இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-10
நீல நிறத்தில் வெள்ளை நிற கோடிட்ட சட்டையும், கருப்பு நிற அரைக்கால் ட்ரௌசர் அணிந்து தன் கால்களை மடக்கி பருவதம்மாவின் அருகில் அமர்ந்திருந்தவன் தன் கண்களை மறைக்கும் சுருள் முடிகளை ஒதுக்கிவிட்டு
“பரு பாட்டி, இந்த ஃபளவர்க்கு யெல்லோ கலர் அடிக்கலாமா? இல்ல, ரெட் கலர் அடிக்கலாமா?” என்று ஆதவ் கிருஷ்ணன் பருவதம்மாவிடம் வினவ
“உனக்கு எந்த கலர் பிடிச்சிருக்கு கண்ணா?”
“ரெட் கலர்….”
Advertisement
“அப்போ அந்த கலரே அடிக்கலாம்…. ஃபளவர்க்கு கலர் அடிச்சு முடிச்சதும் சமத்து குட்டியா அம்மா ஊட்டுற சாதத்தை வாங்கிக்கனும் சரியா?” என்று பருவதம்மா கூறியதை கேட்டு சரியென்பதை போல் தலையசைத்தவன் வர்ணம் தீட்டும் புத்தகத்திலிருந்த பூவின் ஒவ்வொரு இதழ்களுக்கும் வர்ணம் தீட்டிக்கொண்டே தன் அன்னை ஊட்டும் உணவினை மறுக்காமல் உண்டு கொண்டிருந்தான்.
பருவதம்மாவிடம் ஞாயிற்று கிழமை அன்று ஆதவ் கிருஷ்ணனை இல்லத்திற்கு அழைத்து வருவேன் என்று கூறி சென்ற ஆழினியிடம் காலை ஏழு மணிக்கே அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்து ஆதவ் கிருஷ்ணனுடன் தான் தன் இல்லத்திற்கு வரவேண்டுமென்று அன்பு கட்டளையிட்டிருந்தார். அவரது அன்பினை உதாசீனம் படுத்த இயலாதவள் தன் மகனை காலையிலேயே தன்னுடன் அழைத்து வந்துவிட்டாள் ஆழினி.
வேலை நிமித்தமாக அதிகாலையிலேயே தன் தாயிடமிருந்து விடைப்பெற்று சென்ற விஜய சிவமாறனுக்கு ஆழினி திருமணமானவள் என்றும் குறிப்பாக கணவனை இழந்த அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது என்றும் இந்நிமிடம் வரை அவனுக்கு தெரியவில்லை என்று கூறுவதை விட பருவதம்மாவும் செல்வி அக்காவும் அதை தெரியப்படுத்தவில்லை என்று தான் கூறவேண்டும்.
Advertisement
ஏனெனில், நேற்றிரவு தன் மகன் மற்றும் தம்பியுடன் தன்னிடமிருந்து விடைப்பெற்று சென்ற ஆழினியை பற்றி பருவதம்மா அவரின் மகனிடம் இம்மியளவும் கூறவில்லை. செல்வி அக்காவிடமும் ஆழினியை பற்றி சிவமாறனிடம் எதுவும் கூறக்கூடாதென்று தீர்க்கமாக கூறியவர் அவனை அவன் வழி சென்று தான் மடக்கவேண்டும் என்று தன் மனதில் சபதமெடுத்து கொண்டார்.
Advertisement
பருவதம்மாவிடம் பல கதைகள் பேசியவாறு தான் கொடுக்கும் உணவினை சமத்தாய் உண்ணும் தன் மகனை இரசித்தவளின் மனமோ அவளது பெற்றோரின் நினைவில் கலங்க தொடங்கிவிட்டது.
“என் அப்பாவும் அம்மாவும் இந்நேரம் இருந்திருந்தா பருவதம்மா மாதிரி அவங்களும் ஆது குட்டியோட விளையாடி இருப்பாங்க தான?” என்று ஆழினி தன் மனதில் நினைத்து கலங்க ஆரம்பிக்க, அவளது நிலையை அறியாதவர் ஆதவ் கிருஷ்ணனுடன் விளையாடியவாறு
“ஆழினிம்மா, உன் அப்பா அம்மா எங்கிருக்காங்க? என்ன பண்றாங்க?” என்று பருவதம்மா வினவ, அவரது கேள்வியில் சற்றுநேரம் அமைதிகாத்தவள்
Advertisement
“ஆறு…. ஆறு வருஷத்துக்கு முன்னாடி…. ஒரு ஆக்சிடென்ட்ல என் அப்பாவும் அம்மாவும்….” என்று அடுத்த வார்த்தை கூற முடியாமல் திணறியவளின் கண்களோ இத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை மடைத்திறந்த வெள்ளமாய் வெளியேற்றியிருந்தது.
ஆழினி கூறியதை கேட்டு பருவதம்மா மட்டுமல்லாது அவ்வறையை சுத்தம் செய்து கொண்டே ஆதவ் கிருஷ்ணனின் மழலை மொழியை இரசித்து கொண்டிருந்த செல்வி அக்காவின் மனமும் கலங்க ஆரம்பித்துவிட்டது.
“இந்த பொண்ணோட வாழ்க்கையில அந்த ஆண்டவன் எத்தனை கஷ்ட்டத்தை தான் கொடுத்திருக்கானோ தெரியல….” என்று பருவதம்மா மற்றும் செல்வி அக்கா இருவரும் ஒரேபோல் தங்கள் மனதில் நினைக்க, அவர்களின் நிலையை உணர்ந்தவள் சட்டென்று தன் நிலையை மாற்றிக்கொண்டாள்.
“செல்வி அக்கா, நீங்க போய் பருவதம்மா குடிக்க முருங்கை கீரை சூப் எடுத்துட்டு வாங்க….” என்று ஆழினி கூறியதை கேட்டு முகம் சுளித்தவர்
“ஆழினிம்மா, எனக்கு கீரை சூப் பிடிக்காதும்மா…. கீரை வேண்டாமே….” என்று பருவதம்மா பாவமாக கூற, அவரை தன் கண்களிடுங்க பொய்யாய் முறைத்தவள்
“கீரை உடம்புக்கு நல்லது…. நீங்க இந்த மாதிரி சூப் குடிச்சாத்தான் ஓடியாடி வேலை செய்ய முடியும்….” என்று ஆழினி கூற, அவளருகில் அமர்ந்திருந்தவன்
“பரு பாட்டி, என் கூட ரன்னீங் ரேஸ் விளையாடுறேன்னு சொன்னீங்க தான? அப்போ சூப் குடிச்சாத்தான் நீங்க என் கூட ரன்னிங் ரேஸ் விளையாட முடியும்…. அம்மா சொல்ற மாதிரி செல்வி ஆன்டி கொடுக்குற சூப் குடிங்க….” என்று ஆதவ் கிருஷ்ணன் மழலை மொழியில் கூற, இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்று நினைத்த பருவதம்மாவும் தன் கண்களை இறுக்கி முடியவாறு செல்வி அக்கா அளித்த சூப்பினை ஒரே மடக்கில் குடித்து முடித்திருந்தார்.
பருவதம்மா செயலை கண்டு ஆதவ் கிருஷ்ணன் கைத்தட்டி உற்சாகப்படுத்த, அவரை மற்ற இருவரும் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தனர். நேரங்களும் அத்தனையும் ஆதவ் கிருஷ்ணனின் குறும்பு பேச்சிலும் அழகிய சிரிப்பிலும் கரைய தொடங்க, இரவின் ராணியான நிலவின் ஆட்சியும் அழகாக தொடங்க ஆரம்பித்திருந்தது.
பருவதம்மாவின் அறையில் மாத்திரைகள் அனைத்தையும் சரிபார்த்து அடுக்கி வைத்து கொண்டிருந்த ஆழினியின் அருகில் வந்தவன் அவளது புடவையின் முந்தானையை பிடித்தவாறு
“அம்மா…. தூக்கம் வருது….” என்று ஆதவ் கிருஷ்ணன் தன் கண்களை கசக்கி கொண்டே கூற, இல்லத்தின் கூடத்தில் நகரும் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் ஆழினியிடம்
“என் ரூம் பக்கத்துல தான் கெஸ்ட் ரூம் இருக்கு…. ஆது குட்டியை அங்க தூங்க வை ஆழினி….” என்று பருவதம்மா கூற, அவரிடம் மறுப்பாக தலையசைத்தவள்
“இல்ல பரவாயில்லம்மா…. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்பன் வந்துடுவான்…. நானும் ஆதுவும்….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“அதுவரை பிள்ளையை முழிச்சிக்கிட்டு இருக்க சொல்றியா? அவன் தான் டின்னர் சாப்பிட்டுட்டான்ல? ஆது குட்டிக்கு தூக்கம் வரும்போதே தூங்க வச்சிடு ஆழினி…. லேட் பண்ணப்பண்ண அதுவே பழக்கமாகிடும்…. நான் சொல்றதை கேளு, இது உன் வீடு மாதிரி…. ஆது குட்டியை ரூம்க்கு கூட்டிட்டு போய் தூங்க வைம்மா….” என்று பருவதம்மா கூறியதை கேட்டவள் மறுப்பு தெரிவிக்க மனம் கேளாமல் அவர் கூறிய அறைக்குள் ஆதவ் கிருஷ்ணனுடன் சென்றிருந்தாள்.
அறையிலிருந்த மெத்தையில் அமர்ந்தவள் ஆதவ் கிருஷ்ணனை தன் மடியில் படுக்க வைத்து மார்பில் தட்டி கொடுக்க, தன் அன்னையிடம் தஞ்சம் அடைந்தவன்
“அம்மா…. பாட்டு பாடுங்க….” என்று ஆதவ் கிருஷ்ணன் தூக்க கலக்கத்தில் கூற, அவன் கூறியதை கேட்டவள் தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
ஆதவ் கிருஷ்ணன் பருகுவதற்கு பாலினை காய்சி எடுத்து வந்த செல்வி அக்கா ஆழினியின் தயக்கத்தை நன்றாக புரிந்து கொண்டார்.
“ஏன் ஆழினி தயங்குற? இது உன் வீடு மாதிரி…. மாதிரி என்ன, இது உன் வீடு தான்…. ஆது குட்டி தூங்கனும்ல பாடும்மா….” என்று இரட்டை அர்த்தத்துடன் கூறிய செல்வி அக்காவுடன் பருவதம்மாவும் சேர்ந்து கொள்ள, அவ்விருவரது கூற்றிலிருக்கும் அர்த்தங்களை அறியாத ஆழினியும் ஆதவ் கிருஷ்ணனின் மார்பில் மெல்லமாக தட்டியவாறு அவனுக்கான பாடலை பாட ஆரம்பித்திருந்தாள்.
தாயழுதாளே நீ வர
நீயழுதாயே தாய் வர..
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா..
உன்னை நான் இந்த
நெஞ்சில் வாங்கிட..
மெத்தைப்போல் உன்னை மெல்லத்தாங்கிட
விழி மூடாதோ…
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே….
என்ற பாடலை ஆழினி பாடி முடித்ததும் ஆதவ் கிருஷ்ணன் தூங்கிவிட, அவனை உறங்க வைத்த அழினியின் கண்கள் கலங்கியிருந்தது.
ஆழினியின் பாடலை கேட்டு பருவதம்மா மற்றும் செல்வி அக்கா மட்டுமல்லாது இல்லத்தின் வாயிலில் நின்றிருந்த விஜய சிவமாறனின் மனமும் கலங்கி தான் இருந்தது.
பாடலை கேட்ட விஜய சிவமாறனின் மனமோ ஆழினியின் குரலிலேயே அவளது மனதில் சொல்லமுடியாத வலியை சுமந்து கொண்டிருக்கிறாள் என்று சரியாக கணித்திருக்க, ஆழினியின் மனதை முழுவதுமாய் அறிந்த அவளின் தாயுமானவனான இன்பன் இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தான்.
ஒளி வீசும்….
