி பசங்களுக்கு ஏதோ கவுன்சலிங் குடுக்கிறோம்னு அவளோட கிளப் சார்பா ஒரு கேம்ப்புக்கு போயிருக்கா” என்று யாருக்கும் பாதகம் இல்லாத பதிலைக் கூறிவிடவே வந்தவர்கள் மனதில் ஹேமா ஒரு சமூகசேவகி அவதாரம் எடுத்துவிட்டார்.

 

மொத்தத்தில் சூரியாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் சந்தித்ததில், அவர்களது குணங்களைப் பற்றி கேட்டறிந்ததில் கோமதியம்மாளின் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்துப் போயிற்று..

 

அதோடு வயிற்றையும் நிறைத்துக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளோடு லெட்சுமிம்மா வரவே அனைவரும் மதியவுணவுக்காக உணவுமேஜையை அடைந்தனர்.

 

சந்தியா அவ்வளவு நேரம் ஆரியாவுடனும், சுமித்ராவுடன் வீண் அரட்டை அடித்துப் பொழுதைப் போக்கிவிட்டு சாப்பிட வந்தவள் சூரியாவுக்கு அடுத்து மூன்று நாற்காலிகள் கிடக்க அதில் சென்று அமர, அவளுக்கு அடுத்து சுமித்ராவும், ஆரியாவும் அமர்ந்து கொண்டனர்.

 

லெட்சுமிம்மா அனைவருக்கும் பரிமாற சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டவர்களால் அவரது கைப்பக்குவத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சூரியா எதுவும் பேசாமல் யோசனையுடன் சாப்பாட்டை அளையவே சந்தியா அவன் தோளில் தட்டி “சாப்பிடறப்போ என்ன யோசனை?” என்று கேட்க

 

அவன் “இப்பிடியே நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலியா இருந்தா நல்லா இருக்கும்ல” என்று புன்னகை பூத்த முகத்துடன் கேட்க சந்தியாவும் அதற்கு ஆமென்று தலையாட்டியபடி சாப்பிட ஆரம்பித்தாள். சூரியா சொன்னது சுமித்ரா, ஆரியாவின் செவியிலும் தெளிவாக விழவே இருவரும் சாப்பிட்டபடியே அடுத்து என்ன பேசப்போகிறார்கள் என்பதைக் கேட்க ஆவலுடன் இருந்தனர்.

 

சூரியா சந்தியாவின் காதருகே குனிந்து “அதுக்குத் தான் சொல்லுறேன், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு… பிகாஸ் மேரேஜ் மட்டும் தான் ரெண்டு குடும்பங்களைச் சேர்த்து வைக்கும்” என்று அவளுக்குப்  பாடம் சொல்லித் தரும் குரலில் கூற

 

சந்தியா யோசனையுடன் அவனைப் பார்த்தவள் “நீ சொன்ன கடைசி வார்த்தை ரொம்ப சரி மார்ஸ்மாலோ. கல்யாணம் மட்டும் தான் ரெண்டு குடும்பங்களைச் சேர்த்து வைக்கும்” என்று நிறுத்திவிட்டு தட்டில் இருந்த உருளைக்கிழங்கை ருசிபார்த்துவிட்டு

 

நிதானமாக “சோ நீ என்ன பண்ணுற, சுமிக்காவுக்கும் பாஸுக்கும் அலையன்ஸ் பேசி முடிச்சு வைக்கிற… அப்பிடி பண்ணுனா கல்யாணமும் நடக்கும், நம்ம ரெண்டு குடும்பமும் ஒரே குடும்பமா ஆயிடும்” என்று சொல்லிவிட்டு அத்தனை பற்களையும் காட்டிச் சிரிக்க இவை எதுவுமே பெரியவர்களின் காதை எட்டவில்லை.

 

ஆனால் சுமித்ராவுக்கு அடுத்து இருந்த ஆரியா சந்தியா சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டவனாய் அவளிடம் “எத்தனை நாளா இந்த ஜெகன்மோகினியை என் தலையில கட்டணும்னு பிளான் போட்ட தியா? இவளுக்குனு எதாவது மந்திரவாதி பிறந்திருப்பான்… அவனைத் தேடிக் கண்டுபிடிச்சு உங்க அக்காவுக்குக் கட்டி வை தெய்வமே… நான் சாதாரண மனுசன்.. என்னால பிசாசை சமாளிக்க முடியாது..” என்று சொல்லிவிட சுமித்ரா எரிச்சலுடன் டேபிளுக்குக் கீழே இருக்கும் அவன் காலை மிதித்து வைத்தாள்.

 

ஆரியா கத்தவும் முடியாமல், வலியைப் பொறுக்கவும் முடியாமல் கண் கலங்க, சூரியா தான் இவ்வளவு பொறுமையாக எடுத்துக் கூறியும் அதைப் புரிந்து கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பவளை என்ன தான் செய்வது என்று தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டுக் கதைகளை விட்ட இடத்திலிருந்து தொடர, சூரியா மட்டும் ஆழ்ந்த சிந்தனையுடன் தனியாக அமர்ந்திருந்தான். இப்போது விட்டால் இனி சந்தியாவின் குடும்பமும் தனது குடும்பமும் சந்திப்பது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே… எனவே வேறு வழியின்றி தான் தனது மனதிலிருப்பதை இரு குடும்பத்தின் பெற்றோரிடமும் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

 

நேரம் கடகடவென்று கடக்க இரவில் டின்னரை முடித்துவிட்டு கோமதியம்மாளின் குடும்பத்தினர் கிளம்பும் தருவாயில் அவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டும் என்று சூரியா பீடிகை போடவே அனைவரும் ஹாலில் அமைதியாக அமர்ந்தனர்.

 

சூரியா தோட்டத்தில் ஆரியாவுடனும் சுமித்ராவுடனும் கேலி பேசிக் கொண்டிருந்த சந்தியாவைக் கரம் பற்றி அழைத்து, மற்ற இருவரையும் ஹாலுக்கு வருமாறு சொல்லிவிட்டு அவளுடன் நடக்கத் தொடங்க, அவளும் இவன் எதற்காக இப்படி அழைத்துச் செல்கிறான் என்ற கேள்வியுடன் அவனைத் தொடர்ந்தாள்.

 

ஹாலில் அனைவர் முன்னிலையும் சந்தியாவின் கரத்தைப் பற்றியபடி நின்றவன் தெளிவானக் குரலில் “நானும் பிரவுனியும் லவ் பண்ணுறோம்” என்று இயம்பவே அங்கே இருந்த அனைவர் முகத்திலும் சந்தோசமும், அதிர்ச்சியும் கலந்த ஒரு கலவையான உணர்வு.

 

ஆரியாவும் அண்ணன் இவ்வளவு சீக்கிரத்தில் வீட்டில் சொல்லுவான் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் அவனும் கிட்டத்தட்ட அந்நிலையிலேயே இருந்தான். சந்தியாவின் நிலையோ கேட்கவே வேண்டாம். சூரியா சொன்ன அக்கணம் தாயார் மற்றும் பெரியன்னையின் முகத்தைப் பார்க்கப் பயந்தவளாய் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

 

சுமித்ரா தனது குடும்பத்தினர் இதற்காகச் சந்தியாவின் மனம் கோணும்படி எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற கவலையுடன் அனைவரின் முகத்தையும் பார்க்க அங்கே அமைதி மட்டுமே குடிகொண்டிருந்தது.

 

முதலில் சுதாரித்து அமைதியைக் கலைத்தவர் சதாசிவம் தான்.

 

சூரியாவிடம் மெதுவாக “இது எத்தனை நாளா தம்பி?” என்று காதல் என்ற வார்த்தையைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு கேட்கவே

 

சூரியா “பிரவுனி என்னை த்ரீ இயர்ஸா லவ் பண்ணுறா.. நான் அவளை லவ் பண்ன ஆரம்பிச்சு இன்னையோட பத்து நாள் கம்ப்ளீட் ஆயிடுச்சு மாமா” என்று கூறவே

 

சந்தியா மனதிற்குள் “அடேய் இப்போ புள்ளிவிவரம்லாம் கேட்டாங்களா அவங்க?” என்று சொல்லிக் கொண்டாள்.

 

ரேவதியும் ரேணுகாவும் அவன் சொன்ன மூன்று வருடக்கணக்கைக் கேட்டுவிட்டு மகளை ஆராய்ச்சிப்பார்வையுடன் கவனிக்க ஆரம்பிக்க, அவர்களின் மனதில் சூரியா மேலகரத்திலிருந்து சென்ற பிறகு சந்தியா ஜீவனின்றி புத்தகத்துக்குள் முகம் புதைத்து வாழ்ந்தது எல்லாம் ஓட ஆரம்பித்தது.

 

நாராயணனோ மகனது நலன் மட்டுமே கருதுபவர், அதிலும் மகன்கள் வாயிலாக சந்தியாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்பவர் அவளிடம் பழகிய சில தருணங்களிலும் அவள் மரியாதையுடன் இயல்பாக நடந்து கொள்வதை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவர். எனவே அவருக்கு சந்தியா தனது மருமகளாக வருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

 

அங்கிருந்த மவுனத்தை உடைக்க விரும்பியவர் சந்தியாவைச் சூரியா திருமணம் செய்ய நினைத்தால் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அதில் முழுச்சம்மதமே என்று சொல்லிவிட்டார்.

 

ஆனால் தேவராஜிடம் “நீங்க பொண்ணைப் பெத்தவங்க… அதனால யோசிச்சு உங்க முடிவைச் சொல்லுங்க…. ஆனா நம்ம வாழறதே நம்ம பசங்களுக்காகத் தான்… அவங்க சந்தோசத்தைத் தவிர வேற எதுவும் நமக்கு முக்கியம் இல்லைங்கிறது என்னோட கருத்து” என்று சொல்லிவிட்டார்.

 

கோமதியம்மாள் தாங்கள் கலந்துப் பேசிவிட்டு நாளை முடிவைச் சொல்கிறோம் என்று கூறிவிட்டு நாராயணனிடம் சொல்லிக் கொண்டு விடைபெற அனைவரும் எழுந்தனர். மறக்காமல் லெட்சுமிம்மாவிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டனர் சந்தியாவின் குடும்பத்தினர்.

 

சந்தியா போகும் முன்னர் சூரியாவைப் பார்த்தப் பார்வையில் பயம் கலந்த பதற்றம் மட்டுமே இருந்தது. இப்படி ஒரு இக்கட்டில் என்னைச் சிக்கவைத்து விட்டாயே என்ற அவளின் குற்றம்சாட்டும் பார்வை அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் தங்களின் பிற்கால வாழ்க்கைக்காக எத்தனை இக்கட்டான சூழல்களை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

சாரல் வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!