Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழாக் காணுமே வானம்

விழாக் காணுமே வானம்

விழாக் காணுமே வானம் 01

வத்சலா ராகவன் – மது ஹனி

“ஒரு வழிப் பாதையில் எதிரெதிர் பயணங்கள்”

அது மார்கழி மாதத்து அதிகாலை பொழுது.. நேரம் மூன்று மணி. பஞ்சுப் பொதி பனிப் பந்து மேகங்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு அவள் கண் முன்னே விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன.



Advertisement

மிகக் கவனமாக காரை செலுத்திக்கொண்டிருந்தாள்.. அவள் ஸ்வாதி. ஸ்வாதி ரங்கநாதன்.

மலைப்பாதையில் சுற்றிச்சுற்றி மேலேறிக்கொண்டிருந்தது அவளது ஹோண்டா சிட்டி. அவள் அருகில் அமர்ந்திருந்தார் அவளது தந்தை ரங்கநாதன். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் அவளது பாட்டி.

கார் ஒரு கொண்டை ஊசி வளைவில் திரும்ப  தான் அத்தனை நேரம் எதிர்ப்பார்த்த அந்தக் காட்சி மெதுவாக கண் முன்னே மலர கீழுதட்டை மடித்து தனது உணர்வுகளை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டாள் அவள்.

Advertisement

அந்த உணர்வுகளில் நிறைய கோபம், ஒரு வருட காலம் கடந்து விட்ட பின்னரும்  மறந்து  போக மறுக்கும் வருத்தம் இதனோடு கலந்த மிதமான சந்தோஷம் எல்லாம் அடக்கம்.

Advertisement

அவளது தந்தையும்  அந்தக் காட்சியை பார்த்து விட்டிருந்தார். திரும்பி இவள் முகம் பார்த்து இவளது மனப் போக்கை படித்து தெள்ளத் தெளிவாக படித்துக்  கொண்டார் அவர்.

மனதை இயல்பாக்க முன் பக்க கண்ணாடியின் வழியே தெரிந்த காட்சியை விடுத்து இடப்பக்க ஜன்னலின் வெளியே தெரிந்த காட்சியில் சற்றே பார்வையை பதித்தாள். மின்விளக்குகளின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது அவர்கள் வாகனத்தை விட பல அடிகள் கீழே பரவிக் கிடந்த திருப்பதி நகரம்.

ஆம்! திருமலை கோவிலை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் மூவரும். சில நொடிகளில் மறுபடி முன் பக்க சாலையில் பார்வையை வைத்துதானே ஆக வேண்டும் அவள்? அப்படி எல்லாம் எதிலிருந்தும் அவளால் தப்பித்து ஓடி விட முடியாது என்பது புரிந்துதான் இருந்தது அவளுக்கு.

Advertisement

அவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்தது அந்த ஸ்கோடா. ரேபிட்.. எப்படியும் அந்தக் காரை இந்தப் பயணத்தில் அவள் சந்திப்பாள் என்பது அவள் எதிர்ப்பார்த்ததுதான்.

அந்தக் காருக்கும் பின்னால் வரும் வாகனங்களை காட்டும் ரியர் வியூ மிர்ரர் என்ற ஒன்று இருக்கிறதே! அந்தக் காரும் இதுவரை இவளது கார் வருமென எதிர்பார்த்திருக்குமே!

சட்டென அதன் வேகம் குறைந்ததிலிருந்தே அந்தக் காரும் இவளது காரை கவனித்துவிட்டதென புரிந்துக் கொண்டாள் ஸ்வாதி. இப்போது காரின் வேகத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் இவளுக்கும். இரண்டு கார்களும் சீரான இடைவெளியில் நகர்ந்துக் கொண்டிருந்தன.

“அப்படியே ஒரு ஹார்ன் அடிச்சிட்டு முன்னாலே போக வேண்டியதுதானே?” பின் சீட்டில் இருந்த பாட்டியின் குரல் சற்றே எடக்காக வெளிவந்தது.

பாட்டி சாதாரண பாட்டி இல்லை. சகலமும் அறிந்த பாட்டி.

“ஹேர் பின் பெண்ட்ஸ்லே அப்படியெல்லாம் போக முடியாது பாட்டி” பதில் சொன்னாள் இவள்.

“கரெக்ட், வாழ்க்கையிலுமே நிறைய ஹேர் பின் பெண்ட்ஸ் இருக்குமா. நிறுத்தி நிதானமா வளைஞ்சு நெளிஞ்சுதான் போகணும்” நறுக்கினார் பாட்டி.

“அம்மா காலை நேரத்திலே உன் தத்துவத்தை கொஞ்சம் நேரம் நிறுத்தி வைம்மா” இடைப் புகுந்தார் ரங்கநாதன்.

அதே நேரத்தில்

அங்கே அந்த ஸ்கோடா ரேபிட்டை செலுத்திக் கொண்டிருந்தான் அவன். அர்ஜுன். அர்ஜுன்  பார்த்தசாரதி.. அவன் அருகில் அவனது அத்தை மகாலக்ஷ்மி. அவனது அன்னையும் தந்தையும் புனேவில்  வசித்துக்கொண்டிருக்க இவன் அத்தையுடன் இங்கே.

ஸ்வாதி  நினைத்ததைப் போலவே  அவனது விழிகள் மூன்று நொடிகளுக்கு ஒரு முறை காரின் ரியர் வியூ மிர்ரரின் மூலம் அவளது காரை கவனித்துக்கொண்டேதான் இருந்தன.

அவளது காரின் இடப்பக்க ஜன்னலின் வெளியே தெரிந்த மலைப்பாறைகளை பனி மழை மிதமாக நீராட்டிக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு கார்களின் இடைவெளிக்குள் இரண்டு மான் குட்டிகள் ஒன்றன் பின்னால் ஒன்று  துள்ளிக்கொண்டு ஓடின.

சட்டென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தி அவற்றை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு பின் நகர்ந்தாள். இப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக துள்ளித் திரிந்த காலங்கள் நிறைய உண்டு.

இப்போது அவளது எண்ண ஓட்டம் அந்த விம்பிள்டன் கலப்பு இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தை தொட்டது. அவனும் இவளும் மைதனத்தில் நின்றிருந்த நேரமது.

பொதுவாக டென்னிஸ் ஆட்டங்களில் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்களுக்கு இருக்கும் அளவு ரசிகர் கூட்டம் கலப்பு இரட்டையர் ஆட்டத்துக்கு இருக்காதுதான். இருந்தாலும் அவனுடன் ஆடும் ஆட்டம் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியை கொடுக்கும்.

அன்று  அவள்  முதலாவதாக ஆட்டத்தை துவங்க அவளது முதல் சேவை (செர்வ்) நேராக நெட்டின் மீது சென்று விழ கண்கள் விரிய எழும்பியது அவள் கோபம். காலை ஓங்கி தரையில் அடித்து அவள் குரல் எழுப்ப முயன்ற நேரத்தில் அவள் தோள்களை அணைத்துக்கொண்டது அவனது கரம்.

“இட்ஸ் ஒகே. இட்ஸ் ஒகே குஷ்பூ. ரிலாக்ஸ்” அவன் எப்போதுமே அவளை குஷ்பூ என்றுதான் அழைப்பான்.

இவள் அவன் முகம் பார்க்க சட்டென கண் சிமிட்டி ஒரு புன்னகை. அதில் நாம் கண்டிப்பாக ஜெயித்து விடுவோம் என ஒரு நம்பிக்கை இவளுக்குள் அந்த நேர்மறை எண்ணங்கள் படர,. அடுத்து அவள் தொடர

“ஏஸ்!” அவளின் அடுத்த செர்வ் எதிராளியால் தொடவே முடியாமல் போக அந்த ஆட்டத்தில்  இவர்களுக்கு நேரடியாக  ஒரு புள்ளி கிடைத்துவிட்டிருந்தது.

அடுத்து நிறைய புன்னகைகளும், ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக்கொண்ட  நம்பிக்கை கை அணைப்புகளும் தொடர ஆரம்பத்தில் சற்றே பின் தங்கியிருந்த போதும் 6-4, 6-2 என்ற நேரடி ஆட்டங்களை வென்று அன்றைய போட்டியை கைப்பற்றிய அதிசயம் அன்றுதான் நடந்தது.

அர்ஜுன் பார்த்தசாரதி இந்திய டென்னிஸ் உலகின் முன்னணி வீரன். ஸ்வாதி ரங்கநாதன் இந்திய டென்னிஸ் உலகின் முன்னணி விளையாட்டு வீராங்கனை. அவளது தந்தை ரங்கநாதனும்  முன்னாள் டென்னிஸ் வீரர். இப்போது டென்னிஸ் பயிற்சியாளர். டென்னிஸ் ஆட்டத்தை பொறுத்தவரை அர்ஜுன், ஸ்வாதி  இருவருக்கும் அவர்தான் குரு.

இருள் இன்னும் விலகா அந்த வேளையிலும், அங்கே பரவிக் கிடந்த மெலிதான மின்விளக்குகளின் வெளிச்சத்தில் வெகு லாவகமாக அந்த கொண்டை ஊசி வளைவில் காரைத் திருப்பிக்கொண்டு முன்னேறினான் அர்ஜுன். உதடு சுழித்து அவனை பழித்துக்கொண்டாள் ஸ்வாதி. அவனுக்கு

கார் ஓட்டக் கற்றுக் கொடுத்ததே இவள்தான்.  இதே ஸ்கோடாவில்தான் பழகிக் கொண்டான் அவன்.அப்போதெல்லாம் அவன் முதுகிலேயே ஓங்கி அடிப்பாள் இவள்.

“பாரு வண்டி எவ்வளவு ஸ்மூத்தா போகுது.” என்பாள் அவள் “அதைப் போட்டு இப்படி படுத்தி வைக்கிறே. பாவம் மை டியர் ஸ்கோடா”

இவற்றையெல்லாம் ரசித்தபடியே குலுங்கி கிளம்பும் அந்த ஸ்கோடா.

இன்று இவர்கள் இருவருக்குமே பிறந்தநாள்.. பிறந்தநாள் அன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வருவது இவர்கள் இருவர் குடும்பத்துக்குமே வழக்கம்.

சில நிமடங்கள் கடக்க கார் திருமலையை தொட்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் கார்களை நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும். வி.வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகள் மூலம் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் அங்கே தயாராக இருந்தன. இவர்கள் அங்கே சென்று இரண்டு மூன்று நிமிடங்கள் சந்நிதியில் இருக்கலாம்,

இரண்டு கார்களும் அருகருகே நின்றன. அனைவருமே காரை விட்டு இறங்கினர். எளிமையான ஒரு காட்டன் புடவையில் அவள். மெலிதான ஒரு ஜரிகை வேஷ்டி சட்டை இடுப்பில் கட்டிக்கொண்ட துண்டுடன் அவன். கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தது இரு குடும்பமும்.

தனக்கு முன்னால் பத்தடி தொலைவில் தனது அத்தையுடன் பேசிக்கொண்டே நடக்கும் அவனையே பார்த்தபடி நடந்தாள் அவள். ஸ்வாதியும் அர்ஜுனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு சரியாக ஒரு வருடம் கடந்திருக்கிறது.  சென்ற வருடம் இதே போல் திருமலைக்கு சென்று விட்டு வந்த பிறகு முடிந்து போனது எல்லாம்.

அதிகாலை நேர திருமலை சொர்கத்தின் மறு வடிவம் என்றே தோன்றியது. மார்கழி மாத பனிக்காற்று அனைவரையும் தழுவி வருடி இறைவனின் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது. அங்கே ஒலிப்பெருக்கியில் ஏழுமலையானின் சுப்பிரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க அந்த ஒலி செவிகளை வருட வருட வேறெதையும் நினைவுக்கு கொண்டு வர தோன்றவில்லை அவளுக்கு.

மெல்ல மெல்ல  நேர்மறை எண்ணங்கள் உள்ளமெங்கும் பொங்கி வழிய அந்த நொடியில் சடக்கென திரும்பிப் பார்த்தார் அவனது அத்தை. அது ஏனோ அவரது அந்தப் பார்வையில் நின்றே விட்டது இவர்களது குடும்பம். அடுத்த நொடி வெகு இயல்பாய் திரும்பிக்கொண்டு அர்ஜுனுடன் நடக்க ஆரம்பித்தார் அவர்.

கோபத்திலும், எடுத்த முடிவில் நிற்கும் உறுதியிலும் மகாலக்ஷ்மியின் பிரதிபிம்பம் நமது ஸ்வாதி என உறுதியாக சொல்லலாம்.

கொடி மரத்தின் அருகே இவர்கள் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களில் ஏழுமலையானின் முன்னே நின்றிருந்தனர் அனைவரும். அந்த காலை வேளையில் அவன் சந்நிதியில் உள்ளமெங்கும் அமைதி பிரவாகம் பெருக்கெடுத்து கிடந்தது.

“ஓம் நமோ வேங்கடேசாய” எனும் மந்திரம் அவர்கள் செவிகளை நிரப்பிக்கொண்டிருக்க அவனிடம் எதையும் கேட்கக் கூட தோன்றவில்லை அவளுக்கு. கரம் கூப்பி நின்றிருந்தாள் ஏழுமலையானின் முன்னே.

சந்தர்ப்ப வசமோ, அதிர்ஷ்ட வசமோ அவள் அருகிலேயே நின்றிருந்தான் அர்ஜுன்.  ஆனாலும் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவர் திரும்பவே இல்லை, எல்லாவற்றுக்கும் சாட்சியாக நிற்கும் இறைவனையே பார்த்தபடி நின்றிருந்தனர்.

கை நிறைய கிடைத்த பிரசாதங்களுடன் கோவில் பிராகாரத்தில் சென்று அமர்ந்தது இரு குடும்பமும். சில அடிகளே தள்ளி அமர்ந்திருந்தாலும் யார் பார்வையும் ஒன்றோடு ஒன்று உரசாத போதும் எல்லார் மனமும் ஒன்றை ஒன்று உரசி உரசி மீண்டது உண்மை.

அவனது அத்தை எழுந்து கோபுரத்தின் மேல் இருந்த விமானத்தை தரிசிக்க நகர இவன் மெதுவாக நிமிர்ந்து ரங்கநாதனை பார்த்தான். அவரின் மீது எப்போதுமே அவனுக்கு மரியாதை அதிகம் அவரது சின்ன புன்னகையையாவது அவனது மனம் எதிர்ப்பார்த்திருக்கும் என தோன்றியது ஸ்வாதிக்கு. ஆனால் அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

அதே நேரத்தில் சட்டென பாட்டியின் புன்னகை அர்ஜுனை தொட யாரும் அறியாத வண்ணம் அவர் அவனை ஆசீர்வதித்தை கவனிக்காமல் இல்லை ஸ்வாதி. அவன் முகத்தில் திருப்தியின் பாவம்.

ஒன்றரை மணி நேரம் கடந்த நிலையில் இரண்டு குடும்பங்களும்  மறுபடியும் கார்களை அடைந்திருந்தன. மற்றவர்கள் அனைவரும் காருக்குள் சென்று விட ஸ்கோடாவின் அருகில் அர்ஜுனும், ஹோண்டா சிட்டியின் அருகில் ஸ்வாதியும் நின்றிருந்தனர்.

இத்தனை ஆண்டுகளில் பிறந்தநாளுக்கு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்திக்கொள்ளாமல் இருந்தது இல்லை. இப்போது ஒரு புன்னகைக்கு கூட வழியில்லை.

இருவருக்குமே இதை ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. காரின் கதவை பிடித்துக்கொண்டு அவனுக்கு முதுகை காட்டியபடி நின்றிருந்தவளால் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவன் பக்கம் திரும்பியே விட்டாள்தான்.

காரின் மீது சாய்ந்துக்கொண்டு இவளையே பார்த்தபடிதான் நின்றிருந்தான் அவன். திடீரென ஏற்பட்ட சில நொடி விழி உரசல்கள். என்ன சொல்லிக்கொண்டனவோ அவை. என்ன புரிந்ததோ இருவருக்கும். திடீரென அதை முறித்துக்கொண்டு காருக்குள் நுழைந்து அமர்ந்திருந்தாள் ஸ்வாதி.

அவனும் காருக்குள் ஏறி அமர்ந்துக்கொண்டான். அவள் விழிகள் பனித்து போயிருக்க அவனது விழிகளும் நீர்க் கொண்டிருக்கும் என்பதை அறியாமல் இல்லை. அவள்

“அப்படி என்னடி ஈகோ உனக்கு?” இது பாட்டி “அவன்கிட்டே ஒரு வார்த்தை பேசினாதான் என்ன?”

“இது ஈகோ இல்லை பாட்டி. வேறே” சூடாக வந்தது அவள் குரல்.

“பாவம் ஸ்வாதி அவன்” அவனுக்கு வக்காலத்து வாங்கினார் பாட்டி.

“அதான் அவனுக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டே இல்ல ரகசியமா. அப்புறம் என்ன? வாயை மூடிட்டு இரு நீ” ஸ்வாதியின் குரல் ஆதங்கமாய் வந்தது.

“ஆமாம் ஆசீர்வாதம் பண்ணேன். இப்போ என்ன? எனக்கு நீயும் அவனும் ஒண்ணுதான்”

“சந்தோஷம். ரொம்ப சந்தோஷம். அப்படியே வெச்சுக்க. இல்லைன்னா எனக்கு மேலே கூட அவனை தூக்கி வெச்சு கொண்டாடு. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை”  ஆழ் மூச்சை உள் இழுத்துக்கொண்டு குரல் முழுவதும் ஆதங்கம் வழிய வழிய சொன்னாள் ஸ்வாதி.

ஒற்றை வார்த்தை பேசவில்லை ரங்கநாதன். அவளது கரம் கார் ஸ்டியரிங்கை இறுக பற்றியிருந்தது.

அவன் அவளது உடன் பிறந்தவனாக இருந்திருந்தால் கூட அவன் செய்ததை மன்னித்து இருப்பாள் எளிதாக. இதே தவறை அவளது தந்தை செய்திருந்தால் கூட மன்னித்து இருப்பாள் சுலபமாக. அவன் அவளது காதலனாக இருந்திருந்தால் கூட மன்னித்து இருப்பாள் ஒரு கட்டத்தில்.

ஆனால் அர்ஜுன்  நண்பன் என்ற இடத்தில் அல்லவா நிற்கிறான்  என்ன செய்வாள் அவள்? எப்படி மன்னிப்பாள் அவனை? அவன் இதை செய்துவிட்டான் என்பதை விட செய்தது அவன் என்ற எண்ணம் அவளை வருத்தி எடுக்கிறதே என்ன செய்வாள் அவள்.?

கண்களின் ஓரத்தில் தேங்கிய நீரை சுண்டி விட்டுக்கொண்டு அவள் காரை கிளப்ப அவள் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது அவனது கார். இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக சுழன்று சுழன்று மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தன,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!