Skip to content
Post Views: 769
அத்தியாயம் – 2
எண் ஏழு, லோக் கல்யாண் மார்க் – தலைமை அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம், புது தில்லி.
சித்தார்த் ஜோஷி. பிரமரின் முதன்மை செயலாளராக பதவியேற்றிருக்கும் இளைஞர். Indian Foreign Service (IFS) எனப்படும் இந்திய வெளியுறவுப் பணியில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்தவர். கடந்த சில வருடங்களாக, சீனாவுக்கான இந்தியாவின் தூதுவர். அவரது பணிக்காலத்தில் இந்திய – சீன நல்லுறவுக்கு பெரும் பாலமாக இருந்த காரணத்தினால், விதி விலக்காக இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
கிட்டத்தட்ட பத்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு சந்திப்பு! பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
Advertisement
இருவரிடமும் அப்போதைய இளமையின் வேகங்கள் சற்றே குறைந்து, முதிர்ச்சியும், மிடுக்கும் கூடி இன்னும் அழகாக, கம்பீரமாகக் காட்டியது. இந்திய பெண்களின் சராசரி உயரமான ஐந்தடியை விட வசுந்தரா உயரம் அதிகம் தான். ஐந்தடி ஆறு அங்குலம். ஆனால் சித்தார்த்தின் அருகில் நிற்கும் போது அவரது தோள்களின் உயரத்துக்குத் தான் இருந்தார்.
Advertisement
பூங்கொத்தைப் பெற்றுக் கொண்டு, தன் முன்னே நீண்ட கரத்தைப் பற்றிக் குலுக்கிய வசுந்தரா, சித்தார்த்தின் கண்களை நேராக சந்தித்து புன்னகையுடனே வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயைப் போன்ற ஒர் உவகையும், பெருமிதமுமே சித்தார்த்தின் கண்களில் மிதமிஞ்சி இருந்தது.
Advertisement
கணநேர உணர்வுகளின் பிடியில் இருந்து விரைந்து தன்னை சமன்படுத்திய சித்தார்த்தும், தலைமை அமைச்சர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி லலிதா நாயர் மற்றும் பிற அதிகாரிகளை முறையாக அறிமுகப்படுத்த, வசுந்தரா ஒவ்வொருவரிடமும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார். லலிதா நாயர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. தாரா தேவியின் தந்தை பிரதமராக இருந்த போது, இந்தப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தியிருந்தார்.
Advertisement
சித்தார்த்தும், லலிதாவும் வசுந்திராவிற்கு தலைமை அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகத்தின் முக்கிய இடங்களை சுற்றிக் காண்பித்ததோடு வழமையாக பின்பற்றும் நடைமுறைகளையும் விளக்கிக் கொண்டே வந்தனர்.
“மேம், இங்க மொத்தம் அஞ்சு பங்களா இருக்கு. நம்பர் ஃபைவ் தான் உங்களோட பெர்சனல் ரெசிடென்ஸ். செவன், ஆஃபிஸ். நம்பர் நைன் ஸ்பெஷல் பரொடெக்ஷன் ஃபோர்ஸ். ப்ரதாப் சாரோட சேர்த்து அவங்க எல்லாம் இங்க தான் மேம் ஸ்டே பண்ணுவாங்க.
இது போக 24×7 மெடிக்கல் அண்ட் எசன்சியல் செர்வீசஸ் எல்லாம் உள்ளேயே இருக்கு. ஹவுஸ் கீப்பிங், குக், கார்டனர்ன்னு எல்லாம் சேர்த்து ஒரு அம்பது ஸ்டாப் இருக்காங்க மேம்” என்றார் லலிதா.
ஐந்து தனி பங்களாக்கள் என்றாலும், எதுவும் பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் தலைமை அமைச்சரின் தனிப்பட்ட இல்லத்தில் இரு படுக்கை அறைகளும், ஒரு விருந்தினர் அறையும், சிறிய டைனிங் அறையும், முப்பது பேருக்கு மட்டுமே இடமளிக்கும் ஹால் ஒன்று மட்டுமே இருந்தது.
வசுந்திரா முதலில் பார்த்ததும் அந்த பங்களா தான். தனியாக வசிக்க இருப்பவருக்கு அதைப் பார்த்ததும் ஒரு சிறு ஆசுவாசம். ஏதேச்சையாக சித்தார்த்தைப் பார்க்க அவர் கண்களில் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத பாவனையும், சட்டென ஓர் அழுத்தமும் ஒட்டிக் கொண்டது.
ஒரு பெருமூச்சுடன் அதைக் கடந்த வசுந்தரா, முழு அலுவலகத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டார். தலைமை அமைச்சர் இல்லத்தில் முக்கிய அலுவலகம் தவிர, இரண்டு தனிப்பட்ட செயலாளர்களுக்காக சிறிய அறைகள் உள்ளன. சித்தார்த்துக்கும், லலிதாவுக்குமான அறைகள் தான் அது.
இதுவரை வசுந்தரா தனியாக இருந்ததில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே வீட்டை விட்டு வெளியே தான் தங்கி இருந்தார். ஆனால் தன்னிச்சையாக, சுதந்திரமாக முடிவுகளை எடுத்து, தன் வேலைகளை தானே செய்து பழகியவருக்கு, இந்தச் சூழல் சற்றே மூச்சடைத்தது என்பதும் உண்மை தான்.
ஏற்றுக் கொண்ட பதவிக்கேற்றவாறு மாறித் தானே ஆக வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், இந்தப் புதிய இயல்புக்கு பழகிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தவர், அலுவலக வேலைகளையும் அன்றே ஆரம்பித்தும் விட்டார்.
லலிதா எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்க, அன்றைய தினத்தின் அட்டவணையில் இருந்து, பார்த்து முடிக்க வேண்டிய முக்கியமான கோப்புகளைப் பார்வையிட ஆரம்பித்தார் வசுந்தரா. சித்தார்த்தும், லலிதாவும் முறையே அவர்களது ஆலோசனைகளையும் தேவையான இடங்களில் வழங்க, அதற்குப் பின்னர் நேரம் அவர்கள் கையில் இல்லை.
எந்த நேரமும் மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட வாய்ப்பு இருக்கிறது என்பது போன்ற பதட்டத்தில் சர்வதேச சூழல் இருக்க, முந்தைய அரசு பரிசளித்துச் சென்ற, போர் மேகங்கள் சூழும் அபாயச் சங்குடன் அண்டை நாடுகளுடான சறுக்கலான உறவு, விலைவாசி ஏற்றம், எரிபொருள் பற்றாக்குறை, இயற்கை பேரிடர்கள், வேலையில்லாத் திண்டாட்டம் என பல்வேறு சிக்கல்கள் நாட்டை எதிர் நோக்கியிருக்க, புதிய அரசுக்கு முதல் நாளிலிருந்தே நெருக்கடி தான்.
ஆங்கிலத்தில், ‘hit the ground running’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘ஒரு வேலையை உடனே துவங்கி, முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் கடினமாக உழைப்பது’ என்பதே அதன் பொருள். அதற்கிணங்க, முன்னிருக்கும் நெருக்கடிகள் எல்லாவற்றையும் சமாளித்து, ஒரு தொழில் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் (Chief Executive Officer – CEO) போல நாட்டை நிர்வகிப்பது வசுந்தராவின் முன்னிறுக்கும் மிகப் பெரும் சவால்.
கூட்டணி ஆட்சி என்பது வேறு இன்னும் கூடுதல் தலைவலி. ஆட்சி அமைக்கும் முன்பே அமைச்சரவையில் பங்கெடுப்பதற்கு கூட்டணி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. தாரா தேவி தான் அதையெல்லாம் சமாளித்து அவர்கள் ஆதரவை நிலை நாட்ட, சில முக்கிய இலாக்காக்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது. ஒருபுறம் இவை எல்லாம் மனதின் ஓரத்தில் ஓடிக் கொண்டேயிருந்தது வசுந்தராவிற்கு.
ஓரளவு முக்கிய கோப்புகளை சரிபார்த்த பின்பு, லலிதா,
“மேம், நாளைக்கு முதல் கேபினட் மீட்டிங் இருக்கு. அதுக்கான அஜெண்டா (நிகழ்ச்சி நிரல்) ஒரு வாட்டி பார்த்துடுறீங்களா?” என்க,
“ம்ம்ம், அதுக்கு முன்னாடி, கட்சியோட தேர்தல் அறிக்கையை அடிப்படையா வைச்சு ஒரு ஹை லெவல் பிளான் ரெடி பண்ணனும். அதை தான் நாளைக்கு மீட்டிங்ல முக்கியமா பேசணும். நான் என்னோட டிராஃப்ட் உங்களுக்கும் சித்தார்த்துக்கும் ஈ-மெயில் பண்றேன்” என்றவர், உடனே அதை அனுப்பியும் விட்டு,
“ஒரு பதினைஞ்சு நிமிஷம் பிரேக் எடுத்துக்கலாம். தென் வீ’ல் ரீ க்ரூப் அண்ட் கோ த்ரூ த பிளான்” என்றதும், லலிதா தலையசைத்து விட்டு மடிக்கணிணியுடன் அவரது அறைக்குச் சென்று விட்டார்.
சித்தார்த் அறையை விட்டு வெளியேற சிறிது தயங்கி நிற்க, கையில் இருந்த கோப்பில் இருந்த நிமிர்ந்து வாசலைப் பார்த்த வசுந்தரா,
“என்னாச்சு சித்தார்த்? என்கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?” என்றார்.
தன்னைப் பார்த்ததில் இருந்து, எந்த வித பாதிப்புமின்றி இயந்தரத்தனமாக வெளிப்பட்ட அந்தக் கேள்வியில், சித்தார்த்தின் மனம் காயப்பட்டது. ஆனால் சொல்லாமல் தீருமோ இந்த வேதனை!
“எஸ் மேம், பட் இட்ஸ் பெர்சனல். ஐ நீட் சம் டைரி டைம் வித் யூ”
“கேன் திஸ் வெயிட்?”
“ஆஃப் கோர்ஸ். ஆனா எவ்ளோ சீக்கிரம் பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசுறது நல்லது”
வசு கேள்வியாகப் பார்க்க,
“உங்களுக்கு எப்படின்னு தெரியல. ஆனா எனக்கு ஒரு அன்ரிசால்வ்ட் டென்ஷன் உள்ள போட்டு அழுத்துற மாதிரி இருக்கு. இட்ஸ் நாட் குட் ஃபார் அவர் ஜாப்ஸ். ஐ வாண்டு டு கிவ் மை பெஸ்ட் டு யூ அண்ட் அவர் கன்ட்ரி” என்ற சித்தார்த்திடம்,
“உங்க ஃபோன் நம்பர் மாத்தீட்டிங்களா என்ன?” என்று கேட்க, இப்பொழுது வியப்பின் சாயல் சித்தார்த்திடம். அவரது காயம் கண்ட மனதிற்கு மயிலறகால் லேசாக மருந்து தடவப்பட்ட உணர்வு.
“இல்லை மேம். ஒருத்தரோட அழைப்புக்காக நானும், என்னோட ஃபோனும் பத்து வருசமா வெயிட்டிங்! அதுக்காகவே என்னோட ப்ரைவேட் நம்பர் அப்டியே தான் இருக்கு” என்றவரிடம் வெளிப்படையாக ஆளை அசரடிக்கும் புன்னகை.
‘இவர் மாறவே இல்லை’ என மனதுக்குள் அலுத்துக் கொண்டாலும், வெளியேறத் துடித்த புன்னகையை, உதடுகளை மடித்து விழுங்கி, முகம் மாறாமல் காத்த வசுந்தரா,
“நான் இன்னிக்கு நைட் பத்து மணி போல கூப்பிடுறேன் சித்தார்த். உங்களுக்கு ஓகே வா?” என கேட்க,
“வொர்க்ஸ் ஃபார் மீ மேம்” என்று பதிலளித்த சித்தார்த், துள்ளலான நடையுடன் விடைபெற்றார்.
பலவிதமான உணர்ச்சிகள், அழுத்தங்கள், பலதரப்பட்ட அறிமுகங்கள், மலைபோல் குவிந்திருக்கும் வேலைகள், புதிய அரசுக்கான சவால்கள் என அன்றைய நாள் வசுந்தராவை வெகுவாக சோர்வடையச் செய்திருந்தது.
உடனே அப்பாவின் ஞாபகம் வந்து விட, இரவு உணவை முடித்தவுடன் முதல் வேலையாக வனதேவனுக்கு அழைத்து விட்டார் வசுந்தரா.
முதல் அழைப்பிலேயே அலைபேசியை எடுத்த வனதேவன்,
“சொல்லுடா கண்ணா. சாப்ட்டியா?” என்றார் எடுத்ததுமே.
“ம்ம்ம், ஆச்சுப்பா. நீங்களும், அம்மாவும் சாப்டீங்களா? ஃப்ளைட் எல்லாம் ஓகேவா?”
“எல்லாம் ஓகே. மீடியா ஹைப் தான் கொஞ்சம் ஓவரா இருந்துச்சு. அது கொஞ்ச நாள்ல அடங்கிடும். நீ சொல்லு. ஃபர்ஸ்ட் டே இன் த லைஃப் ஆஃப் பி.எம்! எப்டி இருந்துச்சு?”
“ம்ஹ்ஹ்ம், லாங் அண்ட் டயரிங் டு பி ஹானஸ்ட்”
“ஹா, ஹா. அஸ் எக்ஸ்பெட்டட் ஐ கெஸ். சிட் (Sid) என்ன சொல்றார்?”
“அவருக்கென்ன. அப்டியே இருக்கார், முன்ன விட கான்ஃபிடன்ஸ் கூடிருச்சு!” என்றார் சலிப்பான குரலில்.
“அதுக்கேன்டா இவ்ளோ அலுத்துக்கிற?” என்றார் வனதேவன் கனிவாக.
“ம்ஹ்ம்ம், தெரியலப்பா. என்கிட்ட பேசணும்னு வேற சொல்லிருக்கார்”
“ஓகேடா, ரிலாக்ஸ். சிட் ரொம்ப மெச்சூர்ட் பெர்சன். இந்த பத்து வருசம் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைல எவ்வளவோ மாற்றம் கொண்டு வந்துருக்கு. ரெண்டு பேரும் பெரிய பொறுப்பான பதவில இருக்கவங்க. சோ, நிதானமா தான் ஹேண்டில் பண்ணுவீங்க. நீ எதுவும் பெருசா யோசிக்காத”
“அது தான் நானும் முயற்சி பண்றேன். ஆனா நினைச்சத விட, சொல்றத விட நிஜத்தில செயல்படுத்துறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா”
“ம்ம்ம், இட்ஸ் நேச்சுரல், டேக் இட் ஈசி. வருண் தம்பி பேசினாரா?”
“இல்லப்பா, காலைல பதவி ஏற்பு விழால பார்த்தப்போ தலையசைச்சதோட சரி. இனிமே தான் தாரா மேம், வருண், தேவா மாமாட்ட எல்லாம் பேசணும். என்னோட ஸ்கெட்யூல் ரொம்ப டைட்டா இருக்குப்பா. இன்னிக்கு எப்டியும் பேசிடுவேன். ஆனா ரெகுலரா பேசுறது எல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேன்”
“ம்ம்ம், நீ கட்சி வேலையும், அஃபிசியல் கவர்ன்மெண்ட் வேலையும் ஒரு ஃபைன் பேலன்ஸ்ல தான் கொண்டு போகனும். இதுக்கும் மேல உன்னோட பெர்சனல் லைஃபுக்கும் நேரம் ஒதுக்கணும். கண்டிப்பா கஷ்டம் தான். ஆனா முடியாதது இல்ல கண்ணா”
“எப்படி எல்லாம் சமாளிக்கப் போறேன்னு ரொம்ப மலைப்பா தான் இருக்குப்பா. சோ எனக்கு நானே, ஐ கேன் டூ திஸ்னு அப்பப்ப சொல்லிக்கிறேன்”
“தேட்ஸ் மை கேர்ள். சரிடா லேட்டாயிடுச்சு. நீ வேலைய முடிச்சிட்டு தூங்கு. குட் நைட்” என்று அழைப்பை துண்டித்து விட்டார்.
அதற்குப் பின்னர், மீதமிருந்த இன்னும் சில அலுவல்களையும் வீட்டில் இருந்தே முடித்து விட்டு மணியைப் பார்க்க, பத்தாக சில நிமிடங்களே இருந்தது. படுக்கை அறைக்குள் நுழைந்து, இலகுவான இரவு உடைக்கு மாறியவர், இன்று அதிகாலையில் ஏறக் கட்டிய கொண்டையை பிரித்து, கூந்தலை தளர விட்டு படுக்கையில் விழுந்தார்.
சித்தார்த்துக்கு அழைக்கலாமா, வேண்டாமா என்று நீ யோசனைக்குப் பின், இது பேசாமல் தீராது என முடிவெடுத்தவர், அவரது தனிப்பட்ட அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தார்.
error: Content is protected !!