Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 41

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻


அத்தியாயம் 41


"வெரி க்ளெவர் அன்ட் நீட் ஜாப்…."



ரேகா நடந்ததை சொல்லி முடித்த உடனேயே இன்ஸ்பெக்டர் ரத்னவேல் உதிர்த்த கமெண்ட் இது.

சுற்றியிருந்தவர்களோ ஏதோ ஒரு சினிமா பார்த்த பிரமையில் விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.



"சாதாரணமா ரத்தத்தைப் பாரத்தாலே மயங்கி விழற பெண்களைத் தான் நான் என் சர்வீஸ்ல பாரத்திருக்கேன் ஆனால் நீங்க ஓரு கொலை நடந்தும் அழகாய் நிமிஷத்தில் ப்ளான் பண்ணி அதை ஆக்ஸிடென்டா காண்பிக்க பதட்டப்படாமல் புத்திசாலித்தனமாய் தடயங்களை மாற்றி

ரொம்பவே மெனக்கெட்ருக்கிங்க. …

ரியலி க்ரேட்! ஆனால் ராதா, ஒரு குடும்பப்பொண்ணுக்கு இவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கறப்போ, கிரிமினல்ஸொட அனுதினமும் பழகற போலீஸ்கார புத்தி இன்னும் ஒரு படி மேலாக யோசிக்காதா? மிஸ்டர் நாராயணன்! கொஞ்சம் முன்னாடி வர்றிங்களா?"



அதுவரையில் சற்றே ஒதுங்கி நின்றிருந்த

நாராயணன் என்ற அந்த மனிதர் இப்பொழுது இனஸ்பெக்டரின் அருகில் வரவும் அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.



"இந்த நாராயணன் முரளியோட புகைப்படத்தை செய்தித் தாளில் பார்த்து விட்டு எஙகளிடம் வந்து தான் முரளியை தியேட்டரில் ஒரு நாள் பார்த்ததாகவும், ஒரு பெண் அவரிடம் சீண்டலாகப் பேசியதாகவும் சொன்னார்.ராதாவோட புகைப்படத்தை காட்டினால் இவங்க இல்லைனு சொல்லிட்டார்.அந்தப் பெண் பெயரோ பேசிய பேச்சோ சரியா ஞாபகமில்லேனு சொல்லிட்டார்.ஆனால் அந்தப் பெண் இரண்டு வயது சிறுவனுக்கு தாய் என்ற விஷயம் மட்டும் அவர் சொல்லித் தெரிஞ்சுக்க முடிஞ்சது. இரண்டு வயது குழந்தையின் தாய்க்கு முரளியுடன் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசித்ததில் அவரின் நண்பர்களிடம் விசாரித்ததில் தான் ரேகா முரளியின் பிஏ முன்னால் காதலி என்ற விஷயம் தெரிய வந்தது. நான் விசாரிச்சவரை முரளியின் கேரக்டர் சரியில்லனு தான் எல்லாருமே சொன்னாங்க.ஸோ ரேகாவுக்கு முரளி மேல வன்மம் இருக்கலாம்னு ஒரு அசம்ப்ஷன் தான்.ஆனால் குடும்பம் குழந்தைனு செட்டிலாகிட்ட ரேகா முழுசா ரெண்டு வருஷம் கழிச்சு இப்படி முரளியை பழிதீர்க்கனும்ன்ற அவசியம் என்னன்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் ஒண்ணு மட்டும் சர்வநிச்சயமா எங்களுக்கு தெரிந்தது. ராதா இந்த கொலையை செய்யல. முரளி ஒரு பெண்ணை பலாத்காரம் பண்ண முயன்ற பொழுது தான் கொல்லப்பட்டிருக்கார்.அவர் உடலில் ஏகப்பட்ட நகக்கீறல்கள் இருந்தது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூலம் தெரிய வந்தது. கணவன் மனைவி தகராறுனால நடந்த விபத்துனு காண்பிக்க ராதா தலையை கலைச்சு உடையை கிழிச்சு தன்னை தயார்படுத்திட்டவங்க ஒரு விஷயத்தை சுத்தமா மறந்துட்டாங்க.எஸ்.அவங்களுக்கு நீளமா நகம் வளர்க்கற பழக்கமில்லன்றதை மறந்துட்டாங்க. மோரோவர் மனைவியை பலாத்காரம் பண்ண வேண்டிய அவசியமில்லயே முரளிக்கு. ஸோ! ரேகாதான் கல்ப்ரிட்னு முழுசா நான் தீர்மானம் பண்ணல. ஏன்னா பண்ணாத கொலையை தான் பண்ணியதா சொல்லி ராதா ஏன் சரண்டராகனும்? ரேகாவை ஏன் ராதா காப்பாத்த முயற்சி செய்யனும்? ரேகாவுக்கும் ராதாவுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி விடையே தெரியாத பல கேள்விகள்…ரேகாவை சந்தித்தால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கலாம்னு முடிவு பண்ணி அதற்காக கிளம்பிய வேளையில் தான் ரேகாவே சரண்டராகி உண்மையை ஒத்துகிட்டாங்க. என்னை அதிகம் அலைய வைக்காமல் தானே சரண்டர் ஆனதற்காக ஐ சுட் தாங்க் ஹர்…."



கைகளை முன்னும் பின்னும் அசைத்தபடி பேசி நடந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சட்டென்று நின்றார்.பின் திரும்பி ரேகாவை ஒரு பார்வை பார்த்தார்.



அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக ரேகா சட்டென்று எழுந்து நின்றாள்.



"நா……நான் போறேன்க்கா….."

நடுங்கும் குரலில் சொன்ன ரேகா , அப்பொழுது தான் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்த மோகனைக் கண்ணீருடன் பார்த்தாள்.



இரவு படுக்கப் போகும் முன் கண் முன்னே இருந்தவள் , விடிந்த பொழுதில் வீட்டில் இல்லாதது கண்டு, எங்கே தீபக்கின் இழப்பைத் தாங்காமல் தப்பான முடிவேதும் எடுத்துவிட்டாளோ என்று பதறி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவன் அங்கேயிருந்த காவலர்களிடம் விவரம் தெரிந்து கொண்டு இங்கே வந்திருந்தான் மோகன்.

'இவருக்குத் தான் என் மீது எவ்வளவு அன்பு? இந்த அன்பிற்கு கொஞ்சம் கூட அருகதையில்லாதவள் அல்லவா நான்?

களங்கப்பட்டவள் என்ற கறையுடன் இப்போ கொலைகாரின்ற பட்டத்தையும் சுமந்துகிட்டு நிற்கற நான் உங்களுக்கு மனைவியாயிருக்க கொஞ்சமும் தகுதியில்லாதவள்…'



.நெஞ்சில் வலம் வந்த எண்ணங்களின் அழுத்தத்தில் மோகனின் காலில் சரிந்து விழுந்தாள் ரேகா. ஒரு கணம்….ஒரே ஒரு கணம் அதிர்ந்து போன மோகன் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு அவளை தூக்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.



அவர்களுக்கு திருமணமானபின் முதன்முறையாக அவனின் ஸ்பரிசம். ரேகாவிற்கு மேனி சிலிர்த்தது.



"எனக்காகவும் தீபக்கிற்காகவும் வாழ்ந்த நீங்க இனிமேலாவது உங்களுக்காக வாழனும்.ஒ….ஒரு நல்ல பொண்ணாய் பாரத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க சந்தோஷமாய் வாழனும்….என் ஆசையை நிறைவேற்றுவிங்களா…..ப்ளீஸ்…."



துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ள மேலே பேச இயலாமல் ரேகா கதறி அழுகவும் மோகன் அவள் முகத்தை நிமிர்த்தி விழி நீரை தன் விரல்களால் துடைத்தான். பின் தழைந்த குரலில் சொன்னான்.



"உன்னை மனைவியா நெனச்சுப் பழகிட்ட என்னால இன்னொரு பெண்ணை ஏத்துக்க முடியாது ரேகா. இத்தனை காலமாய் நான் சொல்ல நெனச்சதை சொல்லாமல் மறைச்சதை இப்பவும் சொல்லலேன்னா என் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போய்டும் ரேகா.எஸ்

ஐ லவ் யூ….என் காதலியா மனைவியா இருந்த இனிமேலும் இருக்கப் போற ஒரே பொண்ணு நீதான்மா.. தண்டனை காலம் முடிஞ்சு நீ திரும்பி வர்ற வரை நான் உனக்காக காத்திருப்பேன்…."





"மோகன்……"

கணவனின் தோளில் முகம் புதைத்து ரேகா விசும்ப, மோகன் சுற்றிலும் ஆட்கள் இருப்பது பற்றிக் கூட யோசிக்காமல் அவளை இறுக அணைத்துக் கொள்ள., தங்களை மறந்து தனி உலகத்தில் சஞ்சரித்த அந்த தம்பதியரின் அன்பும் அரவணைப்பும் சுற்றியிருந்தவர்கள் மனதையும் நெகிழ வைக்க, இந்நேரம் வரை உணர்ச்சியற்ற ஜடமாய் இறுகிப்போய் அமர்ந்திருந்த ராதா இப்பொழுது கண்ணீர் மல்க வெங்கட்ராமனை யாசித்தாள்.



"ம….மாமா…ப்ளீஸ்…ரேகாவை எப்படியாவது….."

அவள் மேலே பேசமுடியாமல் தேம்பியழவும், இதமாய் மருமகளின் தோள் தட்டி சமாதானப்படுத்திய வெங்கட்ராமன் இன்ஸ்பெக்டரின் புறமாக திரும்பினார்.



"தற்காப்புக்காக செய்யற எந்த செயலும் குற்றமாகாதுனு நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.இது கொலையில்லை . ஒரு பெண் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதில் எதிர்பாராமல் நடந்து விட்ட விபத்து. உங்க கடமையில் நான் குறுக்கிட விரும்பல. ஆனால் இந்த கேஸை நீங்க மனிதாபிமானத்துடன் கையாளனும்னு நான் எதிர்பார்க்கறேன்."



"சுயர் புரொபஸர். நிச்சயமா என்னாலான உதவிகளை நான் கண்டிப்பா செய்வேன்…"



"அதான் இன்ஸ்பெக்டரே சொல்லிட்டாரே உதவி செய்றதா….அப்புறம் என்ன ராதா ?

கவலைப்படாதே."



வெங்கட்ராமன் மயிலிறகின் வருடலாய் வார்த்தைகளை கோர்த்து ராதாவைப் பார்த்து ஆறுதலாய் சொன்னார்.



"தைரியமா இரும்மா…ராதா…நான் போய் நம்ம வக்கீலைப் பார்த்துப் பேசி ரேகாவோட ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்…."

வேகமாக பேசிவிட்டு நகர்ந்தவரின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டாள் ராதா.

"தாங்க்ஸ் மாமா….உ…உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு…."

குமுறிக் குமுறி அழுதவளைத் தட்டிக் கொடுத்தவர் அவள் தலையை இதமாக வருடிக் கொண்டே சொன்னார்.



"மகன் செஞ்ச தப்புக்கு ஒரு அப்பாவா நான் செய்ற பிராயசித்தம் தான்மா இது.இதுல பெருமைப்பட ஒண்ணுமில்லை…."



அதற்கு மேல் அங்கு நின்றால் உணர்ச்சி வசப்படுவோம் என்ற எச்சரிக்கை உணர்வில் சட்டென்று அவ்விடத்தை விட்டு அகன்றார் ராதாவின் பாசக்கார மாமனார் வெங்கட்ராமன்.
 
Top