Skip to content
Post Views: 22
ரிதம் 5
மூன்று வருடம் சென்றிருந்தது.
“சரிகமபதநி 10, இந்தியாவின் பிரம்மாண்டமான குரல் தேடல் கிராண்ட் ஃபைனலுக்கு வந்துட்டோம்!” என்று தொகுப்பாளினி மேடையின் மீது கத்திக் கொண்டிருக்க, டிவியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நத்தாஷா.
பாடல்கள் எல்லாம் பாடப்பட்டது. எல்லோரும் நன்றாகப் பாடினார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்று அவள் எதிர்பார்த்தாளோ, அவர்கள் வெற்றி பெறவில்லை.
Advertisement
அன்று தான் தோற்று நின்றது ஞாபகம் வந்தது நத்தாஷாவிற்கு.
தன் தமக்கையின் தொடையைக் கிள்ளினாள் அவளுடைய சகோதரி. அவளும் வளர்ந்து விட்டாள். கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.
“அன்னைக்கு உன்னை எப்படி கவுத்தானுங்களோ, அதே மாதிரி இந்த பையனை இப்ப கவுத்திட்டாங்க. இதெல்லாம் தெரிஞ்சு ஏன் தான் போறீங்களோ?” என்று நொடித்துக் கொண்டாள்.
Advertisement
யாருமே தெரிந்து போவதில்லை. அதற்கு முன்பாக கேள்விப்படும்போது அதை நம்புவதில்லை. விரக்தியாகச் சிரித்தாள் நத்தாஷா.
Advertisement
கேமரா போட்டியாளர்களின் முகத்தை ஒரு சுற்று சுற்றி வலம் வந்தது, தோற்றவர்கள், ஜெயித்தவர்கள் என்று அவர்களின் உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டிவிட்டு பி.ஜி.எம். ஒலித்தது. இப்படித்தான் தன் அழுகையையும் அத்தனை பேரின் முன்பு காட்டி இருப்பார்கள் என்று தோன்றியது நத்தாஷாவிற்கு. ஆனால் அதை எல்லாம் அவள் கடந்து வந்து விட்டாள். அதைவிட வேதனைகளை, துயரங்களை எல்லாம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அன்று இதற்குப் போய் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எண்ணம் தோன்றியதே? ஆனால் இன்று? அதைவிடக் கசப்பான உண்மைகளை எல்லாம் கடந்து அவள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். அத்தனை பக்குவத்தை வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.
கொடுத்த காசுக்கு தொகுப்பாளினி எதை எதையோ பிதற்றிக் கொண்டிருந்தாள். அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை நத்தாஷாவால். சோபாவில் இருந்து எழுந்துகொள்ள முயற்சித்தாள்.
Advertisement
அப்பொழுது சரியாகப் பார்வையாளர்கள் பக்கம் கேமரா திருப்பப்பட்டது. அந்த இடத்திலிருந்து ஒருவன் எழுவது தெரிந்தது. சடாரென்று அமர்ந்தவள், தன் பார்வையைக் கூர்மையாக்கினாள். அதே வகை ஹுட்டி அணிந்து தலையை மறைத்தவன், தாடியில் முகத்தை மறைத்திருந்தான். கண்களுக்கு கூலர்ஸ் வேறு. அவன் தானா என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் அவனாகத்தான் இருக்கும் என்று ஆழ்மனம் சொன்னது. சீட்டின் நுனிக்கு வந்து அமர்ந்தாள் நத்தாஷா.
மீண்டும் அவன் பார்வைக்குக் கிடைக்கிறானா என்று அவள் ஆராய்ந்து கொண்டிருக்க, பேன்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டபடி நடந்து செல்வது தெரிந்தது.
அவன் கௌதம் தான் என்று இப்பொழுது அவள் மனம் உறுதியாகக் கூறியது. இன்னுமே இவன் இதைச் செய்து கொண்டிருக்கிறானா?
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போல ஒரு நிகழ்வைப் பார்த்து, அவள் திட்டங்கள் போட்டது மனக்கண் முன் நிழலாடியது.
அன்றும் இப்படித்தான், தாய், தந்தை, தங்கையென்று இதே நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள். போட்டியின் முடிவு அவளை அன்றும் வருந்தச் செய்தது. இதை இந்தத் தொலைக்காட்சி பிழைப்பாக வைத்திருப்பது புரிந்தது.
அன்றும் அவள் கௌதமைப் பார்த்தாள். காரணம் இல்லாமல் மனம் துள்ளிக் குதித்தது. இன்னும் ஒரு வருடப் படிப்பை முடித்துவிட்டு தானும் இதில் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அவசரமாக அவள் திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்க,
விதி அவளுக்கு வேறு திட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தது. அதுவும் அவளுடைய தாய் தகப்பனின் மூலமாக. இன்று நினைத்துப் பார்த்தவள். கண்களை மூடினாள். தான் அன்று திடமாக முடிவை எடுத்திருந்தால் தன் வாழ்க்கையை மாற்றிப் போட்டிருக்கலாமோ? பெற்றவர்களை, வளர்த்தவர்களை மனம் வருத்தச் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு அடிபணிந்து, இன்று எந்த நிலையில் நிற்கிறேன்? மேலிருந்து கீழாகத் தன்னையே பார்த்துக் கொண்டவள், வேகமாகத் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் பின்னோடு வந்த அவளுடைய தாய் கதவைத் தட்டி உணவிற்கு அழைத்தார். ஆனால் அவளுக்கு உணவு இறங்காது என்று தோன்றியது.
“அம்மா, பசிக்கல. அப்புறமா ராகினி வரும்போது பால் கொடுத்து அனுப்புங்க. போதும்,” என்றாள்.
மகளின் வேதனை புரிந்து அந்தத் தாய் அமைதியாகத் திரும்பிவிட்டார். அவள் இஷ்டத்திற்கு விட்டிருக்கலாமோ? அப்படி விட்டிருந்தால் அவள் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்குமோ? என்று அந்தத் தாயால் மனம் வருந்தத்தான் முடிந்தது.
அன்றைய நிலையில் அவரால் முடிவெடுக்க முடியவில்லை. கணவன் சொல்வது தான் சரி என்று தோன்றியது. கணவனுக்காக மகளை சமாதானப்படுத்தினார். ஆனால் இன்று யாருக்காக செய்தாலும் அவர் உயிரோடு இல்லை. குடும்ப பாரத்தை மகள் சுமந்து கொண்டிருக்கிறாள். தாங்கள் எடுத்து வைத்த வேதனையையும் சேர்த்துச் சுமந்து கொண்டிருக்கிறாள்.
……….
கல்லூரி தேர்வுக்காக கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். நத்தாஷாவின் அறையினுள்ளே தாயும் தகப்பனும் நுழைவது தெரிந்து, புருவம் இடுங்கப் பார்த்தாள்.
அவள் படிக்கும் போது எப்பொழுதும் அவர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இன்று என்ன?? என்ற ரீதியில் தான் பார்த்தாள்.
அவள் முன்பு சேரை இழுத்துப் போட்டு தந்தை அமர, அவள் அருகிலேயே தாய் அமர்ந்து கொண்டார். எதையோ பேச வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவள் புத்தகத்தை மூடி வைத்தாள்.
“என்னோட காலேஜ் பிரண்டு ராகவனை இன்னைக்கு நான் கடைத்தெருவுல பார்த்தேன்மா. அப்படியே பேசிட்டு இருக்கும்போது அவனுக்கு ஒரு பையன் இருக்கிறதை சொன்னான். நம்ம குடும்பத்தைப் பற்றியும் கேட்டான். நான் உங்களைப் பத்தி எல்லாம் சொன்னேன். எனக்கு பொண்ணு இருக்கிறதைக் கேட்டவுடனே அவன் சம்மந்தம் பேச ஆரம்பிச்சுட்டான்,” என்று மலர்ந்த புன்னகையாகப் பேசிக் கொண்டே தன் மனைவியைப் பார்த்தார்.
“நல்ல குடும்பம். ராகவனை எனக்கு நல்லா தெரியும். பையனோட போட்டோவைக் காட்டுனான். அவங்க குடும்பத்தைப் பத்தியும் எடுத்துச் சொன்னான். உன்னோட போட்டோவையும் கேட்டான். நான் என்னோட போன்ல இருந்து காட்டினேன். பார்த்த உடனே உன்னை அவனுக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு. பின்ன பிடிக்காம இருக்குமா? என் பொண்ணோட அழகும் தேஜஸும் அதுபோல. அவன் உன்னைப் பொண்ணு கேட்டான். நானும் சம்மதிச்சுட்டேன்,” பெருமையாகப் பேசிய தந்தையைப் புரியாமல் பார்த்தாள் நத்தாஷா.
“நீ ஒன்னும் கவலைப்படாத. நீ படிக்கிறேன்னு சொன்னேன். பரவாயில்ல, நாங்க படிக்க வச்சுக்கிறோம்னு சொல்லிட்டாங்க. எவ்வளவு நல்ல மனுஷங்க பாத்தியா? இந்த ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பார்க்க வரேன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சம்மதம் சொல்லிட்டேன்,” என்றவர் கூறும்போதே, அவள் தன் மடியிலிருந்த புத்தகத்தைத் தூக்கி விசிறி அடித்தாள்.
“அப்பா, என்ன விளையாடுறீங்களா? நான் படிச்சு முடிச்சிட்டு என்னுடைய கனவுகளைத் தேடிப் போவேன்னு சொன்னேன். உங்களுக்காகத்தான் எனக்குக் கிடைச்ச வாய்ப்பையும் விட்டுட்டு நான் படிச்சுட்டிருக்கேன். இப்ப திடீர்னு இப்படி வந்து சொன்னா என்ன அர்த்தம்? நான் படிச்சிட்டு சென்னைக்கு வேலைக்குப் போகப் போறேன். அங்க போய் வேலை பாத்துக்கிட்டே என்னோட பேஷனைத் தொடர்வேன்,” என்றாள் அழுத்தமாக.
ஓங்கி ஒரு அரை விட்டார் அவள் தாய்.
“அப்பாவை எதிர்த்து பேசுறியா? யார் கொடுத்தா தைரியத்தை? அவர் அவருடைய பிரண்டு கிட்ட வாக்கு கொடுத்துட்டு வந்திருக்காரு. எங்களை அசிங்கப்படுத்தனும்னு நினைக்கிறியா?” என்று கோபமாகப் பேசினார் நத்தாஷாவின் தாயார் புஷ்பவல்லி.
“அப்படின்னா, என்னோட கனவு, என்னோட லட்சியம்? உங்களுக்காக படிக்கணும்னு நான் இங்கு வந்தேன். எனக்காக நீங்க என்ன பண்ணியிருக்கீங்க?” என்று ஆதங்கத்தில் கேட்டுவிட்டாள்.
அவ்வளவுதான். நத்தாஷாவின் தாய் புஷ்பவல்லிக்குக் கோபம் கொப்பளித்தது.
“என்ன செஞ்சுட்டோமா?” என்று அவர் லிஸ்ட் அடுக்க ஆரம்பித்து விட்டார்.
ஒவ்வொரு பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்காக எத்தனையோ விஷயங்களை விட்டுக் கொடுத்திருப்பார்கள். குடும்பத்திற்காகத் துறந்திருப்பார்கள். அதெல்லாம் அவர்கள் மனதில் இருக்கும் ரகசியங்கள். இதுபோல ஆதங்கமான சமயங்களில் வெளிப்பட்டுவிடும். அப்படித்தான் அவரும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
“அம்மா, அக்கா தான் பாடப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காளே? அக்காவுக்கு என்ன வயசு ஆகுது? எதுக்கு இதுக்குள்ள கல்யாணம் பண்ணுறீங்க? முன்னாடியே கேட்டாள். நீங்க தான் அனுமதிக்கல. எல்லாருக்குமே குரல் நல்லா இருந்துடாதும்மா. எல்லாருக்கும் பாட வந்துராது. நானெல்லாம் கத்துனா கழுதை கூட நிக்காது. பாட்டு கிளாஸ் போகாமலே அக்காவுக்கு அந்த ஞானம் இருக்கு. அவங்களாகவும் அதை வளர்த்துக்கிட்டிருக்காங்க. அப்புறம் எதுக்கு தடுக்குறீங்க?” என்று தமக்கைக்குத் துணையாகப் பேசியவளுக்கும் அறை தான் விழுந்தது.
“அப்ப நாங்க உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா? பெத்தவங்களா படிக்க வெச்சோமா, கல்யாணம் பண்ணோமா, அக்கடான்னு இருந்தோமானு எங்களை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? உங்க பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்கணும்னு நினைக்கிறீங்களா?” என்று புஷ்பவல்லி புலம்ப ஆரம்பித்தார்.
வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தது.
கனகராஜ் எதுவுமே பேசவில்லை. மகள்கள் முதல் முறையாக எதிர்த்து பேசியதும், அவர் கூறிய விஷயத்திற்கு எதிர்மறையாக நிற்பதும் அவருக்குப் பெருத்த அவமானத்தைக் கொடுத்திருந்தது. தோய்ந்து போய் வெளியில் சென்று விட்டார்.
“பாருடி உங்க அப்பாவை. எப்படி போறாருன்னு பாருடி. நிமிர்ந்து நின்ன மனுஷனை இப்படி கூனி குறுக வச்சிட்டியே,” என்று அங்கலாய்த்தவர், ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டு அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடித்து கொண்டையிட்டவர்,
“ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பாக்க வருவாங்க. பிரச்சனை எதுவும் பண்ணாம அமைதியா நீ நிக்குற. அவன் கட்டுற தாலிக்கு நீ கழுத்தை நீட்டுற. அவ்வளவுதான். அப்படி ஒருவேளை நடக்கலனா, நானும் உன் அப்பனும் நாண்டுகிட்டு செத்துருவோம்,” என்று கூறிவிட்டு புஷ்பவல்லி சென்று விட்டார்.
காலம் காலமாக பிள்ளைகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வார்த்தைகள் தான் இவை. காதல் என்று வந்து நின்றிருந்தால் கூட இந்த வார்த்தைகளை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதையும் செய்யவில்லையே? தன்னுடைய கனவுகளை எதிர்நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டும் என்று தானே கூறுகிறாள்? அது கூடக் குத்தம் என்றால், பாவம் அவள் என்னதான் செய்வாள்? பெற்றவர்களே அவளுடைய கனவுக்கு எதிராக நின்றால், அவளால் என்ன செய்து விட முடியும்? சோர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்.
வாழ்க்கையில் தோற்றுப் போகும்போதெல்லாம் பெண்களுக்குத் துணையாக நிற்பது கண்ணீர் மட்டும் தானே? அவளுக்கும் கண்ணீர் மட்டும் தான் அன்று துணையானது.
அதன் பிறகும் ஏதேதோ கூறி தாயிடம் அவள் வாதாடினாலும், அவள் வாதம் மட்டும் அந்த வீட்டில் செல்லுபடியாகவில்லை. கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள், பெற்றவர்களிடம் பொறுமையாகவே பேசினாள். ஆனாலும் அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. அவர்கள் எடுத்த முடிவு தான் சரி என்று நினைத்தார்கள்.
“இதோ பாரு நத்தாஷா, உங்க அப்பாவுக்கு வயசாயிடுச்சு. எனக்கு உடம்பு முடியல. உடம்புல ஆயிரத்தெட்டு வியாதி வச்சிருக்கேன். எங்களால உன்கூட சென்னைக்கு வந்து பாடுபட முடியாது. அதே சமயத்துல அந்த ஊரை நம்பி உன்னை தனியா அனுப்பி வைக்கவும் முடியாது. எங்க காலத்துக்கப்புறம், உங்களை யாராவது பாத்துக்குறதுக்கு துணையா வேணும். சொந்த பந்தம் என்று இருக்கிறவங்க எல்லாம் கஷ்டம்னா கூட நிக்க மாட்டாங்க. இப்ப வந்திருக்கிறது நல்ல வரன். இதை இப்ப விட்டா திரும்பி இதுபோல ஒரு வரன் கிடைக்காது. நல்ல குடும்பமா இருக்கு. மாப்பிள்ளையும் தங்கமானவரா தெரியுறாரு. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தையை பெத்துகிட்டு, அதுக்கப்புறம் அவர் கூடவே நீ சென்னைக்கு போய் உன் ஆசையை நிறைவேத்திக்கோ,” இம்முறை அவளுடைய தாய் பொறுமையாகப் பேசினார்.
விரக்தியாகச் சிரிக்க மட்டும் தான் அவளால் முடிந்தது. அவள் பாடுவேன் என்பதில் நிற்க, இவர்கள் திருமணம் செய்து கொள் என்பதில் நிற்க. கடைசியில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை அவளுடையதானது. பெற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்தாள். இன்று வாழ்க்கையையேஅ விட்டுக் கொடுத்துவிட்டு இருக்கிறாள்.
error: Content is protected !!