Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 10

 

அகல்கவி சிலையமுதே 10

 



Advertisement

“மாமா நான் உங்ககிட்ட பேசணும்” என்று யுவன் தடாலடியாக சொல்ல, “எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கப்பறம் பேசிக்கலாம்ப்பா, முகூர்த்த நேரம் நெருங்கிருச்சு. வந்தவங்கள கவனிக்கணும், ஐயர் கேக்குறத பண்ணணும்.. நிறைய வேலை இருக்கு” என்றார் முத்துப்பாண்டி பதற்றமாக.

 

ஆனால் ஆடவனோ ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவன், “இல்ல மாமா, நான் இப்போவே பேசணும், அதுவும் அகல்யாவ பத்தி..” என்று அழுத்தமாக சொல்ல, அவனை புரியாமல் பார்த்தவர் அங்கிருந்த அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்.

Advertisement

 

Advertisement

“என்னப்பா சீக்கிரம் சொல்லு..” என்று அவர் கூரிய பார்வையோடுக் கேட்க, “இந்த கல்யாணத்துல அகல்யாவுக்கு சுத்தமா விருப்பமில்ல மாமா, இதை நிறுத்துங்க” என்றான் பட்டென்று.

 

ஒருகணம் அவன் சொன்ன விதத்தில் அதிர்ந்தவர் பின் நிதானமாக அவனை ஏறிட்டு, “இதை அகல் உன்கிட்ட சொன்னாளா?” என்று கேட்க, யோசனையோடு இல்லையெனும் விதமாக தலையசைத்தவன், “ஆனா எனக்கு தெரியும். அவ…” என்று சொல்ல வந்து பின் வாரர்த்தைகளை விழுங்கிக்கொண்டான்.

Advertisement

 

அவன் பதிலில் இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டியவர், “என்னோட முடிவுக்கு அகல் எப்போவும் முடியாதுன்னு சொல்ல மாட்டா, அவளுக்கு எது நல்லதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். ராணி மாதிரி அவ வாழுற வாழ்க்கையதான் நான் அவளுக்கு அமைச்சு கொடுத்திருக்கேன்.. இதுக்கப்பறம் பேசுறதுக்கு எதுவுமில்ல” என்று முடித்தவர் அங்கிருந்து நகரப் போனார்.

 

ஆனால் ஆடவன் இதை விடுவதாக இல்லை.

 

“இல்ல மாமா, நான் சொல்றத கேளுங்க.. பணத்துல அவளோட சந்தோஷம் கண்டிப்பா இருக்காது. அகல்யா அப்படி கிடையாது. அந்த ஆள பாருங்க, கொஞ்சம் கூட அவளுக்கு பொருத்தமே இல்ல. அவன் வேணாம் மாமா, இதை விட ஒரு நல்ல மாப்பிள்ளையா அகல்யாவுக்கு பொருத்தமான ஒருத்தனா நான் பார்த்து கொடுக்குறேன்.. என்னை நம்புங்க!”

 

என்றவனோ கிட்டத்தடட கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான். இதை விட்டால் வேறு வழியில்லை எனறு மட்டும் புரிந்தது அவனுக்கு.

 

புருவ முடிச்சுகளோடு அவனை பார்த்த முத்துப்பாண்டி, “எனக்கு நம்பிக்கை இல்ல யுவா கண்ணா, இதை விட நல்ல வாழ்க்கைக்கு நான் எங்க போறது.. இதை விட்டுரு, நடக்குறது நடக்கட்டும். மறுபடியும் என் பொண்ணோட கல்யாணம் நிக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல” என்று அதிருப்தியோடு பேச, அவனுக்கு எரிச்சல் உச்சத்தை தொட்டது.

 

“என்ன மாமா பேசுறீங்க, அதுக்காக அகலோட வாழ்க்கை எப்படி வேணா இருக்கட்டும்னு விட்டுருவீங்களா..” என்று அவன் ஆவேசமாகக் கேட்க, அவனை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தவர், “சரி நீ சொல்ற மாதிரி கல்யாணத்த நிறுத்துறேன். அதுக்கப்பறம் என் பொண்ண நீ கட்டிப்பியா சொல்லு.. முடியாதுல்ல.. போய் வேலைய பாரு, ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கு” என்று விரக்தியோடு பேசியபடி நகரப் போனார்.

 

அவர் கேட்டதில் திக்குமுக்காடி போய் நின்றிருந்த யுவனுக்கு யோசிக்க சில கணங்கள்தான் ஆனது.

 

ஒரு முடிவெடுத்தவனாக விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், “மாமா, நான் அகல்யாவ கட்டிக்குறேன்” என்று சொல்ல, அறைக் கதவை திறக்கச் சென்றவர் விழிகளை கூர்மையாக்கி அவனை சந்தேகப் பார்வைப் பார்த்தார்.

 

அவருடைய பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன், “நெஜமாதான் சொல்றேன், என்னை நம்புங்க!” என்று அழுத்தமாக சொல்ல, “அப்படின்னா சரி, இப்போவே தயாராகி மணமேடைக்கு வா!” என்றவரின் வார்த்தைகளில் அதிர்வது இப்போது யுவனின் முறையானது.

 

“இப்போவேவா.. மொதல்ல இதை நிறுத்துங்க அதுக்கப்பறம் அம்மாவோட பேசி…” அவன் சொல்லி முடிக்கவில்லை, “இப்போவே கல்யாணம் பண்றேன்னா இதை நிறுத்துறேன், இல்லன்னா…” என்று அவனை குறுக்கிட்டு சொன்னவாறு வாசல்புறம் திரும்பியவர் அதிர்ந்து நின்றார்.

 

அங்கு வாசலில் சிவலிங்கம் இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டு உறைந்துப்போய் நின்றிருக்க, “மாமா, நான்.. ” என்று சொல்ல வந்தவன் வாசலில் நின்றிருந்த தன் தந்தையை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

“அப்பா அது…” என்று யுவன் ஏதோ சொல்ல வர, “யுவன தயார் பண்ணி நான் அழைச்சுட்டு வர்றேன் மச்சான், நீங்க போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்று சிவலிங்கம் சொன்னதும், அர்த்தப் புன்னகையோடு அறையிலிருந்து வெளியேறினார் முத்துப்பாண்டி.

 

அவரோ மணமேடையில் அமர்ந்திருந்த சண்முகத்தின் காதில் என்ன சொன்னாரோ!

 

முத்துப்பாண்டி பேசிச்சென்ற சில கணங்களிலேயே மணமேடையிலிருந்து அவன் எழுந்துச் சென்றுவிட, சுற்றியிருந்த சொந்தபந்தங்களோ புரியாது பார்த்தனர்.

 

“என்ன நடக்குது இங்க? மாப்பிள்ளை எதுக்கு எழுந்து போறாரு.. ஒருவேள இந்த குடும்பத்துக்கு எவனாச்சும் சூனியம் கீனியம் பண்ணியிருக்கானோ? ஒன்னு மாப்பிள்ளை மணமேடையில இருந்து போறாரு இல்லன்னா பொண்ணு ஓடி போகுது..” என்று சொந்தங்களில் ஒருவன் வாய்விட்டு முணுமுணுக்க, பக்கத்திலிருந்த சங்கரபாண்டியும் மேகலையும் அவனை தீயாய் முறைத்துப் பார்த்தனர்.

 

அகல்யாவுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. பக்கத்தில் வெறுமையாக இருந்த இடத்தை ஒரு பார்வைப் பார்த்தவள் குழம்பிப் போய் அமர்ந்திருக்க, சுற்றியிருந்தவர்களும் அதே குழப்பத்தில்தான் மூழ்கியிருந்தனர்.

 

ஆளாளுக்கு தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு வாய்க்கு வந்தபடி பேச, “நாழி ஆகுது, முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள மாப்பிள்ள வந்துருவாரா..” இதற்குமேல் பொறுக்க முடியாமல் வாய்விட்டு கேட்டே விட்டார் ஐயர்.

 

“நீங்க மந்திரத்தை சொல்ல ஆரம்பிங்க, மாப்பிள்ள வர்றாரு” என்ற முத்துப்பாண்டியின் குரலில் மற்றவர்களோ உடனே அவர் காட்டிய திசைக்கு திரும்பிப் பார்க்க, அங்கு பட்டு வேஷ்டி சட்டையில் மணமகன் கோலத்தில் சிவலிங்கத்தோடு நடந்து வந்தான் யுவனாதித்.

 

“அப்பா… அது.. அம்மாக்கு தெரியாம கல்யாணம் பண்றேனே, அவங்களுக்கு தெரிஞ்சா சம்மதிப்பாங்களா என்ன, நாம வேணா இப்போவே..” அவன் சொல்லிவிடலாமா என்ற தோரணையில் ஆர்வமாகக் கேட்க, விழி விரித்தார் சிவலிங்கம்.

 

“இப்போ மட்டும் சொன்ன அம்புட்டுதான்! ஃபோனுக்குள்ளால வந்து உன்ன மர்டர் பண்ணிடுவா. எப்படியும் அவ பத்ரகாளி ஆட்டம் ஆட போறது உறுதி, அது கல்யாணம் முடிஞ்சதும் ஆடட்டுமே!”

 

என்று சிவலிங்கம் சொல்ல, மனம் தாய்க்கு சொல்லாததை நினைத்து குற்றவுணர்ச்சியில் தவித்தாலும் அவரைப் பற்றி தெரிந்தே அமைதியாக சென்றான் யுவன்.

 

‘இதுக்கு முன்னாடி இந்த பையன்தான் இருந்தானா இல்ல.. என் கண்ணுல கோளாறா?’

 

‘என்னடீ நடக்குது இங்க.. இப்படி கூடவா ஒரு கல்யாணம் நடக்கும்?’

 

என்று வந்திருந்தவர்கள் சற்று சத்தமாகவே பேச, சங்கரபாண்டியும் மேகலையும் கூட இதை எதிர்பார்க்காததில் அதிர்ந்துப் போய் நின்றிருந்தனர்.

 

ஆனால் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தும் பார்க்காது ஹோமகுண்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த அகல்யாவுக்கு இவர்களின் பேச்சு வார்த்தைகள் காதில் விழ, அப்போதுதான் எதையோ உணர்ந்தவளாக விருட்டென தன் பக்கத்திலிருந்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

 

மறுகணம் அவளுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்துக்கொள்ள, சரியாக “கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்று சொன்னவாறு மங்களநாணை அவனை நோக்கி நீட்டினார் ஐயர்.

 

“மா.. மாமா நீங்க.. இல்ல இது..” என்று தட்டுத்தடுமாறி ஏதோ சொல்ல வந்தவளின் கரத்தைப் பற்றிக்கொண்டான் யுவன்.

 

“அகல், இதை நீ என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம். ஆனா இப்போ எதுவும் பேசாத!” என்று அழுத்தமாக சொன்னவன் ஐயர் நீட்டிய மங்களநாணை கையில் வாங்கி அவள் சுதாகரிப்பதற்குள் அவள் கழுத்தில் அணிவித்திருந்தான்.

 

அகல்யாவுக்கு நடப்பதை உணரவே சில கணங்கள் எடுக்க, உலகமே சுற்றுவது போல இருந்தது.

 

“என் பொண்ணு இருக்க வேண்டிய இடம் இது!” என்று மேகலை சேலை முந்தானையால் வாயைப் பொத்தி அழுத வண்ணம் சொல்லி பொறுமிக்கொள்ள, இங்கு தன் மகன்மேல் அர்ச்சதை தூவியவாறு நின்றிருந்த சிவலிங்கத்தின் அலைப்பேசி அலறியது.

 

வேகமாக அதையெடுத்துப் பார்த்தவருக்கு மனைவியின் எண்ணைப் பார்த்ததும் அடிவயிறு கலங்க, அழைப்பையேற்று காதில் வைத்தவரோ, “ஹெ.. ஹெலோ..” என்றதும்தான் தாமதம்,

 

“ஏங்க, எத்தனை முறை யுவாக்கு கால் பண்றது? ஃபோன எடுக்கவே மாட்டேங்குறான். சீக்கிரம் வீடியோ கால் வந்து மாப்பிள்ளையும் பொண்ணையும் காமிங்க” என்று சாரதா சொல்ல, “அது.. அது வந்து சாரதா ஃபோன்ல கவரேஜ் இல்ல” என்றார் சிவலிங்கம் வேகமாக.

 

“அப்படியாங்க.. அப்போ பொண்ணையும் மாப்பிள்ளயயும் ஃபோட்டோ எடுத்து அப்பறமா அனுப்புங்க” என்று அவர் சொல்ல, சலிப்பாக விழிகளை உருட்டியவர், “அதான் சொல்றேன்லடீ, கவரேஜ் இல்லன்னு.. அப்போ எப்படி ஃபோட்டோ எடுக்க முடியும்? உன் இத்துபோன ஊர்ல கேமரா கூட வேலை செய்யாது, ஃபோட்டோ வேணுமாமே ஃபோட்டோ, வைடீ ஃபோன!” என்று கத்தி சமாளித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

அழைப்பைத் துண்டித்ததும்தான் சிவலிங்கத்துக்கு நிம்மதி பெருமூச்சே வெளியாக, மறுமுனையிலிருந்த சாரதாவுக்குதான் ‘கவரேஜுக்கும் கேமராக்கும் என்ன சம்பந்தம்?’ என்றிருந்தது.

 

அதேநேரம் தன் மகளை விழிகளில் சந்தோஷத்தோடு பார்த்திருந்தனர் முத்துப்பாண்டியும் பொன்னியும்.

 

“இவளுக்கு இவன கட்டிக்கொடுக்க நான் பட்ட பாடு எனக்குதான்ம்லே தெரியும், ஸப்பாஹ்… என்ன திருகுதாளம்லாம் பண்ண வேண்டியதா போச்சு” என்று முத்துப்பாண்டி சொல்ல, முழங்கையால் கணவனின் வயிற்றில் குத்திய பொன்னி, “வாய மூடுங்க, யார் காதுலயாச்சும் விழுந்துர போகுது. எப்படியோ அவ ஆசைப்பட்டவனையே அவளுக்கு கட்டி கொடுத்தாச்சு, அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

 

அவர் நினைவுகள் சில மாதங்களுக்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தது.

 

அகல்யாவின் அறையில் யுவனின் புகைப்படத்தை கண்ட அந்த நாளே முத்துப்பாண்டியிடம் மகளின் ஆசையைப் பற்றி சொல்லியிருந்தார் பொன்னி.

 

ஆனால், யுவன் மித்ராவின் காதலைப் பற்றி அறிந்து வைத்தவருக்கு எதுவும் செய்ய முடியாத நிலை.

 

அதனாலேயே அவளுக்கு அவசர அவசரமாக ஒரு திருமண ஏற்பாட்டை அவர் செய்திருக்க, அவர்களின் நல்ல நேரம் புருஷோத்தமனே திருமணத்தை  நிறுத்திருக்க, மித்ராவும் வீட்டைவிட்டு சென்றிருந்தாள்.

 

அதன்பிறகு வந்த நாட்கள் அகல்யாவுக்கு யுவனை திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டுவதே முத்துப்பாண்டி மற்றும் பொன்னியின் வேலையாகிப் போனது.

 

அதனாலேயே தங்கையைப் பார்க்க வந்த சமயம் மனதிலிருந்த ஆசையை மகளுக்கு தெரியாமல் சாரதாவிடம் கேட்டிருந்தார் முத்துப்பாண்டி.

 

கணவன் மகனிடம் தாம்தூமென்று குதித்தவர் அவ்வளவு இலகுவாக சம்மதித்து விடுவாரா என்ன!

 

அப்போதே முடியாதென்று நாசூக்காக சொல்லிவிட, தன் தங்கையின் எண்ணத்தைப் பற்றி அறிந்தே இதை வேறு விதமாக கையாள திட்டம் போட்டார் அவர்.

 

அவர் திட்டம் போட்டது போல மாப்பிள்ளை வேடத்தில் ஒருவனை தன் நாடகத்தில் சிறிதுநேரம் இணைத்துக்கொண்டவர், மனைவியை தான் நினைத்தது போல செய்ய வைத்தார்.

 

அதன் விளைவே யுவன் தானே முன்வந்து திருமணத்திற்கு சம்மதிக்க, இங்கு மங்களநாணை அணிவித்து விட்டு ஐயர் சொன்னது போல அகல்யாவின் நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்தான் யுவனாதித்.

 

அவனையே அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்த அகல்யா மறுகணம் சுயநினைவின்றி அப்படியே அவன் மேலேயே மயங்கி சரிய, இப்போது ஸ்தம்பித்துப் போனது என்னவோ ஆடவன்தான்.

 

“அகல்.. அகல்யா..” என்று அவள் கன்னத்தை அவன் பதற்றமாகத் தட்ட, அவளிடமோ அசைவே இல்லை.

 

சுற்றியிருந்த மொத்தப் பேரும் பதற்றமாக, அவசரமாக டாக்டருக்கு அழைத்தனர்.

 

கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் கழிந்த நிலையில்,

 

மயக்கத்திலிருந்த அகல்யா மெல்ல கண்களை திறந்துப் பார்க்க, அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தார் பொன்னி.

 

“அம்மா..” அவளுடைய குரலில் பதற்றமாகத் திரும்பியவர், “அம்மாடீ அகலு, கண்ண திறந்துட்டியாடா! நான் ரொம்ப பயந்தே போயிட்டேன். இப்போ எப்படி இருக்கு?” என்று அக்கறையோடுங் கேட்க, ஒருவேள நடந்ததெல்லா கனவுதானா?’ என்ற யோசனையோடு வேகமாக குனிந்துப் பார்த்தாள் அவள்.

 

நடந்தது அனைத்தும் மெய் என்று அவளுடைய மூளைக்கு உரைப்பது போல அவள் கழுத்தில் அவன் அணிவித்த மங்களநாண் அவளுடைய மார்போடு முட்டி மோத, தலையைத் தாங்கிக்கொண்டவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

 

“மா.. மாமா எப்படிம்மா, ஏன் இப்படி பண்ணீங்க?” அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை, நா தந்தியடித்தது.

 

“என்னடீ, எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சியா?” என்று கத்தியவர் வெளியே எட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ ஒரு ஊமை பண்டாரம், வாயே திறக்க மாட்ட.. அதான் நானும் அப்பாவும் உனக்காக யுவாகிட்ட பேசி உன்ன கட்டிக்க வச்சோம். நடந்ததுக்கு சந்தோஷப்படுவன்னு பார்த்தா பொசுக்குன்னு மயங்கி விழுந்துட்ட மங்கூனி” என்று சத்தம் போடாமல் ஹஸ்கி குரலில் திட்டித் தீர்த்தார்.

 

அகல்யாவுக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. விழிகளை அழுந்த மூடித் திறந்து ஒரு முடிவெடுத்தவளாக அவள் அமைதியாகிவிட, அகல்யா கண் விழித்ததை அறிந்து வேகமாக அறைக்குள் வந்தான் யுவனாதித்.

 

“மாப்பிள்ள நீங்க பேசிட்டு இருங்க.. நான் உங்க ரெண்டு பேருக்கும் ஜூஸு போட்டு கொண்டு வர்றேன்.. ஹிஹிஹி…” பொன்னி அசடுவழிந்தபடி அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அறையிலிருந்து வெளியேற, சிறு  தயக்கத்தோடு அகல்யாவிற்கு அருகே அமர்ந்துக்கொண்டான் அவன்.

 

அவளோ எதுவும் பேசாது எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க, “அது.. அது வந்து.. உனக்கு இப்போ ஓகேதானே, மறுபடியும் டாக்டர வேணா கூப்டட்டுமா?” என்று அவனோ தயக்க குரலில் கேட்டான்.

 

“இல்ல மாமா.. இருக்கட்டும். நான் நல்லாதான் இருக்கேன” என்று அவள் சொன்னதும், “நா.. நான்  உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று ஆரம்பித்தவனுக்கு அடுத்து அவள் சொன்ன செய்தியில் உலகமே சூனியமானது போலாகிவிட்டது.

 

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!