Skip to content
Post Views: 1,500
விழாக் காணுமே வானம் 04
வத்சலா ராகவன் – மது ஹனி
“தன்னுடைமை பதித்த நட்பின் விதைகள்”
அவள் டென்னிஸ் சாம்பியன். அவளுக்கு செஸ் ஆடத் தெரியாது. இப்படியொரு செக்மேட் வைத்தால் அவள் தான் பாவம் என்ன செய்வாள். ஒரு வருடமாக தாய்ப்பசுவைப் பிரிந்த கன்று போல அவள் பரிதவிப்பது ரங்கநாதனுக்குப் புரியாமல் இல்லை.
Advertisement
“கண்ணா! மன்னிப்பது தேவ குணம்” அவள் என்ன பதிலைக் கூறுவாள் என்று தெரிந்தே அதைச் சொன்னார் ரங்கநாதன்.
“அப்பா” கோபமாய் வீடே எதிரொலிக்க கத்தினாள்.
அவள் கத்தியதில் என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு வந்தார் அவளின் பாட்டி.
Advertisement
‘எதுவும் பேசாதே அம்மா’ என்று கண்ணசைவிலேயே ரங்கநாதன் கூறவும் கிச்சன் சுவரோரமாக நின்று அமைதியாக வேடிக்கைப் பார்த்தார்.
Advertisement
‘தவறு என்பது தவறி செய்வது; திருந்த பாக்கணும்
தப்பு என்பது புரிந்து செய்வது; வருந்தி ஆகணும்’
அவன் புரிந்து தானே அப்படி செஞ்சான். அதுக்கு எப்படிப்பா மன்னிக்க சொல்ற” தந்தையிடம் நியாயம் கேட்டவளின் கோபக்குரல் சற்றே தணிந்து ஒலித்தது.
Advertisement
“இப்போ என்ன மன்னிக்க முடியாத தப்பை செய்துட்டான்னு இப்படி ஆடுற” அதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் அவர் ஸ்வாதியின் பாட்டி அல்லவே.
‘அவளே இப்போ தான் கொஞ்சம் மலையிறங்கி வருகிறா. இந்த அம்மாவும் தான் இப்படி சரிக்கு சரியாக அவளோடு மல்லுக்கு நின்னுட்டு இருக்காங்க’ இனி இருவருக்கும் நடக்கும் வாக்குவாதம் எப்போ முடியுமோ என்று இருவரையும் பார்த்திருந்தார் ரங்கநாதன்.
“கண்ணா, மணி பத்தாகப் போகுது பாரு. அம்மா டிபன் ரெடியா” இருவருக்கும் நடுவில் தற்காலிக வெள்ளைக் கொடியைப் பறக்க விட முயற்சி செய்தார்.
“எனக்கு டிபனும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம். அம்மா தான் வேணும்” என்றவள் விறுவிறுவென அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
கட்டிலின் மேல் சற்று முன் அவள் கழட்டி வீசிய அவளது அன்னையின் புடவை குவியலாக கிடக்க அதில் குப்புற கவிழ்ந்து முகம் புதைத்துக் கொண்டாள்.
‘பிறந்தநாளும் அதுவுமா புதுப் புடவை கட்டலையா குஷ்பூ?’
அந்தக் குஷ்பூ மீண்டும் மீண்டும் அவள் செவிகளுக்குள் ஒலிக்க இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள். அப்படி செய்தால் மனதில் ஒலிக்கும் குரல் தடைபட்டு போகுமா என்றெல்லாம் சிந்திக்கும் நிலையில் இல்லை அவள்.
‘அவ என்ன தப்பா சொல்லிட்டா? நீ உண்மையிலேயே செண்டிமெண்ட்குதானே உங்கம்மா புடவையை கட்டினே’ பாட்டி சொன்னதும் மறு ஒலிபரப்பானது அவளது மனதில்.
அவள் அம்மாவின் புடவை. அவளுக்கு வெறும் செண்டிமண்டா அது. உணர்வல்லவா. அதை வைத்து அவர்கள் விளையாடியது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
டென்னிஸ் ஆடும் போது மேல் சட்டையும் குட்டை ஸ்கர்ட்டும் தான் அவள் அணிவது. மற்றபடி ட்ரேக்சூட் பாண்ட்ஸ் டி ஷர்ட்டுமாகத் தான் திரிவாள்.
அதுவும் அவளும் அர்ஜூனும் ஒரே டிசைனில் ஒரே நிறத்தில் தான் அணிந்து கொண்டு சுற்றுவார்கள்.
“ஆர் யூ ட்வின்ஸ்” வெளிநாடுகளில் விளையாடப் போகும் போது இப்படி ஒரே போல் ட்ரஸ் அணிந்து கொண்டு அங்கே ஊர் சுற்றுகையில் சிலர் கேட்டதுண்டு.
“நோ வி ஆர் ப்ரண்ட்ஸ்” அவனின் முழங்கைக்குள் தனது கையைக் கொடுத்து கோர்த்துக் கொண்டு அவள் அதைச் சொல்லும் போது அவள் முகத்தில் தான் எத்தனை பெருமிதம்.
பாட்டி மட்டும் அதட்டவில்லை என்றால் அர்ஜூனைப் போலவே பாய் கட் செய்திருப்பாள்.
“ஒரு நாளும் கிழமையுமா பாவாடை சட்டை போடுவோம், பூ வைப்போம்னு இருக்காளா. தீபாவளி, பொங்கலுக்கும் இந்த பேன்ட் சட்டைய போடுவேன்னு பிடிவாதம் பிடிச்சா எப்படி?” பாட்டி அதட்ட ஸ்ரீதேவியின் புடவையை ட்ரேக் பேன்ட்ஸ் மேலேயே சுத்திக் கொண்டு வந்து நிற்பாள்.
நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியை வென்று சர்வதேச டோர்ணமன்ட்களில் பங்கேற்க செல்கையில் முதல் இரண்டு வருடங்கள் ஸ்ரீதேவியும் உடன் சென்றார். பின் நிறைய டோர்னமன்ட்களில் அவர்கள் பங்கெடுக்க அவரால் கூட செல்ல முடியாமல் போனது.
அப்போதெல்லாம் தூங்கும் போது கட்டிப் பிடித்துக் கொள்ள ஸ்ரீதேவியின் புடவையை எடுத்துச் செல்வாள் அவரின் செல்ல மகள்.
விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜுனா அவார்ட்டை ஜனாதிபதியிடம் இருந்து பெற சென்ற போது கூட ஸ்ரீதேவியின் புடவையை தான் உடுத்திக் கொண்டு சென்றாள்.
“புடவை கட்டியதும் ரொம்ப வித்தியாசமா தெரியற குஷ்பூ” அவளைப் பார்த்து ஓர் ரசனையோடு அர்ஜூன் சொல்ல மெல்லிய வெட்கச் சிவப்பின் தீற்றல் மின்னலாய் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.
“என்ன வித்தியாசமா தெரிகிறேனாம்” அவனிடம் சிணுங்கினாள்.
“ம்ம்ம் மகாலக்ஷ்மியாட்டம் இருக்க” என்று சொல்லி கண்ணடித்துச் சிரித்தான்.
“அம்மா பாரும்மா இவனை” அம்மாவை துணைக்கு அழைத்தாள்.
“அவன் சரியா தானே சொல்லிருக்கான் குட்டி” என்று மகளுக்கு திருஷ்டி கழித்தது எல்லாம் அவள் மனக்கண் முன் நிழலாட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. .அவனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை தான்.
“ஏன் அத்தை அப்படி அவகிட்ட சொல்லி வெச்சீங்க? நான் தான் அவளை இவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன். இப்படி எல்லோரும் சேர்ந்து அவளை கஷ்டப்படுத்தினா என் குஷ்பூ தாங்குவாளா”
காரை சரி செய்து நிமிர்ந்து பார்த்த போதே அவள் முகம் அவனுக்கு சொல்லிவிட்டிருந்தது. அவள் வீம்புக்கு கோபமாக இருப்பதற்கும், மனதில் வலியுடன் கோபமாக இருப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவனா அறியாமல் போய்விடுவான்.
காரை ஸ்டார்ட் செய்தவுடனே அத்தையைப் பார்த்து, “என் குஷ்பூக்கு வலிக்கும் படி என்ன சொல்லி வெச்சீங்க அத்தை” என்று கேட்டு விட்டான்.
‘அப்படியே வரி விடாம சொல்லுங்க’ என அத்தையை கட்டாயப்படுத்தி, அவர் சொன்னதை அறிந்ததும் அவனுக்கு ஆழமாக வலித்தது.
‘என்னால் தானே அவளுக்கு இவ்வளவு துன்பம், என்னால் தானே அத்தை, பாட்டி என எல்லோரும் அவளைப் பேசி வைக்கிறாங்க” அர்ஜூனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளுக்கு இந்த நாள் எவ்வளவு ஸ்பெஷல் என்று அவனை விட யாருக்குத் தெரியும். அவளுடைய பிறந்த நாள் என்பதை விட அதே நாள் தான் அவனுக்கும் பிறந்த நாள் என்பதைத் தானே அவள் சந்தோஷமாகக் கொண்டாடினாள்.
ஏழு வயதில் இருவரும் ஒன்றாக சாம்பியன்ஷிப்பை வென்ற போது ரங்கநாதன் அர்ஜூனின் விளையாட்டை வெகுவாகப் பாராட்டினார்.
ரங்கநாதனை அடையாளம் கண்டு கொண்ட அர்ஜூனின் கோச்சான அவனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் அர்ஜூனின் பெற்றோரிடம் அவரது அகடமியில் அர்ஜூனை சேர்க்க ஆலோசனை கூறினார்.
அது வரை ஸ்கூலில் கற்றுத் தருகிறார்கள், விளையாடுகிறான் என்றே நினைத்த அவனது பெற்றோர் அவன் மாநில அளவிலான போட்டியை வென்றிருக்கிறான் என்றதும் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்றனர்.
அர்ஜுனின் குடும்பத்தில் விளையாட்டுத் துறையில் யாருக்கும் பெரிதாக ஈடுபாடு இருந்தது இல்லை. இருப்பினும் அவனது பி.டி மாஸ்டரின் ஆலோசனையை ஏற்று ரங்கநாதனை சந்தித்தனர்.
“ஹி இஸ் எ நேச்சுரல் பிளேயர். அவனோட ஸ்ட்ரோக் எல்லாம் பிரமாதமா இருந்தது. டென்னிஸ்ல அவனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கு” ரங்கநாதன் அவன் பெற்றோரிடம் கூறினார்.
“அவன் படிப்பு பாதிக்குமே. அது தான் யோசிக்க வேண்டியதா இருக்கு” அர்ஜூனின் அன்னை தயங்கினார்.
“என் பொண்ணுக்கு நான் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். அவளோடு சேர்த்து உங்க பையனுக்கும் சொல்லிக்கொடுக்கிறேன்” ஸ்ரீதேவி கூறினார்.
ஸ்ரீதேவி எம்.எட் எம்.ஃபில் படித்தவர். சில வருடங்கள் கேந்திரிய வித்தியாலயாவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பது அர்ஜூனின் பெற்றோருக்கு திருப்தியைக் கொடுத்தது.
மற்ற பிள்ளைகள் போல் இல்லாமல், அர்ஜுன் ஸ்வாதியைப் போல முழு நேரமாக அகடமியில் பயிற்சி பெற போகிறான் என்பதை ஸ்வாதி எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைக் கொண்டார் ஸ்ரீதேவி.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
அகடமியில் பிள்ளைகள் ப்ராக்டீஸ் செய்ய நிறைய டென்னிஸ் மட்டைகள் உண்டு. ஸ்வாதி அவளுக்கென தனியாக ஒரு மட்டையை வைத்திருப்பாள். யாரும் அதை தொடக் கூட அனுமதிக்க மாட்டாள். அவள் தந்தை கூட அதை எடுத்து விளையாடக் கூடாது, ஏனெனில் அது அவளுடையதாம். அதில் ஸ்டார் வேறு வரைந்து வைத்திருப்பாள்.
அது அவளுக்கு ஓர் பழக்கம். ஸ்வாதி என்றால் நட்சத்திரம் என்று ஒரு முறை பாட்டி சொல்ல அவள் பெயரின் அடையாளமாக ஸ்டார் போட்டு வைப்பாள்.
முதன்முதலாக போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கொண்டிருந்த ரங்கநாதனிடம் “என் பேருக்கு பக்கத்தில் ஸ்டார் போடுப்பா” என்று கெஞ்சினாள்.
“அப்படி எல்லாம் பார்ம்ல போடக் கூடாதுடா கண்ணா” மகளுக்கு இதமாக சொல்ல அவள் முகம் சுருங்கி விட்டது.
“ஐக்கு மேல புள்ளிக்கு பதிலா சின்னதா ஸ்டார் மாதிரி போட்டு விடுங்களேன்” வாடி நின்ற மகளை வாரி அணைத்தபடி ஸ்ரீதேவி சொல்லவும் அவளுக்கு அவ்வளவு ஆனந்தம்.
ஸ்டார் போட்டிருக்கும் டென்னிஸ் மட்டை ஸ்வாதியுடையது என்று மற்ற பிள்ளைகள் அதை எடுத்து விளையாட மாட்டார்கள். ஆனால் புதிதாக சேர்ந்திருந்த ஒரு சிறுவன் தெரியாமல் அங்கே இருந்த ஸ்வாதியின் மட்டையை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
“சச்சின் அது என்னோடது. பாரு அதில ஸ்டார் போட்டிருக்கு” ஸ்வாதி அதிகாரமாக சொல்லவும் சிறுவன் பயந்துவிட்டான்.
“தெரியாம எடுத்துட்டேன்” அவன் பாவமாக சொன்னான்.
“இட்ஸ் ஒகே. இதை இனிமே நீயே வச்சிக்கோ” என்று அவனிடம் சொல்லிவிட்டு, புது மட்டை வாங்கித் தந்தால் தான் ப்ராக்டீஸ் செய்வேன் என தந்தையிடம் பிடிவாதம் செய்தாள்.
“அவன் தெரியாம தானே எடுத்து விளையாடினான். இப்போ எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ற. எல்லாம் நீங்க ரெண்டு பேரும் கொடுக்கும் செல்லம்” பாட்டி தான் சத்தம் போட்டார்.
“அவன் தெரியாம எடுத்துட்டான். அதான் அவனுக்கே குடுத்துட்டேன். தெரிஞ்சே எடுத்திருந்தா ராக்கெட்டை உடைச்சு போட்டிருப்பேன்” தீவிரமாக சொன்னாள்.
“கேட்டுக்கோ தேவி. ஏழு வயசு பொண்ணு பேசுற பேச்சா இது” என்று பாட்டி சொல்ல ஸ்ரீதேவி கவலை கொண்டார்.
அவள் நல்லக்குழந்தை தான். மற்ற குழந்தைகளுக்கு அம்மா செய்த தின்பண்டங்களை கொண்டு போய் கொடுப்பதாகட்டும், பயிற்சியின் போது சொல்லிக் கொடுப்பதாகட்டும் அவளாகவே செய்வாள்.
பயிற்சி விளையாட்டுகளில் மற்ற பிள்ளைகள் வெற்றிப் பெற்றாலும் அதை ஸ்போர்டிவா எடுத்துக் கொண்டு தந்தை அவளின் தவறுகளை சுட்டிக் காட்ட திருத்திக் கொள்வாள்.
பாட்டியுடன் மல்லுக்கட்ட வேண்டுமென்றே விஷமம் செய்யும் போது ‘தப்பு குட்டி பாட்டிகிட்ட சாரி கேளு’ என்று ஸ்ரீதேவி சொல்லிவிட்டால் உடனே சாரி கேட்க மாட்டாள். நூற்றியெட்டு தோப்புக்கரணம் போட்டு மூச்சிரைக்க ‘சாரி பாட்டி’ என்பாள்.
‘தவறு என்பது மறந்து செய்வது; திருந்த பாக்கணும் தப்பு என்பது புரிந்து செய்வது; வருந்தி ஆகணும்’ என்று ஸ்ரீதேவி சொல்லிக்கொடுத்திருக்க அதை அப்படியே கடைப்பிடித்தாள் அவரது பெண். ஆனால் அவள் செய்தது சரி என்றிருந்தால் யாருக்காகவும் ஏன் ஸ்ரீதேவிக்காக கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ள மாட்டாள்.
மூன்று வயதில் இருந்தே ரங்கநாதன் கொடுத்துக் கொண்டிருக்கும் மனதிற்கான பயிற்சிகளும், ஸ்ரீதேவி கற்பிக்கும் நல்ல நெறிகளும் கூடவே கவச குண்டலமாக உடன் பிறந்த பிடிவாதமும், ஈகோவும் அவளிடம் வெளிப்பட்டன.
“நீ செய்தது தப்புமா” என்று ஸ்ரீதேவி சொல்லிவிட்டால் அவள் வருந்துவாள். ஆனால் அவள் செய்ததை தப்பு என்று சொல்ல முடியுமா.
‘ஷேர் செய்துக்கோ என்றால் அது தான் அவனுக்கே கொடுத்துட்டேனே என்பாளே’
“வாழ்க்கை ஒரே நேர் பாதையில் போறதில்லை. நெளிவு சுளிவுகளை லாவகமா கடந்து போகத் தெரியணும்” என்று மாமியார் சொல்வதை ஏழு வயது குழந்தையிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று ஸ்ரீதேவிக்குத் தெரியவில்லை.
அப்படியிருக்க அர்ஜூனின் வருகையை அவள் எப்படி எதிர்கொள்வாள் என்று யோசித்தார். அர்ஜூனின் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்தாகிவிட்டது. மகளிடம் முன்கூட்டியே இதமாக எடுத்துக் கூறி அவளை தயார்ப்படுத்த முனைந்தார்.
“குட்டி, உன் கூட பைனல்ஸ் ஆடினானே ஒரு பையன் அவன் இங்க சேர போறானாம்” மகளை மடியில் வைத்து தலை கோதியபடியே கூறினார்.
“அர்ஜூனா மா. அவன் இங்க சேரப் போறானா. நிஜமாவா மா” என்று ஸ்வாதி மகிழ்ந்து போக ஸ்ரீதேவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவன் நல்லா விளையாடுறான். அதனால் நல்ல கோச்சிங் வேணும்னு அப்பா கிட்ட கூட்டிட்டு வந்தாங்க குட்டி” ஸ்ரீதேவி மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஆமாம்மா, கடைசி டையில சூப்பரா ஓவர் ஹெட் ஸ்மாஷ் ஸ்ட்ரோக் அடிச்சான். அப்பாகிட்ட அது போல எனக்கு சொல்லி குடுன்னு சொல்லணும்ன்னு நினச்சேன். இப்போ அவன்கிட்டேயே கத்துக்கலாம் இல்லமா?” இதென்ன ஆச்சரியங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறாள் மகள்.
“நேஷனல் லெவல்க்கு போகணும்னா என் பொண்ணு போல நிறைய நேரம் ப்ராக்டீஸ் செய்யணும்னு அப்பா அவங்க அம்மா அப்பாகிட்ட சொன்னார். அவன் ஸ்கூல் முடிஞ்சு வர லேட் ஆகுமேன்னு சொல்லிட்டு இருந்தாங்க”
“என்னை மாதிரி அவனுக்கும் நீயே சொல்லிக்குடுக்க முடியாதாம்மா” ஸ்வாதி கேட்க இவ்வளவு இலகுவாக அவள் எடுத்துக் கொள்வாள் என்று எதிர்பார்க்காத ஸ்ரீதேவி மகிழ்ந்து போனார்.
“அவனுக்கு ஸ்கூல்ல ப்ரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்களே. அவங்களை எல்லாம் விட்டுட்டு இங்க வரணுமே” அன்னை சொல்லவும் அன்று அந்த அரங்கத்தில் அவனுக்கு எழுந்த கரகோஷம் அவளுக்கு நினைவில் வந்தது. கூடவே அவளைப் பார்த்து சீயர்ஸ் என நட்பாய் அவன் கட்டை விரலை உயர்த்தி புன்னகைத்து பாராட்டியதும் மனதில் நின்றது.
“நான் அவனுக்கு ப்ரண்டா இருக்கேன்மா” உறுதி கூறினாள்.
அன்றிலிருந்து இருவரும் இணைபிரியாமலே இருந்தனர்.
காலை யோகா, உடற்பயிற்சி, மாலை வரை ப்ராக்டீஸ். மாலையில் ஸ்ரீதேவி பாடம் சொல்லிக் கொடுக்க இரவு உறங்க மட்டும் தான் பிரிந்து சென்றனர்.
“ஏன்டா அர்ஜூன். மேட்ச் விளையாடும் போது அங்கேயும் சண்டை அடிச்சிட்டு தான் இருக்காளா” எப்போதும் அமைதியாக ஒரு புன்னகையோடு இருக்கும் அர்ஜூன் பாட்டிக்குச் செல்லமாகிப் போனான்.
“மேட்ச் ஆடும் போது பந்தை தான் அடிக்கணும் பாட்டி. சண்டையை எல்லாம் அடிக்க முடியாது” என்று பாட்டியிடம் கண்சிமிட்டி வம்பு பேசினான்.
“அப்பப்பா…நீயாவது உன் ப்ரண்ட விட்டுக்கொடுக்கிறதாவது” பாட்டி சிரித்துக் கொண்டே கூற
“எப்போவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் பாட்டி” உறுதியாக கூறினான் அர்ஜூன்.
‘இப்போ விட்டுக் கொடுத்துட்டு தான் இருக்கேன். நீங்க எல்லோரும் அவளைப் பேச நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன்’ வீடு வந்து சேர்ந்தும் நிலைகொள்ளாமல் தவித்தான்.
அவளது காரை சரி செய்து கொடுத்துவிட்டு வந்ததிலிருந்தே அவன் நிலைக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருப்பது புரிந்துதான் இருந்தது அத்தைக்கு. அப்போதிலிருந்து எதையோ யோசிப்பதும் கைப்பேசியை பார்ப்பதுமாகவே இருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல் அவளது வீட்டு எண்ணை அழைத்தான்.
மறுமுனையில் ஒலித்தது தொலைப்பேசி. ஒரு வேளை எடுத்து விடுவாளோ அவள். எடுத்தால் என்ன பேசுவதாம்?
error: Content is protected !!