Skip to content
Post Views: 72
ரிதம் 39
அறையைத் திறந்துகொண்டு அவள் வெளியில் வரும்போது, எதிரிலிருந்த அறையிலிருந்து வெளியில் வந்தான் கௌதம்.
Advertisement
அவனைப் பார்த்ததும் அமைதியாகத் தலைகவிழ்ந்துவிட்டாள் நத்தாஷா. அவள் பின்னோடு வந்த ராகினி, “ஹாய் மாம்ஸ்” என்று கையை ஆட்டிக்கொண்டே புன்னகைக்க, திரும்பித் தன் தங்கையையும் முறைத்தாள் நத்தாஷா.
“என்ன உங்க அக்காவுக்கு இன்னும் கோபம் குறையலையா? இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் என்னை பிரம்மச்சாரியா வச்சிருக்க ஐடியா இருக்கு? ஆனா உங்க அக்காவுக்குக் கொடுத்த டைம் முடிஞ்சிருச்சு, ஞாபகம் இருக்கான்னு கேட்டுச் சொல்லு? பிலிம்ஃபேர் அவார்ட் வாங்குற வரைக்கும் தான் எங்கேஜ்மென்ட்டுக்கு டைம் கொடுத்தேன். அடுத்தது நேஷனல் அவார்ட் வரைக்கும் தான் கல்யாணத்துக்கு டைம் கொடுத்திருக்கேன். இப்ப அதுவும் வாங்குவதற்கு டெல்லி வந்துருக்காங்க. திரும்பி சென்னைக்குப்போகும்போது, கல்யாணப் பத்திரிக்கை வீட்டில் இருக்கும்னு சொல்லு” என்றான் கௌதம்.
Advertisement
Advertisement
“அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டீங்களே மாம்ஸ்?” என்றாள் ராகினி.
“ஆனா அது மட்டும் உன் அக்காவுக்குப் போதலையே? ஊரறியக் கல்யாணம் பண்ணனும் இல்லையா? அப்பதானே அவள் என் வீட்டுக்கு வருவாள்?” என்றான் கௌதம்.
Advertisement
“அதுதான் நீங்க எங்க வீட்ல இருக்கீங்களே மாம்ஸ்?” என்று அவள் புன்னகையோடு கேட்க, “எத்தனை நாளைக்கு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க முடியும்? இப்பயே நாலு பேரு நாலு விதமா பேசுறாங்க. கல்யாணம் எப்ப எப்பன்னு கேக்குறாங்க” என்றான் பாவமாக.
“நல்ல வேளை, நீங்க ஊரறியத் தம்பட்டம் போட்டு என்கேஜ்மென்ட் பண்ணிட்டீங்க. இல்லனா இன்னும் தப்பா பேசுவாங்க” என்று ராகினி கூறும்போது, முன்னால் சென்றுகொண்டிருந்தவள், எக்கி அவள் கையைப் பிடித்தபடி வேகமாக அங்கிருந்து நடந்துவிட்டாள்.
புன்னகையோடு அவனும் அவர்கள் பின்னோடு நடந்தான். டெல்லியில் இருக்கும் பெரிய நட்சத்திர ஹோட்டல் அது. அங்கு அவர்களுக்கும் சேர்த்து புக் செய்தது அவன்தான்.
அதுவும் மிஸ்டர் கௌதம் என்று ஒரு அறையும், மிஸஸ் நத்தாஷா கௌதம் என்று ஒரு அறையும்.
“ஆர் யூ சூயர் சார்? ரெண்டு பேருக்கும் ரெண்டு அறை வேண்டுமா? சிங்கிள் அறை போதாதா?” புக் செய்யும்போது அந்த ஹோட்டலைச் சேர்ந்த பெண்மணி கேட்டிருந்தார்.
“ஃபேமிலி மெம்பர்ஸ் வராங்க” என்று முடித்துக்கொண்டான் கௌதம். ஸ்ரீதருக்கு என்று தனியாக இன்னொரு அறையைப் புக் செய்திருந்தான்.
ஆம், அவர்கள் டெல்லிக்கு வந்திருந்தார்கள். அதுவும் தேசிய விருதுக்காக. அவனுக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், அவளுக்குச் சிறந்த பாடகிக்கான விருதும் கிடைத்திருந்தது. இந்திய அளவில் கிடைக்கப்பெறும் பெரிய விருதுதான் இது. இருவருக்கும் ஒருங்கே கிடைத்தது அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.
முந்தைய வருடமே அவன் பெயர் நாமினேட்டாகி கிடைக்காமல் போனது. இந்த வருடம் துணைவியோடு கிடைக்கப்பெற்றது, அவனுக்கு அத்தனை பேரின்பத்தைக் கொடுத்திருந்தது.
மறுநாள்தான் அவார்ட் ஃபங்ஷன் இருந்தது. இவர்கள் இரண்டு நாள் முன்பாகவே வந்துவிட்டார்கள், டெல்லியையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று. ஆசைப்பட்டது என்னவோ ராகினிதான். ஆனால், செல்ல மைத்துனிக்காக அதையும் செய்திருந்தான் கௌதம்.
முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் இருக்க, அங்கு ஏற்கனவே மற்றவர்கள் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கானதையும் ஆர்டர் செய்து காத்திருந்தனர். நத்தாஷா ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டுமென்று சொல்ல, துணைக்கு ராகினி எழுந்து நிற்க, பெண்களின் பாதுகாப்பிற்காக அவனும் துணை சென்றான்.
தற்போது டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அவரவர்களின் பாதுகாப்பை அந்தப் குடும்பமாவது செய்ய வேண்டும் அல்லவா? அவன்தானே அந்தப் குடும்பத்தின் ஆண் மகனாகப் பொறுப்பேற்று இருக்கிறான்? அதுவும் துணைவிக்குத் துணை நிற்கவில்லை என்றால், வேறு யாருக்கு நிற்பான்?
“சூடு ஆறிடாதா, சாப்பிட வேண்டியதுதானே? எதுக்காக எங்களுக்கு வெயிட் பண்றீங்க?” கேட்டுக்கொண்டே வந்து தன் தாயின் அருகில் அமர்ந்தான்.
அவள் அவனுக்கு எதிராக அவள் தாயின் அருகில் அமர்ந்தாள். அவன் அருகில் இருந்த சீட் காலியாகயிருக்க, அதில் வந்து அமர்ந்த ராகினி, அவன் கரத்தைத் தொட்டு ஆறுதல்படுத்தும் விதமாகச் சிரித்து வைத்தாள்.
“இவளுக்கு இப்படிப் பொறுமையா இருந்தா வேலைக்கு ஆகாது கௌதம் சார், நீங்க கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. அப்பத்தான் இவள் வழிக்கு வருவாள். அட்லீஸ்ட் உங்களை அசிங்கப்படுத்தக் கூடாதுன்றதுக்காகவாவது தாலியை வாங்கிப்பாள்” என்றாள் பிரீத்தி.
அந்த வார்த்தையில் அவன் நத்தாஷாவைப்பார்க்க, அந்த நொடி அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நோ ப்ரீத்தி, என்கேஜ்மென்ட் தான் அவளுக்குச் சொல்லாம பண்ணிட்டேன். ரிஜிஸ்டர் மேரேஜும் அதே போலத்தான். முறைப்படிக் கல்யாணம் பண்றதாவது அவளோட சம்மதத்தோட பண்ணனும்” என்று அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே கூறினான்.
“அப்ப காலம் முழுக்க நீங்க தேவதாஸ்தான் மாம்ஸ். ஏற்கனவே ரெண்டு வருஷம் கடந்துடுச்சு, அதுக்கே தலையில ரெண்டு முடி நரைச்சிருச்சு. நீங்க ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, நான் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கேன்” என்று அவள் விளையாட்டு போலக் கூற, அவள் தலையில் செல்லமாகத் தட்டினான் கௌதம். தன் இடது கையை நத்தாஷாவை நோக்கி நீட்டியவன், “எனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணும். என்னோட வாழ்க்கை முழுக்க வேணும், அதுக்காக எத்தனை வருஷமானாலும் காத்துகிட்டிருப்பேன். நீ அவளுக்கு மட்டும் இல்ல, எனக்கும் தங்கச்சி போலத்தான்” என்றான் கௌதம்.
அது அவளுக்கும் தெரியும். தன் தமக்கையை உசுப்பேற்றிவிடத்தான் அவள் அது போலக் கூறுகிறாள் என்று அங்கிருந்த எல்லோருக்குமே தெரியும், கௌதம் உட்பட. அவளும் விளையாட்டு போல இதே வார்த்தைகளைப் பலமுறை கூறியிருக்கிறாள், அவனும் அதைக்கண்டிப்பது போலப் பல முறை சொல்லியிருக்கிறான்.
“ஏம்மா நத்தாஷா? என் வீட்டுக்காருக்கு வேற உடம்பு சரியில்ல. எனக்கும் முன்ன போல ரெண்டு வீட்டுக்கும் ஓடியாட முடியல. நீ கொஞ்சம் மனசு வச்சு முறைப்படி நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்னா எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிட்டும். அவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்காம அம்மா, தங்கச்சின்னு மொத்தமா வந்துட்டா நல்லா இருக்கும்” என்று ஜாடை மாடையாக மகாலட்சுமியும் எத்தனையோ முறைக் கூறிவிட்டார்.
ஆனால் அவள் மனதுதான் இறங்க மறுத்துக்கொண்டிருந்தது. எங்கே தான் அவனோடு வாழ்க்கையைத் தொடங்கினால் அவனுடைய ஏறுமுகம் இறங்கு முகமாகிடுமோ என்று.
பல மியூசிக் டைரக்டர்கள் அவளைத் தங்கள் படத்தில் பாடச் சொல்லிக் கேட்டாலும், அவள் இதுவரையில் எதற்குமே ஒத்துக்கொள்ளவில்லை. அதில் சிலர் கௌதமிடம் கூடக் கேட்க, தனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியவன் அவளிடமும் அதைப்பற்றிப் பேசினான்.
“இல்ல சார், நான் இங்கதான் பாதுகாப்பா உணர்றேன். எனக்கு இது போதும்.”
இன்னுமே அவள் ‘சார்’ என்ற வார்த்தையை விடவில்லை. அவனும் அவளை வற்புடுத்தவில்லை.
“நீ என்னோட ஃபியான்சின்னு எல்லாருக்கும் தெரியும், யாரும் உன்னை நெருங்க மாட்டாங்க. அப்படி நீ பயப்படுறதா இருந்தா, நான் உனக்குத் துணைக்கு வரேன் நத்தாஷா. இல்லனா ராகினியைக் கூட்டிட்டுப் போ. முன்ன போல பிரீத்தியால வர முடியாது. சென்னை ஃபுல்லா இப்ப உனக்கும் ராகினிக்கும் பழக்கம் ஆயிடுச்சு. சோ, நீ ராகினியோட போகலாம். அவளுக்கு ஏதாவது வேலை இருக்குன்னா நான் அம்மாவைக் கூடத் துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.”
அவனும் எத்தனையோ முறை அவளிடம் கேட்டுப் பார்த்துவிட்டான். ஆனால் அவள் அதற்குப் பிடிகொடுக்கவேயில்லை. சில ஊடகங்களில் ‘கௌதம் தன் வருங்கால மனைவியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான்’ என்ற ரீதியில் போட ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் அவள் பார்வைக்கு வந்தது, ஆனாலும் மாறவில்லை.
அவன் ட்ரூப் மெம்பர்ஸ் வாய்ப்புக் கிடைக்கும்போது மற்ற மியூசிக் டைரக்டர்களிடமும் பாடிவிட்டுத்தான் வருகிறார்கள். அதனால் அவர்களை அவன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்று சொல்ல முடியாது. அவனும் அப்படி வெளியில் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்குத் தன் ட்ரூப்பில் பாடும் வாய்ப்பை முதன்மைப்படுத்தினான். எல்லோரும் சம்பாதிப்பதற்கான வழிவகங்களை தான் அவன் பார்த்து வைத்திருந்தான்.
அகாடமியைப் பொறுத்தவரை எல்லாம் சீராகச் சென்றுக் கொண்டிருந்தாலும்,
அவர்கள் இருவரின் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்னும் எதுவும் சீராகவில்லை. அவார்ட் வாங்கிய அன்று அவள் அழுகையோடு சென்ற அடுத்த நாளில், அவன் அவர்கள் வீட்டில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்திருந்தான்.
வீட்டிற்கு ரெஜிஸ்ட்ராரை வர வைத்திருக்க, ஏன் எதற்கு என்று யோசிப்பதற்குள் கையெழுத்துப் போடும்படி அனைவரும் கூற, அவளும் கையெழுத்தைப் போட்டிருந்தாள். அவள் போட்டு முடிக்கும் தருவாயில்தான் அது திருமணப் பதிவுச் சான்றிதழ் என்பதே அவளுக்குத் தெரியவந்தது. அவள் போட்ட பிறகுதான் அவனே போட்டான். நிமிர்ந்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“காரணத்துக்காகத்தான் பண்றேன் நத்தாஷா. உன்னோட பாதுகாப்புக்காகத்தான்” என்றவன் ‘சாரி’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அதற்கான விளக்கத்தை மகாலட்சுமிதான் பொறுமையாக அவளிடம் கூறினார். ‘முந்தைய வாழ்க்கையின் கசடுகள் அவள் பணத்திற்காக அவளைத் தேடி வர வாய்ப்பிருக்கிறது. அப்படி வரும்போது, நத்தாஷா கௌதம் நத்தாஷாவாக மாறி இருக்க வேண்டும் என்பது. அவர்களும் அப்படி வரக்கூடியவர்கள் தான். அது அவளுக்கும் தெரிந்தே இருந்தது.
மகாலட்சுமி வரும் வரை ரமேஷிடம் பேசிக்கொண்டிருந்தவன் அவர் வந்ததும் புறப்பட்டுவிட்டான். அன்றிலிருந்து இன்று வரை எப்போதாவது அவர்கள் வீட்டிற்கு வருவான், சாப்பிடுவான், நேரம் செலவழிப்பான். ஆனால் இரவு தங்க மாட்டான், சென்றுவிடுவான்.
அவன் வருகிறான் என்று தெரிந்தால் அழைப்பு விடுத்தாவது ரமேஷிடம் நான்-வெஜ் வாங்கி வரச் சொல்பவள், அவள் கையால் சமைத்துக் கொடுப்பாள். ஆனால் பரிமாற மாட்டாள். அவன் வந்தால் பேச்சுவார்த்தைகள் கூடக் கிடையாது.
அவனாக இழுத்துப்பிடித்து ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்வாள், அதற்கு முகம் திருப்ப மாட்டாள். அங்கென்று இல்லை, அகாடமியிலும் அப்படித்தான். அவர்கள் சந்தித்துக்கொள்வது மிக அரிது என்றாலும், அவனாகக் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும்தான் பதில். ஒரு வார்த்தை கூடவோ குறைவோ இருக்காது, துல்லியமாகப் பதில் அளித்துவிட்டு அமைதியாகி விடுவாள்.
அவளை ஊன்றிக் கவனித்த பிறகுதான் தெரிந்தது, அவனிடம் மட்டுமல்ல, மற்றவரிடமும் அவள் பேசுவது குறைந்துவிட்டது என்று. அதற்காக அவன் காத்துக்கொண்டிருக்கிறான், அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக.
அந்த வருடம் இவர்கள் எதிர்பார்த்தது போல அவனுக்குத் தேசிய விருது கிடைக்கவில்லை, அவளுக்கும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்து ஏமாறுவது ஒன்றும் புதிதல்லவே? எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதானே? ஆனால் அதைக் கடந்து முன்னேறுபவர்கள் தானே நாம்.
அவர்கள் மொத்தமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ராகினியின் அலைபேசி ஒலித்தது. அதில் வந்த பெயரைப் பார்த்ததும் அவள் அவசரமாக அலைபேசியை எடுத்து மறைத்தாள். ஆனால் அவள் அருகிலேயே அமர்ந்திருந்தவன் அதைக் கண்டுவிட்டான். கண்டும் காணாமலும் இருந்து கொண்டான்.
சாப்பிடுவதை விட்டுவிட்டு மெசேஜ் தட்டிவிட்டவள், பிறகு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த ரமேஷும் புன்முறுவலுடன் அதை கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.
ஸ்ரீதர் ஒரு நாள் கௌதம் அறைக்கு அனுமதி வாங்கிவிட்டு வந்து நின்றான்.
“கௌதம், எனக்கு ராகினியைப் பிடிச்சிருக்கு. வீட்ல அம்மா, அப்பாகிட்ட கேட்டுட்டேன். உன் விருப்பம்தான் என் விருப்பம்னு சொல்லிட்டாங்க. ராகினிகிட்ட என் மனசுல இருக்குறதைச் சொன்னேன். ஆனா அவள் ‘எங்க மாம்ஸ்கிட்ட கேட்டுக்கோங்க’ன்னு சொல்லிட்டாள்” என்றபடி தயங்கி நின்றான்.
“இது எப்போதிலிருந்து ஸ்ரீதர்?” புன்னகையோடு கேட்டான் கௌதம்.
“முன்னமே இருந்துச்சு கௌதம். ராகினியோட கலகலப்பான பேச்சு எனக்குப் பிடிச்சது. ஆனாலும் கொஞ்சம் தயக்கம், இதெல்லாம் சரிவருமான்னு ஒரு படபடப்பு இருந்துச்சு. நாட்கள் போகப் போக அது ஏக்கமா, எதிர்பார்ப்பா மாறிடுச்சு. இவள்தான் நம்மளோட துணைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பாட்டுக்கு அவளிடம் சொல்லிப் பின்னாடி அதுல பிரச்சனை வரக்கூடாதுன்னு அம்மா, அப்பாகிட்டயும் சம்மதம் வாங்கிட்டேன். ஆனா நீ சம்மதம் சொன்னாதான் ராகினிக்கும் சம்மதமாம்” என்று முடித்தான் ஸ்ரீதர்.
“உன்னைப்போல ஒரு நல்லவனை வேணாம்னு எந்த முட்டாளும் சொல்ல மாட்டாங்க. நானும் முட்டாள் இல்ல ஸ்ரீதர். நான் புஷ்பா அம்மாகிட்ட பேசுறேன்” என்று கூறியவன், அனைவரிடமும் பேசிச் சம்மதம் வாங்கினான்.
ஆனால் தமக்கையின் திருமணம் முடிந்த பிறகுதான் திருமணம் என்று கூறிவிட்டாள் ராகினி. இன்று வரை அதிலிருந்து மாறாமல் இருக்கிறாள். இப்பொழுது மனம் இறங்க வேண்டியது நத்தாஷா மட்டும்தான்.
…………
தேசிய விருதுக்கும் உடைகளை வாங்கித் கொடுத்தது கௌதம்தான். அதை உடுத்திக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தாள் நத்தாஷா.
“அம்மா, ஒருத்தவங்க வாங்கித் கொடுக்குறதைப் போட்டுப்பாப்பாங்களாம், அவங்க கூடவே வேலை செய்வாங்களாம், அவங்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைப்பாங்களாம், அவங்களுக்காக அர்ச்சனையெல்லாம் பண்ணுவாங்களாம், அவங்க மேல ரொம்ப அன்பு வச்சிருப்பாங்களாம்… ஆனா கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டாங்களாம்” என்று நொடித்துக்கொண்டாள் ராகினி.
“உனக்குக் கல்யாணம் வேணும்னா பண்ணிக்கோ, என்னை பண்ணச் சொல்லாதே” என்றாள் நத்தாஷா.
“ஹலோ சிஸ்டர், உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.”
“ஆமா, அதை தான் நானும் சொல்றேன். ஆனா யாருக்கும் அது புரிய மாட்டேங்குது” என்று கூறும்போது அவள் குரல் கலங்கிவிட்டது.
“ஐயோ அக்கா, நான் எதைச் சொல்றேன்? நீ எதைச் சொல்ற? உன் மேல அத்தனை அன்பை வச்சு, உனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சு, உன்னை பணத்துக்காக தேடி வந்தவங்களை ஓட ஓட விரட்டியடிச்சு, உனக்காகவே காத்துட்டிருக்குற அந்த மனுஷனைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? நீ என்ன நினைக்கிற? நீ ஒதுங்கி இப்படியே இருந்தா அவர் வேறு யாராவது ஒரு பொண்ணைப் பார்த்துட்டுப் போயிடுவாருனா? இத்தனை வருஷம் போகாதவரு இனிமேல் போவாரா”?
“நான் அப்படியெல்லாம் போற ஆள் இல்லைன்னு இன்னைக்கு வரைக்கும் அவர் புரூவ் பண்ணிட்டுத்தானே இருக்காரு? உன்னோட பிடிவாதத்துல அவர் வாழ்க்கையைத் தொலைக்க வச்சிடாதே. அவர் மேல உனக்கு அன்பு இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும், அதை மறைச்சு நீயே பூசி முழுகாதே. உன்னை அவருக்குச் சமர்ப்பணம் பண்ணிடு. உனக்காக இல்லனாலும் அவருக்காகப் பண்ணிடு” என்று கூறிவிட்டு அறையை விட்டுச் சென்றுவிட்டாள்.
அதே யோசனையோடு தேசிய திரைப்பட விருதுகள் நடக்கும் விக்யான் பவனுக்கு (Vigyan Bhawan) வந்து சேர்ந்தார்கள்.
ஃபிலிம்பேர் விருது விழா ஒரு வகை என்றால், இது வேறு வகை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் இருக்காது, ஆனால் கௌரவம் இருக்கும். அதை வாங்கும்போது ஒரு பெருமிதம் ஏற்படும். அந்த இடத்திற்குள் நுழையும்போதே உடல் சிலிர்த்து அடங்கும். பலதரப்பட்ட ஜாம்பவான்களைப் பார்க்கும்போது மனம் நிம்மதி பெறும்.
அத்தனை பேரில் தங்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது என்ற சந்தோஷம் ஏற்படும். அந்தச் சந்தோஷத்திற்கு ஈடு இணையேயில்லை.
நத்தாஷாவின் நிலையும் அப்படித்தான். ஆங்கிலத்தில் ஒவ்வொரு பெயர் பட்டியலாக வாசித்துக்கொண்டிருக்க, வாசிக்கப்பட்ட பெயருக்குரியவர்கள் சென்று விருதுகளைக் குடியரசுத் தலைவரின் கையால் பெற்றுக்கொண்டு வந்தனர்.
முதலில் அவள் பெயர்தான் வாசிக்கப்பட்டது. ஆனால், ‘மிஸஸ் நத்தாஷா கௌதம்’ என்று வாசிக்கப்பட்டது. அந்தப் பெயரைக் கேட்கும்போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அவளுக்கு வந்த மெயிலில் அப்படியில்லை. ‘இன்று இது எப்படிச் சாத்தியமானது?’ என்று கௌதமைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தபடி புன்முறுவலோடு கைதட்டிக்கொண்டிருந்தான்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்றிலிருந்து இன்று வரை தனக்காகச் செய்துகொண்டிருக்கும் இவனுக்கு, தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? உண்மையில் தங்கை சொல்வது போல, தான் இவனுக்காகத் தன்னை அர்ப்பணித்தால் தான் என்ன?? என்று சிந்தித்தபடியே குடியரசுத் தலைவரை நோக்கியபடி சென்றவள், வணக்கம் கூறினாள். அவரும் எதிர் வணக்கம் கூறிவிட்டு அவார்டைக் கையில் எடுத்தார்.
“நான் இதை என் கணவனோடு வாங்க விரும்புகிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறினாள். அவரும் தன் காரியதரிசியிடம் சொல்ல, மற்றவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்திருந்தனர்.
அடுத்த இரண்டு நொடிகளில் கௌதம் பெயர் வாசிக்கப்பட, அவன் எழுந்து அவர்கள் அருகில் சென்றான்.
“ஹி இஸ் மிஸ்டர் கௌதம், மை ஹஸ்பண்ட்” என்று குடியரசுத் தலைவரிடம் கூறியவள் பெருமிதமாக உணர்ந்தாள். அவனுக்குச் சொல்ல வார்த்தைகள் இல்லை, அத்தனை சந்தோஷத்தில் திளைத்தான்.
அடுத்த பெயரும் அவன் பெயராகவே இருக்க, அவன் அவளை நிறுத்திக்கொள்ள, குடியரசுத் தலைவர் புரியாமல் விழிக்க, தனக்கும் விருது கிடைத்திருப்பதாக அவன் கூறினான்.
“வாவ் கங்கிராட்ஸ்! கணவன் மனைவி இருவருக்கும் ஒன்றாக, ஒரே மேடையில் விருது கிடைக்கிறதா? மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று ஆங்கிலத்தில் கூறினார். நன்றி கூறி அவனும் தன் மனைவியோடு அதை வாங்கிக்கொண்டான்.
நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திவ்யாவிற்கு வயிற்றில் அமிலம் சுரந்தது. அவள் அங்கிருந்து வேறு ஒரு மியூசிக் டைரக்டரிடம் சென்றுவிட்டாள். அட்ஜஸ்ட்மெண்ட்களோடு அவளுக்கு வாய்ப்புகளும் நிறையக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், பரிசுகள் பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு மட்டும்தான் அவளால் விட முடிந்தது.
…..
அதை பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் குடும்பம் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டது. அவளைத் தேடிச் சென்று அசிங்கப்பட்டு திரும்பியது தான் மிச்சம். அவளைக் காக்கும் இரட்சகனாக அவள் கணவன் இருக்கிறான். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறான். அவர்களிடம் இல்லாத ஆதாரங்கள் கூட அவனிடம் இருக்கிறது.
இனி அவளை நெருங்குவது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம், என்று ஒதுங்கி விட்டார்கள். ஆனால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.
error: Content is protected !!