Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-28

     மாலை நேரம் என்பதால் விஜயாஸ் கஃபே பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தனக்கான மேசையில் அமர்ந்திருந்த விஜய திருநாவுக்கரசர் வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருக்க, அவரெதிரில் வந்து நின்றிருந்தார் அக்கடையின் மேலாளர் சுந்தரம்.

     “சார், என்னை கூப்பிட்டீங்களா?” என்று வினவியவரிடம்‌ ஓர் உறையை அளித்தவர்



Advertisement

     “இதுல பொண்ணோட ஃபோட்டோ இருக்கு சுந்தரம், சிவா தம்பிக்கு மெயில் பண்ணிடு…. ஃபோட்டோ மட்டும் மெயில் பண்ணிடுப்பா, டீடெயில்ஸ் நான் சொல்லிக்குறேன்….” என்று கூறியவரின் சொல்படியே அனைத்தையும் மேலாளர் செய்து முடித்திருக்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஜய சிவமாறனுக்கு அழைப்பு விடுத்திருந்தார் விஜய திருநாவுக்கரசர்.

     சற்று நேரத்திற்கு முன்பு ஆழினிக்காக சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமி பார்த்திருந்த கல்யாண தரகர் ஒருவர், தான் அருந்திய தேநீருக்கான தொகையை விஜய திருநாவுக்கரசரிடம் செலுத்தும்போது தவறுதலாக ஆழினியின் புகைப்படமிருந்த உறையை அவ்விடத்திலேயே வைத்து சென்றுவிட, தன் மகனுக்காக பார்த்து வைத்த பெண்ணின் புகைப்பட உறையை வீட்டிலேயே மறந்து வைத்தவர் ஒரே‌போல் இருக்கும் தன் மேசையிலிருந்த ஆழினியின் புகைப்பட உறையை தன் மேலாளரிடம் அளித்துவிட்டார்.

Advertisement

Advertisement

     விஜய சிவமாறனின் திருமணத்திற்காக வரன் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனுக்கு மின்னஞ்சல் அனுப்பும் பணியை ஏற்ற மேலாளரும் வழமை போல் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட்டார்.

     இவை யாவையும் அறியாத விஜய சிவமாறன் ஆரஞ்சு நிறத்தில் பச்சை நிற பாடர் வைத்த புடவையில் அழகோவியமாய் சிரித்திருந்தவளின் வதனத்தில் சிக்குண்டு முதன் முதலாய் ஆழினியை பார்த்த நொடிகளை எண்ணி தன் மனதில் பரவசங்கள் படர அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். நீண்ட நேரமாக அவனின் பதிலுக்காக எதிர்முனையில் காத்திருந்தவர்

Advertisement

     “சிவா, லைன்ல இருக்கியா? ஹலோ…. டேய் சிவா, கேக்குதா….” என்று விஜய திருநாவுக்கரசரின் குரலில் சுயமடைந்தவன்

     “ஹான்…. சொல்லுங்க அப்பா….” என்று விஜய சிவமாறன் கூற

     “என்னடா பொண்ணு ஃபோட்டோ பார்த்தியா? பிடிச்சிருக்கா? நீ சரின்னு சொன்னா….” என்று விஜய திருநாவுக்கரசர் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்

     “ரொம்ப பிடிச்சிருக்குப்பா….” என்று ஆழினியின் புகைப்படத்தை வருடியவாறு விஜய சிவமாறன் கூற, அவன் கூறியதை கேட்டவனது தந்தையின் மனம் மகிழ்ச்சி அடைந்திருந்தது.

     “என்ன தம்பி, எப்போ பொண்ணு ஃபோட்டோ அனுப்பினாலும் ‘பொண்ணு என்ன படிச்சிருக்கு, எந்த ஊரு, உங்களுக்கு பிடிச்சிருக்கா, அம்மாவுக்கு பிடிச்சிருக்கா, ஆட்டுக்குட்டிக்கு பிடிச்சிருக்கான்னு’ பல கேள்வி கேட்டு என்னை விசாரணை பண்ணுவ? இன்னிக்கு என்ன? என் கிட்ட எதுவுமே கேட்கல? பொண்ணை பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுச்சா?” என்று விஜய திருநாவுக்கரசர் நக்கலாக வினவ, அவர் கூறியதை கேட்டு வெட்க புன்னகை சிந்தியவனின் மனநிலையை உணர்ந்து தனக்குள் சிரித்து கொண்டவர் மற்ற விவரங்களை கூற தொடங்கியிருந்தார்.

     “பொண்ணு பெயர் ஷைலஜா, ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கு…. அப்பா பெயர் பத்மநாபன், அம்மா பெயர் ரங்கநாயகி ரெண்டு பேரும் சேர்ந்து டெக்ஸ்டைல் பிஸ்னெஸ் பண்றாங்க, தம்பி பெயர் மாதேஷ் சட்டிஷ்கர்ல இன்ஜினியரிங் படிச்சிட்டு இருக்கான்…. என் ஸ்கூல் ஃபிரண்ட் பத்மநாபனோட பொண்ணு தான் ஷைலஜா…. ரொம்ப வருஷம் கழிச்சு முந்தாநாள் தான் அவனை கோயில்ல பார்த்தேன்…. பேசிட்டு இருக்கும்போது தான் அவனோட பொண்ணுக்கு வரன் பார்த்துட்டு இருக்குறதா சொன்னான்…. நானும் என் பையனுக்கு வரன் பார்த்துட்டு இருக்கேன்னு சொன்னேன் ‘ஏன் நாங்க சம்மதிங்களாக கூடாதுன்னு’ யோசனை அதான் பொண்ணு ஃபோட்டோ கைக்கு வந்தவுடனே உனக்கு அனுப்பிட்டேன்….” என்று விஜய திருநாவுக்கரசர் கூறியதை கேட்டு எல்லையில்லா சந்தோஷத்தில் சிரித்தவன்

     “அவங்க என் ஃபோட்டோ பார்த்தாங்களா? என்ன சொன்னாங்க?”

     “அவங்களுக்கும் முக்கியமா அவங்க பொண்ணுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சிவா ஆனா….”

     “என்னப்பா? என்னாச்சு?”

     “இல்லப்பா, பொண்ணுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணனும்னு ஜாதகத்துல சொல்லிட்டாங்களாம்…. உனக்கு பிடிச்சிருந்தா பதினைஞ்சு நாளுக்குள்ள கல்யாணத்தை பண்ணனும்னு பத்மநாபன் என் கிட்ட சொன்னான்…. அதான் யோசனையா இருக்கு….”

     “அம்மாவுக்கும் உங்களுக்கும் பிடிச்சிருக்கா? நீங்க என்ன சொல்றீங்க?”

     “உனக்கு தான் அந்த பொண்ணுன்னு எழுதியிருந்தா பதினைஞ்சு நாளாயிருந்தா என்ன? பதினைஞ்சு மாசமாயிருந்தா என்ன? நல்லபடியா கல்யாணம் நடந்து நீங்க சந்தோஷமா இருந்தாலே போதும் சிவா…. எனக்கும் உன் அம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு…. நீதான் பத்து நாள்ல இந்தியாவுக்கு வந்துடுவியே, நீ இங்க வர நேரம் உன் கல்யாணம் நேரமா மாத்திடுவோம் என்ன சொல்ற?” என்று விஜய திருநாவுக்கரசர் மகிழ்ச்சியுடன் வினவ, அவரிடம் தன் சம்மதத்தை தெரிவித்தவன் தன்னவளுடன் கற்பனையில் மிதக்க தொடங்கிவிட்டான்.

     விஜய சிவமாறனின் சம்மதத்தை பெற்றவுடன் தன் மனைவி பருவதம் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஷைலஜாவை பெண் பார்த்த கையோடு நிச்சயம் செய்து திருமண தேதியையும் குறித்து வந்துவிட்டார் விஜய திருநாவுக்கரசர். திருமண வேலைகள் அனைத்தும் படுவேகமாகவும் அதே சமயம் விமர்சையாகவும் அரங்கேற தொடங்கியிருந்தது. இத்றகு இடையில் தன் மனம் கவர்ந்தவளிடம் பேசவேண்டும் என்று நினைத்த விஜய சிவமாறனுக்கு, ஆழினி என்று நினைத்திருக்கும் ஷைலாஜிவிடம் பேசுவதற்கு நேரம் தான் கிடைக்கவில்லை.

     லண்டனில் புகழ்பெற்ற ‘கிச்சன் ஸ்டார்ஸ்’ என்ற போட்டியில், அவன் வேலை செய்யும் உணவகத்தின் சார்பாக அவனது மேலாளரினது அன்பு கட்டளையின் பேரில் கலந்து கொண்ட விஜய சிவமாறனுக்கு தன் வருங்கால மனைவியுடன் பேசும் நேரம் சுத்தமாக கிடைக்கவில்லை. போட்டிகள் அனைத்தும் ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்ததால் அவனின் தாய் தந்தையருடனே உரையாடும் நேரங்கள் நொடிகளாக மாறியிருக்க, இதில் எங்கிருந்து அவளுடன் பேசுவது? என்று வேதனையில் கரைந்தவன் ‘இன்னும் நான்கு நாட்களில் ஊருக்கு சென்றுவிடுவோம, திருமணத்திற்கு பிறகு தன்னவளுடன் மணிக்கணக்காக பேசலாம்’ என்று நினைத்தது தான் விஜய சிவமாறன் செய்த பெரும் தவறு.

     தன் மேலாளர் தன்மீது வைத்த நம்பிக்கையை பொய்யாக்காமல் போட்டியில் வெற்றி பெற்ற அடுத்த நாளே லண்டன் வாசத்திற்கு விடைக்கொடுத்துவிட்டு தன் மனம் கவர்ந்தவளை கைப்பற்றப் போகிறோம் என்ற உற்சாகத்துடனும் பல்வேறு கனவுகளோடும் தன் தாய் நாட்டிற்கு வருகை புரிந்திருந்தான் விஜய சிவமாறன். நாளை காலை திருமணம் என்றிருக்க, மதியம் இல்லம் வந்தவனை இன்முகத்தோடு வரவேற்றனர் விஜய திருநாவுக்கரசரும் பருவதமும்.

     விஜய சிவமாறனின் இல்லம் முழுவதும் சொந்தங்கள் மற்றும் நண்பர்களால் நிரம்பியிருந்தது. எங்கு திரும்பினாலும் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும், குழந்தைகளின் விளையாட்டு சத்தமும் ஓயாமல் ஒலித்து கொண்டிருந்தது. தன் அன்னையின் கைகளால் உணவினை உண்டவன் பயணக் கலைப்பு தீரும் வரை நன்றாக உறங்கிவிட்டான்.

     இரவு ஏழு மணி போல் துயில் கலைந்தவன் அலுப்பு தீர நன்றாக குளித்துவிட்டு வெளியில் வரும்போது நலுங்கு வைக்கும் சடங்குகள் தொடங்கியிருந்தது. சடங்குகள் அனைத்தும் நிறைவடைய இரவு ஒன்பதரை மணியை கடந்திருக்க, தன் வருங்கால மனைவியிடம் பேசும் ஆவலில் இருந்தவனின் கனவு அனைத்தும் கனவாகவே போனது. அன்று இரவே மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் மண்டபத்திற்கு சென்றுவிட, அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர் ஷைலஜாவின் பெற்றோர்கள்.

     தனக்கென அளித்திருந்த மணமகன் அறையில் அமர்ந்திருந்தவனின் மனமானது ஒருவித படபடப்பில் சுழன்று கொண்டிருந்தது. தன் வருங்கால மனைவியுடன் பேசவேண்டும் என்ற ஆவல் ஒருபுறம் இருந்தாலும், ஏதோ தவறு செய்வது போல் விஜய சிவமாறனின் உள்மனம் அவனிடம் கூறிக்கொண்டே இருப்பது போல் மணிக்கொருமுறை தோன்றத்தான் செய்தது.

     அவை அனைத்தையும் புறம் தள்ளியவன் ஷைலஜாவிடனம் பேசுவற்காக ஆசையோடு மணமகள் அறைக்கு சென்றிருந்தான். மணமகள் அறையின் கதவை தட்டிவிட்டு ஆவலாக காத்திருந்தவனின் எண்ணத்தை தவிடுபொடியாக்கும் விதமாய் ஷைலஜாவின் அன்னை ரங்கநாயகி கதவை திறந்திருந்தார்.

     ரங்கநாயகியை கண்டு திடுக்கிட்டவனின் மனதில் சிறிது பயமும் பதட்டமும் சூழ்ந்து கொள்ள, அவனின் மனநிலையை அறியாதவர்

     “வாங்க மாப்பிள்ளை, என்ன இந்நேரத்துல?” என்று ரங்கநாயகி யோசனையாய் வினவ, அவரை கண்டு மெலிதாக புன்னகைத்தவன்

     “அது…. ஷைலஜா கிட்ட பேசணும்….” என்று விஜய சிவமாறன் கூற

     “ஷைலஜா தூங்கிட்டாளே…. நான் வேணும்னா எழுப்பட்டுமா தம்பி?” என்று வினவியரை கண்டு பதறியவன்

     “இல்ல வேண்டாம்…. பரவாயில்லை, ரெஸ்ட் எடுக்கட்டும்…. நான் போயிட்டு வரேன், குட் நைட்….” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு தன்னறையை நோக்கி ஏமாற்றத்துடன் சென்றிருந்தான்.

     மறுநாள் காலைப்பொழுதும் இரம்மியமாக ஆரம்பித்தது. மணமக்களின் பெற்றோர்கள் நிற்க நேரமின்றி ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்க, உறவினர்களும் நண்பர்களும் திருமண மண்டபத்தை தங்களின் வருகையால் அலங்கரித்து கொண்டிருந்தனர்.

     வெள்ளை நிற பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்து மணமகனுக்கே உரித்தான கம்பிரத்துடனும் அழகான புன்னகையுடனும் தன் மனையாளின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தவாறு ஐயர் கூறும் மந்திரங்களை கூறி கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.

     “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ….” என்று ஐயர் கூறிய கூற்றை கேட்பதற்கு மணமேடையில் அமர்ந்த நேரத்திலிருந்தே காத்திருந்தவன் மகிழ்ச்சியாக மணமகளின் அறையை நோக்க, அங்கு தோழிகளின் புடைசூழ வாடமல்லி நிற பட்டுப்புடவை உடுத்தி அழகோவியமாய் நடந்துவரும் ஷைலஜாவை கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தான் விஜய சிவமாறன்.

     அன்று தன் வாகனத்தை நிறுத்தி தன்னிடம் சண்டையிட்டு மனதை பறித்தவளும், புகைப்படத்தில் பார்த்து தன் கனவுகளை கொள்ளை கொண்டவளும் இவள் இல்லை. யார் இவள்? என்ன நடக்கிறது இங்கு? என்று ஒன்றும் புரியாமல் வெடவெடத்து அரண்டு போய் அமர்ந்திருந்தவனின் தோள்களை ஆதரவாக பற்றியவர்

     “சிவா, என்னப்பா? ஏன் ஒருமாதிரி இருக்க? இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்த? என்னாச்சு?” என்று விஜய திருநாவுக்கரசர் வினவ, அவரை கண்டு ஒன்றுமில்லை என்பதை போல் தலையசைத்தவனின் மனம் அனலாய் கொதித்து கொண்டிருந்தது.

     என்ன நடந்தது? என்னருகில் அமர்ந்திருப்பவள் யார்? ஒருவேளை, கதையிலும் திரைப்படத்திலும் வருவது போல் இறுதி நிமிடத்தில் மணப்பெண் மாறிவிட்டாளா? எதுவாக இருந்தாலும் தன் தாயும் தந்தையும் தன்னிடம் நிச்சயம் கூறியிருப்பார்களே? இவள் தான் ஷைலஜா என்றால், நான் புகைப்படத்தில் பார்த்த பெண் யார்? திருமணம் நிச்சயமானவுடன் மணப்பெண்ணிடம் பேசாமல் விட்டது நான் செய்த பெரும் தவறு, என்று பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருந்த விஜய் சிவமாறனின் கைகளில், மஞ்சள் கயிற்றிலான தாலியை ஐயர் அளித்திருந்தார்.

     தனது கரத்திலிருக்கும் மஞ்சள் நிற கயிற்றை விழியகலாமல் பார்த்திருந்தவன் தன் மனதில், இதை தூக்கி வீசிவிட்டு இங்கிருந்து சென்றுவிட்டால் என்ன? என்னிடம் காட்டிய புகைப்படத்தில் இருந்தவள் இவள் இல்லை என்று கூறினால் யார் நம்புவார்கள்? நான் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறி திருமணத்தை நிறுத்திவிடலாமா? ஆனால் அப்பெண் யாரென்று கேட்டால் என்ன சொல்வது? பெயர் கூட அறியாத அப்பெண்ணை தான் மனைவியாய் நினைத்து காதலிக்கிறேன் என்றா? ‘பைத்தியக்காரன்’ என்று திட்டமாட்டார்களா? குறிப்பாக என் தாய் தந்தையை எப்படி அவமான படுத்துவது? அனைத்திற்கும் மேலாக, என்னை கணவனாக ஏற்று என்னருகில் அமர்ந்திருப்பவளின் கல்யாண ஆசைகளும் கனவுகளும் என்னால் அழிய நேரிடுமே? இது தான் என் விதியா?

     ஒரு நிமிடத்தில் இவை அனைத்தையும் யோசித்தவன், தனக்கு எதிரில் எரிந்து கொண்டிருந்த அக்னி குண்டத்தின் மேல் நிற்பது போல் உணர்ந்தான். விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய திருமணத்தை விருப்பமே இல்லாமல், தன்னருகில் அமர்ந்திருந்த ஷைலஜாவின் கழுத்தில் மஞ்சள் நாணினை அணிவித்து, மனதிற்குள் கதறிக் கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.

ஒளி வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!