கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருமாதம் கடந்திருந்தது. இந்த ஒரு மாதத்தில் விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் இடையில் நட்பும் புரிதலும் அழகாக மலர தொடங்கிவிட்டது.
அன்று ஆழினியிடம் நட்பை பாராட்டியவன் அவளுக்கு மிகவும் பிடித்த ராயல் என்ஃபில்ட் வாகனத்தை அளித்து தன்னவளுடனான முதல் பயணத்தை இரசித்து இறக்கை கட்டி விண்ணில் பறந்து கொண்டிருக்க, அவனை போலவே மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள் ஆழினி.
Advertisement
தன் தந்தையின் இருச்சக்கர வாகனமான ஸ்பெலன்டர் வாகனத்தை அவ்வப்பொழுது ஆழினி ஓட்டியிருக்கிறாள் தான். ஆனால் வாழ்வில் நடந்த பல இன்னல்களுக்கு பிறகு அதை பற்றி முற்றிலுமாய் மறந்திருந்தவளின் அடிமனதின் ஆசைகளை அறிந்து தூசி தட்டி எழுப்பியிருந்தான் அவளவன். அவற்றை அறிந்த பருவதம்மா மற்றும் இன்பனின் மனநிலையானது ஆழினியின் இந்த சிறிய மாற்றத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருந்தது.
அன்று மாலையே ஆழினி, ஆதவ் கிருஷ்ணன், இன்பன், பருவதம்மா மற்றும் செல்வி அக்கா என அனைவரையும் அழைத்து கொண்டு நீலவேணியின் இல்லத்திற்கு சென்றிருந்தான் விஜய சிவமாறன். இன்பனின் மாமனாய் மட்டுமல்லாது அவனது தந்தையின் ஸ்தானத்தில் நின்று நிச்சயம் முதல் திருமணம் வரை அனைத்து ஏற்பாடுகளை பற்றி ஆறுமுகத்திடம் பேசும் விஜய சிவமாறனை இன்பன் மட்டுமல்லாது ஆழினியும் பெருமிதமாக பார்த்து கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
இன்பன் மற்றும் நீலவேணியின் திருமணத்தை நாட்கள் கடத்தாமல் கூடிய விரைவில் முடித்து விடலாம் என்று தீர்மானித்த பெரியவர்கள் ஒரு மாதம் கழித்து நிச்சயமும் அதன் பின் இரண்டு மாதம் கழித்து திருமணமும் வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க, அவர்கள் கூறிய கூற்றை கேட்டு மறுத்தவன்
“நிச்சயதார்த்தம் வேணும்னா அடுத்த மாசம் வச்சிக்கலாம் ஆனா கல்யாணம் ஆறு மாசம் கழிச்சு வச்சிக்கலாம் சித்தப்பா….” என்று விஜய சிவமாறன் கூற, அவன் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அவனை குழப்பமாக பார்த்து கொண்டிருந்தனர்.
Advertisement
“ஏன் அப்படி சொல்றீங்க? சீக்கிரமே கல்யாணத்தை வச்சிக்கலாமே, ஏன் லேட் பண்ணனும்?” என்று வினவிய ஆழினியை கண்டு மெலிதாக புன்னகைத்தவன்
“இன்பன் நீலவேணியோட எங்கேஜ்மென்ட் நம்ம ஹோட்டலில் இருக்க பார்ட்டி ஹால்ல வச்சிக்கலாம்…. நான் நம்ம ஹோட்டலோட மூணு பார்ட்டி ஹால் சொல்றேன் உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை பேசிடலாம் சித்தப்பா….” என்று அடுத்தடுத்த வேலைகளை விஜய சிவமாறன் கூற, அதை கேட்டு மற்ற அனைவரும் அதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.
இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்தத்திற்கான சுபமுகூர்த்த தேதியை அலசி ஆராய்ந்த பெரியவர்களுக்கு அவர்கள் வீட்டின் இளவரசனான ஆதவ் கிருஷ்ணனின் பிறந்த நாள் தேதி கிடைக்க, இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தவர்களிடம் காலையில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு மாலையில் அதே மண்டபத்தில் ஆதவ் கிருஷ்ணனின் பிறந்த நாளினை கொண்டாடலாம் என்று முடிவு செய்திருந்தான் விஜய சிவமாறன். குறிப்பாக, தன் மகன் மற்றும் மனைவியுடன் முதன் முதலாக கொண்டாடப்போகும் விழாவினை மிகவும் சிறப்பாகவும் ஆரவாரமாகவும் கொண்டாடவேண்டும் என்று நினைத்த விஜய சிவமாறனுக்கு மட்டுமல்லாது ஆழினிக்கும் அந்நாளானது பல அதிர்ச்சிகளை தரக்கூடிய நாளாக மாறவிருக்கிறது என்று அவர்கள் அறிய வாய்ப்பில்லை.
நாளை இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்தமும் ஆதவ் கிருஷ்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைப்பெறவிருக்க, அதற்கான வேலையில் மூழ்கியிருந்த விஜய சிவமாறனின் வருகைக்காக இல்லத்தின் கூடத்தில் காத்து கொண்டிருந்தாள் ஆழினி. அவள் அருகில் இன்பனும் ஆதவ் கிருஷ்ணனும் விளையாடி கொண்டிருக்க, நிமிடத்திற்கு ஒருமுறை வாயிலை பார்த்து கொண்டிருந்த ஆழினியின் நிலையை கண்டு மனதிற்குள் சிரித்தவன்
“டேய் பப்பாளி, யாரு யாருக்காக காத்திருக்காங்க தெரியுமா?” என்று இன்பன் நக்கலாக வினவ, அவனை ஆழினி கொலை வெறியுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
கடந்த இரண்டு வாரங்களாக தன் பன்னு மாமா பிழை மாறாமல் அடிக்கடி கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவன் அதேபோல் இன்றும் அவ்விருவரின் நிலையை அறியாது
“மாறன் அப்பாவுக்காக செல்லம்மா காத்துட்டு இருக்காங்க பன்னு….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியவாறு பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருக்க, அவன் பதிலை கேட்டு சிரித்த இன்பனை வெளுக்க தொடங்கிவிட்டாள் ஆழினி.
“போடா பன்னு, வர வர உனக்கு நக்கல் ஓவரா போயிடுச்சு…. அவர் என்னை ஏதோ ஒரு தடவை அப்படி கூப்பிட்டாரு அதை நீ பார்த்துட்ட அதுக்கு என்னையும் அவரையும் வச்சு இப்படி ஓட்டுவியா? அடேய் பன்னு, இதான் உனக்கு கட்டக்கடைசியா….” என்று ஆழினி முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“அம்மா, அவனை நான் மட்டும் தான் பன்னுன்னு கூப்பிடுவேன் நீ கூப்பிடாத….” என்று ஆதவ் கிருஷ்ணன் சிறு வயதிலிருந்து கூறும் அதே வாக்கியத்தை கூறி தன் அன்னையை முறைக்க
“இதை மட்டும் நீ மறந்துடாத…. ரெண்டு பேரும் ஏதோ பண்ணுங்க….” என்று கூறியவள் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு இத்தனை நேரம் தன் மனதில் வைத்திருந்த கேள்வியை இன்பனிடம் கேட்டுவிட்டாள்.
“ஏன் இன்பா நீ அவரோட இல்லாம சீக்கிரம் வந்துட்ட? நீயும் அவரும் ஒன்னாவே வீட்டுக்கு வந்திருக்கலாமே? நேரம் பதினொன்னாகப்போகுது இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா உடம்பு என்னாகும்?” என்று வினவிய ஆழினியின் மனமாற்றத்தை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தவன்
“நாளைக்கு காலையில மாப்பிள்ளையோட முகம் பொலிவா இருக்கனும், முழிச்சிருந்தா டல்லாயிருக்கும்னு சொல்லி என்னை என் மாமா வீட்டுக்கு போக சொல்லிட்டாரு ஆழினி…. ஏன் உன் மாறன் இல்லாம செல்லம்மாவால இருக்க முடியலையோ?” என்று இன்பன் நக்கலாக வினவ, அவனிடம் ஆழினி ஏதோ கூற வருவதற்குள் நீலவேணியிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறி இன்பனது அலைபேசி அலறி கொண்டிருந்தது.
“எழுந்து போடா, வெட்டி பேச்சை விட்டுட்டு போய் உன் வேணி கிட்ட லவ்ஸ் பண்ற வழியை பாரு போ….” என்று ஆழினி கூறியதை கேட்டு கூச்சத்துடன் சிரித்தவன் தன்னறைக்குள் சென்றுவிட, இங்கு ஆழினியின் நினைவலைகள் இரண்டு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தது.
இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்தத்திற்கான துணிகளை எடுக்க பருவதம்மாவின் உடல்நிலை கருதி அவரையும் அவருக்கு துணையாய் வீட்டிலிருந்த செல்வி அக்காவையும் தவிர்த்து மற்ற அனைவரையும் அவ்வூரின் பிரம்மாண்டமான துணிக்கடைக்கு அழைத்து சென்றான் விஜய சிவமாறன். முதலில் மணமக்களுக்கு எடுத்து விடலாம் என்று முடிவெடுத்தவர்கள் இன்பனுக்கும் நீலவேணிக்கும் அவர்களுக்கு பிடித்தது போல் உடையை தேர்ந்தெடுத்துவிட்டனர்.
மற்ற அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த நிறத்தில் உடைகள் எடுத்து கொண்டிருக்க, இங்கு ஆழினியும் தனக்கு பிடித்த புடவையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இறங்கியிருந்தாள். அவளருகில் நின்றிருந்த ராணி அத்தைக்கு அவரது கணவர் ஆறுமுகம் மாமா புடவை தேர்ந்தெடுக்கிறேன் என்ற பெயரில் அந்த தளத்தையே இரண்டாக்கி கொண்டிருக்க, அவளது தம்பி இன்பனும் நீலவேணியிடம் காதல் கதைகளை பேசியவாறு அவளுக்கு புடவை எடுத்து கொண்டிருந்தான்.
அவ்விரு ஜோடிகளை கண்டதும் ஆழினியின் மனதில் சிறிதாய் ஓர் ஆசை துளிர்விட ஆரம்பித்தது. அவளது கண்கள் அன்னிச்சையாய் தன்னவனை நோக்கி செல்ல, அங்கு அவனும் தன்னவளை தான் பார்த்து கொண்டிருந்தான். இருவரது கண்களும் ஒருநிமிடம் கதைகள் பேசி கொள்ள, அவனது விழியின் தீண்டலிலிருந்து சிரமப்பட்டு மீள்வதற்குள் ஆழினியின் நிலைதான் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒருவழியாய் அந்நிலையிலிருந்து மீண்டவள் மீண்டும் தன் புடவை தேடும் படலத்தை ஆரம்பிக்க, அவள் அருகில் ஆதவ் கிருஷ்ணனுடன் வந்து நின்று கொண்டான் அவளின் விஜய சிவமாறன்.
அவளவனின் நெருக்கத்தை ஆழினியின் மனம் உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டாதவளின் மனமோ நிமிடத்திற்கு இருநூறு முறை துடித்து கொண்டிருந்தது. தன் மனதில் எழுந்த படபடப்பை தனக்குள் மறைத்தவளுக்கு அவளது கணவனும் மகனும் புடவை தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர்.
விஜய சிவமாறன் தேர்ந்தெடுத்த புடவையை ஆழினி நிராகரிக்க, ஆழினி தேர்ந்தெடுக்கும் புடவையை ஆதவ் கிருஷ்ணன் நிகாரிக்க, ஆதவ் கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கும் புடவையை விஜய சிவமாறன் நிராகரிக்க என்று சுழற்சி முறையில் நிமிடங்கள் அனைத்தும் பல மணி நேரமாய் கரைந்துவிட்டது. பல போராட்டங்களுக்கு பிறகு இளஞ்சிவப்பு நிறத்தில் நீல நிற பாடர் வைத்த பட்டு புடவையை மூவரும் தேர்ந்தெடுக்க, அதை தன் தோள் மீது வைத்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து கொண்டிருந்த ஆழினியை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
“அம்மா, உங்களுக்கு இந்த ஸாரி சூப்பராயிருக்கு….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு சிரித்தவள் பிம்பத்தில் தெரியும் தன்னவனை கண்டு தன் புருவங்களை உயர்த்தி கண்களால் கேள்வி எழுப்ப, அவளது நயனங்களில் தன்னை தொலைத்தவன்
“ரொம்ப அழகாயிருக்கு செல்லம்மா….” என்று விஜய சிவமாறன் தன்னை மறந்து கூற, அவன் கூறியதை கேட்டு ஆழினி மட்டுமல்லாது ஆதவ் கிருஷ்ணனும் அவ்விடத்திலிருந்த மற்ற இரு ஜோடிகளும் குழப்பமாக பார்த்து கொண்டிருந்தனர்.
கணவன் மனைவியின் உரையாடலுக்குள் மூணாவது மனிதர்கள் தலையிடக்கூடாது என்று நினைத்த மற்ற ஜோடிகளும் கண்டும் காணாததை போல் தங்களுக்குள் சிரித்து கொள்ள, தன் தந்தையின் அருகில் சென்று அவனது காலினை சுரண்டியவன்
“அப்பா, அம்மா நேம் ஆழினி…. நீங்க ஏன் செல்லம்மான்னு கூப்பிடுறீங்க?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ, அவன் அவ்வாறு கேட்ட பிறகுதான் விஜய சிவமாறனுக்கு தான் கூறிய வார்த்தை புரிந்தது.
இருவரின் உரையாடலை கேட்டவள் மெதுவாக அவனை திரும்பிப் பார்த்து
“என்ன சொன்னீங்க?” என்று ஆழினி வேண்டுமென்றே பொய் கோபத்துடன் வினவ, அவள் கூறியதை கேட்டு தடுமாறியவன்
“அது…. நான்…. தெரியாம….” என்று விஜய சிவமாறன் ஏதோ கூற வருவதற்குள்
“செல்லம்மான்னு கூப்பிட்டீங்களா?” என்று ஆழினி நமட்டு சிரிப்புடன் வினவியவளை கண்டவன் குறுநகையுடன் தன் பார்வையை அவளிடத்திலிருந்து விலக்கி கொண்டான்.
விஜய சிவமாறன் அருகில் சென்றவள் அவனை தீயாய் முறைத்தவாறு
“சொல்லுங்க மாறன்…. ஏன் அப்படி கூப்பிட்டீங்க?” என்று ஆழினி வினவ, அவளது மாறன் என்ற அழைப்பை அவளது தீப்பார்வையால் கவனியாதவன்
“அது…. பழக்கம் மாதிரி வந்துருச்சு….” என்று விஜய சிவமாறன் கூற, அவன் கூறியதை கேட்ட ஆழினி எதுவும் கூறாமல் அவனை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தாள்.
அவளது கண்களுக்குள் தன் கண்களை கலந்தவன்
“நான் உன்னை அப்படி கூப்பிட கூடாதா செல்லம்மா?” என்று அழகான மந்தகாச புன்னகையுடன் வினவிய விஜய சிவமாறனின் பார்வை வீச்சினை தாங்கும் சக்தியற்றவள் மறுவார்த்தை கூறாது அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டாள் ஆழினி.
இன்று இந்நிமிடம் அவனது கண்களின் மொழியும் அழகிய புன்னகையும் நினைத்தவளின் மனதில் அன்று அந்நொடி தோன்றிய அதே படபடப்பு உள்ளுக்குள் தோன்றுவதை ஆழினியால் உணர முடிந்தது. தன்னவனின் நினைவில் இலயித்திருந்தவளின் சிந்தனையை கலைப்பது போல் அவள் மடியில் வந்து அமர்ந்தான் ஆதவ் கிருஷ்ணன்.
தன் மகனின் வருகையால் தன்னிலை அடைந்தவளிடம்
“அம்மா, தூக்கம் வருது….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியவாறு ஆழினியின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அவனை தன்னுள் அணைத்தவள் தன் மகனை உறங்க வைக்க அவளவனை நினைத்தவாறு பாடல் பாட தொடங்கியிருந்தாள்.
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட..
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட..
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ..
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ.. பாவம் ராதா….
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட….
என்ற பாடலை ஆழினி பாடி முடித்ததும் ஆதவ் கிருஷ்ணன் உறங்கிவிட, தன் மகனின் சுருள் முடி தலையை ஆதூர்யமாய் கோதியவள் அவனை தன் தோள்களில் போட்டு கொண்டு எழப்போகும் நேரத்தில் இல்லத்தின் வாயிலில் ஆழினியின் பாடலை இரசித்து இலயித்திருந்த விஜய சிவமாறனை அப்பொழுது தான் கண்டிருந்தாள்.
விஜய சிவமாறனை கண்டதும் அவளது கண்கள் இரண்டும் பிரகாசமாக மின்ன ஆரம்பிக்க, அவளது பார்வையின் மாற்றத்தை கண்டுக்கொண்டவன் எதுவும் கூறாது அவள் தோள்களில் உறங்குபவனை தன் தோள்களுக்கு மாற்றி கொண்டான்.
“ஏன் இவ்வளவு லேட்?” என்று ஆழினி சிறு கோபத்துடன் வினவ, அவளது கோபத்திலிருக்கும் பாசத்தை உணர்ந்தவன்
“மண்டப வேலையை முடிச்சிட்டு வர லேட்டாகிடுச்சு…. சாப்பிடலாமா செல்லம்மா? பசிக்குது….” என்று விஜய சிவமாறன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூற, அவனது செல்லம்மா என்ற அழைப்பிலேயே கரைந்தவள்
“எல்லாம் ரெடியா இருக்கு மாறன்…. நீங்க போய் ஆதுவ நம்ம பெட்ல படுக்க வச்சிட்டு வாங்க சாப்பிடலாம்….” என்று ஆழினி கூறிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட, அவளது மாறன் என்ற அழைப்பில் உள்ளம் உருகியவன் சரியென்று தலையசைத்து அவர்களின் அறையை நோக்கி சென்றிருந்தான்.
இவ்விருவர்களின் இந்நிலையானது நாளை தலைகீழாக மாறப்போவதை அறியாத விஜய சிவமாறனும் ஆழினியும் தங்களுக்குள் துளிர்விட்டிருந்த நேசத்தை நினைத்து அவள(ன)வனி(ளி)ன் நினைவில் கரையும் நேரங்களை இரசித்து கொண்டிருந்தனர்.
பறவைகளின் கானங்களை இரசித்த சூரியதேவன் அந்நாளின் காலை பொழுதை இரம்மியமாக ஆட்சி புரிய தொடங்கியிருந்தார். அதேபோல் இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்த நிகழ்வானது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் ஆரவாரமாய் ஆரம்பமாகியிருந்தது.
விஜய சிவமாறன் தேர்ந்தெடுத்த இளஞ்சிவப்பு நிறத்தில் நீல நிற பாடர் வைத்த பட்டு புடவையில் தேவதையாய் மின்னும் தன்னவளின் அருகில் நீல நிறத்தில் சட்டையும் வெள்ளை நிறத்தில் கால் சாராயும் அணிந்து அவனை போலவே அதே நிறத்தில் உடை அணிந்திருக்கும் ஆதவ் கிருஷ்ணனை கைகளில் ஏந்தியவாறு யாரும் அறியாமல் அவளவனை இரசித்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
கருநீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கோட் சூட் அணிந்து மேடையில் அமர்ந்திருந்தவனின் அருகில் மெரூன் நிறத்தில் வெள்ளி சரிகைகளால் வேலைப்பாடுகள் செய்த பட்டு புடவையை உடுத்தி நாணத்துடன் அன்னநடையிட்டு தன்னருகில் அமரும் நீலவேணியை விழியாகலாமல் பார்த்து கொண்டிருந்தான் இன்பன்.
நிச்சய பத்திரிக்கை வாசித்து முடித்ததும் இன்பனும் நீலவேணியும் அவர்கள் பெயரின் முதல் எழுத்தினை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் மோதிரத்தை மாற்றி கொள்ள, பெரியவர்களின் ஆசியுடனும் நண்பர்களின் ஆர்ப்பாட்டத்துடனும் இன்பன் மற்றும் நீலவேணியின் நிச்சயதார்த்த விழாவும் இனிதே நிறைவடைந்தது.
தன் தம்பியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தனது மகன் மற்றும் கணவனுடன் சிரித்த முகத்துடன் நின்றிருந்த ஆழினியை நோக்கியவாறு மேடையேறினான் எழிலரசன். இன்பன் மற்றும் நீலவேணியிடம் வாழ்த்துகள் கூறியவனை கண்டு மெலிதாக சிரித்தவள்
“நல்லா இருக்கீங்களா எழிலரசன்?” என்று வினவிய ஆழினியிடம் ஆம் என்பதை போல் தலையசைத்தவன் அவளருகில் நின்றிருந்த விஜய சிவமாறனையும் அவன் கைகளில் தவழ்ந்திருக்கும் ஆதவ் கிருஷ்ணனையும் இன்முகத்துடன் இரசித்து கொண்டிருந்தான்.
விஜய சிவமாறனிடம் கைக்குலுக்கி கொண்டவன்
“தாங்க்ஸ் சார்….” என்று கூறி புன்னகைத்த எழிலரசனையும் அவனை கண்டு சிரித்த விஜய சிவமாறனையும் புரியாமல் பார்த்தவளிடம்
“ஆழினி, இவங்க பெயர் நிர்மலா….” என்று தன்னருகில் நின்றிருந்த பெண்ணை அறிமுகப்படுத்தியவன்
“கூடிய சீக்கிரமே எங்க கல்யாணத்துக்கு உங்களை கூப்பிடுவோம், நீங்க எல்லாரும் கண்டிப்பா வரனும்….” என்று எழிலரசன் கூறியதை கேட்டு ஆழினியின் மனம் மகிழ்ச்சியில் திலைத்திருந்தது.
தன்னெதிரில் நின்றிருந்த எழிலரசனுக்கும் அவனது காதல் மனைவியான நிர்மலாவுக்கும் வாழ்த்துகளை கூறிய விஜய சிவமாறன் மற்றும் ஆழினியிடமிருந்து விடைப்பெற்றவன் ஆதவ் கிருஷ்ணன் கன்னத்தில் முத்தம் வைத்து அவனுக்காக வாங்கி வந்திருந்த டெய்ரி மில்க் சாக்லேட்டை அளித்துவிட்டு அவ்விடத்திலிருந்து மனநிறைவுடன் சென்றுவிட்டான் எழிலரசன்.
விஜய சிவமாறனின் கைகளிலிருந்த ஆதவ் கிருஷ்ணனை பருவதம்மாவிடம் அளித்துவிட்டு தன்னவனின் கைகளை இறுக்கமாக பற்றியவாறு மண்டபத்திலிருக்கும் மணமகன் அறைக்குள் அழைத்து வந்திருந்தாள் ஆழினி.
தன்னவளின் ஸ்பரிசத்தில் சிக்குண்டு பொம்மை போல் அவளுடன் வந்தவனை மேலும் இம்சிக்கும் விதமாய் விஜய சிவமாறனை காற்றும் நுழைய முடியாத அளவிற்கு இறுக்கமாக அணைத்து கொண்டாள் அவனவள்.
ஆழினியின் செயலால் அதிர்ந்தவனின் உலகம் ஒருநொடி நின்றுவிட்டு பின்பு சுழலுவதை போல் உணர்ந்தான் விஜய சிவமாறன். அவனது இரு கரங்களும் அன்னிச்சையாய் அவளது இடையை இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவளது காதுமடலில் இரகசியம் கூறுவது போல்
“செல்லம்மா….” என்று மென்மையாக அழைத்தவனின் குரலில் தொலைந்தவள் தன்னவனை மேலும் அணைத்தவாறு
“உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியுமா மாறன்?” என்று வினவிய ஆழினியின் கேள்வியை கேட்டதும் அதிர்ச்சியில் விஜய சிவமாறனின் இதயமானது ஒருநொடி நின்று துடித்தது.