Skip to content
Post Views: 2,180
விக்ரம் பார்த்தசாரதி 2
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா விக்ரம்? ஆசை முகம் மறந்து போச்சே பாட்டு பாரதியார் கண்ணனை வெச்சு எழுதி இருக்கார்ன்னு நாம நினைப்போம். ஆனா அப்படி இல்லை. அவர்கிட்டே இருந்த அவர் அம்மாவோட ஒரே ஃபோட்டோ காணாம போன போது எழுதின பாட்டு அது” எனக்கு விளக்கம் சொல்வார் அம்மா.
“நீ ஊர் ஊரா நாடு நாடா எங்கேதான் சுத்தறேன்னு தெரியலை. எனக்கு உன் முகமே மறந்திடும் போலிருக்குடா. அப்பப்போ விடியோ கால் பண்ணுடா”
எனக்கு பாரதியாரை அறிமுகம் செய்து வைத்ததே அம்மாதான். அம்மாவின் தமிழ் காதல், எனது சிறிய வயதில், எனக்கும் அவருக்குமான தனிப்பட்ட நேரங்களில் மட்டுமே வெளிப்பட்டு இருக்கிறது.
Advertisement
“என்னை மட்டும் ஏன்மா இப்படி படைச்ச?” என நான் அழுத காலங்களில் எல்லாம் எனக்குத் துணையாக பாரதியை வைத்த புண்ணியம் அம்மாவையே சேரும்.
ஆனாலும் கடந்த சில வருடங்களாக நடந்த நிகழ்வுகளில் நான் பாரதியை விட்டு விலகி இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது எனது கண்ணம்மா, எனது ஆராதனா மறுபடியும் பாரதியை நெருங்க வைப்பாளோ?
Advertisement
நான் வீடு வந்து சேர்ந்ததும்
Advertisement
“எப்படி டா இருக்கே?” எப்போதும் போல அம்மாவின் விரல்கள் எனது கன்னம் வருடின. ஆசை முகம் மறந்து போச்சே என பாடாமல் பாடத்தான் செய்தன அவரது விரல்கள்.
“அம்மா கொஞ்ச நாளைக்கு முன்னாலேதானே என்னைப் பார்த்தே. அதுக்குள்ளே உனக்கு ஏன் இத்தனை கவலை?”
ஆயிரம்தான் நான் பேரரசனாக இருந்தாலும் அம்மாவின் அருகாமை எனக்கு எப்போதுமே ஆனந்தம்தான். இரவு எத்தனை மணி என்றாலும் எனக்கான, எனக்கு பிடித்தமான உணவு வகைகள் தயாராக இருக்கும்.
Advertisement
“அப்படியே தலை மேலேயே ஒண்ணு போட்டேன்னா… சாப்பிடுடா ஒழுங்கா”
ஒரு சில நேரம் எனது முதுகின் மீது ஒன்று போடக் கூட செய்வார் அவர். இந்த வயதிலும் என்னை அடிக்கக் கூடிய தைரியமும் உரிமையும் அம்மாவுக்கு மட்டுமே.
இந்த முறை நிச்சியதார்த்தத்திற்கு ஊருக்கு வருவதாக திட்டமிட்ட பொழுதில் இருந்தே அம்மாவின் ஞாபகம்தான்.
அம்மாவுக்கு எதாவது ஒன்று வாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இந்த முறை என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அம்மாவிடம் இல்லாத நகைகளா? ஆடைகளா? என்ன வாங்கிச் செல்வது என்பதே பெரும் குழப்பமாக இருந்த நேரத்தில்தான் மும்பையில் எனது கண்களில் வந்து விழுந்தார் அந்த வெள்ளை நிற வெள்ளி விநாயகர்.
வழக்கமான வடிவமாக இல்லாமல், மிக அழகாக ஒரு திண்டில் சாய்ந்து கொண்டு கையில் ஒரு புத்தகத்துடன் இருந்தார் அவர்.
அவரை வீட்டுக்கு அழைத்து வந்தாகி விட்டது. அவரை இப்போது அம்மாவிடம் சேர்க்க வேண்டும்.
“அம்மா ரெண்டு நிமிஷம் கண்ணை மூடு. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃட். எப்படி? உனக்கு பிடிச்சு இருக்கா மா? என்னோட செல்ல அம்மாவுக்கு, என்னை பாசமா பார்த்துக்குற ஒரே அம்மாவுக்கு நான் ஆசையா ரசிச்சு ரசிச்சு வாங்கிட்டு வந்த முதல் கிஃப்ட்”
இப்படி எல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசி, குழைந்து எல்லாம் பரிசுகளை கொடுக்கத் தெரியாதுதான் எனக்கு.
அன்பை ரகசியமாகவே வைத்துக் கொள்வது என்னுடைய பலமா? பலகீனமா? அதுவும் தெரியவில்லை.
நான் சாப்பிட்டு முடித்ததும் அம்மா தனது அறைக்கு நகர்ந்த பிறகு எனது பெட்டியை விட்டு வெளியே வந்தார் விநாயகர். அம்மாவின் புத்தக மேஜையை அடைந்து அங்கே லாவகமாக அமர்ந்து கொண்டார் அவர்.
சிறிதாக புன்னகைத்துக் கொண்டேன் நான். நாளை அதை அம்மா பார்க்காமலா போய்விடுவார்.
எனது அறைக்கு வந்தேன். இப்போது எனது மனமெங்கும் வியாபித்துக் கிடந்தாள் ஆராதனா.
சில நாட்களுக்கு முன், ஒரு காலத்தில் என்னை வேண்டாமென்று ஒதுக்கிய வைஷாலி முதற்கொண்டு அத்தனை பேரும் ஒன்று கூடியிருந்த ஒரு நேரத்தில் தான் ஆராதனாவிடம் கேட்டார் எனது தந்தை.
“உனக்கு விக்ரமை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா மா?”
கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே தலை அசைத்த அவளது அன்பிற்கு நான் என்ன கொடுத்தால் தகும்? என்னையே மொத்தமாக கொடுத்து விட்டால் போதுமா?
எப்போதுமே இந்த விக்ரமுடன் மோதுபவர்கள் மிரண்டுதான் போவார்கள் அதே நேரத்தில் இந்த விக்ரம் மீது அன்பு வைப்பவர்களுக்கு அந்த அன்பு நான்கு மடங்காக திரும்ப வந்து சேரும்.
இது என் மீது அன்பு வைத்த அர்ஜுனில் துவங்கி இப்போது ஆராதனாவில் வந்து நிற்கிறது.
“யூ நோ சோனாவோட அலிபாக் பீச் ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் விக்ரம்” எப்போதோ பேச்சு வாக்கில் என்னிடம் சொல்லியிருந்தாள் ஆராதனா.
அவளுக்காகவே ஸ்வாதி, அர்ஜுன் என இருவருக்கும் சொந்தமான அந்த கடற்கரை வீடு இருக்கும் பகுதியில் இருக்கும் இன்னொரு கடற்கரை வீட்டை விலை பேசி முடித்திருந்தேன் நான்.
அவளை நாளை அங்கே அழைத்து செல்லலாமா? அல்லது திருமணம் முடிந்தவுடனா? யோசித்தபடியே கண்ணயர்ந்தேன்.
மறுநாள் நான் எழுந்து கொள்ளும் போது நேரம் மதியம் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அதில் நடுநடுவே அம்மாவின் புண்ணியத்தில் படுக்கையிலயே காபியும், காலை உணவும் அரங்கேறியிருந்தது.
“டேய் இன்னைக்கு உனக்கு நிச்சியம்டா. சீக்கிரம் எழுந்து வாடா” புலம்பிக் கொண்டேதான் இருந்தார் அம்மா. இருந்தாலும் மனமெங்கும் மகிழ்ச்சியும் ஏகாந்தமும் நிரம்பி இருக்கும் அந்த நிலையை கலைக்கக் கூட விரும்பவில்லை நான்
இடையில் ஆராதனா இரண்டு முறை அழைத்து கூட வைத்தாள்.
“இன்னைக்கு என்கேஜ்மென்ட்க்கு சோனாதான் எனக்கு காஸ்டியும் டிசைனிங் எல்லாம். அட்டகாசமா வந்திருக்கு”
“அதெல்லாம் வேண்டாம் ஆரா. நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே என்னிடம் வா. எனக்கே எனக்கானவளாக என்னிடம் வந்து விடு” சொல்லத்தான் நினைத்தேன் நான். ஆனாலும் சொல்லவில்லை.
அவள் எனது சட்ட ஆலோசகர் ஆயிற்றே. எப்போதும் போல அவளது வார்த்தைகளுக்கு அமோதிப்பை கொடுத்து வைத்தேன் நான் .
நான் குளித்துத் தாயராகி, கணிணியில் சில வேலைகளை முடித்து விட்டு, பேச வேண்டிய அழைப்புகளை எல்லாம் முடித்துவிட்டு எனது மாடி அறையை விட்டு கீழே வந்த போது நேரம் மதியம் மூன்று மணி.
“நீ கீழ் ரூம்லேயே இரேன் விக்ரம். ஏறி ஏறி இறங்கணுமே” முன்பு அப்பா சொன்ன போது கூட பிடிவாதம் பிடித்து அந்த அறையை வாங்கிக் கொண்டவன் நான்.
“லஞ்ச்ன்னு ஒண்ணு சாப்பிடணும்னு ஞாபகம் இருக்காடா? அதையும் மேலே கொண்டு வரேன்ன்னா கேக்கலை. வேலையை முடிச்சிட்டு வரேன் வரேன்ங்குற?” அம்மா கேட்டுக் கொண்டிருக்கும் போதே எனது எதிரில் வந்து நின்றான் எனது தம்பி அர்ஜுன்.
“விக்ரம். எப்படிடா இருக்கே?” என்னை சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன் “இன்னைக்கு உன்னோட வாழ்கையிலே முக்கியமான நாள். மை பெஸ்ட் விஷஸ்” அவனது மொத்த அன்பும் அங்கே அவனது குரலாக மாறிக் கிடந்தது.
சில நொடிகள் கழித்து அவன் என்னை விட்டு விலகி நிமிர புன்னகைத்தேன் நான். எனது இதழ்களில் தன்னாலே புன்னகையை மலர வைக்கும் தந்திரம் எல்லாம் பழகியவன் எனது தம்பி மட்டுமே.
அப்போது அவனது அருகில் வந்து நின்றாள் அர்ஜுனின் உயிர் தோழி ஸ்வாதி.
“அண்ணா எப்படி இருக்கீங்க” அன்பு நிறை குரலில் கூவினாள் அவள். இது முன்பிருந்த பழைய ஸ்வாதி இல்லை.
அடுத்து சொல்லி வைத்தார் போல அவளது பார்வை சென்று நின்றது அம்மாவின் மேஜை மீதிருந்த அந்த அழகு விநாயகரின் மீது.
அம்மாவே இன்னும் அதைப் பார்த்ததாக தெரியவில்லை. பார்த்திருந்தால் அதைப் பற்றி என்னிடம் கண்டிப்பாக கேட்டிருப்பார்.
“ஹேய்.. வாவ் .. அர்ஜுன் இங்கே பாரேன். ஸோ க்யூட்.. “ கையில் எடுத்துக் கொண்டாள் அந்த விநாயகரை.
“ஹேய்.. எங்கே காட்டு. புதுசா இருக்கே. நானே இப்போதான் பார்க்கிறேன். ரொம்ப அழகா இருக்கு. யார் வாங்கிட்டு வந்தாங்க?” அம்மா அதை கையில் வாங்கிக் கொண்டே கேட்க, பதிலே பேசவில்லை நான்.
கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவர் எனது பக்கம் திரும்பியும் விட்டார். என்னைப் பார்த்து புன்னகைக்கவும் செய்தார் அவர்.
‘அம்மாவுக்கு என்னைத் தெரியாதா என்ன? நீ வாங்கி வந்தாயா என்று கூட கேட்கவில்லை. எனக்காகவா? என்றும் கேட்கவில்லை.
“தேங்க்ஸ் விக்ரம்” என்றார் நிறைவாக. அவரது முகத்தில் அத்தனை பெருமிதமும் சந்தோஷமும். அவற்றின் விலை பல கோடி ரூபாய்கள்.
அம்மாவை பார்த்து அழகாக புன்னகைத்தேன் நான்.
“விக்ரம் வாங்கிட்டு வந்ததா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் வெச்சுக்கட்டா?” பழைய ஸ்வாதியாக இருந்திருந்தால் அப்படிதான் கேட்டு இருப்பாள்.
ஆனால் இப்போது அப்படி எதுவும் செய்யவில்லை அவள்.
“அண்ணா சீக்கிரம் ரெடி ஆகுங்க. உங்க எங்கேஜ்மென்ட்க்கு உங்களைத் தவிர மற்ற எல்லாம் ரெடி” என்னை விரட்டினாள் அன்பாக.
அடுத்து உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்த நேரத்தில், எனது அறையில் தயாராகிக் கொண்டிருந்தேன் நான். எனக்கு உதவியாக உடன் இருந்தான் அர்ஜுன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும், ஸ்வாதி அர்ஜுன் இருவருக்கும் சொந்தமான அந்த கடற்கரை வீட்டை அடைந்திருந்தோம்.
நேரம் மாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
எங்கள் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த அந்த மணற்பரப்பை அடைந்து, எனது ஊன்று கோலை ஊன்றிக் கொண்டு நின்றேன் நான்.
இளம் கிரீம் நிறமும், சிவப்பு நிறமும் ஒன்று கலந்த அலங்காரங்களில், ஆங்கங்கே நின்றிருந்த தென்னை மரங்கள் கூட பங்குகொண்டிருந்தன.
மணற்பரப்பில் நின்றிருந்த அந்த மரத்தினால் ஆன மேடை முழுவதும் மல்லிகையும் முல்லையும் சம்பங்கியும் நிரம்பி நிற்க, அவற்றின் வாசம் கடற்காற்றோடு கலந்து வந்து எனது நாசியை வருடியது.
அங்கே அருகில் இருந்த இன்னொரு மேடையில் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த மெல்லிசையோடு கடலலைகளின் ஓசையும் கலந்து நிற்க, மகிழ்ச்சியும் அமைதியும் ஒன்று சேர்ந்த மனதுடன் நின்றிருந்தேன்.
இந்த இடத்தையே தேவலோகம் போல மாற்றி வைத்திருக்கிறார்கள் ஸ்வாதியும் அர்ஜுனும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே, எனது அருகில் வந்து நின்றாள் ஸ்வாதி.
“என்ன விக்ரம் அண்ணா, டிகோரேஷன் எல்லாம் எப்புடி?” கண் சிமிட்டி கேட்டாள்.
ஒரு காலத்தில் இந்த கடற்கரை வீட்டின் அருகே கூட நான் வரக்கூடாது என்று சண்டை போட்டவள், இன்று எனக்காக அந்த இடத்தையே இப்படி மாற்றி வைத்திருப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை நான்.
பொதுவாக யாருக்கும் நன்றி சொல்லும் பழக்கம் இல்லை எனக்கு. ஆனாலும் இன்று சொன்னேன்.
“தேங்க்ஸ் டா ஸ்வாதி.”
“என்ன அண்ணா இதுக்கெல்லாம் தேங்க்ஸ். ஹாப்பியா இருங்க.”
“பிடிச்சதை நமக்கு பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்குறதை விட வேறே சந்தோஷம் எதுவும் இந்த உலகத்திலே இருக்கா என்ன?” ஒரு நாள் ஸ்வாதி என்னிடம் சொன்ன வார்த்தைகள் இப்போது எனது மனதில் வந்து நின்றன.
‘நானும் இது போல யாருக்காவது எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டுமா என்ன ?’
அப்படி நான் நினைத்த நேரத்தில், திடீரென ஆராதனாவின் முகம் எனது மனதிற்குள் வந்து போக, உலகாளும் வியாபார சக்கரவர்த்தியான என்னிடமே ஒரு சிறு நடுக்கம்.
“அண்ணா என்ன யோசனை? ஹாப்பியா இருங்க. இனிமே உங்களுக்கு வாழ்க்கை முழுக்க ஹாப்பினஸ்தான். ஆரா அண்ணியோட ஃபிரெண்ட் எட்வர்ட் யூ.எஸ்லேர்ந்து வராங்களாம். அண்ணி ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. அவங்க வந்தா ரிசீவ் பண்ண சொன்னாங்க. நான் போய் பார்க்கிறேன்” சொல்லிவிட்டு, தனது லெகங்காவை சரி செய்து கொண்டே ஓடி விட்டாள் ஸ்வாதி.
‘எட்வர்ட்’ என்ற பெயர் காரணமே இல்லாமல் இடறியது எனக்குள்ளே.
நெற்றி தேய்த்து விட்டுக் கொண்டு என்னை மடை மாற்றிக் கொண்டேன். சுற்றிலும் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி அலைகளே நிரம்பிக் கிடந்தன.
எனது பெற்றோர் பார்த்தசாரதியும் ருக்மணியும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்கள். ஆராதனாவின் தந்தை வாசுதேவன், எனது தந்தையுடன் பேசிக் கொண்டிருக்க, ஆராதனாவின் அன்னை சில பெண்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
அப்போது எனது பார்வையில் விழுந்தனர் அரவிந்தும் வைஷாலியும். அவர்களைப் பார்த்தவுடன் என்ன மாதிரி உணர்வு எனக்குள் ஓடியது என்பதே எனக்கே புரியவில்லை.
நேசம் என்னும் உணர்வை எனக்குக் கற்றுக் கொடுத்து விட்டு, அதன்பிறகு அது எல்லாம் பொய் என்று சொல்லாமல் சொல்லி விட்டு, அரவிந்தின் கரம் கோர்த்துக் கொண்டவள் வைஷாலி.
‘யார் அழைத்திருப்பார்கள் அவர்களை? ஸ்வாதியின் மாமன் மகன் தானே அரவிந்தன். அவள்தான் அழைத்திருக்க வேண்டும். அவளுக்கு எனது காதல் கதையெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
வைஷாலி கொடுத்த காயங்களை விட்டு நான் வெளியே வந்து இந்த இடத்தில் நிற்கிறேன் என்பதற்கு முழுக் காரணம் அர்ஜுன் தானே. அவனது அன்புதானே?
இப்போது எனது மனதில் வைஷாலி இருந்த இடத்திற்கு மெல்ல மெல்ல ஆராதனா வந்து நிற்பது எனக்கே வியப்பாக இருக்கிறது.
இந்த வீட்டில் என்னுடைய பழைய காதல் கதையை முழுவதுமாக அறிந்தவன் அர்ஜுன் மட்டும்தான். ஆராதனா அறிவாள், ஆனாலும் மேலோட்டமாகத்தான்.
இதை எல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், எனது அருகில் வந்து நின்றார் எனது அன்னை.
“என்னடா இப்படியே நின்னுட்டே? வா. உன் பிசினஸ் மக்கள் எல்லாரும் வந்திருக்காங்க போல இருக்கு. அர்ஜுன்தான் எல்லாரையும் கவனிக்கிறான்.”
“அவங்க எல்லாம் இருக்கட்டும். ஆராதனா எங்கே மா?” அவளைத்தான் அளவுக்கு அதிகமாக தேடியது எனது மனம்.
“யாரோ சோனாவாமே அவளுக்கு அலங்காரம் பண்றாளாம். இப்போ வந்திடுவா.”
அதுவெல்லாம் எதுவுமே வேண்டாம் போலத்தான் தோன்றியது எனக்கு. அவள் எனது அருகில் வந்து விட்டால் போதுமென இருந்தது.
அவள் வந்தவுடன், அவளது கரத்தை என் கரத்தோடு சேர்த்துக் கொள்ள ஏங்கித் தவித்தது எனது மனது. வைஷாலியைப் பார்த்த மாத்திரத்தில், அந்த ஏக்கம் பல மடங்காகியது போலவே தோன்றியது.
‘அவள் என்ன தேவலோகத்திலா இருக்கிறாள்? இந்தக் கடற்கரை வீட்டில் தானே இருக்கிறாள்?’
அவள் இருக்கும் அறை நோக்கி நடந்தேன் நான்.
அடுத்த சில நிமிடங்களில், கையில் அவளது முதல் காதலானான காஃபியை ஏந்திக் கொண்டு அவளது அறையின் கதவைத் தட்டினேன்.
கதவைத் திறந்தது இன்னொரு பெண். அது அவளது தோழி சோனா.
“விக்ரம் சர். நீங்க எப்படி இங்கே?” என்றாள் ஆங்கிலத்தில்.
“நான் ஆராவை பார்க்கணும்”
எனது குரல் கேட்டதுமே உள்ளிருந்து குரல் கொடுத்தாள் ஆரா
“யார் சோனா விக்ரமா?”
“எஸ் ஆரா. நீ இப்போவே வெளியே வராதே. நீ இன்னும் ஃபுல்லா ரெடி இல்லை” என்றவள் என்னிடம் சொன்னாள் “நீங்க கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா விக்ரம்? ஆரா ஃபுல்லா ரெடி ஆகி வரட்டும். தட் வில் பி அ ஸ்வீட் சர்ப்ரைஸ்”
அதற்கு மேல் எதுவும் பேசவில்லை நான். அவளுக்கு காபியை கொடுக்க சொல்லி விட்டு, மணற்பரப்பை நோக்கி நடந்தேன்.
‘உன்னைப் பார்த்து விடக் கூட இத்தனை தடையா பெண்ணே?’ நான் யோசிப்பதற்குள்ளாகவே, என்னுடன் இருக்கும் பல வியாபார சாணக்கியர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்கள் முன்னால், வியாபார சக்கரவர்த்தியாக நிமிர்ந்து நின்றேன் நான்.
அடுத்த சில நிமிடங்களில் எனது கைப்பேசி சிணுங்கியது. அவளது குறுஞ்செய்தி.
“தேங்க்ஸ் ஃபார் தி காஃபி விக்ரம்” எனது இதழ்கள் புன்னகையில் பெரிதாக விரிந்தன.
அடுத்து வந்த நிமிடங்களில் சூரியன் மெல்ல மெல்ல கீழிறங்க, நான் மேடையை நெருங்கிய நேரத்தில் அலைகளில் நிலவொளி நாட்டியம் ஆட ஆரம்பித்திருந்தது.
‘எங்கே இருக்கிறாய் ஆராதனா?’
அடுத்து சில நிமிடங்கள் என்னைக் காக்க வைத்து, அதன் பின் எனக்கு தனது தரிசனத்தை கொடுத்தாள் அவள்.
எனது அருகிலேயே நின்றிருந்தார்கள் அர்ஜுனும் ஸ்வாதியும். கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரவிந்தனும் வைஷாலியும்.
“ஹேய்… அண்ணி இஸ் லுக்கிங் கார்ஜியஸ்!” என்று ஸ்வாதி கூவ, சோனாவுடன் சேர்ந்து எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் ஆராதனா.
பெண்களின் உடையலங்காரங்கள் பற்றி எல்லாம் அதிகம் அறிந்தவன் நான் இல்லை. இருந்தாலும், நான் அணிந்திருந்த ஷெர்வானி உடைக்கு மிகப் பொருத்தமான நிறத்தில் அவளது உடையலங்காரமும் இருக்க, மனம் தானாகவே மகிழ்ந்து போனது.
சட்டத்தை விரும்பி, வேண்டி படித்து, அதனோடு மனதார உறவாடும் ஒரு கம்பீரம் அவளிடம் எப்போதுமே உண்டு.
அந்த மிடுக்கும், தன்னம்பிக்கையும் அவளது உடையிலேயே பிரதிபலிக்க வேண்டும் என்பதில் அவள் எப்போதும் கவனமாக இருப்பாள். நிச்சயதார்த்த உடை என்றாலுமே, அதிலும் அவளது தனித்துவம் மிளிர்ந்தது.
அதனோடு சேர்ந்து, அவளது முகமெங்கும் கூடி நின்ற பூரிப்பும் புன்னகையும் எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியதே உண்மை.
அரவிந்தனுடன் ஒட்டிக் கொண்டு நின்ற வைஷாலி எங்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையை நான் ஒரு முறை நேருக்கு நேர் சந்தித்து திரும்பினேன்.
எங்களுக்கு கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்த மேடை எங்கள் இருவருக்குமாக காத்திருந்தது.
பத்தடி தூரத்தில் அவள்! என்னைப் பார்த்து அவள் புன்னகைக்க சுற்றி இருந்த புகைப்படக்காரர்கள், எங்கள் இருவரின் புன்னகைகளைத் திருடி, தங்களது கருவிகளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.
நான் அவளை என்னருகிலே இருத்திக் கொள்ள நினைத்து அவளை நோக்கி கரம் நீட்டிய நேரத்தில்,
“ஹேய் பெல்லா…” என்ற கூவலுடன், எங்கிருந்தோ தாவி வந்து, அவளது இரண்டு கரங்களையும் பற்றி தனது அருகில் இழுத்துக் கொண்டான் அந்த வெள்ளைக்காரன். இவன் தான் எட்வர்ட்டாக இருக்க வேண்டும்.
எதிர்பாராத அந்த செயலில் சற்றே தடுமாறி, அவனது தோள்களைப் பற்றிக் கொண்டு தன்னை சமாளித்துக் கொண்டு சிரித்தாள் ஆராதனா.
நட்சத்திரங்கள் வானத்தை நிரப்பி இருக்க, வெண்ணிலவு என்னையும் ஆராதனாவையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
தொடரும்
error: Content is protected !!