Skip to content
Post Views: 38
கண்ணாமூச்சி 27
மாலையின் அந்த இதமான குளிர்ந்த காற்றில், நிலா கேட்ட அந்த ஒற்றைக் கேள்வி அந்தப் பால்கனியின் ஒட்டுமொத்தக் காற்றையும் அப்படியே உறையச் செய்தது.
“விஷ்வா… எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கு. அன்னிக்கு ஆஃபீஸ் டெரஸ்ல உங்களை நேர்ல பார்க்கிறதுக்கு முன்னாடி, நான் உங்களை டிவியிலயும் தியேட்டர்லயும்தான் பார்த்திருக்கேன். நாம அதுக்கு முன்னாடி பேசினதோ, பழகினதோ கூடக் கிடையாது. அப்புறம் எப்படி, எந்த இடத்துல வச்சு என்னை நீங்க முதல்ல பார்த்தீங்க? எனக்கு உங்களை வேற எங்கயும் பார்த்த நியாபகமே இல்லையே…”என்று நிலா தன் மனதின் ஒட்டுமொத்த ஆச்சரியத்தையும் ஏக்கத்தையும் கேள்வியாக்கிக் கேட்டாள்.
நிலா இப்படிக் கேட்டதுமே, அனன்யாவும் பிரவீனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, தங்களின் உள்ளுக்குள் உறைந்திருந்த குற்ற உணர்ச்சியால் தொண்டை வறண்டு, மிடறு விழுங்கினர். அனன்யாவின் கைகளில் இருந்த காபிக் கோப்பை லேசாக நடுங்கத் தொடங்கியது.
Advertisement
விஷ்வாவும் சில நொடிகளுக்கு எந்தவொரு பதிலும் பேசவில்லை. அவன் தன் கைகளில் இருந்த காபி கப்பை அப்படியே வெறித்துப் பார்த்தபடி மௌனம் காத்தான். அந்த மௌனம் சாதாரணமானதாக இல்லை, அவனது மனதுக்குள் எண்ண அலைகள் மோதி ஆர்ப்பர்க்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. பின்னர், மெதுவாகத் தலையை உயர்த்தி, அனன்யாவையும் பிரவீனையும் நோக்கித் தன் கூர்மையான மௌனப் பார்வையைத் திருப்பினான்.
அவர்களின் இந்த விசித்திரமான முக மாற்றத்தைக் கண்டு முற்றிலும் குழம்பிப்போன நிலா, உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளும் தீராத தவிப்போடு எல்லாரையும் மாற்றி மாற்றிப் பார்க்கத் தொடங்கினாள்.
“ஏன் எல்லாரும் திடீர்னு இப்படி அமைதியாயிட்டீங்க? அனன்யா… பிரவீன்… என்னாச்சு உங்களுக்கு? ஏன் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் இப்படிப் பார்த்துக்கிறீங்க?” என்று நிலா கேட்க, அவளது குரலில் லேசான நடுக்கம் கலந்திருந்தது.
Advertisement
அனன்யா பதில் சொல்லத் தெரியாமல் தன் தோழியின் பார்வையைத் தவிர்த்துவிட்டு, “அது… நிலா… வந்து…” என்று இழுத்தாள். குற்ற உணர்ச்சியில் அவளது வார்த்தைகளைத் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
Advertisement
“பிரவீன், நீங்களாவது சொல்லுங்களேன்… நான் ஏதாவது தப்பான கேள்வியைக் கேட்டுட்டேனா?” என்று நிலா பிரவீனை நோக்கினாள்.
பிரவீன் அசெளகரியமாக நெளிந்து, விஷ்வாவைப் பார்த்துவிட்டு, “இல்லை நிலா… நீ தப்பா எதுவும் கேட்கலை. ஆனா…” என்று மேற்கொண்டு பேச முடியாமல் மௌனமானான்.
இவர்களிடம் பதிலை எதிர்ப்பார்ப்பது வீணே என்று உணர்ந்த நிலா, விஷ்வாவின் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவனது கண்களில் ஏதோ ஒரு தெளிவும், அதேசமயம் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தப் போகும் பதட்டமும் இழைந்தோடியது.
Advertisement
“விஷ்வா… நீங்களாவது சொல்லுங்க. என்ன ரகசியத்தை மறைக்கிறீங்க எல்லாரும்? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்,” என்று நிலா அவனது கையைப் பற்றித் தவிப்போடு கெஞ்சினாள்.
விஷ்வா அவளை ஏமாற்றவில்லை. அவளது கண்களில் தெரிந்த அந்தத் தீராத தவிப்பை இதற்கு மேலும் ஒரு நொடி கூட வேடிக்கை பார்க்க அவன் தயாராக இல்லை. சோபாவில் அவளை இன்னும் சற்றே தன் அருகில் இழுத்து அமர வைத்தவன், அவளது நெற்றியில் புரண்டு கொண்டிருந்த அந்தக் குறும்புக்காரக் கூந்தல் கற்றையை மென்மையாக அவளது காதோரம் ஒதுக்கிவிட்டான். அவனது விரல்களின் தீண்டல் நிலாவின் நடுக்கத்தை மெல்லக் குறைத்தது.
பின்னர், அவளது இரு கண்களையும் ஆழமாக நோக்கி, காதலும் தீவிரமும் கலந்த தன் காந்தக் குரலில் பேசத் தொடங்கினான்:
“நிலா… நீ கேட்குற கேள்விக்கான பதில் ரொம்ப காம்ப்ளிகேடட். நான் சொல்லப்போறதை நீ முழுசாப் புரிஞ்சுக்கலனா, நம்ம காதலுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிடும்,” என்று விஷ்வா ஒரு கணம் நிறுத்தி அவளது முகபாவனையை உள்வாங்கினான்.
நிலா அவனது வார்த்தைகளின் தீவிரம் புரியாமல், “விஷ்வா… என்ன சொல்ல வரீங்க? தயவுசெஞ்சு புரியுற மாதிரி சொல்லுங்க,” என்று அவனது கரங்களை இன்னும் சற்றே இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
விஷ்வா அவளது கைகளின் மேல் தன் கையை வத்து அழுத்தமாகத் தடவிக்கொடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான். “வெளி உலகத்துக்கு நான் வேணா கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்குற சூப்பர் ஸ்டாரா இருக்கலாம் நிலா. ஆனா, என் வாழ்க்கைல தாளாத தனிமையிலயும், ஒருவிதமான விரக்தியிலயும் நான் இருந்தப்போ… எனக்குள்ள ஒரு புதிய நம்பிக்கையா, வெளிச்சமா நீ எப்படி வந்தனு உனக்குத் தெரியணும் நிலா. நாம நேத்து மொட்டை மாடியில பார்க்கிறதுக்கு முன்னாடியே, நான் உன்னை ரொம்ப ஆழமா காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.”
“நாம நேர்ல பார்க்கிறதுக்கு முன்னாடியா? அது எப்படி முடியும் விஷ்வா? நாம தான் இதுக்கு முன்னாடி சந்திச்சதே இல்லையே!” என்று நிலா வியப்புடன் இடமறித்தாள்.
விஷ்வா மென்மையாகப் புன்னகைத்து, அவளது விழிகளுக்குள் ஆழ ஊடுருவிப் பார்த்தபடி கூறினான்.
“நாம சந்திச்சோம் நிலா! இன்னும் சரியா சொல்லப்போனா… நான் உன்னைச் சந்திச்சேன்… நிறைய தடவை சந்திச்சேன்… ஒவ்வொரு சந்திப்புளையும் நீ அப்படியே படிப்படியா என் இதயத்துக்குள நுழைஞ்சு… சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகிட்டே…” என்றான் தன் இதயத்தைக் கைகாட்டி.
“நான் உன்னை முதன்முதலா எங்கே பார்த்தேன் தெரியுமா? பனி படர்ந்த ஐஸ்லாந்து மலையில! அங்கே நாடு ராத்திரி வானத்துல அரோரா வெளிச்சம் விதவிதமான கலர்ஸ்ல நடனமாடிட்டு இருந்தப்போ, நீ ஒரு சின்னக் குழந்தை மாதிரி ஆச்சரியத்தோட அதை உன்னோட கேமராவுல போட்டோ எடுத்துட்டு இருந்த. அந்த அழகான அரோராவுக்கு நடுவுல புதுசா பூத்த ரோஜா மாதிரி நீ தெரிஞ்ச நிலா. அப்போ எனக்கே தெரியாம, நான் உன்னோட கேமரா ஃபிரேமுக்குள்ள நுழைஞ்சுதான் உன் கவனத்தைக் கலைச்சேன். நீ கோபமா கேமராவை இறக்கி என்னை நிமிந்து பார்த்த பாரு… அதுதான் நம்மளோட முதல் சந்திப்பு, என் காதலோட ஆரம்பப் புள்ளி!” என்றான் விஷ்வா உணர்வுப்பூர்வமாக.
நிலா அதிர்ச்சியில் இமைக்க மறந்து அவனையே பார்த்தாள். அவனது கண்களில் தென்பட்ட அந்தத் தீவிரம் அவன் சொல்வதைப் பொய் என்று ஒதுக்கித் தள்ள முடியாதபடி அவளது ஆன்மாவின் ஆழம் வரை உலுக்கியது.
அவளது திகைப்பைக் கண்டும் விஷ்வா பேசுவதை நிறுத்தவில்லை. அவளது மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இன்னும் சற்றே அவளுக்கு அருகில் வந்து மீண்டும் தொடர்ந்தான்:
“நான் உன்னை ரெண்டாவது தடவை மீட் பண்ணது ஒரு பழங்காலத்து தியேட்டர்ல நிலா. அங்கே நமக்காக மட்டுமே பிரத்யேகமா ஓடிக்கொண்டிருந்த அந்தப் பழைய கிளாசிக் படத்தோட வெளிச்சத்தில, நாம ரெண்டு பேரும் பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே படம் பார்த்தோம்.”
நிலா ஒன்றும் புரியாமல், “தியேட்டரா… நாமளா?” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
விஷ்வா அவளது விழிகளை ஊடுருவிப் பார்த்தபடி, “ஆமா நிலா… அந்தத் தியேட்டரோட மங்கலான வெளிச்சத்துல பாப்கார்ன் எடுக்கும்போது, நம்ம கைகள் தற்செயலாய் மோதிக்கிட்ட அந்த மெலிசான நடுக்கம், இப்போ நினைச்சாலும் என்னோட உடம்பெல்லாம் சிலிர்க்குது தெரியுமா?” என்றான் விஷ்வா காதலும் ஏக்கமும் கலந்த குரலில்.
விஷ்வா சொல்லச் சொல்ல நிலாவுக்குத் தலை சுற்றியது. சுற்றியிருக்கும் அனைத்தும் அப்படியே தலைகீழாய்ச் சுழல்வதைப் போன்ற ஒரு பிரமை அவளுக்குள் ஏற்பட்டது. ஏதோ ஒரு புரியாத மர்ம வலை தனக்குத் தெரியாமலேயே தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்தவள், அவசரமாய் அவனது நெஞ்சில் கைகளை வைத்து, அவனது பேச்சைத் தடுத்துப் படபடத்தாள்.
“விஷ்வா… என்ன பேசிட்டு இருக்கீங்க? எனக்கு நிஜமாவே ரொம்ப பயமா இருக்கு! நான் என் வாழ்க்கையில ஐஸ்லாந்துக்கெல்லாம் போனதே கிடையாது. அது எங்க இருக்குன்னு கூட தெரியாது. ஏன், பாஸ்போர்ட் கூட இல்லை என்கிட்ட! அதுமட்டுமில்ல, நான் உங்களை இதுக்கு முன்னாடி எந்த தியேட்டர்லயும் நேர்ல சந்திச்சதே இல்லை… இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? என்கிட்ட விளையாடுறீங்களா?” என்று அவளது குரல் தழுதழுத்தது.
அவளது உடலின் நடுக்கத்தையும் கண்களில் தெரிந்த பயத்தையும் கண்ட விஷ்வா, தன் கட்டை விரலால் அவள் கன்னம் வருடி ஆஸ்வாசப்படுத்தினான், தன் ஒற்றை விரலை அவளது மென்மையான இதழ்களின் மேல் மெதுவாக வைத்து அவளை அமைதியாக்கினான். அவனது விரலின் வெதுவெதுப்பான தீண்டல் அவளது உதடுகளில் பட்ட அந்த விநாடி, அவளது ஒட்டுமொத்தப் படபடப்பும் ஒரு கணம் அப்படியே அடங்கியது.
“நிலா, ப்ளீஸ்… நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு. பதற்றப்படாத. அதுக்கப்புறம் இதோட முக்கியத்துவம் என்ன, இதுக்கு பின்னால இருக்குற உண்மை என்னன்னு உனக்கே புரியும்,” என்று அவளைத் தன் குரலால் அப்படியே கட்டிப்போட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தான். அவனது கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று நிலாவை மௌனமாக்கியது.
“அதே மாதிரி சில நாட்களுக்கு முன்னாடி, நாம மொட்டை மாடியில மீட் பண்ணோம்ல? அதேபோல அதுக்கு முன்னாடியும் நாம ஒரு நாள் மொட்டை மாடியில சந்திச்சோம் நிலா. அன்னைக்கு குளிர்ந்த நிலா வெளிச்சத்துக்குக் கீழ, இந்த உலகமே உறங்கிக்கிட்டு இருந்த அந்த நடு ராத்திரில, நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அணைச்சுக்கிட்டு, எதுவுமே பேசாம, அமைதியா இளையராஜா சாங்ஸ் கேட்டோம்…” என்று சொன்னவன், அவளது கண்களை உற்றுப் பார்த்தபடியே, மெதுவாக அந்த வரிகளைத் தன் மெல்லிய குரலில் முணுமுணுக்கத் தொடங்கினான்:
“கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கையில்லை…”
அந்த வரிகளைக் கேட்ட அடுத்த விநாடி… நிலாவின் இதயம் ஒரு கணம் முற்றிலும் நின்று ஸ்தம்பித்தது. அவளது உடலெங்கும் ஒரு புதிய சிலிர்ப்பும், சொல்ல முடியாத ஒரு நடுக்கமும் மின்னலாய் ஓடிப் பாய்ந்தது.
“விஷ்வா… நிறுத்துங்க… இந்த பாட்டு… இந்த லைன்ஸ்…” என்று நிலா வார்த்தைகள் வராமல் திணறினாள்.
விஷ்வா அவளது முகத்தை இன்னும் நெருக்கமாக ஏந்தி, “ஆமா நிலா, அதே பாட்டுதான். அன்னைக்கு அந்த மொட்டை மாடியோட மூலையில இருந்த சாதிமல்லிக் கொடி காத்துல அசைஞ்சுட்டே இருந்தது. நீ என் தோள்ல தலை சாய்ச்சுட்டு இந்த பாட்டைத்தான் கேட்டுட்டு இருந்த,” என்றான்.
நிலா அப்படியே உறைந்து போனாள். விஷ்வா விவரித்த அந்த மொட்டை மாடியின் மூலை முடுக்குகள், காற்றில் அசைந்த அந்தத் தொட்டிச் செடிகள், அந்தப் பாடல்… எல்லாமே, எல்லாமே அவள் யாருக்கும் தெரியாமல், தன் தோழி அனன்யாவிடம் கூடப் பகிர்ந்து கொள்ளாமல், தனது மெய்நிகர் அனுபவத்தில் வாழ்ந்த தருணங்கள்! எவராலும் எட்டிப் பார்க்க முடியாத தன் மனதின் அந்த அந்தரங்கத் தனி உலகத்தை, விஷ்வா எப்படி அணு அணுவாக விவரிக்கிறான் என்ற மர்மம் அவளை உறைந்து போகச் செய்தது.
நிலா முற்றிலும் மிரண்டு போனாள். தன் ஆன்மாவின் ஆழத்தில் பூட்டி வைத்திருந்த மிக ரகசியமான, அதிஉன்னதமான நினைவுகளை விஷ்வா அப்படியே அவன் வாழ்ந்தது போல் விவரிப்பதைக் கண்டு அவளது உள்ளம் நிலைகுலைந்தது.
கண்களில் கண்ணீர் முட்ட, தனக்குள்ளேயே நிகழ்ந்த அந்த விர்ச்சுவல் அனுபவங்கள் எப்படி இவனுக்குத் தெரியும் என்கிற பயமும், இந்த மர்மத்தின் பின்னணியில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்கிற தவிப்பும் அவளை ஆட்கொண்டன. மெதுவாகத் தன் பார்வையைத் திருப்பி அனன்யாவின் பக்கம் பார்த்தாள்.
“அனன்யா… என்னடி நடக்குது இங்க? உனக்கு ஏதாவது தெரியுமா? ப்ளீஸ் பேசாம இருக்காதடி, எனக்கு பயமா இருக்கு!” என்று நிலா குரல் நடுங்கக் கேட்டாள்.
அங்கே அனன்யா மிகுந்த குற்ற உணர்ச்சியோடு, கைகளைப் பிசைந்தபடி, “என்னை மன்னிச்சிடு நிலா…” என்பது போலத் தலையை குனிந்து கொண்ட தோரணை, அவளது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது.
ஆனால், அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் விஷ்வா நிலாவின் முகத்தைத் தன் பக்கம் மென்மையாகத் திருப்பி, அவளது விழிகளுக்குள் தன் விழிகளால் ஊடுருவிப் பார்த்தபடி மீண்டும் பேசினான். அவனது குரலில் நினைவுகளின் தாக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நிலா, அனன்யாவை அப்புறம் கேட்டுக்கலாம். நான் சொல்றதைக் கொஞ்சம் கவனி…” என்று விஷ்வா அவளது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
“இனிமே நான் எதையும் கேட்கத் தயாரா இல்லை விஷ்வா… இதெல்லாம் பொய்!” என்று நிலா தன் கைகளை உதற முயன்றாள்.
விஷ்வா அவளது கைகளை விடாமல் இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “இல்லை நிலா… இது எதுவுமே பொய் இல்லை, இதெல்லாம் நான் அனுபவிச்ச என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான, என் வாழ்க்கையோட காதல் கணங்கள்… ஒவ்வொண்ணும் உண்மை,” என்றான் விஷ்வா தீர்க்கமாக.
“அப்பறமும் நாம சந்திச்சோம் நிலா… அடுத்த தடவை, ஐஸ்லாந்தோட ‘விக்’ கிராமத்துல இருக்குற அந்தக் பிளாக் சான்ட் பீச்ல. சுத்தியும் யாருமே இல்லாத பீச்ல, அலைகளை ரசிச்சுகிட்டே, ஒருத்தர் கையை ஒருத்தர் இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டே நாம ரொம்பத் தூரம் மௌனமா நடந்து போனோம். உனக்கு கூட குளிரா இருந்துச்சுன்னு நான் என்னோட பார்க்காவை உனக்குப் பொத்தி விட்டேனே ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
அவனது அந்த பார்க்காவின் வெதுவெதுப்பு, அதில் வீசிய அவனது ஆண்மை நறுமணம் இன்னும் நிலாவின் நினைவடுக்குகளில் அப்படியே பதிந்திருந்தது. விஷ்வாவின் நினைவுகள் வாட்டும்போதேல்லாம், அந்த வெம்மை உணர்வு அவளுக்கு நினைவுக்கு வந்து இதமளிக்கும் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியமல்லவா?
நிலா பேச முடியாமல் விம்மியபடி தலை அசைக்க, விஷ்வா விடாமல் தொடர்ந்தான்,
“அப்புறம்… இன்னொரு நாள்… ஒரு பசுமையான கிராமத்துல, நெல் வயல்ல, ஒரு பம்புசெட் பக்கத்துல நாம உட்கார்ந்திருந்தோம். அன்னைக்கு நீ என்னைப் பார்த்ததும் சாப்பிட்டீங்களா விஷ்வா?னு கேட்ட, நியாபகம் இருக்கா? ரொம்ப நாளுக்கப்பறம் என்கிட்டே இவ்வளவு அக்கறையா சாப்பிட்டியான்னு கேட்டது நீதான் நிலா…” அவன் கண்களும் பனித்திருந்தன.
குரல் கம்ம விஷ்வா தொடர்ந்தான், “உன் கைப்பட காரக்குழம்பு சாதமும் கத்தரிக்காய் பொரியலும் உருட்டிக் குடுத்த… எங்க பாட்டி இறந்ததுக்கு அப்புறம் அந்த மாதிரியான ருசியான சாப்பாட்டை நான் சாப்பிடவே இல்லை தெரியுமா? அமெரிக்காவுல எங்க வீட்ல எப்பவுமே ஹெல்தி டயட், லோ கார்ப், ஹை புரோட்டீன், உப்பு காரம் இல்லாத சப்புன்னு இருக்குற சாப்பாடுன்னு சாப்பிட்டே என் நாக்கு செத்துப்போயிருந்தது. அன்னைக்கு நீ உன் கைப்பட ஊட்டிவிட்ட அந்தச் சாப்பாடுதான் என் வாழ்க்கையில ரொம்ப நாளுக்கு அப்பறம் நான் சாப்பிட்ட பெஸ்ட் சாப்பாடு, அதோட டேஸ்ட் என்னோட நாக்குல இன்னும் இருக்கு…” என்று உணர்ச்சிப் பெருக்கோடு விவரித்தான் விஷ்வா.
விஷ்வா பேசப் பேச, நிலாவின் கண்கள் அணை உடைந்த வெள்ளமாய் மாறின. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட, அவனையே வெறித்துப் பார்த்தாள். அவளது ஒட்டுமொத்த ரகசிய உலகமும், அவள் கண்ட அத்தனை கனவுகளும் இவனுக்கும் தெரிந்திருக்கிறது, அவனது நினைவுகளிலும் அது அப்படியே உறைந்திருக்கிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அந்தப் பால்கனியில் நிலவிய மௌனத்தை உடைத்து, விஷ்வா இன்னும் ஒரு நிகழ்வை விவரிக்கத் தொடங்கினான்,
“அப்புறம்… ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள, பறவைகளின் சத்தத்துக்கு நடுவுல ஒரு தெளிவான நீரோடை ஓடிட்டு இருக்குமே… அதுக்குக் பக்கத்துல இருக்குற உங்களோட குலதெய்வம் கோவிலுக்கு நீ என்னை கூட்டிட்டுப் போனியே, ஞாபகம் இருக்கா நிலா? அங்க கூட நான் உனக்கு…” முடிக்காமல், தனது நெற்றியைச் சுட்டிக்காட்ட…
இப்போதும் அவளது நெற்றியில் சுட்ட அவன் பதித்த முத்தத்தின் வெப்பத்தை தன் விரல்களால் மெதுவாகத் தொட்டுப் பார்த்த நிலா, அடுத்த விநாடி முற்றிலும் உடைந்து போனாள். அவளது கிராமத்தின் குலதெய்வக் கோவிலும், அந்தக் காட்டுப் பாதையும் அதில் அவர்கள் இருவரும் கைகோர்த்தபடி சென்ற அவளது அனுபவம் எப்படி இந்த விஷ்வாவின் நினைவுக்குள் வந்தது?
நிலாவின் பயமும் திகைப்பும் உச்சத்தைத் தொட்டது. சோபாவில் இருந்து சட்டென்று எழுந்தவள், தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், நெஞ்சம் துடிக்க நேராக அனன்யாவின் முன்னால் போய் நின்றாள். அவளது கண்கள் உண்மை என்னவென்று அறியும் தவிப்போடு அனன்யாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தன.
கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அனன்யாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள். “அனன்யா! என்ன நடக்குது இங்க? என்னோட தனிப்பட்ட கற்பனைகளையும், என்னோட விர்ச்சுவல் அனுபவங்களையும் விஷ்வா எப்படி அவரே நேர்ல அனுபவிச்ச மாதிரி ஒரு வார்த்தை மாறாம அப்படியே விவரிக்கிறாரு? என்னடி இதுக்கு அர்த்தம்? எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு, சொல்லு!” என்று கத்தினாள்.
நிலாவின் இந்தக் கேள்வியைக் கேட்டு விஷ்வாவும் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். “என்னது? நிலாவுக்கும் இதே விர்ச்சுவல் அனுபவங்கள் இருந்ததா?” என்று அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் எழ, அவன் உடனே பிரவீனின் பக்கம் திரும்பி, “பிரவீன்! என்ன நடக்குது இங்க? எனக்கு இப்போவே உண்மை தெரிஞ்சாகணும்!” என்று கர்ஜித்தான்.
பிரவீன் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டான். எல்லாரையும் முதலில் அமைதியாக அமரும்படி சைகை செய்தவன், ஒரு பெருமூச்சை வெளிவிட்டு உண்மையை உடைக்கத் தொடங்கினான்.
“விஷ்வா… நிலா… ப்ளீஸ் ரெண்டு பேரும் அமைதியா உட்காருங்க. நான் எல்லாத்தையும் சொல்றேன். விஷ்வா, சோல்மேட் நியூரல் ஹெட்பேண்ட்டை பீட்டா டெஸ்டிங் பண்ணின, இல்லையா? அது தெரியாம அனன்யா நிலாவையும் பீட்டா டெஸ்டிங் பண்ண வைச்சிருக்கா… அந்த டெஸ்டிங் பண்ணும் போது, ஒரு கட்டத்துக்கு மேல உங்களோட விர்ச்சுவல் சந்திப்புகள் உங்களோட ஒரிஜினல் சிந்தனை மாதிரிகளோடு ரகசியமா ஒன்றிணைய ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் அது உங்களோட தனித்தனி அனுபவமா இல்லாம, உங்க ரெண்டு பேரோட ஒட்டுமொத்த ஒரே விர்ச்சுவல் எக்ஸ்பீரியன்ஸா மாறிடுச்சு. அந்தப் புள்ளியிலதான், சிஸ்டம் உங்களுக்காக உருவாக்கின விர்ச்சுவல் அவதார்களை மீறி, நீங்க ரெண்டு பேரும் நேரடியா ஒருத்தரோடொருத்தர் விர்ச்சுவல் உலகத்துல பழக ஆரம்பிச்சீங்க. நீங்க விர்ச்சுவல்ல பார்த்தது வெறும் நிழல் இல்லை… விஷ்வா, நீ பார்த்தது நிஜமான நிலாவைத்தான்! நிலா பார்த்தது நிஜமான விஷ்வாவைத்தான்!” என்று உண்மையை அம்பலப்படுத்தினான்.
“இது எங்க ரெண்டுபேருக்கும் முதல்ல தெரியாது, ஏதோ தப்பு இருக்குன்னு மட்டும் சந்தேகம் வந்து நாங்க என்னன்னு பார்த்துக்கிட்டு இருந்தோம், ஆனா இப்படி நடந்திருக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை, ஆனா நீ நிலாவை எங்க ஆஃபீஸ்ல பார்த்தேன்னு சொன்னப்போதான் எங்களுக்கு சந்தேகமே வந்துச்சு, ஆனா எதுவும் உறுதியா தெரியலை, இப்போ நீ சொல்லும்போது நிலாவுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கோ எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு,” என்றான்.
பிரவீன் அந்த அதிர்ச்சிகரமான உண்மையைச் சொல்லி முடித்த அடுத்த விநாடி, நிலாவுக்குத் தன் காலடியில் இருந்த பூமி சட்டென்று நழுவி, ஒட்டுமொத்த உலகமே இடிந்து தலைமேல் விழுந்தது போன்ற ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டது.
எவராலும் திருடப்பட முடியாதது, தனக்கு மட்டுமே சொந்தமானது என்று நம்பி அவள் உயிருக்குயிராய் காத்து வந்த அவளது ஆழ்மன உணர்வுகளும், அவளது மிகத் தனிப்பட்ட அந்தரங்க ரகசியங்களும் இப்படி ஒரு உயிரற்ற தொழில்நுட்பக் கருவியால் ஒட்டுக் கேட்கப்பட்டு, களவாடப்பட்டிருப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏதோ எல்லார் முன்னிலையிலும் தன் ஆன்மா பகிரங்கமாக்கப்பட்டு நிற்பது போன்ற ஒரு அவமானமும், ஏமாற்றமும் அவளை ஒரேயடியாக நிலைகுலையச் செய்தன.
அவள் அதற்குமேல் அங்கிருந்த யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தயாராக இல்லை அவள். தன் கைகளால் முகத்தை அப்படியே மூடிக்கொண்டு, நெஞ்சு வெடிக்கும் தவிப்போடு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அவளது அழுகைச் சத்தம் அந்த ஆடம்பரமான பால்கனி முழுக்கப் பரவி எல்லோரையும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது.
“எனக்கு இங்க ஒரு நிமிஷம் கூட… ஒரு செகண்ட் கூட இருக்கப் பிடிக்கல! நான் இப்போவே வீட்டுக்குப் போகணும்!” என்று தன் அழுகைக் குரலையும் மீறி அசாத்தியமான பிடிவாதத்தோடு கூறினாள் நிலா.
அவள் அழுதுகொண்டே கிளம்புவதைக் கண்டு விஷ்வா பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து, அவளது கைகளைப் பற்றித் தடுக்க முயன்றான். ஆனால் அவளது கண்களில் தெரிந்த அந்த எல்லையற்ற பயத்தையும், அதிர்ச்சியையும், மாறாத கண்ணீரையும் பார்த்த பிரவீனும் அனன்யாவும், அதற்கு மேல் அவளை அங்கே வற்புறுத்தி நிறுத்துவது ஆபத்து என்று உணர்ந்து அவளுக்குப் பின்னாலேயே செல்ல முடிவெடுத்தனர்.
நிலா விஷ்வாவைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவனது அத்தனை ஆழமான காதலும், வார்த்தைகளும் இப்போது அவளுக்கு ஏதோ ஒரு மென்பொருளின் சதித் திட்டம் போல மட்டுமே தோன்றியது. அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், அந்தப் பென்ட்ஹவுஸை விட்டு விறுவிறுவென்று புயலென வெளியேறினாள்.
காரில் திரும்பும் வழியெங்கும் அனன்யாவும் பிரவீனும் அவளிடம் பேசி, அவளது மனதை மாற்ற எவ்வளவோ முயன்றனர். ஆனால் நிலா எதற்கும் செவிசாய்க்கவில்லை. காரின் ஜன்னல் கண்ணாடி வழியே வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு, சத்தமில்லாமல் மௌனமாக அழுதுகொண்டே வந்தாள். அவளது அந்த அதீத மௌனமும், கண்களிலிருந்து ஓயாமல் வடிந்த கண்ணீரும் அனன்யாவையும் பிரவீனையும் உள்ளுக்குள் கடுமையாகப் பயமுறுத்தியது.
கார் அவளது வீட்டின் அருகே வந்து நின்றதும், பிரவீனோ அனன்யாவோ கதவைத் திறப்பதற்கு முன்பே அவசரமாய் இறங்கிக் கொண்டாள் நிலா. அவர்களிடம் எதுவும் சொல்லாமல், திரும்பிப் பார்க்காமல் நேராக வீட்டிற்குள் சென்றுவிட்டாள். ஹாலில் இருந்த தங்கம் அவளது வாடிய முகத்தைக் கண்டு பதறி என்னவென்று கேட்பதற்குள், “எனக்கு ரொம்ப தலைவலிக்குதும்மா… நான் கொஞ்ச நேரம் தூங்குறேனே” என்று அவசரமாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, நேராகத் தன் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டாள். அந்த இருண்ட அறைக்குள் தனியாக அமர்ந்து, தன் விதியை நினைத்து மீண்டும் அழத் தொடங்கினாள்.
மறுபுறம், விஷ்வா தன் பென்ட்ஹவுஸில் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்தான். அந்த நியூரல் பேண்ட் மூலமாகத் தான் கனவிலும் விர்ச்சுவல் உலகிலும் கண்டு காதலித்தது, அணு அணுவாய் ரசித்தது அத்தனையுமே நிஜமான நிலாவோடுதான் என்பதை நினைக்கும் போது அவனுக்குள் பேரானந்தமும், எல்லையற்ற வியப்பும் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், மறுபுறம் இந்த விபரீதமான உண்மையைத் தாங்க முடியாமல் நிலா அடைந்திருக்கும் அந்தப் பேரதிர்ச்சியும், அவளது கண்ணீரும் அவனது நெஞ்சை வாட்டியது.
அவள் தன் மீது கொண்ட கோபத்தில் தன்னை முற்றிலும் வெறுத்துவிடுவாளோ, அவளது மனநிலை இந்த அதிர்ச்சியால் ஏதேனும் பாதிப்பிற்குள்ளாகிவிடுமோ என்கிற பயத்தில் அவனது இதயம் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அதிவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. தன் காதலை அவளுக்கு எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என்ற தவிப்புடன் பால்கனியிலேயே பித்துப் பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் விஷ்வா.
error: Content is protected !!