Skip to content
Post Views: 125
மதியூரன், மதுராவின் வீட்டில் வாடகைக்குக் குடியேறி ஒரு வார காலம் ஓடியது. இருவரும் வேலை, வீடு என இருந்தாலும், ஒருவருக்கொருவர் இன்னும் பழையபடி பேசிக்கொள்வது இல்லை.
அவன் கூடத்தில் இருந்தால் அவள் அவளது அறையில் அடைந்து கிடப்பாள். சில நேரம் அவளது ஸ்டுடியோவில் கதை வாசிக்கச் சென்று விடுவாள். சாப்பிடும் நேரம் மட்டுமே அவனுடன் செலவழிக்க, அவளுடன் மனசு விட்டுப் பேச முயற்சி எடுத்தாலும் அது வீணாகத்தான் போனது.
அன்று ஞாயிறு, விடுமுறை நாள் என்பதால் டப்பிங் வேலை இல்லாததால் இருவரும் வீட்டில் தான் இருந்தனர். இன்று எப்படியாவது அவளிடம் தனது சூழ்நிலை பற்றி முழுமையாகப் பேசிவிட வேண்டும் என்று காத்திருந்தான்.
ஆனால், அதற்கு வாய்ப்புத் தராமல் அவளோ நீண்ட பெரிய கதையை வாசிக்க வேண்டும் என்று ஸ்டுடியோவிற்குள் அடைந்துகொண்டாள்.
Advertisement
மதியூரனோ, ‘அவள் வெளியே வருவாள்’ என்று கதவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் சலித்துப் போனான்.
பின் அவனே எழுந்து சமையலறைக்குள் சென்று சமைக்கத் தொடங்கினான். அவளோ அவனை மறந்து, வீட்டில் தான் மட்டுமே இருப்பதாக எண்ணி, அந்த அறையே கதியென்று கண்ணீர் வடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
காரணம், காலையில் அவளது சித்தி அழைத்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டுத்தான். அவள் அவளது ஸ்டுடியோவிற்குள் நுழைந்த நேரம் அவளது சித்தி அவளுக்கு அழைத்தார்.
Advertisement
“சொல்லுங்க சித்தி” என்று வேண்டா வெறுப்பாகப் பேசினாள்.
Advertisement
“உனக்கு ஒரு வரன் வந்திருக்கு மதுரா! மாப்பிள்ளை என்ஜினீயர்; மூக்கும் முழியுமா அழகா இருக்கான்… கல்யாணம் பண்ணினா உன்னைத்தான் பண்ணுவேன்னு நிக்கிறான்” என்று சில பொய் வார்த்தைகளுடன் ஆச்சரியமாகச் சொல்ல,
இவளுக்கோ சந்தேகமாக இருந்தது. “சித்தி! நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்லை… அழகா மூக்கும் முழியுமா இருக்குறவன் எப்படி என்னைத்தான் கட்டிப்பேன்னு நிப்பான்? நம்புற போல இல்லை சித்தி.”
“அட! உண்மையத்தான் சொல்றேன். உன்னையும் உன் சூழ்நிலைய பத்தியும் சொன்னேன், ஓகே சொல்லிட்டான். அந்தக்குடும்பமும் சரின்னு சொல்லிடுச்சு” என்று அவர் சொல்ல, அவளால் நம்ப முடியவில்லை.
Advertisement
“ஆனா… அவங்க” என்று இழுக்க, அவளுக்கோ வெற்றுப் புன்னகை உதட்டில் தோன்றியது.
“என்ன, வரதட்சணை கூடக் கொடுக்கணுமா?”
“ச்ச… வரதட்சணை வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றிட, “அப்படியா? அப்போ எதுக்கு ‘அவங்க’னு இழுத்தீங்க?”
“அது மதுரா! தம்பிக்கு…” என்று மேலும் இழுக்க,
“அவருக்கு என்ன?”
“மாப்பிள்ளைக்கு நாற்பது வயசு! ஆனா பார்த்தா அப்படித் தெரியாது. பன்னிரண்டு வயசுல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க! மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் மாப்பிள்ளையோட முதல் சம்சாரம் கேன்சர் வந்து இறந்து போச்சு! உன் நிலைமையைச் சொன்னதும் மாப்பிள்ளை உன் போட்டோவைக் பார்க்காமலேயே ஓகே சொல்லிட்டார். உனக்குச் சம்மதமான்னு கேட்கச் சொல்லியிருக்கார். என்ன சொல்ற?” எனக் கேட்டார்.
அவள் அமைதியாக இருந்தாள்.
“மதுரா! என்னடா சித்தி இப்படி ஒரு வரனைக் கொண்டு வர்றாங்கன்னு நினைக்காத! ஊரையே தேடி அலைஞ்சு எடுத்தாலும் உனக்கு வரன் கிடைக்கப் போறது இல்லை. அழகா இருந்தாலும் உன் நிறத்துக்கு வரன் அமையலையே! நம்ம சொந்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கு, உன் அக்கா மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலையான்னு! ஒரு விசேஷத்துக்கு எங்கும் போக முடியலை, உன்னைத்தான் கேக்குறாங்க. என்ன சொல்றது நானு, சொல்லு! நல்ல குடும்பம், கவர்மென்ட் என்ஜினீயர். அந்தப் பொண்ணுங்களும் அமைதியான பிள்ளைங்க, அதுங்களுக்கு அம்மாவா இருக்கப் போற! அம்மா இல்லாத உனக்கு அந்த வேதனை தெரியும் தானே” என்றவர், “என்ன சொல்ற? இன்னைக்கு வரச் சொல்லட்டுமா? நல்ல காரியத்துக்கு நாள் கிழமை எதுக்குப்பார்த்துக்கிட்டு…” என்று பேச,
அவளோ விரக்தியில், “சரி, வரச் சொல்லுங்க” என்றாள். கண்களில் நீர் நிக்காமல் வழிந்தது.
தாய், தந்தை இருந்தால் சித்தியிடம், “எதற்காக என் மகள் இரண்டாம்தாரமாகச் செல்ல வேண்டும்?” என்று கேட்டுச் சண்டையிட்டிருப்பார்கள். உடன் பிறந்த யாராவது இருந்திருந்தால், “என் தங்கைக்கு நான் மாப்பிள்ளை பார்த்துக்கிறேன், நீங்க உங்க வேலையைப் பாருங்க சித்தி” என்று சொல்லியிருப்பார்கள்.
இரண்டும் இல்லாத இந்த அநாதைக்காகப் பேசவோ, சண்டையிடவோ, ஆதரிக்கவோ யாருமில்லாததால், ஏனோ தானோவென்று பார்த்துக்கட்டி கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என நினைக்கும் சொந்தத்தை என்னவென்று சொல்ல?
இதுவே வரன் அமையவில்லை என்றால் அவரது மகளை இரண்டாம்தாரமாகக் கல்யாணம் செய்து கொடுப்பார்கள்? யாரும் கேட்க நாதியில்லாத காரணத்தினாலேயே இவ்வாறெல்லாம் செய்கிறார்கள். வேண்டாம் என்று மறுக்க ஒரு நொடியாகாது. ஆனால், ‘தன்னால்தான் அவர்களுக்குக் கல்யாணம், காதுகுத்து என விசேஷங்களுக்குப் போக முடியாமல் இருக்கிறது’ என்று பேசும்போது என்ன செய்வது? ‘சரி’ என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
தன்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம், கல்யாணம் தானே… செய்துவிட்டுப் போகலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். இப்போது தாய் உடன் இல்லாததை எண்ணிக் கண்ணீர் வடித்துக்கொண்டு, எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
கதவைத் தட்டும் சத்தம் கேட்க, தன்னிலை மறந்து அமர்ந்திருந்தவள் அதிலிருந்து மீண்டு வந்தாள். கதவைத் தட்டும் சத்தம் பலமாகக் கேட்க, எழுந்து கதவைத் திறந்தாள்.
“என்ன துரா?! க… கதை ரொ… ரொம்பப் பெருசா! வா… வாசிச்சு முடிச்சிட்டியா? இ… இல்ல இ… இன்னும் இருக்கா?” எனச் சிரித்தபடி கேட்டதும், அங்கே அப்படி ஒரு ஜீவன் வீட்டிலிருப்பதே அப்போதுதான் இவளுக்கு நினைவுக்கு வந்தது.
தலையில் கை வைத்து நின்றவள் மணியைப் பார்க்க, இரண்டு எனக் காட்டியது.
“ஐயோ!!! சாரி மதியூரன்! நான் மட்டும் தானே இருக்கேன்னு நினைச்சுட்டு அப்படியே இருந்துட்டேன்… ரியலி சாரி. இருங்க, ஒரு பத்து நிமிஷத்துல ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன். இல்லை கடையில வாங்கிச் சாப்பிடலாமா?” எனப் பதற்றமாகக் கேட்டாள்.
“ரி…. ரிலாக்ஸ் துரா! ரிலாக்ஸ்! நா… நா… நானே ச… சமைச்சுட்டேன். வா… வா சாப்பிடலாம்” என்றான் புன்னகையுடன்.
அவனை அதிர்ந்து பார்த்து, “நீங்க சமைச்சீங்களா?!”
“எ… எ… எனக்குச் ச… ச… சமைக்கத் தெரியும் துரா! சா… சா… சாப்பிடுற அளவுக்குச் ச… சமைப்பேன். நீ… நீ… தை… தைரியமா சாப்பிடலாம். வா!” என்று அவன் செல்ல, அவளும் அவனைத் தொடர்ந்தாள்.
எண்ணெய்க் கத்திரிக்காய்ப் புளிக்குழம்பு, சௌசௌ கூட்டு, அப்பளம் என அடுக்கி வைக்க, அதன் வாசனையே அவளை இழுத்தது.
எண்ணெயோடு கத்திரிக்காயைப் பார்க்க அவளுக்கே எச்சில் ஊற, வேகமாகச் சாதத்தில் ஊற்றிப் பிசைந்து ஒரு வாய் வைத்தவளுக்கு அட்டகாசமாக இருந்தது. அந்தக் குழம்பும் கைப்பக்குவமும் தாயை நினைவூட்டியது.
“எ… எப்படி இ… இருக்கு துரா! வா… வாயில வை… வைக்கிறது போ… போல தானே இருக்கு?”
“சமைச்ச கைக்குத் தங்கம் போடலாம்” என மனம் திறந்து பாராட்டினாள்.
“ம்ம்.. பி… பிரேஸ்லெட் வா… வாங்கிப் போ…. போடு” என்று சொல்லிச் சிரிக்க, அவளும் சிரித்தாள்.
“அம்மா இப்படித்தான் சமைப்பாங்க! ரெண்டு மூணு தடவை சோறு போட்டுச் சாப்பிடுவேன்…” என்றவள் பெருமூச்சு விட்டபடி, “ரொம்ப நல்லா இருக்கு மதியூரன்” என்று சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றவளையே வெறித்தான்.
கை கழுவிவிட்டு அறைக்குள் தூங்கச் சென்றவளை, “துரா! உ… உன் கி… கிட்ட கொ… கொஞ்சம் பேசணும்.”
“ரொம்ப டயர்டா இருக்கு, அப்புறம் பேசலாம்” என்று உள்ளே சென்றுவிட்டாள். அவனும் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவனது அறையில் முடங்கினான்.
மாலை ஐந்து மணி அளவில் கதிரும், ரம்யாவும் வந்தனர். அவர்களை வரவேற்றது என்னவோ மதியூரன்தான்.
“என்ன மதியூரன், மதுகிட்ட பேசுனீங்களா?”
“இ… இல்லை ப்ரோ! எ… எ… எங்கே பே… பேசணும்னு சொ… சொ… சொன்னாலே ரூம்க்குள்ள போய் அ… அ… அடைஞ்சுக்கிறா! எ… எனக்கு எ… என்ன பண்றதுன்னு தெ… தெரியலை. ஈ… ஈவினிங் பே… பேச முயற்சி ப… பண்றேன் ப்ரோ!”
“நிலைமை கைமீறிப் போயிட்டு இருக்கு ப்ரோ.”
“எ… எ… என்ன சொ… சொ சொல்றீங்க!”
“இப்போ மதுவைப் பொண்ணு பார்க்க வராங்களாம். அவங்க சித்தி போன் பண்ணி அவளைத் தயார் பண்ணச் சொல்லி ரம்யாகிட்ட சொல்லியிருக்காங்க!” என்ற விஷயம் நெஞ்சில் வலிகொணர அதிர்ந்தான்.
“இ… இது அ… அவளுக்குத் தெ… தெரியுமா ப்ரோ?”
“அவ தான் வரச் சொல்லியிருக்கா!” என்றான். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொண்டவன், நேராக அவளது அறையின் முன் நின்று, “துரா! துரா!” என அழைக்க, அவள் வந்து நின்ற கோலத்தைக் கண்டு ஆடிப் போனான்.
மிதமான சில்க் சேலை உடுத்தி, சிறு நகைகள் அணிந்து, லேசான ஒப்பனையுடன் வந்து நின்றாள்.
“சொல்லுங்க மதியூரன், என்ன விஷயம்?”
“உ… உன் கி… கிட்ட பே… பே… பேசணும் துரா!”
“என்ன பேசணும், சீக்கிரமா சொல்லுங்க யூரன்? மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துடுவாங்க!”
“துரா நா… நான்…” எனும்போது லட்சுமி வந்தார்.
“என்ன மதுரா ரெடியாகிட்டியா?” என அவள் அருகே வந்தவர், “என்ன நீ சிம்பிளா கிளம்பியிருக்க? இன்னும் கொஞ்சம் நகைகளை எடுத்துப் போட்டுக்க வேண்டியதுதானே? பட்டுச் சேலை இல்லையா?” எனச் சலிப்பாகக் கேட்க,
“அவங்களுக்கு இது போதும் சித்தி” என்றாள் சலிப்புடன். அவளை முறைத்துவிட்டு, “ரம்யா! பஜ்ஜி, மிக்சர் வாங்கச் சொன்னேனே, வாங்கிட்டியா?”
“வாங்கிட்டேன் மா!”
“சரி வா டீ போடுவோம்… மாப்பிள்ளை வீட்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்” என அவளை அவசரப்படுத்தினார். ரம்யா உள்ளே செல்ல, அவரைப் பின்தொடர்ந்து செல்ல இருந்தவர்,
“ஆமா, இது யாரு?” என மதியூரனைப் பார்த்துப் பாதியிலேயே கேட்டார்.
“இவர் மதியூரன் அத்தை! இங்கதான் பேயிங் கெஸ்ட்டா இருக்கார்” என்றதும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“என்னது, பேயிங் கெஸ்ட்டா? என்னடி மது இதெல்லாம்? ஒரு வயசுப் பையனைப் போய் பெரியவங்க இல்லாத வீட்ல தங்க வச்சிருக்க! மாப்பிள்ளை வீட்ல கேட்டா என்ன நினைப்பாங்க…? வெளியே எல்லாரும் என்ன நினைப்பாங்க?” எனப் படபடவெனக் கோபம் கொள்ள,
“சித்தி! அவர் என்னோட பிரெண்ட், ரொம்ப நல்லவர். வெளிய என்ன பேசிக்கிறாங்கன்னு எனக்குக் கவலை இல்லை. கொஞ்ச நாளைக்கு அவர் இங்கதான் இருப்பார்” என்று விட்டுக்கொடுக்காமல் தீர்க்கமாகச் சொல்ல,
“நல்லது நடக்கப் போற நேரத்துல இதெல்லாம் தேவையா மதுரா! இப்போ அவங்க கேட்டால் என்னன்னு சொல்றது?”
“என் தம்பின்னு சொல்லிக்கிறேன் அத்தை” என்று கதிர் சொல்ல, “என்னமோ பண்ணுங்க” என்று தலையில் அடித்துக்கொண்டார்.
அவர் உள்ளே சென்ற நேரம், “துரா!” என்று பேச எத்தனிக்க, வாசலில் கார் வந்து நின்றது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துவிட்டனர். அதிலிருந்து அனைவரும் இறங்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சமையலறையிலிருந்து வெளியே வந்த லட்சுமி இருவருக்கும் நடுவே புகுந்து, அவனை விலக்கிவிட்டு வெளியே சென்று அவர்களை வரவேற்றார்.
மொத்த குடும்பமும் கூடத்தில் அமர்ந்திருந்தது. மாப்பிள்ளையாக வந்த நந்தன் தன் இரு மகள்களையும் பக்கத்தில் அமரவைத்து உட்கார்ந்திருந்தான். அனைவரும் பொண்ணைத் தான் அளவிட்டனர்.
அவளோ யாரையும் பார்க்காமல் தரையைப் பார்த்த வண்ணம் இருந்தாள். நந்தன் மதுராவை அளவிட, உள்ளுக்குள் கொதித்துப் போனான் மதியூரன்.
“அப்பா! அவங்க ரொம்பக் கருப்பா இருக்காங்க” எனப் பக்கத்தில் அமர்ந்திருந்த மகள் சொல்ல, அவளது முதுகைத் தட்டி ‘அப்படிச் சொல்லக் கூடாது’ என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாலும், சபையில் அனைவரும் அதைக் கவனிக்க… இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்களை மூடித்திறந்தாள் மதுரா. மதியூரனோ கைமுஷ்டியை இறுக்கினான்.
“பொண்ணு போட்டோவை விட நேர்ல கொஞ்சம் கருப்பா இருக்கு” என அத்தை முறையில் ஒரு பெண் சொல்ல, “சும்மா இருடி” என்று மாப்பிள்ளையின் தாயார் அதட்டினார்.
வெளிப்படையாகத் தெரியாது என்று பேச, அதுவோ அப்படியே அவளது மனதைத் தாக்கியது… இன்னும் கோபம் அதிகமானது மதியூரனுக்கு.
ஆனால், அவர்கள் பேசிக்கொள்வது காதில் விழுந்தாலும் காரியம் ஆக வேண்டும் என்று, இதைக் கவனிக்காதபடி இருந்த சித்தியைக் கண்டு விரக்தியில் சிரித்து கொண்டாள்.
“என்னப்பா, பொண்ணை நேர்ல பார்க்கணும்னு சொன்ன பார்த்தாச்சு. பேசுறதா இருந்தா போய் தனியாப் பேசுப்பா!” என்று தாயார் சொல்ல,
“இதுல தனியாப் பேச ஒண்ணுமே இல்லை! லட்சுமி ஆன்டி என்னைப்பற்றிச் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கக் காரணமே என் ரெண்டு பொண்ணுங்களுக்காகத்தான். அவளுக்குத் தாய்க்குத் தாயா இருந்து பார்த்துகிட்டாலே போதும்… அவங்க மனசு புரிஞ்சு நடந்துக்கிட்டாலே போதும், அவங்க எந்த விதத்திலேயும் கஷ்டப்படக் கூடாது, கஷ்டப்படுத்தக் கூடாது. இதைத் தவிர வேறு எந்த ரீசனுக்காகவும் நான் கல்யாணம் பண்ணிக்கல! இதுக்குச் சம்மதம்னா எனக்கும் சம்மதம்” எனத் தன் மகள்களுக்கு நிரந்தர கேர்டேக்கராக இருந்தால் மட்டும் போதும் என்று மாப்பிள்ளை தன் மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்க,
“லட்சுமி! பொண்ணுக்கு இதுல சம்மதமா? கேட்டுச் சொல்லு” என்றார் நந்தனின் தாயார்.
“மது, நீ என்ன சொல்ற?”
ரம்யா அருகே வந்து அவள் காதில், “வேணாம்னு சொல்லிடுடி, இதுல நீ வாழப்போறதே இல்லை… யாருக்காகவும் உன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணணும்னு இல்லை, வேணாம்னு சொல்லு” என்று அவளது காதைக் கடிக்க… அவளோ புன்னகைத்தபடி, சபையைப் பார்த்து, “எனக்கு இதுல முழு சம்மதம்தான்” என்று மதியூரனின் நெஞ்சில் இடியை இறக்கினாள். நந்தன் அவளையே யோசனையாகப் பார்க்க, அவளோ அமைதியாக இருந்தாள்.
பின் நாள் குறித்தனர். கல்யாணத்தை ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிளாக முடிக்க வேண்டும் என்று நந்தன் சொல்ல, ‘சரி’ என்று அனைத்தையும் பேசி முடித்துவிட்டுத்தான் அங்கிருந்து அனைவரும் கிளம்பினார்கள்.
“அப்பாடா? இப்போதாண்டி நிம்மதியா இருக்கு! இந்தக் கல்யாணம் நல்லபடியா முடிந்தாலே போதும், என் அக்கா ஆத்மா சாந்தியடைந்திடும்” என்றவர், பொய்யாகக் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு, “இவளுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுது, என் அக்கா கூட இல்லாம போயிட்டாளே” என்று வழியாத கண்ணீரைத் துடைக்க, அந்த நாடகத்தை அனைவரும் வெறித்தனர்.
“அவங்க மட்டும் இருந்திருந்தால் இந்த வரனைக் கொண்டு வந்த உங்களை நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டிருப்பாங்க! அவங்கள் இல்லாததாலதான் இப்படி ஆடுறீங்க நீங்க” என ரம்யா மனம் கேட்காமல் கேட்டுவிட்டாள்.
“ஏய்!! என்னடி வாய் ரொம்ப நீளுது! நல்ல வரனைத்தானே இவளுக்குக் கொண்டு வந்திருக்கேன். அந்தத் தம்பிக்கு என்ன குறைச்சல், நல்ல ராஜா கணக்காத்தானே இருக்கான்…” என்று எகிறிக்கொண்டு வந்தார்.
“இருக்கட்டும், அதுக்காக? இரண்டாம்தாரமாகக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா? உங்க மகளா இருந்தா இப்படிச் செய்வீங்களா? அதானே… கடமையைச் செய்யுறேன் என ஏனோ தானோன்னு மதுராவைத் தள்ளிவிட்டா போதும்னு நினைக்கிறீங்க நீங்க” என்றான் கதிர்.
“ஆமா! கொண்டு வந்த நல்ல வரனையெல்லாம் ஆத்தாளும் மகளுமா சேர்ந்து பேசி வேண்டாம்னுதானே சொன்னாளுங்க! வயசு ஏற ஏற வேற எப்படி மாப்பிள்ளை வருமா இவளுக்கு? இதுல கருப்பா வேற இருக்கா, இந்தச் சம்பந்தம் முடிஞ்சதே பெருசு! இங்க பாருடி மது! உனக்கு நான் பார்த்துக்கொடுத்தது நல்ல வரன்தான். மாப்பிள்ளை வெளிப்படையா சொன்னா என்ன, அப்படியேவா எப்பவும் இருக்க முடியும்? நீ நடந்துக்கிறதைப் பொறுத்துதான் உன் வாழ்க்கை மாறும். இதுங்க பேச்சைக் கேட்டுக்கா கல்யாணத்தை வேணாம்னு சொல்லிடாத! நீங்களும் ஏதாவது பேசி இவ மனசை மாத்திடாதீங்க! நான் வர்றேன்” என்று செல்ல இருந்தவர், உடைந்து போய் ஓரமாக நிற்கும் மதியூரனிடம் வந்து, “தம்பி, சீக்கிரமா நல்ல இடமாப் பார்த்துக் காலி பண்ணிட்டுப் போயிடு! அப்புறம் மாப்பிள்ளை வீட்ல பதில் சொல்லிட்டு இருக்க முடியாது” என்றார்.
“நா… நா… நாளைக்கே கா… கா… காலி ப… ப…. பண்ணிடுவேன் மா” என்றான் தழுதழுத்த குரலில்.
மதுராவிற்குச் சுருக்கென்று இருந்தது.
“சரி, சீக்கிரமா காலி பண்ணிடுப்பா,” என்று அவர் சென்றுவிட,
“ஏன் மது இப்படி? இந்தச் சம்பந்தம் விட்டா உனக்கு மாப்பிள்ளை கிடைக்காதா? எதுக்கு நீ சம்மதிச்ச?”
“எனக்கு இந்த மாப்பிள்ளையே அதிகம் தானே அண்ணா? நீங்களும் பார்த்துட்டுத் தானே இருக்கீங்க, எனக்கு அமைந்ததா என்ன? கருப்புன்னு ஒதுக்கி வச்சாங்க தானே! இத்தனை வருஷமா கிடைக்காத வரன் இனி கிடைச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இல்லை… இந்த வரனே எனக்குப் போதும் அண்ணா! எல்லா இடத்திலும் நிராகரிக்கப்பட்டாச்சு! இதுக்கு மேலே எனக்குத் தெம்பு இல்லை… பரவாயில்லை, என் வாழ்க்கை எப்படிப் போகட்டுமோ அப்படியே போகட்டும்! என்னைப்போல கருப்பா பொண்ணுங்க பிறக்கவே கூடாது அண்ணா! எவ்வளவு காலங்கள் மாறினாலும் இது மாறாது” என்று அறைக்குள் சென்றுவிட்டாள்.
“இனி அவ மனசை மாத்த முடியும்னு எனக்குத் தோணலை…” என்றான் கதிர் மதியூரனைப் பார்த்து.
“அ… அவ ம… ம… மனசுல இ… இ… இவ்வளவு ர…ர… ரணத்தை உண்டு பண்ணினது நா… நா… நான் தான். எ… எ… என்னால்தான் அ… அவ இ… இந்த க்… கல்யாணத்துக்குச் ச… சம்மதிச்சா! நா… நா… நான் என் கா… காதலைச் சொ… சொ… சொல்லியிருக்கணும்! எ… என்னால்தான்” என முகத்தை மூடிக்கண்ணீர் விட்டான்.
“இப்பவும் ஒண்ணுமில்லை மதி! நீங்க உங்க காதலைச் சொல்லுங்க! நிச்சயம் அவ உங்களை ஏத்துப்பா.”
“எ… எ… எனக்கு ந… ந… நம்பிக்கை இல்லை ப்ரோ! எ… எ… என்னை வெறுத்துட்டான்னு தோ… தோ… தோணுது.”
“அதெல்லாம் இல்லை, நீங்க உண்மையைச் சொல்லுங்க மதி! அவ மனசு மாறுவா! எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் சேரணும், ப்ளீஸ் முயற்சி பண்ணுங்க… இந்த வாய்ப்பையாவது தவறவிடாதீங்க” என ரம்யாவும் சொல்ல, தலையை அசைத்தான். அவர்கள் சென்றுவிட்டனர்.
அவள் வெளியே வருவாள் என்று காத்திருந்தான். அவள் வருவது போலத் தெரியவில்லை. இருவருக்கும் சேர்த்துச் சேமியா செய்தவன், அவளது அறைக் கதவைத் தட்டினான்.
முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
“சா… சா… சாப்பிடலாம் துரா.”
“எனக்கு பசிக்கலை, நீங்க சாப்பிடுங்க யூரன்” என்றாள். குரல் உள்ளே சென்றிருந்தது. அழுதிருப்பாள்போலும், கண்கள் சிவந்திருக்க…
“கொ… கொஞ்சம் சா… சாப்பிடு துரா, வெ… வெ… வெறும் வ… வயிறாக இருக்கக் கூடாது, வா” என்றழைக்க, அவள் வருவதாகத் தெரியவில்லை.
“ப்ளீஸ் துரா! உ… உன் கி… கிட்ட கொ… கொஞ்சம் பேசணும் துரா! அ… அதுக்காகவாவது வா!”
“இனி என்ன பேச வேண்டியது இருக்கு? அதான் எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேனே நான்” என்றாள்.
“அப்போ எ… எ… என்னோட பே… பே… பேசக் கூடாதுன்னு இ… இ… இருக்கியா துரா! அ… அ… அவ்வளவு தூரம் எ… எ… என்னை வெறுத்துட்டியா?”
“உங்களை வெறுக்கவோ நினைக்கவோ நான் யாரு யூரன்? நான் என் விருப்பத்தைச் சொன்னேன். நீங்க உங்க விருப்பத்தைச் சொன்னீங்க, அதோட முடிஞ்சு போச்சு! இதுக்கு மேலே அதை ஏன் கிளறுறீங்க?!”
“உ… உ… உன்னை வேணாம்னு சொ… சொ… சொன்னதுக்குக் கா… காரணம் இ… இருக்கு துரா! அ… அ… அதைக்கேளு.”
“எதுக்கு யூரன் கேட்கணும்? கேட்டு என்னை நானே ரணமாக்கணுமா? உங்களுக்கு அழகான மனைவி அமையணும்கிறது தானே உங்க விருப்பம்… அதுல என்ன விளக்கம் சொல்லிடப் போறீங்க! அப்படிச் சொல்லி இன்னும் என்னை நோகடிக்கணுமா சொல்லுங்க?”
“துரா! அது உன் காதலை மறுக்க நான் சொ… சொன்ன பொய்” என்றதும், அவளோ விரக்தியாகச் சிரித்தாள்.
“ப்ளீஸ் யூரன்! மனசுல என் காதலை மறுக்கணும்னு நினைச்சுட்டீங்க… இதுக்கு மேலே நீங்க எந்தக் காரணம் சொன்னாலும் வேண்டாம். எதுவும் பேச வேண்டாம். நான் இந்த முடிவுல இருந்து மாறப் போறது இல்லை, ப்ளீஸ் இதைப்பற்றிப் பேச வேண்டாம், நீங்க சாப்பிட்டுப் படுங்க யூரன்” என்று கதவைச் சாத்திவிட்டுக் கண்ணீர் வடித்தாள்.
அவளை நிராகரித்த பாவத்திற்குத் தண்டனையை இப்போது அனுபவிக்கிறான். அவனும் உண்ணாமல் அறைக்குள் வந்து அடைந்து கொண்டு கண்ணீர் விட்டான்.
….
மறுநாள், வீட்டு வாசலுக்கு முன் நின்று ஊரே வேடிக்கை பார்க்க, மதியூரனின் தாயார் மதுராவை வாய்கூசும் வார்த்தைகளோடு இழிவாகப் பேசி, சத்தம் போட்டுவிட்டுச் செல்ல… அங்கே முடங்கி, அனைவரும் பார்க்க அழுது கரைந்தாள்.
error: Content is protected !!