Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-18

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

மு.வ விளக்க உரை: தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

தேவ ரஞ்சனாவின் காலை அதிரனுக்கான குறுஞ்செய்தியோடு தான் ஆரம்பித்தது. ஒரு நாள் கடந்து அவனைப் பார்க்க போவதிலும் காத்யாயினி கொடுத்த தெளிவிலும் சற்று உற்சாகமாகவே தயாரானாள்.

தலை வாரி முடித்தவளுக்கு அதிரன் அன்று கூறியது நினைவு வர சந்தனத்தையும் குங்குமத்தையும் சிறு கீற்றாய் நெற்றியில் வைத்துக் கொண்டாள்.



Advertisement

வழக்கமான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்தவள் தனதறைக் கதவைத் திறந்த போது அதிரன் ஏதோ ஒரு கோப்பை கையில் வைத்து பார்த்த படி நின்றிருந்தான்.

நேரத்தைப் பார்த்தவள் இத்தனை சீக்கிரம் அவன் வந்தது தனக்காக தான் என்பது புரிந்து மெலிதாய் புன்னகைத்தாள்.

“குட் மார்னிங்..”

Advertisement

“சொன்ன மாதிரியே வந்துட்டேன். மேடம் இனி மிரட்ட மாட்டீங்களே?”

Advertisement

“அதிரனை நான் மிரட்டாம?”, என்றவள் எப்போதும் போல் விழி தாழ்த்தியிருக்க அவளருகில் வந்து நின்றவன்,

“எப்போ தான் என்னைப் பார்த்து பேசுவ நீ?”

“நான் தான் சொல்லிட்டேனே அந்த ப்ரவுண் கண்ணு என்னை..”, என்றவளின் தாடையில் ஒரு விரல் வைத்து அவள் முகத்தை நிமிர்த்தியவனின் பார்வை அவளது நெற்றியில் பதிந்தது.

Advertisement

“அழகு எக்ஸஸா இருக்கே? எனக்காகவா?”

“ஆமானு சொன்னா?”

“கண்டிப்பா இன்னும் கொஞ்சம் ரசிப்பேன்.”, என்றதில் தேவா வெட்கப்பட்டு சிரித்தாள்.

“இந்த சிரிப்புக்கு வேற எதோ அர்த்தம் இருக்கே?”

“இல்ல.. நீங்களும் சொன்னீங்க அம்மாவும் சொன்னாங்க. ஆனால் அது நம்புற மாதிரி இல்லையே?”

“என்ன சொன்னோம்?”

“நீங்க ரொம்ப இன்ட்ரோவெர்ட்.”, என்று கூறியவளின் கண்களில் மெலிதான குறும்பு.

“உன்கிட்ட அது வாய்ப்பில்லனு புரிஞ்சுடுச்சு. அதனால அப்படி இருக்க எந்த முயற்சியும் பண்ணலை.”

“இது எனக்கு மட்டுமான அதிரன். இப்படியே இருக்கட்டும்”

“ரஞ்சனாக்கு அப்போ பயம் பதட்டமெல்லாம் குறைஞ்சுடுச்சு?”

“ம்ம்..”

“என் வயசு தெரியுமா?”

“!!”

“முப்பத்தி மூணு வயசில் தனியா இருந்த வரை ரொம்ப ஜென்டில் மேனா இருந்தேன். ஆனால் இப்போ அந்த ஒருத்திகிட்ட புத்தி ஏடாகூடமா எல்லாம் யோசிக்குது. என்ன பண்றது?”

“நீங்க.. என்ன பேசுறீங்க..”, என்றவளின் பதட்டம் அப்பட்டமாய் அவள் குரலிலும் முகத்திலும் தெரிய லேசாய் சிரித்தவனாய்,

“பயம் இன்னும் முழுசா போகலையே..”

“நீங்க கிளம்புங்க.. வசந்த் வந்துர போறார்..”

“இப்படி விரட்டுறதுக்காகவா என்னை கிளம்பி வர சொன்ன?”, என்றதற்கு ரஞ்சனாவிடம் பதிலில்லை.

“நேத்து கேட்ட பாட்டில் இருந்தது தான் உன் தூக்கம் போன காரணமா?”

“ஆமா..”

“அகத்தை மொத்தமா அறிஞ்சுக்க எனக்கும் ஆசையா தான் இருக்கு.”

“ஐயோ நீங்க.. நான் போறேன்..”, என்றவள் வெளியே செல்ல எத்தனிக்க கரம் பற்றி தன்னருகில் நிறுத்தியிருந்தான்.

“நான் எந்த பொண்ணுகிட்டேயும் இப்படியெல்லாம் இருப்பேன்னும் என்கிட்ட எந்த பொண்ணும் இப்படி வெட்கப்பட்டு நிக்கும்னும் நினைச்சதில்ல.

யூ ஆர் மேக்கிங் மை டேஸ் ப்யூட்டிஃபூல் ரஞ்சு. தேங்க் யூ.”, என்றவனின் விரல் ரஞ்சனாவின் கழுத்து மச்சத்தை லேசாய் வருடி விலகியது.

அத்தனை நேரம் விழி மூடி நின்றிருந்தவள் விழி திறந்து அவனது கண்களை நேருக்கு நேராய் ஏறிட்டு புன்னகைத்தாள்.

அதிரன் தனது வலக் கரத்தை அவள் முகத்தின் அருகில் நீட்ட தனது கரத்தை அதில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள் தேவா.

“கல்யாணம் வரை நான் யோக்கியனா மட்டுமே இருக்கணும். அது தான் நான் உனக்கு கொடுக்குற மரியாதை. அதனால அப்பபோ இந்த கையை மட்டும் என்கிட்ட கொடுத்து வாங்கிக்கோ…”, என்றவன் விரல் கொண்டு மென்மையாய் வருடி அழுத்திக் கொடுத்தான்.

“ஹவ் அ குட் டே..”, என்ற படி லேசாய் அவளின் பின் கையில் இதழ் பதித்து நகர்ந்திருந்தான் அதிரன்.

இதற்கிடையில் காத்யாயினி நிச்சயத்திற்கு நெருங்கிய உறவுகளை அழைக்க ஆரம்பித்திருந்தார்.

அதிரனுக்குத் திருமணம் என்பதிலேயே பலருக்கு தங்களுக்கான வாய்ப்பு பறிபோனதே என்ற கவலை குரலில் அப்பட்டமாய் தெரிய தேவாவைப் பற்றி பெரிதாய் எந்த தகவலையும் யாரிடமும் கூறவில்லை காத்யாயினி.

ஆனால் அவரது தம்பியோ அன்றே கிளம்பி வந்திருந்தார். தன்னிடம் தமக்கை மகனின் திருமணத்தைப் பற்றி தகவல் போல் கூறியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போயிருந்தது.

“என்னக்கா பொண்ணு பார்க்கவோ முடிவு பண்ணவோ என்னை கூப்பிடணும்னு கூட தோணலையா உனக்கு?”

“என்ன கிருஷ்ணா இப்படியெல்லாம் பேசுற. அதிக்கு பிடிச்சுருக்கு இதுக்கு மேல முடிவு பண்ண என்ன இருக்கு?

அதான் நேரா நிச்சயத்தையே வைச்சுட்டேன்.”

“பொண்ணு யாரு? எந்தக் குடும்பம்?”

“பொண்ணு பேர் தேவ ரஞ்சனா. திருப்பூர் பக்கம் பூர்வீகம். ரொம்ப நல்ல பொண்ணு.”, என்றவர் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அலுவலகத்தில் தினம் தினம் தேவாவை ஒரு வழியாக்குவது தான் பெண்களின் வேலையாய் இருந்தது.

“தேவா அன்னைக்கு சொன்னதுக்கு என்ன அர்த்தம் தெளிவா சொல்லிட்டு போயேன்.”

“இதை விட தெளிவா என்ன சொல்லணும் உங்களுக்கு?”

“அப்படினால்?!!”

“அப்படி தான்..”, என்றவள் நழுவிக் கொண்டிருக்க இங்கு வினித் நண்பனை உண்டு இல்லை என ஆக்கிக் கொண்டிருந்தான்.

“அதி டேய் பார்லர் போ ஸ்கின் கேர் பண்ணு.. என்னடா இப்படி ஆபீஸை கட்டியே அழற நீ..”

“என்னை நிம்மதியா விட மாட்டியா நீ. அவ தினமும் இந்த முகத்தை தான பார்க்க போறா? அப்பறம் எதுக்கு நீ சொல்றதெல்லாம்?”

“டேய்..”

“ஒழுங்கு மரியாதையா நீ யூ ஏஸ் கிளம்பு டா. ரொம்ப உயிரை வாங்குற.”

அங்கு கயல் காயத்ரி இருவரும் தேவாவை இதே பாடு படுத்தி எடுக்க அவளும் ஆளை விடுங்கள் என்று காத தூரம் ஓடத் தயாராய் இருந்தாள்.

இதற்கிடையில் சாருகேஷும் அவினாஷும் சேர்ந்து கேக் ஏற்பாடுகள் பாடல்கள் டீஜே என சுற்றி வந்தனர்.

அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்த நிச்சய நாளும் வந்திருந்தது.

கோவையின் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல் ஹாலில் தான் ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்தும் காத்யாயினியின் தலைமையில் அவர்களின் பிள்ளைகளின் பொறுப்பு தான்.

அதிரன் நிச்சயத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு சரி தம்பி தங்கைகள் அனைத்தையும் அண்ணனுக்காக பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தனர்.

முந்தைய தினமே தேவா விடுமுறை எடுத்திருக்க அவள் மொத்தமாய் கயல் மற்றும் காயத்ரியின் பொறுப்பில் தான்.

காலை வந்த குறுஞ்செய்தியோடு சரி ஆளைப் பிடிக்க முடியவில்லை அதிரனால்.

மதியம் மூன்று மணியளவில் அதிரன் ஹோட்டலை அடைந்திருக்க காத்யாயினிக்கு மகனைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி.

க்ரே நிறச் சட்டையும் அடர் நீல நிற பேண்டுமாய் இன் செய்து நேர்த்தியாய் நின்றவனின் கண்கள் தேவாவைத் தான் தேடின.

அதை உணர்ந்து கொண்டவராய் காத்யாயினி மகனிடம் ஐந்து நிமிடத்தில் அவர்கள் வந்து விடுவார்கள் என்று கூற ஆமோதிப்பாய் தலையசைத்து அவரருகில் அமர்ந்தான்.

வாசலுக்கு முதுகு காட்டிய படி அமர்ந்திருந்தவன் சற்று குனிந்து இரு கைகளையும் கோர்த்த படி தாயிடம் பேசிக் கொண்டிருக்க தங்கைகளின் குரல் கேட்டதில் அப்படியே அமர்ந்த வண்ணம் தலையை மட்டும் பின் திருப்பியிருந்தான்.

அதற்காகவே காத்திருந்தவளாய் தேவா அவன் தலையைத் திருப்பியதும் பார்வையைத் தாழ்த்தியிருந்தாள்.

மெதுவாய் இருக்கையில் இருந்து எழுந்தவன் கைகளைப் பின் கட்டிய படி உள்ளே வருபவளைத் தான் பார்த்திருந்தான்.

அழகிய வாடாமல்லியும் அடர் பிங்க் வண்ணமும் இணைந்தது போன்ற பட்டுப்புடவைக்கு ஏற்ற ஆரபணங்களும் ஒப்பனையுமாய் வந்தவள் மனதை நிறைத்திருந்தாள்.

“அண்ணி கொஞ்சமாவது நிமிர்ந்து அண்ணனை பாருங்க.”

“ஏன் அண்ணி இப்படி பண்றீங்க..”

“பின்ன இப்படி வெட்கப்பட்டால் எங்க அண்ணா பாவம் இல்லையா?”, என்றதில் அவினாஷ் தமக்கையின் கைப் பற்றிக் கொண்டவனாய்,

“எல்லாரும் அக்காவை ரொம்ப கலாய்க்குறாங்க மாமா.. என்னனு கேளுங்க..”, என்றதற்கு அதிரன் அமைதியாய் புன்னகைக்க காத்யாயினியிடம் ஆசீர்வாதம் பெற்ற வண்ணம் அதிரனின் அருகில் வந்து நின்றாள் தேவா.

தங்கை மாப்பிள்ளைகளை வரவேற்று பேசி விட்டு அவரவர் வேலைகளைக் கவனிக்கச் செல்ல காத்யாயினியும் அவர்களோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அதிரன் மெதுவாய் தேவாவிடம்,

“என்ன இரண்டு நாளா ஆளையே காணும்.”

“இதோ இதெல்லாம் தான் காரணம்.”, என்றவள் தனது இரு கைகளையும் விரித்துக் காட்டிட நல்ல அரக்கு வண்ணத்தில் இருந்த மெஹந்தி பார்ப்பதற்கு அழகாய் இருந்தது.

“ப்யூட்டிஃபுல்..”

“உங்க தங்கச்சி சொல்றாங்க அவங்க அண்ணாக்கு இதெல்லாம் பத்தி ஐடியாவே கிடையாதாம்.”

“அப்படியா? நீ என்ன நினைக்குற?”

“இந்த அப்பாவி முகத்தை நம்பவே கூடாதுனு நினைக்குறேன்.”, என்றவள் சிறிது பற்கள் தெரியவே சிரித்திருந்தாள்.

“இப்போ தெரியுதா நாம ஏன் புருஷன் பொண்டாட்டியா ஆகப் போறோம்னு?”, என்றதில் இருவர் முகமுமே பிரகாசித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!