Skip to content
Post Views: 116
ஷைலஜா சென்ற பிறகு பித்து பிடித்தார் போல் அமர்ந்திருந்தான் விஜய சிவமாறன். அவன் மனமும் மூளையும் ஷைலஜா கூறிய கூற்றுகளை பற்றி மட்டும் தான் சிந்தித்து கொண்டிருந்தது.
விருப்பம் இல்லாமல் ஷைலஜாவை திருமணம் செய்தாலும் தங்களின் இல்லற வாழ்வை புரிதலுடனும் காதலுடனும் தொடங்கவேண்டும் என்று நினைத்தது தவறா? ஒவ்வொரு நாளும் அவளுடன் என்னை அறியாமல் இணைந்தது அவளால் தானா? திருமணத்திற்கு முன்பு காதல் செய்வது தவறில்லை ஆனால் ஓர் குழந்தையை அழிப்பது குறிப்பாக என் குழந்தையையும் அழித்துவிட்டாளே, என்ன பெண் இவள்? இத்தனை நாட்கள் அவளுக்கு துரோகம் செய்வது போல் தினம் தினம் செத்து பிழைத்ததை எல்லாம் நினைக்க நினைக்க விஜய சிவமாறனின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் பெருக ஆரம்பித்துவிட்டது.
Advertisement
இரவு முழுவதும் தூங்காது பிரம்மை பிடித்து சுவற்றை வெறித்து பார்த்தவனின் அலைபேசி ‘நானும் இங்கு தான் இருக்கிறேன்’ என்பது போல் அலறி கொண்டிருந்தது. தன் அலைபேசியின் தொடுதிரையில் ஒளிரும் ஆஷிகாவின் பெயரை கண்டு அதை இயக்கியவனிடம்
“ஹலோ, சிவா…. என்னாச்சு டா? நேத்து ஷைலஜா ஹாஸ்பிடல் வந்து ‘எங்களுக்கு இந்த குழந்தை வேண்டாம் அதை அபார்ட் பண்ணிடுன்னு’ அவ்ளோ ஈசியா சொல்லிட்டு போறா? என்னத்தான்டா நடக்குது அங்க? இப்போ அந்த சர்ரோகேட் மதர்க்கு நான் என்ன பதில் சொல்றது?” என்று ஆஷிகா கோபமாக வினவ, அவளிடம் விஜய சிவமாறன் ஏதோ கூற வருவதற்குள்
Advertisement
Advertisement
“சிவா…. சீக்கிரம் கீழ வாப்பா….” என்று விஜய திருநாவுக்கரசர் பதட்டமாக அழைக்க, அவர் குரலை கேட்டு ஆஷிகாவிடம் பிறகு பேசுகிறேன் என்று கூறிவிட்டு இல்லத்தின் கூடத்திற்கு சென்றவன் அங்கு நின்றிருந்த காவல் அதிகாரிகளை கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தான்.
விஜய சிவமாறனின் அழைப்பிற்காக ஆஷிகா காத்திருந்த நேரத்தில் ஷைலஜாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
Advertisement
“ஹலோ, சொல்லுங்க ஷைலஜா?” என்று ஆஷிகா வினவ
“உங்க ஃபிரண்ட் சிவாவுக்கு ஃபோன் பண்ணிங்களா? என்ன அமைதியா இருக்கீங்க? அப்போ நான் கேட்டது சரிதான் இல்ல? நான் தான் குழந்தையை அபார்ட் பண்ண சொல்லிட்டேன்ல? எதுக்கு மறுபடியும் மறுபடியும் அவனுக்கு ஃபோன் பண்ற? எங்களுக்கு அந்த குழந்தை வேண்டாம்னு நான் நேத்தே செல்லிட்டேன், பத்தாததுக்கு இருபது லட்ச ரூபாய்க்கு செக் வேற கொடுத்துட்டு வந்திருக்கேன், ஏற்கனவே முப்பது லட்சம் கொடுத்துட்டேன் ஞாபகம் இருக்குல்ல? பணத்துக்காக தான வாடகை தாயா வர சம்மதிச்சாங்க? இப்போவும் பணம் வாங்க கசக்குமா என்ன? மரியாதையா அவங்க கிட்ட பேசி, குழந்தையை அபார்ட் பண்ற வழியை பாரு…. இதுக்கு அப்புறம் என் கிட்டயும் சிவா கிட்டயும் இதை பத்தி பேசுறேன்னு ஃபோன் பண்ணாத…. நீங்க லீகலா பண்ற சர்ரோகேசி ட்ரீட்மென்ட் எல்லாமே இல்லீகலா நடக்குதுன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிடுவேன்….” என்று கோபமாக கூறி எச்சரித்துவிட்டு இணைப்பை துண்டித்த ஷைலஜாவின் கூற்றை கேட்டு அடுத்து என்ன செய்வதென்று அறியாது குழப்பத்தில் சுழன்றவள் ஆழினியின் நலனை கருத்தில் கொண்டு, தன் நண்பனின் நிலையை மறைத்து ‘அவர்கள் இயற்கையாகவே கருத்தறித்துவிட்டனர்’ என்று பொய்யுரைத்து அவளிடம் கருக்கலைப்பு பற்றி கூற, அதை முற்றிலுமாய் மறுத்தவள் விஜய சிவமாறனின் உயிரை தன்னுயிராய் சுமக்க தொடங்கிவிட்டாள்.
தன் அறையிலிருந்து இல்லத்தின் கூடத்திற்கு வருகை புரிந்த விஜய சிவமாறனிடம் ‘வரதட்சணை கேட்டு தன்னை விஜய சிவமாறன் கொடுமை படுத்துவதாக அவரின் மனைவி ஷைலஜா காவல் துறையில் புகார் கொடுத்திருப்பதாக’ காவல் அதிகாரி உரைத்ததை கேட்ட விஜய திருநாவுக்கரசர், பருவதம் மற்றும் செல்வி என மூவரும் அதிர்ச்சியில் நின்றிருக்க, நேற்றிரவு நிகழ்ந்ததைவிட இந்நொடி நடக்கும் இந்நிகழ்வானது அவ்வளவு ஒன்றும் தனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என்பதை போல் வலிகளுடன் சிரித்து வைத்தான் விஜய சிவமாறன்.
“சிவா, இவங்க என்னடா சொல்றாங்க? ஷைலஜா எங்கடா? எதுக்கு இவங்க உன்னை அரெஸ்ட் பண்றாங்க?” என்று விஜய திருநாவுக்கரசர் கோபமாக வினவ
“அவள் போய்ட்டா ப்பா…. அவளுக்கு என்னை பிடிக்கலையாம்….” என்று கூறியவன் அடுத்த வார்த்தை எதுவும் கூறாமல் காவல் அதிகாரிகளுடன் சென்றுவிட, இங்கு மற்ற மூவரும் கவலையுடன் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
தன் மகனை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த விஜய திருநாவுக்கரசர் நேராக ஷைலஜாவின் பெற்றோர்களின் இல்லத்திற்கு சென்றுவிட்டார். பத்மநாபன் மற்றும் ரங்கநாயகிக்கு கூட விஜய திருநாவுக்கரசர் கூறிய செய்தி அதிர்ச்சியாக தான் இருந்தது. அவர்களை அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்றவர்கள் அங்கிருந்த விஜய சிவமாறனையும் ஷைலஜாவையும் கண்டுவிட்டு என்னவென்று விசாரிக்க, அவர்களிடம் ஷைலஜா ஏதோ கூற வருவதற்குள்
“உங்க பொண்ணுக்கு குழந்தை பெத்துக்குற தகுதி இல்ல…. அவளோட இனிமேல என்னால வாழமுடியாது…. அவளை கூட்டிட்டு போயிடுங்க….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
“தம்பி, என்னப்பா சொல்ற? ‘அவளால குழந்தை பெத்துக்க முடியலனாலும் ஷைலஜா தான் என் பொண்டாட்டின்னு’ அன்னிக்கு எங்க கிட்ட சொன்னியே? அதெல்லாம் பொய்யா?” என்று பத்மநாபன் நாதழுதழுக்க வினவ, அவரை இயலாமையுடன் பார்த்துவிட்டு அவரருகில் நின்றிருந்த ஷைலஜாவை துட்சமாக பார்த்தவன்
“என் கிட்ட எதுவும் கேட்காதீங்க…. எனக்கு டிவோர்ஸ் வேணும்….” என்று விஜய சிவமாறன் முடிவாக கூறிவிட, அச்சமயத்தில் விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜா இருவரையும் காவல் அதிகாரி தனியாக அழைத்திருந்தார்.
தன் பெற்றோர்களை அவ்விடத்திலேயே இருக்க சொல்லிவிட்டு காவல் அதிகாரியை காண்பதற்காக தன்னுடன் நடந்து வருபவளிடம்
“நேத்து நீ என் கிட்ட சொன்னது எதையும் தயவுசெய்து யார் கிட்டயும் சொல்லிடாத…. நான் தாங்கிட்டேன், ஆனா உன் அப்பா அம்மாவும், என் அப்பா அம்மாவும் இதை தாங்கிக்க மாட்டாங்க…. எனக்காக நீ இதை மட்டும் பண்ணு போதும்…. உனக்கு நான் டிவோர்ஸ் கொடுக்குறேன்….” என்று தீர்க்கமாக கூறிய விஜய சிவமாறனை இமைக்காமல் பார்த்தவள் சரியென்பதை போல் தலையசைத்து வைத்தாள்.
நாட்களும் யாருக்கும் காத்திராமல் வேகமாக விரைந்தோட, சில மாதங்கள் கழித்து விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவிற்கு அவர்கள் கேட்ட விவாகரத்தும் கிடைத்துவிட்டது. தான் நினைத்தது நடந்தது என்ற சந்தோஷத்தில் ஷைலஜா தன் புது வாழ்வை வாழ தொடங்க, இங்கு விஜய சிவமாறன் மட்டுமல்லாது அவனது பெற்றோர்களும் கடந்தகால கசப்பை மறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் வாடகை தாயாய் தங்களின் குடும்பத்தின் வாரிசை சுமக்கும் பெண்ணை பற்றியும் அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தையை பற்றியும் அவர்கள் முற்றிலுமாய் மறந்தது தான் விதியின் விளையாட்டுகளில் ஒன்று போல?
கடந்தகால கசப்புகளை மறக்க எண்ணிய விஜய சிவமாறன் தன் தொழிலை விரிவுப்படுத்த இரவு பகல் பாராமல் உழைத்து அதில் பல வெற்றிகளை குவிக்க தொடங்கினான். தன் ஒரே மகனின் வாழ்வு இப்படி சிதைந்துவிட்டதே என்று பருவதமும், தன் உடன்பிறவா தம்பியின் வாழ்க்கை பாதை வேறாக மாறிவிட்டதே என்று செல்வியும் சோகத்தில் மூழ்கியிருக்க, அவர்களை விட விஜய சிவமாறனின் வாழ்வை எண்ணி அதிகம் பாதித்தது விஜய திருநாவுக்கரசர் தான்.
தன் பால்ய நண்பனின் மகள் என்ற நம்பிக்கையில் பெண்ணை பற்றி விசாரிக்காமல் தனது மகனின் வாழ்கையை அழித்துவிட்டனே என்ற கவலையில் மூழ்கிய விஜய திருநாவுக்கரசரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற தொடங்கியது. அதிக மன அழுத்தத்தால் ஒருமுறை மார்படைப்பு ஏற்பட, அதிலிருந்து தன் தந்தையை மீட்டெடுத்தவன் அவரை ஒவ்வொரு நாளும் தன் கண்ணின் இமைப்போல் காத்து வந்தான். ஆனால் சில நாட்களில் இரண்டாவது மாரடைப்பால் விஜய திருநாவுக்கரசரின் உயிர் பல போரட்டங்களுக்கு பிறகு தன் மனைவி மற்றும் மகனை விட்டு சென்றுவிட்டது. அதன் பிறகு பருவதம் முற்றிலுமாய் முடங்கிவிட, அவருக்காகவே தன் வாழ்வை வாழ முடிவெடுத்தான் விஜய சிவமாறன். கடந்தகாலத்தில் நடந்தவற்றை நினைத்து அவ்விருளில் சிக்கி தவித்து தொலைந்தவின் வாழ்வில் ஒளி வீசி, அவனது காதல் பயணத்தை தொடங்கும் வழி துணையாய் வந்தவள் தான் ஆழினி.
தன் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கலங்கி விழிகளுடன் ஒன்றுவிடாமல் ஆழினியிடம் கூறியவன்
“வாழ்க்கையில எவ்வளவோ இழந்துட்டேன், நான் சொல்லாமையே ஷைலஜா பத்தி அப்பாவும் அம்மாவும் தெரிஞ்சிக்கிட்டாங்க…. என் வாழ்க்கை இப்படியானதுக்கு காரணம் தான் தான் நினைச்சு என் அப்பா எங்களை விட்டு போயிட்டாரு…. அப்பாவோட இழப்பை என்னால சுத்தமா தாங்கிக்க முடியல, அம்மாவும் வீட்டிலேயே முடங்கிட்டாங்க…. பழசை மறக்கனும்னு எவ்வளவோ ட்ரை பண்ணுவேன், ஆனா தினம் தினம் அவளோட இருந்தது தான் எனக்கு ஞாபகம் வரும்….
புரிதலோடும் காதலோடும் வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு நினைச்சது தப்பா? ஆனா இது தப்புன்னு சொல்லி ஷைலஜா என்னை விட்டுட்டு போயிட்டா…. உன்னை மனசுல வச்சிக்கிட்டு அவளோட வாழுறது ‘என்னை நம்பி வந்த பொண்ணுக்கு செய்யுற துரோகம்னு’ நினைச்சு நினைச்சு எத்தனை நாள் துடிச்சியிருக்கேன் தெரியுமா? அந்த நிமிஷமெல்லாம் என்னையே நான் வெறுத்தேன், ‘நான் இவ்வளவு கீழ்த்தரமான ஜென்மமான்னு’ தினம் தினம் என்னை நானே காயப்படுத்திப்பேன்….
நான் பண்ண ஒரே தப்பு உன்னையும் ஆதுவையும் மறந்தது தான்…. சத்தியமா சொல்றேன் செல்லம்மா, நீதான் வாடகை தாய்னு எனக்கு தெரியாது…. ஒருவேளை ஆதவ் பிறக்குறதுக்கு முன்னாடியே அது தெரிஞ்சிருந்தா உன் வாழ்க்கையாவது நல்லாயிருக்கட்டும்னு மனச கல்லாக்கிக்கிட்டு ‘குழந்தையை அபார்ட் பண்ணிடுன்னு’ சொல்லியிருப்பேன், அதுக்கான காலம் கடந்திருந்தா அக்ரிமென்ட் போட்டப்படி நம்ம குழந்தையை உன் கிட்டயிருந்து கிடைச்ச பொக்கிஷமா நினைச்சு உன்னோட நினைப்புல நான் வாழ்ந்து சந்தோஷமா செத்து போயிருப்பேன்….” என்று விஜய சிவமாறன் கூறி முடித்த அந்நொடியே துளியும் தாமதிக்காமல் அவளவனை காற்றும் நுழைய முடியாத அளவிற்கு இறுக்கமாக அணைத்து கொண்டாள் அவனவள்.
ஆழினியின் செயலால் ஒருநொடி தன்னை மறந்தவனின் விழியோரம் கண்ணீர் துளிகள் கசிய ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் அது ஆறாய் பெருக்கெடுக்க தொடங்கிவிட்டது. நேரம் செல்ல செல்ல விஜய சிவமாறனின் அழுகையானது அதிகமாக, தன்னை அணைத்துக்கொண்டு அழும் தன்னவனின் மனதிலிருந்த துன்பங்கள் அனைத்தும் இன்றோடு கரையட்டும் என்று எண்ணியவள் அவனது முதுகை ஆதரவாக தடவிக்கொடுக்க, தன்னவளின் அணைப்பில் கரைந்தவனும் அவளை தன்னுடன் இறுக்கமாக அணைத்து கொண்டான்.
சிறிது நேரத்தில் விஜய சிவமாறனிடமிருந்து மனமேயில்லாமல் பிரிந்தவள் அவனது கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறு
“எதுக்கு அழுதுட்டு இருக்க? இனிமேல் என் மாறன் எதுக்காகவும் அழவே கூடாது…. உன் காதல் நிஜம், அதுனால தான் எத்தனையோ கஷ்ட்டத்துக்கு அப்புறம் நானும் ஆதவும் உனக்கு கிடைச்சிருக்ககோம், அதைவிட்டுட்டு எதுக்கு பழசை பத்தி நினைக்குற? ஆதவ் மட்டும் என் வாழ்க்கைக்கு போதும்னு நினைச்சேன், ஆனா என் வாழ்க்கையில நான் தேடாம கிடைச்ச வரம் நீ…. எனக்கு கிடைச்ச பொக்கிஷமா உன்னை நான் பார்த்துப்பேன்…. ஐ லவ் யூ மாறா….” என்று கூறி தன்னவனின் நெற்றியில் தனது முதல் முத்திரையை அழுத்தமாக பதித்திருந்தாள் ஆழினி.
ஆழினியின் முதல் முத்தத்தில் குறிப்பாக காதலை கூறிய நொடியில் தன்னை மறந்தவன்
“ஐ லவ் யூ செல்லம்மா…. லவ் யூ மோர்….” என்று விஜய சிவமாறன் அழுகையுடன் கூறியவாறு அவனவளின் பிறை நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து மென்மையாக சிரித்து வைத்தான்.
தன்னவனின் சிரிப்பில் தொலைந்தவள் அவளவனை அறைக்குள் அழைத்து சென்று ஆதவ் கிருஷ்ணனின் அருகில் படுக்க வைத்து அவனருகில் அமர்ந்து அவன் தலை கோதிய மறுநொடியே தன்னவளின் மடியில் படுத்தவன் அவளை இடையோடு அணைத்து கொண்டான்.
விஜய சிவமாறனின் செயலில் அதிர்ந்தவளின் மனமும் உடலும் சிலிர்க்க ஆரம்பிக்க, அவளுள் உண்டான மாற்றங்களை புறந்தள்ளியவள் தன்னவனின் தலையை ஆதுர்யமாய் கோதி கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் விஜய சிவமாறனும் வெகு காலத்திற்கு பிறகு தன்னை மறந்து நித்திரையில் மூழ்கிவிட, அவனை தன்னுள் அணைத்தவாறு ஆழினியும் உறங்கியிருந்தாள்.
இரவின் இருளை நீக்கியவாறு தன் செங்கதிர்களின் ஒளியினை பூமகள் மீது பரிசளித்து இரம்மியமாக ஒளி வீசி அந்நாளின் விடியலை அழகாய் தொடங்கி வைத்தார் சூரிய தேவன். தன் உறக்கத்திலிருந்து துயில் கலைந்த ஆழினியின் கண்கள் தன் இடது கரத்தில் தலைவைத்து மார்புக்குள் முகம் புதைத்து குழந்தை போல் உறங்கும் விஜய சிவமாறனை கண்டு பிரகாசமடைந்தது.
வெகுநாட்களுக்கு பிறகு நிம்மதியாக துயில் கொள்பவனின் முகத்தை இமைக்காமல் இரசித்தவள் அவனின் கன்னத்தில் முத்தம் பதித்து அவனிடமிருந்து விலகியவாறு தலையணையில் படுக்க வைத்துவிட்டு தன்னருகில் உறங்கும் ஆதவ் கிருஷ்ணனின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்துவிட்டு இல்லத்தின் கூடத்திற்கு சென்ற ஆழினியின் வருகைக்காக இன்பன், பருவதம்மா மற்றும் செல்வி அக்கா என மூவரும் காத்திருந்தனர். நேற்றிரவு ஆதவ் கிருஷ்ணன் பிறந்தநாள் விழாவின்போது ஷைலஜாவின் வருகையை கண்ட நொடிமுதல் ஆழினியின் முகமாற்றத்தையும் அவளது கோபத்தையும் கண்டு இரவு முழுவதும் தூங்காது மூவரும் பயத்தில் இந்நொடி வரை திளைத்திருக்கின்றனர்.
அவர்களின் நிலையை அறியாது பூஜை அறைக்குள் சென்று விஜய சிவமாறனை வாழ்வில் தந்தமைக்கு கடவுளிடம் நன்றி கூறி மனமார பிராத்தித்து வெளியில் வந்தவளை பருவதம்மா அழைத்திருந்தார். தன்னெதிரில் நின்றிருந்த ஆழினியை இயலாமையுடன் பார்த்தவர்
“ஆழினிம்மா, என் பையன் மேலயும், எங்க மேலயும் கோபமா இருக்கியா? ஷைலஜாவை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் சிவாவை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு நான் நினைச்சேன்…. ஆனா சிவாவோட வாழ்க்கையில நடந்ததெதுவும் உனக்கு தெரியாதுன்னு இன்பன் சொல்லி தான் எங்களுக்கு தெரியும்…. உன் கிட்ட முன்னாடியே இதை சொல்லியிருக்கனும் நாங்க பண்ணது தப்பு தான்…. எங்களை நீ….” என்று பருவதம்மா முழுமையாக கூறி முடிப்பதற்குள்
“நீங்க பண்ணது தப்பும்மா, மன்னிக்க முடியாத அளவுக்கு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க….” என்று ஆழினி கோபமாக கூறியதை கேட்டு பருவதம்மா மட்டுமல்லாது மற்ற இருவரும் ஆழினியை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தனர்.
மூவரின் முகத்தில் தோன்றியிருக்கும் மாற்றத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் வெளியில் பொய்யாக முறைத்தவாறு
“உண்மையை தான் சொல்றேன், நீங்க பண்ணது பெரிய தப்பு…. உங்களுக்கு கண்டிப்பா நான் தண்டனை கொடுப்பேன், என்ன தெரியுமா? ஆதவ் மாதிரியே இன்னும் ரெண்டு புள்ளைங்களை பெத்துக்கொடுத்து அவங்க பின்னாடியே உங்களை ஓட வைக்கல, நான் விஜய சிவமாறனோட பொண்டாட்டி ஆழினி இல்ல….” என்று கூறிய ஆழினியின் கூற்றை புரிந்து கொள்ளவே அங்கிருந்தவர்களுக்கு சிறிது நேரம் தேவைப்பட, அவள் கூறியதை கேட்டவாறு தன் மகனை கரங்களில் ஏந்திக்கொண்டு படிகளில் இறங்கி வந்த விஜய சிவமாறனின் இதழ்கள் புன்னகையில் அழகாய் விரிந்தது.
ஆழினி கூறிய கூற்றின் அர்த்தத்தை புரிந்து கொண்டவர்களின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க, தன் தமக்கையின் மனமாற்றத்தை கண்டு நெகிழ்ந்த இன்பனோ அவளை பின்னிருந்து அணைந்துக்கொண்டான்.
“தாங்க்ஸ் அக்கா…. நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன் தெரியுமா? மாமா உன்னை லவ் பண்ணது எனக்கு முன்னாடியே தெரியும், ஆனா அவர் சொல்லி தான் நீ தெரிஞ்சிக்கனும்னு நான் நினைச்சேன் அதுனால தான் உன் கிட்ட நான் மாமா பத்தின உண்மைகள் எல்லாத்தையும் மறைச்சிட்டேன், சாரி….” என்று இன்பன் கலங்கிய விழிகளுடன் கூற, அவனது தலைமுடியை கலைத்துவிட்டு சிரித்த ஆழினியின் அருகில் கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்தவாறு ஓடி வந்தான் சுருள் முடி அழகன் ஆதவ் கிருஷ்ணன்.
தன் மகனை கண்டு சிரித்தவள் அவனை தன் கரங்களில் ஏந்தியவாறு தன்னெதிரில் நின்றிருக்கும் விஜய சிவமாறனை இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க, அவனும் ஆழினியை தான் தன்னை மறந்து இரசித்து கொண்டிருந்தான். இவ்விருவரின் பார்வை பரிமாற்றத்தை கண்டும் காணாததை போலிருந்த மற்றவர்கள் தங்களின் வேலையை பார்க்க சென்றுவிட, ஆழினியின் கைகளில் தவழ்ந்தவன் தன் அன்னையின் தாடையை பற்றி தன்னை பார்க்க செய்த பின்பு தான் தன்னிலை அடைந்தாள் ஆழினி.
தன் நிலையை எண்ணி மனதிற்குள் சிரித்தவளிடம்
“அம்மா, இன்னிக்கு அப்பா என்னை அனிமல்ஸ் பார்க்குக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு…. நீயும் எங்களோட வாம்மா, அங்க போய் நிறைய அனிமல்ஸ் பார்க்கலாம்…. லயன், டைகர், எலிஃபேன்ட், ஜிராஃபி கூட இருக்காம் தெரியுமா? பன்னு, நீயும் எங்களோட வரியா? அனிமல்ஸ் பார்த்துட்டு வரலாம்?” என்று ஆதவ் கிருஷ்ணன் வினவ, அவனிடம் மறுப்பாக தலையசைத்தவன்
“எனக்கு நிறையா வேலையிருக்கு பப்பாளி, நான் வரல…. நீ உன் அப்பா அம்மாவோட போயிட்டு வா, நாம எல்லாரும் இன்னொரு நாள் போகலாம்….” என்று இன்பன் கூறியதை கேட்டு சிரித்தவன்
“என்ன வேலை பன்னு? வேணி அத்தையோட லவ்ஸ் தான பண்ணப்போற?” என்று ஆதவ் கிருஷ்ணன் நக்கலாக கூறியதை கேட்டு அவனை முறைத்த இன்பன் கூச்சத்தில் நெளிய, அவர்களின் சம்பாஷனைகளை கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.
சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தன் மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு வந்திருந்தான் விஜய சிவமாறன். பல வகையான விலங்குகள், பறவைகள், நீரில் வாழும் உயிரினங்கள் என அனைத்தையும் கண்டு உற்சாகமடையும் ஆதவ் கிருஷ்ணனின் சிரிப்பில் தன்னை தொலைத்தவர்கள் குழந்தையாய் மாறி அவனுடன் ஒன்றிவிட்டனர்.
இங்கும் அங்குமென வெகுநேரம் சுற்றி களைத்தவர்கள் ஓர் சிற்றுண்டி கடையில் இளைப்பாற அமர, ஆழினியும் ஆதவ் கிருஷ்ணனும் உண்பதற்கு கைநிறைய தின்பண்டங்கள் வாங்கி கொண்டு வரும் விஜய சிவமாறனை கண்டு அவனருகில் ஓடியவள்
“எதுக்கு இவ்வளவு வாங்கிட்டு வரீங்க? என்னை கூப்பிட்டு இருக்கலாமே? எல்லாத்தையும் ஒரே ஆளா எப்படி தூக்கிட்டு வர முடியும்?” என்று கூறியவாறு அவன் கைகளிலிருந்த சிற்றுண்டிகளை பெற்றுக்கொண்டு அவள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்றிருந்தாள்.
தன்னவனுடன் வந்தவள் ஆதவ் கிருஷ்ணனின் அருகில் அமர்ந்து அவனுடன் பேசி கொண்டிருந்த ஷைலஜாவை கண்டு அதிர்ச்சியில் அங்கேயே சிலை போல் ஆழினி நின்றிருக்க, அவ்விடத்தில் ஷைலஜாவை கண்ட அந்நொடியிலேயே கோபத்தின் மறு உருவமாய் மாறியிருந்தான் விஜய சிவமாறன்.
ஒளி வீசும்….
error: Content is protected !!