Skip to content
Post Views: 155
ஆறு மாதங்களுக்கு பிறகு….
ஆதிலட்சுமி சந்தான கிருஷ்ணன் இல்லம் என்று சிறிய பலகையை சுவற்றில் தாங்கியிருந்த இல்லமானது விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று விஜய சிவமாறன் கூறியது போல் ஆழினியும் இன்பனும் இணைந்து அவர்கள் இத்தனை காலமாய் சேர்த்து வைத்த பணத்தில் அவ்விருவரின் தாய் தந்தையின் கனவை நினைவாக்கியிருந்தனர்.
Advertisement
இன்று அவர்கள் இல்லத்தின் கிரகப்பிரவேசம் விழா நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் இன்பன் மற்றும் நீலவேணியின் திருமணமும் இதே வீட்டில தான் நடக்கவிருக்கிறது. தங்களின் பெற்றோர்களின் கனவை நிஜமாக்கிய சந்தோஷத்தில் திளைத்திருந்த ஆழினியும் இன்பனும் அவர்களின் நினைவில் கவலை அடையும் நொடிகளிலெல்லாம் விஜய சிவமாறனும் நீலவேணியும் தங்களின் துணையை ஆதரவாக தாங்கி பிடித்தனர். இதில் முக்கியமாய் அவர்களை சிரிக்க வைப்பதில் குறும்புக்கார கண்ணன் ஆதவ் கிருஷ்ணனுக்கு தான் பெரிய பங்குண்டு.
இந்த ஆறு மாதத்தில் விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் இடையில் புரிதலும் அதைவிட அதிகமாய் காதலும் அழகாக மலர்ந்திருந்தது. அன்று ஷைலஜாவின் பிரிவில் மனமுடைந்து நின்ற விஜய சிவமாறனை தேற்றியவள் அவனருகில் நின்றிருந்த பத்மநாபன் மற்றும் ரங்கநாயகிக்கு மகளாய் மாறி அவர்களையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டாள். ஷைலஜாவின் கணவனாய் அனைத்து பொறுப்புகளையும் விஜய சிவமாறனை செய்யுமாறு கூறியவள், அவனுக்கு உறுதுணையாகவும் நின்றிருந்தாள்.
Advertisement
Advertisement
நாட்களும் அதன் போக்கில் கரைய தொடங்க, இதோ இன்று சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியின் கனவு இல்லத்தின் புதுமனை புகுவிழா சிறப்பாக நிறைவுபெற்றவிட்டது. அதனை தொடர்ந்து இன்பன் மற்றும் நீலவேணியின் திருமண வேலைகளும் அவர்களை சூழ்ந்து கொண்டது. இன்பனின் மாமனாய் அவனது கல்யாண பொறுப்பில் பம்பரமாய் சுற்றியவன் இரவு இல்லம் வந்து சேரும்போது நேரம் பத்தை கடந்திருந்தது. தன் தந்தையை கண்ட உற்சாகத்தில் ஆதவ் கிருஷ்ணன் அவன் கரங்களில் ஏறிக் கொள்ள, தன் மகனின் கன்னத்தில் முத்தம் வைத்தவன்
“ஆது கண்ணா, அப்பாவுக்கு குடிக்க தண்ணி எடுத்துட்டு வரீங்களா?” என்று வினவிய தன் தந்தையிடம் சரியென்று கூறி தலையசைத்த சுருள் முடி அழகன் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட, தன் மகனின் தலை மறையும் வரை காத்திருந்தவன் தன் மனையாளை பின்னிருந்து இறுக்கமாக அணைத்திருந்தான் ஆழினியின் விஜய சிவமாறன்.
Advertisement
தன்னவனின் அணைப்பில் மெழுகாய் கரைந்தவளின் இதழோரம் வெட்க புன்னகை மலர ஆரம்பிக்க, அதை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவளின் தோள்களில் தன் முகத்தை புதைத்தவன்
“ஓய் செல்லம்மா…. என்ன டி, புருஷன் வந்திருக்கேன் கொஞ்சமாவது அவனை கண்டுக்குறியா? அதை விட்டுட்டு துணி மடிச்சு வச்சிட்டு இருக்க?” என்று விஜய சிவமாறன் இரகசியமான குரலில் வினவ, அவனை தன்னிடமிருந்து வேகமாக பிரித்தவள்
“காலையில பத்து மணிக்கு வீட்டை விட்டு போனவன் ராத்திரி பத்தரைக்கு வந்திருக்க? அதுவும் இருபது தடவைக்கு மேல நான் ஃபோன் பண்ணி கூப்பிடதுனால…. பொண்டாட்டியும் புள்ளையும் வீட்டுல காத்திருப்பாங்கன்னு எங்கேயாவது….” என்று ஆழினி ஏதோ கூற வருவதற்குள் அவளின் இதழை தன் இதழ் கொண்டு சிறை செய்திருந்தான் அவளவன்.
இருவரின் இதழ் முத்தமும் வெகுநேரமாய் நீடித்திருக்க, சிறிது நேரம் கழித்து
“அப்பா….” என்று சத்தமாக ஒலித்த ஆதவ் கிருஷ்ணனின் குரல் கேட்டு விஜய சிவமாறனும் ஆழினியும் வேகமாக விலகியிருந்தனர்.
தன் தந்தையின் கரங்களில் தண்ணீர் கொண்டு வந்த குவலையை அளித்தவன் தன் பொம்மைகளுடன் விளையாட ஆரம்பிக்க, தன்னெதிரில் நின்று தன்னை விழியால் களவு செய்யும் தன்னவனை தீயாய் முறைத்து கொண்டிருந்தாள் ஆழினி.
“வர வர உன் சேட்டை அதிகமாகுது…. இரு உன்னை வச்சிக்குறேன்….” என்று ஆழினி அடிக்குரலில் மிரட்ட, அவளை கண்டு மந்தகாசமாக புன்னகைத்தவன்
“ஆது கண்ணா, இந்த தண்ணி டம்ப்ளரை போய் வச்சிட்டு வரீங்களா?” என்று விஜய சிவமாறன் ஆழினியை கண்டு கண்ணடித்துவிட்டு வினவ, அவன் அருகில் ஆதவ் கிருஷ்ணன் வருவதற்குள் தன் மகனை கரங்களில் ஏந்தியவள்
“நீங்களே போய் வச்சிட்டு வாங்க…. ஆது டைம் ஆச்சு, நீ வா நம்ம தூங்கலாம்….” என்று கூறிய ஆழினி தன்னவனை முறைத்துவிட்டு மெத்தையில் அமர்ந்து ஆதவ் கிருஷ்ணனை தன் மடியில் படுக்க வைத்து தலை கோத, தன் இரவு உடைக்கு மாறிய விஜய சிவமாறனும் ஆழினியின் அருகில் நெருங்கியவாறு அமர்ந்துகொண்டான்.
“அம்மா…. பாட்டு பாடுங்க…. தூக்கம் வருது….” என்று ஆதவ் கிருஷ்ணன் தூக்க கலக்கத்தில் கூறிவிட்டு தன் கண்களை மூடி கொள்ள, அவனின் தலை முடியை கோதியவாறு தன்னவனின் மார்பில் சாய்ந்தவள் இடது புறத்தில் ‘செல்லம்மா’ என்று தன் பெயரை பச்சை குத்தியிருக்கும் அவனது நெஞ்சில் மென்மையாக இதழ் பதித்து தன் பாடலை பாட தொடங்கியிருந்தாள்.
மாயவா தூயவா மலர் சூட வா, மழையாகி எனில் வீழ வா…
மாதவா யாதவா குழல் ஊதவா, இதழோடு இசையாக வா..
உன் மார்பே என் மாகானம், உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே, என் நாவா.. உன் நாவா.. கண்ணா வா..
மாயவா தூயவா மலர் சூட வா, மழையாகி எனில் வீழ வா….
மூன்று நாட்கள் மூன்று நிமிடங்கள் போல் சட்டென்று கரைந்துவிட, இன்பன் மற்றும் நீலவேணியின் திருமணமும் ஆரம்பித்திருந்தது. சிவப்பு நிறத்தில் சட்டையும் வெள்ளை நிற பட்டு வேட்டியும் அணிந்திருந்த விஜய சிவமாறன் அதே நிறத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்த ஆதவ் கிருஷ்ணனை கரங்களில் ஏந்தியவாறு சந்தன நிறத்தில் சிவப்பு நிற பாடர் வைத்த பட்டு புடவையில் அழகோவியமாய் தன்னருகில் நின்றிருந்த ஆழினியை மணிக்கொருமுறை இரசித்து கொண்டிருந்தான்.
வெள்ளை நிற பட்டு சட்டை மற்றும் பட்டு வேட்டி அணிந்து மணமகனுக்கே உரித்தான கம்பீரத்துடனும் அழகான குறுநகையுடனும் மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை பிழையில்லாமல் கூறி கொண்டிருந்த இன்பனின் அருகில் அரக்கு நிற கூரை புடவை அணிந்து மணமகளுக்கே உரித்தான நாணம் கலந்த புன்னகையுடன் தேவதையாய் அவனருகில் அமர்ந்திருந்தாள் நீலவேணி.
மங்கள வாத்தியங்கள் முழங்க பெரியோர்களின் ஆசியுடனும் நண்பர்களின் கரகோஷத்துடனும் தன்னவளின் கழுத்தில் மஞ்சள் நாணினை அணிவித்து அவளவனான் நீலவேணியின் இன்பன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, அறுசுவை உணவினை உண்டு முடித்து, பல்வேறு கதைகள் பேசி கலாட்டா செய்து இன்பன் மற்றும் நீலவேணியின் திருமணமானது இனிதாய் நிறைவுப்பெற்றது.
திருமணம் முடிந்து ஒருவாரம் கழித்து புதுமண தம்பதிகளான இன்பன் மற்றும் நீலவேணியை அழைத்து கொண்டு விஜய சிவமாறனும் ஆழினியும் தேனிலவிற்காக மால்தீவ்ஸ் நாட்டிற்கு புறப்பட்டனர். இந்த பயணத்தில் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது ஆதவ் கிருஷ்ணன் தான். முதன்முதலாய் விமானத்தில் பறக்க போகிறோம் என்ற குதூகளிப்பில் மகிழ்ச்சியாக வளம் வந்து கொண்டிருந்தவனின் கன்னக்குழி சிரிப்பில் விமானத்திலிருக்கும் பணிப்பெண்கள் அனைவரும் மயங்கி அவனுக்கு முத்தமிட்டு சாக்லேட் கொடுக்க, அதை கண்டு விஜய சிவமாறன் மற்றும் இன்பனின் வயிறானது எரிவதை கண்டு ஆழினியும் நீலவேணியும் தங்களின் கணவன்மார்களின் வயிற்றை மட்டுமல்லாது அவர்களை பார்வையாலே பஸ்பமாக்கி கொண்டிருந்தனர்.
தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் கோபமே உருவமாய் நுழையும் நீலவேணியின் பின்னே வந்தவன்
“வேணிம்மா, கோபப்படாதம்மா…. நான் சும்மா தான் அவங்களை பார்த்தேன்…. நான் ஒன்னும்….” என்று இன்பன் ஏதோ கூற வருவதற்குள் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தவள் தன்னவனின் தோள்களை கிள்ளியவாறு
“இனிமேல் என்னை தவிர்த்து வேறொரு பொண்ணை பார்ப்பியா?” என்று நீலவேணி வினவ, அவள் ஏற்படுத்திய வலியில் துடித்தவன்
“ஆஆ…. ஐயோ…. பார்ப்பேன் பார்ப்பேன்….”
“எதே?”
“ஐயையோ…. பார்க்க மாட்டேன் பார்க்க மாட்டேன்…. சத்தியமா பார்க்க மாட்டேன் டி…. கிள்ளுறதை நிறுத்து வேணிம்மா, வலி தாங்க முடியல….”
“அது…. அந்த பயம் இருக்கட்டும்….” என்று கூறியவாறு தன் கரங்களை விடுத்தவளுக்கு தண்டனை அளிக்கும் விதமாய் தன்னவளின் இதழை சிறை செய்திருந்தான் நீலவேணியின் இன்பன்.
தன் தோள்களில் உறங்கும் ஆதவ் கிருஷ்ணனை அறையிலிருந்த மெத்தையில் படுக்க வைத்துவிட்டு தன் மனைவியின் அருகில் சென்ற விஜய சிவமாறனை தன் பார்வையாலேயே பொசுக்கி வைத்தாள் ஆழினி. தன்னவளின் செயலில் மனதிற்குள் சிரித்தவன் அவளை பின்னிருந்து தன்னுடன் இறுக்கமாக அணைத்தவாறு
“செல்லம்மா….” என்று காதுமடலில் இரகசியம் பேசும் தன்னவனின் குரலில் எப்பொழுதும் போல் தன்னை தொலைத்தவள் அவனுள் முற்றிலுமாய் மூழ்கிவிட்டாள்.
அவளவனோடு இலயித்திருந்தவளை அதிர்ச்சியளிக்கும் விதமாய் தன்னவளை தன் இரு கரங்களில் ஏந்திக்கொண்டான் விஜய சிவமாறன். அவனின் செயலில் அதிர்ந்தவள்
“மாறா….” என்று உள்சென்ற குரலில் அழைத்தவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டியவன் அறையின் உள்ளே சிறியதாய் அமைத்திருந்த அறைக்குள் அழைத்து (தூக்கி) சென்றான்.
தன்னவனின் கரங்களிலும் காதலிலும் சிக்குண்டு இருந்தவளின் கண்கள் இரண்டும் அவன் அழைத்து வந்த அறையை கண்டதும் வியப்பில் பெரிதாய் வியந்தது. அறையின் நடுவில் வட்ட வடிவத்தில் கட்டில் அமைத்து அதன் மேல் இதய வடிவில் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க, அறையை சுற்றிலும் சிவப்பு நிற இதய வடிவ பலூன்களும், தரையை சுற்றிலும் சிவப்பு நிற ரோஜா இதழ்களால் நிறைந்திருந்தது.
அறையை கண்டு வெட்கத்தில் முகம் சிவந்தவள் அவளவனின் நெஞ்சுக்குள் முகம் புதைத்து கொள்ள, அவளது வெட்கத்தை இரசித்தவன் தன்னவளை அறையிலிருந்த மெத்தையில் அமரவைத்து அவளருகில் அமர்ந்து கொண்டான்.
தன்னருகில் அமர்ந்திருக்கும் விஜய சிவமாறனை இமைக்காமல் பார்த்தவளின் கண்களில் முத்தம் பதித்தவன்
“நீ எனக்காக பிறந்தவ செல்லம்மா…. எத்தனையோ கஷ்ட்டத்துக்கு அப்புறம் என் கைக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ…. உன்னை எனக்குள்ள பத்திரமா வச்சு பாதுக்காக்கனும், என் உயிருள்ளவரை உன்னை பத்திரமா பார்த்துக்கனுனு ஆசைப்படுறேன்….” என்று கூறியவாறு அவளது கன்னங்களை தன் இரு கரங்களில் ஏந்தியவன்
“எனக்கு நீ வேணும் செல்லம்மா…. எல்லாமாவும் வேணும்…. தருவியா?” என்று விஜய சிவமாறன் காதலுடன் வினவிய அந்நொடியே அவன் இதழை தன் இதழ் கொண்டு அணைத்தவள் அவளின் சம்மதத்தை கூறாமல் கூறியிருந்தாள். அவளது அந்த மௌனமான செய்கையே, அவளின் முழு சம்மதத்தையும் அவனுக்கு உணர்த்தியிருந்தது.
அந்த இனிய தருணத்தைத் தொடர்ந்து, விஜய சிவமாறனும் ஆழினியும் தங்களின் இல்லற வாழ்வின் புதிய அத்தியாயத்தை, காதலை அடித்தளமாகவும் புரிதலைத் தூணாகவும் கொண்டு, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தொடங்கியிருந்தனர்.
ஒளி வீசும்….
error: Content is protected !!