Skip to content
Post Views: 689
கண்களில் நீர் திரண்டு நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. தாயின் குத்தலான பேச்சால் ஒரு வாய் உணவு கூட நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. வேலைக்குச் சென்றால் நிச்சயம் அவரது வாயை அடைத்திடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போனது.
இதில் மாமனின் மகளை எப்படியாவது தனக்குத் திருமணம் செய்து வைத்து, செலவில்லாமல் அண்ணன் வீட்டிலேயே தன்னைச் சேர்த்திட வேண்டும் என்ற பேராசை வேறு அவனது தாய்க்கு.
மகனைத் தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும், மருமகள் வந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தன் அண்ணன் பெண் கேட்டு வருவதற்கு முன்பு வரை வைதேகிக்கு இருந்தது; அதன் பின் அந்த எண்ணமெல்லாம் மாறிப்போனது.
திருமணம் முடிந்து பெண்ணைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பது போல, தன்னையும் மாமன் வீட்டிற்கு அனுப்பி வைக்கத் துடிக்கிறார். ஆனால் அவருக்குத் தெரியவில்லை, அவரது அண்ணனின் எண்ணம். வீட்டோடு மாப்பிள்ளையாகச் சொத்தையெல்லாம் தன் பெயரில் எழுதி வைப்பதாகச் சொல்லும் காரணத்தை மதியூரன் மட்டுமே அறிவான்.
Advertisement
அன்று வேலை தேடி அலைந்து, ஒரு வேலையும் கிடைக்காமல் களைத்துப் போய் வீட்டிற்கு வந்தவனுக்கு, உள்ளே மாமனின் சிரிப்புச் சத்தம் வெளியே நன்றாகக் கேட்டது. வீட்டு வாசலில் ஜோடிச் செருப்புகள் குவிந்து கிடப்பதைப் பார்த்து “ப்ச்” என்ற சலிப்புடன், ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தி உள்ளே நுழைந்தான்.
மாமா வீரபாண்டியும், அத்தை காமாட்சியும் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களோடு காமாட்சியின் அண்ணனும் அண்ணியும் கூட முறைப்படி வந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே பூ, பழத்தட்டு இருக்கவே, அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று அவனால் யூகிக்க முடிந்தது.
“வா மாப்புள! எங்க போயிட்டு வர்ற இந்த வெயில்ல?” என எழுந்து வந்து, அவன் தோளை அணைத்தபடி அழைத்துச் வந்து தங்களோடு அமர வைத்துக்கொண்டார் வீரபாண்டி.
Advertisement
“இ… இ… இன்டர்வியூ போ… போயிட்டு வ… வா… வர்றேன் மா… மா.”
Advertisement
“வேலை கிடைச்சிருச்சா தம்பி?” – காமாட்சியின் அண்ணி கேட்டார்.
“சொ… சொ… சொல்றோம்னு சொ… சொல்லி இருக்காங்க பெ… பெரியம்மா!”
“அவங்களும் உங்களைப் போல பதில் சொல்ல லேட் பண்ணுவாங்களா தம்பி?” என நக்கலாகக் கேட்டு நகைச்சுவை செய்வது போலச் சிரித்தாரவர். காமாட்சிக்கும் சிரிப்பு வந்தது. மதியூரன் நிமிர்ந்து தன் தாயைப் பார்த்தான். அவரும் பெயருக்குச் சிரிக்க, இவனுக்கு அவமானமாகப் போனது.
Advertisement
“ஏன் மாப்புள நீ வேலைக்கு போகணும்னு அலையுற? உன்னைத்தான் என்னோட வந்துடுன்னு சொல்றேன்ல! அங்க நம்மகிட்ட இல்லாத வேலையா? நீ வந்து வேலை செய்யணும்னு அவசியம் இல்லை, மேற்பார்வை பார்த்தா போதும். எதுக்கு உடல் வளைய வேலை பார்க்கணும்னு நினைக்கிற?” எனக் கேட்டு அவன் தோளை அழுத்த, அவனுக்கோ அருவருப்பாக இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, தன் தாய் தனக்காகப் பெண் கேட்டுச் சென்ற போது இதே வாய்தான், “வேலைக்குப் போகத் துப்பில்லாத பிச்சைக்கார நாய்க்கு என் பொண்ணைக் கொடுக்கணுமா? முடியாது. திக்குவாயனுக்கு என் பொண்ணைக் கொடுத்துக் காலம் பூரா அவ கஷ்டப்படணுமா? என் மகளுக்கு உன்னை விடப் பெரிய இடத்துல சம்பந்தம் முடிப்பேன். இனிமே இந்தப் பேச்சை எடுத்துட்டு இங்கே வராதே!” என்று விரட்டியடித்தார். அது நினைவில்லாமல், கொஞ்சமும் வெட்கமின்றி நடுக்கூடத்தில் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் தாயை நினைக்கவே கேவலமாக இருந்தது.
“நா… நா… நான் போய் ட்ரஸ் மா… மாத்திட்டு வ… வ… வர்றேன் மாமா,” என்று எழுந்து கொண்டவன், வேகமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்தி அதன் மேல் சாய்ந்து கொண்டான்.
கண்களை மூடி நின்றவனுக்கு அன்று மாமா அவமானப்படுத்தியது மட்டுமே நினைவில் ஆடியது. தாய் கூட தனக்காக ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாதது வேதனையைக் கூட்டியது. அன்று அவ்வாறு மறுத்தவர்கள், இன்று சம்பந்தம் பேச வரக் காரணம் என்னவென்று யோசித்தான்.
தன் மாமன் மகள் யாரையோ காதலிப்பதாகத் தன் நண்பன் கூறியது நினைவிற்கு வர, வேகமாக அவனுக்கு அழைத்து விபரத்தைக் கேட்டான். அவனும் நடந்ததை ஒன்று விடாமல் கூறிவிட்டான். இவனுக்கோ கண்கள் சிவக்கக் கோபம் பொங்கியது. வெளியே சென்று அவர் சட்டையைப் பிடித்து நாக்கைப் பிடுங்குவது போலக் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது முடியாதே! சுவரில் ஓங்கிக் குத்தி தன் கோபத்தைக் காட்டினான்.
குளியலறைக்குள் சென்று தண்ணீரைத் திறந்து அதன் அடியில் நின்றவனுக்கு, உடல் திகுதிகுவென எரிந்தது. வெகுநேரம் அப்படியே நின்றிருந்தான். பின் தாய் வந்து அழைக்கவும், உடை மாற்றி வெளியே வந்தான்.
“வா மாப்புள! ஜூஸ் குடி! ஏத்தா… மாப்பிள்ளைக்கும் கொடு!” என்று வீரபாண்டி அமர்ந்த வாக்கிலேயே குரல் கொடுக்க, வைதேகி சமையலறையிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார். வாங்கி மெல்லப் பருகினான்.
அவனது தங்கை அறையிலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. தலையைத் திருப்பி அந்த அறையைப் பார்த்தான். உடனே வீரபாண்டி, “என் பொண்ணும் மதியும் உள்ளதான் இருக்காங்க,” என்றவர், “தேன்மொழி!” என்று அழைத்தார்.
அவளும் வெளியே வந்தாள். “உன் அத்தான் வந்திருக்கான் பாரு,” என்றதும், “வாங்க அத்தான், எப்படி இருக்கீங்க? நாங்க வரும்போது நீங்க இல்லையே, எப்போ வந்தீங்க?” எனத் தேன்மொழி தேன் தடவியது போலப் பேசினாள். அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.
“இ… இ. இப்போதான் ம்மா.. மா.. வ… வந்தேன்.”
“நீங்க வேலை தேடிப் போயிருக்கிறதா அத்தை சொன்னாங்க. என்னாச்சு அத்தான்?” எனச் சாதாரணமாகப் பேசுவது போல நடித்தாள்.
“நம்ம வீட்ல ராஜா மாதிரி இருக்காம, ஒவ்வொரு இடமா வேலை தேடிட்டு இருக்கார் மாப்பிள்ளை!” என்றார் வீரபாண்டி.
“ஏன் அத்தான்? அப்பாதான் அவ்வளவு தூரம் சொல்றாரே! அங்க வந்தாத்தான் என்ன? இனி வேலை தேடி அலையாதீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் அங்கதானே இருக்கப் போறீங்க! அப்பா சொல்றது போல மேற்பார்வை பார்த்தால் போதும். உங்களுக்குக் கீழ வேலை செய்யப் பல பேர் இருக்காங்க,” என்றவளின் பேச்சு அவனுக்கு எரிச்சலையே தந்தது.
வைதேகி தன் மருமகளை எண்ணிப் பூரித்தார். ‘இப்பவே அத்தான் மேல் எவ்வளவு பாசம்! என் மகனை ராஜா போலப் பார்த்துக் கொள்வாள்’ என்று அவள் பேச்சை நம்பி எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நடிப்பிற்குப் பின் இருக்கும் உண்மையை மதியூரன் மட்டுமே அறிவான்.
கூடத்தில் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, தேன்மொழியின் அலைபேசி அலறியது. திரையைப் பார்த்ததும் பதறிப்போனாள். அவளது காதலன்தான் அழைக்கிறான். வேகமாக அழைப்பைத் துண்டித்தாள். மீண்டும் மீண்டும் அழைப்பு வர, வீரபாண்டி அவளை எரிப்பது போலப் பார்த்தார். காமாட்சியோ சங்கடமாக நெளிந்தார்.
“உன் ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க, போய் பேசுமா,” என்று வைதேகி அவளை அனுப்பி வைத்தார். அவளும் அங்கிருந்து நகர்ந்து, தோட்டத்திற்குச் சென்று பேசினாள். வீரபாண்டி காமாட்சியை முறைக்க, அவரோ தலைகுனிந்தார். இதையெல்லாம் மதியூரன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
“மா… மா… மாமா! நா… நான் தே.. தேன்மொழி கி… கிட்ட பே… பேசிட்டு வர்றேன்,” என்று எழுந்தான். ‘என்ன கேட்டுத் தொலைப்பானோ, அவளோ உண்மையைச் சொல்லிவிடுவாளோ’ என்ற அச்சம் வீரபாண்டிக்கும் காமாட்சிக்கும் இருந்தது. அதை மறைத்து, “சரி மாப்புள,” என்றார்.
அவனும் தோட்டத்திற்குள் மெல்ல நுழைந்தான். அவள் பேசுவது காதில் விழவே அப்படியே நின்றான்.
“நீ கவலைப்படாதே! அவன் தாலி கட்டினாலும் உன்னோடுதான் வாழ்வேன். அவன் பேருக்குத்தான் புருஷன். அவனால ஒண்ணும் கிழிக்க முடியாது,” என்றாள். அங்கே அவன் ஏதோ சொல்ல, “ச்சீ…” என அவனது அந்தரங்கப் பேச்சைக் கேட்டுச் சிணுங்கினாள்.
மதியூரனுக்கோ அவளது முடியைப் பற்றிச் சுவரில் முட்ட வைக்க வேண்டும் என்றளவுக்குக் கோபம் வந்தது. நண்பன் சொன்னது உண்மையென உறுதியானது.
தேன்மொழியும் சரவணனும் பள்ளிக்காலத்திலிருந்தே காதலித்து வந்தனர். வெவ்வேறு சாதியினர் என்பதால் வீட்டில் தெரிந்து கண்டித்தனர். அப்போதுதான் வைதேகி பெண் கேட்டுச் சென்றபோது, வீரபாண்டி அவமதித்து அனுப்பினார்.
இதற்கிடையில் தேன்மொழி தன் காதலனுடன் ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து வீரபாண்டியின் ஆட்கள் அவர்களைக் கண்டுபிடித்துப் பெரியவர்கள் முன்னிறுத்தி பிரித்து வந்தனர்.
வீட்டிற்கு வந்தவள் கர்ப்பமாக இருக்கவே, அதைக் கலைத்தனர். ஊரில் விஷயம் தெரிந்ததால் யாரும் பெண் எடுக்க முன்வரவில்லை. அதனால்தான், சென்னையில் இருக்கும் தங்கையின் மகனைத் தேடி வந்திருக்கின்றனர். இவையெல்லாம் நண்பன் மூலம் மதியூரன் அறிந்திருந்தான்.
‘மேற்பார்வை பார்த்தால் போதும்’ என்று அவர்கள் சொன்னதன் உண்மையான அர்த்தம் இப்போது புரிந்தது. இவர்கள் இருவருக்கும் விளக்கு பிடிக்கும் வேலைக்காக தான் தன்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டிருக்கிறாள்.
மாமனோ விலை போகாத மாட்டைச் சொத்தைக் காட்டித் தன் தலையில் கட்டப் பார்க்கிறார் என்பது விளங்க, விறுவிறுவெனக் கூடத்திற்கு வந்தான்.
“என்ன மாப்புள, பேசிட்டியா?” எனத் தங்களுக்குள் இருந்த பதற்றத்தை மறைத்துக் கேட்டார் வீரபாண்டி. அவனும் “ம்ம்” என்றான். காமாட்சியின் அண்ணன் சைகை காட்ட, வீரபாண்டி பேச ஆரம்பித்தார்.
“என்ன மாப்புள சொல்றீங்க? என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”
“அவன் என்ன அண்ணே சொல்லப் போறான்? கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதான் சொல்லுவான்,” என்றார் காமாட்சி.
அவனோ, “இ… இ… இல்ல மாமா! எ… எ… எனக்கு இப்போதைக்கு க… க… கல்யாணம் வேணாம். நா… நான் வே… வேலைக்குப் போகணும், ச… சம்பாதிக்கணும். எ எ என் பொண்டாட்டிக்கு என் காசுல எ எல்லாத்தையும் வாங்கிக் கொடுக்கணும். இ… இ.. இ இன்னொருத்தருக்கு உ… உரிமையானதை எ… என்னோடதுன்னு சொல்ல எனக்கு விருப்பம் இல்ல! இ… இன்னொருத்தர வே… வேலை பார்க்க விட்டுட்டு என்னால பெ… பெயரெடுக்கவும் மு… முடியாது. எ என்னை ம ம மன்னிச்சிடுங்க மாமா!” என்றவன், தேன்மொழியை ஒருமுறை அழுத்தமாகப் பார்த்துவிட்டு உள்ளே செல்ல முற்பட்டான்.
“நில்லுடா! நீ பாட்டுக்கு வேண்டாம்னு சொல்லிட்ட! உன்னை நினைச்சிட்டு இருக்கிற இந்தப் பிள்ளைக்கு என்ன பதில் சொல்றது?” என வைதேகி அவனை மறித்துக் கேட்க, அவளை நக்கலாகப் பார்த்த மதியூரன்,
“தே… தே… தேன்மொழி மேல எ… எனக்கு எந்த அ… அபிப்பிராயமும் இல்லை! அ அ அதேபோல என்னைத்தான் க… கட்டிக்கணும்னு நி… நினைச்சிருந்தா, அ… அ… அந்த எண்ணத்தை மா.. மா… மாத்திக்கச் சொல்லுங்க,” என்று கூறி கதவை முகத்தில் அடித்தது போலச் சாத்திவிட்டுச் சென்றான்.
வைதேகி சங்கடமாக நெளிய, வந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் சென்றதும் வைதேகி அவன் அறைக்கதவைத் தட்டி, தன் கூர்மையான சொற்களால் அவனைத் துளைத்தெடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை அவனைச் சம்மதிக்க வைக்க இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.
மதியூரனைச் சோதனை செய்யவே காகிதத்தில் அடங்கிய கதையின் சிறு பகுதியை அவனிடம் நீட்டி வாசிக்கச் சொன்னாள் மதுரா! அவனும் மூச்சை இழுத்துவிட்டு, மிகச் சாதாரணமாக, ஏற்ற இறக்கத்துடன் வாசிக்க, அதிலேயே மெய்மறந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் மதுரா!
.
error: Content is protected !!