தனம் கடுகடுவென பாத்திரத்தை உருட்டுவதும் அங்குமிங்கும் நடப்பதுவுமாய் இருக்க கலை குளித்து விட்டு வெளியே வந்தான்.
“என்னத்தா காலையிலேயே பண்ட பாத்திரம் கூட பஞ்சாயத்து நடத்திட்டு இருக்க”என்ற கேலியோடு அவன் வந்தமர
Advertisement
“ஏன்டா சொல்ல மாட்ட… நான் எம்புள்ளைக்கு கலியாணம் ஆகிருச்சுனு கெடா விருந்து ஏற்பாடு பண்ணா வுட்டுக்கு வந்த மகராசி எங்க போறேன் வாரேமின்னு சொல்லாம போயாச்சு. புதுசா கலியாணம் ஆன மாதிரியா இருக்கா”என்று அங்கலாய்த்துக் கொண்டே தேநீரை தந்தார்.
Advertisement
Advertisement
என்னது விருந்து ஏற்பாடு பண்ணியா..என்னமாச்சும் இருக்காத்தா ஒனக்கு என்று சடாரென எழுந்து நின்றவனைக் கண்டு தனம் ஒரு நொடி திடுக்கிட்டு விட்டார்.
“ஏன்யா”என்றதும்
Advertisement
“என்னத்தா அந்த புள்ள இருக்க நெலமை என்ன…இப்ப விருந்து முக்கியமாத்தா”என்று கண்டனமாய் தான் கேட்டான்.
“அது வீட்டுல ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நடந்திருந்தாலும் இதெல்லாம் நடக்கும் தானய்யா”என்று தனம் சமாதானம் செய்ய
“ப்ம்ச் அவக தான் அது உசுரை அத்து எடுக்குத காரியத்த செய்றாவன்னா நாமளும் செய்யணுமாத்தா… காலையிலையும் கெளம்பி போயிருக்கான்னா மவனுக்கு எதுவும் மேலுக்கு முடியலையோ என்னவோ”என்றவன் “நா போய் பாத்துட்டு வாரேன்”என்று தேநீரை கூட அருந்தாமல் உள்ளே போக கணேசனும் வருத்தமாக “நாம கூட இத்த ரோசிக்கலத்தா. பாவம்ல அந்த புள்ளையும்”என்றார் சங்கடத்துடன்
தனத்திற்கு அழுகையே வந்துவிட்டது .
“அது எனக்கும் தெரியாம இல்ல மாமோவ். ஆனா எம்மவனை நெனைச்சிகளா ஆரும். அவனே நெனைக்கலையே என்னத்த சொல்ல நானு. ஒன்னுக்கு ரெண்டு கலியாணம் பண்ணி எம்மவனுக்கு நிம்மதியே இல்லை. எல்லாத்திலும் போராட்ட பொழப்புத்தனம்தேன்”என்றார் வேதனையாக
ஒரு அன்னையாக அவரது மனம் புரிந்தாலும் சமரசமாய் பேச முடியவில்லை கணேசனால். அவருக்குமே மன வருத்தம் இருக்கிறது தான். ஆனால் கலையை விட இலக்கியா நிலை அதிக வேதனை அல்லவா. ஏற்கனவே ஒன்றுக்கு மூன்று உயிரை பறிகொடுத்து விட்டாள். இன்னொன்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்க இடையில் வீட்டினரின் திருமணம் செய்து கொள்ள சொல்லி அழுத்தம் கொடுத்து இப்போதுமே கட்டாயத் திருமணத்தை நடத்தி வைத்து எத்தனை இன்னல்களை எதிர்கொண்டு இருக்கிறாள். உண்மையில் தனத்தைப் போல கலையும் அவள் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் மனைவியாய் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தால் அப்பெண் என்ன ஆவாள் நினைக்கும் போதே நெஞ்சடைத்தது கணேசனுக்கு. அத்தனையும் கடந்து இதோ அழுத்தமாய் வெளியே கிளம்பி சென்றிருக்கும் மருமகளை எண்ணி ஆச்சரியம் தான் அவருக்கு.
“விடுத்தா எல்லாஞ்செரியாப் போவும். அந்த புள்ளைக்கும் கொஞ்சம் நேரம் குடுத்தா. பாவம் அந்த புள்ள”என்றவர் “எம்மவன் அது கூட நல்லா வாழுவான்னு எனக்கு தோணுது. நீயி எதுவும் சொல்லாம இரு எல்லாம் தானா நடக்கும்”என்றார் கணேசன்.
இங்கே கலைச்செல்வன் இலக்கியாவிற்கு அழைக்க நீண்ட நெடிய அழைப்பிற்கு பிறகு ஏற்கப்பட்டது அவனது அழைப்பு.
“எங்குட்டு போறதுனாலும் ஒத்த வார்த்த சொல்லிட்டு போவத்தானத்தா”என்று எடுத்ததும் கேட்க
“அண்ணே சொல்றது சரிதான ஆத்தா. பாவம் மயினி. அது எடத்துல வேற ஆரும் இருந்தாக்க இந்நேரம் உசுர விட்ருப்பாவ. மொத்த குடும்பமும் எதிரா நின்னாலும் கல்லு மாதிரி நிக்குது பாரு அந்த மனுசி. தானா சரியாயி வருவாகத்தா. நீயி வெசனப்பட்டுக்காத”என்றான் காத்தமுத்து ஆறுதலாக
“என்னவோ போடா. எம்புள்ள எப்பத்தான் மனசு நெறஞ்சு ஒரு வாழ்க்க வாழுவானோ தெரியலை”என்று வருத்தமாய் தான் தனம் பேசிச் சென்றார்.
*********
கோவிலில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் இலக்கியா. முகத்தில் ஒரு வெறுமை உணர்வு அப்பிக் கிடக்க தொண்டைக்குழி மட்டும் எச்சில் கூட்டி விழுங்கியபடி இருந்தது.
‘நீ போய்ட்டா உன் கூடவே வந்திடணும்னு நினைச்சேன் சஞ்சு. ஆனா விதி என்னை என்ன பண்ணி வச்சிருக்கு பார்த்தியா… ப்ப்ச் எமோஷனலி என்னை எல்லாரும் வீக் ஆக்குறீங்கடா’என்று தவித்துப் போனாள்.
இந்த சொத்து மட்டும் என் கிட்ட இல்லைன்னா நிம்மதியா விட்டு இருப்பாங்களோ… யாருக்கோ போகட்டும் னு விட முடியலை சந்தீப் நான் என்ன செய்ய இந்த மேரேஜுக்கு ஒத்துக்கிட்டு மிகப் பெரிய மிஸ்டேக் பண்ணிட்டேன். அத்தையும் மாமாவும் ஏதோ பண்ணுனு விட்டு இருக்கலாம். இப்ப நான் என்ன பண்றது சந்தீப். கலையை நினைச்சா ம்ஹூம் செகண்ட் டைமும் அவருக்கு ஏமாற்றம் தான். சாண்டி ஐம் சாரி உன் மாமா எனக்கு வேண்டாம் என்று முணுமுணுக்க கலை வந்து அவளருகில் அமர்ந்தான்.
“உன் காரியம் எல்லாம் முடியவும் பிரிஞ்சுக்கலாம்”என்றான் அவனும்.
விழிகளை விரித்தவள் “நிஜமாவா”என்றாள்.
“ஹ்ம்ம்”என்றவன் “நேத்திக்கு ஒன்னைய சும்மா தான் வம்பு பண்ணேன்த்தா. நீயா என்னமாச்சும் நெனைக்காத. நீயி உன் வேலையை முடிச்சுக்க பொறவு வீட்டுல பேசி அவக அவக வழியில போயிக்குவோம்”என்றான்.
இருவரும் எழுந்து வெளியே வந்தனர். கோவில் வாயிலிலேயே தர்மம் கேட்டபடி நின்றிருந்தனர் சிலர்.
“எய்யா சாமி நேத்துல இருந்து ஒண்ணும் சாப்புடல ஏதாச்சும் தர்மம் பண்ணு சாமி”என்றதும் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டான்.
“பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இருக்கணும்யா”என்று அவர் வாழ்த்தி விட்டு அடுத்த ஆளை கவனிக்க கலை எங்கோ பார்த்தபடி சிரித்தான் உள்ளே இருவரும் பேசி முடிவெடுத்த விஷயத்தை நினைத்து.
‘அதுக்கெல்லாம் எனக்கு குடுப்பனை இல்லத்தா’என்று எண்ணியபடி நடக்க இலக்கியா எதுவும் பேசாமல் நடந்தாள்.
“ஜீப் எங்க இதில் வந்திருக்கீங்க”என்று யோசனையாக அவள் கேட்க
“அதுல ப்ரேக் சரியில்லை அதான்”என்று அவன் சமாளிக்க
“நான் ஆட்டோவில் வந்திடுறேன்”என்றாள் வேகமாய்
“ஹ்ம்ம் சரி”என்று அதற்குமே சம்மதித்து ஆட்டோவை தேட அவர்கள் நேரம் ஆட்டோ எல்லாம் பயணிகளோடு தான் இருந்தது.
அதற்குள் காத்தமுத்து வேறு இரண்டு மூன்று முறை அழைத்து விட “ஆட்டோ கெடைக்காது போல நீ ஏறு. போவோம் முத்து வேற கூப்பிட்டுக்கிட்டே கெடக்கான்”என்று வண்டியை ஸ்டார்ட் செய்ய எதுவும் பேசாமல் ஏறிக் கொண்டாள்.
“துப்பட்டாவை முடிச்சு போட்டு உட்காருத்தா. காத்துல பறக்கும்”என்று சொல்லியபடி கிளம்ப “ஈவ்னிங் என் வண்டியை முத்துவை விட்டு எடுத்து வரச் சொல்லுங்க. கார் ஓட்டுவார் தானே”என்று வினவ
“எதுக்கு”என்று புருவம் முடிச்சிட கேட்டவளை கண்ணாடி வழியே பார்த்தவன் “சஞ்சய நான் பாக்கணும்”என்றான்.
“இல்லை இல்லை சஞ்சுவை ம்ஹூம் இது எல்லாம் அவனுக்கு தெரிய வேணாம்”என்றாள் படபடப்பாக
“நான் ஒனக்கு ஆரு அவனுக்கு ஆருனு சொல்ல வேணாம் அப்படியா”என்று கூர்மையான பார்வை பார்த்தபடி வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டான்.
“கலை ப்ளீஸ். சஞ்சுக்கு எதுவும் தெரிய வேண்டாம்”என்றாள் கலங்கிய குரலில்
“ஓஓஓ”என்றவன் “ஒனக்குத் தெரிஞ்ச ஆளா கூட நான் பாக்க கூடாதா அவனை. இதுக்கு முன்னாடி அப்படித்தான பாத்தேன். இப்போ அதுவும் வேணாமா”என்றவனின் குரலில் அப்படி ஒரு இறுக்கம்.
“இல்லை அது அப்படி இல்லை”என்று அவள் தடுமாற
“எப்பவும் எப்படி வருவேனோ அப்படி போய் பார்ப்போம். என் வாயில இருந்து எதுவும் வராது. என்னிய நம்பலாம்”என்றவன் “நம்பிக்கை இல்லைனா வேணாம்”என்று முடித்துக் கொள்ள இலக்கியாவிற்கு குற்றவுணர்வு மேலோங்கியது.
“வீட்டுக்கு போகலாம்”என்றாள் கண்களை மூடிக் கொண்டு
“ஹ்ம்ம்”மீண்டும் ஒரு அமைதியான பயணம்.
வீட்டிற்கு சென்றதும் தனம் உணவுண்ண அழைக்க பசிக்கவில்லை என்றனர் இருவருமே.
“இந்தாருடா நில்லுங்க ரெண்டு பேரும்”அதட்டலாய் நிறுத்திய தனம் “ரெண்டு பேரும் எப்புடியோ போங்க ஆனா நேரா நேரத்துக்கு வயித்துக்கு போட்டுப்புட்டு என்னமும் செய்யிங்க இல்லை இப்படி தான் உண்காம கொள்ளாம திரியுவேன்னா ஊட்டுல இனிமே ஒலையே வைக்க மாட்டேன்”என்றார் கோபத்துடன்.
“ஆன்ட்டி”என்று இலக்கியா அலுப்பாக பார்க்க
“இந்த ஆன்டி போன்டி எல்லாம் இல்ல ஒழுங்கா அத்தைனு கூப்புட சொல்லு ஒம் பொண்டாட்டிய. அப்பறம் இனிமேட்டுக்கு எங்குட்டு போனாலும் ஒத்த வார்த்த இன்ன எடத்துக்கு போறேன் னு சொல்லிட்டு போவ சொல்லு.”என்றபடி உணவை எடுத்து வைத்தார்.
காலை உணவிலேயே அத்தனை வகை இருந்தது.
‘எதுவும் வேணாமின்னேன் இந்த ஆத்தாவை’என கலை பல்லைக் கடிக்க
“இங்கைக்கும் அங்கைக்கும் அலைய ஒடம்புல வலுவு வேணாம். எகிறி எகிறி பேச தெம்பு வேணாம் அதுக்கு தான் இத்தனை.”என்று மகனின் பார்வையிலேயே புரிந்து கொண்டு பேசியவர் “மனசுல ஆயிரம் கவலை வரிசை கட்டி தான் நிக்கும் அதுக்கு கஞ்சி குடிக்காம இருந்தா ஆயிரம் ஆறாவா கொறையும். ஒழுங்கா தின்னுட்டு தான் எந்திரிக்கணும்”என்று பரிமாற இலக்கியா முகத்தில் சிறு இளக்கம். மெலிதான புன்னகை கூட அரும்பியது.
நேற்று முழுவதும் சரியாக உணவருந்தாமல் இருந்தவளுக்கு இப்போது தான் பசியே சற்று தெளிவாக தெரிந்தது. ஆனாலும் குடல் ஒட்டிக் கொண்டு இருக்க இப்போது உணவருந்தும் போது உள்ளே போகவில்லை.
“முடியலன்னா வச்சிடுத்தா. நேரம் செண்டு சாப்புடுவ. நேத்து முச்சூடும் உள்ள எதுவும் போட்டு இருக்க மாட்ட”என்ற தனம் “இந்த சூப்பை மட்டும் மெல்லமா குடிச்சிரு. பொறவு ஒறங்கி எந்திச்சா நல்லாயிடும்”என்றார்.
“இதெல்லாம் நான் குடிச்சது இல்லை ஆ… ம்ஹூம் அத்தை”என்றாள்.
“பழகிக்கத்தான… இதெல்லாம் ஒரு விஷியமா சூடு ஆறுறதுக்குள்ள குடி”எனும் போதே கலை உண்டு விட்டு எழுந்திருந்தான்.
அவர்களின் சம்பாஷணையில் எல்லாம் அவன் தலையை கொடுக்கவில்லை. ஏதாவது தடுத்து பேசினால் தனம் அதற்கும் வரிந்து கட்டிக் கொண்டு வந்தாலும் ஆச்சரியம் இல்லை. இருவருமே பேசி சரி செய்து கொள்ளட்டும் என்று அமைதியாக தன்னறை புகுந்தான்.
“நீயும் போய் படுத்தா”என்று அவளை அனுப்பி வைத்து விட்டு தனம் மதியம் சமையலை கவனிக்க செல்ல இலக்கியா கலையின் அறைக்குள் நுழைய அவன் சட்டையை கழற்றிக் கொண்டிருந்தான்.