Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 26

அத்தியாயம் – 26 (நிறைவு)

குடியரசுத் தலைவர் மாளிகை, புதுதில்லி.



Advertisement

மீண்டுமொரு முறை வசுந்தராவை விழா நாயகியாகக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் இந்த முறை அவரது திருமணத்திற்காக!

அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் துணைப் பிரதமர் பதவியேற்பு விழா நடந்த அன்றே, வசுந்தரா தனது திருமண விசயத்தை குடியரசுத் தலைவரிடம் பகிர்ந்திருந்தார். வாழ்த்தி விட்டு, தேதி மற்றும் இடம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தவர், 

Advertisement

Advertisement

“இங்கயே வைச்சிக்கலாமே வசுந்தரா? ஏன் வென்யூ தேடி கஷ்டப்பட்றீங்க?” என்றார்.

“மேம்?”

Advertisement

“செக்யூரிட்டி வைஸ் இங்க மானேஜ் பண்றது பெட்டர். உங்க ரெசிடென்ஸ்லனா ரிஸ்க். அங்க எடமும் பத்தாதே! இங்கன்னா, ரெகுலரா ஹை ப்ரொஃபைல் ஈவிண்ட்ஸ் நடக்குறதுனால ஸ்டாஃப் எல்லாம் பாத்துப்பாங்க”

“இல்ல மேம், இது என்னோட பெர்சனல் ஈவென்ட் தானே…அதுனால யோசிக்கிறேன்”

“யெஸ். இது உங்களுக்கு என்னோட வெட்டிங் கிஃப்ட் வசுந்தரா!”

அதற்கு மேல் மறுப்பது அவமரியாதையாகத் தோன்றும் என்பதால், தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார் வசுந்தரா. பின்னர் வருணனிடம் பகிர்ந்ததில் அவரும் வசுந்தராவை பேசியே சரிக்கட்டியிருந்தார். இந்த இடமாற்றம் வருணனுக்கு வேலைகளையும் வெகுவாகக் குறைத்திருந்தது. 

அடர் சிவப்பில் தங்க நிற பூ வேலைப்பாடுகள் நிறைந்த மென்பட்டில் எளிய மணப்பெண் அலங்காரத்தில் வசுந்தரா வந்த போது, வருணனால் அவரிடமிருந்து பார்வையைப் பிரிக்கவே முடியவில்லை. அவர் நினைவடுக்குகளில் எவ்வளவு தேடிப்பார்த்தாலும், இது போன்ற ஒரு அலங்காரத்தில் அவரைப் பார்த்ததாக எந்த ஞாபகமும் இல்லை. பட்டு வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக நின்ற வருணனை நேர் பார்வை பார்த்து புன்னகைக்க, அந்தக் காட்சி கவிதையாக முன்வரிசையில் அமர்ந்திருந்த, பெற்றவர்கள் கண்களில் பதிந்தது.

அஞ்சலிக்கு அவர்களது முறைப்படி எல்லாம் செய்ய ஆசையிருந்தாலும், இந்தச் சூழலுக்கு முடிந்தவரை தன்னை சமன்படுத்த முயன்றார். வனதேவனும் நடைமுறை சிக்கல்களை விளக்கி சொல்லியிருக்க, அஞ்சலி முழுமனதோடு மகிழ்ச்சியாகவே அமர்ந்திருந்தார். வனதேவன் முகத்திலோ பெருமிதமும், நிம்மதியும். 

மகனின் முகத்திலிருந்த புன்னகையே தேவராஜனுக்கும், ராஜிக்கும் போதுமானதாக இருக்க, சந்தோஷத்தில் கண்கள் கலங்கும் போலிருந்தது. நடக்குமா, நடக்காதா என்று எத்தனை வருட காத்திருப்பு? ஒற்றை மகனின் மகிழ்ச்சி முழுவதும் வசுந்தராவிடமே இருக்கிறதென்று தெரிந்த பின்பும், பல வருடங்கள் கையறு நிலையில் நின்று, எதையும் வெளிக்காட்ட முடியாத தவிப்பு முடிவுக்கு வந்ததில் பெரும் ஆசுவாசம்.

மணமக்கள் தங்களது திருமண உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டதும், குடியரசுத் தலைவர் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, மெல்ல வாங்கிய வருணன் கைகள் நடுங்கியது. வாடாப் புன்னகையுடன் வசுந்தரா காத்திருக்க, அவர் கழுத்தில் வருணன் மூன்று முடிச்சிட்ட போது கைகளின் நடுக்கத்தை மிகத் துல்லியமாக உணர்ந்தார். 

ஆரத்தழுவி ஆற்றுப்படுத்தத் துடித்த கைகளை இறுக்கமாகக் கோர்த்தபடி சில நொடிகள் அமைதியாக இருந்தார் வருணனின் சிறந்த பாதி! அதன் பின்னர் தாரா தேவி மணமக்களிடம் துணை மாலைகளைக் எடுத்துக் கொடுக்க, இயல்புக்குத் திரும்பிய இருவரும், ஒருவரை ஒருவர் ஆழ்ந்து பார்த்தபடி மாலையை அணிவித்தனர்.

திருமண வைபவம் இனிதே முடிந்திருக்க, விருந்தினர்கள் மணமக்களை வாழ்த்த வந்தனர்.

“கங்கிராட்ஸ் மேம்” என்று உதயன் முதல் ஆளாக வாழ்த்த வந்தார். 

“ஹனிமூன்க்கு எங்க கூட்டிட்டுப் போற வருண்?” என்று சீண்ட, வசுந்தரா வருணனை முறைத்தார். 

“ஏன்ணா நீங்க வேற?” 

“என்னடா, நாட்டை நான் பாத்துக்குறேன்! நீங்க ஒரு நாலு நாளாச்சும் எங்கயாச்சும் போய்ட்டு வாங்க” – சற்று தீவிரமாகவே கூறினார் உதயன். 

‘ஆண்டவா, இவரு இன்னிக்கே எனக்கு டைவர்ஸ் வாங்கிக் குடுத்துடுவார் போலயே’ என்று புலம்பிய வருணன்,

“இல்லண்ணா, அந்த மாதிரி எல்லாம் பிளான் எதுவும் இல்ல. இட்ஸ் நாட் பிராக்டிக்கல்! நான் கொஞ்சம் இங்க செட்டில் டவுன் ஆனதுக்கப்புறம் வேணும்னா பார்க்கலாம்” 

“அஸ் யூ விஷ்” என்றபடி நகர்ந்தார் உதயன்.

“இதுக்குத் தான் உங்க நொண்ணனுக்கு டெபுடி பி.எம் வேணும்னு தொங்கினியா?” – பல்லைக் கடித்தார் வசுந்தரா.

“ஹா ஹா, இதுக்கும் சேர்த்துத் தான் டார்லிங்!”

“மவனே, வீட்டுக்கு வா. அன்னிக்கே வைச்சி வாங்கணும்னு நினைச்சேன்…எஸ்கேப் ஆகிட்ட!”

எல்லாம் மெல்லிய குரலில், முகத்தில் எதுவும் தெரியாமல் பேச, தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு ஏதோ நெருக்கமாக பேசி சிரிப்பது போல் தெரிந்தது.

“இனிமே நோ வயலன்ஸ்…” என்பதற்குள் தாரா தேவி வந்து விட்டார்.

“வசு, உன் ஹஸ்பண்ட் கிட்ட, அவரோட டிசிசன் ரீகன்சிடர் பண்ண சொல்லேன்?” என்றார் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக. 

“மேம்…நீங்களாச்சு…வருணாச்சு” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டார் வசுந்தரா. 

“யோசி வருண், நீ ரெண்டுமே பண்ணலாம். க்ராஸ் ரூட் லெவல்ல ஃபுல் டைம் அரசியலுக்கு யங்க்ஸ்டர்ஸ் வர்றதுக்கு ஃபவுண்டேஷன் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற. ரொம்ப நல்ல ஐடியா. ஆனா அதுக்காக ஏன் இப்ப இருக்குற போஸ்ட் ரிசைன் பண்றேன்னு சொல்ற?”

சில நொடிகள் அமைதி காத்த வருணன்,

“மேம், இது நாம ஃபுல்லா டிஸ்கஸ் பண்ணிட்டோமே. என்னோடது லாங் டேர்ம் பிளான். 10 வருஷத்துல SPP தமிழ்நாட்டுக்கு ஆட்சிக்கு வர்றதுக்கு வட்டம், மாவட்டத்தேர்லந்து எல்லாம் மாத்தணும். 

ஜஸ்ட் கேண்டிடேட்ஸ் மட்டும் இல்ல, களத்தில் இறங்கி வேலை செய்றவங்க, டார்கெட்டட் சோஷியல் மீடியா டெவலப் பண்ற ஆளுங்க, பப்ளிக் ரிலேசன்ஸ் இந்த மாதிரி ஐ ஹேவ் அ லாங் லிஸ்ட்!”

“ரொம்ப சந்தோஷம், தாராளமா பண்ணு! இங்க உன் வேலைக்கு இன்னும் நாலு அசிஸ்டெண்ட்ஸ் கூட எடுத்துக்கோ”

“மேம், நான் கோவை அக்ரி பிஸ்னசும் பாக்கணும். எல்லாத்தையும் விட வசுக்கு அவெய்ளபிளா இருக்கணும். ஓவர் கமிட் ஆகிட்டா எதுவும் சரியா பண்ண முடியாது”

“ஹும்…ஏதாச்சும் வழி இருக்கும் வருண். திங்க் அபவுட் இட்” என்று நிறுத்தியவர்,

“சரி ஐ டோண்ட் வாண்ட் டு ஸ்பாயில் த செலிப்ரேஷன் மூட்! நெக்ஸ்ட் வீக் ஆஃபிஸ் வா பேசலாம்” என்று விடைபெற்றார் தாராதேவி.

‘உப்ப்ப்’ என்று ஒரு நீண்ட பெருமூச்சை வருணன் வெளியேற்ற, விரிந்த புன்னகை வசுந்தராவிடம்.

“அந்தம்மாட்ட நான் மாட்டிட்டு முழிக்கிறது உனக்கு அவ்ளோ சிரிப்பா இருக்கா அம்மணி?”

“இல்ல, இது தான் சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கணும்னறது. இருந்திருந்து இப்ப தான் நீ ஒரு கல்யாணம் பண்ணிருக்க…”

“நக்கலு? வெயிட் பண்ணுங்க அம்மணி, உங்க கொழுப்பை கொறைக்கிறது தான் என்னோட ஃபர்ஸ்ட் & ஃபுல் மிஷன்!”

“பார்றா…அவ்ளோ கான்ஃபிடன்ஸா?”

“100%” 

இப்படியாக சீண்டலும், சிரிப்பும், நெகிழ்ச்சியும் என மணமக்கள் பொழுது வேகமாக நகர்ந்தது. மிக நெருங்கிய வட்டத்திற்கே அழைப்பிருக்க, விருந்தினர் அனைவரும் முக்கிய அரசியல் புள்ளிகளே. தலைமை அமைச்சரின் அலுவலக அதிகாரிகளும் குடும்பத்துடன் அழைக்கப்பட்டிருந்தனர். 

லலிதா தனது கணவருடன் வந்திருக்க, மனோகர், சுசித்ராவை அழைத்தும் அவர் மறுத்து விட்டிருந்தார். அவருக்கு என்ன தான் இருந்தாலும், மகன் இருக்க வேண்டிய இடம் என்ற உறுத்தல் இல்லாமலில்லை. வசுந்தராவுக்கெனப் பார்த்திராவிட்டால், ஏதாவது ஒரு நாட்டில் மகன் உயிருடன் இருந்திருப்பார் என்ற எண்ணம். அவரவர் நியாயங்கள் அவரவருக்கு! வசுந்தராவும் எதையும் எதிர்கொள்வதற்கு தன்னை தயார் படுத்தியிருந்தார். 

மனோகர் வந்து வாழ்த்தவும், வருணனுக்கு சற்று சங்கடமான சூழல். அதை உணர்ந்த மனோகர் ஜோஷி, அவரை அணைத்து ஆசி வழங்க அந்த நொடி சித்தார்த்தின் ஆசியே தங்களுக்கு இருப்பதாக உணர்ந்தார் வருணன்.

வரவேற்புப் படலம் முடிந்ததும், பஃபே முறையில் இருந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மணமக்கள் முடிந்த அளவு விருந்தினர்களை உபசரித்து, நலம் விசாரித்தனர். 

எல்லாருடைய வாழ்த்துதலும் உளமார்ந்து வரவில்லை தான். அதை உணர்ந்தாற் போல் அஞ்சலி,

“வீட்டுக்கு போன உடனே புள்ளைங்களுக்கு சுத்திப் போடணும் அண்ணி. சில கண்ணுல்ல பார்த்தாலே வன்மமும், பொறாமையும் தான்” என்றார் ராஜியிடம்.

“ம்ம்ம், நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்”

“நம்ம ஊர்ல இருந்தா, எல்லா சாங்கியமும் சரியா செஞ்சிருக்கலாம்…இது என்னடான்னா ரிஜெஸ்டர் மேரேஜ் மாதிரி முடிஞ்சிருச்சு…சொந்தக்காரங்க யாரையும் கூப்பிட முடியல!”

“விடு அஞ்சலி! புள்ளைங்க வாழ்க்கை தான் முக்கியம். எல்லாரையும் கூப்பிட்டு நாம ஒரு விருந்து வைச்சிடலாம்”

“பொண்ணு, மாப்பிள்ள இல்லாமயா?”

“வேற என்ன பண்ண? இப்ப தான் எல்லாம் ஆன்லைன்ல பண்றாங்கல்ல. அது மாதிரி ஏதாவது பண்ண வேண்டியது தான்”

“அது சரி…ஒவ்வொரு விசேஷத்துக்கும் இனி இந்தப் பாடு தான்!”

“அஞ்சலி!”

“சும்மா சொன்னேன் அண்ணி. அவங்க ரெண்டு பேரும் இருக்கப்போ வாயைத் தெறக்க முடியாதே!” என்றவர், மணமக்கள் தலைமை அமைச்சரின் இல்லத்திற்குள் நுழைந்ததுமே, அங்கு செய்யக் கூடிய சடங்குகளை செய்ய வைத்தே ஓய்ந்தார். 

அன்றைய இரவுக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்று நின்றவரை, வனதேவன் தடுத்து விட்டார்.

“அஞ்சு, இது நம்ம வீடு கிடையாது! வசுவை சங்கடப்படுத்துற மாதிரி எதுவும் செய்யாத. அதனால தான் நைட்டே கோவை ரிட்டர்ன் போயிடலாம்னு சொன்னேன்” 

“ம்ப்ச், என்னவோ போங்க. ஒவ்வொரு வாட்டியும் நீங்க சொல்லி மனசை தேத்திக்கிட்டாலும், ஒத்த பொண்ணு! அவளுக்கு எல்லாம் செஞ்சு அழகு பாக்க முடியல” என்றபடி, அவர்களுக்கு ஒதுக்கியிருந்த விருந்தினர் அறையில் முடங்கி விட்டார். 

வசுந்தராவோ, ஆளை விட்டால் போதுமென திருமண உடையிலேயே தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். லலிதா தான்,

“மேம், மெயினான வேலை எல்லாம் முடிச்சிட்டோம். உங்க சைன் வேணுங்கிற ஃபைல்ஸ் மட்டும் க்விக்கா பார்த்துடுங்க” என்றார்.

மனோகரும் அதை ஆமோதித்து,

“ஃபாரின் டெலிகேட்ஸ் மீட் பண்றது நாளைக்கு மதியம் மூவ் பண்ணிருக்கோம் மேம். இட்ஸ் அன்அவாய்டபிள்” என்றார் தயக்கத்துடன்.

“நோ ப்ராப்ளம். உதயன் எங்க? செட்டில் ஆகிட்டாரா?” என்றார் வசுந்தரா. 

“ஹி இஸ் கெட்டிங் தேர். அன்டில் உங்களுக்கு ஃபுல் கான்பிடன்ஸ் வர்ற வரைக்கும் மேஜர் டிசிசன்ஸ் ஜாயிண்ட்டா தான் எடுக்கணும்”

“அக்ரிட். வேற எதுவும் இல்லியே?” என்று வேலை முடித்து எழுந்தவர்,

“டோண்ட் ஹெசிடேட். எதுவும் எமர்ஜென்சினா என் ஃபோன் ஆன்-ல தான் இருக்கும்!”  என்றபடி வெளியேறினார். 

ராஜி தான் மருமகளை அலங்கரித்து அனுப்பக் காத்திருக்க, அவர் முகத்தில் இருந்த களைப்பைப் பார்த்து, 

“சாப்பாடு, பால் எல்லாம் உன் ரூம்ல இருக்கு கண்ணு. எல்லாரையும் வேற பங்களாக்கு அனுப்பியாச்சு” என்றவர், வசுந்தராவின் கன்னம் வருடி,

“சந்தோசமா இருக்கணும்” என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். 

இலகுவான இரவு உடைக்கு மாறியிருந்த வருணன், இயல்பாக படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து மடிக்கணினியில் தீவிரமாக ஏதோ செய்து கொண்டிருந்தார். அறையில் அரவம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் மனைவியைக் கண்டதும் மெலிதாக சீழ்க்கையடித்தார். 

வசுந்தரா அவரைப் பார்த்து மோகனமாய் புன்னகை புரிய, அதில் வீழ்ந்த வருணன் மடிக்கணினியை மெத்தையில் வைத்து விட்டு எழுந்து வந்து விட்டார். மேசையில் வைத்த உணவு வைத்தபடி இருந்தது. 

“சாப்டலையா வரு?”

“கல்யாணம் பண்ண முதல் நாளே எந்த மடையன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா சாப்பிடுவான்?”

“அது சரி! பட், இனிமே இப்டி வெயிட் பண்ணாதே. வேலை எப்டி இருக்கும்னு சொல்ல முடியாது. நிறைய நாள் நான் லேட்டா தான் வருவேன், சில சமயம் பி.எம்.ஓ ஆஃபிஸ்லயே கூட லைட்டா ஏதாச்சும் சாப்ட்டு டின்னர் கடமைய முடிச்சிடுவேன்”

பின்னிருந்து அவர் தோள்களைப் பற்றி, அதில் தனது நாடியை பதித்த வருணன்,

“சரிங்க மேடம்! நீ வீட்ல சாப்பிட முடியாதப்போ பாத்துக்கலாம். இருக்கறப்போ ஐ டோண்ட் மைண்ட் வெயிட்டிங். ஓகே?” 

“ம்ம்ம்” என்றபடி திரும்பிய வசுந்தராவை, இடையில் கைகொடுத்து நிறுத்திக் கொண்டார்.

“பசிக்குதா வரு? ஒரு 10 மினிட்ஸ்…குளிச்சிட்டு வந்துடட்டுமா?” என்றார் மூக்கை சுருக்கி.

“குளிக்கலாம், இப்ப ஒரு ஸ்வீட் மட்டும்” என்றவர், ஒரு பாதுஷாவை எடுத்து பிட்டு வாயிலிட்டார்.

‘தனக்கு தான் எடுக்கிறார் போல’ என்று சிரிப்புடன் பார்த்திருந்த வசுந்தரா, வருணன் அவர் வாயில் போட்டுக் கொண்டதைப் பார்த்து முறைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில், இனிப்பு வசுந்தராவின் உதடுகளைத் தீண்டியிருந்தது!

வசுந்தரா கண்களை விரித்துப் பார்க்க, 

“போ, இப்ப போய் குளிச்சிட்டு வா” என்று கன்னத்தில் லேசாகத் தட்டிக் கொடுத்த வருணன், எதுவும் நடவாதது போல மீண்டும் மடிக்கணினிக்குள் மூழ்கினார்.

‘ரொம்பத்தான்’ என்று நொடித்துக் கொண்ட வசுந்தரா, குளித்து கரும்பச்சை நிற ஜார்ஜெட் புடவையில் வெளிவர, வருணன் கண்ணில் மின்னல். அப்பட்டமான ஒரு ரசனைப் பார்வை. அதைக் கண்டு கொள்ளாதவராய், தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, ஈரக்கூந்தலை நன்றாகத் தட்டி விட்டு நாற்காலியில் அமர்ந்தார் வசுந்தரா.

இப்போது மடிக்கணினி முழுவதுமாக மூடப்பட்டு படுக்கைக்கு அருகில் இருந்த சிறு மேசைக்குத் தாவியிருந்தது. வருணன் ஒரு தட்டில் உணவை எடுத்து வைக்க, ஒரு கையை மேசையில் ஊன்றி அதில் கன்னத்தைத் தாங்கியவாறு அவரை பார்வையால் தொடர்ந்தார் வசுந்தரா. 

“என்ன அம்மணி, பார்வையெல்லாம் பலமா இருக்கு?”

‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைத்து புன்னகைத்தார் வசுந்தரா.  

“உரசாக்கோட வருவன்னு பாத்தா புடவைல வர்றீங்க”

“அது அன்னிக்கு ஒருத்தர் கண்ல செமயா பல்ப் எரிஞ்சுச்சுல்ல…அதான்” – தோள்களைக் குலுக்கினார்.

“ஆமா, மேடம் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கீங்க?”

‘நீ மேல சொல்லு’ என்ற பதில் பார்வை மட்டுமே. 

“இல்ல, இப்பவே தலைக்கு குளிச்சிட்ட…” என்று முடிப்பதற்குள், தொடையில் நறுக்கென்று கிள்ள,

“ஆ, வலிக்குதுடி..விடு” என்றபடி தொடையைத் தேய்த்தார் வருணன்.

உணவை கையில் எடுத்த வருணன் முதலில் வசுந்தராவுக்கு நீட்ட, அவருக்குக் கண்கள் லேசாக கலங்கியது. வாயைத் திறந்து மறுக்காமல் வாங்கிக் கொண்டவர், 

“ஏன் வருண் என்னைய உனக்கு இவ்ளோ பிடிக்குது?” என்றார்.

அடுத்த வாய் உணவை ஊட்டுவதற்காக வந்த வருணன் கைகள் சில நொடி அப்படியே நின்றது. அவர் கையை பிடித்து தானே வாங்கிக் கொண்ட வசுந்தரா, தட்டை கையில் வாங்கிக் கொண்டு வருணனுக்கு ஊட்டினார். இருவரும் மாறி, மாறி ஊட்ட தட்டு வேகமாகக் காலியாகத் துவங்கியது. 

“சொல்லு வரு…”

“உண்மைய சொல்லனும்ணா, எனக்குக் காரணமே இல்ல! பிடிக்கும் அவ்ளோ தான்” 

“ம்ப்ச், என்ன வரு? ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி கேக்கலாம்னு பாத்தா…”

“ஹா,ஹா. அதெல்லாம் பேராசை. உன்னைய வைச்சிக்கிட்டு…எமோஷனல்ல்ல்ல் லவ் ஸ்டோரி? உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல”

வருண் கூறிய விதத்தில் வசுந்தராவுக்கும் சிரிப்பு வந்து விட்டது. சிரித்தபடியே,

“அதுவும் கரெக்ட் தான். ரொம்ப படுத்திட்டேனோ?” என்றார்.

“ஐயய்யயோ, கொஞ்சமா…நஞ்சமா? நேர்மைடா, நீதிடான்னு மனுஷன சாவடிச்சிட்ட. ஒத்த புள்ளய கரெக்ட் பண்றதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே”

“ஓய்!”

“இல்லயா பின்ன? உன்னைய நம்ம டீனேஜ்ல இருந்தே எனக்குப் புடிக்கும். நான் வெயிட் பண்ணிட்டு இருக்கப்பவே உதய் அண்ணாலேர்ந்து, சிட் வரைக்கும் லைன் கட்டி வந்தா நான் என்ன பண்றது?”

“இவ்ளோ ஆசையா இருக்குறவன் எதுக்கு திருப்பி சிட்ட உள்ள இழுத்துட்டு வந்த? அவர் வேற ரொம்ப குழப்பி என்னைய டென்ஷன் பண்ணிட்டார்”

“ம்ஹும்…அது பெயின் ஃபுல் டிசிசன் தான் வசு! எப்படியாவது ஒரு முடிவு எடுப்பியான்னு தான் அந்த ரிஸ்க் எடுத்தேன். என்ன தான் ப்ராக்டிக்கல் ரீசன்ஸ் சொல்லி நீ ப்ரேக்-அப் பண்ணிருந்தாலும், அதெல்லாம் சால்வ் ஆகிட்டா என்ன முடிவு எடுப்பன்னு பாக்கணும்னு தோனுச்சு”

அவரை ஆச்சரியமாகப் பார்த்தார் வசுந்தரா.

“இல்ல வரு…வீ ஹேவ் க்ரோன் அப்பார்ட். எனக்கு சிட் மேல எப்பவும் ரெஸ்பெக்ட் அண்ட் அட்மிரேஷனும் இருக்கு. ஆனா ரிலேஷன்சிப் முடிஞ்சது முடிஞ்சது தான்!”

“மே பி… ஆனா நீயா என்னையப் புரிஞ்சுகிட்டு என்கிட்ட வரணும்னு ரொம்ப எதிர்பார்த்தேன் வசு” என்றார் வருணன், என்னவென்று பிரித்தறிய முடியாத ஒரு குரலில்.

இதற்கு என்ன பதில் கூறமுடியும் என்ற யோசனையில் அமைதியாகி விட்டார் வசுந்தரா. இது அவருக்குமே அவ்வப் போது தோன்றும் விஷயம் தானே. மௌனமாக இருவரும் பாத்திரங்களை ஒதுக்கி வைத்ததும், வருணன் வந்து படுக்கையில் அமர, வசுந்தரா ‘ஹேர் டிரையரை’ இயக்கி, தலைமுடியை உலர்த்தினார். 

அதற்கு மேல் நேரத்தையும், வருணனின் பார்வை வீச்சையும் கடக்க முடியாமல், 

“பால் சாப்ட்றியா? எனக் கேட்டார்.

‘வேண்டாம்’ என மறுப்பாக தலையசைக்க, தனக்கு மட்டும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் அமர்ந்தார்.

“எனக்காக ஒரு சிப்?” எனவும், வருணன் ஒரு மிடறு விழுங்கி வசுந்தரா கையில் கொடுத்தார். 

மீதியைக் குடித்தவர், கைகளுக்குள் குவளையை உருட்டிக் கொண்டே,

“இதுக்கு நான் என்ன பதில் சொன்னாலும் அபத்தமா தான் இருக்கும் வரு. ஒரு வகைல சித்தார்த் சொன்னது கரெக்ட் தான். நான் உங்க ரெண்டு பேருக்கும் நியாயம் செய்யலை தான்”

“வசு!”

“வெயிட் நான் தப்பா எதுவும் சொல்லல! இன் மை டிஃபென்ஸ்…இப்ப நானே தான் வந்தேன். ஆனா ரொம்ப லேட்ல. வருசக்கணக்கா உன்னைய வெயிட் பண்ண வைச்சது எனக்கு இப்போ கில்ட்டியா இருக்கு வரு!”

“ஆமாமா, ஆம்பளைங்க கஷ்டம் உனக்கெங்க தெரியப் போது?” என்றார் வருணன், அந்தச் சூழலை இலகுவாக்கும் பொருட்டு. வசுந்தரா மேல் தவறே இருந்தாலும், அவரிடமே கூட விட்டுத் தரமுடியாதே வருணனால்!

“ரொம்பக் கஷ்டம் தான். மாசாமாசம் பொண்ணுங்களுக்கு வர்றது, பிரசவ வலி இதெல்லாம் விட ஆம்பளைங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்” என்று சீறவும் தான், வருணனும் இயல்பானார்.

“அம்மா தாயே, தெரியாம சொல்லிட்டேன். அந்த டம்ளர் காஞ்சு போறதுக்குள்ளயும் வைச்சிட்டு வருவியா இல்ல…”

அவரை முறைத்தபடி எழுந்த வசுந்தரா, குவளையை நீரில் அலசி வைத்துவிட்டு, விளக்கை அணைத்தார். விடிவிளக்கின் வெளிச்சம் மட்டுமே அறையை நிறைக்க, இரு கைகளையும் தலைக்கு அடியில் கொடுத்து சுழலும் மின் விசிறியைப் பார்த்தபடி படுத்திருந்தார் வருணன். அவரது இடப்பக்கத் தோளில் வசுந்தரா தலை வைத்துப் படுக்க, ஆதுரமாய் அணைத்துக் கொண்டார். 

“சோ?”

“சோ…”

“திஸ் இஸ் இட் ஹாங்?”

“ஐ திங்க் சோ…”

ஒரு கையால் தலையை தாங்கியபடி வாகாக வசுந்தரா புறம் திரும்பியவர், மறுகையால் அவரை இதமாக அணைத்துக் கொண்டார்.

“சொல்லுங்க அம்மணி, இந்தத் தருணம் எப்டி இருக்கு?”

சில நொடிகள் மௌனம்.

“இங்க வந்ததுல இருந்து, இவ்ளோ ஹேப்பியா இருந்ததே இல்ல வரு! ஃபைனலி ஐ ஆம் அட் பீஸ்…ரொம்ப ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணேன். எப்டி சொல்றது…இதுக்கா எல்லாத்தையும் வேணாம்னு ஒதுக்கி ஓடினோம்னு ஒரு பெரிய எம்ப்டினெஸ். கோவம், வெறுப்பு எல்லாம் கலந்து கட்டின மிக்சட் ஃபீலிங். அதை யாருகிட்டயும் காண்பிக்க முடியல. ஐ திங்க் உன்னைய ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன். அதை ரியலைஸ் பண்ண ரொம்ப அதிகமாவே டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்”

“ம்ம்ம், நானும் தான். ஹேப்பியஸ்ட் மேன் இன் த வோர்ல்ட் நவ்…” என்றவர்,

“எப்பவும் பெட்டர் லேட் தென் நெவர்…இப்பவும் டைம் வேஸ்ட் பண்ணப் போறியா?”

‘நோ’ என்பது போல் தலையசைத்தவர்,

“தயவுசெஞ்சு, உனக்கு தேவையான டைம் எடுத்துக்கோ அப்டின்னு க்ளீசே டயலாக் அடிக்காதே வரு” என சீண்டினார் கணவனை. 

“சேச்சே…அந்த மாதிரி வரலாறு தப்பா பேச இந்த வருணன் தேவராஜன் என்னிக்கும் எடம் குடுக்க மாட்டான்” என்றபடி மனைவியின் மூக்கோடு உரசியவர், அவர் கண்ணில் கலந்தபடி,

“ஷேல் வீ?” என்றார். 

சம்மதமாக தலையாட்டிய வசுந்தரா, கணவரை அணைத்து காதில் ஏதோ முனுமுனுக்கவும், வருணன் கண்கள் விரிந்தது.

“அடிப்பாவி, உன்னையவா இந்த உலகம் நல்லவன்னு நம்புது?” எனவும், வசுந்தரா அவர் தோளில் கிள்ள, அவரது வெட்கக் கோபத்தை ரசித்தபடி சிரித்தார் வருணன் தேவராஜன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!