Skip to content
Post Views: 207
ஆழினியின் பாடலை கேட்டவாறு (இரசித்தவாறு) தன் இல்லத்திற்குள் நுழைந்திருந்தான் விஜய சிவமாறன். ஆழினியின் குரலில் இலயித்திருந்த பருவதம்மா சிவமாறனின் வருகையால் அதிலிருந்து விடுப்பட்டிருந்தார்.
“வா சிவா, மீட்டிங் எப்படி போச்சு?” என்று வினவிய பருவதம்மாவிடம்
“நல்லா போச்சும்மா…. ஆழினியா பாட்டு பாடுனாங்க? அவங்க எங்கிருக்காங்க?” என்று சிவமாறன் வினவ, அவனை கண்டு மெலிதாக சிரித்தவர்
“என்னை நம்ம கார்டனுக்கு கூட்டிட்டு போறியா சிவா? உன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்….” என்று கூறிய பருவதம்மாவிடம் சரியென்று கூறி தலையசைத்தவன் நகரும் நாற்காலியில் அவரை இல்லத்திலுள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.
Advertisement
கண்களை கவரும் மஞ்சள் நிற மலர்களை தன் கிளைகளில் தாங்கிக்கொண்டு செழுமையாக வளர்ந்திருந்த சரக்கொன்றை மரத்திற்கு அடியில் பருவதம்மாவை அழைத்து வந்தவன் அவருக்கு எதிரிலிருந்த புல் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான் விஜய சிவமாறன்.
தன் மகனின் தலையை ஆதூர்யமாய் கோதியவர்
“சிவா, நான் உன் கிட்ட ஒன்னு கேட்பேன், எனக்கு தருவியா?” என்று பருவதம்மா பீடிகையுடன் வினவ, அவரை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தவனிடம்
Advertisement
“நான் இறந்ததுக்கு அப்புறம் எனக்கு நெய் பந்தம் பிடிக்க பேரப்பிள்ளை வேணும் தருவியா?” என்று கண்ணீருடன் வினவிய தன் அன்னையின் கூற்றில் அதிர்ந்தவனின் மனம் சுக்குநூறாய் உடைந்திருந்தது.
Advertisement
“அம்மா, என்னம்மா பேசுற? உனக்கு எதுவுமாகாது…. இந்த மாதிரி இனிமே என் கிட்ட பேசாத….” என்று கோபமாக கூறிய சிவமாறனை கண்டு புன்னகைத்தவர்
“யாராயிருந்தாலும் என்னிக்காவது ஒருநாள் இறந்து தானாகனும்…. நான் கேட்டதுக்கு முதல பதில் சொல்லு….”
“என்னம்மா சொல்லனும்?”
Advertisement
“கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு சிவா….”
“அடம்பிடிக்காதீங்கம்மா…. எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி கேக்குறீங்க?”
“முடிஞ்சு போன கதையை பத்தி பேசாத சிவா…. நடக்கப்போறதை பத்தி மட்டும் யோசி…. எனக்கு ஆழினி இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்….”
“அம்மா, நேத்தே சொல்லிட்டேன்ல? ஆழினியை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு, நான் போய் எப்படி ஆழினி வீட்டுல….” என்று சிவமாறன் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“ஆழினிக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு….” என்று கூறிய தன் அன்னையை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
“நான் சொல்றது உண்மை தான் சிவா, ஆழினிக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு…. நீயும் அவளுக்கு ரெண்டாந்தாரம் தான்…. இப்போ நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்ல?” என்று பருவதம்மா வினவ, அவர் கூறிய கூற்றை கேட்டவன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாது
“ஆழினி ஹஸ்பென்ட்?” என்று சிவமாறன் வினவ
“அவருக்கு என்னாச்சுன்னு நான் ஆழினி கிட்ட கேக்கல ஆனா அவர் இப்போ இல்ல அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்…. அதுமட்டுமில்ல ஆழினியோட அப்பாவும் அம்மாவும் ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க…. அவளுக்கு ஒரு தம்பி மட்டும் தான் இருக்காங்க….” என்று பருவதம்மா கூறியதை கேட்டு மனம் கலங்கியவன் அவரின் மடியில் தலைசாய்த்து அழ தொடங்கியிருந்தான்.
சிவமாறனின் திடீர் செயலால் குழம்பியவர் அவனது தலையை வருடியவாறு
“என்னாச்சு சிவா? ஏன் அழற? எதுவாயிருந்தாலும் அம்மா கிட்ட சொல்லுப்பா?” என்று பதற்றமாக வினவிய பருவதம்மாவிடம்
“நான்…. நான் ஆழினியை காதலிச்சேன் ம்மா…. ஆனா….” என்று கூறியவன் தன் அன்னையிடம் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தான்.
சிவமாறன் கூறியதை கேட்டு முதலில் வருந்தியவர் பின்பு தன்னை மீட்டெடுத்து அவனை கண்டு சிரித்தவாறு
“இது தான் விதின்னு சொல்லுவாங்க சிவா…. உன் வாழ்க்கையில மட்டுமில்ல ஆழினியோட வாழ்க்கையிலும் கல்யாணம்னு ஒரு பகுதி முடிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சிட்டு இருக்கீங்க…. ஆனா உங்க ரெண்டுப்பேரையும் சேர்த்து வைக்கத்தான் அந்த ஆண்டவன் இப்படியொரு முடிச்ச உங்க வாழ்க்கையில போட்டு இருக்கான்னு தோணுது…. குறிப்பா, ஆழினியோட பையனுக்கு ஒரு நல்ல அப்பா கிடைக்கனும்னு அந்த ஆண்டவன் நினைச்சிருக்கான் சிவா….” என்று பருவதம்மா கூறியதை கேட்டு அவரை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தவனிடம்
“உண்மை தான் சிவா, ஆழினிக்கு ஒரு பையன் இருக்கான்…. அவன் பெயர் ஆதவ் கிருஷ்ணன், லட்டு மாதிரி எவ்வளவு அழகாயிருக்கான் தெரியுமா? நான் ஆழினியை மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு கேக்கல, என் பேரனும் இந்த வீட்டுக்கு வாரிசா வரணும்னு தான் கேக்குறேன்…. ஆதவோட அப்பா யாருன்னு எனக்கு தெரியாது அதை தெரிஞ்சிக்கவும் நான் விரும்பல ஏனா அது அவளோட கடந்தக்காலம் ஆனா ஆதவுக்கு அப்பாவும், ஆழினிக்கு ஒரு துணையும் வேணும்னு நான் ஆசைப்படுறேன்…. முக்கியமா, ‘எனக்கு அப்புறம் என் பையனுக்கும் ஒரு குடும்பம் இருக்குன்னு’ நிம்மதி எனக்கு வேணும்….” என்று பருவதம்மா கண்கலங்க கூற, அவரை தீர்க்கமாக நோக்கியவன்
“நான் ஆழினியை கல்யாணம் பண்ணிக்கிறேன் அம்மா….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டு பருவதம்மாவின் கண்ணீர் துளிகள் மகிழ்ச்சியில் அவரது கன்னத்தை வருடி செல்ல, அச்சமயத்தில் அவர்களது இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தான் இன்பன்.
தன் இருச்சக்கர வாகனத்தை இல்லத்தின் வாயிலில் நிறுத்திய இன்பனின் கண்கள் தோட்டத்தில் பருவதம்மாவின் அருகிலிருந்த சிவமாறனை கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்திருந்தது. இன்பனை கண்டதும் சிவமாறன் மென்மையாய் புன்னகைக்க, அவனருகில் சென்றவன்
“சார், எப்படி இருக்கீங்க? நான் உங்களை இங்க எதிர்பார்க்கவேயில்ல….” என்று கூறிய இன்பனை புரியாமல் நோக்கியவர்
“என் பையன உனக்கு எப்படி தெரியும் இன்பா?” என்று பருவதம்மா வினவ, அவரிடம் அன்று நடந்த தங்களது சந்திப்பையும் அதற்கான காரணத்தையும் கூறிய இன்பனிடம்
“நல்லவேளை உங்க ரெண்டுப்பேருக்கும் ஒருத்தருக்கொருத்தர் ஏற்கனவே தெரிஞ்சிடுச்சு, அதுனால என் வேலையும் இப்போ சுலபமா முடிஞ்சிடுச்சு….” என்று கூறிய பருவதம்மாவை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் இன்பன்.
தன்னெதிரில் நின்றிருந்த இன்பனை கண்டு மெலிதாக சிரித்தவர்
“உன் அக்கா ஆழினியை என் பையன் சிவாவுக்கு கல்யாணம் பண்ணி தருவியா இன்பா?” என்று பருவதம்மா வினவ, அவரை அதிர்ச்சியாக பார்த்தவன்
“அம்மா…. என்ன…. என்ன சொல்றீங்க?” என்று இன்பன் வார்த்தை வராமல் தடுமாற அவனிடம் பருவதம்மா ஏதோ கூற வருவதற்குள்
“உன் அக்காவை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன் இன்பா…. நீ அன்னிக்கு ஒருத்தன் கிட்ட பேசினதெல்லாத்தையும் நான் கேட்டேன்…. உன் அக்கா ஆழினிக்கு துணையா மட்டுமில்ல உன் ஆதவ்க்கு நல்ல அப்பாவாவும் நான் இருப்பேன்…. இனி நீ தான் உன் முடிவை சொல்லனும்….” என்று விஜய சிவமாறன் கூற, அவர் கூறியதை கேட்ட இன்பனின் கண்கள் கலங்கியிருந்தது.
“எனக்கு சம்மதம் சார், ஆனா ஆழினி இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாளான்னு தான் எனக்கு தெரியல….” என்று கூறிய இன்பனை கண்டு சிரித்தவர்
“அதெல்லாம் கண்டிப்பா சம்மதிப்பா இன்பா…. இவ்வளவு ஏன், நேத்து இந்நேரத்துக்கு ஆழினியை வேண்டாம்னு சொன்னவன் இப்போ உன் கிட்டயே அவளை பொண்ணு கேட்கலையா? அதேமாதிரி ஆழினியும் என் பையன கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா சம்மதம் சொல்லுவா பாரு….” என்று பருவதம்மா நக்கலாக கூற, அவரை பொய்யாக முறைத்தவன்
“அம்மா, என்னைய நீ ரொம்ப கலாய்க்குற….” என்று விஜய சிவமாறன் கூறி சிரிக்க, அவனது புன்னகையை இரசித்தவர்
“இந்த சிரிப்ப பார்க்கனும்னு தான் நான் இத்தனை நாள் தவம் கிடந்தேன் சிவா….” என்று கூறிய தன் அன்னையின் தோள்களை சிவமாறன் ஆதரவாய் பற்ற, அவர்களின் சம்பாஷனைகளை இத்தனை நேரம் கேட்டிருந்த (கண்டிருந்த) இன்பனின் மனம் ஆழினியையும் ஆதவ் கிருஷ்ணனையும் அவர்களது கூட்டில் சேர்த்து பார்க்க ஆசைக்கொண்டது.
தன்னெதிரில் நின்றிருந்த இன்பனை கண்டு மெலிதாக சிரித்தவன்
“நான் நாளைக்கு ஆழினி கிட்ட தனியா பேசணும் இன்பா….” என்று கூறிய சிவமாறனை அதிர்ச்சியாக பார்த்தவன்
“என்ன? என்ன சொல்றீங்க சார்? இன்னும் ஆழினி கிட்ட கல்யாணத்தை பத்தி பேசவேயில்ல அதுக்குள்ள எப்படி?” என்று இன்பன் வினவ, அவனை கண்டு புன்னகைத்தவர்
“அப்போ இன்னிக்கு நைட்டே ஆழினி கிட்ட பேசிடு இன்பா….” என்று கூறிய பருவதம்மாவை கலக்கமாக பார்த்து கொண்டிருந்தான் இன்பன்.
“நேரத்தை வீணடிக்க வேண்டாம் இன்பா, நீ ஆழினி கிட்ட எல்லாத்தையும் தெளிவா பேசி நாளைக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா…. சிவாவும் ஆழினியும் ஒருத்தருக்கொருத்தர் மனசுவிட்டு பேசி புரிஞ்சிக்கட்டும்….” என்று பருவதம்மா கூறியதை கேட்டு சம்மதம் தெரிவித்த இன்பனை அழைத்து கொண்டு சிவமாறனும் பருவதம்மாவும் இல்லத்திற்குள் சென்றிருந்தனர்.
இல்லத்தின் கூடத்தில் அமர்ந்திருந்தவள் இன்பனின் வருகையை கண்டுவிட்டு
“ஏன் இன்பா இன்னிக்கு இவ்வளவு லேட்? எவ்வளவு நேரமா உனக்காக வெயிட் பண்றது?” என்று ஆழினி வினவ, அவனிடம் இன்பன் ஏதோ கூற வருவதற்குள்
“நாங்க மூணு பேரும் வெளிய பேசிட்டு இருந்தோம் ஆழினி அதான் லேட்டு…. ஆது குட்டி தூங்கிட்டானா?” என்று பருவதம்மா வினவ
“தூங்கிட்டான் பருவதம்மா…. நாங்க கிளம்புறோம், ரொம்ப லேட்டாகிடுச்சு….” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றவள் துயில் கொண்டிருந்த ஆதவ் கிருஷ்ணனை தன் தோள்களில் போட்டுக்கொண்டு இல்லத்தின் கூடத்திற்கு வந்திருந்தாள்.
ஆழினியின் தோள்களில் துயில் கொண்டிருந்த ஆதவ் கிருஷ்ணனை கண்டதும் அவனை அள்ளி கொஞ்சி முத்தமிட நினைத்த மனதை கட்டுப்படுத்திய விஜய சிவமாறன் அவன் தூங்கும் ஆழகினை இரசித்து கொண்டிருந்தான்.
சிவமாறன், பருவதம்மா மற்றும் செல்வி அக்காவிடமிருந்து ஆழினியும் இன்பனும் ஆதவ் கிருஷ்ணனுடன் விடைப்பெற்று சென்றிருந்தனர். அவர்கள் அங்கிருந்து சென்ற மறுநொடியே சிவமாறன் மற்றும் அழினியின் திருமணத்தை பற்றியும் இத்தனை நேரம் இன்பனிடம் உரையாடியதை பற்றியும் செல்வியிடம் பருவதம்மா கூற, அவர் கூறியதை கேட்ட செல்வி அக்காவின் மனமானது மகிழ்ச்சியில் கரைந்து அனைத்தும் நல்லபடியாக நடக்கவேண்டுமென்று கடவுளிடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது.
இவர்களின் நிலை இங்கு இப்படியிருக்க, அங்கு விஜய சிவமாறனை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய இன்பனின் கூற்றை கேட்டதும் ருத்ரக்காளியாய் உருமாறியிருந்தாள் ஆழினி.
ஒளி வீசும்….
error: Content is protected !!