Skip to content
Post Views: 10,325
“சுக்லாம் பரதரம்.. விஷ்ணும்” என்று அந்த பெரிய பிரும்மாண்டமான கிராமத்து பண்ணை வீட்டின் பக்கவாட்டில் இருந்த அந்த அவுட் ஹவுஸில் விஷ்ணு சகஸ்ரநாமம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
அதற்கு இணையாக அந்த பண்ணை வீட்டிலிருந்தும் கூட, “ஸ்ரீனிவாசா கோவிந்தா, ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா” என்று கோவிந்தா நாமாவளி ஒலித்துக் கொண்டிருந்தது!
அந்த காலை வேளையில் தலைக்கு குளித்து விட்டு, தன் வீட்டில் இருந்த குட்டி ஸ்வாமி படத்தின் முன்பு இருந்த சாமி விளக்கையும், ஊதுபத்தியும் ஏற்றி விட்டு, மனதிற்குள் கணபதியைக் கும்பிட்டு விட்டு, ஸ்வாமி படமுன் நின்று கொஞ்ச நேரம் கண் மூடி நின்று விட்டு, பின் பக்கவாட்டில் இருந்த அம்மா டாக்டர் விஜயதேவியின் படத்திற்கும் பூக்களைப் போட்டு கண் மூடி நின்று கொண்டிருந்தாள் அவள்!
Advertisement
அவள் டாக்டர் ஜான்வி! ஜான்வி தேவி!
ஆரிய அப்பாவிற்கும் திராவிட அம்மாவிற்கும் பிறந்த கலப்பு!
அப்பா ஜக்தீஷ் அம்மா விஜயதேவி இருவருமே டாக்டர்கள்.
Advertisement
ஜான்வி அப்பா மாதிரி நல்ல நிறத்துடனும் அம்மா மாதிரி தமிழ் முகத்துடனும் இருந்த, பார்த்தவுடன் இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் வசீகரி!
Advertisement
கனிவான முகம். சின்ன கூரான மூக்கு, அழகான மெல்லிய உதடுகளோடு, ஆளை அசத்தும் பெரிய கண்கள்! அதில் இருந்த கனிவு! அந்த கண்களுக்கு எந்த வித புற மேக்கப்பும் இல்லை!
குறைந்த பட்சம் ஒரு சின்ன ஐ லைனர் கீற்று கூட இல்லை! ஆனாலும் அவளது கண்கள் பார்ப்போரை ஈர்க்க வல்லது! அத்தனை பவர்புல் அந்த கண்கள்!
தன் தாய் படம் முன் சிறிது நேரம் கண் மூடி நின்றவள், பின் தலையில் இருந்த டவலை அவிழ்த்துவிட்டு தன் நீண்ட கூந்தலை துவட்டிக் கொண்டிருக்கும் போது வாசலில் ஜகது பாட்டியின் குரல்!
Advertisement
“யம்மாடி ஜானகி.. கதவைத் திறம்மா,”
“இதோ வரேன் அம்மாச்சி. “ என்றபடி கதவைத் திறந்தாள் ஜான்வி.
“ஏம்மா, என்ன இது? வாசல் கதவைத் திறக்காமலே விளக்கு ஏத்திட்டு இருக்கியா?”
“இல்ல.. அம்மாச்சி ஊரில் அப்படி ஏத்தி அதே பழக்கமாகிடுச்சு! ஆமா, பாலை நீங்க ஏன் கொண்டு வந்து இருக்கீங்க? செல்வி அக்கா வருவாங்களே?”
“உங்க ஊரில் பயம், அதனால அப்படி கதவைக் கூட திறக்காம விளக்கேத்தி இருப்பீங்க, இங்க என்னம்மா பயம்? நம்ம வீட்டுல?” என்று அவளுக்கு பதில் சொன்னவர்,
“இன்னிக்கு புரட்டாசி மாசப் பொறப்பு. இன்னைக்கு இருந்து இன்னும் ஒரு மாசம் நம்ம வீட்டுல கவுச்சி கிடையாது, அதனால, நம்ம வீட்டுல தான் மூணு நேரமும் சாப்பிடனும்!
நீ பாட்டுக்கு இங்க தனியே உலை வச்சுடாத, அத சொல்ல தான் நானே பாலை எடுத்துட்டு நானே வந்திருக்கேன்!” என்றார் ஜெகதாம்பாள்.
அந்த பெரிய பண்ணை வீட்டின் முதலாளி அம்மா!
அவருக்கு ஜான்வியை ரொம்ப பிடிக்கும்! ஆனால் அவள் பெயரை மட்டும் ஜானகி என்றே அழைக்க வரும் அவருக்கு!
அவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். அவரது கணவர் பத்தாண்டு காலம் முன்னரே இறந்து விட்டார்.
மூத்த மகன் – இந்த வீட்டின் தற்போதைய குடும்பத் தலைவர் தினகரன் அவரது மனைவி தமிழரசி. மகன் பரணிதரன், மகள் பவித்ரா.
அடுத்தது இன்னொரு மகன் பாஸ்கரன் – அவரின் மனைவி வத்சலா. மக்கட்செல்வங்கள் இரண்டு தான் அவருக்கும்! பரத், பாரதி!
அடுத்து ஒரு பெண் சந்திரா. அவளின் கணவன் குணசேகரன். அவர்களது பெண் அனிதா. பேத்தி அனிதாவிற்கு போன வருடம் தான் திருமணம் ஆகியிருந்தது.
கடைசியாக பிறந்தவன் கதிரவன். அவன் காதலித்து மணந்த பெண் தாமரை! அவர்களுக்கு ஆதவன் மற்றும் மகிழினி என்று இரண்டு குழந்தைகள்!
கதிரவனுக்குத் தமிழ் மீதும், தமிழ் நாட்டு அரசியலிலும் பயங்கர ஈடுபாடு!
நல்ல குடும்ப பாரம்பரியம், செல்வவளம், செல்வாக்கோடு, நல்ல அரசியல் தெளிவு, புத்திசாலித்தனமும் கூடவே இருக்க, இவற்றால் அரசியலில் வேகமாக வளர்ந்து முன்னேறி வந்தவன்!
அவனுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருப்பதாக கணிக்கப் பட்டவன், ஒரு நாள் சென்னையில் இருந்து ஊருக்குத் திரும்பி வரும் போது நடந்த கோர சாலை விபத்தில் இறந்து விட்டான்.
அரசியல் கொலை என்றார்கள், இல்லை தானாக நடந்த எதிர்பாராத விபத்து என்றார்கள்,
மொத்தத்தில் அவன் இல்லை! அவன் மட்டும் இறக்கவில்லை, அவன் கூட காரில் சென்ற அவனின் அக்கா கணவன் குணசேகரனும்!
ஒரே நேரத்தில் மகனையும் மருமகனையும் இழந்த அந்த குடும்பம் நிலை குலைந்து தான் போனது!
தம்பியும் மச்சானும் இருந்த செய்தியைக் கேட்டவுடன் தினகரனுக்கு ஸ்ட்ரோக் வந்து படுத்தப் படுக்கையானார்! அவருக்கு வாயும் இழுத்துக் கொண்டதில் பேச்சும் இல்லாமல் போய் விட்டது.
அடுத்த மகன் பாஸ்கரன். நிஜத்தில் ஒரு பாவம் பாஸ்கரன்! அவருக்கு தானாக எந்த ஒரு முடிவும் எடுக்கத் தெரியாது! கதிர் அளவுக்கு சூட்டிகை இல்லை அவர்! அண்ணன் சொல்படி தட்டாது நடக்கும் இலட்சுமணன்!
வீட்டுப் பெண்களுக்கோ வீட்டைத் தாண்டி எதுவும் தெரியாது!
இதில் தாமரை மட்டும் படித்தவள் என்றாலும் அவள் கணவன் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னுமுமே மீள வில்லை! நடந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்ட பின்னும்!
இந்த சூழ்நிலையில் தான் அந்த வீட்டின் பொறுப்பை தனதாக்கிக் கொண்டான் அந்த வீட்டின் முதல் பேரனான பரணி!
அப்போது , பரணி பி ஈ முடித்து விட்டு, ஜெர்மனியில் ஒரு புகழ்பெற்ற யுனிவர்சிட்டியில் சப்ளை செயின் மானேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்து இன்டெர்ன்ஷிப் எடுத்துக் கொண்டிருக்கும்போது தான் இந்த கோர விபத்து நடந்தது!
அதன் பின் சரியான ஆண் தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தன் குடும்பத்திற்காக, அந்த வீட்டின் பொறுப்பை, தன் கனவு கரியரை தியாகம் செய்து விட்டு, இங்கே இந்த கிராமத்திலேயே இருந்து விட்டான் அவன்.
தன் அப்பாவிற்கு ஸ்ட்ரோக் அறிகுறி தெரிந்த பின், அவன் வீட்டினர் கோல்டன் டைம் எனப்படும் அடுத்த சில மணிகளில் கொடுக்க வேண்டிய மருத்துவ உதவி கிடைக்காதது தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்தவன், அவன் கிராமத்தில் எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு ஹாஸ்பிட்டல் கட்ட விரும்பினான்.
சிட்டி ஹாஸ்பிட்டல் அளவு அதி நவீன வசதிகள் இல்லையென்றாலும், அந்த சுற்று வட்டாரத்தில் குறைந்த பட்ச நவீன சிகிச்சைகள் கிடைக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டான்.
அதில் பெரிய ஸ்பெசாலிட்டி டாக்டர்கள் வாரம் ஒரு முறை விசிட்டிங் வருகிறார்கள்.
அது தவிர ஜெனரல் பிசிசியன்களும் உண்டு.
டாக்டர் ஜான்வி, ஒரு ஜூனியர் டாக்டர் அங்கு.
இவளைத் தவிர இன்னும் மூன்று டாக்டர்களும் உண்டு!
அவர்கள் எல்லோரும் சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்தவர்கள்! இவள் மட்டுமே சென்னைவாசி!
அதனால் அவளுக்கு அவர்கள் வீட்டின் அவுட் ஹவுஸ் போன்ற ஒரு சிறிய வீட்டில் அவளைப் பாதுகாப்பாக தங்க வைத்து உள்ளான் பரணி!
வேலையில் சேர்ந்த அன்றைய நாளுக்குப் பிறகு அவனிடம் பேச வேண்டிய தேவை ஏற்பட வில்லை அவளுக்கு!
அவளது ரிப்போர்டிங் எல்லாம் அங்கு இருந்த சீப் டாக்டருக்கு தான்!
ஆனால் அவன் வீட்டினர், குறிப்பாக அவனின் பாட்டியான ஜெகதாம்பாள் ஜான்வியிடன் பேசிக் கொண்டிருப்பார் எப்போதும்.
மிகவும் ஆசைப்பட்டு, இந்த ஊருக்கு வேலைப் பார்க்க வந்திருக்கிறாள் அவள்!
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் இருந்தது அந்த அழகிய பசுமையான கிராமம்!
லிங்க்டு இன்னில் இப்படி இந்த மாதிரி ஒரு கிராமத்தில் இயங்கிக்
கொண்டிருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு டாக்டர் தேவை என்பதைப் பார்த்தவுடன் விண்ணப்பித்து, இவளின் பதில்கள் பரணிக்கு திருப்தியாக இருக்கவே, அதன் சீப் டாக்டருக்கு இவளின் கல்வித்தகுதிகள் திருப்தியாக இருக்க, உடனே ஜாயின் பண்ணி விட்டாள்!
வாடகைக் காரில் இந்த ஊருக்குள் நுழைந்த போது, வழியில் ஒரு சின்ன ஆத்துப் பாலம்!
அதன் வழியே சென்றபோது, ஒரு பக்கம் ஒரு பெரிய ஆலமரம்! அதில் இருந்த விழுதுகள்! அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு விளையாடிய, ஆற்றில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள்!
அதைப் பார்த்தவுடன், அதன் டிரைவர் தன்னையறியாமல்
“சான்சே இல்ல! எப்படி ஒரு லைப் இந்த பசங்களுக்கு! கொடுத்து வச்சவங்க!” என்று சொல்லியே விட்டான்!
அப்படி தான் இருந்தது ஜான்விக்கும்!
அவளுடன் இன்னொரு டாக்டர் நந்தினியும் இவள் மாதிரியே இயற்கை சூழலுக்கு ஆசைப்பட்டு தான் ஜாயின் செய்தாள்.
ஆனால் நந்தினிக்கு எல்லாம் பிடித்து இருந்தது ஒன்றைத் தவிர!
இந்த அவுட் ஹவுசில் இவளும் நந்தினியும் சேர்ந்து தான் தங்கியிருந்தார்கள்.
ஆனால் பகலில் அவுட் ஹவுசின் மிக அருகே இருந்த ஒரு ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு இருந்த பெரிய கூடத்தில் பகல் முழுவதும் கிராமத்துப் பெண்கள் சிறு தானியங்களைப் புடைத்து எடுத்து சுத்தம் செய்து பேக்கிங் வேலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் பேச்சு சத்தம் நைட் டூட்டி முடிந்து பகலில் ஓய்வு எடுக்க விடாமல் நந்தினியை தொல்லை செய்ய அவள் ரிசைன் செய்து போய் விட்டாள்!
ஜான்விக்கு அப்படி ஒரு பிரச்சினை இல்லை! அவளுக்கு சத்தமாக பாட்டு பாடிக் கொண்டிருந்தாலும், லைட் எரிந்து கொண்டிருந்தாலும் கூட அவளுக்கு தூக்கம் கெடாது!
அதனால் பகலில் இருக்கும் இந்த அசவுகர்யம் அவளை ஒன்றும் செய்ய வில்லை. எனவே அவள் தொடர்ந்தாள்.
அவள் எத்தனை அசவுகர்யங்கள் அங்கே இருந்து இருந்தாலும் தொடர்ந்து தான் இருப்பாள்!
அதற்கு ஒரு ரகசிய காரணமும் உண்டு!
காரணம் இந்த ஊர்! இந்த ஊரில் ஒரு ஹாஸ்பிட்டல் கட்டுவார்கள், அதில் தான் வேலைக்கும் சேருவோம் என்று அவள் நினைத்தும் பார்த்திருக்க வில்லை.
அப்படி கிடைத்த போது உடனே வந்து விட்டாள்.
அதனால் தான் அவளின் அப்பா பி ஜி படிக்க சொன்னபோதும் கேட்காமல், சென்னையில் கிடைத்த வேலையைக் கூட விட்டுவிட்டு இங்கே வந்திருப்பது!
அவளின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவள் முதல் வகுப்பில் இருக்கும் போதே விவாகரத்து ஆகி விட்டது!
மியுச்சுவல் கன்சென்ட் டிவோர்ஸ்!
அவள் அப்பாவும் அம்மாவும் அலைப் பாயுதே ஸ்டைலில் அந்த படம் வரும் முன்னரே திருமணம் செய்தவர்கள்!
வீட்டில் தெரிந்து ஒரே சண்டை! கடைசி வரை அம்மா வீட்டிலும் அப்பா வீட்டிலும் அவர்களின் திருமணம் ஏற்றுக்கொள்ளப் பட வில்லை!
இதில் இருவருக்கும் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்து கொண்டிருக்க, மியுச்சுவல் கன்செண்டில் டைவர்ஸ் வாங்கி பிரிந்து விட்டார்கள்!
அம்மாவைப் பிரிந்த பின் அப்பா அவரின் கசின் ஊர்மிளாவைக் கல்யாணம் செய்து அவர்களுக்கு ரெண்டு பையன்கள். சுஷில் மற்றும் சுனில்!
விஜயதேவி மட்டும் கடைசி வரை தனியாகவே இருந்து, கொரானா இரண்டாம் வேவில் இறந்தும் விட்டார்.
எம். பி பி எஸ் படிப்பு இன்னமும் முடியாத நிலையில் ஜான்விக்கு இது மிகவும் அதிர்ச்சி!
ஆனால் அவள் அப்பா கூட இருந்தார் எல்லாவற்றிலும்.
அவளை படிப்பு முடிந்தவுடன் அவருடன் இந்தூர் (மத்திய பிரதேஷ்) கூட்டி செல்ல இருந்தார்!
ஊர்மிளா தடையொன்றும் சொல்ல வில்லை!
ஜகதீஸ்க்கு அவரின் இரு மகன்களும் டாக்டருக்கு படிக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டு!
அவர்கள் இன்ஜினியரிங் எடுத்து விட்டார்கள். மருத்துவத்தில் தனக்கு ஜான்வி தான் வாரிசு என்று அவர் திடமாக நம்பி, பி ஜி சீட்டும் ரெடி செய்தும் அவள் தீர்க்கமாக மறுத்து விட்டு இங்கே வந்து விட்டாள்.
இதில் அவருக்கும் நிறைய வருத்தம்!
இங்கு இந்த பண்ணை வீட்டில் நிறைய மக்களுடன் இருப்பது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது!
சென்னையில் அவளும் அவள் அம்மாவும் மட்டுமே கொண்டாடிய குக்கர் பொங்கல், இங்கு அமர்க்களப் பட்டது!
தனியே ஒற்றைப் பெண்ணாய் வளர்ந்தவளுக்கு, இந்த கூட்டுக் குடும்பத்தைப் பார்க்க ஏக்கமாக இருந்தது.
தனக்கு இப்படி சிப்லிங்க்ஸ், கசின்ஸ் யாருமே இல்லை என்று.
ஆனால் அவள் அம்மாவுக்கு இருந்தார்களாம். அம்மா சில சமயம் அவளின் சின்ன வயது நிகழ்வுகளைப் பற்றி சொல்வாள்.
அப்போது எல்லாம் ஜான்விக்கு தனக்கும் அப்படி ஒரு லைப் வேணும் என்றே நினைப்பாள்.
இந்த மன நிலையில் இருப்பவளுக்கு, இந்த ஊர், இந்த சூழல், இந்த மக்களை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது!
குறிப்பாக, இந்த ஜகதுப் பாட்டி!
அவருக்கு அவளை ஜான்வி என்று அழைக்க வராது! ஜானகி என்றே கூப்பிடுவார்!
கேட்டால், அவரது சின்ன வயது தோழியை நினைவுப் படுத்துகிறதாம் அவள் முகம்!
“என்ன அவ உன் அளவு நிறமா இருக்க மாட்டா! கொஞ்சம் மாநிறம்!” என்பார் அவர்.
“நான் உங்க பிரன்ட் மாதிரி இருக்கேன்னா, அப்போ, நானும் உங்கள ஜகதுன்னு கூப்பிடட்டா?” ஜான்வி கொஞ்சம் குறும்பாக ஹஸ்கி வாய்சில் கேட்க,
“நீ கூப்பிடு ராசாத்தி, அது என்னமோ தெரியல, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போய்டுச்சு! நீயும் என் பேத்தி மாதிரி தான்!” அவளைக் கொஞ்சினார் ஜகது!
“ம்ம். பேத்தி தான்னா, என்ன உன் பேரனுக்கு கட்டி வைக்கப் போறியா?” என்று கேட்டது ஒரு குரல்! காமெடி ஆக்டர் ரெடிங் கிங்க்ஸ்லி மாடுலேசனில்!
அது இன்னொரு பாட்டி தான்!
கனகுப் பாட்டி!
கனகு (aka) கவுண்டர் கனகு (aka) கனடா கனகு!
கவுண்டர் பேச்சு கொடுப்பதிலும், எடக்கு முடக்கு பேச்சிலும், அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது அந்த ஊரில்!
அந்த ஊரின் CCTV காமிரா அவர்! கனகுப் பாட்டியின் கழுகு கண்களுக்கு எதுவும் தப்ப முடியாது!
அவரும் ஜகதுப் பாட்டியும் சிறு வயது தோழிகள் தாம்!
கனகுப் பாட்டிக்கு குழந்தைகள் இல்லை! அவரின் உறவினர் ஒருவரின் குழந்தையை எடுத்து வளர்த்து, அவருக்கும் கல்யாணம் முடிந்து பேரன் பிறந்து அவன் கனடாவில் செட்டில் ஆகி விட்டான்.
ஒரு முறை அவன் பாட்டியையும் கூட அங்கு அழைத்துப் போய் இருந்தான்!
அது முதல் தான் அவர் கனடா கனகு!
ஜகதுவைக் காட்டிலும் அவர் இரண்டு வகுப்பு கூடுதலாக படித்து விட்டார், என்று அவரை அடிக்கடி மட்டம் தட்டுவார் அவர்!
எட்டாவது படிக்கும் போதே ஜகது பெரிய மனுஷி ஆகி விட்டதால், அதற்கு மேல் அவரின் படிப்பு நின்று விட, கொஞ்சம் லேட்டாக பெரியவளான கனகு எஸ் எஸ் எல் சி வரை படித்து இருந்தார்!
ஆனால் பெயில்! எக்ஸாம் கூட எழுத வில்லை அவர்!
அவர்களுக்குள் பாஸ் பெருசா, பெயில் பெருசா என்ற விவாதம் அடிக்கடி வரும்!
“டீ , நான் உன்னை விட அதிகம் படிச்சு இருக்கேன், இங்க்லீஷ்ல கையெழுத்துப் போடுவேன், உன்னால முடியுமா? என்னோட எஸ் எஸ் எல் சி எங்க? உன் எட்டாவது எங்க?.ம்ம்.?”
அவர் கேப்பிட்டல் லெட்டரில் KANAGAM என்று எழுதி வைப்பார். அதைத் தான் இப்படி பீற்றிக் கொள்வார்!
“நீ எஸ் எஸ் எல் சி பெயில்! நான் எட்டாவது பாஸ்! பாஸ் பெரிசா. இல்ல பெயில் பெரிசா? நீயே சொல்லு” என்பார் பதிலுக்கு ஜகதுவும்!
என்ன எடக்கு முடக்கு பேசினாலும் அவர்கள் இருவரும் உயிர்த் தோழிகள், இந்த வயதிலும்!
ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து இருக்க மாட்டார்கள்!
ஜகதுவையும் இந்த ஊரையும் விட்டு இருக்க முடியாமல் தான் கனகு கனடா செட் ஆக வில்லை என்று திரும்பி வந்ததே!
ஆனால் வாய் ஓயாமல் தான் ப்ளைட்டில் சென்று வந்ததையும், இவ்வளவு பெரிய பணக்காரியா இருந்தும் கூட இன்னமும் ஜகது ஒரு முறை கூட ப்ளைட்டில் செல்ல முடியாதது பற்றியும் சொல்லி சொல்லி அவரை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார் அவ்வபோது!
“அய்யோ. பாட்டி இப்ப எதுக்கு தேவையில்லாதத பேசுற, இப்படி எல்லாம் பேசுன, அப்புறம் விஷ ஊசிப் போட்டு விட்டுடுவேன் உனக்கு!” செல்லமாக கண்டித்தாள் ஜான்வி கனகுவை.
“வாங்க உங்க ரெண்டுப் பேருக்கும் சூப்பர் பில்டர் காபி தரேன்” என்று அவர்களை உள்ளேக் கூட்டிப் போனாள் அவள்!
காபி குடித்து விட்டு வெளியே வந்த ஜகது பாட்டி முகத்தில் ஒரே யோசனை!
“”என்ன ஜகது, அப்படி எந்த கோட்டையை பிடிக்க போற? இப்படி ரோசிச்சுகிட்டு (யோசிச்சு)இருக்க?”
“இல்லடி கனகு, நீயே ஒரு கரி நாக்குக்காரி கனகு, நீ உன் வாயால எது சொன்னாலும் அது பலிக்கும்!
நீ வேற ஜானகிய பரணிக்கு கட்டி வைக்க போறியான்னு கேட்டியா? அப்படி செஞ்சாதான் என்னன்னு எனக்குள்ளேயும் ஒரே ரோசனையா இருக்கு!
தங்கமான பொண்ணு இவ, இவ என் பேரன கட்டிக்கிட்டா நல்லா இருக்கும் இல்ல?”
“நல்லா தான் இருக்கும்! அதுக்கு அவங்க ரெண்டு பேரும் ஒத்துக்கணுமே!”
“நாம தான் எதாச்சும் செஞ்சு அவங்கள சேர்த்து வைச்சுடனும்!”
“என்ன அவங்கள காதல் பண்ண வைக்கப் போறியா?” கிண்டலுடன் கேட்டார் கனகு!
“ஆமா, என் பேரன் கல்யாணப் பேச்சை எடுத்தாலே முறைக்கிறான்! பின்ன நாம தானே அவன இந்த மாதிரி தான் கோத்து விடனும்! நீ தான் அதுக்கு உதவி செய்யணும்!”
“அடிப் போடி, இவளே.. ஏது என் தொழில மாத்திடுவ போல? அதெல்லாம் முடியாது, ஊருக்குள்ள கவுரவமா இருக்கிறவ நானு!”
“நான் சொன்னப் படி செய்யல, நான் என் பேரன் கிட்ட சொல்லி, உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன் பார்த்துக்கோ”
“என்ன? என்னை வேலையை விட்டு தூக்கிடுவானா அவன்! அப்புறம் ஒரு பேக்கிங் நடக்காது இங்க பார்த்துக்கோ!”
கனகு தான் அந்த பேக்கிங் டிவிசன் சூப்பர்வைசர்!
அப்பாயிண்டட் பை பரணி!
“ஏண்டி பரணிக்கு ஒரு நல்ல பொண்ணு பொண்டாட்டியா வரணும் தானே நான் இப்படி செய்ய சொல்றேன், ஏன் அவன் எனக்கு மட்டும் தான் பேரனா? உனக்கு இல்லையா?”
இதில் கவிழ்ந்து விட்டார் கனகு!
“இப்ப என்னன்ற?”
“நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்கள லவ் பண்ண வைக்கப் போறோம்!
என்ன சரி தானே!”
“ம்ம். சரி வா பார்த்துடுவோம், நாமளா அவங்களான்னு” கனகுவும் கைப் கோர்த்தார் ஜகதுவுடன்!
இப்படி பாட்டிமாரின் மாஸ்டர் ப்ளான் பற்றி எதுவும் தெரியாமல் அவன் வீட்டு மாடியில் இருந்த ட்ரேட் மில்லில் வியர்க்க வியர்க்க ஓடிக் கொண்டிருந்தான் நம் நாயகன் பரணி!
பாவம் அந்த பாட்டிகள்!
அவன் தன் கரியரோடு, காதலையும் துறந்து விட்டு தான் இங்கே இந்த கிராமத்தில் இருக்கிறான் என்பது அவர்களுக்கு தெரியாதே!
error: Content is protected !!