Skip to content
Post Views: 251
பணம் தான் வாழ்க்கைக்கு உதாரணம், பணமின்றி வேறெதுவும் வாழ்வுக்கு முக்கியம் இல்லை என்ற கோட்பாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்மநாபன் மற்றும் ரங்கநாயகி தம்பதியருக்கு பிறந்தவள் தான் ஷைலஜா. விஜய திருநாவுக்கரசரின் குடும்பத்தை போல் பத்மநாபனின் குடும்பமும் சென்னையில் வசிக்கும் பரம்பரை பணக்காரர்களின் குடும்பத்தில் ஒன்று தான்.
பத்மநாபனும் ரங்கநாயகியும் தங்களின் தொழிலில் கிடைக்கும் லாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாக பார்த்தது போல், அவர்களுக்கு பிறந்த ஷைலஜாவையும் அவளின் தம்பி மாதேஷையும் வேலைக்காரர்களின் கவனிப்பில் சிறப்பாகவே பார்த்துக்கொண்டனர். தனக்கு இது தான் வேண்டும் என்று தங்களின் குழந்தைகள் சொல்வதற்கு முன்பே அதனை அவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு வாழ்க்கையின் பாடத்தில் பணம் தான் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கும் பெற்றோர்களில் இவர்களும் ஒருவர்.
Advertisement
தொழிலை தவிர்த்து சீட்டாட்டம், குதிரை பந்தயம், மது கொண்டாட்டம் என்று பத்மநாபன் ஒருபக்கம் சென்றால், மாதர் சங்கம், அழகு சாதன நிலையம் என்று ரங்கநாயகி ஒருபக்கம் சென்றுவிடுவார். அளவிற்கு மீறி பணமிருந்ததால் தாய் தந்தையின் பாசத்தை சிறிதளவும் தேடாத (அறியாத) ஷைலஜாவும் மாதேஷும் தங்களின் வாழ்க்கையை அவர்களது விருப்பம் போல் பார்த்து கொண்டனர்.
‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்ற பொன்மொழிக்கு சான்றாக அமைந்தது ஷைலஜாவின் நட்பு வட்டாரம். அதன் விளைவில் ஒன்று தான் மதுவுக்கு அடிமையானது. அவளின் போதைப் பழக்கத்தை அறிந்த பத்மநாபனும் ரங்கநாயகியும் தன் மகளையும் மகனையும் சரியாக வளர்க்கவில்லையோ என்று வெகுகாலத்திற்கு பிறகு தான் உணர்ந்தனர்.
Advertisement
Advertisement
ஒன்றிரண்டு முறை முரண்டு பிடித்தாலும் இறுதியில் தங்களின் சொல் பேச்சை கேட்டு நடக்கும் மாதேஷின் குணமானது பத்மநாபன் மற்றும் ரங்கநாயகிக்கு சற்று நிம்மதியை அளித்தாலும், தங்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் வீட்டில் தங்காது எந்நேரமும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஷைலஜாவின் குணமானது அவர்களின் நிம்மதியை அழித்து அளவுக்கடந்த கவலையை தான் அளித்தது.
தன் மகளின் வாழ்க்கையை திருத்த வழியறியாது தவித்தவர்களின் எண்ணத்தில் ‘திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகிவிடும்’ என்றொரு நன்முடிவை (தீயமுடிவை) தீர்மானித்தவர்கள் ஷைலஜாவிற்கு வரன் பார்க்க தொடங்கிவிட்டனர். மகளின் வாழ்வு மாறவேண்டுமானால் அது திருமணம் என்னும் பந்தத்தில் தான் உள்ளது என்பதை கண்மூடித்தனமாக நம்பியவர்கள் சிறிதளவாவது நேரம் ஒதுக்கி அவளுடன் மகிழ்ச்சியாகவும் பாசமாகவும் பழகியிருந்தால் ஷைலஜாவின் வாழ்வும் சிறப்பாகவே இருந்திருக்கும்.
Advertisement
பணம் என்னும் மாய வலை அவளை சூழ்ந்து கொள்ள, அதில் முற்றிலுமாய் தன்னை தொலைத்து விஜய சிவமாறனின் முன்பு நின்றிருந்த ஷைலஜாவின் வாழ்க்கையின் இரகசியங்களை பற்றி விஜய சிவமாறன் அறிந்து கொண்டது கடுகளவு தான். அவளை பற்றி அவன் அறியாதது இன்னும் கடலளவு இருக்கிறது. அதில் மூழ்கி தவித்து தொலைந்து போகப்போவது என்னவோ விஜய சிவமாறன் தான்.
தன் அறைக்குள் தள்ளாடியவாறு நுழையும் ஷைலஜாவை கண்டு மனம் வருந்தியவன்
“இன்னிக்கும் குடிச்சிட்டு தான் வந்திருக்கியா?” என்று விஜய சிவமாறன் கோபமாக வினவ, அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் அறையிலிருந்த மெத்தையில் பொத்தென்று படுத்துவிட்டாள் பெண்ணவள்.
ஷைலஜாவின் செயலால் மேலும் கோபமடைந்தவன் அவளை தன் வலது கரங்களால் எழுந்து அமர வைத்தவாறு
“வெளிய போனா சொல்லிட்டு போக மாட்டியா? இதென்ன பழக்கம்? ராத்திரி பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு வர? அதுவும் குடிச்சிட்டு….”
“ப்ச்ச், இப்போ என்ன பிரச்சனை உனக்கு?”
“பிரச்சனையா? நீ தான் பிரச்சனை…. நீ தினமும் வீட்டுல தங்காம உன் ஃபிரண்ட்ஸோட போய் குடிச்சு கூத்தடிச்சிட்டு வரியே அதான் என் பிரச்சனை…. வாரத்துல ஒருநாள் ஃபிரண்ட்ஸ் கூட வெளிய போனா பரவாயில்ல ஆனா நீ தினமும் எங்கேயாவது போயிடுற அதுவும் வீட்டுல அப்பா அம்மா கிட்ட சொல்லாம கிளம்பிடுற…. முந்தாநாள் வீட்டுக்கே வரல, அந்தளவுக்கு உனக்கு குடி முக்கியமாகிடுச்சா?”
“இங்க பாரு ஷிவ், எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நான் இப்படி தான் இருக்கேன்…. என் இஷ்ட்டப்படி தான் எல்லாமே நடக்கும்…. எனக்கு ஏத்த மாதிரி என் லைஃப் ஸ்டைல் நான் மாத்திப்பேன்…. இப்போ திடீர்னு வந்து ‘உனக்கு கல்யாணமாகிடுச்சு நீ இப்படி தான் இருக்கனும்னு’ சொன்னா, இட்ஸ் ரிடிக்குலஸ் மேன்…. என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல…. நீயும் வீட்டுல இல்ல, நான் என்ன பண்ணட்டும் சொல்லு?”
“நான் வீட்டுல இல்லன்னா நீ ஊர் சுத்த கிளம்பிடுவியா? நான் உன்னை வெளிய போக வேண்டாம்னு சொல்லலை ஆனா எங்க போறதாயிருந்தாலும் வீட்டுல சொல்லிட்டு போன்னு தான் சொல்றேன்…. இதுவரை ஒரு தடவையாவது என் அம்மா அப்பா கிட்ட நீ பாசமா பேசியிருக்கியா?”
“ஓஹோ…. இப்போ தான் புரியுது…. என்னை பத்தி எல்லாத்தையும் செல்வி சொன்னாளா?”
“மரியாதையா பேசு ஷைலஜா, அவங்க எனக்கு அக்கா மாதிரி….”
“அக்கா மாதிரின்னா எப்படி? உன் அப்பாவுக்கு பிறந்தாளா இல்ல உன் அம்மாவுக்கு பிறந்தாளா?” என்று ஷைலஜா வார்த்தையில் நஞ்சை கலந்து பேச, அவள் கூறியதை கேட்டு கோபத்தில் வெகுண்டு எழுந்தவன் அவளை அடிக்க உயர்த்திய தன் கரங்களை அருகிலிருந்த சுவற்றில் குத்தி தன்னை நிதானப்படுத்த முயற்சித்து கொண்டிருந்தான்.
விஜய சிவமாறனின் கோபத்தை முதன் முதலில் கண்ட ஷைலஜாவின் உடலும் மனமும் பயத்தில் ஒருநொடி உறைந்து தான் போனது. தன் கோபத்தை கட்டுப்படுத்த வழியறியாத விஜய சிவமாறன் அறையிலிருந்த பால்கனி நோக்கி சென்றுவிட, மெத்தையில் அமர்ந்திருந்த ஷைலஜாவின் மனமானது சிந்தனையில் மூழ்கியிருந்தது. சிறிது நேர சிந்தனையில் மூழ்கியவள் களைப்பில் உறங்கிவிட, வெகுநேரத்திற்கு பிறகு அறைக்குள் நுழைந்த விஜய சிவமாறன் அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் படுத்து தன்னையறியாமல் உறங்கிவிட்டான்.
பறவைகளின் அழகான கூக்குரலை இரசித்தவாறு கிழக்கு நோக்கி உதயமானார் சூரியதேவன். தன் அறையிலிருந்த நீள்சாய்விருக்கையில் படுத்திருந்தவன் உறக்கத்திலிருந்து மெல்ல துயில் கலைந்து எழும்போது அவன் எதிரில் நின்றிருந்தாள் ஷைலஜா.
தூக்க கலக்கத்திலும் தன்னெதிரில் நின்றிருப்பவளை கோபமாக பார்த்தவன் சட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவனது வலது கரத்தினை இறுக்கமாக பற்றியவள்
“சாரி ஷிவ்….” என்று ஷைலஜா கூறியதை கேட்டு அவளை இமைக்காமல் பார்த்தவனிடம்
“நேத்து நான் செல்வி அக்காவை பத்தி அப்படி பேசியிருக்க கூடாது…. சாரி ஷிவ்…. பிளீவ் மீ, இனிமேல் நான் குடிக்கமாட்டேன்…. கொஞ்சம் கொஞசமா அந்த பழக்கத்திலிருந்து வெளிய வர ட்ரை பண்றேன்…. என்னை நம்பு ஷிவ், பிளீஸ்….” என்று ஷைலஜா தன் கண்களை குறுக்கி கொண்டு கெஞ்சலாக கூறியதை கேட்டு சற்று மனமிறங்கியவன் தன் தலையை சரியென்பதை போல் அசைத்து மென்மையாக சிரிக்க, அவன் கூறியதை கேட்டு சிரித்தவள் விஜய சிவமாறனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.
விஜய சிவமாறனின் அணைத்திருந்தவளின் மனம் சற்று நேரத்திற்கு முன்பு அவளின் தோழி கூறிய கூற்றில் தான் நிலைத்திருந்தது.
“எல்லா ஹஸ்பென்டும் கல்யாணமான புதுசுல நல்லா தான் பேசுவாங்க, ஆனா போக போக அவங்க சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர ஆரம்பிச்சிடும் அதை என்னிக்கும் வளர விட கூடாது…. உன் ஹஸ்பென்ட் இப்போ அந்த கட்டத்துல தான் இருக்கான்…. இதை வளரவிடாத ஷைலு, அப்புறம் உன்னை வீட்டிலேயே அடக்கி வச்சிடுவான்…. நீ நினைச்ச மாதிரியே உன்னைவிட பணக்கார புருஷன் கிடைச்சிட்டான்ல? அப்புறம் என்ன? கொஞ்ச நாள் அவனுக்கு பிடிச்ச மாதிரி இரு…. அப்புறம் நாளாக நாளாக நாம நினைச்சதை சாதிக்கலாம்…. இப்போ என்னை எடுத்துக்கோ, உன் புருஷன் மாதிரி தான் என் புருஷனும் என்னை டாமினென்ட் பண்ண ட்ரை பண்ணான் அவனை நான் அடக்கலையா? அதை முதல கத்துக்கோ…. எல்லாம் தன்னால நடக்கும்….” என்று அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் காலையிலேயே ஷைலஜாவின் மூளையில் விஷத்தை புகட்டிய அவளது தோழியின் கூற்றை பின்பற்ற தொடங்கிய ஷைலஜாவிற்கு கிடைத்த முதல் வெற்றி தான் விஜய சிவமாறனின் புன்னகையும் அரவணைப்பும். ஷைலஜாவின் மனதிலிருக்கும் திட்டங்களை அறியாத விஜய சிவமாறனும் அவளை முழுதாக நம்ப தொடங்கியிருந்தான்.
மூன்று மாதத்தில் முடிக்க வேண்டிய தன் வேலைகள் அனைத்தையும் இரண்டே மாதத்தில் முடித்துவிட்டு இல்லம் திரும்பியிருந்தான் விஜய சிவமாறன். இந்த இரண்டு மாதத்தில் ஷைலஜாவும் தன்னை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி தன் கணவனின் குடும்பத்தில் இணைந்து விஜய திருநாவுக்கரசர், பருவதம் மற்றும் செல்வியிடம் நன்றாக (பொய்யாக) பழக கற்றுக்கொண்டாள்.
ஷைலஜாவின் மாற்றங்களை கண்டு அனைவரது மனமும் மகிழ்ச்சியில் திளைத்தாலும், விஜய சிவமாறனால் அவளை தன் மனைவியாய் இல்லற வாழ்வில் அவ்வளவு எளிதில் இணைய முடியவில்லை. வேலை பளு என காரணம் கூறி இரவு தாமதமாக இல்லத்திற்கு வந்தாலும் தனக்காக உறங்காமல் காத்திருந்த ஷைலஜாவின் நிலை அவனை தடுமாற தான் செய்தது. இருப்பினும் அவளுடன் தன் உண்மையான காதலுடன் இணைய வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்தவன் அதை செயல்படுத்தும் வரை தள்ளி நிற்க எண்ணினாலும் அன்று இரவே அவளுடன் இணைவதை அவனால் அவ்வளவு எளிதில் தடுக்க முடியவில்லை. ஏனோ அந்த மாயையிலிருந்து அவனால் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாமல் அனுதினமும் ‘இது ஷைலஜாவிற்கு நான் செய்யும் துரோகம்’ என்று நினைத்து தன்னையே வெறுக்க தொடங்கியிருந்தான் விஜய சிவமாறன்.
நாட்களும் வாரங்களாக, வாரங்களும் மாதங்களாக கரைய தொடங்கியது. இன்றோடு விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவின் திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. இந்த ஒன்றரை வருடத்தில் ஷைலஜாவை கொஞ்சம் கொஞ்சமாக தன் மனைவியாய் ஏற்றுக்கொண்டாலும் அவளின் குடிப்பழக்கத்தை முற்றிலுமாய் அவனால் நிறுத்த முடியவில்லை. இதனாலேயே இருவரின் வாழ்க்கையானது சில நாட்கள் அமைதியாகவும் பல நாட்கள் சண்டைகளாகவும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
விஜயாஸ் கஃபேவை, விஜயாஸ் ஐந்து நட்சத்திர உணவகமும் அதனுடன் பார்டி ஹாலும் ஆரம்பிக்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் விஜய சிவமாறன் மனதில் இருந்தது. அதை செயல்படுத்த சென்னையின் முக்கிய நகரங்களில் நிலங்களை தேடிய பொழுது தான் ஆழினியின் தந்தை சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியின் நிலமானது விஜய சிவமாறனிடம் விற்பனைக்கு வர, அதை வாங்கும் பொறுப்பை தன் தந்தையிடம் அளித்துவிட்டான்.
புதிதாக தொடங்கும் ஐந்து நடச்த்திர உணவகத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று நினைத்து அதன் சம்பந்தப்பட்ட கோப்புகளை விஜய சிவமாறன் பார்த்து கொண்டிருக்க, அவனெதிரில் வந்து அமர்ந்தவள்
“ஷிவ்….” என்று அழைத்த ஷைலஜாவை என்ன என்பதை போல் பார்த்தவனிடம்
“நாம குழந்தை பெத்துக்கலாமா?” என்று வினவிய தன் மனைவியை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
“என்ன? என்ன சொல்ற ஷைலஜா? ஏன் திடீர்னு இப்படி….” என்று விஜய சிவமாறன் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“நமக்கு கல்யாணமாகி ஒன்றரை வருஷமாகுது ஷிவ்…. ‘எதுவும் குட் நியூஸ் இல்லையான்னு’ மம்மியும் ஃபிரண்ட்ஸும் கேக்குறாங்க…. நான் அவங்க கிட்ட என்ன சொல்லட்டும்?” என்று வினவிய ஷைலஜாவை தீர்க்கமாக நோக்கியவன்
“அவங்களுக்காக குழந்தை பெத்துக்க முடியாது ஷைலஜா, ஒன்றரை வருஷம் தான ஆகுது? ஒன்பது வருஷமாகலையே? எல்லாம் பொறுமையா நடக்கட்டும் அவசரப்படுத்த வேண்டாமே….” என்று விஜய சிவமாறன் பொறுமையாக கூற, அவனிடம் சரியென்பதை போல் தலையசைத்தவள் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு
“நாம டாக்டர் கிட்ட போகலாமா?” என்று வினவிய ஷைலஜாவை கேள்வியுடன் பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
தன்னை கூர்மையான விழிகளுடன் பார்க்கும் தன் கணவனின் பார்வையினது அர்த்தத்தை புரிந்து கொண்டவள்
“அது…. எனக்கு ரொம்ப நாளாவே லேட் பீரியட்ஸா இருக்கு ஷிவ்…. லாஸ்ட் டூ மன்த்ஸ் பீரியட் வரல, கொஞ்சம் சந்தோஷப்பட்டேன் ஆனா அடுத்த நாள் பீரியட் வந்துடுச்சு…. அதான் ஆரம்பத்துலேயே டாக்டர் கிட்ட போனா கொஞ்சம் பெட்டரா இருக்குமேன்னு ஃபீல் பண்றேன்….” என்று ஷைலஜா கூறியதை கேட்டு அவளது கரங்களுடன் தன் கரங்களை கோர்த்தவன்
“ஏன் ஷைலஜா பயப்படுற? உனக்கு லேட் பீரியட்ஸ் வருதா? டாக்டர் கிட்ட போகலாம், ஆனா எந்த பிரஷர்ஸோடும் குழந்தை பெத்துக்க வேண்டாம் அதை பொறுமையா பெத்துக்கலாம் சரியா?” என்று விஜய சிவமாறன் கூறி புன்னகைக்க, அவனை கண்டு மெலிதாக சிரித்தவள்
“என் பெஸ்ட் ஃபிரண்ட் கிறிஸ்டினா, கைனோ டாக்டர் தான்…. அவள் கிட்ட நாளைக்கு போகலாமா?” என்று வினவிய ஷைலஜாவிடம் சரியென்று கூறி தலையசைத்து வைத்தான் விஜய சிவமாறன்.
மறுநாள் காலையில் டாக்டர் கிறிஸ்டினா முன்பிருந்த இருக்கையில் விஜய சிவமாறனும் ஷைலஜாவும் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சில பல நலவிசாரிப்புகளை முடித்த கிரிஸ்டினா ஷைலஜாவிற்கு சில பரிசோதனைகள் செய்யுமாறு பரிந்துரைத்தார். அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துவிட, அதனை முழுமையாக பார்த்தவர் தன்னெதிரில் அமர்ந்திருந்தவர்களிடம்
“டெஸ்ட் ரிசல்ட்ஸ் எல்லாமே பார்த்தேன்…. உனக்கு பிரிமெச்சூர் ஓவரியன் இன்சஃபிஷியன்சி இருக்கு ஷைலு…. அதாவது, கருமுட்டை கம்மியாகிடுச்சு….”என்று கிரிஸ்டினா கூறியதை கேட்டு குழம்பியவன்
“நீங்க சொல்றது எனக்கு புரியல டாகடர், கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க….” என்று விஜய சிவமாறன் பதட்டமாக வினவ, அவனிடம் அதை பற்றி கிரிஸ்டினா விளக்க தொடங்கியிருந்தாள்.
“ஷைலுவோட உடம்புல இருக்குற ஓவரீஸ் சாதாரணமா வேலை செய்ய வேண்டிய நேரத்துக்கு முன்னாடியே அதோட செயல்பாட்டை குறைக்க ஆரம்பிச்சிருக்கு…. பொதுவா ஒரு பெண்ணோட ஓவரீஸ்ல இருந்து தான் கருமுட்டைகள் உருவாகும்…. அந்த கருமுட்டை தான் கர்ப்பம் உருவாக முக்கியமானது, ஆனா ஷைலுவுக்கு பிரிமெச்சூர் ஓவரியன் இன்சஃபிஷியன்சி இருக்கிறதால அவளோட ஓவரீஸ் செயல்பாடு குறைஞ்சிடுச்சு முக்கியமா கருமுட்டை உருவாகும் வாய்ப்பு ரொம்ப குறைவாகியிருக்கு…. இதனால தான் அவளுக்கு பீரியட் சைக்கிள் மாறியிருக்கு….” என்று கூறிவிட்டு ஒருநொடி அமைதி காத்தவள்
“சாரி ஷைலு, ஒரு கருவை சுமக்குறதுக்கான சக்தி உன் கிட்ட இல்ல….” என்று கிறிஸ்டினா கூறியதை கேட்டு ஷைலஜா அழ ஆரம்பிக்க, அவளது கரங்களை பற்றி அவளை ஆறுதல் படுத்தியவன்
“இதை குணப்படுத்த முடியாதா டாக்டர்?” என்று விஜய சிவமாறன் கவலையாக வினவ, அவனிடம் இல்லை என்பதை போல் தலையசைத்த கிறிஸ்டினாவிடமிருந்து விடைப்பெற்றவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு இல்லத்திற்கு சென்றிருந்தான்.
தன் அறையில் அமைதியாக அமர்ந்திருந்த ஷைலஜாவின் அருகில் வந்து அமர்ந்தவன் அவளது கைகளை இறுக்கமாக பற்றியவாறு
“அதையே நினைச்சிட்டு இருக்காத ஷைலஜா, உன் ஃபிரண்ட் மட்டும் தான் டாக்டரா? இன்னும் எத்தனையோ பேர் இங்க இருக்காங்க, நீ எதுவும் யோசிக்காத நாளைக்கு நாம வேற டாக்டர் போய் பார்க்கலாம்….” என்று கூறிய விஜய சிவமாறனை புரியாமல் பார்த்தவள்
“எதுக்கு? எங்க போனாலும் கிறிஸ்டி சொன்னது தான் சொல்லுவாங்க….” என்று ஷைலஜா அழுத்தமாக கூற
“அதை நாளைக்கு பார்க்கலாம் ஷைலஜா, சகைன்ட் ஒப்பினியன் பண்றது நல்லது தான?” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்ட ஷைலஜா சரியென்பதை போல் தலையசைத்து வைத்தாள்.
தன் மனைவி ஷைலஜாவை அழைத்து கொண்டு தன் நீண்ட நாள் பள்ளி தோழியான ஆஷிகா பேகம் பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்ற விஜய சிவமாறனின் விதியானது அந்நொடியிலிருந்து தான் தலைகீழாக மாற தொடங்கியிருந்தது.
ஒளி வீசும்….
error: Content is protected !!