Skip to content
Post Views: 5,964
“அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
மு.வ விளக்க உரை: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.”
தேவாவின் அழுகை அதிரனுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தாலும் உணர்ச்சிற்ற முகத்தோடு தான் அவளை அரவணைத்து நின்றிருந்தான்.
சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவள் அசௌகரியமாய் உணர்ந்து வேக வேகமாய் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
Advertisement
அதிரன் அவளது பக்கத்து இருக்கையை சற்று நகர்த்தி அதில் அமர்ந்தவனாய்,
“இட்ஸ் ஓகே ரஞ்சனா. வாழ்க்கை முழுசும் இதே மாதிரியான வெளிப்டையான விஷயங்கள் நமக்குள்ளே இருக்குறது தான் நல்லது.”
“சார்.. என் குடும்பம் என் சூழ்நிலை எல்லாமே உங்களுக்குத் தெரியும். பல தடவை யோசிச்சுக்கோங்க.
Advertisement
எந்த நிலையிலேயும் இதெல்லாம் இந்த வாழ்க்கைக்கு பிரச்சனையா இருக்காது தான?”
Advertisement
“என்னைப் பார்த்து, கண்ணைப் பார்த்து என்ன கேட்கணுமோ கேளு.”, என்னவோ அவனது கண்களை நேருக்கு நேராய் பார்ப்பதில் அவளுக்கு பெரும் தடுமாற்றம்.
பெண்ணின் கண்களுக்கு ஆயிரம் உவமைகள் இருப்பதாலோ என்னவோ அதன் அழகை நம்மால் கற்பனையில் கூட புரிந்து சிலாகித்துக் கொள்ள முடிகிறது.
ஆனால் ஆணின் கண்களுக்கு இணையான கவிதைகளே இல்லை.
Advertisement
ஏனெனில் அந்தக் கண்களே அழகிய கவிதைகள் தான். அதிகம் பேசப் படாத ஆணிண் வார்த்தைகள் விழி வழியே வெகு சுலபமாய் கடத்தப்படுகின்றன.
அதிலும் மனதிற்கு நெருக்கமான ஆணின் கண்களைச் சந்திப்பது பெண்களுக்கு முடியாத காரியமாம்.
உண்மை தானோ என்று தோன்றுகிறது தேவாவிற்கு.
யாரையும் நேருக்கு நேர் பார்த்து பேசி தான் அவளுக்குப் பழக்கம்.
ஆனால் அதிரனின் கண்களைச் சந்தித்தாலே ஏதோ ஒரு தாக்கம் அவளுள்ளே.
அதை விட அவன் விழி கடத்தும் பாஷைகள் அவளுக்கு மிகத் தெளிவாய் புரிந்து விடுகிறது என்பது தான் பதட்டத்தின் முக்கிய காரணமே.
அவன் கூறிய மரியாதைக்காக ஒரு நொடி அந்த விழிகளை நோக்கியவளைத் தான் பார்த்திருந்தான்.
என்னவோ அந்த விழிகளின் நேர்மையும் ஆளுமையும் அவளுக்கான பிரத்யேகப் பார்வையும் அவளை திண்டாட வைப்பதாய் தான் இருந்தது.
“நீ என் அம்மாவோட சாய்ஸ் ரஞ்சனா. அப்படி தான் என் கவனம் உன் மேல திரும்பிச்சு. ஆனால் எல்லா விதத்திலேயும் நீ எனக்கு பொருத்தமானவளா இருக்கனு தோணுது.
அதிலேயும் என்னோட அமைதியை புரிஞ்சுக்குறது அம்மாவுக்கு அப்பறம் நீ தான்.”
“!!!”
“அண்ட் பேசவே பிடிக்காத என்னை நிறைய பேச வைக்குறதும் நீ தான்.
எந்த பயமும் உனக்கு வேண்டாம். மிஸர்ஸ் அதிரனா நீ மாறிட்ட பின்னாடி வாழ்க்கை முழுசும் என் பொறுப்பில் நீ பாதுகாப்பா இருப்ப.”
“..”
“வெளியில் போய் அம்மாகிட்ட சொல்ல போறேன். அதுக்கு முன்னாடி உன் சம்மதத்தை தெளிவா ஒரு தடவை உன் வாயால சொல்லு.”
“இந்த கல்யாணத்தில்..”
“எந்த கல்யாணம்?”
“!!”
“லுக் அட் மீ அப்பறம் சொல்லு..”, என்றதில் அவன் விழி நோக்கியவள்,
“உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்.”, என்றதில் அவன் கண்களில் மெலிதான சிரிப்பு அதை உணர்ந்தவளின் முகம் அதுவாய் இலகுத் தன்மையை பெற்றிருந்தது.
“சோ இனி எந்த விஷயம்னாலும் எனக்கு யோசிக்காம கால் பண்ணனும். அதை விட்டுட்டு கண்ணுல தவிப்போட தனியா போராட கூடாது. காட் இட்?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
அதிரன் எழுந்து கொள்ள தேவாவும் எழுந்து அவனோடு கூடத்திற்கு வர தேர்வு முடிவிற்கு காத்திருப்பதைப் போல் காயத்ரி கயல்விழி காத்யாயினி பற்றாகுறைக்கு சாருகேஷும் அங்கங்கு நின்று கொண்டிருக்க அதிரனைப் பார்த்ததும் இயல்பாய் இருப்பதை போல் அவரவர் வேலையைக் கவனித்தவாறு நடித்தனர்.
“ம்மா..”
“சொல்லு அதி..”
“உங்க செலெக்ஷன் எப்பவும் தப்பா போகாது. எனக்கு ரஞ்சனாவைப் பிடிச்சுருக்கு. அவளுக்கும்.
கல்யாணத்தை எப்போ வைச்சுக்கலாம்னு பாருங்க.”, என்று பட்டென அவன் பேசி விட்டதில் தேவாவிற்குத் தலையை நிமிர்த்தவே முடியாமல் போயிருந்தது.
“ஹப்பாடா இனி ஹெச்ஆர் மேம்னு கூப்பிட வேண்டாம். வெல்கம் அண்ணி..”, என்ற சாருகேஷ் அவள் கரம் பற்றிக் குலுக்கினான்.
காயத்ரியும் கயல்விழியும் தங்கள் வாழ்த்துக்களைக் கூற தேவா அமைதியாய் காத்யாயினியின் முன் அமர்ந்தாள்.
“ம்மா.. அவினாஷ்காக தான் நான்.. ஆனால்.. இப்போ..”
“சந்தோஷமா இரு தேவா. அவினாஷ்க்கு இனி நாங்க இத்தனை பேர் இருக்கோம். என்னைக்கும் இருப்போம்.”, என்றவர் கன்னம் பற்றி தட்டிக் கொடுத்தார்.
“அவிகிட்ட விஷயத்தை சொல்லு ரொம்ப சந்தோஷப்படுவான்.”, என்றதற்கும் அமைதியாய் புன்னகைத்தவள் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பத் தயாராக இறுதியாய் அதிரனின் புறம் பார்வையைத் திருப்பியவள் லேசாய் தலையசைக்க கண்களில் ஒருவித இதத்தோடு மிக மெல்லிதான தலையசைப்பு அவனிடத்தில்.
தம்பியிம் விஷயத்தைக் கூறி விடும் ஆர்வத்தில் வேகமாய் வீட்டை அடைந்திருந்தாள் தேவா.
அவினாஷ் ஹால் சோபாவில் குப்புற படுத்த படி டீவியைப் பார்த்துக் கொண்டிருக்க ஓரிரு நொடி அமைதியாய் அவனுக்கு அருகில் அமர்ந்து விட்டிருந்தாள்.
“என்னக்கா.. மேம் என்ன சொன்னாங்க..”
“அவி..”
“ம்ம்?”, என்றவன் எழுந்து அமர்ந்து அக்காவின் முகத்தை அப்போது தான் ஒழுங்காய் கவனித்தான்.
“என்னக்கா ஏன் டென்ஷனா இருக்க?”
“அவி நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளேன்.”, என்றவள் அதிரனின் விருப்பத்தையும் இன்று தான் சம்மதம் தெரிவித்து விட்டதையும் கூற அவி அக்காவை அப்படியே கட்டிக் கொண்டான்.
“க்கா.. நிஜமாவா சொல்ற! எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதிரன் சார் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாரு.”, என்ற நேரம் சாருகேஷ் அவனுக்கு அழைக்க மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்றவனாய்,
“ சாருகேஷ்ண்ணா!!!”
“முறையை மாத்தாத மச்சான்!!”, என்றதில் சத்தமாய் சிரித்தான் அவினாஷ். தம்பியின் தலை கோதிச் சென்றவள் தனதறைக் கண்ணாடியின் முன் நின்றாள்.
அழுது களைத்து சந்தனமும் குங்குமமும் லேசான கீற்றாய் நெற்றியில் இருக்க வண்டியில் வந்ததில் நன்றாக கலைந்து போயிருந்த தலை முடிகளை ஒழுங்கு செய்த வண்ணம் தன்னைத் தானே பார்த்திருந்தாள்.
திருமண கனவுகள் என்பது தேவாவைப் பொறுத்த வரை தன்னைத் தனக்காகவே ஏற்று அன்பாய் நடந்து புரிதலோடு ஒரு வாழ்க்கை என்பது தான்.
அதன் முதல் படியாய் எவ்வித கட்டாயமுமின்றி தன்னைத் தனக்காக ஏற்றுக் கொண்டவன் என்பதிலேயே அதிரன் அவளை மொத்தமாய் கவர்ந்து விட்டிருந்தான்.
அந்த சிருஷ்டி அவள் போன்ற அழகியோ அல்லது அவள் போன்ற குடும்ப பின்புலமோ இல்லாத என்னைப் பிடித்திருக்கிறதா?
அதிலும் அம்மாவால் ஆரம்பிக்கப்பட்ட பேச்சு தான் ஆனால் என் விருப்பத்தின் காரணமாக தான் இந்த திருமணம் என்று அவன் கூறியது உள்ளுக்குள் இன்பத் தேனாய் பாய்கிறது தான்.
தனக்கான உரிமையும் தன்னை முழுதும் மொத்தமுமாய் உரிமை கொண்டாடவுமாய் ஒரு உறவு என்பதிலேயே அதிரன் அவளின் அகம் நிறைத்து விட்டிருந்தான்.
அவன் ஒருவனைப் பற்றி யோசிக்கும் போது மற்ற விஷயங்கள் பெரிதாய் தெரியாமல் போக இப்போது ANA க்ரூப்ஸ் என்ற பெயர் நினைவில் வர மனம் தானாய் சுணங்கியது.
அவர்கள் பரந்த மனப்பான்மையோடு இருக்கலாம் ஆனால் வருவோர் போவோர் அத்தனை பேரும் அப்படியிருக்க மாட்டார்களே!
யாரும் என்னமும் கூறிவிட்டுப் போகட்டும் பேசுபவர்கள் யாரும் உடனிருக்கப் போவதில்லை. வருவதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னைத் தானே சமாதானம் கூறி தேற்றிக் கொண்டாள்.
மறுநாள் எப்போதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பியவளுக்கு நேற்று அவனிடம் பேசி விட்டதை நினைத்து நினைத்து அவனை எதிர் கொள்ளும் திறனின்றி இருந்தாள்.
அன்றைய தினம் அதிரன் அலுவலகத்திற்கு வராமல் போக ஒரு புறம் நிம்மதியும் ஒரு புறம் சிறு ஏமாற்றமுமாய் இருந்தது தேவாவிற்கு.
உணர்வுகளை மறைப்பது ஒன்றும் அவளுக்கு கடினமில்லையே எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் போக்கில் பார்க்கிங்கிற்கு செல்வதற்காக மின்தூக்கியில் ஏற அதிரன் உள்ளிருந்து வெளியே வந்தான்.
“கிளம்பிட்டியா?”, என்றதில் தேவாவிற்கு முன் வசந்த் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க அதை சட்டை செய்யாதவனாய்,
“டூ மினிட்ஸ் உள்ளே வா.”, என்றவனோடு தேவா செல்ல வசந்த் அறை வாசலிலேயே நிற்க நினைத்தான்.
“உள்ளே வா வசந்த்..”, என்றதில் மூவருமாய் அதிரனின் அறைக்குள் நுழைந்திருந்தனர்.
“வசந்த்..”
“சார்?!”
“ரஞ்சனாவும் நானும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறோம்.”
“ஓ..ஓகே.. எதே!”, என்றவன் லேசாய் குரலுயர்த்தி இருக்க தேவாவே லேசாய் புன்னகைத்திருந்தாள்.
“சார்.. அது சாரி.. வாழ்த்துக்கள் சார். வாழ்த்துக்கள் மேம்.”
“தேங்க் யூ. அண்ட் இப்போதைக்கு வேற யாருக்கும் சொல்ல வேண்டாம். உன்கிட்ட தான் ஷேர் பண்ணிணேன்.”, என்றதில் வசந்திற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
“நீ கிளம்பு வசந்த் நாங்களும் 5-10 நிமிஷத்தில் கிளம்பிடுவோம்.”, என்றதில் இருவருக்குமாய் வணக்கம் வைத்துக் கிளம்பியிருந்தான் வசந்த்.
தேவா விரல் நகங்களை ஆராய்வதும் அங்குமிங்கும் பார்வையை சுழற்றுவதுமாய் இருக்க அதிரனின் பார்வை மொத்தமும் அவள் மீது தான்.
அதிலும் அவளின் காலர் போன் எனும் அந்த கழுத்தெலும்பு அவனின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த எலும்பிற்கு Beauty bone என்ற பெயரும் உண்டு.
அந்த எலும்பும் அதற்கு சற்று மேல் அவளின் நீள் கழுத்தில் பளிச்சென தெரிந்த மச்சமும் ரம்மியமாய் தோன்றியது.
சாதாரணம் போல் தேவா அவனைப் பார்த்த போது கூட எவ்வித மாற்றமுமின்றி அவளைத் தான் பார்த்திருந்தான் அதிரன்.
இருவரின் மோன நிலையையும் கலைக்கும் விதமாய் கதவை வேகமாய் திறந்த வண்ணம் வினித்,
“என்ன டா அதிசயமா ஆபீஸுக்கு வர சொல்லிருக்க?”, என்றவன் தேவாவை அங்கு எதிர்பாராமல் புன்னகைத்தான்.
“நான் வெளிலே..”
“வெயிட் ரஞ்சனா. வினித், தேவாவை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.”
“என்னது?!!”
“ஷாக் ஆவனு தெரியும். ஆனால் ஏன் இவ்வளவு?”
“டேய் விளையாடுறியா?”
“என்னைப் பார்த்தா அப்படி தெரியுதா உனக்கு?”
“டேம்.. டேய் அதி!! சோ ஹேப்பி ஃபார் யூ மச்சி..”, என்றவன் நண்பனைக் கட்டிக் கொண்டு தேவாவிற்கு கைக் கொடுத்தான்.
“உங்க மேல இவன் பார்வையே சரியில்லையேனு நினைச்சேன். அப்பறம் நான் தான் தப்பா யோசிக்குறேன்னு நினைச்சு விட்டுட்டேன். பார்த்தா விஷயம் இப்படி போகுதா?”
“டேய்!!”
“தேவா ஒண்ணு மட்டும் சொல்றேன் இவனை நாலு வார்த்தை பேச வைக்குறதுக்குள்ளே நாக்கு தள்ளிடும்.
இப்போவே சொல்லிடுங்க ஒழுங்கா பேசினால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு..”, என்றதில் அதிரனைத் தான் பார்த்தாள்.
“சுத்தம் நீங்க அவனுக்கும் மேல உங்களுக்கு பேச வருமானு முதல்ல சந்தேகம் இருந்தது. இப்போ இவனோட வேற சேரப் போறீங்க. சுத்தம் போங்க..”, என்றதில் இருவரிடத்திலும் மெலிதான புன்னகை.
error: Content is protected !!