Skip to content
Post Views: 991
அத்தியாயம் 1
பதினொன்றாம் வகுப்பறை…
Advertisement
அன்றைய தமிழ் வகுப்பில் மாணவர்களிடம் பேசி கொண்டிருந்தார் அந்த வகுப்பின் ஆசிரியர் ப்ரியா.
“இன்னிக்கு எல்லாரும் ஒரு கட்டுரை எழுதணும்”
Advertisement
Advertisement
“என்ன மேம், திடீர்னு சொல்றீங்க? நேத்தே சொல்லி இருந்தீங்கனா, நாங்க தயார் செஞ்சுட்டு வந்திருப்போமே?” என்றான் ஒரு மாணவன்.
“ஆமா மேம், யோசிக்க டைம் வேணுமே? நீங்க வேணும்னா வீட்டு பாடமா கொடுத்திடுங்களேன்” என்றாள் அந்த மாணவனை பின்பற்றி ஒரு மாணவி.
Advertisement
“கட்டுரை எழுத போற நீங்களும் இங்க தான் இருக்கீங்க? யோசிக்க வேண்டிய உங்க மூளையும் இங்க தானே இருக்கு? இல்ல யாராவது வீட்லயே கழட்டி வச்சிட்டு வந்துட்டீங்களா?”
“————-”
“வீட்டு பாடமாக கொடுத்தால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் யூஸ் பண்ணி எழுதிட்டு வந்துடுறீங்க. அதனால தான் இன்னிக்கு இப்பவே எழுத போறோம். ஒரு அஞ்சு நிமிஷம் எல்லாரும் டிஸ்கஸ் பண்ணலாம். அப்புறம் எழுதுங்க. சிறந்த கட்டுரைக்கு ஒரு பரிசு உண்டு. சரியா?”
“இல்ல மேம். நான் எல்லாம் அப்படி எழுதவே மாட்டேன். யோசிச்சு தான் எழுதுவேன்” என்றான் ஒரு மாணவன்.
“அப்படியா அதை இன்னைக்கு பரிசோதித்து பார்த்திடலாமே?
‘என் வாழ்க்கையில் மிக மதிப்புமிக்கது?’ இது தான் தலைப்பு”
“இதற்கான பதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயமாக இருக்கலாம். முதலில் எந்த விஷயம் உங்களுக்கு உங்களை பொறுத்த வரைக்கும் வாழ்க்கையில மதிப்புமிக்கதுன்னு சொல்லுங்க, பார்ப்போம். அப்புறம் அத பத்தி ரெண்டு பக்கம் கட்டுரை எழுதணும் சரியா?
ஆகாஷ் நீ முதல்ல சொல்லு..
“இந்த காலத்துல மதிப்புமிக்கதுன்னுனா தங்கம் மேம்”
“தங்கமா? இப்ப விக்கிற விலைவாசில தங்கம் கூட கரெக்ட் தான்
அடுத்து?”
“அன்பு தான் மேம்”
“நல்ல பதில் தான் அன்பு ஓகே, அடுத்து?”
இப்படி வரிசையாக ஒவ்வொருத்தரிடமும் கேட்டு கொண்டு வந்தார்.
கண்ணீர்
பணம்
படிப்பு
அறிவு
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பதிலை சொல்லி கொண்டு வந்தனர்.
கடைசியாக வந்த விக்னேஷ்
“மேம் எனக்கு ரொம்ப முக்கியமானது என்னோட பென்சில் பாக்ஸ் தான்” என்றான்.
வகுப்பு முழுவதும் கொல் என்று சிரித்துவிட்டது. மேம்மிற்கு கூட கோபம் எட்டி பார்த்தது.
“டேய் உனக்கு பென்சில் பாக்ஸ் பிடிக்கும்ன்றது வேற. வாழ்க்கையில மதிப்புமிக்கது என்பது வேற. அப்படின்னா, விலை மதிப்பு இல்லாதது. இதுக்கு கூட உனக்கு வித்தியாசம் தெரியாதா? நீ எல்லாம் எப்படி கட்டுரை எழுத போறியோ?” என்றார் கடுப்பாக.
சக மாணவர்களின் சிரிப்பு அடங்குவதற்கு ஒரு நிமிடம் போல் ஆனது.
“சரி சரி, நேரமாகுது. எல்லாரும் ஆரம்பிங்க..” என்று கூறி அனைவருக்கும் அதற்கான பேப்பர்களை கொடுத்தார்.
ஒரு மணி நேரம் கழித்து மாணவர்கள் எழுதியதை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.
“அன்று முழுவதும் மாணவர்கள், டேய் பென்சில் பாக்ஸ், இங்கே வா டா..” என்று அவனை கேலி செய்து ஒரு வழி செய்தனர்.
விக்னேஷ், படிப்பில் சுமார் ரகம் தான். அதே போல கலகலப்பாக அனைவரிடமும் பேச மாட்டான்.
மறு நாள், முகம் முழுவதும் புன்னகையுடன் வந்தார் ஆசிரியர் ப்ரியா. அவரது வகுப்பு தான் முதல் வகுப்பு.
“யாருடைய கட்டுரை சிறப்பானதாக இருந்தது தெரியுமா? யாருன்னு நினைக்குறீங்க?”
“ஆதித்யா”
“ரித்விகா” என்று வகுப்பில் முதலாவது இரண்டாவது இடத்தை பிடிக்கும் மாணவர்களின் பெயர்களை கூறினார்கள் அனைவரும்.
“இல்ல.. சிறந்த கட்டுரை எழுதினது விக்னேஷ்..” என்று அவர் அறிவிக்கவும் ஒரு வினாடி அமைதி.. பின் ட்ராப் சைலென்ஸ்..
“என்ன மேம் சொல்றீங்க? பென்சில் பாக்ஸா?” என்றான் ஒரு மாணவன் நக்கலாக.
“ஆமா, நீ இங்கே வா” என்று அவனை முன்னால் அழைக்கவும், அவனும் ஒருமாதிரி பயந்து கொண்டே சென்றான்.
“மேம், சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்” என்றான் தலையை குனிந்து கொண்டே.
“பரவாயில்லை, இந்தா நீயே இந்த கட்டுரையை எல்லாருக்கும் படித்து காட்டு” என்று கூறி அவனிடம் கொடுத்தார்.
படிக்க ஆரம்பிக்கும்பொழுது கூட இவன் எல்லாம் அப்படி என்ன எழுதி இருப்பான் என்று நினைத்து கொண்டு தான் படிக்க ஆர்மபித்தான்.
‘என் வாழ்க்கையில் மிக மதிப்புமிக்கது என்னுடைய பென்சில் பாக்ஸ். மதிப்புமிக்கது என்றதும் எது என்று நான் யோசிக்கவே இல்லை. ஏன் என்றால் உடனே என் கண் முன்னால் இருந்த பென்சில் பாக்ஸ் அதற்கான பதிலை கூறியது.
இந்த பென்சில் பாக்ஸ் என்னோட பதினான்காவது பிறந்த நாளுக்கு எங்க அப்பா கொடுத்த பரிசு. இது தான் எங்க அப்பா எனக்கு கொடுத்த கடைசி பரிசும் கூட. ஏன் என்றால் என்னோட பதினைந்தாவது பிறந்த நாளிற்கு எங்க அப்பா உயிரோடு இல்லை.
இது என்னோட இருக்கும்பொழுது எனக்குள்ள ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றிக் கொண்டே இருக்கும். எங்க அப்பா என் கூடவே இருக்கிற மாதிரி தோன்றும்.
என்னோட பென்சில் பாக்ஸ் எங்க அப்பா அவர் கையாலயே செஞ்சு கொடுத்தது. ஆம், எங்க அப்பா ஒரு தச்சர். என் பென்சில் பாக்ஸ்ல என் பெயர் விக்னேஷ் என்றும், அதுக்கு மேலே ஒரு குட்டி விநாயகர் சிலை ஒன்றையும் அழகா அதுல செதுக்கி வைத்திருக்காங்க எங்க அப்பா.
அந்த விநாயகர் எனக்கு எப்பவும் துணையா இருப்பாருன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. நான் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டதை காட்டிலும், என் பென்சில் பாக்ஸ் விநாயகர் கிட்ட தான் அதிகமா வேண்டி இருக்கேன்.
அதே போல உபயோகிக்கவும் அது ரொம்ப சுலபமா இருக்கும். தனி தனி பிரிவுகள் வச்சு செஞ்சிருப்பாங்க. அதுல இருக்க ஸ்கேல் கூட அப்பா செஞ்சு கொடுத்தது தான்.
எங்க அப்பா எங்க கூட இல்லைங்கிற நிதர்சனம் எனக்கு புரிய கொஞ்ச நாள் ஆச்சு. ஆனா புரிஞ்சுகிட்டு நிஜத்தோடு வாழ ஆரம்பிக்க இந்த பென்சில் பாக்ஸ் எனக்கு உதவுச்சு. எனக்கு மட்டும் இல்ல, எங்க அண்ணா கார்த்திகேயனுக்கு கூட அவர் பெயரும், முருகன் சிலையும் செதுக்குன ஒரு பாக்ஸ் கொடுத்து இருக்காங்க அப்பா..
எங்க அம்மா , ‘நானும் உங்கள மாதிரி படிச்சுக்கிட்டு இருந்திருந்தா எனக்கும் ஒரு பென்சில் பாக்ஸ் கிடைச்சிருக்கும்னு’ எங்ககூட சண்டை போடுவாங்க. குழந்தையா மாறி எங்க அம்மா அந்த பென்சில் பாக்ஸ்க்கு போட்டி போடறது பார்க்க அவ்வளவு அழகா இருக்கும்.
எங்க அப்பா வாசத்தோட, எங்க அப்பா ஆசியோட விநாயகர் குடி இருக்கிற இந்த பென்சில் பாக்ஸ், எனக்கு இவ்வளவு நெருக்கமாக இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
அதனால இப்ப இல்லை, எப்பவுமே என் வாழ்க்கையில் மிக மதிப்புமிக்கது என்னுடைய பென்சில் பாக்ஸ் ..’ என்று கட்டுரை முடிந்திருந்தது.
படித்து முடித்ததும் அந்த மாணவன் கண்கள் கலங்க விக்னேஷை பார்த்தான்.
அனைவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.
மேம் விக்னேஷை அழைத்து அவனுக்கு வாழ்த்து கூறி, அவனுக்கு பரிசையும் கொடுத்தார்.
—————-
விக்னேஷ், கார்த்திகேயன் இருவரும் கண்ணன், நாகரத்னா அவர்களின் புதல்வர்கள்.
போன வருடம் தான் ஒரு விபத்தில் கண்ணன் தவறி இருந்தார்.
கண்ணன் முதலில் இன்னொருவரிடமே வேலை செய்து வந்திருந்தார். அழகான சின்ன குடும்பம் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி என்று நால்வர் கொண்ட குடும்பம். அவரின் வேலை மிகவும் கட்சிதமாக இருக்கும். தொழில் நுணுக்கம் நன்றாக தெரிந்தவர். அதனால் அவருக்கு நல்ல சம்பளம் கொடுத்தே வைத்திருந்தார் அவரது முதலாளி.
அதில் சின்னதாக ஒரு வீட்டையும் கட்டி, பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைத்தார். சில வருடங்களுக்கு பிறகு நாமே சுயமாக ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார். முன்பே வீட்டிற்கு பின்புறம் இடம் விட்டு கட்டிருந்தார். தொழில் ஆரம்பிக்கலாம் என்றதும் பின்பக்கம் இருந்த இடத்தில் மேலே சீட் போட்டு அங்கே தனது ஒர்க் ஷாப்பை ஆரம்பித்தார். விஷயத்தை கூறியதும் அவரது முதலாளியே முதல் ஆர்டர் கொடுத்து வாழ்த்தி தொழிலை ஆரம்பிக்குமாறு கூறினார்.
பல வருடங்களாக இந்த துறையில் இருப்பதால் அவருக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஆரம்பித்து ஓராண்டிலேயே நல்ல வருமானம் வர தொடங்கியது. மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நேரத்தில் ஒரு நாள் மரச் சாமான்களை வாங்கி கொண்டு அதே லாரியில் வந்து கொண்டிருந்தவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதுவரை அமைதியான கடலில் சென்று கொண்டிருந்த ஒரு படகைப் போல இருந்த அவர்களின் வாழ்க்கை, திடீரென திசை தெரியாமல் அலைமோதும் ஒரு படகாக மாறிவிட்டது.
error: Content is protected !!