Skip to content
Post Views: 5,418
“மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
மு.வ விளக்க உரை: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.”
“குட் மார்னிங் ம்மா..”
“குட் மார்னிங் தேவா. ரொம்ப டயர்டா தெரியுறியே மா?”
Advertisement
“ம்ம் சரியாயிடுவேன் ம்மா. நீங்க சொல்லுங்க பெரியம்மா என்னவோ சொல்லிட்டு இருந்தீங்களே?”
“நாங்க ஏதோ பேச்சுத் துணைக்கு பேசிட்டு இருக்கோம் மா.”
“அதுக்கு நான் தானா கிடைச்சேன்?”
Advertisement
“!!”
Advertisement
“உங்களுக்கு என்னைப் பிடிக்கலை சரி. ஆனால் இப்போ வேற வழியில்லையே. நான் தான் இந்த வீட்டு மருமக. உங்க மருமக இரண்டு பேருக்கும் அண்ணி. இதெல்லாம் நீங்க புலம்புறதால மாறப் போகுதா?”
“அப்பறம் நீங்க பேசுறது பிடிக்காம நான் போய் என் புருசன்ட்ட சண்டை போட அவரு போய் உங்க புள்ளைங்ககிட்ட சண்டை போட அவங்க வந்து உங்களோட சண்டை போட.. இதெல்லாம் தேவையா?”
“!!”
Advertisement
“சோ இதெல்லாம் பண்ணாம நான் நேரா உங்களோடயே சண்டைக்கு வந்துருவேன்.”
“என்னம்மா வந்த இரண்டு நாள்லேயே இப்படி பேசுற? என் மருமகங்க எல்லாம் இப்போ கூட வாயே திறக்க மாட்டாங்க தெரியுமா?”
“அதனால தான் நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க. நான் எங்க மாமியாருக்கு மட்டும் தான் அடங்குவேன். மத்த படி என் வீட்டிலேயே வந்து என்னைப் பத்தியே வாய்க்கு வந்த மாதிரி பேசினால் சும்மா எல்லாம் இருக்க மாட்டேன் பெரியம்மா. பார்த்துக்கோங்க.”, என்றவள் மாமியாரின் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றிருந்தாள்.
புல்வெளியில் நிறுத்தியவள் அவரருகில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
“அதி உன்னை பிடிச்சுருக்குனு ஏன் சொன்னான்னு இப்போ புரியுது.”, என்றதில் மெலிதாய் புன்னகைத்தாள் தேவா.
“சந்தோஷமா இருக்கியா?”, என்ற மாமியாரை ஆச்சரியமாய் பார்த்தவள்,
“உள்ளே பேசினதைப் பத்தி கேட்பீங்கனு பார்த்தா..”
“உன் புருஷன் பேசுற பேச்சுக்கு நீயே தேவலை அதனால பரவால்ல..”, என்றதில் இருவருமாய் சிரித்தனர்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..”
“இவ்வளவு சந்தோஷமா நான் இருந்ததே இல்ல மா..”
“அதியும் ரொம்ப சந்தோஷமா இருக்கான். அவன் முகத்திலேயே தெரியுது.”
“அவங்க மாமா மாதிரியோ?”, என்றதில் காத்யாயினி ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
“அவங்க அப்பா ரொம்பவே அமைதி. இவன் அப்படியே அவங்க அப்பா தான்.
அதனாலேயே அவன் மேல தனிப் பிரியம் அவருக்கு. அதனால தான் தொழில் பேரைக் கூட அவர் மாத்தல..”
“அனா (ANA)?”
“இல்ல தேவா.. அதிரன் நஞ்சுண்டான் அவினாசிலிங்கம்”
“என்ன? இவர் பேர் தானா?”
“சொல்லலையா அவன்?”
“தொழில் பத்தியெல்லாம் பெருசா பேசிகிட்டது இல்ல ம்மா.”
“நீயா வார்த்தையைப் பிடுங்காத வரை அவன் வாயைத் திறக்க மாட்டான்.”, என்றதில் கணவனை நினைத்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய்,
“அப்பறம் அத்தை மெடிக்கல் காலேஜை கவனிச்சுக்குற வேலையை எனக்கு கொடுத்தது..”
“என்ன வேலைனு சொல்ற உனக்கான பொறுப்பு அது..”
“உங்களுக்கு ஓகே வா அது..”
“இங்கே பாரு என் பிள்ளைங்க கல்யாண வயசு வந்ததுமே என் மனசில் ஒரு எண்ணம் உறுதியா இருக்கு.
என் வீட்டு மருமகளை நான் சந்தோஷமா வாழ விட்டால் என் பொண்ணுங்க இரண்டு பேரும் அதை விட சந்தோஷமா கண்டிப்பா இருப்பாங்க.
ஊருக்கெல்லாம் நல்லது பண்ணி பொதுச்சேவை செஞ்சு புண்ணியத்தை கட்டிக்குறதை விட நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை கண்ணீர் சிந்த விடாம பார்த்துகிட்டால் கிடைக்குற புண்ணியம் ரொம்ப அதிகம் தேவா.”
“பணக்காரங்களில் உங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்காங்களா மா?”
“ஏன் இல்லாம? பணக்காரன், ஏழை, சாதி, மதம் இதெல்லாம் நல்லது கெட்டதை நிர்ணயிக்காது.
நாம நல்லதா இருக்கணுமா கெட்டதா இருக்கணுமானு நாம தான் நிர்ணயிக்கணும்.
நாம போற பாதை சரியா இருக்கணும்னு நாம முடிவு பண்ணணும்.”
“வீட்டு சம்மந்திகிட்ட நான் அப்படி பேசிருக்க கூடாது தான். சாரி மா.”
“அப்போ அவங்களும் உன்னை பத்தி புறம் பேசிருக்க கூடாதுல. நீ சொன்ன பாரு என் வீட்ல வந்து என்னைப் பத்தியே பேசுவீங்களானு. அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.
உனக்கு அந்தளவு உரிமையை நானும் என் பையனும் கொடுத்துருக்கோம்னு பெருமையா இருந்தது. இது மாதிரி ஆயிரம் பேச்சு இருக்கும். பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் பதில் கொடுத்துரு.
சில இடங்களில் அமைதியா கடந்து போயிடு. ஆனால் உன் புருஷனை மட்டும் உள்ளே விட்றாத. என்னை ஒரு வழியாக்கிடுவான்.”, என்றதில் தேவா சத்தமாய் சிரித்திருந்தாள்.
தனது அறை ஜன்னலின் வழி தோட்டத்தில் அமர்ந்திருந்த தாயையும் மனைவியையும் பார்த்தவனுக்கு மனம் நிறைவாய் இருந்தது.
என்ன தான் பிள்ளைகள் பாசமாய் இருந்தாலும் தாயுடன் இப்படி அமர்ந்து பேசுவதற்கான சூழ்நிலைகள் மிகவும் குறைவாய் இருந்தது.
தேவா வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின் அவளுக்கும் அதே நிலை தான் ஆனால் கிடைத்த நேரத்தில் அவரோடு பேச நினைத்து அப்படி அமர்ந்திருப்பது அவனுக்குப் பிடித்தது.
அதிலும் புடவை அணிந்து கால் இரண்டையும் கைகளால் கட்டிக் கொண்டு ஏதோ கதை கேட்கும் தோரணையில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து பற்கள் தெரியவே புன்னகைத்திருந்தான்.
அரை மணி நேரம் ஓடியிருக்க காத்யாயினியை உணவு மேசையில் அமர்த்தி விட்டு திரும்பிய நேரம் அவினாஷும் சாருகேஷும் கண்களைக் கசக்கிய படி வந்து வரவேற்பறையில் அமர்ந்தனர்.
“கல்யாண பொண்ணு நானே சுறுசுறுப்பா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்ன இப்படி தூங்கி வழியுறீங்க?”
“அண்ணி நீங்க போஸ் மட்டும் தான் கொடுத்தீங்க. ஓடி ஓடி உழைச்சதெல்லாம் நாங்க தானே?”
“ம்ம் நீங்க உழைச்சதை நானும் பார்த்தேனே ஆளுக்கு ஒரு பொண்ணோட கடலை வறுத்தீங்க..”, என்றதில் பதட்டமாய் காத்யாயினியைப் பார்த்தனர்.
“ஏன் அண்ணி இப்படி அது சும்மா ஒரு ஹாய் பாய்.. அவ்வளவு தான்..”
“ஆஹான்.. நம்புறேன்.”, என்றவள் தம்பியின் தலையில் செல்லமாய் தட்டிச் சென்றாள்.
தேவா கணவனைத் தேடி அறைக்குள் வந்த நேரம் அதிரன் குளித்து முடித்து அப்போது தான் வந்திருக்க அவனுக்கு கையசைத்து புன்னகைத்தாள்.
“என்ன மேடம் ஆளையே காணும்?”
“சார் பாவமா தூங்கிட்டு இருந்ததால் தொந்தரவு பண்ண வேண்டாமேனு கீழே போயிருந்தேன்.”
“டயர்ட்னெஸ் எல்லாம் போச்சா?”
“ம்ம் ரொம்பவே பெட்டர் தான்ங்க..”, என்றவளின் அருகே தனது சட்டை பட்டனைப் போட்ட படி வந்தமர்ந்தான்.
“தேங்க்ஸ் ரஞ்சு..”, என்றவனைப் புரியாத பார்வை தேவா பார்க்க தனது கைப்பேசியில் சற்று முன் அவளும் தாயும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டினான்.
“அம்மாகிட்ட பேசுறதுக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா?”
“நான் இந்த மாதிரியான கல்யாண வாழ்க்கையை எந்த விதத்திலேயும் எதிர் பார்க்கலை டி. அதுக்கு தான் தேங்க்ஸ்.”, என்றவன் அவளது கரங்களை எடுத்து முத்தம் பதித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
இருவருமாய் கீழே வந்த நேரம் கயல்விழியும் காயத்ரியும் விஜயன் ஜெயனோடு உணவு மேசையில் இருக்க இருவருக்குமாய் தேவா கையசைத்த வண்ணம் அதிரனோடு இருக்கையில் அமர்ந்தாள்.
“அப்பறம் தங்கச்சி வெளியில் எங்கேயும் போகலையா?”
“உங்க மச்சான் எதுவுமே சொல்ல மாட்றாருண்ணா..”, என்றதில் தங்கைகள் சிரிக்க மச்சான்கள் இருவரும் சிரிப்பை அடக்கினர்.
அதிரன் தன்னவளை ஒரு பார்வை பார்த்து மெலிதான புன்னகையோடு உணவில் கவனம் இருப்பதாய் காட்டிக் கொண்டான்.
“என்ன ண்ணா சிரிக்குறீங்க. மச்சான்ட்ட என்ன ஏதுனு கேட்டுச் சொல்லுங்க.”
“உனக்கு எங்க மச்சானே பரவால்ல தாயே. தெரியாம பேசிட்டேன்.”, என்றதில் தேவா சிரித்தாள்.
“பத்து மணிக்கு மேல வெளியில போணும் தேவா. ரெடி ஆயிடு.”, என்றவன் உணவை முடித்து எழுந்து கொள்ள நாத்தனார்கள் இருவரும் உதடு வளைத்து அண்ணியை கேலி செய்தனர்.
உணவை முடித்து தேவா அறைக்கு வந்த போது அதிரனிடம் வசமாய் சிக்கியிருந்தாள்.
விரும்பியே அவனது இரும்புப் பிடிக்குள் நின்றவள் புன்னகைக்க,
“உன்னை இனிமே வீட்டில் வைச்சுருந்தா டேன்ஞர் ரஞ்சு..”
“ஏன்?”
“இப்படி எல்லாரோடவும் நீ பேசுறதைப் பார்த்தா அப்பறம் உன்னை விட்டு நகர்றது எனக்கு ரொம்ப கஷ்டம்.”, என்றவன் கன்னத்தில் முத்திரை பதித்தான்.
“கொஞ்ச வருஷமா இதெல்லாம் யாருக்குமே சொல்லாத என் மனசிலிருந்த ஏக்கம் அதி..”, என்றதில் அவளது பின்னந்தலையைப் பற்றி தன்னோடு சாய்த்துக் கொண்டான்.
“அவினாஷை கஷ்டப் படுத்தக் கூடாதுனு எதையும் வெளிக் காட்டிக்க மாட்டேன். ஆனா அமைதியா இருக்குற அந்த வீடு ரொம்ப பயமுறுத்தும். கஷ்டப்படுத்தும்.”
“…”
“அதிலேயும் அவி ஸ்கூல் படிக்குற வயசில் நாங்க இரண்டு பேர் மட்டுமான அந்த வீட்டை பல நாள் நான் வெறுத்துருக்கேன்.
பக்கத்து வீட்டு பாட்டி ராத்திரி மட்டும் துணைக்கு வந்து படுத்துப்பாங்க.
என்னால சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில் எல்லாம் ஏன் என்னை இப்படி விட்டுட்டு போனீங்கனு அப்பா அம்மா மேல கோவம் கோவமா வரும்.
ஆத்திரத்தை எப்படி காட்டணும்னு தோணுதோ அந்த நேரத்தில் காட்டிடுவேன். நம்ம ஆபீசில் உங்க மனசை நீங்க சொல்றதுக்கு முன்னாடி அது தான் நடந்தது.”
“..”
“ஒவ்வொரு நாளும் கடக்குறதுக்குள்ளே அவ்வளவு கடுப்பா இருக்கும். இதெல்லாம் தான் என்னை ஏதோ உணர்ச்சியே இல்லாத ஒருத்தியா மாத்திருச்சு.
சின்ன வயசில் நான் இப்படியெல்லாம் கிடையாது ரொம்ப சந்தோஷமா ஜாலியா இருப்பேன். எல்லாரையும் போல எனக்கும் நிறைய ஆசைகள் இருந்தது.
ஆனால் நீங்க என் வாழ்க்கைக்குள்ளே வந்த நேரம் நான் ஒரு ரோபோவா தான் இருந்தேன்.
உணர்ச்சிகள் இல்ல சந்தோஷம் இல்ல எது மேலயும் ஆசை இல்ல. ஆனால் இப்போ உங்களோட ரொம்ப வருஷம் இதே மாதிரி சந்தோஷமா காதலோட வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.
இதுவரை இப்படி நான் சந்தோஷமா இருந்ததே இல்லனு சொல்ற அளவு மனசு சந்தோஷமா இருக்கு. ஒரு பொண்ணா எனக்கு இருக்க வேண்டிய எல்லா உணர்ச்சிகளும் இருக்கு அதி.
இது எல்லாத்துக்கும் நீங்க மட்டும் தான் காரணம். என்னை எனக்காக ஏத்துகிட்டு என்னை அப்படியே இருக்கவும் அனுமதிக்குற நீங்க என்னோட பல பிறவியோட மொத்த புண்ணியமா தெரியுறீங்க.”, என்றவள் நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு அவனின் கன்னத்தில் அவ்வப்போது இதழ் பதித்த படி பேசிக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாட்களில் அவள் பகிர்ந்திருக்காத அவளின் ஆழ் மன உணர்வுகள் அதிரனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
ஒரு பெண் தனித்து இருப்பது என்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே.
தன் தங்கைகளும், இந்த சொத்தும் அண்ணன் என தானும் தன் அன்னையும் பக்க பலமாய் இருந்தாலுமே சிறு சிறு விஷயங்களுக்கே கண்ணைக் கசக்கும் அளவு மென்மையானவர்கள் தானே!
தன்னவளை அதிரன் அந்த நேரம் அணைத்திருந்தது ஒரு தந்தையின் அரவணைப்பை உணர்த்துவதாய் இருந்தது.
ஆதுரமாய் முதுகை வருடிய படி நின்றவன் உச்சந்தலையில் மென்மையாய் இதழ் பதித்துக் கொண்டேயிருந்தான்.
error: Content is protected !!