Skip to content
Post Views: 1,436
அத்தியாயம் 20
சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்திற்காக காத்திருந்தனர் சாருகேசி, அமிர்தா இருவரும். கேசியின் முகத்தில் உயிரே இல்லை. அமிர்தா இனம்காண முடியாத உணர்வுக்கலவையோடு நின்றிருந்தாள். அவர்கள் இருவருக்கும் தான் திருமணம் என்று யாராவது சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் இருந்தனர் இருவரும். சாட்சிக் கையெழுத்து போட பொதுவான நண்பர்கள் சிலரைத் தான் ஏற்பாடு செய்திருந்தான் கேசி. அம்மா, அண்ணன் இல்லாமல் திருமணம் நடப்பது சங்கடமாய் இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையில் திருமணம் நடந்தால் போதும் என்று தான் நினைத்தான்.
நீலாவின் திருமணம் நடந்த போது தன் திருமணமும் இப்படி அதி விமர்சையாக அனைத்து சொந்தங்கள் முன்னால் கௌரவமாக நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தாள் அமிர்தா. இன்று யாரும் இல்லாத அநாதையைப் போல் தானும், எல்லோரும் இருந்து அநாதையாக அவனும் நின்று இந்த திருமணத்தை செய்து கொள்ளப்போகிறோமா என்று வேதனை கொண்டாள்.
அத்தனை ஆசிர்வாதத்தோடு நடந்த நீலா, மோகனன் திருமணமும் பொய்த்து தான் போனது. யாருடைய ஆசிர்வாதமும் இல்லாமல் நடக்கப் போகும் இந்தத் திருமணமும் பொய்த்து தான் போகப் போகிறது, பின் எதற்காக வேதனை கொள்வானே என்று விரைவிலே தன்னைத் தானே சமாதானமும் செய்துகொண்டாள்.
Advertisement
இவர்கள் முறை வந்து பெயர் வாசிக்கப்பட, கையில் மண மாலையோடு சார்பதிவாளர் முன்பே தம்பதிகளாய் நின்றனர் இருவரும். காலை அவள் இல்லம் வரும் போதே பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் அழகான தலை அலங்காரத்தில், திருத்தப்பட்ட மீசையுடன் தாடி இல்லாமல் ஆணழகனாய் வந்திருந்தான் கேசி.
“நிஜ கல்யாணம் னு நினைப்பா ஐயாவுக்கு.” கிண்டல் செய்து கொண்டே ஒரு சுடிதாரில் தயாராகி வந்தாள் அமிர்தா.
“இது நிஜமோ பொய்யோ, எதிர்காலத்தில் நாம ஒன்னா இருப்போமோ மாட்டோமோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது எல்லாம் இன்னைக்கு எனக்கும், என்னோட அமிர்தாவுக்கும் கல்யாணம். கிட்டத்தட்ட நாலு வருஷமா நாம எதிர்பார்த்து காத்திருந்த நாள். கடைசி ஒன்றரை வருஷமா இப்படி ஒரு நாள் வரவே வராதான்னு ஏங்கிப்போய் நின்ன நாள். அதனால் முறையான மரியாதையோட இந்த நாளை வரவேற்க ஆசைப்படுறேன்.
Advertisement
இப்ப இருக்கா இல்லையான்னு தெரியாம போனாக்கூட ஒருகாலத்தில் என்மேல இருந்த உன்னோட காதலுக்கான கடைசி மரியாதையை நீயும் கொடுப்பன்னு நம்புறேன்.” என்றபடி தங்க நிறத்தில் ஆன பட்டுப்புடவையை அதற்குண்டான அனைத்து பொருட்களுடன் தன்னை நோக்கி நீட்டியவனைப் பார்த்த அமிர்தா துடிக்கும் உதடுகளை கடித்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, அவன் கையில் இருந்தவற்றை பிடுங்கிச் சென்று தயாராகி வந்திருந்தாள்.
Advertisement
பூரண அழகில் சிவனும், பார்வதியுமாக நின்றிருந்த அவர்கள் இருவரையும் பார்த்தபடியே சரியான நேரத்திற்கு வந்தான் மோகனன். “அண்ணா நீங்க இங்க என்ன பண்றீங்க?” கேசி கேட்டு முடிப்பதற்கு முன்னர், அமிர்தா மோகனன் மார்பில் விழுந்து கண்கலங்கத் துவங்கி இருந்தாள்.
“இதோ, என் பொண்ணு அவளோட கல்யாணத்தில் அவளோட உறவுகளை எதிர்பார்த்து ஏங்கிப் போய் நின்னுக்கிட்டு இருப்பான்னு தெரியும். அதனால் தான் வந்தேன். இப்ப இங்க நான் மாப்பிள்ளை வீடு இல்ல பொண்ணு வீடு.” அமர்த்தலாய் மோகனன் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த அமிர்தா “என்னால் உங்களை வெறுக்கவே முடியாதா?” ஏக்கமாகக் கேட்டாள்.
அவள் மனம் நீண்ட காலமாக அவனை வெறுக்க, அவன் மீது குற்றம் சுமத்த முயற்சித்துக்கொண்டே தான் இருந்தது. ஆனால் வெற்றி தான் கிட்டவில்லை. தன்னிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு பதில் வேண்டி நின்றிருப்பவளிடம் வார்த்தைகள் இல்லாத மௌனத்தையும், வெற்றுப் புன்னகையையும் மட்டுமே பரிசாகக் கொடுத்தான் மோகனன்.
Advertisement
“நான் யாரையும் வரக்கூடாதுன்னு தெளிவா தான் சொல்லி இருந்தேன் அமிர்தா. அவர் வருவாருன்னு எனக்குத் தெரியாது.” பாவம் போல் கேசி சொல்ல, “அவர் என் பக்கத்து ஆளா தானே வந்திருக்கிறதா சொன்னார். அப்புறம் என்ன?” என்றவள் செயல்முறையில் கவனமானாள்.
மாலை மாற்றிக்கொண்டு தாலி கட்டும் நேரம் வரும் போது, “நீங்க எடுத்துக் கொடுங்க.” மோகனனிடம் சொன்னாள் அமிர்தா.
உச்சி குளிர்ந்து போனான் மோகனன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, “எனக்கு இந்த ஜென்மத்துக்கு இதுவே போதும் அமிர்தா. நீ என் பொண்ணுன்னு நான் என்னோட உள்மனசில் இருந்து சொல்ற மாதிரி, நீயும் உன் ஆழ் மனசில் இருந்து தான் என்னை அப்பான்னு நினைச்சிருக்க. அதனால் தான் இந்த உரிமையை எனக்கு கொடுக்க நினைக்கிற. ஆனா இது வேண்டாம் மா.
என்னோட கல்யாண வாழ்க்கையில் உருவான கஷ்டம் இந்த உலகத்தில் யாருக்கும் வரக்கூடாது. என்னோட துரதிஷ்டம் உங்களைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன். நீயும், என் தம்பியும் ரொம்ப காலத்துக்கு சந்தோஷமா வாழனும். உங்க முகத்தில் இருக்கும் பிராகசத்தைப் பார்த்து தங்களோட பிரகாசத்தின் மேல் சந்தேகப்பட்டு சூரியனும், சந்திரனனும் இன்னும் கொஞ்சம் அதிகமா மிளிரணும். அப்படி ஒரு வாழ்க்கை வாழனும் இரண்டு பேரும்.” என்றுவிட்டு அமிர்தாவின் தலையில் கை வைத்து வருடியவன், தம்பியிடம் கண் காட்ட, நடுங்கும் கரங்களோடு தானே திருமாங்கல்யத்தை எடுத்த சாருகேசி, அமிர்தாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவளும் அவன் முகத்தையே பார்த்தாள்.
என்ன ஆனாலும், வாழ்க்கைப் படகு தங்களை எந்தப்பக்கம் இழுத்துக்கொண்டு போனாலும் இவள் மட்டும் தான் தன் மனைவி என்கிற நினைப்போடு தன் முன்னே நின்றிருந்தவளின் கழுத்தில் தங்கத் திருமாங்கல்யத்தை பூட்டினான் சாருகேசி.
இமைக்காமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கும் போல இருந்தது. ஒப்பந்த திருமணம், பொய்யான திருமணம், மனம் விரும்பாத திருமணம் என பலவற்றை அவள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாலும் விரும்பியவன் கரத்தால் கழுத்தில் ஏறிய தாலி இனிய பாரமாக நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்ததை அவளால் மறுக்கமுடியவில்லை. அதே சமயம் அதை வெளிப்படுத்தி அவனை மகிழ்விக்கவும் விருப்பம் இல்லை.
செய்த தவறுக்கு தண்டனை என்ற ஒன்று கிடைத்தே ஆக வேண்டும். கேசிக்கான தண்டனை தன்னை நீங்கி வாழ்வதே என தீர்மானித்தாள். அவள் நினைப்பு பலிக்குமா இல்லையா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்த மற்ற செயல்முறைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிய கிளம்ப ஆயத்தமான போது, “என் தம்பியை உன்னை நம்பி ஒப்படைக்கிறேன் அமிர்தா. அவனோட கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் நீ எனக்குப் பதில் சொல்லித்தான் ஆகனும்.” சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு மோகனன் சொல்ல, அங்கிருந்த யாரும் எதிர்பாரா வண்ணம் அமிர்தா அழ ஆரம்பித்துவிட்டாள். நீலா திருமணம் முடித்து போகும் போது மோகனனைப் பார்த்து அவள் சொன்ன வார்த்தைகள் அவை.
“என்னடா” என மோகனன் பதறிப்போய் அவளைப் பார்க்க, “நீங்க என் அக்காவை மட்டும் ஒதுக்கி வைக்கல. அவ சார்ந்த எல்லா நினைவுகளையும் சேர்த்து ஓதுக்கி வைச்சுட்டீங்க போல.” எனத் தன்னோடு நினைத்தவள், இவ்வளவு நேரம் உருகி இருந்த மனதை சீர் செய்துவிட்டு, “அப்பாவாகப் போறதா கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள்.” என்றுவிட்டு வேகமாக நடக்கப் பார்த்தாள். அவள் கரம் பிடித்து தடுத்த மோகனன், “நான் ஏற்கனவே இரண்டு குழந்தைங்களுக்கு அப்பா ஆகிட்டேன் டா.” என்றான் வலியோடு கூடிய புன்னகையுடன்.
“அப்பாவா பெயரளவில் ஆகி என்ன பிரயோஜனம். இன்னமும் ஊர் வாய் என் குழந்தைங்களை அப்பா யாருன்னு தெரியாதவங்களா தான் பார்க்கிது.” கோபமாகச் சொன்னவள், “என் நீலா அக்கா சீக்கிரமே திரும்பி வருவாங்க. அப்ப அவங்களுக்கு சொல்றதுக்கு நல்ல பதிலை தயார் செஞ்சு வைச்சுக்கோங்க.” என்றுவிட்டு கேசியை ஒருபார்வை பார்த்துவிட்டு முன்னே நடந்தாள்.
அண்ணனை ஆறுதலாக அணைத்து விடுவித்த கேசி, “அவளை நான் பார்த்துக்கிறேன். உன்னை நீ பார்த்துக்கோ அண்ணா. கலகம் னு ஒன்னு பிறந்தா அதுக்கு பதிலா ஒன்னு பிறந்திருக்க தான் செய்யும். அந்த வகையில் உன்னோட குழப்பங்களுக்கும் கட்டாயம் விடை கிடைக்கும். அதை நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத. நீ நல்லா இருக்கணும்.
நான், நீலா அண்ணி, வாணி அண்ணின்னு எல்லோருடைய கஷ்டமும் உன்னோட சந்தோஷமான வாழ்க்கைக்காக தான். அது பலிக்கணும். உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கிறதை நினைச்சா கஷ்டமா தான் இருக்கு. ஆனா நான் போயாகணும்.” கரகரப்பான குரலில் சொன்னான் கேசி.
“பெரிய மனுஷா நீ என் தம்பி டா. எனக்கு அப்பா இல்ல. போ போய் உன்னோட வாழ்க்கையைப் பார்.” என்றவண்ணம் தம்பியை அணைத்து விடுவித்த மோகனன், “நீலாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் எனக்கு மறக்காம சொல்லு.” என்றுவிட்டு நகர்ந்து சென்றான்.
பைரவன் வீட்டில், “என்ன பைத்தியக்காரத்தனமான முடிவு இது. இதுக்காகவா அத்தனை கஷ்டப்பட்டு நான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சேன். நீ மோகனன் தம்பியோட வாழ்ந்த அந்த சில மாசங்கள் தான் உன் முகத்தில் உண்மையான சந்தோஷம் தெரிஞ்சது. அது ஆயுளுக்கும் நிலைக்கணும் மா. அப்பா சொல்றதைக் கேளு. நீலா பொண்ணுகிட்ட நான் பேசுறேன். அவளை உங்க வாழ்க்கையில் இருந்து நான் விலகிப்போக வைக்கிறேன்.” என்ற தந்தையைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டிய கீரவாணி,
“அவங்க எதுக்காக பா விலகிப்போகணும். அவங்க ஒன்னும் என் வாழ்க்கையைப் பறிக்கலையே. நான் தானே அவங்க வாழ்க்கையைப் பறிச்சேன். நான் தான் அவங்க வாழ்க்கையை அவங்ககிட்ட ஒப்படைச்சுட்டு விலகிக்கணும்.
நான் அவரோட காதலா ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். அதனால் தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தப்புன்னு தெரிஞ்சாலும் அதைப் பயன்படுத்திக்கிட்டேன். என்னோட காதலுக்கு இணையான காதல் எனக்கு திரும்பக் கிடைக்கலன்னா கூட பரவாயில்லை, குறைஞ்சபட்ச அன்பாவது கிடைக்கணும் தானே. ஆனா என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீலாவுக்கு துரோகம் பண்ணிட்டோமேன்னு அவர் உள்ளுக்குள்ள கிடந்து தவிக்கிறார் பா. என்னால் அதைப் பார்த்துக்கிட்டு அமைதியா இருக்க முடியல.”
“நானும் அவரை உண்மையா தான் காதலிச்சேன். அவரோட கஷ்டம் என்னை ரொம்ப காயப்படுத்துது பா. கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேரில் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது சந்தோஷம் கிடைச்சா தான் அந்த உறவை நீட்டிக்கணும். ஆனா எங்க விஷயம் அப்படி இல்ல.
என்னோட அவரை இழுத்துப் பிடிச்சு கஷ்டப்படுத்துறதுக்கு பதில், அவரை விட்டு விலகி வந்து அவரை சந்தோஷப்படுத்தப் போறேன். காதலின் உச்சநிலையே நம்ம இணையோட நல்லதுக்காக அவங்களை நம்மை விட்டு போக விடுவது தானே. நான் மோகனனைப் போக விட்டுடுறேன் பா. எனக்கு நீங்க இருக்கீங்க, என் குழந்தை இருக்கு, என் தங்கச்சி இருக்கா. இதைத் தாண்டி வேற என்ன வேணும்.” என்றாள் வாணி.
“சரி மா உன் பேச்சுக்கே வரேன். உன்னைப் பார்க்கும் போது மோகனன் தம்பி வருத்தப்படுறார் குற்றவுணர்ச்சியா ஃபீல் பண்றார் எல்லாம் சரி தான். ஆனா இத்தனைக்குப் பிறகும் அவர் உடல்நிலை நல்லா தானே இருக்கு. ஆனா நீலாவைப் பார்க்கும் போது, அவளோட பேசும் போது அவரால் நார்மலா இருக்க முடியுமா? தன்னால் அவரோட நினைவுகள் ஊட்டியை நோக்கிப் போகும் தானே. அங்க மட்டுமா போகும், கண்ணகி நகர் வீட்டை நோக்கியும் போகும். அதுக்கு அப்புறம் அவர் என்ன ஆவார்.” என்று பைரவன் கேள்வி எழுப்ப,
“என்னைக் குழப்பாதீங்க பா. என்னோட முடிவுதான் எல்லோருக்கும் நல்ல முடிவு.” சற்று நேரத்துக்கு முன்னர் தீர்மானமாகச் சொன்ன ஒன்றை இப்போது சற்றே தயக்கமாகச் சொன்னாள் வாணி.
“நிலைமையை தெள்ளத்தெளிவா உனக்கு சொல்லிட்டேன் வாணி. நான் உன்கிட்ட கேட்கிறது ஒன்னே ஒன்னு தான். அவசரப்பட்டு எதையும் செஞ்சிடாத. நீலாவுக்கு நடக்க இருக்கிற ஆபரேஷன் நடக்கட்டும். அவ நல்லபடியா திரும்ப வரட்டும். அவளை நேருக்கு நேரா பார்க்கும் போது மோகனன் தம்பி என்ன மாதிரி ரியாக்ட் பண்றாருன்னு பார்த்துட்டு என்ன முடிவா இருந்தாலும் எடுக்கலாம்.” என்க, ஒப்புக்கொண்டாள் வாணி.
திருமணம் முடித்த கையோடு மருத்துவமனை தான் வந்தனர் கேசி, அமிர்தா இருவரும். “பணம் எல்லாம் முன்னாடியே கட்டிட்டீங்களாம். நான் நினைச்சதை விட பெரிய பணக்காரங்க தான் போலவே. இரண்டு வருஷத்துக்கு அப்புறம் விவாகரத்து வாங்கும் போது உங்க சொத்தில் கால் பங்கை எழுதி வாங்கினா கூட ஆயுளுக்கும் வேலைக்குப் போகாமலே சந்தோஷமா வாழ்ந்திடலாம் போலவே.” நக்கலாய் கேட்டாள் அமிர்தா.
“கால்வாசி எதுக்கு, என்னோட பங்கு மொத்தத்தையும் உனக்கே கொடுத்திடுறேன். இப்படி அடுத்தவங்களை குத்திக்காட்டி பேசி உன்னோட மனசை ஆறுதல் படுத்தாம நிஜமான சந்தோஷத்தோட வாழ உனக்கு அது போதுமானதா இருக்கும்.” என்றான்.
அவன் முகத்தைப் பார்க்காமல், “பணம் எவ்வளவு முக்கியம் னு இடைப்பட்ட காலத்தில் நல்லாவே உணர்ந்துட்டேன். அதனால் உங்க பணம் ஒன்னும் எனக்குத் தேவையில்லை.” என்றவளை ஆழ்ந்து பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை.
நீ வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும் நானும் என்னைச் சார்ந்த அனைத்தும் இனி உனக்கு மட்டும் தான் என்று சொல்லாமல் சொன்னவன் நீலா அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தான்.
எந்த ஒரு செயலையும் முதல்முறை செய்வதற்கு மட்டும் தான் தைரியமும் துணிச்சலும் அதிகம் தேவைப்படும். அடுத்தடுத்த முறை அது பழகிவிடும் என்பதற்கு இணங்க, நடந்த பிரச்சனைகளுக்குப் பிறகு முதல்முறை நீலாவைப் பார்ப்பதற்கு மட்டும் தான் அதிகம் தயங்கி இருந்தான் கேசி. அதன்பிறகு நாள் தவறாமல் அவளைப் பார்க்க வந்துவிடுவான்.
அறைக்குள், மருத்துவமனை உடையில் உறக்கமா மயக்கமா என்று புரியாத நிலையில் இருந்தாள் நீலாம்பரி. கடந்த சில நாட்களாக மருந்துகளின் பலனாய் பெரும்பாலும் உணர்வின்றி தான் இருக்கிறாள். இன்னும் சில மணி நேரங்களில் நடக்க இருக்கும் அறுவைச்சிகிச்சைக்காக தலைமுடி மொத்தமும் வழிக்கப்பட்டிருந்தது. அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும் போது கேசிக்கும், அமிர்தாவுக்கும் மனம் வலித்தது உண்மை. இருந்தாலும் உயிருக்கு முன்னால் மயிர் எம்மாத்திரம் என நினைத்து அமைதி காத்தனர்.
நீலாவின் அருகே சென்ற கேசி தன் சட்டைப் பாக்கெட்டின் உள்ளே இருந்து ஒரு சின்ன பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த திறுநீற்றை அவள் நெற்றியில் வைத்துவிட்டான். அது மோகனன் அவளுக்காக கடுமையான ஐய்யப்பன் விரதம் இருந்து, சபரிமலை சென்று பெற்று வந்தது.
“நர்ஸ் பார்த்தா திட்டப் போறாங்க.” அமிர்தா கண்டிக்க, “ஆபரேஷனுக்கு இன்னும் நேரம் இருக்கு. சோ ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றுவிட்டு எப்போதும் போல் நீலாவின் ஒருபுறம் அமர்ந்துகொண்டான் கேசி.
தமக்கையின் வலது கரத்தை தன் இரு கரங்களுக்குள் எடுத்துக்கொண்ட அமிர்தா, “உனக்கு நினைவு இருக்காக்கா. உன்னோட கல்யாணத்தப்ப ஊரே ஒன்னு கூடி உன்னோட அழகைப் பத்தி பேசுச்சு. அந்தளவுக்கு அழகா இருந்த நீ. அப்ப நான் சொன்னேன் என்னோட கல்யாணத்தப்ப நான் உன்னை விட அழகான மணப்பொண்ணா இருப்பேன்னு. அது இன்னைக்கு நடந்திருக்கு அக்கா.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. உன் கொழுந்தனாரைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கேன். நீ அவருக்கு வாழ்த்து சொல்லுவியா இல்ல அனுதாபங்களைச் சொல்லுவியா அக்கா.” என்றவள் எதிராளியிடம் இருந்து பதில் வராது போகவும் லேசாக விசும்பினாள். தொடர்ந்து ஏதோதோ பேசினாள் அமிர்தா. அவை யாவும் அவளின் திருமணத்தைப் பற்றி நீலாவுடன் பேசி சிரித்த நினைவுகளாக இருந்தது. அன்று இனித்தவை இன்று மோசமாகக் கசக்க, அவள் கேவல் அதிகமாகிக்கொண்டே வந்தது. அனைத்தையும் பார்த்தபடி ஊமையாய் இருந்தான் கேசி.
விதைத்தது அரளியாக இருக்கும் பட்சத்தில் அதில் ரோஜாவை எதிர்பார்க்க முடியுமா. செய்த வினைக்கு, அதற்குண்டான கர்மாவை அனுபவித்து தான் ஆக வேண்டும். அண்ணனுக்காக என்று ஒரு பெண்ணைத் தவிக்க விட்டாய், அதனால் வாழ்நாள் முழுக்க இன்னொரு பெண்ணின் தவிப்பை பார்த்து நொந்து போ என கடவுள் தன்னை சபித்ததாய் உணர்ந்தான்.
அடுத்த சில மணி நேரங்களில் நீலாவை அறுவைச்சிகிச்சை நடக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அக்கா பூரணமாக குணமாகிவிட வேண்டும் என பல தெய்வங்களுக்கு பற்பல வேண்டுதல்கள் வைத்தாள் அமிர்தா. அதற்கு குறையாத வேண்டுதல்கள் கேசியின் பக்கம் இருந்தும் கடவுள் பாதைத்தை சென்று அடைந்தது. மோகனன் பூஜை அறையே கதியெனக் கிடந்தான். வாணியும் கூட நீலாவுக்காக வேண்டிக்கொண்டாள்.
நீண்ட நேரம் நடக்கும் அறுவைச்சிகிச்சை என்பதால் சோர்வடைந்துவிடாமல் இருக்க அவ்வப்போது குடிக்க, சாப்பிட என எதையாவது மனைவி அமிர்தாவுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தான் கேசி.
அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள், “அக்காவுக்கு ஆபரேஷன் முடியும் நேரம் நான் இங்க இருக்க ஆசைப்படுறேன். அதனால் இப்ப வீட்டுக்கப் போனா மூணு மணி நேரத்தில் திரும்ப வந்திடலாமா?” என்று மொட்டையாகக் கேட்க, அவளைப் புரியாத பார்வை பார்த்தான் கேசி.
“என்ன தான் இருந்தாலும் நீங்க விலை கொடுத்து வாங்கின பொருள் நான். இன்னைக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு. உங்களுக்குன்னு சில ஆசைகள் இருக்கும். இரண்டு வருஷத்துக்கு நான் உங்க அடிமை மாதிரி தானே. அடிமைக்கு ஆசானோட விருப்பத்தை நிறைவேத்துவது தானே முதல் கடமை. அதனால் தான் சொல்றேன்.” என்றவளை அனல் தெறிக்கப் பார்த்தவன், நாக்கை மடக்கி கடித்தபடி, ஆள்காட்டிவிரலை அவளை நோக்கி நீட்டி, “நீலா அண்ணி நல்லபடியா கண்ணு திறந்து நம்மை அடையாளம் சொல்ற வரை உன்னோட தேள்கொடுக்கு நாக்கை வைச்சு ஏதாச்சும் பேசின அவ்வளவு தான் சொல்லிட்டேன்.” என்று கடுமையாக மொழிந்துவிட்டு அவளை விட்டு தூரமாகச் சென்று அமர்ந்துகொண்டான். அவனைப் பார்த்துவிட்டு தோள்களைக் குலக்கியபடி அமைதியாக நின்றுகொண்டாள் அமிர்தா.
நீலாவின் அறுவைச்சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. பணத்தை தண்ணீராய் செலவழித்தது வீண் போகவில்லை என்கிற பெருமூச்சு அமிர்தாவிடத்தில். கேசி விஷயத்தை அண்ணனுக்குத் தெரியப்படுத்தியவன், நீலா விழிப்பதற்காக காத்திருந்தான். அடுத்த நாள் இரவில் மயக்கம் தெளிந்து மெதுவாக கண்களைத் திறந்தாள் நீலா.
error: Content is protected !!