Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 11.2

மறுநாள் சொன்னது போலவே சுமித்ரா அவசரமாகக் கிளம்பியவள் அவளுக்கு அலுவலக கேப் வரவே “போயிட்டு வர்றேன் சந்து… மறக்காம லஞ்ச் எடுத்துட்டுப் போடி.. எதையும் நினைச்சிட்டுச் சாப்பிடாம இருக்காதே” என்று சிலபல அறிவுரைகளை அள்ளிக் கொடுத்துவிட்டு கேபினுள் அமர்ந்தாள்.

 

கேப் வேகமெடுக்க சுமித்ரா ஓட்டுனரிடம் “பாலாண்ணா! கொஞ்சம் வேகமாகப் போறிங்களா? இன்னைக்குனு பார்த்து காலையிலேயே மீட்டிங்னு சொல்லிட்டாங்க. லேட் ஆச்சுனா டி.எல்ல இருந்து மேனேஜர் வரைக்கும் எனக்கு தீபாவளி கொண்டாட்டிட்டு தான் ஓய்வாங்க” என்று கூற அவரும் அவள் எப்போதும் அவசரப்படுத்திப் பார்த்ததில்லை என்பதால் முடிந்தளவு வேகமாகவே ஓட்டினார்.

 



Advertisement

ஆனால் எதிரில் வந்த கார் ஒன்றில் மோதாமல் இருக்க வேகத்தைக் குறைத்தவர் பின்னே வந்துக் கொண்டிருக்கும் காரின் ஹாரன் சத்தத்தைப் பதற்றத்தில் கவனியாது விட்டதால் அவரது டாக்ஸியானது பின்னே வந்த காரின் முன்பாகத்தில் இடிக்க அந்தக் காரின் முன்பாகம் சற்று அதிகப்படியான ஓசையுடன் உள்வாங்கிக் கொண்டது.

 

அதைத் தொடர்ந்து காரின் உரிமையாளனின் கோபத்தை அவனது கருப்புநிற பென்ஸ் காரின் வேகத்தை அதிகரித்ததில் இருந்தே தெரிந்து கொண்டாள் சுமித்ரா. அது வேறு ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அகலம் உள்ள சாலை. சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதால் வழி மாறி போகச் சொன்ன தனது புத்திச்சாலித்தனத்தை எண்ணி அப்போது வருத்தப்பட்டுக் கொண்டாள்.

Advertisement

 

Advertisement

ஓட்டுனரிடம் “அண்ணா! அந்த காரோட ஓனர் கிட்ட ஒரு சாரி மட்டும் கேட்டுருங்கண்ணா. அவரு நம்ம கேபை குறுக்கப் புகுந்து நிறுத்தப் போறாருனு நினைக்கேன்” என்று அவள் சொல்லும் போதே அவர்களின் பக்கவாட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த இடிப்பட்ட கார் எதிர்பாராவிதமாக அவர்களை முந்திக் கொண்டு சென்று அவர்களை மறிக்கும் வண்ணமாக சாலையில் நிற்கவும் ஓட்டுனர் போட்ட பிரேக்கில் சுமித்ரா அவள் முன் இருந்த இருக்கையின் பின்பகுதியில் முட்டிவிட்டு தனது இருக்கையில் சாய்ந்தாள்.

 

ஓட்டுனர் “சிஸ்டர் உங்களுக்கு அடி ஒன்னும் படலையே?” என்று அக்கறையுடன் விசாரிக்க இல்லையென்று அவள் மறுக்க அதே நேரம் காரின் உரிமையாளன் வேகமாக வந்து கேபின் மூடியிருந்த கண்ணாடிக்கதவில் பட்டென்று அடிக்கவும் அவர் கீழே இறங்கி அவனைச் சமாதானப்படுத்த முயன்றார்.

Advertisement

 

சுமித்ரா நெற்றியைத் தடவியபடி வெளியே வேடிக்கைப் பார்க்க கார் உரிமையாளனின் முகத்தை அவளால் காண இயலவில்லை. மீட்டிங்குக்கான நேரம் வேறு ஆகிக் கொண்டிருக்க மொபைலில் நேரத்தைப் பார்த்தவள் இனியும் பொறுக்க இயலாமல் கேபை விட்டுக் கீழே இறங்கினாள்.

 

கீழே இறங்கியவளின் செவியில் அந்தக் கார் உரிமையாளனின் திமிரான பேச்சுக்கள் விழுந்து வைக்க பொறுமைசாலியான அவளே எரிச்சலடைந்தாள் என்றால் மிகையில்லை.

 

“சார்! ஆப்போசிட் டேரக்சன்ல வந்த வண்டியை இடிச்சிடக் கூடாதுனு ஸ்பீடை குறைச்சேன்…டென்சன்ல உங்க ஹாரன் சவுண்ட் எனக்கு கேக்கலை சார்”

 

“அதெல்லாம் பேசாதே மேன்! உன்னால என்னோட ஃபேவரைட் கார், மை டியர் பிளாக் பியூட்டி டேமேஜ் ஆகிப் போச்சு. இதுக்கு ஒரு பதில் சொல்லாம உன்னை இங்கே இருந்து நகரவிட மாட்டேன்”

 

அவரது வயதைக் கூட பொருட்படுத்தாமல் அவன் பிடிவாதமாகப் பேசவே கடுப்பானவள் அவளே சென்று அவனிடம் பேச முனைந்தாள்.

 

“ஹலோ” என்று எரிச்சலை மறைக்காதக் குரலில் அவள் அழைக்க திரும்பியவன் தன் எதிரே மஞ்சள் வண்ண காட்டன் டாப்பும், கருப்பு நிற லெகிங்க்ஸும் அணிந்து தனது நீண்ட கூந்தலை போனிடெயிலாகப் பக்கவாட்டில் போட்டிருந்தபடி அவனை நோக்கி எரிச்சலான விழிவீச்சை எறிந்து கொண்டுக் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்றவளைக் கண்டதும் வாயடைத்துப் போனான்.

 

அவன் வாயடைத்ததற்கு முக்கியக் காரணம் அவளின் மிகவும் நீளமான கூந்தல் தான். இதை அவன் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறான். சிறுவயதில் ரபெஞ்ஜல் என்ற நீளக்கூந்தல் காரிகையின் கதையைப் படித்திருக்கிறான். ஒரு வேளை அவளுக்கும் இதே போல் தான் நீண்ட கூந்தல் இருந்திருக்குமோ என்று ஃபேரிடேல் உலகுக்குச் சென்றவன் தன் முன்னே நின்று காச்மூச்சென்று கத்துபவளின் வார்த்தையைக் காதில் போட்டுக் கொண்டால் தானே..

 

“அவரு இவ்ளோ நேரமா கெஞ்சுறாரு… நீ அதைக் காது குடுத்துக் கூட கேக்காம ஃபேவரைட் கார்னு பில்டப்பா குடுக்கிற? இப்போ மட்டும் நீ கேபுக்கு வழி விடலை, உன் ஃபேவரைட் காரோட கண்ணாடி சுக்குநூறா உடைஞ்சுப் போயிடும்” என்று எச்சரிக்க சுமித்ராவின் எதிரில் நின்றவனோ அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லையே…

 

அவன் நின்ற விதத்தைக் கண்டவள் அவனால் கால தாமதம் ஆன கோபம் தலைக்கு ஏற சாலை ஓரமாகக் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அவன் காரின் முன்புறக் கண்ணாடியை நோக்கி எறியக் குறி வைக்க இவ்வளவு நேரம் இருந்த கதையுலகில் இருந்து மீண்டான் அந்த காரின் உரிமையாளன்.

 

தன் எதிரே கையில் கல்லுடன் நிற்கும் அந்தப் பெண் காரின் முன்புறக் கண்ணாடியைக் குறிவைப்பதை அறிந்தவன் பதறிச் சென்று அவளுக்கும் காருக்குமான இடைவெளியில் இரு கைகளையும் விரித்தபடி காரை மறைத்தவன் “ஏய் என்ன பண்ணுற? முதல்ல அந்தக் கல்லை கீழே போடு” என்று படபடக்க

 

சுமித்ரா எரிச்சல் தணியாதக் குரலில் “முடியாது! மரியாதையா நீ வழியை விடலைனா உன் கார் கண்ணாடியை உடைச்சிடுவேன்” என்று கண்ணை உருட்டி மிரட்ட

 

அந்தக் கார் உரிமையாளனுக்கு இவ்வளவு நேரம் ரபெஞ்ஜல் ராஜகுமாரியாகத் தெரிந்தவள் தற்போது விட்டலச்சாரியாவின் ஜெகன்மோகினி போல உருமாறித் தோன்ற ஆரம்பித்தாள்.

 

“இந்த ஜெகன்மோகினி என்னோட கார்க்கண்ணாடியை உண்மையாவே உடைச்சிடுவா போலயே” என்ற பதற்றத்துடன் அவன் “ஓகே ஓகே! நான் வழிவிடுறேன்” என்று அவன் சமாதானத்துக்கு உடன்பட ஓட்டுனரைக் காரை எடுக்கச் சொன்னாள் அவள். அந்தக் காரின் உரிமையாளனும் காரை வழியை விட்டு ஓரமாக ஓட்டிச் செல்ல சுமித்ரா கல்லைத் தூக்கிவீசி விட்டு கேபில் அமர்ந்தாள்.

 

அந்தக் காரின் உரிமையாளன் காரில் இருந்தபடி “ஏய் ஜெகன்மோகினி! நீ ஆள் தெரியாம மோதிட்டே… நான் யாரு தெரியுமா? ஆரியா நாராயணன்… என்னோட காரை இடிச்சு டேமேஜ் பண்ணதோட என் ஃபேவரைட் பிளாக் பியூட்டியோட கண்ணாடியை உடைப்பேனு வேறயா மிரட்டுற…இதுக்கு ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் உனக்கு நான் லெசன் கத்துக் குடுப்பேன்” என்று சவால் விட

 

சுமித்ரா நக்கலாக உதட்டைச் சுழித்தவள் “போடா டேய்! கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம்…இந்தக் கதையை வேற யாரு கிட்டவாச்சும் போய்ச் சொல்லு” என்று சொன்னபடி கேபில் கடந்துவிட்டாள்.

 

ஆனால் காரின் உரிமையாளனான ஆரியாவோ அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரியாது விழிக்க ஆரம்பித்தான்.

 

**********

 

ஆரியா காலையிலேயே அவனது பிளாக் பியூட்டிக்கு நடந்த அவலத்தை நினைத்துக் கொதித்துப் போனவனாய் அலுவலகத்துக்குள் நுழைந்தான். வழக்கமாக அவனது உற்சாகமான குட் மார்னிங்குக்கு அடிமையான அலுவலக ஊழியர்கள் இன்று அது இல்லாமல் போகவே அவனுக்கு எதுவும் பிரச்சனையோ என்று எண்ணி அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

 

ஆரியா அதையெல்லாம் கவனிக்க இயலாதவனாய் சுமித்ரா சொல்லிவிட்டுச் சென்ற பழமொழிக்கு அர்த்தம் என்ன என்று புரியாமல் குழப்பத்துடன் தனது அலுவலக அறையை நோக்கி நடைபோட அங்கே அண்ணனின் அலுவலக அறையில் இருந்து கடுகடுத்த முகத்துடன் வெளியேறிய சந்தியாவைக் கண்டதும் இன்னும் பிரச்சனை தீரவில்லை போல என்று எண்ணியபடி அவளிடம் வந்தான்.

 

“குட் மார்னிங் தியா!” என்றபடி வந்தவனை ஓரு சோகப்புன்னகையுடன் வரவேற்றவளை நமட்டுச்சிரிப்புடன் ஏறிட்டான்.

 

பின்னர் அவளுடன் சேர்ந்து நடைபோட்டபடி “என்னாச்சு? இன்னும் அண்ணா உன் மேல கோவமா தான் இருக்கானா? அவன் இப்போ தான் இந்த மாதிரி பிராப்ளம்ஸை ரியல் லைஃப்ல பார்க்கிறான். அங்கே நடந்தது அநியாயம்னு அவனுக்குத் தோணிருக்கு.. அதான் கொஞ்சம் ரூடா பிஹேவ் பண்ணிட்டான்.. அவன் இடத்துல நான் இருந்தாலும் இப்பிடி தான் நடந்திருப்பேன்… பிகாஸ் இந்த விஷயங்கள் எல்லாமே எங்களுக்குப் புதுசு தியா” என்று விளக்க சந்தியாவுக்குள் இவ்வளவு நேரம் புகையை மட்டும் கக்கிக் கொண்டிருந்த எரிமலை தற்போது வெடித்து லாவா குழம்பு அவள் காது மூக்கு வழியே வெளிவரத் தொடங்கி விட்டது.

 

“உங்க நொண்ணா என்ன அம்பி விக்ரம்மா? அநியாயத்தைக் கண்டதும் பொங்கி அன்னியன் அவதாரம் எடுக்கிதுக்கு…அன்னைக்கு உங்க பாசமலர் அடிச்ச அடியை இந்த ஜென்மத்துல நான் மறக்கமாட்டேன் பாஸ்”

 

“அஹான்! எல்லாத்துக்கும் சேர்த்து நீ தான் அவன் கன்னத்துல உன்னோட அஞ்சுவிரல் படத்தையும் வரைஞ்சு விட்டுட்டியே தியா”

 

“அவனை கன்ட்ரோல் பண்ண எனக்கு வேற வழி தெரியலை… எப்பிடியும் அவ்ளோ பெரிய உருவத்துக்கு என் அடில்லாம் கொசு கடிக்கிற மாதிரி தான்… ஆனா உங்க அண்ணா அதை மனசுல வச்சுகிட்டு ஆகாத மருமகள் கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்ங்கிற மாதிரி நான் என்ன பண்ணுனாலும் அதுல குறை கண்டுபிடிக்கிறான். இன்னைக்கு சுப்புலெட்சுமினு ஒரு அக்கா புதுசா கேண்டின்ல குக்கிங் அஸிஸ்டெண்டா ஜாயின் பண்ணிருக்காங்க. வேலையில எதுவும் பிரச்சனைனா நான் சந்தியா கிட்ட சொல்லுறேன் தம்பினு உங்க நொண்ணா கிட்ட அந்த அக்கா சொன்னாங்க.

 

அதுக்கு அந்த மார்ஸ்மாலோ ‘அக்கா இவளே ஒரு வேஸ்ட் ஃபெல்லோ.. இவ கிட்டச் சொல்லி ஒன்னும் ஆகப் போறது இல்லை.. நீங்க டேரக்டா என்னை கான்டாக்ட் பண்ணுங்கனு’ சொல்லிட்டு கேசுவலா போறான்” என்று சந்தியா புலம்பித் தீர்க்க ஆரியாவின் கவனம் முழுவதும் அவள் முன்பாதியில் சொன்ன சொலவடையின் மீதே இருக்க அவன் மற்ற எதையும் காது கொடுத்துக் கேட்டானில்லை.

 

சந்தியா இன்னும் பொங்குவதற்குள் “தியா தியா ஒன் செகண்ட்… நீ இப்போ ஏதோ சொன்னியே கை பட்டா, கால் பட்டானு.. அதுக்கு என்ன மீனிங்?” என்று கேட்க சந்தியா தன் தலையிலடித்துக் கொண்டாள்.

 

ஆரியாவோ அவள் தான் அந்த ஜெகன்மோகினி சொன்ன வார்த்தைக்கும் சரியான அர்த்தம் கூற முடிந்தவள் என்பதால் ஆர்வத்துடன் அவள் என்னச் சொல்ல வருகிறாள் என்பதைக் கேட்க காத்திருந்தான்.

 

“உங்க குடும்பத்துக்கே இந்த பிராப்ளம் இருக்கா, இல்ல உங்க அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கு மட்டும் தானா? நான் என்ன புரியாத லாங்வேஜ்லயா பேசுறேன்? சும்மா தமிழ் வார்த்தைக்கே அர்த்தம் சொல்லு அர்த்தம் சொல்லுனு என்னைப் போட்டு டார்ச்சர் பண்ணுறிங்க”

 

“தியா! ஹானஸ்ட்லி இந்தச் செண்டென்ஸ் எதுவுமே நாங்கக் கேட்டுப் பழகுனது இல்லை..“

 

“ஓகே ஓகே! அர்த்தம் தானே சொல்லணும்? அதோட அர்த்தம் என்னென்னா நமக்கு ஒருத்தவங்க மேல மனவருத்தம் இருந்துச்சுனா அவங்க என்ன பண்ணுனாலும் நமக்குத் தப்பா தான் தெரியும்… அர்த்தம் போதுமா?” என்று கேட்டவள் தனது கேபினுக்குள் கண்ணாடிக்கதவைத் திறந்தபடி நுழைய அவள் பின்னேயே ஆரியாவும் நுழைந்தான்.

 

“நோ தியா! இன்னும் ஒரே ஒரு செண்டென்ஸுக்கு மட்டும் அர்த்தம் சொல்லு பிளீஸ்” என்று கெஞ்ச சந்தியா பெரியமனது பண்ணி சம்மதித்தாள்.

 

ஆரியா காலையில் தனது பிளாக் பியூட்டிக்கு இழைக்கப்பட்ட அநீதியை வருத்தம் சொட்டும் குரலில் எடுத்துரைத்தவன் தன்னால் முதலில் ரபெஞ்ஜல் என்று ரசிக்கப்பட்டவள் பின்னர் ஜெகன்மோகினி அவதாரம் எடுத்த கதையையும் கதை முடிவில் அவள் சொல்லிவிட்டுச் சென்ற வாசகத்தையும் கூறிவிட்டு “இப்போ சொல்லு! இதுக்கு என்ன மீனிங்?” என்று கேட்க சந்தியா இவ்வளவு நேரம் இருந்த இறுக்கமான மனநிலை மாறிச் சத்தம் போட்டுச் சிரித்தாள்.

 

சிரித்துச் சிரித்துக் கண்ணில் நீர் ததும்ப அதைச் சுண்டிவிட்டபடி “அடப் பாவமே! அந்தப் பொண்ணு சரியா தான் சொல்லிட்டுப் போயிருக்கு…கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவரு வானம் ஏறி வைகுண்டம் போகப் போறிங்களாக்கும்” என்று கிண்டலடிக்க

 

ஆரியா “சரி சரி! என்னை கலாய்ச்சு சந்தோசப்பட்டது போதும்.. மீனிங்கைச் சொல்லு தியா” என்று காரியத்தில் கண்ணாய்க் கேட்க

 

சந்தியா “அவ உங்க கண்ணு முன்னாடி இருந்தப்போவே உங்களால ஒன்னும் பண்ண முடியலையே…இவ்ளோ பெரிய சென்னை சிட்டியில அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு நீங்க அவளுக்குப் பாடம் கத்துக் குடுக்கப் போறிங்களானு உங்களைக் கிண்டல் பண்ணிட்டுப் போயிருக்கா பாஸ்” என்று சந்தியா விஷயத்தைப் போட்டு உடைக்க இது தான் அதற்கு அர்த்தமா என்றபடி அவள் மேஜையில் இருக்கும் டேபிள்வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தான்.

 

சந்தியா கேலியாக “என்ன அந்தப் பொண்ணோட நியாபகமா?” என்று கேட்டுவிட்டு கண்ணைச் சிமிட்டினாள்.

“அந்த ஜெகன்மோகினியை நான் ஏன் நினைக்கப் போறேன் தியா?”

 

“அஹான்! பார்த்து பாஸ்… இப்போ ஜெகன்மோகினினு சொல்லுற ஆளு நாளைக்கு யாரடி நீ மோகினி தனுஷ் மாதிரி அவ பின்னாடி சுத்தப் போறிங்க”

 

“நானா? நெவர் தியா. இட்ஸ் நாட் பாஸிபிள்” என்று தோளைக் குலுக்கியபடி அவன் எழ சந்தியா புன்னகையுடன் வேலையைத் தொடர ஆரம்பித்தாள், அங்கே ஒருவன் அவள் தனது கோபத்தைப் போக்குவதற்காக எதையாவது செய்ய மாட்டாளா என்று விசித்திரமாக ஏங்கிக் கொண்டிருப்பதை அறியாதவளாய்…

 

சாரல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!