Skip to content
Post Views: 1,241
அத்தியாயம் 16
சமீப காலமாக அக்கா அடிக்கடி மயங்கி விழுவதை உணர்ந்து பயத்தோடு மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள் அமிர்தா. இரத்தப் பரிசோனையில் நீலாவின் கர்ப்பம் உறுதி ஆனது. இரட்டைக் குழந்தைகள் கிட்டத்தட்ட அறுபது நாட்கள் என்று குறித்துக்கொடுத்தார் மருத்துவர். அவள் பாதிக்கப்பட்டு நாற்பத்தியிரண்டு நாட்கள் தான் ஆகிறது என்னும் போது ஊட்டி கிளம்பும் போதே அக்கா கர்ப்பமாக தான் இருந்திருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள். கூடுதலாக எதற்காக அக்கா அந்தக் கயவர்களிடம் அதீத எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதை இந்தக் கணத்தில் உணர்ந்தவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.
மருத்துவரிடம் அக்காவுக்கு நடந்ததை பகிர்ந்துகொண்டு குழந்தைக்கு எதுவும் ஆபத்தா என விசாரித்தாள். மருத்துவரும் ஒருமுறைக்கு இருமுறை பரிசோதித்து, “உங்க அக்கா அன்லக்கியா இருந்தாலும் அவங்க குழந்தைங்க லக்கியா தான் இருந்திருக்காங்க. பிறப்பதற்கு முன்னாடியே ஒரு பெரிய கொடூரத்தில் இருந்து தப்பிச்சு வந்திருக்காங்க.” என்றார்.
“அன்னைக்கு அக்கா ஹாஸ்பிடலில் இருந்த நேரம் எல்லா டெஸ்ட்டும் எடுத்தாங்களே அப்பவே அக்கா கர்ப்பம் னு ஏன் தெரியல.” என தன் சந்தேகத்தை முன்வைக்க, “கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் எப்ப எல்லாம் சின்சியரா பண்ணி இருக்காங்க. எல்லாம் மேம்போக்கா தானே நடக்கும். போலீஸ் கு கொடுக்க வேண்டிய ரிப்போர்ட் மட்டும் தான் அவங்க பார்த்து பார்த்து ரெடி பண்ணுவாங்க. மத்தது எல்லாம் பெருசா கண்டுக்க மாட்டாங்க.” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.
Advertisement
தனக்குள் குழந்தைகள் உருவாகி இருப்பதை உணர்ந்திருந்தாளோ என்னவோ நீலா இப்போதெல்லாம் தங்கைக்கு அதிக தொல்லை கொடுக்காமல் அமைதியாக இருந்தாள்.
இரண்டு முழு நாட்கள் இந்த விஷயத்தை மோகனனுக்கு தெரிவிக்கலாமா வேண்டாமா என யோசித்து காலத்தைக் கடத்தி இருந்தாள் அமிர்தா. அவளுக்கு தங்களை கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்தவர்களிடம் போய் நிற்கவும் பிடிக்கவில்லை. அதே சமயத்தில் அவளுக்குள் இருந்த நேர்மையான மனது குழந்தையின் வரவைப் பற்றி அவர்களின் தந்தைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் என்று எடுத்துரைத்தது.
கூடுதலாக தன் அக்கா எதற்காக தனக்கு நடந்த கொடுமையை எதிர்க்காமல் சகித்துக்கொண்டாள் என்பதைச் சொன்னால் அவர்களுக்கு புரியலாம். அக்காவின் வாழ்க்கைக்காவது ஒரு விடிவு கிடைக்கும் என்று யோசித்தாள்.
Advertisement
அவள் மனதில் அவளுக்கும், கேசிக்கும் இடையே இருந்த காதல் என்றோ காணாமல் போய் இருந்தது. முழுக்க முழுக்க அக்காவுக்காக தான் யோசித்தாள்.
Advertisement
இன்னும் இரண்டு நாளில் எலும்புமுறிவு சிகிச்சை, மனநல சிகிச்சை, மற்ற காயங்களுக்கான சிகிச்சை என அனைத்தையும் முடித்து மோகனன் இல்லம் திரும்பப்போகிறான் என்பதால் பெங்களூரில் அவர்களுக்காக பார்த்திருக்கும் புது வீட்டிற்கு கிளம்புவதற்காக பொருட்கள் அனைத்தையும் ஏற்றிக்கொண்டிருந்தான் கேசி. துணையாக பைரவன் இருந்தார். பைரவி மகனோடு பெங்களூர் மருத்துவமனையில் இருந்தார்.
அமிர்தா இனி தனக்கு இல்லை என்கிற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கனத்த மனதோடு வேலைகளைச் செய்து கொண்டிருந்தவன், தன்னைத் தேடி மீண்டும் ஒருமுறை அமிர்தா வந்திருக்கவும் நின்ற இடத்தில் அப்படியே நின்றுவிட்டான்.
அமிர்தாவைப் பார்த்த பைரவனுக்கு அப்படியொரு கோபம். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மோகனனுக்கு கீரவாணியைப் பேசி முடித்திருந்தார். விவாகரத்து ஆகவில்லையே, நீலாவோ அமிர்தாவோ பிரச்சனை செய்தால் என்று பைரவி தயங்கியபோது கூட, “அந்தப் பொண்ணு புத்தி சுவாதீனம் இல்லாம இருக்கு. அவளைத் தாண்டி அவளோட தங்கச்சி ஏதாவது பிரச்சனை பண்ணா சமாளிக்க வேண்டிய விதத்தில் நாம சமாளிச்சுக்கலாம். ஆனா எந்தக் காரணத்துக்காகவும் மாப்பிள்ளைக்கு அவங்க யாரைப் பத்தியும் தெரிய விடக்கூடாது.” என்று தீர்க்கமாக உரைத்திருந்தார்.
Advertisement
மோகனன் இல்லை என்று கடந்த ஒரு வருட காலமாக மகள் பட்ட பாட்டை அருகே இருந்து பார்த்ததால் தானோ என்னவோ இந்த முறை மகளைத் தவிர வேறு யாருக்கும் அவர் பரிதாபம் கொள்ளவில்லை. தன் திட்டங்கள் எல்லாவற்றையும் கெடுப்பதற்காகவே இப்போது அமிர்தா வந்திருப்பது போன்ற தோரணையில் கோபமாய் அவள் முன்னே வந்தார்.
“எதுக்காக இங்க வந்த?” என்க, “நான் என் அக்காவோட கொழுந்தனார்கிட்ட பேசணும்.” நெஞ்சை நிமிர்த்திச்சொன்னாள்.
கேசி, சாரு என்று கொஞ்சியவள் அக்காவின்கொழுந்தன் என்று வேற்றுமையாக அழைப்பதிலே அவள் தன்னை விட்டு வெகுதொலைவு செல்ல ஆரம்பித்து விட்டாள் என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு வலித்தது. ஆனாலும் சமாளித்தபடி அவன் அருகே வந்தான்.
“என் அக்கா கர்ப்பமா இருக்கா? இரட்டைக் குழந்தைங்க.” நேரடியாக விஷயத்திற்கு வர, தலைக்குள் சூறாவளி உண்டானது போல் கிறுகிறுத்தது கேசிக்கு.
அவன் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பு, “அதை எதுக்கு மா எங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்க?” என்றது சாட்சாத் பைரவன் தான். கேள்விப்பட்ட விஷயத்தால் சற்றே தடுமாறினார் தான் என்றாலும் விரைவில் சமாளித்துக்கொண்டார்.
“இந்த வீட்டு வாரிசைப் பத்தி இங்க தானே சொல்லணும்.” பைரவனின் வக்கிர வார்தைகைள் புரியாமல் அமைதியாகவே பேசினாள் அமிர்தா.
“உன் அக்கா வயித்தில் இருக்கும் குழந்தைங்க இந்த வீட்டு வாரிசு தான்னு என்னம்மா நிச்சயம்?” என்க, இந்தக் கேள்வியில் கேசியே ஆடித்தான் போனான்.
“ஏய்” என்கிற அதட்டலோடு அமிர்தா பைரவனை நெருங்க, “உன் அக்காவுக்கு நடந்தது ஊருக்கே தெரியும். அப்படிப் பார்த்தா யாருக்கா இருந்தாலும் இந்த சந்தேகம் வரத்தான் செய்யும்.” என்றார் பைரவன்.
இது அநாகரிகக் கேள்வி என்றாலும் இதற்கு பதில் சொல்வது தான் சரி என்று தோன்ற, “குழந்தைங்களுக்கு இரண்டு மாசம். சம்பவம் நடந்து நாற்பது நாள் தானே ஆகுது.” எங்கோ பார்த்தபடி சொன்னாள். இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டுமா என்று மனம் தவியாய் தவித்தது. ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நிர்பந்தம் புரிய பல்லைக் கடித்தபடி அமைதியாக நின்றாள்.
“நீ உண்மையைத் தான் சொல்றன்னு நான் எப்படி நம்புறது?” பைரவன் மீண்டும் சொல்ல, “மாமா போதும். இன்னொரு வார்த்தை அவங்களைப் பத்தி தப்பா பேசுனீங்க, அப்புறம் நல்லா இருக்காது.” என்று கத்தி இருந்தான் கேசி.
“தம்பி நான் தப்பா எதுவா சொல்லல. யாருக்கா இருந்தாலும் சந்தேகம் வரும் தானே. மோகனன் தம்பிக்கும், என் பொண்ணு கீரவாணிக்கும் கல்யாணம் பண்ண நாம முடிவு பண்ணதை தெரிஞ்சுக்கிட்டு இப்படி பொய் சொல்லக் கூட வாய்ப்பு இருக்கு இல்லையா?” என போகிற போக்கில் திருமண செய்தியை அமிர்தாவின் காதில் போட்டார் பைரவன்.
உள்ளத்தோடு சேர்த்து கேசியின் மீதான கடைசி துளி நம்பிக்கையும் சுக்கல் சுக்கலாக நொருங்கியது அமிர்தாவுக்கு. இதற்கு மேலும் இந்த வீட்டில் தன் அக்காவுக்கு நீதி கிடைக்காது என்பது புரிய, மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு முன்பு வந்து நின்று அவள் பாதையை மறைத்த கேசி, “குழந்தைங்களை என்ன பண்ணப் போற அமிர்தா?” என்றான். அவன் கண்கள் கலங்கி இருந்தது. அண்ணன் குழந்தைகள் என்கிற பாசமா, இல்லை நீலாவின் மீதான பரிதாபமா இல்லை குற்றவுணர்வா என புரியாமல் போனாலும் ஏதோ ஒரு உணர்வு அவன் நெஞ்சை முழுவதுமாக நிறைத்திருக்கிறது என்று புரிய,
“என்ன செய்யலாம் னு நீங்களே சொல்லுங்க கேசி. என் அக்காவை வேண்டாம் னு அத்து விட்டுட்டீங்க. அவ இடத்துக்கு இவ்வளவு அவசரமா இன்னொரு பொண்ணைக் கொண்டு வரப் போறீங்க. அவங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் நடுவில் என்னைக்கா இருந்தாலும் இந்தக் குழந்தைங்க வர வாய்ப்பிருக்கு. அதனால் கருவிலே கொன்னுடலாம் னு சொல்ல வரீங்களா?” என்றாள். அவள் குரலில் பழைய அன்பு இல்லை காதல் இல்லை முழுக்க முழுக்க துவேஷமும், கோபமும் மட்டும் தான் இருந்தது.
“உயிரைக் கொல்ற அளவுக்கு உன் கேசி கொடூரமானவன்னு நினைக்கிறியா அமிர்தா?” என்க, “இல்ல, மனசைக் கொல்ற சர்வாதிகாரின்னு நினைக்கிறேன். அதோட இனி நீங்க என்னைக்கும் என்னோட கேசியா ஆக முடியாது.” தெளிவாக உரைத்துவிட்டு நகரப்பார்த்தாள்.
மீண்டும் அவள் பாதையை மறைத்தவன், “உனக்கு அண்ணியைப் பார்த்துக்கிறதே சிரமம். இதில் அவங்களோட சேர்த்து குழந்தைங்களையும் பார்த்துக்க முடியாது. நான் இப்பவே சொல்லி வைக்கிறேன். குழந்தை இல்லாத யாருக்காச்சும் தத்து கொடுத்திடலாம் என்ன சொல்ற.” நம்பிக்கையோடு கேட்டான்.
அவன் நெஞ்சில் கரம் வைத்து அவனைப் பின்னால் தள்ளியவள், “அந்தக் குழந்தைகளோட அப்பா, சித்தப்பா, பாட்டின்னு எல்லோரும் ஒதுக்கினாலும் சித்தி நான் உயிரோட இருக்கேன். அவங்களை நான் பார்த்துப்பேன்.” என்றாள்.
“சீரியஸ்னெஸ் புரியாம பேசாத அமிர்தா. உன்னால் எப்படி அவங்களைப் பார்த்துக்க முடியும். உன்கிட்ட இன்னும் டிகிரி கூட இல்ல. என்ன வேலைக்கு போவ, எவ்ளோ சம்பாதிப்ப. எப்படி அவங்களைப் பார்த்துப்ப. நீயும் கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தாத. நான் சொல்றது நல்ல ஐடியா யோசிச்சு சொல்லு.” என்றான். அவன் திட்டம் போடுகிறான் என்பதால் அவனுக்கு வலிக்காமல் இல்லை. தங்கள் குடும்பத்தின் முதல் வாரிசு, தன் உயிரான அண்ணனின் ரத்தம். அவற்றை யாருக்கோ கொடுக்க வேண்டுமா என நினைக்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை தான். ஆனால் நிதர்சனத்தை யோசித்தால் அது தான் சரி என்று தோன்றியது அவனுக்கு.
“உங்களோட கரிசனம் எனக்கு வேண்டாம். என்னால் முடிஞ்ச வரைக்கும் நான் அவங்களைப் பார்த்துப்பேன். முடியலையா, என் அம்மா மாதிரி எங்க நாலு பேர் வாழ்க்கையையும் நான் முடிச்சுப்பேன். ஆனா என்ன நடந்தாலும் உங்க கண்ணு முன்னாடி வர மாட்டேன்.” என்றுவிட்டு கிளம்பினாள். அவள் சென்ற பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த பைரவன் கேசி கவனிக்காத நேரம் தானும் வீட்டை விட்டு கிளம்பினார்.
தன் மகள் வாழ்க்கைக்கு எந்த தடை வந்தாலும் அதை தகர்த்து எறியும்வேகத்தில் இருந்தவர் சென்றது நீலாவைத் தேடி தான். அமிர்தா வாங்கிக்கொடுத்திருந்த பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிந்தவளைக் கண்டதும் பைரவனுக்கு சற்றே சங்கடமாக இருந்தது உண்மை. ஆனால் மனிதாபிமானமா இல்லை மகள் மீது கொண்ட அன்பா என்று வரும்போது மகள் மீது கொண்ட அன்பு தான் பெரிதாகத் தெரிந்தது. அதனால் நீலா அருகே நெருங்கியவர், “பாப்பா உன் கழுத்தில் கிடக்கிற செயினை கழட்டிக்கொடு.” என்று கேட்டார். உடனே பொம்மையை தூக்கிப் போட்டுவிட்டு கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பத்திரமாக பிடித்துகொண்டாள் நீலா.
“அது இன்னொருத்தருக்கு சொந்தமாகப் போகுது மா. உனக்கு வேண்டாம் கொடுத்திடு.” என்று கேட்டபடி கட்டாயப்படுத்தி அவள் கழுத்தில் இருந்து கழட்டப் பார்க்க, “ஏய் என்ன பண்ற?” என்றபடி பின்னிருந்து வந்தாள் அமிர்தா. வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு வர அவளுக்குத் தாமதமாகி இருந்தது. அதற்குள் இத்தனை நிகழ்த்திவிட்டிருந்தார் பைரவன்.
அமிர்தா அவரைத் தடுக்கும் நேரம் நீலாவின் கழுத்தில் இருந்த தாலியை பறித்திருந்தார் பைரவன். நீலா அழ ஆரம்பித்துவிட, அமிர்தாவோ அதிர்ச்சியில் இருந்தாள். இந்த தாலிக்கு ஈடா என் முழு சொத்தையும் கேளு, சந்தோஷமா எழுதி தரேன். ஆனா என் பொண்ணுக்கு வழி விடு.” கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தார். அமிர்தாவால் நடக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தொய்ந்து போய் அப்படியே அமர்ந்துகொண்டாள்.
நாட்கள் நகர்ந்தது. தன் அக்காவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் சொன்னால் தான் என்ன? அவளுக்கு அனைத்தையும் சிறப்பாக செய்து கொடுக்க நான் இருக்கிறேன் என்று சிறப்பான தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை எடுத்தாள். குழந்தைப் பேற்றில் அவள் மனநலம் சரியாக வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் சொன்ன நொடி எல்லாம் சரியாகிவிட்டதாகவே நினைத்தாள் அமிர்தா. ஆனால் அப்படி அல்ல என்பது கையில் இருந்த பணம் விரைவாக காலியாகும் போது தான் உணர்ந்தாள்.
கல்லூரிப் படிப்பு முடிந்திருக்க வெளியே வேலை தேடிக்கொண்டே சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடைகள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
நீலாவைப் பார்த்துக்கொள்வதற்கு என்ன செய்யலாம் என்கிற தவிப்பில் அவள் இருந்த போது, அவளின் தாய் தந்தை இறப்பிற்கு வந்திருந்த வயதான பாட்டி ஒருவர், “நாலு ஆம்பிளைப் பிள்ளை இருந்தும் இல்லாத மாதிரி தான் எனக்கு. மகன் மதிச்சா தானே மருமகளுங்க என்னை மதிப்பாங்க. எமன் எப்ப வருவான்னு வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கேன். எனக்கு இங்க தங்க இடம் கொடுத்தா உன் அக்காவை நான் பார்த்துக்கிறேன். அவ சமத்தா தானே நடந்துக்கிறா எனக்கு பெருசா பிரச்சனை இருக்காது. பதிலுக்கு எனக்கு நாலு வாய் கௌரவமான சாப்பாடு போட்டா போதும்.” என்று சொல்லி இருக்க, அவர்கள் மகன் மற்றும் மருமகள்களிடம் பேசி அவரை தன் வீட்டோடு தங்க வைத்துக்கொண்டாள் அமிர்தா. அவர் இருக்கும் தைரியத்தில் வெளியே தைரியமாக சுற்றி வந்தாள்.
நீலாவைப் பற்றி யாரும் பேசினால் ஆரம்பத்தில் அவர்களோடு பயங்கரமாக சண்டை போட்டவள் ஒருகட்டத்தில் நிறுத்திகொண்டாள். இவர்களுக்கு புரிய வைப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்கிற புரிதல் வந்திருந்தது அவளிடத்தில்.
அவள் பெரிதும் எதிர்பார்த்த படி பிரசவத்தில் நீலாவின் மனப்பிறழ்வு சரியாகவில்லை. கூடுதலாக பணமும் நிறைய செலவழிந்தது. தாயின் நகைகள் சிலவற்றை வைத்து சமாளித்துக்கொண்டாள். எல்லாவற்றையும் தாண்டி பிறந்த குழந்தைகள், பச்சை உடம்புக்காரியான அக்கா மூவரையும் கவனித்துக்கொள்ள வெகுவாகச் சிரமப்பட்டாள் அமிர்தா. அனைத்தையும் தாண்டிய ஒன்று இருந்தது. அது பிறந்திருக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்பது குறித்த அக்கம் பக்கத்தினரின் கிசுகிசு.
எல்லாப் பக்கம் இருந்தும் விழுந்த அடி போதாது என்று திடீரென நிகழ்ந்த பாட்டியின் பிரிவு அவளை இன்னும் தான் பாதிப்புக்கு உள்ளாக்கியது. குழந்தைகளையும், நீலாவையும் பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்குமா என்று தேடித் திரிந்தவளுக்கு அத்தனை எளிதில் நம்பிக்கையான ஆட்கள் கிடைக்கவில்லை.
கையில் இருந்த குறைவான கையிருப்பு வேகமாகக் கரைந்து போக என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்த நேரத்தில் தான், மோகனனுக்கு அவன் இழந்த நினைவுகள் திரும்ப வந்துவிட்டது என்பதையும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் தங்கள் பழைய இல்லத்திற்கே திரும்பி வந்துவிட்டார்கள் என்பதையும் கேள்விப்பட்டிருந்தாள்.
கேசி, பைரவன், பைரவி மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போனாலும் மோகனன் மீது அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. இப்போது அவன் கீரவாணியின் கணவனாக இருக்கலாம். ஆனால் என்றைக்கும் அவன் தானே இந்தக் குழந்தைகளின் தந்தை. அவனிடம் இவர்களை சேர்ப்பித்து விட்டால் தந்தை யார் என்று தெரியாவதர்கள் என்கிற அவப்பெயர் அகன்றுவிடுமே என்று தவித்தவள் மனதின் ஒட்டுமொத்த நம்பிக்கையை கைகளில் தாங்கிக்கொண்டு மோகனனைத் தேடி அவன் இல்லம் கிளம்பினாள். அவள் நேரம் அன்று தான் மோகனன் பெரிய ஆட்டம் ஆடித் தீர்த்து பலனாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
அண்ணனுக்காக, அவனின் உயிருக்காக என்று நினைத்து பல பாவங்கள் செய்தால் அனைத்தையும் அவனே ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டானே என்கிற கடுப்பில் இருந்த கேசி, குழந்தைகளோடு வந்த அமிர்தாவைக் கண்டதும் வெடித்துவிட்டான்.
“எதுக்காக இங்க வந்த? இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லிட்ட பிறகும் எதுக்காக வந்த? இங்க இருந்து நீ வாங்கிட்டு போகவோ பறிச்சுட்டு போகவோ எதுவும் இல்ல. நிம்மதி, சந்தோஷம், அமைதின்னு எதுவுமே இல்ல.” கத்தினான்.
“நான் உன்னைப் பார்க்க வரல. இந்தக் குழந்தைங்களோட அப்பாவைப் பார்க்க வந்தேன்.” நேர்மையாக தைரியமாக அவன் கண்ணைப் பார்த்து பேசினாள்.
தன்னால் அது முடியவில்லையே. ஒவ்வொரு முறை நீலாவைப் பற்றியும், அமிர்தாவைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் யோசிக்கும் போதெல்லாம் தவறு செய்துவிட்டாய் என்று குத்திக் குதறும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தலை தன்னால் தலை சாய்கிறதே என்னும் கோபத்தில், “அவனை எதுக்காக பார்க்கணும்?” கர்ஜனையாகக் கேட்டான்.
பெருமூச்சுவிட்ட அமிர்தா, “அக்காவுக்கும் அவருக்குமான விவாகரத்துக்கு எனக்கு சம்மதம். ஜீவனாம்சமா பணம், நகை, சொத்துன்னு எதுவும் வேண்டாம். இந்தக் குழந்தைகளுக்கான அங்கீகாரத்தை மட்டும் கொடுத்தா போதும். என் அக்கா வாழ்க்கையும், என் வாழ்க்கையும் தான் பாதியில் போயிடுச்சு. இந்தப் பிஞ்சுகளாவது முழு வாழ்க்கையையும் முழு மரியாதையோடு வாழனும் னு ஆசைப்படுறேன். அதுக்காக தான் அவரைப் பார்க்க வந்தேன்.” என்றாள்.
அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது அவள் கண்ணில் தெரியும் இளக்கமும், தன்னைக் காணும் போது தெரியும் அனலும் சாருகேசியைக் கொல்லாமல் கொன்றது. “குழந்தைங்க பொல்லாத குழந்தைங்க. உருவான நாள் தொட்டு சாத்தானோட மறுஉருவம் மாதிரி அதுங்களோட தகப்பனைப் போட்டு பாடாப் படுத்துதுங்க. எத்தனை முறை சாகப்பார்ப்பான் அவன். ஒருநாள் ஒரு பொழுது நிம்மதி இல்லாம போச்சு. இந்த மாதிரி நேரத்தில் இவங்க பிறக்கலன்னு யார் கேட்டது.” என்று பேசிக்கொண்டே போக, சப்பென்று அவன் கன்னத்தில் அடித்துவிட்டிருந்தாள் அமிர்தா.
அதன்பிறகே என்ன பேசினோம் என்பதைப் புரிந்துகொண்டவன், “அமிர்தா, நான்” என்று சமாதானம் சொல்ல வர, “வாயை மூடு. உனக்குள்ள இவ்வளவு வக்கிரம் இருக்கா. பச்சக்குழந்தைங்களைப் பார்த்து என்ன வார்த்தை பேசுற. உன்னைப் போய் காதலிச்சதை நினைச்சா எனக்கு அத்தனை கேவலமா இருக்கு.” என்றுவிட்டு குழந்தைகளோடு திரும்பி இருந்தாள். அன்று தொட்டு இன்று வரை அந்தக் குழந்தைகளுக்காகவும், அக்காவுக்காகவும் தான் போராடிக்கொண்டிருக்கிறாள் அமிர்தா.
error: Content is protected !!