Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மாய பூ இவள் 7.1

பத்து ஆண்டுகளுக்கு முன்பு…..

      

 

 பள்ளியில் படிக்கும் வரை பெற்றோர்கள் சொல்வதை கேட்டால் நம்முடன் நேரம் செலவழிப்பார்கள், நம்மிடம் பாசமாக இருப்பார்கள் என்று நினைத்து , அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தாள், இனியா. ஆனால் அவள் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லை. அவளின் பெற்றோர்களோ தான் சொன்னதை செய்துவிட்டாளா என்று பார்ப்பத்தோடு சரி ,அவர்கள் அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள் . இவள் தான் அவர்கள் எதாவது சொல்வார்கள், பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்து நிற்பாள்.ஆனால் பல்ப் தான் கிடைக்கும்.ஒரு கட்டத்தில் “என்ன டா வாழ்க்கை இது” என்று நினைக்கும் படி ஆகிவிட்டது. முன்னர் எல்லாம் விடுமுறை தினங்களுக்கு தாத்தா வீட்டிற்கு செல்வாள். அவளுக்கு தனிமை என்பதே தெரியவில்லை.அவர்களும் முதுமையின் காரணமாக ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்து விட இவளுக்கு ஏதோ எல்லோரும் இருந்தும் தனியாக இருப்பது போல் தான் இருந்தது. தனிமை கற்று தந்த பாடத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டும் என்று தீர்மானத்து அதன் படி செயல் பட துவங்கினாள். அதில் முதலில் எடுத்தது தான் இந்த கல்லூரி பற்றிய முடிவு. 



Advertisement

 

             இனியாவின் குடும்பம் வளர்ந்து வரும் பணக்காரர்கள் வர்க்கத்தினர். இனியாவின் தந்தை ராமசந்திரன் தமிழகத்தின் முக்கிய கட்சியில் எம்.எல்.ஏ ஆக உள்ளார்.இனியாவின் அண்ணன் தமிழோ படித்து முடித்து விட்டு தொழில் செய்ய போவதாக சொல்லிக் கொண்டு ஊரைச் சுற்றி கொண்டு இருக்கிறான். சுருங்க சொல்ல போனால் தமிழகத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளின் சங்கத்தில் அவனும் ஒருவன். இனியாவின் தாய் சுசீலா. தாய் என்று சொல்வதற்கு பதில் சிறந்த தொழில் அதிபர் என்று சொல்லாம் . அவர் தொழிலை அவருக்கு பின் மகன் பார்த்து கொள்வான் என்று நினைத்திருக்க ,மகனோ ” நான் யாருக்கு கீழும் வேலை பார்க்க மாட்டேன். நான் தொழில் தான் செய்வேன் .அதுவும் யாரோ ஆரம்பித்த தொழில் கூட செய்ய மாட்டேன், நான் சொந்தமாக தான் தொழில் தொடங்குவேன்” என்று சொல்லி விட்டான்.அவரின் பார்வை இப்போது இனியாவின் மேல் திரும்பி விட்டது. அவளை தொழில் கல்வி படிக்க வைத்து, தொழிலை அவளிடம் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு எடுத்து விட்டார். பையன் என்றால் தான் கேட்க வேண்டும், பெண் தானே நாம் சொன்னால் சரி என்று சொல்லி விடுவாள் என்று நினைத்துக் கொண்டார். இதை அவர் அவள் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை என்று சொல்வதா இல்லை, அவளை அவ்வளவு தான் புரிந்து வைத்து உள்ளார் என்று கூறுவதா என்று தெரியவில்லை . அந்த காலத்திற்கே வெளிச்சம். எப்போதும் அவள் ஏன் சரி என்று கூறுகிறாள் என்றும் யோசிக்கவில்லை, அவளும் உயிரும் உணர்வும் உள்ள மனிதி தான், என்பதை மறந்து விட்டார். அவளுக்கும் ஆசைகள் பல இருக்கும் அதை நாம் கேட்கவில்லை என்றும் நினைக்கவில்லை. அவர், அவருடைய தொழில் அத்துடன் தன் யோசனைகளை நிறுத்திக் கொண்டார் போல்.

 

Advertisement

 

Advertisement

             இவ்வுலகில் பலர், அவரவர் வாழ்க்கையை அவர்களுடைய பார்வையில் இருந்து யோசிக்கின்றனர். மற்றவர் எப்படி உணர்வார்கள், எப்படி பார்ப்பார்கள் என்று சிறிதும் யோசிப்பதில்லை. அவர்கள் சரி என்றால் மற்றவர்களுக்கும் அது சரி என்று சாதிப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு அது தவறாக இருக்கக்கூடும் என்று கூட யோசிப்பதில்லை.

 

                பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் வீட்டில் கல்லூரி பற்றி பேசிக்கலாம் என்று நினைத்து இருந்தாள் இனியா. மேலும் ஒரு எண்ணம் என்ன சொல்லி விட போகிறார்கள். “சரி” என்று தான் சொல்வார்கள், என் மீது அக்கறையாவது மண்ணாவது என்று இனியா நினைத்துக் கொண்டு இருக்க. ஆனால் அவளின் தாயோ கல்லூரியில் அட்மிஷனும் போட்டு முன் பணமும் கட்டி விட்டார்.”இனியா, இந்தா காலேஜ் அட்மிஷன் பேப்பர்ஸ் இங்க தான் நீ படிக்க போற, தேவையானது எல்லாம் வாங்கி வச்சுக்கோ ” என்று காலை பரபரப்பில் சுடச்சுட செய்திகள் போல் அவசரம் அவசரமாக சொல்லி விட்டு அலுவலகத்திற்கு போக கிளம்பினார்.

Advertisement

       

                 இனியாவிற்கு பூமியே நின்று விட்டது போல் ஒரு உணர்வு. அவள் அம்மா படிக்க சொன்னது கலை கல்லூரியில் ஆனால் அவள் எடுக்க நினைத்ததோ பொறியியல் பிரிவு. அவள் பல கனவு கோட்டைகள் கட்டி வைத்து இருந்தாள். கல்லூரி முடித்து வேலையை வாங்கிக் கொண்டு சந்தோசமான சுதந்திர பறவையாக பறக்க வேண்டும். ஆனால் அதன் முதல் படியிலேயே அனைத்தும் தகர்ந்து விடும் என்ற சூழ்நிலை. அவள் இப்பொழுது எதிர்த்த பேச வேண்டிய கட்டாயம். முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியும் என்பது போல் இதற்கு முன்னாடி எதிர்த்து பேசாமல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டதனாலோ என்னவோ இனியாவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தட்டு தடுமாறி கஷ்டப்பட்டு வாயைத் திறந்து “மா, எனக்கு இந்த”, என்று ஆரம்பித்திருந்தாள், அதற்குள் அவள் அம்மாவோ ” அம்மா சொல்லி பழகாத இதே பழக்கம் தான் எல்லா இடத்திலையும் வரும் . அப்புறம் என்னோட பிரஸ்டீஜ் என்னா ஆகிறது” என்று சிடுசிடுத்தார். இனியாவோ ‘ இவுங்க பிரஸ்டீஜ்-ல தீய வைக்க’ என்று நினைத்துக் கொண்டு, மேலும் பேசினாள் “மம்மி, எனக்கு ஆர்ட்ஸ் காலேஜ் வேண்டாம், நான் என்ஜினீயரிங் படிக்கிறேன் ” என்று கூறினாள். அவள் அம்மாவோ 

 

” ஏன் இது வேண்டாம், இதுல என்ன குறைச்சல். இதையே படி இது தான் உன்னோட எதிர்காலத்திற்கு நல்லது ” 

 

“எது நல்லது, எனக்கு பிடிக்காத ஒன்று எடுத்து படித்து, அத படிச்சதுனால உங்க கம்பெனியில வந்து வேலை பார்த்து, நீங்க சொல்லுறது எல்லாம் செஞ்சு, ஒரு பொம்மையா இருக்கிறது தான் எனக்கு நல்லதுனா எனக்கு அப்படி பட்ட நல்லதே வேண்டாம் ” என்று இனியா கூறிட , 

 

      இப்படியே அவர்கள் பேச்சு வார்த்தை எப்போது வாக்குவாதமாக மாறியது என்றே தெரியாது அளவு சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர். 

 

 

     இடை இடையே அவள் அண்ணன் வேறு அம்மாவிற்கு சாதகமாக பேசுகிறேன் என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருந்தான். அவள் அண்ணனிற்கு இனியா மட்டும் தொழில் பக்கம் சென்று விட்டாள் என்றால் தன்னை தொல்லை செய்ய மாட்டார்கள் என்று நினைத்து அம்மாவிற்கு தூபம் போட அது சரியாக பற்றிக் கொண்டது.அவள் அம்மாவோ இனியா எத்தனை காரணம் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்க. இனியாவிற்கு கோபமும் சலிப்புமாக இருக்க, இதற்கு மேல் இவர்களிடம் பேச முடியாது என்று நினைத்து, அவள் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.

          ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!